ஏ பெண்ணே – 6

This entry is part 6 of 10 in the series ஏ பெண்ணே

ஹிந்தி மூலத்திலிருந்து தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

குடும்பம் என்கிற கட்டமைப்பின் ஆதரவு உனக்கு இல்லாமலிருக்கலாம். இருப்பினும்,  நீ சுதந்திரமானவள். தன்னிறைவு பெற்றவள். தற்சார்புடன் சுதந்திரமாக இருப்பதென்பது மிகவும் சிறப்பானது! உயர்வானதும் கூட. குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள் புகுந்து நீயும் குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருந்தால்,  இதற்குள்,  குடும்ப வாழ்க்கையின் மொத்த அழகும் வெறும் பெயர்களுக்கும் உறவுகளுக்கும் மட்டும்தான் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பாய். இவள் இன்னாருடைய மனைவி, மருமகள், தாய், அம்மாவைப் பெற்ற பாட்டி,  அப்பாவைப் பெற்ற பாட்டி!. மறுபடியும் அதே பழைய சாப்பாடு,  உடைகள்,  நகைகள்! பெண்ணே,  அவள் பெயருக்குத்தான் மகாராணி. உபயோகம் தீர்ந்து போன பிறகு, அவளை ஒரு மூலையில் உட்கார வைத்து விடுவார்கள்.

மகள் சிரித்தபடியே-

அம்மா, உங்களுக்கு இணை நீங்கள்தான்.

அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து பார்த்தால்,  எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சூசன், அம்மாவுக்கு பழச்சாறு கொண்டு வா. அப்படியே எனக்கும் கொண்டுவா.

சமயோசிதமாக நடந்து கொள் பெண்ணே.

அணையப் போகிற விளக்குக்கு நெய் ஊற்றுகிறாயே.

சூசன், சில்லென்ற பழச்சாறை கொண்டு வா. என் தொண்டை வறண்டு கிடக்கிறது.

பழச்சாறு நன்றாக இருந்தது சூசன். தாகம் தணிந்தது. நீயும் குடி. பெண்ணே ஒரு குடும்பப் பெண்ணுக்கு, என்னென்ன திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்,  எவை எவற்றை மறைத்து அடக்கிவைத்துக்க்கொள்ள வேண்டும் என்பது உனக்குத் தெரியாது. நீ ஒரு சுதந்திரப் பறவை. உன்மீது யாருடைய கட்டுப்பாடும் இல்லை. என்ன செய்ய விரும்புகிறாயோ அதைச் செய். மனிதனுக்கு தன்னிடமிருந்தே கூட விடுதலை வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள். எப்போதாவது,  தன்னை தன்னிலிருந்து விடுவித்துக்கொள்ள முடிந்திருக்கிறதா உன்னால்? நீ தன்னிச்சையாக செய்கிற செயல்களைப் பற்றி நான் பேசவில்லை.  உண்மையாகவே  நீ செய்ய விரும்பியதை உன்னால் எப்போதேனும் செய்ய முடிந்திருக்கிறதா?

அம்மா, இதற்கு நான் என்ன பதிலளிக்கட்டும்?

நீண்டநேரம் அறையை மௌனம் நிறைக்கிறது.

ஒரு கடிகாரம் ஓடுவதைப் போல இந்த வீட்டை நான் மிகத் திறமையாக நிர்வாகம் செய்தேன். ஆனால் என்னுடைய சந்தோஷத்திற்காக எதையும் செய்து கொள்ளவில்லை. இப்போது அதற்காக  மிகவும் வருத்தப்படுகிறேன் பெண்ணே.

மகள் ஆச்சரியத்துடன்- 

அப்படி என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினீர்கள் அம்மா?

மலைச் சிகரங்களை ஏற வேண்டும் என்று விரும்பினேன். மலை முகடுகளின் மீது ஏறி நிற்க விரும்பினேன். ஆனால் இந்த விருப்பத்தை,  வீட்டின் தினசரி வேலை அட்டவணையில் எங்கும் நுழைக்க முடியவில்லை. வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு மலையும் ஏற விரும்புவது சாத்தியமா?

யாரிடம் சொல்ல? உன் அப்பாவிடமா? வீட்டு விவகாரங்களைத் திறம்பட கையாளவே அவரால் முடியாது. போதாததற்கு அவருக்கு காலதாமதம் செய்வது அறவே பிடிக்காது. எல்லாம் குறித்த நேரத்தில் குறித்தபடி நடந்தாகிவிட வேண்டும்.இந்த ஓட்டத்தில் நானே கடிகாரமாக மாறிப் போனேன்.

