
மறந்துவிடக்கூடாது என்று இரண்டு மூன்று முறை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். மாடிவீட்டில் அவர்களின் மீனை என் பொறுப்பில் விட்டுவிட்டு ஒரு மாதம் வெளியே சென்றிருந்தார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் பதட்டம். ஏற்கனவே ஒருமாதத்தில் மூன்று மீன்கள் இறந்து போயிருந்தன. அவர்களின் திருமணத்திற்காக பெண்ணின் தோழி பரிசாக மீன்தொட்டி கொடுத்திருந்தாள்.
இதெல்லாம் பரிசாகக் கொடுக்க வேண்டுமா என்று தோன்றியது. அதை விட அது வாஸ்த்துக்காக வைக்க வேண்டும் என்று அந்த வீட்டு அம்மாள் சொன்னாள். அது இன்னும் எரிச்சலாக இருந்தது. இந்த தொட்டி மீன்களைப் பார்க்கும் போதும் அதை கண்ணாடி வழியே தொடும் போதும் மீன்கள் பதட்டம் கொண்டு நகர்வது என்னவோ போல இருக்கும். கடைகளில், வீடுகளில் என்று எப்போதாவது பார்க்கும் போது அதனிடம் என்ன சொல்வது என்று தோன்றும். நாய்க்குட்டியை தொட்டு விடைபெறலாம். கூண்டு பறவைகளிடம் கூட உதட்டை குவித்து ஒலி எழுப்பி எதாவது சேட்டை செய்து விடைபெறலாம். மீன்களிடம் என்ன செய்வது?
தொட்டிக்குள் நிரந்தரமாக எங்குமே செல்லாத பயணம். காணாததை கண்டமாதிரி குழந்தைகள் பார்ப்பது இயல்பு. பெரியவர்களும் அதை எப்படி ரசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
எங்கள் ஊரில் அதை பிடித்து தின்பதோடு சரி. இந்த மாதிரியான தொல்லைகளைத் தருவதில்லை. இதுதான் எங்கள் ஊரில் நான் பார்க்கும் முதல் மீன்தோட்டி. ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் நாய் பூனைகளைத் தான் பிடித்து போட்டிருக்கிறார்கள். அதுவும் நாய்கள் வாசல், திண்ணைகளோடு சரி.
இந்த மீன்களெல்லாம் எத்தனை சிறிய ஜீவன்கள். அன்று அப்படித்தான் இந்த மாடிவீட்டு மாப்பிள்ளை, மீன்களின் தண்ணீரை மாற்றும் போது பொசுக்கென்று ஒரு மீன் அவன் கைகளிலேயே செத்து போய் விட்டது.
ஆரஞ்சு கலரில் இருந்த அந்த மீனின் துணை மீனை அடிக்கடி சென்று பார்த்தேன். விழிகளை விரித்தபடி கண்ணாடித் தொட்டிக்குள் சுற்றி சுற்றி வந்தது. அதற்கு தெரிந்திருக்குமா? என்று முதலில் தோன்றியது. பின்பு தெரியாமல் இருக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
இன்னொரு ஜோடி வெள்ளை மீன்கள். வெள்ளியில் செய்தது மாதிரியே இருந்தன. உருவமே சிறியது. வயிறு மட்டும் குழந்தைகளின் வயிறைப் பால தொப்பையாக இருந்தது. அந்த இரண்டுடனும் இந்த ஒற்றை மீன் சேர்ந்து கொள்ளுமா என்று அடிக்கடி வந்து உற்றுப்பார்ப்பேன்.
இறுதியில் அந்த ஒற்றை மீனை என்னிடம் விட்டுவிட்டு சென்று விட்டார்கள். இதோடு நான்கு முறை அவர்களை அலைபேசியில் அழைத்து மீனிற்கான உணவு பற்றியும், தண்ணீர் மாற்றுதல் பற்றியும், காற்றுபற்றியும் கேட்டு அவர்களை கடுப்பாக்கி இருந்தேன். கடைசியில் அவர்கள் உனக்கு தோணும் போது போய் வீட்டைத்திறந்து பாரு என்று முடித்துவிட்டார்கள்.
