நேர்மைக்கு ஒரு காம்பஸ் -2

முதல் பகுதியைப் படிக்க

சாப்பாடு வந்துவிட்டதாக ப்ரஷாந்த் அலைபேசியில் ஒரு டிங். வெளியே சென்று ஒரு பெரிய பையை அவன் வாங்கிவந்தான். அனிகா மேஜை மேல் கணினியை நகர்த்திவிட்டு இரண்டு தட்டுகளையும் தண்ணீர் நிரப்பிய கோப்பைகளையும் வைத்தாள்.

சாப்பாடும் பேச்சும் ஒன்றையொன்று தொடர..


கூட்டு சேர்தல்
நிவேதிதா நாராயன்

லாபத்தை அதிகரிக்க ஒரு நிறுவனம் புதிய இயந்திரங்களிலும் பணியாட்களுக்கு நவீன வழிகளில் பயிற்சி அளிப்பதிலும் செலவிடலாம். அதைவிட சுலபமான வழி, அதே துறையில் இருக்கும் இன்னும் சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்தல். அப்படி உருவாகும் வலிய நிறுவனம் தன் பொருட்களின், பணிகளின் விலைகளை விருப்பம் போல் ஏற்றலாம். சட்டத்தின் கண்களில் அது குற்றம் இல்லை. இணைந்த நிறுவனங்களின் பொதுவான பதவிகள் என பலரைப் பணிநீக்கம் செய்யலாம். தொழிலுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக மலிவாக வாங்கலாம்.
இரண்டு அலைபேசி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து தொடர்புகளின் விலையைக் கூட்டினால் அவற்றைப் பயன்படுத்தாமல் எதிர்ப்புகாட்ட முடியும். ஆனால், உடல் சிகிச்சைக்கு?

‘சூட்டர் ஹெல்த்கேரை’ எடுத்துக்கொள்வோம்.

பத்துப்பதினைந்து ஆண்டுகளில் சாக்ரமென்ட்டோவைச் சேர்ந்த உடல்நல நிறுவனம் வட கலிஃபோர்னியாவில் மருத்துவமனைகளையும் சிகிச்சையகங்களையும் விழுங்கி பூதாகரமாக வளர்ந்தது. போட்டி இல்லாத காரணத்தால் மருத்துவ சேவைகளுக்கான விலைகளையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகப்படுத்தியது. இயற்கை வழி குழந்தை பிறப்புக்கான செலவு நாட்டின் பிற பகுதிகளைவிட சாக்ரமென்ட்டோவிலும் சான்ஃபிரான்சிஸ்கோவிலும் மிக அதிகம். அந்த அபரிமிதமான வருமானம் நிர்வாகத்தினருக்கு மட்டுமே, மருத்துவப்பணி புரிகிறவர்களுக்கு இல்லை. அதன் வழிமுறைகளைப் பின்பற்றி நாடெங்கிலும் மருத்துவ சிகிச்சைக்குப் பல சங்கிலி அமைப்புகள்.
அவற்றில் முதலீடு செய்யக் காத்திருக்கும் நிதிநிறுவனங்கள்…

ஜாக்சன்வில் பீச், ஃப்ளாரிடா.

கடற்கரையில் இருந்து ஒருதெரு தள்ளி அங்கொன்றும் இங்கொன்றுமாக பனைமரங்கள் சூழ்ந்த ஐந்து-மாடிக்கட்டடம். அதன் மேல்தளம் முழுவதும் ‘யோனிஜென்’னின் ஆளுமை அலுவலகங்கள். தென்கிழக்கு மூலையில் ஒரு விவாத அறை.

பெயர்தான் விவாத அறை. அங்கே கடந்த ஒருமணி நேரத்தில் நேர்மறை வாக்கியங்கள், ஒப்புதல் சிரிப்புகள். செவ்வக மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தாலும், ஒன்பது பேரும் ஒரே திசையைத்தான் பார்த்தார்கள். ஒருவர் தோளை இன்னொருவர் தட்டும் மெல்லிய ஓசைகள்.