மகள் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாள்.

சூசன் உலர்ந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா கோபத்துடன்-

துணிகளை மடித்து ஏன் மலை போல குவிக்கிறாய் சூசன்? சின்னக் குழந்தை ஏதேனும் வீட்டிற்கு வந்து இருக்கிறதா என்ன? இந்தக் கிழவி இவ்வுலகை விட்டு சீக்கிரம் போகப் போகிறாள். அவளுடைய பழைய துணி மூட்டைகளை…

மகள் எழுந்து சித்தார் ரெக்கார்டை ஒலிக்கச் செய்கிறாள்.

அம்மா சற்று நேரம் ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு சலிப்புடன் –

நிறுத்தி விடு இதை. இந்த சத்தம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சொல்வதை புரிந்து கொள். என் நரம்புகள் காய்ந்து விட்டன. இந்த இசை என் உடலை உலுக்குகிறது. என் கண்களின் முன் கருப்பு புள்ளிகள் ஏன் தோன்றுகின்றன? யாரிடமேனும் கேள்.

சூசன் போர்வை போர்த்த வந்ததும், அம்மா திடுக்கிட்டு –

என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? திரைச்சீலையை அகற்றுங்கள். காற்று வரட்டும். உடனே அகற்றிவிடுங்கள். எனக்கு மூச்சு முட்டுகிறது. ஏன் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்? நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். நான் சந்திர சூரியனை தரச் சொல்லிக் கேட்கவில்லை. என்னுடைய உரிமையைத் தான் கேட்கிறேன்.தயவுசெய்து என்னை புது காற்றை சுவாசிக்க விடுங்கள்.

சூசன் திரைச்சீலையை அகற்றுகிறாள்.

அம்மா, வெளியிலிருந்து வருகிற வெளிச்சம் கண்ணைக் கூசுமே!

இது ஒரு குகையை போல இருக்கிறது. நீங்கள் ஏன் என்னை அடைத்து வைத்தி ருக்கிறீர்கள்? கதவை திறந்து விடுங்கள். யார் சங்கிலி இட்டு இதன் கதவை மூடியது?

என்னுடன் இந்த ஈனமான விளையாட்டை விளையாடுபவனை என் கண்முன் கொண்டு வந்து நிறுத்து. என் மகளைக் கூப்பிடு. என்னை பால்கனிக்கு அழைத்துச் செல். நான் ஒரு நொடி கூட இந்த அறையில் இருக்க மாட்டேன்.

சூசன், அம்மாவுக்கு எலக்டரால் கொடு. அதற்குள் நான் பால்கனியில் அம்மா உட்கார இடத்தை ஒழுங்கு செய்கிறேன்.

சால்ஜாப்பு சொல்லாதே பெண்ணே. என்னை நாற்காலியில் உட்கார வை. எனக்கு படுத்துக்கிடக்க வேண்டாம். நான் படுக்க மாட்டேன். நான் உட்கார்ந்திருப்பேன். பெண்ணே, இன்று என்னை முடிவெடுக்க விடு.

அம்மா,  கொஞ்சம் அசைந்தால் கூட முதுகில் இருக்கும் புண்களில் சிராய்ப்பு ஏற்படக்கூடும்.

இந்த இரக்கம் வேண்டாம். எனக்கும் என்னுடைய புண்களுக்கும். நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய்!

சூசன் ஈசி சேரை பால்கனியில் வைத்து அதன்மீது படுக்கையையும் போர்வையும் விரிக்கிறாள். சாய்ந்து கொள்ள வசதியாக ஒரு பஞ்சுத் திண்டையும் வைக்கிறாள்.

இருவருமாகச் சேர்ந்து அம்மாவை வெளியே தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.

நாற்காலியில் அமர்ந்து கொண்டதும்,  அம்மா உற்சாகமாக –

இப்போது என்ன பருவம்? மரங்களில் ஒரு இலை கூட அசையவில்லை.

இது என்ன மாதம்?

மகள் காதில் வாங்காத மாதிரி பால்கனிச் சுவர் மீது கை வைத்தபடி மௌனமாக நிற்கிறாள்.

நான் உன்னிடம் ஏதோ கேட்டேன். பதில் சொல். என்னை இப்படி அவமதிப்பது அழகல்ல.

அம்மா, இது மே மாதத்தின் மூன்றாவது வாரம்.

