- வாக்குமூலம் – அத்தியாயம் 1
- வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
- வாக்குமூலம் – அத்தியாயம் 3
- வாக்குமூலம் – அத்தியாயம் 4
- வாக்குமூலம் – அத்தியாயம் 5
- வாக்குமூலம் – அத்தியாயம் 6
- வாக்குமூலம் – அத்தியாயம் 7
- வாக்குமூலம் – அத்தியாயம் 8
- வாக்குமூலம் – அத்தியாயம் 9
- வாக்குமூலம் – அத்தியாயம் 10
- வாக்குமூலம் – அத்தியாயம் 11
- வாக்குமூலம் – 12
- வாக்குமூலம் – அத்தியாயம் – 13
- வாக்குமூலம் – அத்தியாயம் 14
- வாக்குமூலம் – அத்தியாயம் 15
- இறுதி வாக்குமூலம்
அவள்
சம்பந்தமூர்த்தி கோயில் தெருவை இப்போ வேம்படித் தெருன்னு சொல்லுதாங்க. 1950, 60-க்களிலே அந்தத் தெருவுல காரைக்கிட்டாப் பிள்ளைமார்தான் (கார்காத்தார்) குடியிருந்தாங்க. ஒரு ஏழெட்டு வீடு பிள்ளைமார் வீடும் உண்டு. பொதுவா காரைக்கிட்டார் பிள்ளைமார் எல்லாருமே நல்ல வசதியானவங்க. வெங்கு அண்ணன் காரைக்கிட்டார்தான். ஆனா அவங்க குடும்பம், கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம். அப்பா இல்ல. அம்மாவும், அண்ணனும் உண்டு. முருகன் பிரஸ்காரங்க வீட்டுக்கு அடுத்த வீடுதான் வெங்கு அண்ணன் வீடு. பெரிய வீட்டு ராஜாப் பிள்ளை பெரிய பணக்காரர். ஆனா கழுத்தைச் சுத்தி சிட்டித் துண்டைப் போர்த்துக்கிட்டு தெரு வாசல்ல நிப்பாரு. அவங்களுக்கு பெரிய வில் வண்டி உண்டு. அவங்க வீட்டை ஒட்டித்தான் வண்டிக் காடினா. அந்தக் காடினாவிலேயே ரெண்டு மூணு குடும்பம் இருக்கலாம். அவ்வளவு பெருசு.

தெருவுல இன்னொரு ராஜாப் பிள்ளையும் உண்டு. அது சுதந்திரச் சங்கத்து ராஜாப் பிள்ளை. நாங்க அவுஹள மாமான்னு கூப்புடுவோம். அந்த வீட்டு அத்தை எங்களையெல்லாம் கூப்புட்டு நெய்விளங்கா குடுப்பா. ரொம்ப ருசியா இருக்கும்.
கனகாச்சி வீட்டில தெனசரி முறுக்கு சுத்துவாங்க. ராசத்து அத்தை வீட்டிலே அப்பளம் போடுவாங்க. கனகாச்சி வீட்டிலே அம்மா போயி முறுக்குச் சுத்துவா. கனகாச்சிதான் முறுக்கை வெந்து எடுப்பா. அம்மா கூட பாக்கியத்து சித்தி, ரஞ்சிதத்து அக்காவெல்லாம் முறுக்குச் சுத்துவாங்க. பெரிய சொளகுகளைக் கவுத்தி மேலே துணியைப் போட்டு அது மேலதான் சுத்துவாங்க. எப்பம் போனாலும் கனகாச்சி, பாதி வெந்த முறுக்கை எடுத்துத் தருவா.
கனகாச்சி வீட்டுக்குப் பின்னாலே வாய்க்கால். கனகாச்சி வீட்டுக்குப் போற வழியிலேதான் அந்த முடுக்குல கிணிமணி ஆச்சி வீடு. கிணிமணி ஆச்சி சேர்மன் கொண்டாடி. ஆடி, தை அம்மாவாசைக்கி ஏரல் கோயிலுக்குப் போவா. கோயிலுக்குப் போறதுக்காக வசனம் இருப்பா. எந்த நேரமும் காவிச் சேலதான் உடுத்துவா. ராத்திரி கூட நெத்தியிலே விபூதியும், பெரிசா குங்குமப் பொட்டும் வச்சிருப்பா. வடக்கே அடிபம்புக்கு அப்புறம் கக்யாளக் குடி (கைக்கோளர்) வந்துரும். காலையிலே மொட்டையன் கோயில் வரைக்கும் கக்யாளங்க ஆணும் பொண்ணுமா பாவு ஆத்துவாங்க. அந்தத் தெருவுல நடந்தா புது நூல் வாசனையும், கஞ்சி வாசனையும் அடிக்கும். மொட்டையன் கோயில்ல வருஷா வருஷம் தீக்குழி இறங்குவாங்க. காலையிலே இருந்தே நிறைய வெறகுகளைப் போட்டு எரிப்பாங்க. பிறகு அதை நீளமாப் பறத்தி விடுவாங்க. கங்கு கணகணன்னு இருக்கும்.
