சிலையெடுத்தான்  சிலை எடுத்தான்

முந்தைய பகுதியைப் படிக்க

தாராள தார்மீகமும், ஆன்மீகமும்

விக்டோரிய காலத்தில் முதலில் பரவலாக ஒத்துக்கொள்ளப்பட்ட தாராளவாதத்தைச் சார்ந்தே, கல்லூரியில் பயின்ற/பயிலும் நடுத்தர வர்க்க இளைஞர்களின் கருத்துக்கள் அமைகின்றன. மற்றொருவருக்குத் தீங்கு செய்யாத செயலைச் செய்ய ஒவ்வொருவருக்கும் உரிமை வேண்டும் என்று எளிதாக, பகுத்தறிவின் பாற்பட்டு ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) வணிக உலகிற்கான ‘தீமை’ என்பதை வரையறுத்தார். அவருடைய காலத்திலேயே இதன் போதாமைகளும், குறைபாடுகளும் தெரிய வந்தன. 

ஆம், ‘தீமை’ என்று எதைச் சொல்வீர் உலகோரே? மன உளைச்சல்களும், உடற் துன்பங்களும் இதில் இடம் பெறுகின்றனவா? உங்கள் மரியாதையும், சுய கௌரவமும் பாதிக்கப்படுவது எதில் சேர்த்தி? பதிலற்ற ஒரு கேள்வியை அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார்- ஒருவர் தனக்குத்தானே செய்துகொள்ளும் தீங்கு, அதன் தொடர்ச்சியாக மற்றவருக்கும் நடக்கும் தீங்கு என்பதாக, மோசமான முன்னுதாரணமாகுமா? 

அப்படியெனில் அனைத்து நடவடிக்கைகளும் சட்ட, தார்மீக வரையறைக்குள் வந்துவிடுமே?

இந்தத் தாராளமயக் கொள்கைகளின் குழப்பங்கள், விக்டோரிய தார்மீகவாதிகளை, நடுத்தர மக்கள் விலக்கும் தற்கொலை, போதைப் பொருள் உபயோகித்தல், கீழ்த்தரமான ஆபாச பேச்சுகள் போன்றவைகளை தாராளமயக் கொள்கைகளுக்குள் இணைக்க இடம் கொடுத்தன. தீங்கின் அடிப்படையிலான மீப்பொருண்மையில் வசிக்கும் செக்ஸ், உடை, கலை என எல்லாவற்றிலும் புதுச் சிந்தனையைக் கொண்டுவர விரும்பிய நடுத்தரவர்க்கத்திற்கும், தாராளமயவாதிகளுக்கும் இடையே ஒத்துப் போவதும், விமர்சனங்களும் 20ம் நூற்றாண்டின் அடையாளம். இந்தப் பகுத்தறிவுச் சிந்தனைகள், நடுத்தர வர்க்கத்தினர் கவலையுறும், உரிமை மற்றும் தூய்மைகளை மேலும் விரிவாக்கின. உடற்சுத்தம், நச்சுப் பொருள் குறித்த அச்சம், ஒரு புறமும், தனி மனித சுதந்திரம் மறுபுறமுமாக  ஆனால், இணைந்தே இருக்கின்றன. தாராளவாதிகளான நடுத்தர வர்க்கம், புகை பிடிப்பதைத் தீதெனக் கருதுகிறது; சுத்தம் செய்யப்பட்ட, பசையமற்ற, தாவர, கரிம உணவுகளை அதிகமாக நாடுகிறது. இது கணிக்கக்கூடியதுதான்: குழு விஸ்வாசம், சடங்குகளில் தூய்மை, வலி ஏற்படுத்தாதிருத்தல்/ தீமை செய்யாதிருத்தல் ஆகியவைகளை நல்ல நடத்தைக்கான விதிகளாக, முந்தைய தார்மீகவாதிகள் சொன்னார்கள். தாராளவாதமோ எல்லாவற்றையும் மூட நம்பிக்கை என்றும், பழங்குடி வழக்கம் என்றும் புறந்தள்ளிவிட்டு ‘தீமை’ என்ற ஒன்றை மட்டுமே மையப்படுத்துகிறது. 

ஆயினும், குழு இணைப்பிற்கான உள்ளார்ந்த ஆர்வமோ, சுய புனிதமோ இதனாலெல்லாம் மறைவதில்லை; வேறு வடிவெடுத்து மீள மீள வருகிறது. பகட்டான, சுருண்ட நியாயங்களை, தாராள வாதிகள், தீங்கு விளைவித்தலின் கீழ் கொண்டுவர இதனால் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.

இந்தச் சிக்கலான, எப்போதும் மாறும் தன்மையுள்ள, சமீபத்திய விளைவை ‘மிகை தாராளவாதம்’ எனச் சொல்லலாம். தாராளவாத நடுத்தர மனிதர்களின் இயல்பான தார்மீக நெறிமுறைகளின் அதி அழுத்தமும், நம்பிக்கைத் துடிப்பும் இதில் காணப்படுகிறது. மிகைதாராளவாதம், தனிப்பட்ட மனிதர்களின் செயலை, பேச்சுக்களை (அதன் உள்ளீடாக இவர்கள் உணரும் பொருளை) மறைமுகமாகவோ, புலப்படாமலோ அதிகமாகக் கண்காணிக்கிறது. 

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்று தீவிரமாகச் சொல்கிறது. அப்படிப் பழிப்போரின் மீதான தாக்கங்களைக் கொண்டு வருகையில் (நவீன மொழியில் விழிப்பு எனச் சொல்லப்படுகிறது) அது ஏகாதிபத்திய கலாச்சார மானுடவியலின் இருண்மை எனக் காட்டும் போதே, அந்தச் செயலைச் செய்தவரை விட வக்கிரமான தாக்குதலில், (குற்றம் செய்தவரின் குற்றத்தை இச் செயல் குறைப்பதில்லை) இவர்கள் தம்மையறியாமலே ஈடுபடுகிறார்கள். உதாரணமாக ஒரு பல்கலை வளாகத்தில் நடக்கும் கொடுஞ்செயலான கற்பழிப்பிற்கு, சந்தர்ப்பம், நோக்கம், தண்டனையின்மை போன்றவற்றைச் சுட்டாமல், ‘ரேப் கல்சர்’ என்ற உருவமற்ற ஒன்று, சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் வெளிப்படக்கூடிய அரக்க சக்தி, தொற்றும் கிருமி, அந்தச் செயலில் ஈடுபட்டவரை ஆக்கிரமித்ததென்றும், ஆனால், அது அக்குற்றத்தைக் குறைத்துவிடாடென்றும் வியாக்கியானம் செய்கிறார்கள். முரணாக, உள் நோக்கும் இந்த ஏகாதிபத்திய விஞ்ஞானவாதிகள் ‘பண்பாட்டு ஒதுக்கீடு’ என்ற பெயரிலுள்ள மறுசீரமைக்கப்பட்ட குழுக்களை ‘கசடுகளின் கலப்பு’ என்று நிந்தனையும் செய்கிறார்கள். மிகைதாராளவாதம் தங்கள் அம்புகளை மீள எய்வது காலனி குடியேற்றத்தின் மீதுதான்; அவர்களுக்கு இது ‘விழிப்பின்’ நிலைக்கு நஞ்சூட்டுவதாகத் தெரிகிறது; ஏனெனில், இது காலனிக்கும், பெரு நகரத்திற்கும் இடையேயான சரியான எல்லையை மீறுகிறது.

