மகோன்னதத்திற்கான ஆயத்தம்

டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள்

பாகம் I

“Eliot dead, you saying,
‘Who’s left alive to understand my jokes?
My old brother in the arts … besides, he was a smash of a poet.”

Ezra Pound by Robert Lowell

ஒரு விதத்தில் தன் மூதாதயர்களின் காலடிகளில் பின்முன்னாக, அதாவது அவர்கள் முடிவிலிருந்து தனது பூர்வீகங்களுக்குப் பயணிக்கவே அவர் முற்பட்டார் என்றும் வாதிடலாம். இப்பயணம் 1668ஆம் ஆண்டில் கார்ட்வெய்னர் (cordwainer, காலணி செய்பவர்) ஆண்ட்ரூ எலியட் இங்கிலாந்தின் சோமர்செட் மாவட்டத்து ஈஸ்ட் கோக்கரில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து நியூ இங்கிலாந்தின் பியூரிட்டன் காலனிக்குக் கடல்தாண்டிக் குடிபெயர்வதிலிருந்து தொடங்குகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, எலியட்டின் தாத்தா, பாஸ்டனிலிருந்து மிசிசிப்பியில் உள்ள செயின்ட் லூயிஸுக்கு, அங்கு ஒரு யூனிடேரியன் தேவாலயத்தைக் துரிதமாக நிறுவும் நோக்கத்துடன், நிலம்வழிப் பயணமொன்றை மேற்கொள்வார். அவரது இரண்டாவது மகன் ஹென்றி வேர் எலியட், பே காலனியை முதலில் குடியேற்றம் செய்தவர்களின் சந்ததியரான, பாஸ்டனைச் சேர்ந்த, வர்த்தகரின் மகளான சார்லோட் ஸ்டெர்ன்ஸை மணம்புரிவார். அத்தம்பதியரின் கடைசி மற்றும் ஏழாவதுக் குழந்தையாக 26 செப்டம்பர் 1888இல் பிறந்த தாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட், அம்மூதாதயர் பயணத்தைப் பொருண்மையாகவும் ஆன்மீகரீதியாகவும் தலைகீழாக்கும் வகையில், மாசசூசெட்ஸின் ஹார்வர்ட் பல்கலையில் பட்டம்பெற்று, இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்து, தனது கடைசி உறைவிடமான கிழக்கு கோக்கரின் ஆங்லிகன் பாரிஷின் மேற்கு முனையில் இருத்தப்படுவதற்கு முன், கத்தோலியத்திற்கு மதம் மாறுவார். இச்சரிதையின் வளைவை அப்பாரிஷின் சுவரொன்றில் பொதிக்கப்பட்டிருக்கும் ஒர் பலகை நமக்கு வட்டமாக நினைவுறுத்துகிறது:

'in my beginning is my end'
Of your charity
pray for the repose
of the soul of
Thomas Stearns Eliot
 Poet
26th September 1888 - 4th January 1965
'in my end is my beginning'

ஒரு வாழ்வின் ஏறக்குறைய எட்டு தசாப்தங்களைக் “கவிஞர்” என்ற ஒற்றை அடைமொழியைக் கொண்டு அடையாளப்படுத்தியிருப்பது மிகப் பொருத்தமாகவும் ஏதோ ஒரு விதத்தில நெகிழ்வூட்டுவதாகவும் இருக்கிறது. நம் போன்ற, பெரும்பாலானவர்களுக்கு, வாழ்வின் பல உச்சகட்டங்களைத் தவிர்க்கும் இம்மாதிரியான சுருக்கம் மிக மூர்க்கமாகவே இருந்திருக்கும். ஆனால் எலியட்டைப் பொறுத்தவரை, அவர் வாழ்க்கை வரலாறு, தத்துவம், மதம், சமூகம், கல்வி, திருமண வாழ்க்கை ,அதன் துன்பங்கள், ஏன் கிழக்கு கோக்கரில் உள்ள அந்த நெகிழ்வூட்டும் கல்வெட்டு வரையிலும்கூட, அனைத்துமே அவர் வாழ்வைக் காட்டிலும் பூதாகாரமாக விளங்கும் அவர் கவிதையில் அடங்கியிருப்பதால் அச்சுருக்கம் மிகச் சரியானதென்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

***

ஆங்கில மொழியின் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞரொருவர் எப்படித் தொடங்குவார்? இயற்கையாகவே ரொமாண்டிசிசத்தில், எக்கச்சக்கமான பூத்தல் வாடுதல்கள் நிரம்பி வழியும், நினைவேக்கத்துடன் புலம்பும் இளமைப் பருவத்தின் விழிப்புணர்வுடன். தேய்வழக்குப் படிமங்களை மூர்க்கமாக அடியறுத்து அவற்றிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயலும் பிற்கால முதிர்ச்சி அவ்வப்போது திடீரென்று வெளிப்படுவதை நாம் இனங்காண்கிறோம். உதாரணமாக

But the wild roses in your wreath
Were faded, and the leaves were brown.

Song or When we came home across the hill

அல்லது

This morning’s flowers and flowers of yesterday
Their fragrance drifts across the room at dawn,

Before Morning

அல்லது

And they look at us with the eyes
Of men whom we knew long ago

Circe’s Palace

அல்லது 

No meditations glad or ominous
Disturb her lips, or move the slender hands;
Her dark eyes keep their secrets hid from us,
Beyond the circle of our thoughts she stands.

Portrait

போன்ற வரிகளில். ஆனால் பெரும்பாலான வரிகள் அவரை அக்காலத்தில் பாதித்தவர்களின் (பைரன், ஷெல்லி, ஸ்வின்பர்ன், கிப்லிங், உமர் கய்யாம்) வழித்தோன்றல்களாகவும், வெளிப்படையான தழுவல்களாகவுமே ஒலிக்கின்றன. உதாரணத்திற்கு உமர் கய்யாம் எழுதியது போல் ஒலிக்கும் இவ்வரிகள்:

But let us live while yet we may,
While love and life are free,
For time is time, and runs away,
Though sages disagree.

