தமிழ்மணி – கவிதைகள்

யாமத்தில் பேருந்துப் பயணம்.
நான் பதட்டமானவன்.
சக மனிதர்களை சந்தேகிப்பவன்.
இருவர் மட்டுமே அமரும் இருக்கையில்
நானும் மற்றொருவரும்.
என் மடியில் எனது பை.
பையினுள் ஒரு பெட்டகம்.
பெட்டகத்தினுள் என் மூளை.
முடிந்தமட்டிற்கு நான் தூங்காமலிருக்கவே விரும்பினேன்.
என் உடைமையைத் திருடுபவராகவே அவரைப் பார்க்கிறேன்.
கண்ணயர்ந்தாலும்
ஒவ்வொரு முழிப்பிற்கும்
பையைத் தடவிக் கொள்கிறேன்.
ஏதோ நிறுத்தமொன்றில் இறங்கிப்போனவர் திரும்பவில்லை.
மீதிப் பயணத்திலும்
நான் பையைத் தடவியபடியே இருந்தேன்,
அருகில் இருக்கும்
வெற்றிடம் நிரம்பிய இருக்கையை
சந்தேகப்பட்டுக்கொண்டே
மற்றும்
இறங்கிப்போனவர்
வேறொரு நிறுத்தில் திரும்பிடுவாரோ
எனும் அச்சத்தின் பொருட்டும்.

இறங்கிய பின்னர்
பைக்கட்டைத் திறந்தேன்.
பெட்டகத்தினுள் ஈரம் குறையாத
களிமண் உருண்டை.


முரண்கள் இரண்டு

இலைகள் அசைவதை
பூக்கள் மலர்வதை
அலைகள் நுரைப்பதை
தத்துவ விசாலமாக்க முடியவில்லை

மலம் கழிப்பதை
அது வழுக்கி ‘தொப்’பென்று விழுவதை
முழுதும் மூழ்காமல் மேலே மிதப்பதை
என் ஞானக்கண் தினசரி
ரசனையில் முகிழ்க்கிறது

000

தனிமையைப் பற்றிய
உங்களது அளவுகோல்
புகைப்படக்கருவியை எடுத்துக்கொண்டு
காடு, மலை, அருவி தேடிப்போவது

என்
த னி மை யில்
நானே காடு,
நானே மலை,
நானே அருவி.

நேற்று பெய்த மழைக்குக்கூட
காரணகர்த்தா நானே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.