புதைந்த பொன்னொளி

‘பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே! பானுவே! பொன் செய் பேரொளித் திரளே! கருதி நின்னை வணங்கிட வந்தேன். கதிர் கொள் வான்முகம் காட்டுதி சற்றே!’ ஆதவனின் தரிசனம் வேண்டி பாரதி பாடிய பாடலுடன் நான் உங்களைக் கொனாரக் சூர்யக் கோயிலுக்கு வரவேற்கிறேன்.
பாரதத்தில், ஆறு மார்க்கங்கள் முதன்மையாகத் தொகுக்கப்பட்டு சனாதன தர்மத்தின் கீழ் வந்தது. சூர்ய வழிபாடு ‘சௌரா’ என்று அழைக்கப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘சௌராஷ்ட்ரான மந்த்ராத்மனே! சௌ வர்ண ஸ்வரூபாத்மனே! பாரதீச ஹரிஹராத்மனே! பக்தி முக்தி விதரணாத்மனே!’ என்று சௌராஷ்டிர இராகத்தில் துதிக்கிறார்.
யுனெஸ்கோ கொனாரக் சூர்யக் கோயிலை உலகப் பாரம்பரிய இடம் என்று அறிவித்திருக்கிறது. கோயில் தற்சமயம் மத்திய தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தொன்மங்களின்படி இந்தக் கோயிலை க்ருஷ்ணனின் மகன் சாம்பன் முதலில் கட்டியதாகச் சொல்கிறார்கள். சாம்பன், நாரதரை அவமதித்தக் குற்றத்திற்காக க்ருஷ்ணன் அவனை இந்த ஆலயத்தை நிறுவச் சொன்னாராம். விஷ்ணு புராணத்தின்படி, விஷ்ணுவின் நான்கு கரங்களிலுள்ள சங்கு, சக்கிரம், கதை, பத்மம் இவற்றில் பத்ம பீடமாக அமைந்துள்ளது இந்தக் கோயில். ‘அர்க்க’ என்பது ஆதவனையும், ‘கோண’ என்பது மூலையையும் குறித்து இரண்டும் இணைந்து ‘கொனாரக்’ என்றாகியது.
தமிழ் நாட்டின் இராஜேந்திர சோழனைப் போலவே பெருங்கனவு கொண்டிருந்தவர் கீழைக் கங்க மன்னர் நரசிம்ம தேவா-2. படையெடுத்து தன் அரசின் எல்லகளை அதிகரித்தது போலவே, இருவருக்கும் தங்கள் தந்தையர் கட்டியதைக் காட்டிலும் பெரிதான கோயில்களைக் கட்டும் கனவுகள் இருந்தன. மாபெரும் வீரரான நரசிம்ம தேவா2 வங்காளம் வரை படையெடுத்துச் சென்று சுல்தான்களை வென்று பொன்னும், மணியுமாகப் பொக்கிஷத்தில் குவித்தார். யானைகளை வென்ற சிம்மம் என்று சுட்டும் வகையில், மகுனிக்கல்லால் கஜசிம்ம சிலைகளை அமைத்தார். கொனாரக் கோயில் கட்டுமானம் 1241-ல் தொடங்கி, பன்னிரண்டு ஆண்டுகள் நடைபெற்று 1258-ல் முதல் பூஜை செய்யப்பட்டது. கோயில் அமைந்துள்ள இடம் கடலின் மணல்வெளி பிரதேசம். சந்த்ரபாகா நதி அருகாமையில் ஒடியிருக்கும் என்றும், காலப்போக்கில் அதன் கதி மாறிவிட்டதென்றும் சொல்கிறார்கள். சுற்றி அருகில் மலை எதுவும் இல்லாத பூமியில், தலை நகராக இல்லாத ஊரில், ஆதவனுக்கு மிகப் பெரிய ஆலயம் கட்ட அவருக்கு எப்படித் தோன்றியது-அதுவும், சாக்தமும், சைவமும், வைணவமும் கோலோச்சிய சமயத்தில்?
நான்கு வகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 70 கி மீ தொலைவில் முத்திசைகளில் இருந்த மலைகளிலிருந்து கற்களை வெட்டியெடுத்து படகுகளில் ஏற்றி சந்த்ரபாகா, மஹா நதி, சில்கா ஏரியின் வழியே அவைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். (இந்த ஏரியில் இப்போது முத்து எடுக்கிறார்கள்; அரிய வகை சிவப்பு நண்டுகள் அதிகமிருக்கின்றன. ஏரியில் படகில் செல்வது நல்ல அனுபவம்.) தஞ்சைப் பெரிய கோயிலில் சுண்ணாம்பு, இரும்பு இவைகள் கிடையாது. ஆனால், இந்த சூர்யக் கோயிலில் இரும்பினைப், வார்ப்பு இரும்பினை, இன்றளவும் துருப்பிடிக்காத இரும்பினை பயன்படுத்தியுள்ளார்கள். அன்றிருந்த தொழில் நுட்பத்தின் சிறப்பல்லவா இது? இங்கேயும் சுண்ணாம்பு பயன்படுத்தப்படவில்லை.