பிரெஞ்சு கவிஞர்களை எதிர்கொண்டது (குறிப்பாக ஆர்தர் சிமன்ஸின் இலக்கியத்தில் சிம்பாலிஸ்ட் இயக்கம் நூல் அறிமுகம் செய்துவைத்த லாஃபோர்கே(LaForgue), ஒரு முக்கியத் திருப்புமுனையாகும். எவ்வளவு முக்கியமென்றால் ஆரம்பகாலக் கவிதைகளை லாஃபோர்கேவிற்கு முன், லாஃபோர்கேவிற்கு பின் என்று இரண்டாகப் பிரிக்குமளவிற்கும். Nocturne, Humoresque, Spleen or Conversation Galante போன்ற கவிதைகளை வாசிக்கையில் இவ்வித்தியாசம் மிக வெளிப்படையாகவே புலப்படும். ரொமாண்டிஸ்டுகளின் சுய-நாடகமயமாக்கலை சுயமட்டம், நகைமுரண், ஏளனம் போன்ற உத்திகளைக் கொண்டு லாஃபோர்கே அடியறுத்தார். நடிகை கேட்டுடன் பரீயில் குடிபுக விரும்பும் அவரது ஹாம்லெட், “உண்மையைச் சொல்வதானால், ஒரு ஹாம்லெட் கம்மி என்பதெல்லாம், மனிதஇனம் அழிவதற்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை” என்று தன்னையே மட்டம் தட்டிக்கொள்கிறான். தண்டிக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கான வீரியமில்லாததால், சடங்குகளினூடே மெழுகு உருவங்களைக் குத்துவது, நாடகத்தை இயாம்பிக் செய்யுளில் வனைந்துவிட்ட பெருமிதம் போன்ற சில்லறைத்தனங்களில் திருப்தியடைகிறான். துன்பியல் வேட்கையை லாஃபோர்கேயின் நகைமுரணைக் கொண்டு அடியறுக்கும் எலியட்டின் நாக்ட்டர்ன் கவிதை எள்ளலிலேயே தொடங்கி, முடியவும் செய்கிறது.

Romeo, grand sérieux, to importune 
Guitar and hat in hand, beside the gate 
With Juliet, in the usual debate 
Of love, beneath a bored but courteous moon; 

இதில் அனைத்துமே தேஜாவூ போன்றதொரு “ஏற்கனவே தன்மையுடன்” தொனிக்கிறது. முடிவும் அனைவருக்கும் தெரிந்ததே, அதுகூட சீக்கிரமே வந்தால் தேவலை என்றே அனைவரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். கவிஞருக்கும் தன் உலர்ந்த் நகைச்சுவையைக் கட்டுப்படுத்த முடியவில்லை (“Blood looks effective on the moonlit ground–) அவரது நாயகரும் அவரது ” best mode oblique”-இல் “நிலவை நோக்கி பீடித்திருக்கும் தன் ஆழ்ந்த கண்களை உருட்டுகிறார்”. துன்பியலைப் பகடிக்க முயல்கையில் வலிந்து திணிக்கப்படும் நகைச்சுவையின் மரணப்படுக்கை ஹாஸ்யங்களில் முடித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை; இந்தக் கவிதையிலோ ஒரு ஓய்ந்து தேய்ந்த pun-ஒன்றில்:

(No need of “Love forever?”–“Love next week?”)
While female readers all in tears are drowned:–
“The perfect climax all true lovers seek!”

ஆனால் லாஃபோர்கேயின் பிரிந்து விடுபட்டிருக்கும் பற்றின்மை ரொமாண்டிசிசத்தின் குறைகளை அடையாளம் காண மட்டுமே உதவுகிறது. அவற்றிற்கான எந்த தீர்வையுமே அது அளிப்பதில்லை. அது ஒரு முகமூடி மட்டுமே; அதற்கவர் சூட்டிய பெயரே பியரோ (Pierrot); அவர் கவிதைகளின் நாயகன். அவனோ தேய்வழக்கில் உலவியபடியே நிலவின் ஆதர்சங்களுக்காக ஏங்குபவன். இலட்சியத்திற்கும் நிதர்சனத்திற்கும் இடையே விரியும் தொலைவைச் சுட்டிக்காட்டி அன்றாடத்தின் முகமூடிகளை அகற்றி அம்பலப்படுத்தியதே லாஃபோர்கேயின் பெரும் சாதனையாகும். ஆனால் ஆதர்சத்திற்கான ஏக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. போலி முகமூடிகள் மூர்க்கமாக விலக்கப்படுவது அதை மேலும் அடையமுடியததாக ஆக்குகிறதே ஒழிய அதை ஒருபோதும் முற்றிலும் அழிப்பதில்லை. லாஃபோர்கேயை தொடக்கப் புள்ளியாக எடுத்துக் கொண்டு எலியட் ரொமாண்டிசிஸ் மிகுகற்பனையை ஒரு முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்துகிறார். “முழுமைபெறா விமர்சகர்கள்” என்ற பிற்காலத்துக் கட்டுரையொன்றில் “ரொமாண்டிசஸத்திற்கான ஒரே தீர்வு அதை பகுத்தாய்வதே” என்று அவர் கூறுவார். 

Another of my pierrots dead
Dead of Chronic Orphanism;
His was a heart full of lunar
dandyism, in a freakish body

என்ற லாஃபோர்கேயின் Locutions de Pierrot XII கவிதை வரிகளே எலியட்டின் ஹ்யூமரெஸ்க் கவிதையின் தொடக்கப் புள்ளி:

One of my marionettes is dead 
Though not yet tired of the game– 
But weak in body as in head, 
(A jumping-jack has such a frame).

எலியட்டின் பியரோவும் ஷோக்குத்தனத்தில் ஈடுபடுகிறான்:

“The snappiest fashion since last spring’s,
“The newest style, on Earth, I swear

இது பிற்கால கவிதையான How to pick a Possum-இன் கிண்டலுக்குக் கட்டியம் கூறுகிறது: In spring he affects such sartorial / display as the fashion allows

ஆனால் கவிதை அவனது ஆதர்சத்தை மொழியமட்டும் செய்யாது தருவித்தும் கொள்கிறது:

His who-the-devil-are-you stare;
Translated, maybe, to the moon.

அத்தருவித்தலும் மூர்கமாக ஒப்பீடு செய்யபடுகிறது 

“Your damned thin moonlight, worse than gas–
“Now in New York”–and so it goes.

Rhapsody on a Windy night என்ற பிந்தைய கவிதையில் அதே ஆதர்சம் வெளிப்படையாகவே “A washed-out smallpox cracks her face” என்று கேவலப்படுத்தவும் படுகிறது. 

கழிவிரக்கம் முற்றிலும் உரிஞ்சப்பட்ட நிலையில் நிற்கும் நம் கைப்பாவை நாயகன் ஒரு அடியறுக்கும் கேள்வியால் மேலும் பிரிகசிக்கப்படுகிறான். 