 புழுதிப்புயல் வரும் போலத் தோன்றுகிறது. வானத்தைப் பார். வானமே புழுதி படிந்து, நிறமற்று வெளிறிக் கிடக்கிறது. வானத்தின் சக்தி முழுவதையும் அதன் வளர்ந்த குழந்தைகள் உறிஞ்சிக் கொண்டு விட்டன போலும். வானம், எப்போதோ நிகழ்ந்து முடிந்த  கடந்த காலத்தைப் போல தோற்றமளிக்கிறது. பெண்ணே வானத்திற்கும் வயதாகிவிட்டதோ!

அம்மா தலையை உயர்த்தி மின்சார கம்பங்களைப் பார்க்கிறார். பிறகு கீழே மரங்களை பார்த்தபடியே –

இரத்தத்தாலும் சதையாலுமான ஜொலிக்கும் மனித மரங்களை விட, இந்த வேப்ப மரத்துக்கு ஆயுள் அதிகம்.

அம்மா,  வேப்பமரங்கள் துளிர்விட்டு குலுங்குகின்றன. உங்கள் அறைக்கு பக்கத்தில் இருக்கும் மரம் கூட மிகவும் உயரமாக வளர்ந்து விட்டது.

இந்நாட்களில் வேப்பமரம் மிகவும் மணம் வீசுகிறது. வேப்ப மரம் பூத்துக் குலுங்கும் போது இனிய மணம் காற்றில் பரவும். அந்த மணம், இந்த பூமியில் பிறந்த மகள்களைப் பித்தாக்குகிறது.

அம்மா, பிறகு?

பிறகென்ன, முட்டாள் பெண்ணே. அவர்கள் தாங்கள் ஏங்கித் தவிக்கும் துணையிடம் செல்கிறார்கள். இந்த எல்லா சங்கடங்களும் உடலோடு தொடர்புடையவை தான். உடல் இச்சைகளுக்கும் பின்விளைவுகள் உண்டு என்பதை நீ அறிவாய் அல்லவா? 

நான் மறுபடியும் நீரிலிருந்து நிலத்துக்கு வந்த மீனைப்போல துடிக்கிறேன். கரையோரத்தில் ஈரம் காய்வது போல என் உடலில் ரத்தம் காய்ந்து விட்டது. அதி தீவிரமாக தாகம் எடுக்கிறது. எனக்கு சோடாவில் ஐஸ்கிரீமை கலந்து கொடு. இன்னொரு நாற்காலியை கொண்டு வந்து போடு. என் மகன் வருவான்.

ஆஃபிஸிருந்து நேராக இங்கு தான் வருவான்.

மகள் மௌனமாக இருக்கிறாள்.

அம்மா தனக்குத் தானே –

மகனைப் பெற்ற தாயை அவ்வளவு எளிதாக யார் வீழ்த்திவிட முடியும்?

அம்மா,  நீங்களும் இந்தப் பாதையைக் கடந்து தானே வந்தீர்கள்?

நானும் இதையே தான் செய்திருப்பேன். எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள்.

இது அவசியமா?

அப்படியே வைத்துக்கொள். அப்போதுதான் ஒரு பெண் தன் கணவனின் உடலையும் மனதையும் ஒருசேர ஆக்கிரமித்து அவர்மீது தன் முத்திரையைப் பதிக்க முடியும். அப்படி அவள் செய்வது அவசியமும் கூட. இல்லாவிட்டால் அவள் அமைதி இழந்து தவிப்பாள்.

அம்மா சிரிக்கிறார்.

ஒவ்வொருவருடைய குணமும் ஒவ்வொரு வகையானது. சிலர் அதிகமாகச் சந்தேகப்படுவார்கள். சிலர் முழுவதுமாக நம்புவார்கள்.

ஆண்களுக்கு இவையெல்லாம் நன்றாகத் தெரியும். வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையின் தாரக மந்திரமே அது தானே – கொடு – பெறு. கொடுத்து பெறு.

கொடுப்பவனுக்கு பெற வேண்டிய அவசியமும் இருக்கிறது.

சூசன் அம்மாவுக்கு ஸ்பூனால் ஐஸ்க்ரீம் கொடுக்கிறாள்.

சூசன், வாழ்க வளமுடன். எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது.

இந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டவுடன் எனக்கு பிஸ்தா போட்ட குல்ஃபி ஐஸ்க்ரீம் நினைவுக்கு வருகிறது. சாந்த் பால் நதிக்கரையில் சாப்பிட்டேன்.

அப்படி அங்கு என்ன விசேஷம் அம்மா?