‘பாய சக்டா’ (Baya Cakada) என்ற திட்ட நூல் இந்தக் கோயில் கட்டப்பட்ட விதத்தை கச்சிதமாக விளக்குகிறது. கரானி எழுத்தில் (பழைய ஒடிசா மொழி) 73 ஓலைகளில் ஒரு சாசனமாகவே இது வரலாற்றைச் சொல்கிறது. அதிகாரப் படி நிலைகளும், அவரவர் பொறுப்பும், கடமையும் இதில் இருக்கிறது.
நரசிம்ம தேவா 2, கட்டுமானத்திற்கான அனைத்துச் செலவுகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சூத்ரதார் என்பவர் முதன்மைப் பொறியியலாளர், வரைவியலாளர்.
கர்னகாரா முன் நின்று நடத்துபவர்.
பரிக்ஷா என்பவர் நடந்தவற்றை சரி பார்ப்பவர்.
மூர்த்திகாரா என்பவர் சிலைக் கட்டுமானம் செய்பவர்.
தங்க ஆசாரி, பூ கல்வேலை செய்பவர், சிற்பிகள், ஓவியக்காரர்கள், உதவியாளர்கள், ஏவல் பணி புரிவோர், கல், மண் சுமப்பவர்கள் என்று ஏராளமான நபர்கள் இதில் பணிபுரிந்திருக்கின்றனர். இதில் ஒரு சுவாரசியமான செய்தியைப் பார்ப்போம். பாண்டிய நாட்டின் இளவரசி (பெயர் தெரியவில்லை) நரசிம்ம தேவாவின் மனைவியரில் ஒருவர். மாபெரும் கோயிலைக் கட்டும் மருகருக்கு உதவியாக பாண்டிய மன்னன் உணவுப் பொருட்களுடன் சிற்பிகளையும் அனுப்பி வைத்தார். ஆனால், தலைமை நிர்வாகமும், தலைமைச் சிற்பியும் இவர்களுக்குத் தொழிலில் திறமை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மதுரை சிற்பிகள் உண்ணாவிரதமிருக்க, பதறிய மன்னன் நரசிம்ம தேவா அவர்களுக்கு கல் சட்டகங்கள் செய்யும் பணியைக் கொடுத்தார். ஜக்மோஹனாவிலுள்ள (முக மண்டபம்) சிறந்த வேலைப்பாடமைந்த ஏழுபட்டை வாசற்கதவு பாண்டியச் சிற்பிகளின் கை வண்ணம். இந்த முகமண்டபம் சூரியனின் தேரைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு புறங்களிலும் பன்னிரெண்டு பன்னிரெண்டு சக்கரங்கள், ஏழு குதிரைகள், (அதில் ஒன்று இன்று இல்லை). பாயும் உயிர்த்துடிப்போடு குதிரைகள் கண்களைக் கவர்கின்றன. சிம்மத்தின் கீழ் யானை சிற்பம் வாயிலின் எழில்களில் ஒன்று. 24 சக்கரங்களும் நேரத்தைக் காட்டுபவை. அதன் ஆரக் கால்களில் ஆதவனின் கதிர்கள் விழுவதை வைத்து நேரத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள். இரவிலும் நேரத்தை சந்திர ஒளியால் கணக்கிடலாம். முப்புறத்திலும் மூன்று சூர்ய சிற்பங்கள் வெவ்வேறு திசையில் வைக்கப்பட்டுள்ளன. காலை, மதியம், மாலைப் பொழுதுகளில் சூர்யனின் கதிர்கள் அந்தந்த இடங்களில் விழுவதைப் போல கட்டப்பட்டுள்ளது வியப்பாக இருக்கிறது. சுவர்கள் முழுதும் கலை ததும்புகிறது. எழிலாக, ஒயிலாக, அருளாக, ப்ரகார மூர்த்திகளாக அருமையான சிற்பங்கள். நான்கு விதமான கற்களைப் பயன்படுத்தி கலைக் கோயிலாகச் செய்திருக்கிறார்கள். முக்கிய ஆலய வளாகத்தின் உள்ளே இருந்த மிகப் பெரிதான சூர்யனின் சிலையில் முதல் கதிர் விழுமாறு நுட்பமாகக் கட்டியிருக்கிறார்கள். முக்கிய கோயில் இன்றில்லை, நாத மண்டபம், போக மண்டபமும் இல்லை. அவனது இரதம் நிற்கிறது. அது கூட பூமியில் புதைந்து பின்னர் வெளி வந்த ஒன்றே!