கம்யூனிசம், சோசலிசம், என்ற அர்த்தமுடையதல்ல மிகை தாராளவாதம். சில சமூகவியல் அறிஞர்கள், மிகை தாராளமாக்கலின் சில கருத்துக்களுக்கு உடன்பட்டாலும், மரபான தாராளமயத்தைக் காட்டிலும், மிகை தாராளவாதம், சமத்துவ, இடதுசாரி சிந்தனைகளைவிட மேலானதில்லை. இது, இடதின் பொருளாதாரக் கோட்பாடுகள், இனவாதம் உட்பட்ட சமூக பாரபட்சத்திற்கான இடதின் விளக்கங்கள், ஆகியவற்றுடன் மாறுபடுகிறது. உழைக்கும் வர்க்கத்தினரை பிளவு படுத்தும், பொருளாதார சக்தியைக் காட்டும் ஒன்றாக இனவாதத்தினை மார்க்சிஸ்டுகள் அடையாளம் கண்டனர். ஆனால், மனிதனுடன் பிறந்ததாக, வரலாற்றில் தொடர்வதாக, மாறாததாக இனவாதத்தை மிகை தாராளவாதம் பார்க்கிறது. இந்தக் கருத்து அமெரிகன் டி என் ஏவிலே (DNA) பதிந்துள்ளதாக தொலைக்காட்சியில் ஏனலைஸ் கீட்டிங் (Annalise Keating) சொன்னார். டா நஹாசி கோட்(ஸ்) (Ta-Nehist Coates) போன்ற இனவாத மிகைதாராளவாத சில நபர்கள், நோயைக் குணப்படுத்தி சமூக மாற்றதிற்கான பாதையை ஏற்படுத்தும் மார்க்கத்தில் அபாயகரமானவர்கள்.

 இது, கீழிருந்து வரும் சவால்களுக்கு அஞ்சும் நடுத்தரவர்க்க தாராளவாதிகளுக்கு உறுதியையும், ஆறுதலையும் தருகிறது. இந்தக் கண்ணோட்டத்தில், நடக்க இயலாத சமூக சீர்திருத்தம், ஒரு தாராளவாதியின் கடமையல்ல, தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்வதும், பரிகாரம் தேடுவதும்தான்.

மிகை தாராளவாதம் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டாளரின் கண்டுபிடிப்பல்ல. அதன் கண்ணோட்டத்தின் முக்கிய அம்சம் 20ம் நூற்றாண்டில், இறுதிக் காலாண்டில் நிலவிய குழப்பமான, முரணான மன நிலையிலிருந்து பெறப்பட்டது. சார்பியல் மற்றும் நடைமுறை வாதத்திற்கு ஆங்கில அமெரிக்கன் சமூகத்திற்கு வழிகாட்டிய தத்துவவாதி ரிச்சர்ட் ரோ(ர்)டி (Richard Rorty) இதைப் பதிவு செய்துள்ளார். ரோ(ர்)டி தன்னை ‘முரண் தாராளவாதி’ என்றும் நிலையான கோட்பாடுகளைத் தவிர்ப்பவர் என்றும் சொல்லிக் கொண்டார்; ஆனால், ‘நாம் செய்யும் மோசமான ஒரு செயல், கொடுமை’ என்று சொன்னார். லாட்வியாவில் பிறந்த கோட்பாட்டாளர் மற்றும், நாஜிக்கள், சோவியத்துக்களிடமிருந்து தப்பி ஓடி வந்த ஜூடித் (ஷ்)க்லாரிடமிருந்து (Judith Shklar) தனக்கான உந்துதலை இவர் பெற்றார். ‘பொது நன்மை’ ‘இறுதி நன்மை’ போன்ற ஊகங்களுக்கு இடம் கொடுக்காமல், ஆகக் கீழான கொடுமையைத் தவிர்ப்பதில் கவனக் குவிப்பு வேண்டும் என்று (ஷ்)க்ளார் சொன்னார். (சமகால விமர்சகர் ஒருவர் இதைப் பயத்தின் தாராளமயம் என்று எழுதினார்) இவர்கள் இருவரின் குழப்பமான, வெளிப்படையான இந்த சிந்தனை, மார்க்சியம், கற்பனாவாதம், மனோதத்துவம் ஆகியவற்றின் சோர்வு தரும், முடிவடையாத விவாதங்களைப் பிரதிபலிக்கிறது; பனிப்போர் முடிவுறும்போது அறிவுஜீவிகளுக்கு ஏற்புடையதானது.

புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப் போல இவர்கள் சொன்ன ‘கொடுமை’ அதே விவாதத்தை புது வடிவில் கொண்டு வந்துவிட்டது. ‘கொடுமை’ என்ற கருதுகோள், அதன் விபரீத செயல்களால் ஏற்படும் விளைவுகளால் (அப்படி ஒரு நோக்கத்தில் அந்தச் செயல் செய்யப்படாதிருப்பினும்) அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படாத வலுவற்ற செயல்பாட்டால், அல்லது இவ்விரண்டின் கலவையாகவும் இருப்பதைக் குறிப்பதாக இருக்கலாம். ( கொடுமை, கொடுமை என்று கோயிலுக்குப் போனால், அங்கே ஒரு கொடுமை ஆடிக் கொண்டிருந்ததாம்- நாகேஷின் புகழ் பெற்ற வசனம்). இந்தத் தெளிவின்மை சந்தர்ப்பவாதிகளுக்குப் பயன்பட்டது- தார்மீக, மனோதத்துவ விவாதங்கள் அதிகச் சூடு பிடித்தன. சமூகக் கொடுமைகளைச் சார்ந்து, சமயத்திற்கேற்றாற் போல் அந்த மற்றவரின் உள்ளார்ந்த நோக்கம் பற்றி  மனோதத்துவ முறையில் அலசினார்கள். தாராளமய தார்மீகர்கள், மார்க்ஸிலிருந்து விலகி, கொச்சையான தார்மீகம் பேசும் ஃப்ராய்டை அடைந்தனர்- எப்போதுமே மாறி வரும் தீங்கினையும், கொடுமையையும் அடையாளம் காண சிகிச்சைக் கோட்பாடுகளைப் பயன்படுத்தினர். ரோர்ட்டியைப் பின் தொடர்ந்த இவர்கள், அறுதியான தார்மீகத்தை மறுத்த இவர்கள், எந்த ஒரு செயலுக்கும் தீர்ப்புக்களுக்கும், நோக்கங்கள் கண்டுபிடித்து பரவலான மனோ நிலையில் மூழ்கினார்கள்.