Logic a marionette’s, all wrong
Of premises; yet in some star
A hero!–Where would he belong?
But, even at that, what mask bizarre!

சார்பற்ற புறநிலைத் தன்மைக்கானதொரு பயிற்சியே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் வறண்ட இம்மூளைப் பயற்சியை உயர்பிப்பதற்குத் தேவையான உணர்வின் உத்வேகம் இல்லாததால் இக்ககவிதைகள் வாழ்க்கையை அணுகுவதற்கான ஓர் முறைமையாக மாறாது லாஃபோர்கேயை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையாக எஞ்சிவிடுகின்றன. ஏன் ஹியூமரெஸ்க்? என்றால் விண்டம் லூவிஸ்சின் தார் (Tarr) நாவலை எலியட் விமரிசிக்கையில் நகைச்சுவை என்பது “அழகை அகோரத்திலிருந்து பாதுக்காப்பதற்கும் தன்னையே முட்டாள்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மனது மேற்கொள்ளும் ஓர் நுண்ணுணர்வுமிக்க இயல்பான உள்ளார்ந்த முயற்சி” என்று கூறியதே அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும். உன்னதத்திற்கான விழைவை நகைமுரண் முகமூடிகளைக் கொண்டு அடியறுக்கும் போக்கை  நாம் கவிஞர் இசையின் கவிதைகளிலும் காண்கிறோம். உதாரணமாக:

ஒரு முத்தம்
கொடுத்தவுடன் தீர்ந்து விட வேண்டும்
கொஞ்சம் எச்சிலில் கரைந்து விட வேண்டும்.
அதுவன்றி
காவிய டப்பாவிற்குள் ஒளித்து வைத்து
காலமெல்லாம் எடுத்து எடுத்துப் பார்க்கும் அந்த முத்தம்….
அது நமக்கு வேண்டாம் அன்பே.

காவிய டப்பா

அல்லது

ஹஸ்தினாபுரத்திலிருந்து
சோமனூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினேன்.
….
” ஊசி முனையளவு இடம் கூட கிடையாது “
என்று சொன்னேன்
அப்போது என் மீது பூமாரி பொழிய‌
போலீஸ்காரர் விசில் ஊதுகிறார்.

ஹஸ்தினாபுரம் ரயில்வண்டி

Spleen கவிதையில் (பூட்லேரின் Fleurs du Mal தொகுப்பில் வரும் Spleen and Ideal பகுதிக்கான இலக்கிய வணக்கம் என்பதை சொல்ல வேண்டியதில்லை) “திருப்தியடைந்த ஞாயிறு முகங்களின் ஊர்வலத்தால்” கவிஞரின் மனத்தின்மை விருப்பமின்றி திசைத்திருப்பப்படுகிறது. அவற்றின் மந்தமான சூழ்ச்சிக்கு எதிராக கவிஞரால் வலிமையாக எதிர்வினையாற்ற முடியாததால் கவிதையின் ஆக்டோசிலபிக் வரிகளின் வரம்பை அவற்றின் தாக்கம் பலமுறை மீறுகிறது. நிதர்சன நித்தியங்கள் அந்நியப்படுத்தினால் அந்த முட்டுச்சந்திலிருந்து கவிதை மீள்வதற்கான வழி?  நகைமுரணைக் கொண்டு பதிலடி கொடுத்து அதை ஆதர்சப்படுத்தி உரிய தண்டனையை அளிப்பதுபோல் அதை பூரணத்துவத்தின் வாசலில் கோமாளித்தனமாக நிற்கவைப்பது:

And Life, a little bald and gray,
Languid, fastidious, and bland,
Waits, hat and gloves in hand,
Punctilious of tie and suit
(Somewhat impatient of delay)
On the doorstep of the Absolute.

“Hat in hand” என்ற சொற்பிரயோகம், Nocturne கவிதையில் வரும் அந்தக் கார்ட்டூன் ரோமியாவை நினைவுபடுத்தினால் Absolute/ suit சந்தநயம் பரிபூரணத்தையே மட்டுப்படுத்துகிறது.

Conversation Galante லாஃபோர்கேயின் முறைமையில் அமைந்திருக்கும் மற்றொரு கவிதை. ஆனால் அதன் நாயகன் தன் நகைமுரணின் கூர்மையைத் தன்னம்பிக்கையுடன் (குறைந்தபட்சம் தன் மனதிலாவது) கையாள முயல்கிறான். விருந்தளிக்கும் மூதாட்டியின் ரொமாண்டிசிஸ ரசனையை நுட்பமாக நையாண்டி செய்வதாக பாவித்துக் கொள்கிறான். ரொமாண்டிஸ்டுகளின் நித்திய நண்பரான சந்திரன், உணர்ச்சி மிகைகளுக்காகக் கேலி செய்யப்பட்டு ப்ரெஸ்டர் ஜானின் பலூன் மற்றும் இடிந்தொடிந்த கூண்டு விளக்குடன் ஒப்புமை செய்யப்படுகிறான். இரவையும் நிலவொளியையும் விளக்கும் இரவிசை (இவையும் நம்மை முன்னர் வாசித்த அந்த நாக்டர்ன் கவிதைக்கே அழைத்துச் செல்கின்றன) தங்குதடைகளின்றி உரையாடலை வழிநடத்திச் செல்லும் கவிஞரின் நகைமுரண் கலந்த பணிவான பாங்கினூடே உறையாடுபவர்களின் வெறுமைகளையும் வெளிக்கொணர்கிறது. கவிஞனின் தொனி மிகப்பொருத்தமாகவே இருந்தாலும், அவன் விடுக்கும் சொற்கனைகள், மூதாட்டியின் “How you digress”, “Does this refer to me?” போன்ற வெகுளித்தனமான கேள்விகளால் (இது தேர்ந்த படிப்பைனை செய்யப்பட்ட வெகுளித்தனமாகவும் இருக்கலாம்) அவள் அறியாமலேயே அவற்றின் இலக்கை அடையாமல் திசைதிருப்பப்படுகின்றன. அவளது பதட்டப்படாத அமைதியான பாங்கைக் கண்டு நம் இளம் நகைமுரணாளன் ஆட்டம் கண்டு பின்வாங்குகிறான். தானே முட்டாள்தனமாக நடந்து கொள்வதாக ஒப்புக் கொள்கிறான். இதில் நகைமுரண் என்னவென்றால், அவனுடைய நகைமுரணே அவனது கவித்துவ நையாண்டித்தனத்தை, சமயோஜிதத்தைக் கொண்டு மட்டுப்படுத்தும் புத்திசாலியாக அவளை நாம் உணர்ந்து கொள்ளும் அளவுக்கு அவளை உயர்த்திவிடுகிறது (இறுதியில் அவன் அவரை “the eternal humorist, The eternal enemy of the absolute.” என்று அழைக்கும் அளவுக்கும்.) ஹென்றி ஜேம்ஸின் அருமையான வரவேற்பரை உரையாடற் சித்திரமொன்றில் நாம் இருத்தப்படுகிறோம். இந்த அர்த்தத்தில்தான் பிற்கால மகோன்னதங்களான Prufrock , La Figlia Che Piange கவதைகளுக்கு Conversation Galante ஒரு முன்னறிவிப்பாக அமைகிறது. ஏதாக இது அமைத்துக் கொடுத்த பந்தை அவை ஸ்டேடியத்திற்கு வெளியே விரையும் அபாரமான சிக்ஸர்களாக அடிக்கின்றன. ஆனால் கடைசி வரையிலும் இவன் கிண்டலைக் கண்டுகொள்ளாமலே உரையாடும் சீமாட்டியே கவிதையை முடித்து வைக்கிறாள். And—”Are we then so serious?” என்று கேட்பது அவள் இதுவரையிலும் மிகச் சாதுர்யமாகக் கவிஞனையும் நம்மையும் ஏமாற்றிவிட்டாளோ என்று நம்மைச் சந்தேகிக்க வைக்கிறது. 