1258-ல் கட்டி முடிக்கப்பட்ட கோயிலைப் பற்றிய கடைசி ஆவணம் அபுல் ஃபேஸலின் (Abul Fazl) 1580ம் ஆண்டு குறிப்பில் காணப்படுகிறது. அதன் பிறகு 200 ஆண்டுகளுக்கு அதைப் பற்றிய செய்தி ஏதுமில்லை. 1759-ல் மடல பஞ்சி (Matala Panji) என்ற அரசர் (பாபா ப்ரும்மச்சாரி என்பவர் குருவாக இருந்து வழி நடத்தினார் என்று சொல்கிறார்கள்) கொனாரக்கிற்கு வந்து அந்தக் காட்டில், மணல் மேட்டில் இந்தக் கோயிலைத் தேடினார். அதற்குள் ஆலயம் பெரும் மரங்களாலும், மண் குவியலாலும் மூடப்பட்டுவிட்டது. அடையாளங்களை வைத்துத் தோண்டிய இடத்தில் கிடைத்த அருண ஸ்தம்பத்தை அங்கிருந்து பெயர்த்தெடுத்து பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் நிறுவினார்கள். வடக்கும், கிழக்கும் மிகச் சிதைந்த நிலையிலிருந்த ஆலயத்தை மீட்டெடுக்க முடியவில்லை. பலக் காரணங்கள் சொல்லப்படுகின்றன- சிக்கந்தர் ஷா மியரி படையெடுப்பு, கலா பஹார் உட்பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய ஆளுநர் சுல்தான் சுலைமான் படையெடுப்பு, என்று ஒரு சாரார்; இல்லை 52 டன் எடையுள்ள காந்தக் கல்லில் தொங்கவிடப்பட்டிருந்த மிகப் பெரிதான சூர்யனின் சிலையே பருவ மாற்றங்களாலும், காந்தப் புலன் வீச்சினாலும் உள்ளேயே விழுந்ததுதான் கோயிலின் அழிவிற்குக் காரணம் என்று மறுசாரார். வழிபாடுகள் நின்றன. மண், கோயிலை மூடியது.
1838-ல் ஃபெர்குசன் (Fergusson) வரைந்துள்ள ஓவியத்தில் கூட ஜக்மோஹனாவை அடுத்து அதைப் போல் ஒன்றரை மடங்கு உயரமான கர்ப்ப க்ருஹத்தைப் பார்க்க முடிகிறது. பிரிட்டிஷ் ஆளுமையின் கீழ் வந்த பிறகு அவர்கள் கோயிலை மூடியுள்ள மணலை எடுக்கத் தொடங்கினார்கள். புதைந்தது சிறிது காணக் கிடைக்க, ஒரு புறம் சரியத் தொடங்கியது. ஜான் உட்பர்ன் என்பவரின் ஆணையின் கீழ் கட்டிடங்களுக்குள்ளே மணலை நிரப்பினார்கள். அதற்கே மூன்றாண்டுகள் ஆயினவாம். பொது மக்கள் அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 2015-ல் சென்ட்ரல் பில்டிங் ரிசர்ச் இன்ஸ்டிடியுட் (CBRI) முகமண்டபத்தினுள் குவிக்கப்பட்டிருந்த மணலை முழுவதும் அகற்றி, சீர் செய்து, ஒக்கிட்டு, பொது மக்கள் வந்து அந்த அற்புதத் தேரையும், அதன் சக்கரங்களையும், அதன் ஆரங்களையும், அதன் மகோன்னதமான சிற்பங்களையும், உட்புறம், வெளிப்புறம், விதானம் போன்ற இடங்களிலெல்லாம் செதுக்கப்பட்டுள்ள சிலைகளையும் காண வழி செய்துள்ளனர்.
இந்த ஆலயத்தைக் காணும் போது கங்கை கொண்ட சோழபுரத்தை நினைக்காமல் இருக்க முடியாது. மண்ணில் புதைந்த மாபெரும் கனவுகள். நித்ய சாட்சி அவன். பூமியின் மாபெரும் சக்தியும் அவன். கொனாரக்கில் தேரை மட்டும் காட்டி தன்னை அருவமாக நினைக்கச் சொல்கிறான். அவன் தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருபவனல்லவா? இராவணனை வெல்ல இராமனே ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி வழிபடுகிறான். அது தொடங்குவதே அழகு- உதிக்கையில் ப்ரும்மனாகவும், மதியத்தில் சதாசிவனாகவும், சாயும் பொழுதில் விஷ்ணுவாகவும் மும்மூர்த்தியாக இலங்கும் சூர்யனைத் துதிப்போம். ஆதவனைப் போற்றும் அருமையான பாடல் (கர்ணன் திரைப்படத்திலிருந்து)
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி
தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி!!!!
very nice, informative and emotionally charged serial. Encompasses all great aspects of our nation. Congratulations to the author. Thanks to solvanam for publishing such a wonderful serial.
Thanks a lot mam