இந்தத் தாராள தார்மீகர்கள் வேறெதைக் காட்டிலும் விலக்கப்பட்ட வார்த்தைகளில் ஒளிந்துள்ள கொடுமையைக் கண்டு பிடிப்பதில் ஆர்வமிக்கவர்கள். (தலித், மாற்றுத் திறனாளிகள், ஒன்றிய அரசு) இந்தத் தாராளவாதத்திற்கு முந்திய கால கட்டத்தில் மனிதர்களின் சமூக நிலைக்குத் தகுந்தவாறு அவர்கள் அழைக்கப்படாவிட்டால் அது ஒழுங்கீனம் எனக் கருதப்பட்டது. சமூகத்தில் தங்கள் சிறந்த பங்களிப்பினைத் தந்தவர்களுக்கு சரியான கௌரவம் கொடுப்பதும், அதை மதிக்காமல், அகௌரவம் செய்வது-அதனால் உண்மையான தீங்கு விளைந்தாலும், இல்லாவிட்டாலும்- தவறெனவே பார்க்கப்பட்டது. இறந்தவர்களைப் பற்றிய அவதூற்றுப் பேச்சுக்கள் பெருந்தீங்கெனக் கருதப்பட்டன. கோள்களின் வீச்சு போன்ற மூட நம்பிக்கையாக, ‘கௌரவக் கருது கோளையும்’ இந்த நவீன தாராளவாதிகள் எதிர்த்தனர். (ஏங்க ஓட்டுனரே, திருவல்லிக்கேணிக்கு ஆட்டோ வருமா? நீ ஏறிக் குந்து ஆட்டோல) ஆனால், இந்த வெற்றிடம் நிரம்பும். சமூக சக்தியின் வெளிப்பாடாக பேச்சு மொழியையும், விவாதங்களையும் மறு ஆய்வு செய்யும் தத்துவங்கள் 1970க்குப் பிறகு எழும்பி வந்துள்ளன. குறைந்த பட்சம் சென்ற இரு தலைமுறையில் கல்லூரியில் படித்தவர்களுக்கு அரசியல் போராட்டமும், மொழியின் பொருளும், சின்னங்களும் ஒன்றே என்ற ஞானம் ஊட்டப்பட்டதால் காயப்படுத்தும் சொற்களைப் பற்றிய இடையறாத விவாதங்கள் நடைபெறுகின்றன. க நா சுவின் ஒரு கவிதையில் அவர் சொல்கிறார்: “எந்த விதிகளுக்குமே சொற்கள் ஆதாரம்- லாயரைக் கேளு சொல்வான்- எந்த வார்த்தைகளையும் எப்படியும் அர்த்தப்படுத்தலாம்.” ‘மதிப்பு, கௌரவம்’ போன்ற பழைய கருத்துக்களைப் பற்றிய புரிதலற்ற சமகால சமூக விமர்சகர்கள், கீழ்மைப்படுத்தும் வார்த்தைகள், ஏதோ மாய மந்திரங்களைப் போல, பெரிய தீங்கினை ஏற்படுத்தும் ஆற்றலுள்ளவை என்று வாதிடுகிறார்கள். ‘சொல்லே’ வன்முறை என்று கல்வியாளர்கள் இடையே இப்போது கேட்க முடிகிறது. மனநோய் சிகிச்சையில் மனக்கிலேசத்தைக் குறிக்கும் சொற்களான ‘அதிர்ச்சி’, ‘தூண்டப்படல்’ போன்றவைகளை விவாதங்களில் தார்மீகக் கோணங்களில் தாராளமாகக் கையாள்கிறார்கள். ‘வன் தூண்டுதல் தரலாம்’ என்ற சொற்களின் பட்டியலை கல்லூரிகள் வெளியிடுகின்றன. ‘தூண்டுதல்’ என்பது துப்பாக்கியுடன் தொடர்புள்ளதால் ப்ரான்டைஸ் பல்கலை (Brandeis University, Boston) ‘வன் தூண்டல் எச்சரிக்கை’ என்று நகைமுரணாக வெளியிட்டது.

வெடித்துவரும் இந்த மனோநிலை மொழி, லிபரல்களின் தார்மீகத்தை நிறைக்கிறது- நவீன நடுத்தர வர்க்கம் தாமும், மற்றவரும் சமூக மற்றும் தார்மீகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளோம் என நினைக்கிறது. ‘நச்சு ஆண்மை’ போன்ற சொற்களை அவர்கள் பேசுவது, கசடு மற்றும் அசுத்தம் குறித்தான பயத்தில் தான். இந்த வழி முறைகளால், மற்றவர்களின் உயிர் பாதுகாப்பினை உறுதி செய்யும் அதிகாரம், ஃபூகோவால் (Foucault) ‘உயிர்ச் சக்தி’ எனச் சொல்லப்பட்ட அதிகாரம், மௌனித்து ‘மனச்சக்தி’ என்ற பரவலான ஒன்றாக உரு மாறியது அல்லது கண்ணிற்குத் தெரியாத மனப்புண்படுத்துதலிலிருந்து சமூகத்தைக் காக்க வேண்டிய அதிகாரம் என்றானது. இந்த அதிகாரத்திற்குத் தங்களைத் தாங்களே முன்மொழியும் மிகை தாராளவாதிகள், மெலிதான, உடையக்கூடிய மனோ நிலையில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களைத் தாங்கள் தான் பாதுகாக்கிறோம் என்று சொல்கிறார்கள். பிரிட்டிஷ் தாராளவாத அரசியல் குழு, “இந்தப் புது ‘நுண்ணிய ஆக்கிரமிப்புக்களை’ (microaggressions) ‘நுட்பமான தீங்கு செய்பவை’ என்று சொல்கிறது; பாரபட்சத்திற்கு உள்ளான குழுவில் அங்கத்தினராக விழைவோருக்கு இது துன்பத்தைத் தருகிறது.” பாரபட்சத்திற்கெதிரான அரசியல், இவ்விதமாக மிகை தாராளவாதம் சொல்லும் ‘தீங்குடன்’ உடன்பட்டுவிடுகிறது.

