பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்

Alien spaceship landing on rural road

ஓர் ஒளிப் புள்ளியை சுற்றிச் சுழலும் துகளில் வாழும் நமக்கு இந்த பிரபஞ்சத்தில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற கேள்வி இயல்பானது, அடிப்படையானதும் கூட. ஆனால் இந்தக் கேள்விக்கான விடையை நாம் அணுகும் முறையில் ஓர் பெரும் முரண்நகை புதைந்துள்ளது. ஒரு புறம், நம்மை போலவோ அல்லது நம்மை விடவும் வளர்ச்சியுற்ற நாகரிகங்கள் பல புறக்கோள்களில் (exoplanets) இருக்கக் கூடும் என்ற அனுமானத்தின் பேரில் அவற்றின் குறிப்பலைகளை புவியில் துப்பறிய பல ஆண்டுகளாக, பெரும் பொருட் செலவில் SETI (Search for Extra-terrestrial Intelligence) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதைப் போல நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் பூமியில் இருந்து செலுத்தப்பட்ட வாயேஜர் விண்கலங்கள் (Voyager 1 & 2) இப்பொழுது ஏறக்குறைய 1440 கோடி மைல்களை கடந்து விண்மீனிடை வெளியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கலங்களில் பூமியைப் பற்றிய பலப் படிமங்களும், இயற்கையைச் சார்ந்த ஒலிகளும், இசைத் துண்டுகளும் பதித்த ஒரு தங்க ஒலிவரைவியும் (phonograph) அனுப்பப் பட்டிருக்கிறது. இதன் எளிமையான நோக்கம்; நம்மை புவிக்கப்பலான நாகரீகங்களுக்கு அறிமுகப் படுத்துவதே. இன்றும் கூட இந்த அறிமுகத்தை எப்படி செம்மையாக செய்யலாம் என்பதை பல அறிவியலாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, நாம் தேடிப் போக வேண்டிய அவசியமே இல்லை என்பதுப் போல் ‘அவர்களே’ நம் பூமிக்கு பல ஆண்டுகளாக வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பல நம்பத் தகுந்த தகவல்கள் இருந்தாலும், அவை யாவும் கட்டுக்கதைகளே என்று பல அறிக்கைகளும், அறிவியலாளர்களும் கருதுகின்றனர். வானில் தோன்றிய விளக்குகள் வெறும் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட வானிலை ஊதுபைகள் அல்லது வெள்ளி கிரகம் என்றும், இந்த நிகழ்வுகளை பார்த்தவர்களின் மனநிலையை பரிகசித்து இவர் ‘சிறு பச்சை மனிதர்களை’ பார்த்திருக்கிறார், ‘ இதைப் பார்த்தவர் என்ன புகைத்தார் என்று தெரியவில்லை’ என்று நையாண்டிக் கட்டுரைகளை பிரசுரித்தும் ஊடகங்கள் பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை ஓர் அற்பப் பொருளாகவே சித்தரித்திருக்கின்றன.

ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தக் கருத்தோட்டத்தில் ஓர் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு வித்திட்டது 2017 ஆம் ஆண்டில் பிரபல நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரை. ஹெலன் கூப்பர், ரால்ப் ப்ளூமெந்தால் மற்றும் லெஸ்லி கீன் எழுதிய இந்தக் கட்டுரை அந்த ஆண்டு உலகம் முழுவதும் பலரால் வாசிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் சாராம்சம் இது தான்.

