மிளகு – அத்தியாயம் இருபத்தேழு  

1600 ஜெரஸுப்பா

வண்டிக்காரன் சத்திரம் நிரம்பி வழிகிறது. வெளியூர் வண்டிக்காரர்களும் வந்து தங்கிப் போகிற நாள் இது. ஜெரஸோப்பா மஹாபலேஷ்வர் சிவன் கோவிலில் சிவராத்திரி கொண்டாட்டம். கோவிலுக்கு பூஜாதிரவியங்களோடு, ராத்திரி ஆனாலும் குளித்து மடி வஸ்திரம் அணிந்து உற்சாகமாக போகிறவர்களின் பெருங்கூட்டம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்துத்தான் கொண்டிருக்கிறது. ஹரஹர மகாதேவ என்று எங்கும் குரல்கள் பக்தி பூர்வம் ஓங்கி   எதிரொலிக்கின்றன. 

வரிசையான சிறு ஜன்னல்களாக வடிவமைத்த கோவில் சுவர்களில் தீபங்கள் திரியிட்டுப் பிரகாசமாக ஒளி விடுகின்றன.  காலணிகளைக் கோவில் வாசலில் விட்டு நடப்பவர்கள் ஒரு வினாடி ஏக்கப் பார்வையில் அந்தக் காலணிகளைப் பிரிகின்றார்கள். அப்போது, ’திரும்ப வந்து எடுத்துக் கொள்கிறேன்’ என்று தேங்காயும், வாழைப் பழமும், வெற்றிலை, பாக்கும் பிரம்புத்தட்டில் வைத்து விற்கும் கடைக்காரர்களிடம் போகிற போக்கில் சம்பிரதாயத்துக்காகச் சொல்லிப் போகிறார்கள். யாரும் திருட மாட்டார்கள் என்று ஒரு நம்பிக்கை. அதுவும் சிவராத்திரி காலத்தில்.

கோவில் வாசலில் தீவட்டிகள் தூண்களில் உயர்த்தி வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருப்பதால் பொன் அந்தி  மாலை போல் நடு இரவு ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. கூட்டமாக ரகசியம் பேசுவது போல் எல்லா தீவட்டிகளும், திரி நனைய உஸ்ஸ்ஸ் என்று சத்தமிட்டு எரிகின்றன. கொளுத்தி வைத்து வார்த்த இலுப்பை எண்ணெயின் வாடை, கோவில் வாடையாக மறு உருவெடுத்துக் காற்றில் தங்கி நிற்கிறது. 

அதையும் கடந்து, கஞ்சா இலைகளிலிருந்து வடித்த மெல்லிய போதையூட்டும் பாங்க் மதுவின் வாடை எங்கும் பரவியிருக்கிறது. பரபரப்பாக பாங்க் விற்கும் மதுசாலையில் வழக்கமான குடிகாரர்களை விட நின்றபடிக்கே சிவராத்திரிக்காகக் குடிக்கிற கிருஹஸ்தர்களும், பிடவைத் தலைப்பு கொண்டு சிரம் மறைத்த குல மாதர்களும் அதிகம் தட்டுப்படுகிறார்கள். கையில் கொண்டு வந்த அலகு நீண்ட கூஜாக்களில் பாங்க் வாங்கிய குடும்பத்தினர், கோவில் வாசலில் அதை மஹாபலேஷ்வருக்குப் படைத்து உடனே சிறு குவளைகளில் ஊற்றி அருந்துகின்றனர். சிறு குழந்தைகளுக்கும் ஒரு மிடறு பாங்க் புகட்டப்படுகிறது. சிவராத்திரிக்கு பாங்க் தான் முதல் பிரசாதம் என்று பெரியவர்கள் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லி இன்னும் கொஞ்சம் பாங்க் குடிக்கிறார்கள்.

“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.