‘மனதைக் காயப்படுத்தும் விஷத்தை’ முறியடிக்க இவர்கள் பயணிப்பது பெரும்பாலும் ‘சொற்கள் கொடுக்கும் காயங்கள்’ பற்றி என்றாலும், காட்சிப்படலங்களும் உண்டு. மேலே நாம் குறிப்பிட்ட பிரிட்டிஷ் தாராளவாதக் குழு ‘இனவாத நுண்ணிய ஆக்கிரமிப்புகளின் கையேடு’ ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘வாய்ப்பேச்சு, சைகை, குறிகாட்டுதல், அலட்சியப் படுத்தல், அவமானப் படுத்தல் போன்றவை வேண்டுமென்றே அல்லது அப்படிப்பட்ட எண்ணமில்லாமலேயே செய்யப்படுதல் ஆகியன தீமை விளைவிப்பவை/ தீங்கு செய்பவை என அந்தப் பட்டியல் சொல்கிறது. இதில் இறுதியாகச் சொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது- வதைசெய்பவரின் எண்ணத்தை விட, அந்தக் காட்சிகளைக் கண்டுபிடிக்கவும், அவற்றிற்கு பொருள் ஏற்றவும் தேவை உள்ளது என்பதை இது உள்ளீடாகச் சொல்கிறது. வார்த்தைகளைப் போலவே, கீழ்மைப்படுத்தும் காட்சிப்படலங்களும் மறைமுகப் பொருளை மட்டும் சொல்வதில்லை, உண்மையாகவே தீங்கும் செய்கின்றன என்பதுதான் இக்கூற்றுக்களின் அர்த்தமாகிறது. தொலைக்காட்சி மற்றும் சினிமா விமர்சகர்கள், அவற்றில் காட்டப்படுவதை தங்கள் சிறப்புகளைக் கொண்டு அலசி கண்டனம் செய்வது அவை தார்மீகமற்றவை என்பதால் அல்ல, அவையே தீங்கானவை என்பதாலல்ல, தீயப் பழக்கங்களை நயவஞ்சகமாக இயல்பான ஒன்றாகக் காட்டும் ஆற்றல் இந்த காட்சி ஊடகங்களுக்கு இருப்பதால்தான்.

இந்தக் காட்சி மிரட்டல்களை எதிர் கொள்ள நேரிடும் செமியாடிக் சிக்கல்களை விளக்க ஏப்ரல் 2021-ல், தொலைக்காட்சியில் நடந்த ‘ஜியோபா(ர்)டி (Jeopardy!) நிகழ்வில் ஒரு பங்கேற்பாளர் செய்த கைச் சமிக்ஞையை ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தன்னுடைய மூன்றாவது வெற்றியைக் குறிக்கும் விதத்தில் அவர் தன் கட்டை விரலையும், சுட்டு விரலையும் இணைத்து (நம் யோக முத்திரையைப் போல) மற்ற மூன்று விரல்களை நீட்டிய நிலையில் வைத்து கையை உள்புறமாகத் திருப்பி ஒரு சைகையைச் செய்தார். முன்னர் போட்டியிட்டவர்கள் தாங்களாகவே ஒரு குழுவாக இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு கோபாவேசமான திறந்த கடிதம் ஒன்று எழுதினார்கள்: ‘அவர் செய்தது, வேண்டுமென்றொ அல்லது அப்படி ஒரு எண்ணம் இல்லாமலேயோ, வெள்ளையினச் சக்தி, வலது சாரி, அரசிற்கெதிரான தங்களை 3 சதவிகித்தினர் என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் சைகைகளை பெரும்பாலும் ஒத்திருந்தது கண்டிக்கத்தக்கது.’ அந்தப் போட்டியாளர் தான் அப்படி நினைத்து அதைச் செய்யவில்லையென்று விளக்கினாலும், அதை, தங்கள் மேன்மையை வெள்ளையினம் போகிற போக்கில் புண்படுத்தும் விதத்தில் காட்டிவிட்டது என்று சொன்னவர்கள், ஏற்கெனவே ‘நுட்பமான ஆக்கிரமிப்புகளை’ வாழ்வில் தினந்தினம் சந்தித்துக் கொண்டிருக்கும் சிறுபான்மையினத்தினரை மேலும் துயரப்படுத்தும் சைகை இது என்றனர்.

வெளிப்படையான முரண்களை இந்தக் கடிதத்தில் பார்க்கலாம். கண்ணசைப்பும், கையசைப்பும் புண்படுத்தும் நோக்கில் செய்யப்படாமல் கூட இருந்திருக்கலாம் எனச் சொல்லும் கடிதம், அதை எப்படி தீச்செயல் என்று சொல்ல முடியும்? மேலும், அது, வெள்ளையின மேன்மைச் சைகையை ஒத்திருந்தாலும், அந்த நிகழ்ச்சியைப் பார்த்த, பாதிக்கப்பட்டதாக இவர்கள் கருதும் நபர்களுக்கு அதைக் கடிதம் மூலம்  இவர்கள் தெரிவிக்கத் தேவை என்ன? (சில வெள்ளையினக் குழுக்களின் இந்த சைகையைப் பற்றி பொது மக்கள் அறிந்திருக்கவில்லை என்றே அந்தக் கடிதம் அனுமானிக்கிறது) இந்தக் கடிதம் சுற்றிச்சுற்றி சமாளிக்கிறது- அது சொல்கிறது- ஒளிபரப்பான இந்த மறைமுக சைகை, வெள்ளையின மேன்மையாளர்களை இந்த ‘ஜியோபா(ர்)டி நிகழ்வில் இடம் பெற்று அதே போன்ற சைகைகளின் மூலம் தங்கள் மேன்மையை நிலை நிறுத்துமாறு அழைக்கிறது.