“You, madam, are the eternal humorist,
The eternal enemy of the absolute,
Giving our vagrant moods the slightest twist!
With your aid indifferent and imperious
At a stroke our mad poetics to confute—”
And—”Are we then so serious?”

 

Vivienne (‘Vivien’) Eliot (née Haigh-Wood); Lord David Cecil; Elizabeth Bowen; T.S. Eliot

***

நகைமுரணியத் தொப்பியில் மயிலிறகுகளை அடுக்கிக்கொண்டு செல்லும் இப்பழக்கமானது 1910-1911 வருடங்கள் வரை நீடித்தது. அம்முக்கியமான வருடங்களில்தான் எலியட் கவிதை மகத்துவத்திற்கான தனது அடுத்த ஆயத்த பாய்ச்சலை Portrait of the Lady கவிதையின் மூலமாக நிகழ்த்துகிறார். 1908 முதல் அவர் எழுதத் தொடங்கிய வடிவம், லாஃபோர்கேயிற்கு நிறம்பவே கடன்பட்டிருந்தாலும், எலிசபெத்திய நாடகாசிரியர்களான மார்லோ, வெப்ஸ்டர், டூர்னர், மிடில்டன் மற்றும் ஃபோர்டு ஆகியோருக்கும் கடன்பட்டிருப்பதை அவரே சுட்டிக்காட்டியுள்ளார். கவிதை, என்னை எப்போதுமே சிரிக்க வைக்கும், வயதான பெண்ணிற்கும் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டிருக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவைச் சட்டகமாக அமைக்கும் கிரிஸ்டஃபர் மார்லோவின் அபாரமான மேற்கோள் வரிகளுடன் தொடங்குகிறது: 

Thou hast committed —
 Fornication: but that was in another country,
And besides, the wench is dead.

– (The Jew of Malta)

ஒரு வருட காலத்தில் ஓர் இளைஞன் மேற்கொள்ளும் மூன்று வருகைகளைக் கவிதை விவரிக்கிறது. மேற்கத்திய செவ்வியல் இசைப்படைப்பைப் போல் மூன்று அசைவுகளாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் கவிதை பனிமூட்டமான டிசம்பர் பிற்பகலிலிருந்து அக்டோபர் இரவுக்கு ஏப்ரல் அந்தி வழியே நகர்ந்து செல்கிறது. பருவங்களின் மாற்றங்களை அவற்றிற்கேற்ப உருமாறும் இவ்விளைஞனின் மனநிலைகள் பிரதிபலிக்கின்றன. முதல் பாகத்தில் உள்ள புகையும் மூடுபனியும் கவிதை விவரிக்கப் போகும் உறவின் மங்கலான நிச்சயமற்ற தன்மைக்குக் களமமைத்துக் கொடுக்கிறது. தடைகளற்ற vers libre-யே கவிதையின் பிரதான வடிவமென்றாலும் பதினான்கு சிலபில்களில் அமைந்திருக்கும் முதலிரு வரிகள், அச்சந்திப்பிற்கு இளைஞன் தன்னையே “இழுத்துக் கொண்டு” வந்திருக்கிறான என்ற உணர்வை அளிக்கிறது. பெண் அவனைக்காட்டிலும் தன்னம்பிக்கை மிக்கவளாக நன்கு பழக்கப்பட்ட இயாம்பிக் வரியில் தொடங்குகிறாள். பெரும்பாலும் கவிதை இயாம்பிக் பென்டாமீட்டரையும் அலெக்ஸாண்ட்ரைனையும் சுதந்திரமாக மாற்றியமைத்து, பேச்சுமொழியைக் கவிதையாக்கும் தேவைக்கேற்ப விரிந்து சுருங்குகிறது. சந்திப்பும் சூழலும் கிட்டத்தட்ட ஒரு ரொமாண்டிசிஸ கற்பனையால் வார்த்தெடுக்கப்பட்டது போலிருக்கிறது. காட்சியும் அப்படிபட்டதோர் கற்பனையின் விதிகளுக்கேற்பவே கட்டாயமாக இருந்தாக வேண்டிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன்னை கட்டமைத்துக் கொள்கிறது. ஆனால் திடீரென்று லாஃபோர்க்கேயியக் குறும்பன் தலையை உயர்த்தி கண் சிமிட்டி, கவிதையின் நகைமுரணிய அடிநீரோட்டங்களைச் சுட்டிக்காட்டி நம்மை எச்சரிக்கிறான்:

An atmosphere of Juliet’s tomb 
Prepared for all the things to be said, or left unsaid.

மறைமுக சுட்டுதல்களும் அவற்றிற்கான எதிர்வினைகளும், அனைத்துமே வயலின்கள், கார்னெட்டுகள் பின்னணியில் ஒலிக்க இசைரீதியாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஷோப்பேன் இசை அமைத்திருக்கும் பூனை எலி நாடகமாகக் கவிதை வளர்கிறது (“latest pole” குறித்த அவனது கூர்மையான நையாண்டிக்கு எதிர்வினையாக அவள் “Chopin’s soul” என்று ஷோபேனின் ஆன்மாவைப் பற்றி பேசுகிறாள். 