ஆரம்பித்து ஆறு ஆண்டுகள். அதற்குள் ‘யோனிஜென்’னின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி” என்றார் ‘க்ரீன் மௌன்ட்டன் காபிடலி’ன் பிரதம நிர்வாகி.

“அதை நீங்கள் கவனித்தது எங்கள் அதிருஷ்டம்” என்றார் அந்நிறுவனத்தைத் தொடங்கி தன் மகனுடன் அதை நடத்தும் டாக்டர் ஸ்கேல்ஸ்.

“பணம் எங்கே வேகமாக வளரும் என்பதைக் கவனித்துக்கொண்டே இருப்பது எங்கள் தொழில்.”

“மகளிர் உடல்நலத்தைப் பராமரிக்கும் வழிகளைத் திருத்தியெழுதி புதிய சாதனை படைப்பது யோனிஜென்னின் குறிக்கோள்.”

“அதில் நீங்கள் வெற்றியும் அடைந்திருக்கிறீர்கள்.”

“அதை மறுக்கமுடியாத நிலையில் இருக்கிறேன்” என்றார் டாக்டர் ஸ்கேல்ஸ் செயற்கையான பணிவுடன்.

“உமன்ஸ் ஹெல்த் க்ரூப், யுனிஃபைட் உமன்ஸ் க்ளினிக்ஸ் என்று சாதாரணமாக இல்லாமல் யோனிஜென் தனித்து நிற்கும் பெயர்.”

“என் மருமகள் தேர்ந்தெடுத்தது.”

“நியுயார்க், இன்டியானாபோலிஸ் பகுதிகளில் உங்களுடைய பல மருத்துவகங்கள்.”

“வசதியானவர்கள் வசிக்கும் இருபத்தைந்து மைல் வட்டத்துக்குள் உள்ள மகளிர் சிகிச்சையகங்களை வளைத்துப்போடுவது எங்கள் வெற்றியின் ரகசியம்.”

“கடைசியாக.. செயற்கை கருத்தரிப்பில் உதவும் ‘லிபரா ஃபெர்டிலிடி க்ளினிக்’கின் பத்து மையங்களை உங்கள் மேலாதிக்கத்தில் கொண்டுவந்தது சாமர்த்தியமான காரியம்.”

அச்சிகிச்சையில் லாபம் மிக அதிகம் என்பது அங்கிருந்த எல்லாருக்கும் தெரியும்.

அறையில் சுமுகம் நிறைந்தது.

“யோனிஜென்னுக்கு ஐம்பத்தேழு மில்லியன் டாலர் கடன் வழங்க ‘க்ரீன் மௌன்ட்டன்’ நிர்வாகக்குழு தீர்மானம் எடுத்திருக்கிறது” என்று சம்பிரதாயக்குரலில் முதன்முதலாக அறிவிப்பது போலச் சொன்னார்.

பலத்த கைதட்டல். அது ஓய்ந்ததும்,

“நிச்சயம் லாபகரமான முதலீடு” என்றார் டாக்டர் ஸ்கேல்ஸ்.

“க்ரீன் மௌன்ட்டன் நிறுவனத்தைச் சேர்ந்த இவர்கள் உங்கள் நிர்வாகக் குழுவில் சேர்ந்து வழிகாட்டுவார்கள். ஸ்டீவ் கோல்ட் மற்றும் டாம் ஹெரால்ட்” என்று அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த இருவரையும் காட்டினார்.

“அவர்களின் மருத்துவப் பொருளாதார அறிவு எங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.”

பல பாட்டில்கள் திறக்கப்பட்டன. அவற்றில் பெரும்பகுதி காலியானதும் மறுபடி வணிகப்பேச்சு.

நேரத்தை வீணாக்காமல் டாம் ஹெரால்ட்,

“இப்போதைய சிஎம்ஓ (சீஃப் மெடிகல் ஆஃபீசர்) லிஸா ஷாவை மாற்றலாம் என்பது என் எண்ணம்.”