‘ஆபத்து!’ காட்சி மற்றும் வாய் மொழிக் கண்காணிப்பாளர்கள் இவ்வாறெல்லாம் தங்கள் இடத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள். அறியாமையிலும், பாதிக்கப்படும் சூழல்களிலும் இருக்கும் பொது மக்களின் பாதுகாப்பிற்காக, என்னதான் நல்ல எண்ணத்துடன் அல்லது கெட்ட எண்ணம் இல்லாமலும் நிகழ்ந்துவிடும் செயல்களின் அச்சுறுத்தல்களை அத்தகைய பொது மக்கள் எதிர் கொள்ள தன்னைத்தானே நியமித்துக் கொள்ளும் செமியாடிக் குழு, மார்தட்டிக் கொண்டு களமிறங்குகிறது. சுயப் பெருமை கொண்ட இந்தக் காப்பாளர்கள், அந்த சைகையை ‘நாயின் விஸில்’- பொதுவாகக் கேட்கப்பட முடியாததும், அதற்கெனவே வடிவமைந்த காதுகளில் மட்டுமே கேட்பதுமான ஒன்று- எனச் சொல்கிறார்கள். சுட்டுவதான, மனோரீதியான, உடலளவிலான தீங்குகளின் இடையே இருக்கும் வேறுபாடுகளை விலக்கி, இந்தச் சைகைகள் கொண்டிருக்கும் செய்தி, அது என்னதான் இழிவிற்காகச் செய்யப்படாதிருப்பினும், அதன் குறியீட்டில் மறைந்துள்ள செய்திகளை வெளிக்கொணர அவசரத் தேவை இருக்கிறது என்றும் சொன்னவர்கள், இந்த ‘ஜியோபா(ர்)டி தயாரிப்பாளர்கள் நிஜ உலகில் இதனுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எதிர்வினையாக உருப்பெற்று தாக்குதலைச் செய்தால் அதை எதிர் கொள்வார்களா என்றும் கேட்டார்கள்.

ஏறத்தாழ கடந்த பத்தாண்டுகளாக ‘ஜியோபா(ர்)டி கடிதத்தில் காணப்படும் மிகைதாராளவாதம், சிலைகள் தொடர்பான விவாதங்களிலும் தென்படுகிறது. வார்த்தைகளாலும், சைகைகளாலும் தீங்கு செய்வதும், வன்முறையைக் காட்டுவதும் சாத்தியமெனில், பெரும் மதிப்பில்(!) வாழ்ந்த மனித உருவச் சிலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிகமில்லையா? 2010 வாக்கில் சுயப் புரட்சியாளர்களான கல்லூரி மாணவர்களும், செயற்பாட்டாளர்களும், பார்வையாளர்களின் மீது சிலைகளின் தாக்கத்தைப் பற்றி பேசத் தொடங்கினார்கள். ஓரியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஏகாதிபத்திய பிரிட்டிஷின் மிகப் பெரும் சுரங்க அதிபரான சி ரோடஸ் (Cecil Rhodes) சிலையைக் கடந்து செல்ல நேரும் போதெல்லாம், வன்முறையாளரை, அடிமை கொண்டவரைக் கடக்கும் துயரம் எழுகிறது, அடிமைப் படுத்தியவர்களின் சித்திரங்களுக்கிடையே எழுதும் தேர்வு வன்முறையானது என்று 2015-ம் ஆண்டில், ஆக்ஸ்பர்ட் பல்கலையின் மாணவ ஒருங்கணைப்பாளர் ஒருவர் ‘ஸ்கை ந்யூசில்’ எழுதினார். இது காட்டுவது ஒன்றுண்டு- முன்னர் ‘அவமதிப்புகள்’ எனக் கருதப்பட்டவை, தற்போது ‘வன்முறை’ என்றாகி விட்டது.

மனித உருக்களே வன்முறையின் சின்னம் என எண்ணுவதால், சிலைகளை, அந்த உருக்களை, அழிப்பதற்கான செயல்கள், சட்டத்திற்குப் புறம்பான வன்முறைகள் சரியே என்று நிறுவப்பார்க்கிறது. 2016க்கு முன்னரே இத்தகைய உருவழிப்பு எண்ணங்கள் பிரிட்டிஷ், அமெரிக்க கல்லூரி வன்முறையாளர்களிடம் இருந்து கொண்டுதானிருந்தது; டானல்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், குறிப்பாக, அமெரிகாவில், அதிகம் பரவியது. சமூக அமைப்பில், மாறாத ‘சமூகப் பிரிவினைகளையும்’, சமகால அரசியல் சூழல்களையும் முக்கியத்துவப்படுத்தாமல், இனவாதச் சிலைகளையும், சின்னங்களையும் பாழ்படுத்திச் சிதைப்பதுடன் மிகை தாராளவாதம் திருப்தி அடைந்தது. (முன்னாள்) அமெரிக அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை, தாராளவாத அரசியல்வாதிகளும், கனம் பொருந்திய ஊடகங்களும், வணிகக் கொள்கை, உடல் நலக் கொள்கை, அல்லது கிளிண்டனின் பிரச்சாரம் ஆகியவற்றின் போதாமைகளென ஏற்காமல், அமெரிக்க வாழ்வின் நிலத்தடி நீரான ‘வெறுப்பு’ என்று சொன்னார்கள். ட்ரம்ப் வெற்றி பெற்றதில் தங்கள் பங்களிப்பினை கேள்விக்குள்ளாக்காமல் இன்றைய அறிவுஜீவிகள் சிலைகளில் தஞ்சம் புகுந்து விட்டனர். 2016-ல் மத்திய மேற்குப் பகுதி மாநிலங்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் ட்ரான்ஸ்-பசிபிக் பங்கமைப்பு ஷரத்துக்களைப் பற்றி கவனம் செலுத்தாது இருந்தன ஊடகங்கள். இதைத் துருப்பாகக் கொண்டு வெள்ளை மாளிகை அதிபரானார் ட்ரம்ப். அப்போதும் அதைப் பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை. திடீரென்று சுறுசுறுப்பான வாஷிங்டன் போஸ்ட், ட்ரான்ஸ் பசிஃபிக் பார்ட்னெர்ஷிப்பைக் கொன்று, ட்ரம்ப் சீனாவிற்கு முதல் பெரிய வெற்றியை அளித்தார் என்று கூவியது. சில மாதங்களுக்குப் பிறகு, அதாவது சார்லஸ்டோ தோல்விக்குப் பிறகு, கொள்கைகளின் அடிப்படையில் அமையாத, இனவாத அரக்க அமெரிக்க முகமாக ட்ரம்ப்பைச் சாடுவதற்கு இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

ட்ரம்ப்பின் வெற்றிற்குப் பின்னதான ஒன்றாக இந்த (புது) உருவழிப்புச் சிந்தனையை பார்ப்பது தவறான ஒன்றாகும். 2016க்கு முன்னரும் இது நடைபெற்றது; ஆனால், 2020 வரை சிலையழிப்புகள் அவ்வளவு தீவிரமாக நடை பெறவில்லை. இன்றைய உருவழிப்பாளர்கள் பரந்துபட்ட சமூக மாற்றங்களில் சிக்குண்டிருக்கிறார்கள். அமைப்புகள் நொறுங்க, அதனால் இயந்திர யுகத்திற்குப் பின் எழுந்த கவலைகள், நாகரீகச் சரிவுகள், ட்ரம்பிற்கு சில தொகுதிகளில் இணக்கத்தைத் தந்தாலும், அது முற்றிலும் மாறுபாடான தீவிரமான சிந்தனைகளை விளைவித்தது. 