அமெரிக்க அரசு பறக்கும் தட்டுகளை பற்றி கவனமோ, ஆராய்ச்சியோ இல்லை என்று வெளிப்படையாக அறிவித்திருந்தாலும், கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை கண்காணிக்க பென்டகனில் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) ஓர் அமைப்பு பல கோடி டாலர்கள் செலவில் பயனாற்றிக் கொண்டிருந்ததை இந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மேலும் இந்த அமைப்பு சேகரித்து வைத்திருந்த பல காணொளிகளில் இரண்டை கட்டுரையாளர்கள் வெளியிட்டிருந்தனர். மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த இக் காணொளிகளில் அமெரிக்கப் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத விண்கலன்களை விமானியறையில் உள்ள அதி நவீன கதுவியிலும் (radar), அகச்சிவப்பு படமியிலும் (infra-red camera) பதிவு செய்யப்பட்ட காட்சிகள் உள்ளன. இந்த அடையாளம் தெரியாத விண்கலன்களின் சுழற்சியும், கண்ணிற்கு தெரியாத முந்துகை தொழிற்நுட்பமும் (propulsion), அதி வேகத்தில் செங்கோணமாக திரும்பும் விந்தையும், பல ஆயிரம் அடி குத்துயரத்தை (altitude) நொடியில் கடக்கும் வேகத்தையும் கண்டு ஆராய்ச்சியாளர்கள் மிரண்டிருப்பது உண்மை. இந்த காணொளிகளின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்தும் வகையில் இதில் காணும் காட்சிகள் பலவும் அந்தப் பகுதியில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த வானூர்தி சுமப்பிக் கலம் (aircraft carrier) யூ எஸ் எஸ் நிமிட்ஸின் (இதில் இருந்து தான் போர் விமானங்கள் அந்த அடையாளம் தெரியாத விண்கலன்களை ஆராய அனுப்பப்பட்டன) கருவிகளாலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது.

இக் கண்ணொளிகளும், கட்டுரையும் ஏற்படுத்திய சிற்றலைகளின் தாக்கம் பெரிது. இத் தாக்கங்களின் முக்கியத்துவத்தை அவதானிக்க இந்த நிகழ்வுகளின் வரலாற்றை சற்று சுருக்கமாக காண்போம்.

இந்த விசித்ர வானியல் நிகழ்வுகளுக்கு பல நூற்றாண்டு சரித்திரம் உண்டு என்று ஆராச்சியாளர்கள் குறிப்பிட்டாலும் (உதாரணத்திற்கு காண்க: பாஸ்போர்ட் டு மகோனியா, ழ்ஜாக் ஃபப்ரீக் வாலி) இவற்றின் அண்மை காலத்து, நம்பத் தகுந்த பதிவுகள் இரண்டாம் உலகப் போரின் போதே துவங்கின. நேச நாடுகளின் போர் விமான ஓட்டிகள் சிலர் மர்மமான ஒளிப் பந்துகள் விமானத்தை தொடருவதாகவும், இவை நோக்கம் கொண்டதாக உள்ளதாகவும், வெகு வேகமாக பறக்க கூடியனவாகவும், சட்டென்று நின்றும் திரும்பியும் காற்றியக்கவியலின் (aerodynamics) கோட்பாடுகளுக்கு புறம்பாக பறப்பதாகவும் தங்களின் மேலதிகாரிகளிடம் தெரிவித்தனர். இவற்றுக்கு Foo Fighters என்று பெயரும் இட்டனர்.

1952 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் ஏறக்குறைய இரு வாரங்களுக்கு அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரின் வான்வெளியில் பறந்த தட்டுகள் அரசாங்கம், பாதுகாப்புத் துறை மற்றும் ஊடகத்தில் ஓர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. இவற்றை நேரில் பார்த்த சில போர் விமானிகளின் வர்ணனைகளும், வாஷிங்டன் விமான நிலையத்தின் கதுவிகளாலும் உணரப்பட்ட இத்தட்டுகள் விமானப் படையை அச்சம் அடைய வைத்தன. இவற்றை இடைமறிக்க போர் விமானங்களும் ஏவப்பட்டன. ஆனால் ஏதும் இயலவில்லை. ஒளிப்பந்துகள் அதி வேகத்தில் முடுங்கி மறைந்தன. இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக இரு வாரக்கடைசிகளில் நடைபெற்றது. அன்றைய பிரபல நாளிதழ்களில் இந் நிகழ்வுகளே முதற்பக்கத்தை ஆக்கிரமித்தன.