காலமும்  அந்த இடமும் தான். நதிக்கரையில் நிற்பவர்கள் அந்த இடத்தின் அழகில் மயங்கி ஸ்தம்பித்துப் பேச்ற்றுப் போய் விடுவார்கள். படகுகள் வரிசையாக நிற்கும். சைரன் ஒலிக்கும்.  விளக்குகள் நீரின் மீது ஒளிரும். அலைகள் ஒன்றையொன்று துரத்தும். தூரத்தில் படகுகள் நீரில் மிதக்கும். நதிக்கரை திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். வானில் நிலாப்பந்தல் விரிந்திருக்கும். நட்சத்திரங்கள் கண்சிமிட்டும். நிலவும், தன்னை அலங்கரித்துக் கொண்டதுபோல,  பட்டொளி வீசும். பெண்ணே, இவ்வுலகில் நதிக்கரையில் உயிர்கள் உயிர்ப்புடனும் உல்லாசத்தோடும் இருப்பதுபோன்ற அதிசயம் வேறு எங்கும் இல்லை! அத்தகைய அற்புதத்தைப் பார்த்த பிறகு இவ்வுலகை விட்டு போவதற்கு யாருக்கேனும் மனம் வருமா? ஆனால் உரிய நேரம் வரும்போது, புறப்படத்தானே வேண்டும்? நான் கல்கத்தா போனேன் இல்லையா,  அப்போது நான் நிறைய இடங்களை சுற்றிப் பார்த்தேன். பெண்ணே,  ஒருநாள் மாலை,  என் மூத்த மகள் என்னையும் அவளுடைய பேத்தியையும் அங்கே அழைத்துச் சென்றாள். குடும்பத்தின் மூன்று கிளைகளும் இணைந்திருந்தன. மூன்று தலைமுறைகள் என்றும் சொல்லலாம். குழந்தைகள் குடும்பத்தில் இருக்கும் மூத்த வயதானவர்களை புதுப்பிக்கிறார்கள். அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறார்கள்.

அப்போது பெரியவர்களுக்கு தங்களுடைய வயது நினைவுக்கு வருவதில்லை. சில சமயம் அவர்கள் தங்களது வயதைக் கூட மறந்து விடுகிறார்கள்.

குழந்தைகளில் அவர்கள் தம்மையே இழந்து விடுகிறார்கள். அன்று மாலை,  உன் சகோதரி,  தான் பெரியவள் போலவும்,  என்னை  – அதாவது  அவளது தாயை – சின்னக் குழந்தை போலவும் எண்ணி எதை எதையோ செய்து கொண்டிருந்தாள். மாறாக அவளுடைய பேத்தி, தன் அப்பாவின் பாட்டியை, ஒரே சமயத்தில் கிழவியாகவும் குழந்தையாகவும் கையாண்டாள். திரும்பத் திரும்ப என்னிடம் இன்னும் ஒரு ஐஸ்கிரீம் எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியும் நாம் இருவரும் ஒரு ஐஸ்கிரீமை பாதி பாதியாக பகிர்ந்து சாப்பிடலாம் என்றும் என்னை மிக அழகாகக் கவனித்துக் கொண்டாள். இடமும் நேரமும் நன்றாக அமைந்தால் குடும்பத்தின் கிளைகளும் துளிர்களும்  பரஸ்பரம் இணைகின்றன. கொஞ்சம் பொறு பெண்ணே, மனதின் ஜன்னல் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எதை அம்மா?

அம்மா அறைக்குத் திரும்பி வந்து,  வாய்விட்டு சிரிக்கிறார்.

வேகமான உறுதியான குதிரை. நீ குதிரை சவாரி செய்ததில்லை,  இல்லையா. குதிரையின் வேகத்தையும் சக்தியையும் உணரும் வகையில் நீ உன் உடல் திறனை பெருக்கிக் கொள்ளவே இல்லை. பெண்ணே,  காலத்தை அறிந்தவனை வேதங்களும் விரும்புகின்றன. சம்பாதிக்கிற கைதான் அதை, தான் விரும்பும் வகையில், விநியோகிக்கவும் முடியும்.

மகள் சுவற்றுக்கு அப்பால் பார்த்தபடியே கண்களை மூடிக் கொள்கிறாள்.

அலுப்பாக இருந்தால் கொஞ்ச நேரம் எங்காவது வெளியே போய்விட்டு வாயேன்.

மகள் ஆடை மாற்றிக் கொண்டு அறைக்குள் திரும்ப வருகிறாள்.

அம்மா,   வெளியே போய் காபி குடித்துவிட்டு வரலாமென்று  நினைக்கிறேன். உங்களுக்கு அன்னாசிப்பழம்,  கேக் ஏதாவது வாங்கி வரட்டுமா?