தங்களை ‘மீட்பர்’ என்று கல்லூரியில் படித்தவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். தொழிற்சாலைகளை மீட்டுருவாக்குவதற்கும், புலம் பெயர்தல் கொண்டு வரும் சிக்கல்களுக்கான தீர்வைச் சொல்வதையும் விடுத்து, ‘தார்மீக மீளெடுத்தல்’ தங்களுக்கான ஆயுதம் என்று ஏற்கிறார்கள். சமூகம் தன் ‘முதல் பாவத்தைக் கண்டு கொள்ளாமல், அதை சரி செய்யாமல் விட்டதுதான் இன்றைய சமூகப் பிணக்குகளுக்கும், கலவரங்களுக்கும் காரணமென ‘லான்ங் டூரே’வில் (longue durée) இணைக்கிறார்கள்-  மதச்சின்னங்களை அழிக்கவில்லையென்பதால் கோபமுற்ற தேவன், புயல், தொற்று நோய், போன்றவற்றால் நம்மைத் தண்டிப்பதாகச் சொன்ன புனிதர்களின் கூற்றினை ஒத்திருக்கிறது இது. தெய்வீகப் புனிதர்களைப் போல, இந்த நவீன உருவழிப்பாளர்களும், சமூகத்தில் நிலவும் ஊழல்களுக்கு ஒரு உதாரணமென உருவக் கொண்டாடுதலை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது தற்செயலாக இல்லாமலிருக்கலாம். தங்கள் கல்லூரிப் படிப்பின் வழி அவர்கள் பகுத்தாய்ந்த கலாசாரமும், வெள்ளைக்காலர் ஊடகங்களும்,  இவர்களுக்குத் தரும் இரண்டாம் பார்வையைக் கொண்டு, தேசிய மறுசீரமைப்பு ஏற்பட பழைய பாவங்களுக்கு வருந்துவதும், ஆன்ம சுத்தியும் தேவை என இவர்கள் நினைக்கிறார்கள். குடியரசு கட்சியைச் சேர்ந்த, நாம் முன்னர் குறிப்பிட்ட ‘ஹில்’ இதழாளர் சொல்கிறார்: ‘நம் நாட்டின் முதல் பாவம் அடிமைமுறை. சமகாலப் பாவம் என்பது அத்தகையோரின் சிலைகளையும், சின்னங்களையும் காட்சிப் படுத்துதல். இது அடிமைமுறைக்கு எதிராகப் போராடி உயிர் நீத்தவர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதை.’

வசதியான பலிகடாக்கள்

படித்த நடுத்தர வர்கத்தினருக்கு பழைய பாவங்கள் தான் இன்றைய பிரச்சனைகளின் ஊற்றுமுகம் என்ற கூற்று பிடித்திருக்கிறது. தங்களின் செமியாடிக் பயிற்சியின் மகத்துவம் பற்றிய பெருமிதத்தை அவர்களுக்கு இது தருகிறது; பொது மக்களின் அரசியல் தீர்ப்புக்களை புறந்தள்ளி, சிறப்புப் பயிற்சி பெற்ற மேன்மக்கள், அதாவது இந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர் இதைக் கையாள்வதால், அது மக்களாட்சியின் எதிர்மறையாகி விடுகிறது.  மிகப் பெரும் சீர்குலைவுகளான இனவெறியும், வெள்ளை மேலாதிக்கமும் கண்களுக்குத் தெரியாதவை, உடலற்றவை; எனவே வரையறைக்குள் வரமுடியாதவை, என்பதால் அவற்றை எப்படித் தாக்க முடியும்? மிகைதாராளவாதிகளுக்கு, சிலைகள் பாவத்தின் உருவடிவங்கள் எனத் தோன்றுவது அவர்களின் உருவழிப்பினை சுலபமாக்கிவிடுகிறது. பண்டைக்கால இஸ்ரேலியர்கள் வருடத்திற்கு ஒரு ஆட்டினைத் தேர்ந்தெடுத்து அதன் மேல் சமூகத்தின் குற்றங்களை ஏற்றி மலை உச்சியிலிருந்து வீசி எறிவதைப் போல, நவீன உருவழிப்பாளர்கள், சிலைகள், சின்னங்களை அழிப்பதன் மூலம் தங்கள் உள் அழுக்குகளை வெளிமுக உருவகமாக்குகிறார்கள்.

இஸ்ரேலியர்களின் பலிகடா எத்தனைக்கு செயற்கையானதோ, பொருளற்றதோ, அத்தனைக்கு இணையானதுதான் இந்த சிலை உடைப்புகள். குறிப்பிட்ட கோரிக்கைகளை வைக்காமல் இந்த நவீன உருவழிப்பு இலக்கில்லாமல் அலைபாய்கிறது. மே 2020ல் வீழ்ந்த பல சிலைகள், கான்ஃபிரடெரசிக்குக் (Confederacy) தொடர்புடையவை என்றாலும்,   மற்றவர்களின் உருவழிப்பிலும் தொடர்ந்தது. மே 30 அன்று நாஷ்வில்லில்,( Nashville) அரசவை உறுப்பினரான எட்வெர்ட் கார்மேக்கின் (Edward Carmack) சிலையை அவர், ஐடா பி வெல்ஸ் (Ida B. Wells) வெள்ளையினக் கும்பல்கள் கருப்பின மக்களை, குறிப்பாக ஆண்களைப் படுகொலை செய்வதற்கெதிராக நடத்திய போராட்டத்தை எதிர்த்ததால், பெயர்த்தெறிந்தார்கள். பிரிவினைவாதிகள், அதீத இனவாதிகள் ஆகியோரின் சிலைகளும் கலவரங்களைத் தவிர்க்கும் பொருட்டு முன்னரேயே அகற்றப்பட்டிருந்தன. டாலஸ்ஸில் (Dallas) ஜூன் 4ம் தேதியன்று எதிர்ப்பாளர்கள் ‘ஒரு கலவரம்; ஒரு ரேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டிருந்த சிலையை அழித்தார்கள்; எதற்குத் தெரியுமா- அந்தச் சிலைக்கு மாதிரியாக இருந்தவர் பள்ளிகளின் ஒருங்கிணைப்பிற்கு எதிரானவர் என்பதால்; கவனியுங்கள்- சிலையாய் நிற்போரின் சிந்தனைகள் மட்டுமல்ல- அதை உருவாக்க ‘மாடலாக’ இருப்போரின் சிந்தனைகளும் கேள்விக்குட்பட்டவையே! 