—And so the conversation slips
Among velleities and carefully caught regrets
Through attenuated tones of violins
Mingled with remote cornets
And begins.

பெண்மணியோ அவனுடனான தனது நட்பைப் பறைசாற்றிக்கொண்டே இருக்க ஆடவன் எதிர்த்தொலிக்கும் உள்ளிசையின் தாளத்திற்கேற்ப அதை உள்வாங்கிக்கொள்கிறான்.

Among the winding of the violins
And the ariettes
Of cracked cornets
Inside my brain a dull tom-tom begins
Absurdly hammering a prelude of its own,
Capricious monotone
That is at least one definite “false note.”

நாராசமாகத் தொனிக்கும் அந்த “false note”-டைத் தொடர்ந்து அடுத்த வரியைத் தொடங்கி வைக்கும் அந்த டேஷ் நிறுத்தக்குறி இளைஞனுக்கு ஓர் இடைநிறுத்தத்தை ஏற்படுத்துகிறது, என்ன செய்து கொண்டிருக்கிறோம், மீளமுடியாதபடி மாட்டிக் கொண்டு விடுவோமோ என்பதையெல்லாம் மறுபரிசீலனை செய்ய விரும்பி மீண்டும் தன் நகைமுரண் முகமூடியை அணிந்து கொள்கிறான். 

— Let us take the air, in a tobacco trance,
Admire the monuments,
Discuss the late events,
Correct our watches by the public clocks.
Then sit for half an hour and drink our bocks.

அடுத்த பகுதியில் நாம் வசந்த காலத்தில் இருக்கிறோம். இளம் ஊதாக்களின் சேர்க்கையுடன் காதல் மனநிலை அதிகரிக்கிறது. ஊதாக்களும் அவற்றிற்குப் பிறகு வரும் ஏப்ரல் அஸ்தமனங்களும் பிற்காலத்தில் வரவிருக்கும் Wasteland தொடக்கத்திற்குக் கட்டியம் கூறுகின்றன. 

Lilacs out of the dead land, mixing
Memory and desire, stirring
Dull roots with spring rain.

ஆனால் இங்கே கடந்துபோன வாழ்க்கையைக் குறித்த நினைவுகளாலும் எதிர்கால காதல் விழைவுகளாலும் தூண்டப்படும் பெண், சுருதியில் இல்லாத வயலினைப் போல் தன் “புதைக்கப்பட்ட வாழ்வைப்” பற்றி அனத்திக் கொண்டிருபதைப் பார்த்து அதுவரையில் அவளைச் சீண்டும் நகைமுரணில் லயித்திருந்த வாலிபன் மேலும் மேலும் பதற்றம் கொள்கிறான். முதல் பகுதியில் சன்னமாய் ஒலித்த அவளது ” velleities” (அதாவது செயலில் முன்னெடுத்துச் செல்லத் துணியாத ஆசைகள்) இப்போது சற்று உரத்து ஒலிப்பதை அவன் உணர்கிறான். ஆனால், 

I take my hat: how can I make a cowardly amends 
For what she has said to me?

என்று முணுமுணுத்துக் கொள்வதைத் தவிர அவனுக்குச் செய்வதுக்கொன்றுமில்லை. 

தன் அன்றாட உலகின் சாமண்யங்களுக்குள் ஒளிந்துகொள்ள முற்படுகிறான். அது விருந்தோம்பும் அப்பெண்ணின் மேட்டுக்குடிப் பகட்டைக் காட்டிலும் அவ்வளவு மேன்மையானதல்ல என்பதை வாசகன் உணர்ந்து கொள்கிறான். தினமும் காலையில் பூங்காவில் அமர்ந்தபடி செய்திதாளின் காமிக்ஸ் பக்கங்களையும் விளையாட்டுப் பக்கங்களையும் படிப்பதைத் தவிர அதிலேதும் விசேஷமாக இல்லை. அவற்றின் நெடி மற்றவர்களின் ஆசைகளை வெட்டியாக அசைபோடும் அவலத்தையே அவனுக்கு நினைவுறுத்துகின்றன. 

the smell of hyacinths across the garden 
Recalling things that other people have desired.

மூன்றாம் பகுதியில் நாம் அக்டோபர் மாதத்திற்கு வந்துவிட்டோம். நம் இளைஞன் மீண்டுமொருமுறை வேண்டா வெறுப்பாகப் தன்னையே இழுத்துக் கொண்டு செல்வதுபோல் படிகட்டில் ஏறுகிறான். (“as if he had mounted on his hands and knees”). இம்முறை வெளிநாடு செல்வதைச் சாக்காக வைத்து அவளிடமிருந்து முற்றிலும் துண்டித்துக் கொள்ளும் யத்தனத்துடன் அவன் செல்கிறான். ஆனால் அவளோ வழக்கமான தனது வீனஸ் பொறிச்செடி பாணிக்கேற்ப “Perhaps you’ll write to me” என்று கொக்கியைப் போடுகிறாள். நகைமுரண் வித்தகரின் சுய-உடைமை ஆட்டம் கண்டுவிடுகிறது. பாவம், தகுந்த பாவனையை வரவழைத்துக் கொள்வதற்கு விலங்குகளை நகலிக்க வேண்டிய கையறுநிலை…வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு நிகழப்போகும் அவள் மறைவு, தான் எழுதப்போகும் இறங்கற் பா… போன்ற கற்பனைகளில் தன்னை ஆழ்த்திக்கொள்ள முயல்கிறான். ஆனால், இறுதியில் அவளது தொனியும் அதன் ஏற்ற இறக்கங்களுமே வெற்றி பெறுகின்றன. அவனது “டிசம்பர் மதியத்தின் புகையும் மூடுபனியும்” அவளது “எப்ரல் அஸ்தமனங்களிலும்” “ஊதாக்களிலும்” ஒளிமுறிவுற்று “புகை மண்டிய சாம்பல் மதியங்களாகவும்” “மஞ்சள், ரோஜா மாலைகளாகவும்” உருமாறுகின்றன. கவிதையின் கடைசி வரி “And should I have the right to smile?” கவிதையைத் ஆரம்பித்து வைத்த மார்லோவின் மேற்கோளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஒருக்கால் இங்கேயும் ஒரு “fornication” பலாத்காரமாக ஆனால் உளவியல் ரீதியாக, அதற்கு உட்படுத்தப்பட்டவர் உணர்ந்து கொள்ளாத வகையில் நிகழ்ந்திருக்கிறதோ என்பதை நாம் சந்தேகிக்கிறோம். உணர்வு அறிவால் பலவந்தப்பட்டிருக்கிறது, இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? இதனால்தான் அக்கடைசி பத்தியில் ஷேக்ஸ்பியரின் Twelfth Night-இலிருந்து வரும் காதல் நோயால் பீடித்திருக்கும் ஆர்சினோவின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன (That strain again, it had a dying fall). அவனுடைய வார்த்தைகளைச் சற்றே மாற்றிக் கூறுவதானால், ரொமாண்டிசிசக் கற்பனையும் அதன் எதிரியான சார்பற்ற நகைமுரணும், இரண்டுமே அவற்றின் மிகைகளால் “surfeit and sicken the appetite and so die?”

