
குதிரைவண்டி
அன்றிரவு அச்சிறுவயதில்
வானத்திலே மகிழ்ச்சியுடன்
குதிரை வண்டியிலே
பயணம் செய்தேன்
எனக்கு இருக்கும்
பாதுகாப்பு அதற்கில்லாமல்
குதிரை வண்டி
பெரியதாக இருந்தது
எல்லோரும் மாடியின்
உச்சிக்குப் போவதுபோல்
வண்டியில் ஏறி அமர்ந்தோம்
கம்பியினை கொக்கியில் மாட்டியபின்
சமநிலை வந்ததுபோல் வண்டி புறப்பட்டது
குதிரையின் குளம்பொலி சத்தம்
வீரனை மறக்கச் செய்து
சமூக பயன்பாட்டிற்கு வந்திருந்தது
நினைவுகூரும்படி இருப்பதற்கு
அக்குதிரை வண்டியா அல்லது
நான் சிறுவனாக இருப்பதா
அந்த வண்டி உயிர் பெறுவதற்கு
அக்குதிரை காரணமென்றால்
மனிதர்கள் இல்லாத இடம்
வெறிச்சோடி இருப்பது நியாயம் தான்
மக்கள் நடமாட்டத்தில்
அவன் ஒருவனாகச் சாலையில்
அத்தனை வண்டிகளைச்
சமன் செய்வது போல்
ஒரு வண்டியில்
அவன் பயணம் செய்தான்
மகிழ்ச்சியின் தொடக்கம்
முடிவு என்பது
ஒரு அருவியை
பார்க்கத் தொடங்கி
நீண்ட நேரம் கழித்து
அதனிடம் வெறுமனே
முடிவதைப் போல்
சிலந்தி
கழிவறை இருக்கையில்
அமர்ந்திருந்தபோது
சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும்
அச்சிலந்தியை
நேருக்குநேராக சந்தித்தேன்
அதற்கென்று ஒரு முகம்
இருப்பதைக் கண்டுகொண்டேன்
காட்டில் உள்ள மரங்களுக்கிடையே
கண்ட ராஜ்ஜியத்தை
அது இழந்திருந்தது
அதன் நகர்வுகள் எனக்கு
அச்சத்தைத் தந்த போதிலும்
பிறகு நாங்கள்
நண்பர்களாகிப் போனோம்
அதற்காகவும் சேர்த்து
நான் சிந்திக்கத் தொடங்கினேன்
இன்னும் நான் மனிதனாகவும்
அதுவொரு சிலந்தியாகவும்
இருக்கும் காரணத்தை
வெறுத்து ஒதுக்கினேன்
காலவெளியில்
பிரிந்த நாங்கள்
இப்பொழுது ஒன்றுசேர
அச்சிலந்தி இக்கவிதையிலே
இடம்பிடித்து விட்டது
என்றென்றும் நிலைப்பதற்கு