முதல் இருநாட்கள் மறந்து விடுவேனோ என்று மீனையே நினைத்துக்கொண்டிருந்தேன். அடுத்தநாளில் இருந்து உணவு உண்ணும் போது சரியாக நினைவிற்கு வந்துவிடுகிறது.
அவர்கள் வீட்டின் செவ்வக வடிவ வரவேற்பறையின் தெற்கு பக்கம் ஒரு திண்டில் மீன் தொட்டி இருந்தது. ஒற்றை மீன். அரவமற்ற வீட்டில் கதவை திறக்கும் சத்தம் தனியாகக் கேட்டது. சிவப்பும் பச்சையுமான கடுகு அளவுள்ள உருண்டைகளை நீரில் போட்டதும் அடியில் இருந்த மீன் சிறிய வாயை முணுக் முணுக் என திறந்து மூடியபடி மேலேவந்தது. சிவப்பு உருண்டையை கவ்வி நழுவவிட்டு விட்டது. மிதக்கும் உணவை சுற்றி சுற்றி வந்து கவ்வி எடுத்து விழுங்கியது.
தண்ணீரை மாற்றுவதற்காக எடுத்தேன். கைகள் பதற தொடங்கின. ஒருவேளை கீழே மீன் நழுவிவிட்டால் என்ற தோன்றிய உடன் தொட்டியை வைத்துவிட்டேன். தண்ணீர் மாற்றும் நாளை தள்ளிப் போட்டு போட்டு தண்ணீர் அழுக்காகியிருந்தது. இந்தத்தண்ணீரில் இருந்தால் செத்துபாய் விடும் என்ற அளவிற்கு வந்ததும் தான் மாற்றும் முடிவிற்கு வந்தேன். அப்படியும் கைத்தொட்டு பிடித்து சரியா மாற்றி உயிருடன் நீரில் விட முடியுமா? நழுவி தரையில் விழுந்தால் எப்பிடி இந்த வழவழப்பான மீனை பிடிப்பது?
கடைசியாக தொட்டியின் அடிவரை நீரை மெதுவாக வெளியேற்றி விட்டு கொஞ்சம் நீருடன் இன்னொரு பாத்திரத்தில் விட்டேன். தொட்டியை சுத்தம் செய்து கொஞ்சம் அழுக்கு நீருடனே மீனை தொட்டியில் விட்டதும் அது அடியில் போய் நின்றபடி நீந்திக் கொண்டு மேலே பார்த்தது. அப்போது தான் அதன் கண்களை சுற்றி மெல்லிய பசும் நிறம் தெரிந்தது. வெள்ளையான மீனின் இன்னொரு நிறம். பின் நான்கு மூலைகளுக்கும் நீந்தியது. புதுத்தண்ணீர் சில்லென்று இருந்தது.
குட்டிமீன் பறப்பதைப்போன்று ‘சல்’ லென்று மேலே வந்தது. ஆள்காட்டி விரலின் நுனியில் இருந்து முதல் ரேகை வரையான அளவுள்ள சிறு மீன். உடலின் மேல் பகுதியில் வெள்ளி நிற குறுமுடிகள் நீரில் பறந்து திரிவது தெளிவாகத் தெரிந்தது. உடலை ஆட்டி ஆட்டி மேலும் கீழும் செங்குத்தாக என்று பல்ட்டி அடித்து பறந்து கொண்டிந்தது.
உணவு துகள்களை நீரில் தூவியவுடன் அதை துரத்திக்கொண்டு ஓடியது. நீரீலேயே இருப்பதால் நிலைகொள்ளாத தன்மை அதற்கும் இருக்கலாம். அந்த நிலைகொள்ளாத தன்மை இந்தத்தொட்டிக்கு அவசியமில்லை. என்றாலும் மீனை மீனாக்குவது அந்த நிலைகொள்ளாத தன்மை என்று புரிந்ததும் அதன் மீது இருந்த அத்தனை கருணையும் வடிந்து கண்களை விரித்து நிதானமாகப் பார்க்கத்தொடங்கினேன்.