கோவில் வாசலுக்கு அருகே பஞ்ச வண்ணமும் அடர்த்தியாகப் பூசிய பெரிய சக்கரம் விசைகளால் செங்குத்தாக நிறுத்தப்பட்டுச் சுழல்கிறது. குழந்தைகளும் பெரியவர்களும் ராட்டினத்தில் உட்கார்ந்து சுற்றிவர, இரண்டு மல்லர்கள், சுழலும் இருக்கைகளை வேகம் கொள்ள கையால் பிடித்து தள்ளி விடுகிறார்கள். ராட்டினம் சட்டென்று கரகரவென்று ஒலி எழுப்பி நிற்க இரண்டு பெரியவர்கள் ஆசனங்களில் இருந்து எக்கி விழப் போகிறார்கள். மல்லர்கள் லாகவமாக அவர்களைத் தாங்கி தரையில் நிறுத்துகிறார்கள்

மதுசாலையில் இருந்து வெளியே வந்த ரோகிணியும் பரமனும் ராட்டினத்துக்கு அருகே நின்று என்ன ஆனது என்று பார்க்கிறார்கள். பாங்க் போதை அதிகமானதால் ரோகிணி முன்னும் பின்னும் களிறு போல் அசைந்து கொண்டிருக்கிறாள். பாதி நிறைந்த பாங்க் குவளையோடு, பரமனின் கையைப் பற்றி இழுக்க, அவர் மெல்லத் தன்னை விடுவித்துக் கொள்கிறார். ஒரு வாய் குடியும் என்று ரோகிணி அவருக்கு அருந்தக் கொடுத்த பாங்க்கை அவர் புன்முறுவலோடு வேண்டாம் என்று தள்ளி,  தெளிந்த புத்தியோடு நடக்கிறார்.

“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.

”ராட்டினத்துக்கு ஒண்ணும் ஆகலே. நாங்க உங்க பத்திரத்துக்கு ஜவாப்” என்று மல்லர்கள் அறிவிக்க, ராட்டினக்காரன் ”ஜோடிகள் சுத்த கால் வராகன் கொடுத்தா போதும்” என்று சலுகை காட்டுகிறான். 

ரோகிணி பரமன் காதில் ’ராட்டினம் சுத்தலாமா?’ என்று கிசுகிசுத்து ஓரக்கண்ணால் பார்க்கிறாள். ’இன்னும் கொஞ்சம் பாங்க், கூடவே திராட்சை மது மாந்திட்டு வரலாம்’ என்று அவர் காதில் சொல்லி நெருங்கி நடக்கிறாள்.

”இப்போ கடைக்குப் போகணும். புளியை கரைச்சு, அரிசி மாவு சேர்த்து, வெல்லமும், மிளகு விழுதும் கலக்கி சாதத்தை அதிலேயே வேக வைக்கற ஒரு பண்டம் பண்ண ரமணதிலகனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். ரோகிணி நீதானே இன்னிக்கு எல்லோருக்கும் கடை சார்பிலே புளியஞ்சாதம் தரணும்னு? இது புது மாதிரி புளிசாதம்” என்கிறார் பரமன். 

ஜெருஸோப்பான்னா. அதான் பெயர் இந்தப் புது வஸ்துவுக்கு. சொல்லியபடி கடை இருக்கும் அங்காடித் தெருவுக்குள் திரும்புகிறார் பரமன். ரோகிணி   ‘நேற்றைக்கு போகலாம்’ என்று ஏதோ பிதற்றுகிறாள். அவர் நேரே கடைக்குள் போகிறார். பாங்க் அருந்திய போதையில் சகலரும் மிதக்கும் இரவு இன்னும் இளமையாக உள்ளது.

“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.

”பாங்க் குடிச்சா தெருவோடு போகிற கிறுக்குக் கிழவன் கூட இந்திரனா தெரியறானா? அவன் போனாப் போகட்டும் ரோகிணி. சகலமான துணைக்கும் நான் இருக்கேன். ”

 ரோகிணிக்குப் பின்னால் இருந்து குரல் கேட்கிறது. ராணியின் வளர்ப்பு மகன் நேமிநாதன் மாறாத காமத்தோடு ரோகிணியை நோக்கி அவள் கையைப் பற்றித் தான் வைத்திருந்த பாங்க் குவளையை ரோகிணி உதட்டில் வைத்து குடி என்கிறான். அவனுடைய தோழர்கள் ”குடி அண்ணி குடி” என்று சூழ்ந்து நின்று அவரவர்களின் பாங்க் நிறைத்த குவளைகளை உயர்த்துகிறார்கள்.

 “ராஜகுமார், வேணாம். பெரியவங்களுக்குத் தெரிஞ்சா ரசாபாசமாகி விடும்” என்று பயப்பட்டு சுற்றுமுற்றும் கரிய பெருவிழிகள் சஞ்சலித்திருக்கப் பார்க்கிறாள். 