ஜூன் 12 அன்று இடைக்காலத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸின்,( Robert the Bruce) சிலையை (தெளிவற்ற காரணமாக) ‘இனவாத அரசர்’ என்று கூவி ஸ்காட்லாந்தில், பானக்பர்னில் (Bannockburn) அடித்து வீழ்த்தியது ஒரு கும்பல். அதற்கடுத்த நாள், ஓரெகன் (Oregon) பல்கலையில் ஒரு கும்பல், ‘பயனியர்’ மற்றும் ‘பயனியரின் தாய்’ (“Pioneer” and “Pioneer Mother”) என்ற தொன்மையான சிலைகளை அடித்து நொறுக்கியது. கூட்டாட்சியின் உருவங்களை, சின்னங்களை அழிக்கும் நோக்குடன் உருவான இது, அரசு அதிகாரிகளுக்கும், அடிமை முறை எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகவும் வடிவெடுத்தது. ஜூன் 19-ல் சான்ஃப்ரான்ஸிஸ்கோ தங்க நுழைவாயில் பூங்காவிலிருந்த யுலிஸீஸ் சி. க்ரான்டின் (Ulysses S. Grant ) மார்பளவு உருவச் சிலையை ஒரு குழுவினர் அகற்றினர். இதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, பெண்களின் வாக்குரிமைக்கு செயலாற்றியவர்கள் பரிசாகக் கொடுத்த ‘ஃபார்வேர்ட்’ என்ற பெண் சிலையை, மேடிசன், விஸ்கான்சின்னில் ஒரு போராட்டக் குழு பீடத்திலிருந்து வீழ்த்தியது. பின்னர், அரசு அதிகாரியும், அடிமை முறை ஒழிப்புக்குப் போராடியவருமான ஹான்ஸ் க்ரிஸ்டியான் ஹெக்கின் (Hans Christian Heg) சிலையை, இழுக்கும் இயந்திரத்தின் மூலம் கீழே தள்ளி, அதைச் சிதைத்து, மெனொனா (Monona) ஏரியில் வீசியது. ஜூலை 23ல் ஓரெகன் மாநிலத்தில் போர்ட்லேன்ட் நகரில் போராட்டக்காரர்கள் வைத்த தீ ஒரு கேலிக்கூத்தாக, ‘எல்க்’(elk) சிலையின் பீடக் கட்டுமானத்தைச் சிதைத்தது.

இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கத்திற்குப் புறம்பான சில செய்கைகள் என்று இவற்றை வகைப்படுத்துவோர் உண்டு. ஆனால், முறையான அறிக்கையோ, அதைப் பேசும் அங்கீகாரமுடையவர்களோ, இல்லையெனில்  போராளிகளின் செயல்பாட்டின் உண்மைத் தன்மையை எப்படி அறிவது? 2020களில் இத்தகைய உருவழிப்பாளர்களின் விசித்திர, உதிரியான செயல்பாடுகளுக்கு சுற்றி வளைத்த காரணங்களின் தேவை இருந்தது; போகப் போக ஒன்று புரிந்தது- இந்தப் போராளிகள் இச்செயலில் மதிப்பு கொள்கிறாரகள்- அழிப்பது ஒன்றே மதிக்கத்தக்கது- அவர்கள் அழிப்பது எதை, எவரைக் குறித்தாயினும்! வரலாற்றுத் துயரக் காரணியாக இல்லாமலிருந்தாலும், அமெரிக்காவில், குறிப்பாக மேற்குக் கரைப் பகுதிகளில், பழைய சின்னங்களை அழித்தொழிப்பதில் ஆர்வம் மிகுந்தது. அக்டோபர் 2020ல் போர்ட்லேன்ட் வரலாற்று அமைப்பின் அருங்காட்சியகத்தினுள் வன்முறையாக நுழைந்து, அதைச் சின்னாபின்னப்படுத்தினார்கள். 

தொடர்ந்த வசந்த காலத்தில் இந்த அருங்காட்சியகம் மீள் தாக்குதலுக்குள்ளான போதிலும், அதன் நொறுங்காத சட்டகங்களால் அது பிழைத்தது. முன்னர் அடிமைகளை வைத்திருந்தவர், இனவாதம் பேசியவர்கள், அல்லது இவற்றைப் போன்ற தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தவர் ஆகியோரின் பெயர்களில் இயங்கும் 44 பள்ளிகளின் பெயரை மாற்ற, ஜனவரி 2021-ல் சான்ஃப்ரான்ஸிஸ்கோ பள்ளி நிர்வாகம் முடிவெடுத்தது. ஒரு சிறப்புக் குழு, பகிரப்பட்ட விரிதாளில் கண்டனத்திற்குரிய பெயர்களை பதிந்தது; ஆனால், இதை வெளியார் எவரும்  ஆயவுமில்லை, சரிபார்க்கவுமில்லை. விரிதாளின் கூற்றுப்படி ‘பயங்கரமெனக் கருதத்தக்க பாடல்’ எழுதினாரென்று ராபர்ட் லூயிஸ் ஸ்டீபன்சன் (Robert Louis Stevenson) நீக்கப்பட்டார்.  சுற்றி வளைக்கப்பட்ட குற்றம் சாட்டி சில பள்ளிகளின் பெயர்கள் இந்தப்பட்டியலில் இடம்பெற்றன. விரிதாள் சுட்டிக்காட்டியபடி, தென் கரோலினாவிலுள்ள ஒரு மாவட்டமான க்ளேரென்டானில் ( Clarendon) அவ்விடத்தில் அமைந்துள்ளதால், அங்குள்ள துவக்கப் பள்ளி க்ளேரென்டான் அவென்யூ எனப் பெயரிடப்படிருந்தது. ஆனால், சிக்கல் என்னவென்றால் 1667-ல் ஆட்கொணர்வு விதிகளை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்ட, எட்வர்ட் ஹைட் என்பவர், அமெரிக்கா பிரிட்டனின் காலனியாக இருந்த காலத்தில், பிரிட்டிஷ் அரசர், முதலாம் சார்ல்ஸிற்கும், இரண்டாம் சார்ல்ஸிற்கும் முக்கிய ஆலோசகராக இருந்தவரின் பெயர் அந்த மாவட்டத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தது என்பதுதான். அவர் க்ளாரண்டன் என்ற பகுதிக்கு ‘எர்ல்’ என்ற பதவியைக் கொண்டு தொடர்புபடுத்தப்பட்டிருந்தார்.  