இந்த தொடர் நிகழ்வுகள் அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்திய சலனத்தை அகற்றுவதற்கு அமெரிக்க விமானப் படை ப்ராஜெக்ட் ப்ளூபுக் என்று ஒரு சிறு அமைப்பை நிறுவியது. இதன் நோக்கம் அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்களை பற்றிய விவரங்களை சேகரித்து, அவற்றை ஆராய்ந்து மக்களுக்கும், ஊடகங்களுக்கும் அவை பற்றிய விளக்கங்களை அறிவிப்பது. இதன் வெளிப்படையான நோக்கம் செம்மையாக இருந்தாலும் இதை நடைமுறை படுத்த அமைக்கப்பட்ட குழுவில் ஒரே ஒரு வானியல் வல்லுநர் (ஆலன் ஹைனெக்) மட்டுமே இருந்தார். மற்ற குழு அங்கத்தினர்கள் அனைவரும் விமானப் படையை சேர்ந்த அதிகாரிகளே! அதிகாரபூர்வமாக 1970ல் முடிவுக்கு வந்த ப்ராஜெக்ட் ப்ளூ புக் அடையாளம் காண முடியா இத்தட்டுகள் வேற்று கிரகங்களிலிருந்து வந்தவை அல்ல என்றும், இவைகளின் திறன் மேம்பட்டவை என்பதற்கான போதிய ஆதாரம் ஏதும் இல்லை என்றும் அறிவித்தன.

பிற்காலத்தில் ப்ராஜெக்ட் ப்ளூபுக்கின் அறிக்கைகளை ஆராய்ந்த பலர் இந்த அமைப்பு அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்களை விளக்க ஏற்பட்டது அல்ல என்றும் மாறாக இந்தப் பொருட்கள் வேற்று கோள்களிலிருந்து வருபவை என்ற எண்ணத்தை அமெரிக்க மக்களின் மனதிலிருந்து வேரோடு அகற்ற ஏற்பட்ட அமைப்பே என்று கருதுகிறார்கள். 1970ல் ப்ராஜெக்ட் ப்ளூபூக்கை கலைத்த பின்பு இதில் அங்கம் வகித்த வானியல் வல்லுநர் ஆலன் ஹைனெக் தி ஹைனெக் யூ எப் ஓ ரிப்போர்ட் என்ற புத்தகத்தில் அமெரிக்க விமானப் படை பறக்கும் தட்டுகளை இல்லாத ஒன்றாக ஆக்க எப்படியெல்லாம் புள்ளியியல் விவரங்களை வளைத்தது என்று விவரித்திருக்கிறார். அவருடைய கூற்றின் படி ப்ராஜெக்ட் ப்ளூபூக் ஆராய்ந்த நிகழ்வுகளில் நூற்றுக் கணக்கானவை விளக்கம் அளிக்க இயலாதவை. இவற்றை பற்றி மேலும் அறியவோ ஆராயவோ அரசாங்கமும் அறிவியல் அமைப்புகளும் ஆர்வம் காட்டாதது தனக்கு பெரும் ஆச்சர்யத்தையும், ஆதங்கத்தையும் அளிப்பதாக எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் இந்தப் போக்கு உலகில் பொதுவானது அல்ல. ஐரோப்பாவில் இப் பறக்கும் பொருட்களை பற்றிய ஆராய்ச்சியில் பல அரசாங்கங்கள் நேரிடையாகவே பங்கு கொண்டு பல மிகவும் சுவாரஸ்யமான அறிக்கைகளை வெளியிட்டுயிருக்கின்றன. உதாரணத்திற்கு, பிரெஞ்சு அரசாங்கம் 1990களில் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் (COMETA Report) இந்த விண்கலங்களின் அடையாளம் காண இயலாத தன்மையும், செயல் திறனையும் காணும் போது இவை புவிக்கப்பாலிருந்து வந்தவை என்ற கருதுகோளை நாம் சற்று தீவிரமாக யோசிக்க வேண்டும் என்றும், இந்த கருதுகோள் உண்மையாக இருப்பின் மனித சமூகம், கலாச்சாரம், மதம் மற்றும் அரசியல் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அடிக்கோடிட்டு காண்பிக்கிறது.