மூன்று வருடமாக ரோகிணியின் பின்னால் சுற்றி வருகிறான் நேமி. அவள் தப்பி ஓடுவது போல் போக்குக் காட்டி அவனைப் பார்க்கும் பார்வையில் சதா பாங்க் நனைந்திருக்க நேமியை நிலை குலைய வைக்கிறாள். ஹொன்னாவருக்கு வந்தாலும் கோகர்ணம் போனாலும் ரோகிணியின் பின்னால் வருகிற ஆராதகனாகி விட்டான் நேமி. அவன் மனைவி ரஞ்சனா தேவியோ சென்னா மகாராணியோ ‘இதுவும் புருஷ லட்சணம், ராஜலட்சணம். விட்டுப் பிடிக்கலாம். ஒரு எல்லைக்கு மேல் போனால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று விட்டு வைத்திருக்கிறார்கள். ரோகிணியோ அவன் ஐந்து தடவை விடாமல் மையலோடு பின் தொடர்ந்தால் ஒரு முறை அவனுடைய இச்சைக்கு இணங்கலாம் என்று தீர்மானித்து நடைமுறைப் படுத்தியிருக்கிறாள். முன்னைவிட வேகமாக  ஐந்து வந்துவிடுகிறது.

”ராஜகுமார், போதும் பாங்க். நீங்கள் போதை தலைக்கேறி நிற்கிறீர்கள். இல்லத்துக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.” ரோகிணி சொல்லும்போது போகாதே நில் என்று அவள் கண்கள் வேறு செய்தி சொல்கின்றன. ராத்திரித் துணை அவசியத் தேவை என்று பூரித்தெழும் வழுவழுத்த உடல்,  இணை விழையும் அவள் மனதுக்குச்  சொல்கிறது.

“ரோகிணி இன்னிக்கு நமக்கு வேறே சிவராத்திரி” நேமி சொன்னபடி அவளை மிட்ட்டாய்க்கடைக்கு அடுத்த இருள் பிரதேசத்திற்கு இழுக்கிறான்.  அவன் நண்பன் தன்யநாத்தின் இல்லம் அங்கே உள்ளது.   யாரும் இல்லாமல் பூட்டி வைத்திருக்கும் வீடு. தன்யநாத் வீட்டு சாவியை நேமிநாதனிடம் கொடுத்து முதுகில் தட்ட, தோழர்கள் கூட்டம் கூட்டமாகச் சிரித்து ஆர்பரித்தது நேற்று.

ஒரு மணி நேரத்தில் ரோகிணி மிட்டாய்க்கடை மாடியில் தன் இருப்பிடத்தில் நீராடி வருகிறாள். நேமி, தன்யநாத் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான்.

ராத்திரி கடை எடுத்து வைத்து வீட்டுக்குப் போய் ராச்சாப்பாடு உண்டு உறங்கிக் கிடக்கும் நேரம் இது. என்றாலும் சிவராத்திரி என்பதால், அதுவும் பிரசாதம் எல்லோருக்கும் வழங்க வேண்டும் என்பதால் மிட்டாய்க்கடையில் ஓயாத பரபரப்பு.

“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.

 சுறுசுறுப்பாக அங்கே ஜெருஸோப்பான்னா என்ற நீளமான பெயர் கொண்ட சாதத்தைப் பொங்கிக் கொண்டிருக்கும் நேர்த்தியான வாசனை தெரு முழுக்கக் கமழ்கிறது. 

”வாசனையே ஊரைத் தூக்குதே. இதை சாப்பிட்டா என்ன பிரமாதமா இருக்கும்”. 

”கொஞ்சம் புளிப்பு. கொஞ்சம் காரம். கொஞ்சம் இனிப்பு. கொஞ்சம் துவர்ப்பு. கொஞ்சம் கசப்பு. நல்ல சூடு. குழைய வடித்த ஜெருஸோப்பான்னா”.

சமையல்காரர்கள் என்றாலும் அவர்களுக்கும் நாவில் ருசி நரம்புகள் தரமான உணவு வருகிறது என்று கட்டியம் கூறி உமிழ்நீரை உபரியாக உற்பத்தி செய்கின்றன. 

“ஜெருஸோப்பான்னா. பெயர் இதுவே இருக்கட்டும்”. 

இரண்டு மடையர்கள் பேசியபடி வாசலைப் பார்க்க பரமன்.

”அண்ணா, சுருக்கமான பெயர் ஜெருஸோ தான் எல்லோருக்கும்  பிடிச்சிருக்கு”. 

நாலைந்து குரல்கள் எழுகின்றன. 