தெருவோரத்து வீட்டுச் சொவர்களெல்லாம் சுட்டுக் கெடக்கும். அவ்வளவு வெக்கை. நானும் சின்ன ஆயான் வீட்டு தங்கத்தக்காவும் வேடிக்கை பாக்கப் போவோம். தெருப் பூரா சின்னச் சின்ன வேப்பங் கொழைகளை கயித்துல முடிச்சுப் போட்டு, நீள நீளமா ஒரு கோடிலே இருந்து அடுத்த கோடிக்கி கட்டியிருப்பாங்க.
மொட்டையன் கோவில் தெரு, நடுத் தெரு, பெரிய தெரு மூணு தெருவும் கக்யாளக் குடித் தெருக்கள்தான். அந்தத் தெருக்கள்ள நடந்து போனா தறிச்சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். பெரிய தெரு கடைசியிலே பூமி விலாஸ் காபித் தூள் கடை பெரிசா இருக்கும். வார்டு எலெக்ஷன்ல பூமி விலாஸ்காரர் நிப்பார். அவரை எதிர்த்து தடிவீரங் கோயில் தெரு சுப்பையா மூப்பனார் நின்னாரு. ரவியோட அப்பா, எங்க அண்ணன் எல்லாம் ராத்திரி தெருத் தெருவா சேவல் சின்னத்துக்கே எங்கள் ஓட்டுன்னு பையன்களைச் சேத்துக்கிட்டு கத்திக்கிட்டுப் போனாங்க. ஒரு நா, அப்பா, அண்ணன் ஊர்வலமா கத்திக்கிட்டுப் போறதைப் பார்த்து, காதைப் பிடிச்சுத் திருகி, வீட்டுக்கு இழுத்து வந்துட்டா. நல்ல அடி அவனுக்கு.
காப் பரிச்சை, அரைப் பரிச்சை லீவுல எல்லாம் நானும் அண்ணனும் வீரவநல்லூருக்கு மாமா வீட்டுக்குப் போவோம். மணி மாமா வீட்டு அத்தை ரொம்பப் பிரியமா இருப்பா. ராத்திரி தூங்கும்போது அரக்கங் கதை எல்லாம் சொல்லுவா அத்தை. சாயந்திரம் சம்பா அரிசி அவல்ல பாலும் சீனியும் போட்டு அத்தை தருவா. ரொம்ப ருசியா இருக்கும். மாமாக்கு வீரவநல்லூர் மில்லுல வேல. மில்லுக்குப் போக மாமா சைக்கிள் வச்சிருந்தா. அந்தச் சைக்கிள்ல என்னையும் அண்ணனையும் உக்கார வச்சு ஆத்துக்கு, காந்திமதி டாக்கீசுக்கெல்லாம் மாமா கூட்டிட்டுப் போவா. காந்திமதி டாக்கீஸ் முறுக்கு ரொம்ப நல்லா இருக்கும். பள்ளிக்கூடம் தொறக்கிறதுக்கு ரெண்டு நாள் இருக்கும்போது என்னையும், அண்ணனையும் மாமா திருநவேலியில கொண்டுவந்து விட்ருவா. ரெண்டு மூணு நாளைக்கி மனசுக்கு கஷ்டமா இருக்கும். வீரவநல்லூர் ஞாபகம் திரும்பத் திரும்ப வந்துக்கிட்டே இருக்கும்.
