
(1)
காட்டில்
ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு மரத்திடம்
கற்றபடி-
காட்டில்
ஒவ்வொரு மரமும்
ஒவ்வொரு மரத்திற்கு
கற்பித்தபடி-
காட்டில்
ஒவ்வொரு மரமும்
தனக்குத் தானே
கற்றபடி
கற்பித்தபடி-
காட்டில்
ஒவ்வொரு மரமும்
காடு.
(2)
இது வரை
யாரும் சவாரிக்காது
திமிர்த்துக்
காட்டில் திரியும்
தனித்ததோர்
கருங்குதிரை,
தனக்குத் தெரியாமல்
தன் மீது
சவாரிக்கும்
முழுநிலவு வீசும்
ஒளிப் புல்லை
மேய்ந்து கொண்டே,
நினைவு தப்பி
உதிர்ந்து
மெத்திப் போன சருகுகள்
சலசலக்க
துயிலாத காட்டில்,
துயிலாது
நடக்க-
குதிரை விட்டுக்
கீழிறங்காமல்
நிலவும்
சவாரித்துக்
காட்டைக் கடந்து கொண்டே
இருக்கிறது-
விடியலில் காடு முடியுமென்ற
நம்பிக்கையில் .
(3)
காட்டில் மரங்கள்
ஒளிந்திருப்பதில்லை.
ஒன்றையும், அதனால்
ஒளித்துக் கொள்வதில்லை-
வேர்களைத் தவிர-
இடுப்புக்குக்குக் கீழ், மரங்கள்
நிலனை உடுத்திக் கொள்வதன்றி
அஃது வேறில்லை.
காட்டில் ஒரு மரம் போல்
இன்னொரு மரம் உருவிலில்லை.
ஒரு மரம் இன்னொரு மரத்தைத்
தெரியாதென்று கூறுவதில்லை.
ஒரு முனையிலுள்ள மரம்
மறு முனையிலுள்ள மரத்திடம்
முகம் கொடுக்காமல் இருப்பதில்லை.
நிலை மாறும் பருவங்களில்
நிலை மாறினாலும் மரங்கள்
நிலை குலைவதில்லை.
நிச்சிந்தையில் நோற்கும் மரங்களுக்கு
நில்லாக் காலம் அவசரமில்லை.
ஒன்றுக்கொன்று அனுசரித்து மரங்கள்
வெளியேறாமல் உள்ளதால்
காடு அழிவதில்லை.
காட்டுக்குள் எத்தனையோ வழிகளில்
காடு தொலைவதில்லை.
4
’எந் நொடியில்
எழுந்து வரும் புலி?’
காத்திருந்தவர்க்குத் தெரியவில்லை
காடும் காத்திருந்ததென்று.
காடு போல்
காத்திருக்கத் தெரியாததால்
காத்திருக்க முடியாது
காட்டிலிருந்து திரும்பிய காத்திருந்தவர்க்கு
காட்டுக்குத் தெரிந்து
தமக்குத் தெரியாதது:
எந் நொடியிலும் எழுந்து வரும் புலி
எழுந்து வரும் நொடியே, புலி
எழுந்து வரும் நொடி.
(5)
திக்குத் தெரியாத காட்டில்
திடீரென்று மழை.
மழை மீது பெய்யும்
மழையில், காடு
ஒதுங்குவது போல்
ஒதுங்கினேன் நானும்.
நனைந்தபோது தான்,
நனைந்ததையே மழை
திருப்பித் திருப்பி நனைப்பதில்
நனைந்தது நனையவில்லையாய்
நனையாதாகிறதென்று
காட்டுக்குப் புரிந்தது
எனக்குப் புரிந்தது.