கண்ணனுடைய கோபியர்களின் இந்தப் பயிர்ப்பு புதியது அனைத்து கோபியர்களிடமும் இதன் நகல் இருக்கட்டும் இது மட்டும் அசலாக = வலி மொஹம்மத் வலி (கிஷன் கி கோபியான்கி நயீ ஹை யே நஸ்ல் ரஹேன் சப் கோபியான் வோ நக்ல் யே அஸ்ல்)
பாரசீக மொழியின் ஆதிக்கம் கஜல்களில் இருந்த காலகட்டத்தில், அதனை மாற்றி முழுமையான உருது மொழியை கஜல்களில் தந்த முன்னோடி வலி தக்கனி (என்னும்) வலி மொஹம்மத் வலி. இதனால், உருதுக் கவிதைகளின் தந்தை என்றும் சில ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறார். வலி மொஹம்மத் தெற்குக்கும் வடக்குக்கும் உருது மொழியில் பாலமாகச் செயல்பட்டதால் வலி தக்கனி, வலி குஜராத்தி, வலி ஔரங்காபாதி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

மது மயக்கம் கொண்டவனைப்போல் காதலில் வீழ்ந்துள்ளேன் அவ்வப்போது மயங்கி அவ்வப்போது தெளிந்து சைப்ரஸ் மரங்களைப் போல் இருமுகங்காட்டும் உன் எழிலை அவ்வப்போது விரும்பி அவ்வப்போது விலக்கி (ஷராப்-ஏ-ஷோக் சேன் சர் ஷார் ஹைன் ஹம் காபூ பே-குத் காபூ ஹூஷ்யார் ஹைன் ஹம் தோ ரங்கீ சூன் தேரி சர்வ்-ஏ-ரானா காபூ ராஸி காபூ பேஸார் ஹைன் ஹம்)
உருது யாப்பின் பல வடிவங்களிலும் கவிதை எழுதியிருந்தபோதும் வலி மொஹம்மதின் முத்திரை கஜலில் ஆழமாகப் பதிந்துள்ளது. தக்காணத்தின் உருதுக் கவியரங்க மொழியை வடக்கில் தில்லிக்கு அறிமுகம் செய்தவர் என்னும் பெருமை இவருக்கு உள்ளது.
கி.பி.1700இல் தில்லிக்குச் சென்றவர் அங்கு அதுவரையில் ‘ரேக்தா’ எனப் பழைய பெயருடன் விளங்கி, பாரசீகக் கலப்பு இல்லாமல் அதிக் கவித்துவம் இல்லை என வழங்கி வந்த உருது மொழியை, கவிதைக்காகவென்றே உருவாக்கப்பட்ட மொழி என்னும் அளவுக்கு உயர்த்தியவர். ஔரங்காபாதிலிருந்து தில்லிக்குச் சென்று உருது மொழிக் கவிதைகளுக்கெனத் தனி இடம் பெற்றுத்தந்தவர்.
வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.
குழப்பமான ஆன்மீகச் சூழல் நிலவியபோது வலி மொஹம்மத் பாடுவதற்கு எடுத்துக்கொண்டவை காதலும் சூஃபியிசக் கருப்பொருளும்.
தன்னுடைய கஜல்களில் காதலை வெளிப்படுத்தும்பொழுது அதனுடன் சோகத்தையும் இணைத்துக் கவிதையாகத் தந்துள்ளார்.
களம் காண்பது
காதல் களத்தினும் சிறப்பு
எது நிஜம்
எது நிழல்
என்னும் குழப்பம் இல்லாதிருக்கும்
(ஷகல் பெஹ்த்தர் ஹை இஷ்க்-பாஸி கா
கியா ஹகீகி ஓ கியா மிஜாஸி கா)
இறுதியில்
என்னை சுயநினைவற்றவனாக மாற்றின
உன் விழிகள்
மதுவால் மயங்கும் நினைவைப்போல்
மெல்லமெல்ல
(மேரே தில் கூ[ன்] கியா பேகுத் தேரி ஆங்கியான்னே ஆகிர் கூ[ன்]
கி ஜியூன் பேஹோஷ் கர்த்தீ ஹை ஷராப் ஆஹிஸ்தா ஆஹிஸ்தா)
வலி தக்கனி என தக்காணத்தவர்களாலும், வலி குஜராத்தி என குஜராத்தியர்களாலும், வலி மொஹம்மத் வலி என உருதுக் கவிதை உலகாலும் கொண்டாடப்படும் ஷம்சுத்தீன் மொஹம்மத் வலி, 1707இல் இயற்கை எய்தினார். அவரது உடல் இன்றைய அகமதாபாத், குஜராத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக ஆண்டு 2002 குஜராத் மதக்கலவரத்தில் வலி மொஹம்மத் வலியின் சமாதி தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.