அடுத்தடுத்த நாட்களில் அதற்காக ஜன்னல் திரை சீலைகளை விலக்கி திறந்து வைத்தேன். அதனுடன் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. தொட்டியின் அருகே நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு அலைபேசியுடன் அமர்ந்தேன்.
அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.
பழையப்படல்களில் தேடி எடுத்து ‘நீரோடும் வைகையில நின்றாடும் மீனே’ என்ற பாடலை வைத்து தொட்டியின் நீர் பரப்பிற்கு மல் ஒலிக்கவிட்டேன்.
விசில் சத்தத்துடன் சவுந்தரராஜன் குரல் எழுந்ததும் அனிச்சையாக புன்னகைக்கத் துவங்கினேன். மீன் மேலும் கீழும் நீந்தி நீந்தி வந்தது. உணவுத் துகள்ளை நீரில் துவிவிட்டு தொட்டிக்கான காற்றை முடுக்கினேன். ஒன்றுமில்லாத தண்ணீர் ஆக்ஸிஜனேற்றம் அடையத் துவங்கியது.
தரையில் விரிக்கும் மெத்தையை எடுத்துவந்து மீன் தாட்டி அருகில் படுத்து உறங்கினேன். மெல்லிய சத்தத்தில் டி.எம்.எஸ் முடித்து சத்யப்ப்ராகாஷ் ‘ராசாளி’ பாடத்துவங்கிய நேரத்தில் பசி எடுத்தது. தலையை உயர்த்தி தொட்டியைப்பார்த்தேன். தொட்டியின் அடியில் மீன் செதில்களை மெல்ல அசைத்தபடி சிறு அசைவுகளுடன் ஒரே இடத்தில் இருந்தது.
அந்தியாகியிருந்தது. கீழே சென்று சமைத்து விட்டு சாப்பாட்டு தட்டுடன் மாடிக்கு வந்து மீன் தொட்டிக்கருகில் அமர்ந்தேன். மீனிற்கு வாட்டமாக தொட்டிக்கு மேலிருந்த ஜன்னல் பலகையில் அலைபேசியை வைத்து விட்டு மீன் உணவை தண்ணீரில் தூவினேன். மீன் விசுக்கென்று பறந்து வந்து சின்னசிறு சிவந்த வாயை திறந்தபடி உணவுத்துகள்களை தொடர்ந்து சென்று நீந்தியது.
நான் தோசையை உண்ணத் தொடங்கினேன். அலைபேசியில் ‘வரலாமா உன்னருகில் பெறலாமா உன்னருளை’ என்று பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. ஜன்னலின் வழியே நிலவின் ஒளிக்கீற்று உள்ளே விழத் தொடங்கியிருந்தது. எழுந்து சென்று முன் விளைக்குகளை அணைத்தேன். நிலவொளி தெளிவாக சரிந்து ஔி உருளைகளாக தரையில் விழுந்தது.
மீன் தொட்டியை பார்த்து அமர்ந்து மீண்டும் தோசையை எடுத்தேன் . மீன் பச்சை நிற உணவு உருண்டையை ‘லபக்’ கென்று விழுங்கிவிட்டு சுற்றியது.
நீலவிளக்கின் ஔியில் மீனை பார்த்தபடியே உறங்கிப் போனேன். அதிகாலையில் கதவின் ஒலி கேட்டு பதறி எழுந்தேன். உடனே மீன் தொட்டியைப் பார்த்தேன். அது நீரின் ஆடியில் உடலை ஆட்டிக்கொண்டு நின்றபடி நீந்திக்கொண்டிருந்தது.
வீட்டுக்காரர்கள் வந்துவிட்டார்கள். சட்டென்று உதடுகளை குவித்து கண்ணாடி பரப்பில் முத்தமிட்டேன். நான் பார்வையை விலக்கி வெளியே வரும் போது முத்தமிட்ட பரப்பை குட்டி மீன் முட்டி மோதிக்கொண்டிருந்தது. இடையில் நிற்கும் கண்ணாடியை ஒருமுறை தொட்டு தடவியப்பின் கதவை நோக்கி நடந்தேன்.