“எங்கள் வளர்ச்சியில் அவளுக்கும் ஒரு பங்கு” என்றார் டாக்டர் ஸ்கேல்ஸ். மறுப்பது பயன்தராது என்று தெரியும்.

“இதுவரை இருக்கலாம். ‘யோனிஜென்’னுக்கு முன் அவள் கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியர். அவள் ஓட்டுவது டொயோடா ப்ரையஸ். ட்விட்டரில் ஒவ்வொரு ஹிந்துப் பண்டிகைக்கும் ஒரு படம். அவளால் ஓர் எல்லைக்குமேல் பெரிதாக சிந்திக்க முடியாது.”

“நீங்கள் யாரையாவது..”

“ஹட்சன் வேல்லியைச் சேர்ந்த நீரா காஸ்ட்ரோ. அதன் டிரெக்டராக உயர்த்தப்படுவாள் என்ற பேச்சு இருந்தது. அவளைத் தள்ளிவிட்டு கவர்னருக்குப் பிடித்த ஒரு சோணகிரியை அப்பதவியில் அமர்த்திவிட்டார்கள்.”

“நானும் கேள்விப்பட்டேன்.”

“நீரா ஆரம்பத்தில் இருந்தே தனியார் மருத்துவமனையில். வியாபார நோக்கில் நோயாளிகளைப் பார்த்து இருக்கிறாள்.

அவளுக்கு விலை உயர்ந்த ருசி. நூறுடாலர் சூஷி, நூறாயிரம்டாலர் டெஸ்லா, ஐந்து மில்லியன் வெஸ்ட் செஸ்டர் இல்லம்.”

“நாளை நான் அவளை..”

“நான் ஏற்கனவே அவளுடன் பேசிவிட்டேன். அரை மில்லியன் ஆண்டு வருமானம். எதிரில் தெரிகிறதே க்ரீன்வேவ் அபார்ட்மென்ட்ஸ். அதில் இரண்டு-படுக்கை அறை ஸ்வீட், அவள் இங்கே வந்தால் தங்குவதற்கு. விமானப் பயணங்களில் முதல் வகுப்பு, அது இல்லையென்றால் வணிக வகுப்பு.”

“பதவிக்கு ஏற்ற சன்மானம்.”

“புதுப்பொறுப்பை ஏற்க நீரா ஆவலுடன் இருக்கிறாள்.”

அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்த ஸ்டீவ் கோல்ட்,

“எங்கே விரிவாக்காலம் என்பதற்கு எதாவது எண்ணம்..”

“இப்போதுதானே பணம் கிடைத்திருக்கிறது.”

“சான்ஃபிரான்சிஸ்கோ மற்றும் சாக்ரமென்டோ பகுதியில் நாட்டின் மற்ற இடங்களை விட மகளிர்நல மையங்களுக்கு ஐம்பது சதம் அதிக வருமானம்.”

“என் மகன் சொன்னதாக ஞாபகம்.”

“யோனிஜென் அங்கே கால் ஊன்றுவது நல்ல வணிக முயற்சி.”

“செய்தால் போகிறது.”

“நீராவை அங்கே அனுப்புங்கள். அவள் காரியத்தை முடித்துவிடுவாள்.”

ஏஞ்சலா சான்டர்ஸின் பதின்பருவம் கேரளாவில். மாஸசூசெட்ஸ் பொதுமருத்துவ மையத்தில் பணிபுரிந்த அவள் தாய் கோழிக்கோடு பிரசவமனையில் சேவைசெய்ய வந்ததால் அது நிகழ்ந்தது. ஐந்து ஆண்டுகள் மட்டுமே என்றாலும் அந்த காலக்கட்டம் அவள் வாழ்வை நிர்ணயித்தது. பிரதிபலன் எதிர்பாராமல் தொண்டுசெய்த தன் தாய்க்காக அவள் பெருமைப்பட்டாள். குழந்தைகளின் பிறப்பைக் கண்டு அதிசயித்தாள். ஏழைப்பெண்கள் படும் அவஸ்தைகளைப் பார்த்து அப்படிப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று தீர்மானித்தாள்.