பள்ளிக்கூடம் தொறந்த அன்னைக்கே பரிச்சப் பேப்பர் எல்லாம் தந்திருவாங்க. ஒவ்வொரு பீரியட் ஆரம்பிக்கும்போதும் பக்கு பக்குன்னு இருக்கும். மார்க் கொறைஞ்சா சார்வா பெரம்பால அடிப்பாரு. நான் விஞ்ஞானத்துலயும், தமிழ்லயும் தான் பெயிலாவேன். அண்ணன் எல்லாப் பாடத்துலயும் பெயிலாயிருவான். ஒரு வாரத்துல புராக்ரஸ் ரிப்போர்ட் வந்துரும். பெயிலான பாடத்து மார்க்குக்குக் கீழே செவப்பு மையால கோடு போட்டிருக்கும். அப்பாட்ட கையெழுத்து வாங்கணுமே. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெரு மகராசன், அவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டு சார்வா கிட்ட மாட்டிக்கிட்டான். ஹெட்மாஸ்டர் அவனை ப்ரேயர்ல கூப்புட்டு அடிச்சாரு. ரொம்பப் பாவமா இருந்துச்சு. மகராசன் பள்ளிக்கூடத்து கொடுக்காப் புளி மரத்துல ஏறி, கொடுக்காப் புளி எல்லாம் பறிச்சுப் போடுவான். நான் நெறையத் தின்னுருக்கேன். கொடுக்காப் புளி சாப்பிட்டா வாயெல்லாம் ஒரு மாதிரி வறுவறுன்னு இருக்கும். பல்லெல்லாம் ஊதாக்கறை படிஞ்சிரும். அம்மா சத்தம் போடுவா.
பள்ளிக்கூட வாசல்ல ஐஸ் விக்கும். ஒரு ஐஸ் காலணா. பால் ஐஸ்ன்னா ஒன்னரையணா. சேமியா ஐஸும் அதே வெலைதான். செவப்பு ஐஸ் சாப்புட்டா நாக்கெல்லாம் செவப்பாயிரும். பச்சை ஐஸ் சாப்புட்டா பச்சையாயிரும். அப்பாட்ட எதையும் வேணும்னு கேக்க முடியாது. சத்தம் போடுவா. அம்மாவை நச்சரிச்சா என்னைக்காவது காலணா தருவா. பெரிய ஆயான் வீட்டுப் பவானி தெனசரி, ஒண்ணுக்கு விடும்போது ஐஸ் வாங்கிச் சாப்பிடுவா. அதுவும் பால் ஐஸ், சேமியா ஐஸ்ன்னு சாப்புடுவா. அவளுக்கென்ன பணக்காரி. கலர் கலரா ஐஸைக் கேன்ல இருந்து எடுத்துக் குடுத்து ஐஸ்காரர் கை வெரலெல்லாம் செவப்பா இருக்கும்.
நவராத்திரிக்கு எங்க தெருவுல நெறைய வீட்டுல கொலு வப்பாங்க. பெரிய வீட்டுக் கொலுல, நெல்லையப்பர் கோயில்ல இருக்கிற உள் தெப்பம் மாதிரியே செஞ்சு வச்சிருப்பாங்க. மைய மண்டபத்தைச் சுத்தி தண்ணியெல்லாம் நிக்கிற மாதிரி செஞ்சிருப்பாங்க. கொலு சமயத்துல, “வெளக்குப் பொறுத்துனா படிக்க உக்காருங்க”ன்னு அம்மா நச்சரிக்க மாட்டா. கொலுப் பாக்க அனுப்பிச்சிருவா. அம்மாவே சில வீட்டுக் கொலுக்களுக்கு வருவா. இங்க மெட்ராஸ்ல கொலு வைக்கணும்னு எனக்கு ஆசைதான். இளையராஜா வீட்டுக் கொலு ரொம்ப நல்லா இருக்கும்னு மங்கை பத்திரிகையிலே போட்டிருந்தாங்க. அவரு சம்சாரம் இறந்து போன பெறவு அவர் வீட்டுல கொலு எல்லாம் வைக்கிறாங்களோ என்னவோ?
அந்தக் காலத்துல நடிகை சாவித்திரி வீட்டுக் கொலு ரொம்பத் தடபுடலா இருக்குமாம். சொல்வாங்க. அடுத்த வருசமாவது கொலு வைக்கணும்னு நெனைச்சிருக்கேன். அத்தைக்கு கொலு வைக்கிறதுல இஷ்டம்தான். ஆனா கீதா “அதெல்லாம் எதுக்கும்மா”ன்னு சொல்லுதா. கீதாவோட அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. “ஏதோ பண்ணிக்கோ”ன்னு சொல்லிருவாங்க. அவங்களைத் தொந்தரவு பண்ணாம இருந்தாச் சரி.