சாப்பிடுகிறேன். நீ நிதானமாகவே திரும்பி வா. வீட்டைப் பற்றிய கவலையை விடு. நான் இங்கேயே தான் இருப்பேன். எங்கும் போக மாட்டேன். முடி வெட்டிக் கொள்ள போவதாக இருந்தால்,  எனக்கும் முடி வெட்டிவிடச்சொல். என் முடி கனமாக இருப்பதால்,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இனி இந்த முடியை பராமரிப்பது கடினம்.

சூசன்,  டவல்,  ஷாம்பூ எண்ணெய் எல்லா சாமான்களையும் எடுத்துத் தயாராக வை. அவர்களிடம் நேரம் மிகவும் குறைவாகவே இருக்கும். நான் திரும்புவதற்கு முன்பே வந்து விட்டால்,  நீ அம்மாவின் முடியை வெட்டி விடச் சொல். சரிதானே அம்மா!

சரி.

பார் சூசன். இதுதான் என் பெண்ணின் பெருமை. இவள் போனதுமே அரை ஒளி இழந்து விடுகிறது.

அம்மா,  அக்கா உங்கள் பேச்சுக்கு  மிகவும் மதிப்பு கொடுக்கிறார்.

என் பேச்சுக்கு வெறும் மதிப்பு மட்டும் கொடுப்பதில்லை அவள். என்னை நன்றாக புரிந்து கொண்டவளும் கூட. இரண்டிற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. சொல்வதை மதித்துக் கேட்பது என்பது ஒன்று; புரிந்து கொள்வது என்பது வேறு ஒன்று. அவள் அடுத்தவர்களின் தேவையை அறிந்து செயல்படுபவள்.

சூசன்,  உன்னுடைய அக்கா ஏதோ குழப்பத்தில் இருப்பது போலத் தெரிகிறது. என்ன விஷயம் என்று தெரியவில்லை.

ஒன்றும் இல்லை அம்மா.  அக்கா வெகு சீக்கிரம் களைத்து விடுகிறார்,  அவ்வளவுதான்.

நான் போன பிறகு நீ அவளைக் கவனித்துக் கொள்வாயா?. அவளுக்கு ஓய்வு தேவை. வேலை என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்து வேலையிலேயே மூழ்கிவிடுவாள். உழைப்பதற்கு அஞ்ச மாட்டாள். நீ இங்கேயே அவளுடனேயே தங்கி விட்டால் மிகவும் நன்றாக இருக்கும் சூசன். மேலுக்கு கறார் பேர்வழி போலத் தோன்றினாலும்,  யாருடைய உரிமையும் அவள் தட்டிப்பறிக்க மாட்டாள்.  சூசன், ஒரு வேலை செய். வெளியே சென்று வானம் எந்த நிறத்தில் இருக்கிறது என்று பார். மழை வரும் வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று சொல். ஒரு முறை மழை பெய்தால்,  நான் மழையில் நனைந்து என்னை சுத்தப் படுத்திக் கொள்வேன். என் முதுகின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மருந்து…கட்டு… இன்னும் ஏதேதோ.

மேலாகப் பார்த்தால்,  காயம் ஆறிக் கொண்டு வருவது போலத் தான் தெரிகிறது அம்மா.

என்னை சந்தோஷப்படுத்த எண்ணாதே. காயத்தை சுத்தப்படுத்தும் போது உன்னால்  என் முதுகைச் பார்க்க முடிகிறது. என்னால் பார்க்க முடிவதில்லை. இருந்தாலும் உன்னை விட எனக்கு அதிகமாக தெரியும். வலியைப் பொறுத்துக் கொள்கிறேன் இல்லையா.

அம்மா சிரித்தபடியே-

சூசன்,  தன்னுடைய முதுகை தன் கண்களால் ஒருவராலும் காண முடியாது. எனக்கு என் முதுகின் நிலை தெரியும். ஏனென்றால் நான் வலியைப் பொறுத்துக் கொள்கிறேன்.

விடு. நீ எப்போதாவது நதிக்கரையில் குளித்திருக்கிறாயா?. அதற்கு முன் உங்களுடைய நவீன ஷவர் ஒன்றுமில்லை. நான் கிணற்றிலும்,  நதியிலும்,  ஏரியிலும் சமுத்திரத்திலும் குளித்திருக்கிறேன். மிக ஆனந்தமாக இருக்கும். பூரியில் திகட்டத் திகட்ட குளித்தேன். என் மூத்த பெண் தான் என்னை அங்கு அழைத்துச் சென்றாள். 

அம்மா,  உங்களுக்கு உங்கள் மூத்த மகள் அதிகம் நினைவுக்கு வருகிறார் இல்லையா?

(தொடரும்)

***

Series Navigation<< ஏ பெண்ணே – 5ஏ பெண்ணே – 7 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.