17ம் நூற்றாண்டின் ஒரு பெயர், மூன்று பெயர்ச்சிகளைத் தாண்டிய அந்த ஏர்லின் பெயர், சான்ஃப்ரான்ஸிஸ்கோவின் ஒரு துவக்கப் பள்ளியின் பெயராக இருப்பது, ஆங்கில இறையாண்மைக்கு எதிரான கோட்பாடுகளை மாணவர்களை எடுக்கத் தூண்டும் என்பது, தோற்றம் எதுவெனத் தென்படா பெயர்ச் சொற்களின் வழி ஏதோ இரசவாதம் நிகழ்த்திவிடும் என்பதான ஒரு விந்தை. இருந்தபோதிலும், அந்த பள்ளி நிர்வாகம் இப்படித்தான் நினைத்திருக்க வேண்டும்- ‘மறு பெயர் வைப்பதற்கும், க்ளேரென்டானுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை, பழைய சின்னங்களைச் சுத்தப்படுத்தும் அதிகாரத்தைக் கையாண்டோம்.’ மறுபெயர் வைத்த குழுவினர் இதற்கான விளக்கம் அளிக்கையில், தங்கள் தீர்மானத்திற்கும் வரலாற்றிற்கும் தொடர்பில்லை என்று சொன்னார்கள். ‘பெனொப்ஸ்கெட் பயணத்தில்’ (“Penobscot Expedition,”) பங்கு பெற்றதின் மூலம் பழங்குடி இந்தியர்களை சுத்திகரித்த செயலில் இவருக்குத் தொடர்புண்டு என்று ‘ஹிஸ்டரி சேனலின்’ முதல் பத்து இடங்களில் ஒருவரான ஒரு வரலாற்றாளர் சொன்னதால், பால் ரெவியரின் (Paul Revere) பெயர் மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. உண்மையில் அந்தப் பயணம் பெனோஸ்கெட் விரிகுடாவில் பிரித்தானிய பாதுகாப்பு அரணுக்கு எதிரான கடற்படைப் பணியே தவிர பழங்குடி இந்தியர்களுக்கெதிரான ஒன்றல்ல. பெயர் மாற்றத்தைப் பரிந்துரைத்த அணியிடம், உண்மைக்குப் புறம்பான இந்தச் செய்திகளைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள், இதை வரலாற்று அறிஞர்களிடம் கலந்து பேசித்தான் சொல்கிறீர்களா எனவும் கேட்டனர். அந்தக் குழுவின் தலைவரான ஜெர்மையா ஜெஃப்ரி (Jeremiah Jeffries) சொன்னார்: “என்ன தேவை இருக்கிறது இதற்கு? ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கிறது; அதை மீளப் பெற்றெடுப்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை. வரலாறு  எழுதுபவர்கள், ‘அப்படி நடந்திருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்’ என்றுதானே பதிவு செய்கிறார்கள்?” வரலாற்றை, குழப்பமற்ற தீர்மான விஷயங்களின் பதிவு என்றும் சொன்னதோடு நில்லாமல், இந்தக் குழுவின் முடிவினைக் கேள்வி கேட்பவர்கள், தெளிவான நீரைக் கலங்கச் செய்பவர்கள் என்று அதைப் பற்றிய விவாதங்களுக்கான அல்லது நுண்ணியத் தகவல்களுக்கான வாசலையும் அடைத்துவிட்டார்கள். “எங்களைப் பொறுத்த வரை இது வெளிப்படையான உரையாடல்; இதில் வரலாற்றாளர்கள் தேவையில்லை; அவர்கள் மிகப் பெரும் பிம்பத்தை எழுப்பப் பார்ப்பாளர்கள்- அதற்கான ஆயிரம் காரணங்களைச் சொல்வார்கள். இந்த விவாதத்தில் அதற்கு அவசியமேயில்லை.” 

ஜெஃப்ரியின் இந்தக் கடின நிலையில் உள்ள சங்கடம், அவரது குழுவினர் அடிப்படைத் தகவல்களைச் சரி பார்க்கவில்லை, மற்றும் வராலாற்றறிஞர்களுடன் ஆலோசிக்கவில்லை என்பதையும் தாண்டி, பெயர் மாற்றம் என்பது முந்தைய வரலாற்றின் கணக்கீடு அல்ல, மாறாக இன்றைய தீமைகளின் ஊற்றுக்கண் அதிலே உள்ளது என்று மறுமதிப்பீடு செய்வதுதான். இந்த மறுதலிப்பின் வாயிலாக பழைய கசடுகள் படிந்துள்ள இன்றைய சமூகத்தை சுத்தப்படுத்தும் அதிகாரத் தீர்ப்பின் மூலம் மதிப்புமிக்க இடத்தைப் பெற முடியுமே? பேச்சினாலும், காட்சியினாலும் தென்படும் முந்தைய தீங்குகளின் தாக்குதலை எதிர் கொள்ள, முறையே பெயர் மாற்றமும், சிலை உடைத்தலும் இரு குழல் துப்பாக்கியெனச் செயல்பட்டாலும், பெயர் மாற்றம் சில விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கத் தேவையிருக்கிறது; ஆனால், உருவழித்தலுக்கு சட்டமுறை தேவையில்லை என்பதால் அதன் பிரச்சார பலம் அதிகமே!

மகாபாரதத்தில் ஒரு காட்சி- போர் முடிந்து வெற்றி வீர்ர்களாக ஆனால் வருத்தத்துடன், தங்கள் பெரியப்பாவைச் சந்திக்க வருகிறார்கள் பாண்டவர்கள். திருதராஷ்டிரன், தன் புதல்வர்களைக் கொன்ற பீமனைக் கட்டி அணைக்க வருகையில் இரும்பாலான பீம உருவினை கண்ணன் பேரரசரின் முன் நிறுத்துவான்; வெறுங்கைகளாலேயே அதை திருதராஷ்டிரன் நொறுக்கி விடுவான். நிஜ பீமனின் உயிர் இப்படியாகத் தப்பிக்கும்.

காமாலைக் கண்ணிற்கு காண்பதெல்லாம் மஞ்சள்.

https://americanaffairsjournal.org/2022/05/iconoclasm-of-the-vanities-why-we-are-destroying-statues/ by Samuel Biagetti

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.