இம்மாதிரியான ஜேம்ஸிய தொனி மிளிரும் வரவேற்பறைக் காட்சியை எலியட் கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமான The Love Song of Alfred J Prufrock மிகக் கச்சிதமாகக் கைப்பற்றுகிறது. ஐஐடி மெட்ராஸில் முதல் “ரேகிங் அமர்வின்” போது எனது சீனியர் ஹாஸ்டல் அறை வாசலில்தான் இதை முதன்முதலில் எதிர்கொண்டேன். புரிந்தும் புரியாத அவ்வரிகள் எனக்கு மிகவும் வினோதமாக இருந்தன: அவன் அறைக்கதவின் அகலம் முழுவதையும் ஆக்ரமித்த “I should have been a pair of ragged claws / Scuttling across the floors of silent seas” பின்னர் உள்ளே சென்றபின் சுவர் கிராஃபிடியில் “I grow old … I grow old …I shall wear the bottoms of my trousers rolled.” போன்ற வரிகள். எனது முதல் இரண்டு கல்லூரி வருடங்கள் முழுவதும் என்னுடன் இருந்தபடியே அவை என்னை சஞ்சலப்படுத்தின, அதன் பிறகு எலியட்டின் கவிதைகளின் மலிவான ஃபேபர் பதிப்பில் அவற்றை மீண்டும் சந்தித்தேன், அக்கவிதை வரிகளில் ஒன்றை என் முதல் புத்தகத்தில் முகவுரை மேற்கோளாகப் பயன்படுத்தினேன். 

The Love Song of Alfred J Prufrock என்ற தொகுக்கப்பட்ட கவிதைகளின் முதல் கவிதை முன்னர் பேசிய Portrait of a Lady கவிதையின் பேசுபொருளை அக்கவிதையக் காட்டிலும் வளமான சொல்லாடலின் வழியே ஒருங்கிணைத்துக் கூடுதலான ஆழத்தையும் இசைத்தன்மையையும் கொண்டிருக்கிறது. இங்கேயும் அதே களம்தான், வரவேற்பறைகள், சலோன்கள் இத்யாதி… இவற்றை எதிர்கொள்ளும் விழிப்புணர்வு அதற்கே உரிய நகைச்சுவை மூர்க்கத்துடன் அவற்றைத் துல்லியமாக வரையறை செய்கிறது. ஆனால் இங்கும் தன்னுடைய பெருமிதத்தின் இசையில் லயித்துச் செயலாற்றுவதற்குத் துணியாத அதிபுத்திசாலித்தனம் மண்ணைக் கவ்வும் அபாயங்கள்… ஆனாலும்கூட உணர்வைக் கவிதையின் பாடலாகக் கைப்பற்ற முனையும் நாயகனின் விழைவு நிர்ணயிக்கும் இசையுடன் குறிப்பிட்ட ஓர் உலகின் பல்வேறு கூறுகளைப் பிணைப்பதாலேயே இக்கவிதை ஒரு தலைசிறந்த கவிதையின் தரத்திற்கு உயர்கிறது. ராபர்ட் ப்ரௌனிங்கின் தன்னுரைகளே (Monologues) இக்கவிதைக்கான வெளிப்படையான முன்னோடிகள். ஆனால் ஜேம்ஸின் “Crapy Cornelia” வும் அதன் “இழந்த சந்தர்ப்பங்களும்” அக்கதையுலகின் வினோதமான நடப்பும் இதைப் பாதித்திருக்க வாய்ப்புண்டு.   

ப்ரூஃபிராக் ஒரு விதத்தில் துன்பியல் நாடகப் பாத்திரம் போன்றவன்தான். விழைந்ததைச் செயலால் அடைய அவன் தயங்குகிறான், ஏனெனில் ஃப்ளாபேரின் Sentimental Education நாயகனைப் போல் “நிறைவேற்றத்தின் பாழ்மைப் பரணில் குதிப்பது” அவனுக்குப் பீதியை அளிக்கிறது. தயக்கத்துடனும் மனத்தடைகளுடனும் வயதாகிக் கொண்டிருக்கும் அவன், அழகும் கீழ்மையும் பின்னிப் பிணைந்திருக்குமோர் உலகில் பரிதாபகரமாகக் கனவு காண்கிறான். ரொமாண்டிசிசக் கற்பனையின் இரட்டைக் குறைபாடுகளால் ப்ரூஃப்ராக் பாதிக்கப்பட்டிருக்கிறான். அவன் எதிர்பார்ப்பது போல் இணக்கமாக இல்லாத ஒரு உலகத்தை எதிர்கொள்கையில் அவன் செயலற்ற நிலைக்கு இட்டுச் செல்லப்படுகிறான். பாடும் கடற்கண்ணிகளின் இசையில் லயித்திருக்க நிஜ உலகைத் துறக்க முயல்கிறான். ஆனால் தன் கேலிக்குரிய அபத்தத்தைப் பற்றிய விழிப்புணர்வு அவனுக்கு எப்போதுமே இருப்பதால் கேலிக்குறியவனாக மாறும் அபாயத்தைத் தவிர்க்கிறான்:

I am no prophet — and here’s no great matter;
I have seen the moment of my greatness flicker,
And I have seen the eternal Footman hold my coat, and snicker,
And in short, I was afraid.