திருநவேலியில எங்க தெருவுல இப்பம் கொலு எல்லாம் முன்னைப் போல வைக்கிறாங்களோ என்னம்போ. தசரா பத்து நாளும் அம்மங் கோயில்களெல்லாம் ஜெக ஜோதியா இருக்கும். நெல்லையப்பர் கோயில்ல கூட்டமா இருக்கும். ஊரே கோலாகலமா இருக்கும். திருநவேலி, பாளையங்கோட்டையில எல்லாம் பத்தாம் தசராவுக்கு சப்பரம் பொறப்படுத மாதிரி இங்க மெட்ராஸ்ல சப்பரமெல்லாம் பொறப்படுறது இல்ல. இங்க அம்மங் கோயில்கள்ல ஆடி மாசம், கூழ் ஊத்துறதுன்னு சொல்லி கொண்டாடுதாங்க. அது என்ன கூழோ? திருநவேலியிலே ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி, முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், புட்டாரத்தி அம்மன்னு பேரு இருக்கும். இங்க துலுக்காணத்தம்மன், தீப்பாஞ்ச அம்மன், ரேணுகா, முப்பாத்த அம்மன், கன்னிகா பரமேஸ்வரின்னு அம்மன்களுக்குப் பேரு. அம்மன் பேரே ரொம்ப வித்தியாசமா இருக்கு. திரௌபதை அம்மன்கள் இந்தப் பக்கத்திலே ஜாஸ்தி. தெருவுக்கு ஒரு கருமாரி அம்மன், பெரிய பாளையத்து அம்மனாவது இருக்கும்.
இங்க ஹோட்டல்கள்ளே வடகறின்னு ஒண்ணு போடுதாங்க. திருநவேலியிலே முந்தின நாள் மீந்து போன வடைகளை சாம்பார், ரசத்திலே போட்டு சாம்பார் வடை, ரச வடைன்னு விக்கிற மாதிரி, இங்கே பழைய வடைகளை எல்லாம் வடகறியா ஆக்கிருதாங்க. ஹோட்டல்ல எதை எடுத்தாலும் தக்காளியப் போடுதாங்க. புளியோதரை, புளியஞ் சாதத்துல வேர்க்கடலையைப் போயி சேர்க்கிறாங்களே. இதெல்லாம் இப்போ ஒரு பதினைஞ்சு, இருவது வருஷத்துல ஆரம்பிச்சதுதான். பாப்புலர் அப்பளம், அம்பிகா அப்பளம்னு எல்லாரும் வாங்கிட்டுப் போறாங்க. ருசி, மணம் எதுவுமே இல்லாமே மண்ணு மாதிரி இருக்கு. ராசத்து அத்தை வீட்டு அப்பளம் எவ்வளவு ருசியா இருக்கும். நல்லா பொரியும். கல்லடைக்குறிச்சி அப்பளமே முன்ன மாதிரி இப்போ இல்லைங்கிறாங்க. ஆனா அந்தப் பேருல அப்பளம் வியாபாரம் ஆகிக்கிட்டு இருக்கு.
எல்லாரும் வெளியில ஓட்டல்ல போயிச் சாப்புடணும்னு நெனைக்கிறாங்க. லீவு விட்டுறக் கூடாது. ஒடனே ஓட்டல்தான். இவுக அப்பாவும் பிள்ளைகளை ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போயி பழக்கப்படுத்தில்லா வச்சிருக்காக. ஓட்டல்ல போயி தோசை, இட்லியா சாப்புடுதாக. ‘ருமானி’ங்காக, ‘நான்’ங்கிறாக. ‘பன்னீர் பட்டர் நான்’னு சொல்லுதாங்க. எல்லாத்துலயும் ஒரு மசாலாவைப் போடுதான். அந்த வாசனையே எனக்கெல்லாம் கொமட்டிக்கிட்டு வருது. மாமா, அத்தைக்கெல்லாம் ஓட்டல்ல சாப்புடுதது புடிக்கோ, என்னம்போ? ஆனா அவுகளையும் சேத்துல்லா இழுத்துக்கிட்டுப் போறாக. மத்சயான்னு ஒரு ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போனாக. வாயில வக்ய முடியல. ஆனா பெரிய கூட்டம் அங்க. அண்ணா நகர் லிட்டில் இத்தாலின்னு ஒரு ஓட்டல். வெண்ணெய்யில என்னென்னவோ செஞ்சு கொண்டாரான். பெறவு இந்தப் பன்னீர், பன்னீர்ன்னு அது ஒரு பக்கம். இப்பம் யாரைப் பாத்தாலும் பேலியோ, பேலியோன்னு சொல்லி வயித்தைக் காயல்லா போடுதாங்க. வாய்க்கு ருசியா கத்தரிக்காத் தொவையல், காணப் பருப்புத் தொவையல், பொரி கடலைத் தொவையல்னு எத்தனை தொவையல் இருக்கு. ஒரு புளித்தண்ணியும், பொரிகடலைத் தொவையலும் வச்சுச் சாப்புட்டா அமிருதமா இருக்குமே. என்ன பன்னீரோ, என்ன சீஸ்ஸோ?