இத்தகைய சிந்தனை ஐரோப்பாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் அரசாங்க, அறிவியல் மற்றும் ஊடக கட்டமைப்புகளிலும் ஊடுருவிருப்பது ஒரு பெரும் கருத்தோட்ட பெயர்வே என்று கருதப்படுகிறது. இதன் விளைவுகள் பல அமைப்புகளின் சமீபத்திய செயல்பாடுகளில் புலப்படுகிறது.

பல பத்தாண்டுகளுக்கு பின் 2021ல் அமெரிக்க அரசாங்கம் இந்த வான் நிகழ்வுகளை பற்றிய ஒரு அறிக்கை வெளியிட்டது. இதில் 2004 முதல் 2021 வரை அமெரிக்க ராணுவப் படைகள் கண்ட அடையாளம் காண முடியாத 144 நிகழ்வுகளின் பட்டியல் உள்ளது. இதில் ஒரு நிகழ்வை தவிர மற்ற 143 நிகழ்வுகளுக்கு விளக்கம் கூற இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது! ப்ராஜெக்ட் ப்ளூபுக்கின் முடிவுகளை ஒப்புகையில் இது ஒரு பெரும் மாற்றமே. இதனை தொடர்ந்து மே 2022ல் அமெரிக்க சட்டமன்றம் இந்த நிகழ்வுகளை விசாரணைக்கு ஏற்று கொண்டு இதை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும் என்று பரிந்துரைத்தது.

அறிவியலாளர்கள் இந்த வான் நிகழ்வுகளை நாம் சற்று கூர்ந்து நோக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூற ஆரம்பித்துவிட்டார்கள். நாசாவின் ரவி கொப்பரப்பு வாஷிங்டன் போஸ்டில் எழுதிய ஒரு கட்டுரையில் இதை ஒரு அறிவியல் புதிராக நாம் காண வேண்டும் என்றும் இந்த நிகழ்வுகளின் தரவுகளை சேகரிப்பதிலும், ஆராய்வதிலும் அறிவியல் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வானியல் துறை பேராசிரியர் ஏவி லோப், இன்ஃபினிட்டி ப்ராஜெக்ட் என்ற ஒரு தனியார் அமைப்பினை ஏற்படுத்தி இந்த விசித்திர வான் நிகழ்வுகளை படம் பிடிக்கவும், நுண்ணிய தரவுகளை சேகரிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் வானியல் முன்னோடி அமைப்பான நாசா இந்த நிகழ்வுகளை ஆராய ஒரு ஆராய்ச்சி குழுவை நிறுவி அதற்கு பொருள் உதவியையும் அளித்திருக்கிறது.

நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை வெளியான பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் பல பிரபல பத்திரிகைகள் இந்த வான் நிகழ்வுகளை பற்றி பல முக்கிய கட்டுரைகளை வெளியிட தொடங்கிருக்கின்றன. இதில் இந்தியாவில் வெளியாகும் சில இதழ்களும் அடங்கும் (உதாரணத்திற்கு, தி வீக், இந்தியன் எக்ஸ்பிரஸ் ) இது போன்ற செய்திகள் விலக்கப்பட வேண்டியவை என்ற நிலை சற்று மாறியிருக்கிறது. பல வருடங்களாய் தொனித்து வந்த கேலி, கிண்டல்கள் குறைந்து இந்த நிகழ்வுகளை பற்றி செய்திகள் திரட்டுவதும், அதை குறித்து நேர்மையாக எழுதுவதும் அதிகமாகியிருக்கிறது என்பது கண்கூடு.

இந்த செயல்பாடுகள் இந் நிகழ்வுகளை பற்றிய நமது புரிதல்களை விரிவாக்குமா? ஆம் என்றே நினைக்கிறன். அறிவியல் புனைவு எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க் கூறியது போல, இங்கே இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன ஒன்று இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் இருக்கிறோம் அல்லது இல்லை. இரண்டுமே பெரும் வியப்பூட்டுபவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.