நாடகீயத் தன்னுரையைக் (dramatic monologue) கவிதை தன் பாணியாகச் சுவீகரித்துக் கொள்கிறது. ப்ரூஃப்ராக்கின் மனதில் பதிவுகளுக்கும் நினைவுகளுக்கும் இடையே நிகழும் தள்ளிழுப்பு நாடகமாக அனைத்துமே நிகழ்கின்றன. கவிதையின் மேற்கோள் டாண்டேயின் இன்ஃபெர்னோவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. முந்தைய வாழ்வின் இரட்டைத் தன்மையை (“தந்திரங்களும் திருட்டு வழிகளும்”) குறிக்கும் தீச்சுடரில் இருத்தப்பட்டிருக்கும் Guido da Motefeltro நரகத்தின் எட்டாவது வட்டத்திலிருந்து தனது அடையாளத்தைக் குறித்த டாண்டேயின் கேள்விக்குப் பதிலளிக்கிறான். ஃப்ரூப்ராக் தன் தன்னுரைக்கு முகவுரையாக க்வீடோவின் பதிலை மேற்கோளாக அளித்திருப்பது, செயலைத் தவிர்ப்பதற்காக அறிவை (தவறுதலாகப்) பிரயோகித்து பகற்கனவிலும் கற்பனையிலும் லயிக்க முற்படும் தனது கவிதையும்கூட க்வீடோவின் “தந்திரங்களிளும் திருட்டு வழிகளிளும்” சேர்த்தி என்று எச்சரிப்பதற்காகத்தான். கவிதையின் “நீ”யை ஃப்ரூப்ராக்கின் கூட்டுக்களவானியாகவும் அவனது இரட்டைச் சகோதரனாகவும் விளங்கும் வாசகனாக அர்த்தப்படுத்தலாம். அவனும் கையால் ஆகாத்தனத்தின் அழகியலை ரசித்துக் கொண்டு ஃப்ருப்ராக்கைப் போல் கற்பனை உலகில் லயித்திருப்பவன்தானே? அப்படி இல்லையெனில் ஃப்ரூப்ராக் புற உலகில் வெளிப்படுத்தும் ஆளுமையை (நீ) அவனது உள்ளார்ந்த ஆளுமை (நான்) பகுத்தாய்ந்து விமர்சிப்பதாகவும் இதைப் பொருட்படுத்திப் பார்க்கலாம். எது எப்படி இருந்தாலும் நானோ நீயோ கடற்கன்னிகளின் இசையில் லயித்திருக்கும் நாமிருவருமே (we)  கவிதையின் முடிவில் முழ்கடிக்கப்படுகிறோம்.  

இதெல்லாம் அனைவருக்குமே தெரிந்ததுதான், ஏனெனில் நூறாண்டுகளுக்கு மேலாக இக்கவிதை பகுத்தாயப்பட்டிருக்கிறது. இருப்பினும் அதன் அசாத்திய இசைத்தன்மை நூற்றாண்டு இடைவெளிக்குப் பின்னும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.  

Let us go then, you and I,
When the evening is spread out against the sky
Like a patient etherized upon a table; 

இவ்வரிகளில் இயல்பாகவே ஒரு இசைத்தன்மை கூடிவருவதை நாம் உடனடியாக உணர்ந்து கொள்கிறோம். நம் செவித்தலையும் பொருட்படுத்தலையும் அதுவே வழிநடத்துகிறது. முதல் வரியில் உள்ள நிறுத்தற்குறி தானாகவே இடைநிறுத்தத்தைக் கோருகிறது, அதன் பின் வரும் இரண்டாம் வரி அது பேசும் வானத்தைப் போல் விரிந்து “enjambment”- வழியே தனது கரைகளை உடைத்து அடுத்த வரிக்கு வழிந்தோடுகிறது. ஆனால் நமது செவித்தல் இயல்பாகவே “patient” “etherized” வார்த்தைகளுக்குப் பின்னும் சற்று தாமதிக்கிறது. இசையின் கோரிக்கைக்காக மட்டுமல்ல, என்ன நடக்கிறது என்பதை மனதில் சற்று ஆராயவும்கூட. ரொமாண்டிசிஸ உவகையை உடனழைத்து வந்த வானத்தின் விரிவு இப்போது ஒரு மேஜையின் அளவிற்குக் கத்தரித்துச் சுருக்கப்பட்டு, அதன் மீப்பொருண்மை அனைத்தும் மருத்துவரீதியாக உணர்வு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

Let us go, through certain half-deserted streets,
The muttering retreats
Of restless nights in one-night cheap hotels
And sawdust restaurants with oyster-shells:
Streets that follow like a tedious argument
Of insidious intent
To lead you to an overwhelming question.

போன்ற வரிகளின் இசை Preludes கவிதைகளின் இசையை ஒத்ததே. அதில் a vision of the street /As the street hardly understands என்ற தரிசனம் நமக்கு அளிக்கப்பட்டது. இங்கு அதை ஃப்ரூப்ராக் வரவேற்பறை சல்லாபங்களில் (where the woman come go / and talk of Michelangelo) மூழ்கி அதைத் தவிர்க்க முயல்கிறான். 

ஆனால் அந்த நயவஞ்சகமான கேள்வி விடாப்பிடியாகா அவன் விழிப்புணர்வை, கவிதையின் உச்சத்திற்கு (என்னைப் பொறுத்தவரையில்) இழுத்து வருகிறது:

The yellow fog that rubs its back upon the window-panes,
The yellow smoke that rubs its muzzle on the window-panes,
Licked its tongue into the corners of the evening,
Lingered upon the pools that stand in drains,
Let fall upon its back the soot that falls from chimneys,
Slipped by the terrace, made a sudden leap,
And seeing that it was a soft October night,
Curled once about the house, and fell asleep

ஆங்கிலக் கவிதையின் மகோன்னதம் இங்கு முற்றிலும் காணக்கிடைக்கிறது. அதன் அபார இசை நம்மைப் பொறுமையாக ருசிக்கக் கோருகிறது. இரண்டு வரிகளின் சொற்ப இடைவெளியில் வரவேற்பறையை ரசித்துவிட்டு, ப்ரெலூட்களின் உலகத்திற்குத் திரும்பிவிடுகிறோம். கவிதையை உரைப்பவன் இப்போது தன் புத்திசாலித்தனத்தின் அனைத்து வளங்களையும் பயன்[படுத்தி, ஆண்ட்ரூ மார்வெல் (had we but world enough and time), ஆகமத்தின் பிரசங்கிகள் (a time to be born, a time to die இத்யாதி) மற்றும் ஹிசியோடின் Work and Days வரிகளை நினைவுபடுத்தி தன் ஏய்ப்பை தனது புத்தகத்தனத்தின் சுவாரசியமான நகைச்சுவைக்குப் பின் ஒளிந்துகொள்ள முயல்கிறான்.