சமயத்துல இந்த மாதிரி பழச எல்லாம் நெனச்சு என்ன ஆவப் போகுதுன்னு தோணுது. ஆனா மனசுங்கிறது சதா சர்வகாலமும் எதையாவது நெனச்சுக்கிட்டேதான இருக்குது? கை, வேலை செஞ்சாலும், மனசு தம் போக்குல எதையெதையோ நெனச்சுக்கிட்டுத்தான் இருக்குது. தூக்கத்துல கூட என்னென்ன சொப்பனமெல்லாமோ வருது. மாறாந்தைப் பிள்ள மாமா வீட்டுக் கோமா அக்கா பறக்கிற மாதிரி சொப்பனமெல்லாம் வருதும்பா. எனக்கும் அந்த மாதிரிச் சொப்பனம் வந்திருக்கு. செத்துப் போன அம்மாச்சி, மூக்காண்டி மாமா, கோமதி அத்தைன்னு சொப்பனத்துல ஒரே ஆட்களாத்தான் வாராங்க. இருக்கிறவங்க, செத்துப் போனவங்க எல்லாரும் வாராங்க. செல நேரம் ஒரே வெள்ளமா போவுது. வெள்ளத்துல மாட்டிக்கிட்ட மாதிரியெல்லாம் பயமா இருக்கு.
ரவியோட அப்பா ‘ஞாபகங்கள்தான் மனுஷன்’னு சொல்லுதாங்க. பள்ளிக் கூடத்துல, காலேஜில படிச்சது எல்லாமே ஞாபகமாயிருதுன்னு சொல்லுதாங்க. எல்லாம் மூளைக்குள்ள போயி உக்காந்திருக்கு. வாசனை, நெறம், காது வழியாக் கேட்டது எல்லாம் மூளைக்குள்ள போயிருதாம்ல. எல்லாம் ஞாபகமா ஆயிருதாம். மாயமால்ல இருக்கு. அவுக மனசுங்கிறதே மூளைதான்னு சொல்லுதாக. மூளை பண்ணுத வேலையாம். அதோட கோடிக்கணக்கான செல்லுகள்ள போயிச் சேகரம் ஆயியிருக்கிறதைத்தான் அறிவுன்னும், மனசுன்னும் சொல்லுதோமாம். அத்தனையும் அப்பிடி எங்கன போயித்தான் குமிஞ்சு கெடக்குமோ? எல்லாம் கடவுளோட வேல. ஆனா, இவுகதான் கடவுள நம்புதாகளா, நம்பலியான்னே தெரியலியே. ஒரு நல்ல நாள், கெட்ட நாள் எதுவும் அவுகளுக்குக் கெடையாது. அவுகளப் பாத்து இந்தப் பிள்ளைகளும்லா படிச்சிருக்கு. கீதாவாவது, வெளக்கப் பொருத்துவா. ஆனா இந்த ரவி கையெடுத்தே கும்புட மாட்டான். மனுசன்னா ஒரு கடவுள் பயம், பக்தி வேண்டாம்? எல்லாம் தன் மூப்பால்ல அலையிது. ரவி சொல்லுதான் “தட்டுல பத்து ரூவா போட்டா அய்யரு ஒரு துண்டு பூ தாராரு. ஒண்ணும் போடலைன்னா வெறும் திருநீரைத்தான் போடுதாரு. கோயில்ல சாமியப் பாக்கதுக்குன்னு டிக்கெட் போட்டு வக்கான்… இதெல்லாத்தையும் அந்தச் சாமி பாத்துக்கிட்டுதான இருக்கு?”ன்னு கேக்கான். நமக்கே, இதுக எல்லாம் கேக்கிற கேள்விகளைப் பாத்து புத்தி மழுங்கிருது. என்னத்தச் சொல்ல? அதுக சொல்லுதாப்பலதான ஊரு ஒலகத்துல நடக்குது. சாமி கும்புட டிக்கெட் போட்டு விக்கத்தான செய்யுதாங்க?
விறுவிறுப்பாகத்தான் செல்கிறது; இவரது நெல்லைப் பேச்சு வழக்கு கதைக்கு பலம்; சரி, இந்த “சுகா” எங்கே போனார்? நெல்லைப் பேச்சு என்றதும் அவரது ஞாபகமும் வருகிறதே…