ரமணதிலகன் சொல்லும்போது ”ரமணா போதும் இதுக்கு மேலே பொங்கக் கூடாது. அடுப்பிலே இருந்து ஒரு நிமிஷம் சென்று எடுக்கலாம்” என்கிறார் பரமன். நள்ளிரவு என்று அரண்மனை மணி ஒலிக்கிறது. சிவராத்திரி என்பதால் சங்குகள் மகாபலேஷ்வர் சிவாலயத்திலிருந்து ஒரு சேர முழங்குகின்றன.

பரபரவென்று வரிசையாக எரியும் கோட்டை அடுப்புகள் மேலிருந்து கடகங்களில் வெந்துகொண்டிருக்கும் ஜெருஸோப்பான்னா சடசடவென்று இறக்கப்பட வேண்டிய நேரம். 

வாசலில் இருந்து இளம்பெண் ஒருத்தி ஓடி வருகிறாள். அவள் கையில் வைத்திருந்த எதுவோ பக்கத்துக் கோடையடுப்பில் வெந்து கொண்டிருந்த கேசரியில் விழுவது பரமன் கண்ணில் படுகிறது, பின்னாலேயே குடிகாரன் ஒருத்தன் அவளைத் துரத்திக் கொண்டு ஓடி வருகிறான். இவன் பாங்க் அடித்த சிவராத்திரிக் குடியன் இல்லை, தினசரி குடியன் என்று அவன் ஓட்டமும் சாட்டமும், கனத்த குரலும் சொல்கிறது. 

“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.

கடைக்குள் இனிப்பு வாங்க வந்தவர்கள், பிரசாதத்துக்காகக் காத்திருப்பவர்கள் என்று கூட்டத்தில் அவர்கள் இரண்டு பேரும் பெருங்காயமாக கலந்து போகிறார்கள்.  

அண்ணா அண்ணா அந்தப் பெண் பரமனிடம் முறையிடுகிறாள். அவருக்குக் கோபம். பிரசாதமாகக் கிண்டிக் கொண்டிருக்கும் ரவைக் கேசரி உருளிக்குள் ஏதோ விட்டெறிந்திருக்கிறாள் இந்தச் சிறுக்கி. அவளைக் கன்னத்தில் அறையப் போகிறார் பரமன். 

“அண்ணா, என் தங்கச் சங்கிலியைத்தான் எறிஞ்சிருக்கேன். கேசரிக்கு ஒண்ணும் ஆகாது. என் குடிகாரப் புருஷன் போனதும் எடுத்துக்கறேன்” என்று சமாதானமாகச் சொல்கிறாள் அவள்.

”அடியே கொடுடீன்னா தரமாட்டியா? சிவராத்திரிக்கு சங்கிலி வித்துக் குடிச்சா ஆண்டவர் பாதத்திலே குடும்பத்தோடு போய் உட்கார்ந்திடுவோம் சீக்கிரமா.  பாங்க் எல்லாம் சிவனுக்கு நைவேத்தியம். சங்கிலியைக் கழட்டிக் கொடுடீ செல்லமே. பாருங்க அய்யா,  சிவனுக்காக கள்ளுக்குடிக்க காசு தரலேன்னா சங்கிலியை வித்துக்கொடுன்னேன். மாட்டாளாம். பிள்ளைங்க பசியா இருக்காம். அதுகளுக்கு சோறு தரணுமாம். இன்னிக்கு எதுக்கு சாப்பாடு? கைலாச ஏகாதசி ஆச்சே. பட்டினி கிடக்கணும் எல்லோரும்னு சொல்லுங்க ஐயா”.

அவன் கடைக்குள் நின்று தகராறு செய்ய பரமன் ரமணதிலகனிடம் ஜாடை காட்டுகிறார். சோளக்கொல்லை பொம்மையை அகற்றுவது போல்  சாராயக்குடியனை அப்படியே கழுத்தைப் பிடித்து வெளியே நகர்த்திப் போகிற அழகைக் கைதட்டி ரசிக்கிறாள் ரோகிணி. 

“ரொம்பப் பேசினா, சூடா கேசரி எடுத்து இவன் வாயைத் திறந்து போட்டுடு ரமணா”. 

ரமணன் சூடு பறக்கும் கேசரியை வாயில் போடப் போகிறது போல் பயம் காட்ட அவன் உள்ளபடிக்கே பயந்து ஐயா விட்டுடுங்க என்று புலம்பியபடி ஓடுகிறான். 

“ஹரஹர மஹாதேவ” குரல்களும் மணிகளும் சேர்ந்தொலிக்கின்றன.