வரவேற்பறையின் சலிப்பும் அதன் தார்மீக விளைவுகளும் அவனது பகுத்தாயும் விழிப்புணர்வு மீது தாக்கம் செலுத்தி (அவன் அவர்களை அவதானிப்பதும் அவன் அவதானிப்பதை நாம் அவதானிப்பதும், இவை இரண்டிற்குமிடைய நிலவும் இடைவெளியில்தான் ஃப்ருஃப்ராக் தனது நாடகத்தை நிகழ்த்திக்கொள்கிறது.) அவனிடமிருந்து எதிர்வினையைக் கோருகின்றன. துணியத் துணிந்து, ஆனால் அளவிற்கு மீறி துணியத் துணியாது மிகக் கவனமாக அவன் மூன்று ரைமிங் சரணங்களில் தன் கம்பி பேல் நடக்கும் எதிர்வினையை ஆற்றுகிறான். எனவேதான் வரவேற்பறையின் பவ்யமான தொனியில் ஒலிக்கும் “Do I dare” “how should I presume?” போன்ற மூன்று முறை ஒலிக்கும் அனுபல்லவி வரிகள். தன் இயலாமையைக் குறித்த அருவெறுப்பை உலர்ந்த நகைச்சுவையால் தன்னையே மட்டம்தட்டி திசைதிருப்ப முயல்கிறான் (measured out my life with coffee spoons; When I am pinned and wriggling on the wall.) வரவேற்பறை நகைச்சுவையைத் திசைதிருப்பும் உத்தியாகப் பயன்படுத்துவதை அவன் நன்கு உணர்ந்திருக்கிறான் (Is it perfume from a dress /That makes me so digress?). தடைகளின்றி துணிந்திருந்தால் என்ன சொல்லிருப்பான் என்பதை கற்பனை செய்கிறான்: 

Shall I say, I have gone at dusk through narrow streets
And watched the smoke that rises from the pipes
Of lonely men in shirt-sleeves, leaning out of windows? …

தரவின் சார்பின்மை ஓரளவிற்கு ஆசுவாசமளித்தாலும் சுய அவதானிப்பின் அருவெறுப்பைக் கடக்கப் போதுமானதாக இல்லை. எனவேதான் தனது அறைக்குள் வரவேற்கத் தகுதியானவை என்று என் சீனியர் கருதிய அந்த வரிகள்:

I should have been a pair of ragged claws
Scuttling across the floors of silent seas.

இதை மறுதலிப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டு தன் தற்போதைய நிலையின் குறைபாடுகளை ஏற்றபடி, , பிறர் தன்னை சீரியஸாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விழைவதைவிட தன்னையே பகடி செய்வது எவ்வளவோ மேல் என்று முடிவுக்கு வருகிறான். ஹாம்லெட்டை நகலிப்பதை உணர்ந்து அதையும் தன் பகடியில் மறுதலிக்க முயல்கிறான்:

No! I am not Prince Hamlet, nor was meant to be;
Am an attendant lord, one that will do
To swell a progress, start a scene or two,
Advise the prince; no doubt, an easy tool,
Deferential, glad to be of use,

ஆனால், அவன் பிரச்சனை என்னவென்றால், ஹேம்லெட்டாக நடிக்கும் தன் நாடகத்தில் தானே போலோனியஸ் வேடமும் கட்டியிருக்கிறான என்பதே. அதுவரையில் தான் ஒரு ஹீரோவாக நடந்துகொள்லவில்லை என்பதை அவன் நன்கறிவான், எனவேதான் சுயமட்டப் பித்தலாட்டங்களில் ஈடுபட்டு முட்டாள்/ கோமாளியாக நடிக்க வேண்டிய நிர்பந்தம். எனேவேதான் தரிசனத்தின் மகோன்னதத்தில் முடியாமல் கவிதை விட்டேத்தியான தாமதித்தலில், கனவலைகளின் நுரையின் மீது நிகழும் ஒர் உலாவுதலாக முடிகிறது. இந்த வாசகரைப் பொறுத்தமட்டில் ஃப்ரூப்ராக் தோல்வியடைந்தவன் என்றாலும் அவனைப் பற்றிய கவிதை முற்றிலும் தோல்வியடையவில்லை. நகைச்சுவை மிளிரும் கற்பனைமிக்க புத்திசாலித்தனத்தின் உச்சத்தை அதன் பிறழ்வுகளுடன் மிக லாகவமாகக் கைப்பற்றி தெருவின் தாளங்களை மேட்டுக்குடி வரவேற்பறைக்குள் கொண்டுவந்து அவை இரண்டையும் அதன் இனிமையான இசையைக் கொண்டு ஓர் தள்ளிழுவை இறுக்கத்தில் வைத்திருப்பதே அதை குறிப்பிடும்படியான கவிதையாக்குகிறது. 

After the sunsets and the dooryards and the sprinkled streets,
After the novels, after the teacups, after the skirts that trail along the floor—

இவ்வளவு இனிமையானதொரு இசைக்காகவே ஒருவர் “the sea-girls wreathed with sea weed red and brown”-ஐப் பார்த்தபடியும் காதில் கிணுகிணுக்கும் “songs of the mermaids singing each to each”-ஐ கேட்டபடியும் கடலின் உள்ளரைகளில் மூழ்கும் அபாயத்தை ஏற்றுக் கொள்ளலாம். இவ்வஞ்சலியிலும் முடிவும் ஆரம்பமும் ஒத்திருக்கட்டும். எஸ்ரா பவுண்ட் அவருக்களித்த பிரிவுரை ஒன்றை கிஞ்சித்தே மாற்றி இக்கட்டுரையை முடித்துக் கொள்வோம்: “அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். என்னால் மீண்டும் வலியுறுத்தத்தான் முடியும், ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பிருந்த அதே அவசரத்துடன்: அவரைப் படியுங்கள்.” 

அடுத்த பகுதி:

——

நம்பி கிருஷ்ணன், ஆகஸ்ட் 2022

மூலநூல்கள் / மேலும் படிக்க:
Eliot, T.S, Collected Poems 1909-1962, Harcourt Brace, 1991
Eliot, T.S, Early Poems 1907-1910, Harvard Advocate

Moody, A. David, Thomas Stearns Eliot poet, Cambridge, 1979

Series Navigation<< வைக்கோல் மாந்தர்களும் பேசா பிராட்டிகளும்: பாழ்நிலத்துக்குப் பிந்தைய கவிதைகள்

One Reply to “மகோன்னதத்திற்கான ஆயத்தம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.