முதல் பிரசாதம் அந்தப் பெண்ணுக்குத் தரப்படுகிறது. 

பெயர் என்ன? ரோகிணி கேட்கிறாள். காவேரி. 

“காவேரி, இது ஜெருஸோப்பான்னா. எங்கே, பெயரைச் சொல்லு. சரியாச் சொன்னா இன்னொரு தொன்னை இதைத் தரச் சொல்றேன்” என்கிறாள் ரோகிணி. அந்தப் பெண் மிகச் சரியாகச் சொல்லி விடுகிறாள். 

ஒரு பெரிய பொட்டலமாக ஜெருஸோப்பாவும் இன்னொன்றில் ரவைக் கேசரியும் வைத்து சணல்பையில் இரண்டு பொட்டலங்களையும் அடக்கி காவேரியிடம் நீட்டுகிறாள். அவள் ரோகிணியின் வம்சம் வாழணும் என்று நல்ல வார்த்தை சொல்லும்போது உங்க வீட்டுக்காரரும் நல்லா இருக்கட்டும் என்று பரமனையும் சேர்த்து வாழ்த்துகிறாள். பரமன் வாயைத் திறப்பதற்குள் ரமண திலகன் அப்படியே ஆகட்டும் என்று ததாஸ்து சொல்ல ரோகிணி சும்மா இருடா திலகா என்று அவனைக் கண்டிக்கிறாள்.

அந்தப் பெண் காவேரி  தயங்கித் தயங்கி நின்று கொண்டிருந்தாள். 

“ஓ அதுவா, சாமி பிரசாதத்திலே போட்டியோ இல்லையோ உன் சங்கிலியை. அவர் எடுத்துண்டுட்டார். பொன் உருகி கேசரியிலே கலந்தாச்சு” என்கிறாள் ரோகிணி. அந்தப்பெண் உடனே அழ ஆரம்பிக்கிறாள். 

“சரி அழாதே தேடலாம்”. ரோகிணி பெரிய கரண்டி எடுத்து வரச் சொல்லி கேசரியின் குறுக்கும் நெடுக்கும் வெட்டி வெட்டித் தேட சங்கிலி கிடைக்கிறது. 

“இது இல்லே புளி இலை சங்கிலி”. அந்தப் பெண் திரும்ப அழ ஆரம்பிக்கிறாள். இன்னும் கிண்டி எதையோ எடுத்து ரோகிணி கேட்கிறாள் – இதுவா? 

அவள் உள்ளபடிக்கே சந்தோஷமாக இதுதான் என்று கையை நீட்ட, அந்தக் கையில் சுடச்சுட இரண்டு சங்கிலிகளையும் போடுகிறாள் ரோகிணி. ”சாமி ரெண்டு சங்கிலியும் உனக்குப் பிரசாதம்னு சொல்லிட்டார். எடுத்துக்கோ”.

அவள் என்ன செய்யலாம் எப்படி நடக்கலாம் என்று தெரியாமல் குழந்தை மாதிரி மூக்கைச் சிந்திக் கொண்டு புடவையில் துடைத்தபடி விசும்புகிறாள். அப்படியே கிளம்பிப் போகும்போது ரமண திலகனை வீட்டுப் பக்கம் கொண்டு விட்டு வரச் சொல்லி அனுப்புகிறாள் ரோகிணி.

”ரெண்டு சங்கிலி எப்படி?” என்று பரமன் கேட்கிறார். 

“இன்னிக்கு விளையாடற மனசு. என் சங்கிலியைக் கழற்றி கேசரியோடு போட்டுட்டேன். பாவம் குழந்தை குட்டிக்காரி சிவராத்திரி அன்னிக்கு சுவாமி கொடுத்ததா இருக்கட்டும். ஏ பொண்ணு, காவேரி, உன் பக்திக்கு மெச்சி சிவன் உனக்கு இன்னொரு சங்கிலி பொன்னாலே செஞ்சு அனுப்பியிருக்கார். எடுத்துட்டு போ உன்னோடது ரெண்டு சங்கிலியையும்”.  

காவேரி சிரித்தபடி போகிறாள்.

’இந்தப் பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது’ என்று பொருள் தரும் இந்திப் பாடல் ஒன்றைப் பாடுகிறார் பரமன். அதைப் பாடியபடியே பம்பாய்க்குக் கடந்து போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். 

***

Series Navigation<< மிளகு அத்தியாயம் இருபத்தாறு மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.