யூ.எஸ். திரும்பிவந்ததும் ஏஞ்சலாவின் மருத்துவக் கல்வி ஆரம்பித்தது. படிப்பு, பயிற்சி, மேல் அனுபவம் எனத்தொடர்ந்து அது நித்யமாதா விமன்ஸ் சென்டரில் முடிந்தது. மேற்கு சான் ஹொஸேயின் மக்களைப்போல அம்மையத்தில் வெள்ளை, ஆசிய, ஹிஸ்பானிக், ஆப்ரிக்க, அரேபிய மருத்துவர்கள், உதவியாளர்கள். ஆங்கிலம், ஸ்பானிஷ், அரபிக், ஹிந்தி, மலையாளம் – பொது மொழிகள்.

ஏஞ்சலா தலைமை மருத்துவர் மட்டுமல்ல நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர். அப்பொறுப்பில் இன்ஷுரன்ஸ் முகவர்கள், அரசாங்க அதிகாரிகள், தொழிலுக்குத் தேவையான பொருள்களை விற்பவர்கள் ஆகியோரையும் சமாளிக்க வேண்டும். ஒப்பந்தங்களின் பூர்வாங்க வேலைகளைச் செல்லாவே முடித்துவிடுவாள். கடைசி கையெழுத்திடும்போது மட்டுமே ஏஞ்சலா அவர்களைச் சந்திப்பது வழக்கம்.

அன்றைய பதினோரு மணிக்கு ஒரு சந்திப்பு. டாக்டர் நீரா காஸ்ட்ரோ. செல்லா காரணத்தைக் குறிப்பிடவில்லை. ஹட்சன் வேலியின் தலைமைப் பதவிக்கு நீரா தெரிவு செய்யப்பட்டு கடைசி நிமிடத்தில் வேறு யாருக்கோ அதை மாற்றியது ஏஞ்சலாவின் கவனத்துக்கு வந்திருந்தது. நீரா தனக்கு மதிப்புத்தரும் வேறு இடம் தேடலாம்.

சந்திப்புக்கு முன்னால், ஒரு ஹிஸ்பானியப் பெண்ணின் மூன்றாவது குழந்தையை இயற்கை வழியே வெளியே வரவழைத்து அவள் சினைக்குழாயை முடிச்சிடும் சிகிச்சை. அது வெற்றிகரமாக முடிந்ததும், ஏஞ்சலா புதிய வெள்ளை கோட்டுக்கு மாற்றிக்கொண்டாள்.

செல்லா நீராவை அழைத்துவந்தாள். ஏஞ்சலா எழுந்து நடைவழிவரை வந்து அவளை வரவேற்றாள். செல்லா விடைபெற்றதும்,

“நீரா! உன்னை சந்திப்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி.”

“ஏஞ்சலா! எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.”

“கருநீல பென்சில் ஸ்கர்ட் சூட் உன் கச்சிதமான உடலுக்கு மிகப்பொருத்தம்.”

“பொறுப்புகள் நிறைந்த பதவியில்கூட நீ இளமையைக் காப்பது அதிசயம்.”

பரஸ்பர புகழ்ச்சி முடிந்தும் அலுவலத்தில் அமர்ந்தார்கள்.

“ஹட்சன் வேலி நிர்வாகம் பேச்சுமாறியது சரியில்லை” என்று ஏஞ்சலா ஆரம்பித்தாள்.

“அவர்களுக்குத்தான் நஷ்டம்.”

“நீ எங்களுடன் சேர விரும்பினால்.. உன் திறமைக்கும் அனுபவத்துக்கும் மையத்தின் கோ-டிரெக்டர் பதவி காத்திருக்கிறது.”

“தாங்க்ஸ். ஒரு சின்ன வித்தியாசம். உன்னை எங்களுடன் சேர்ப்பதற்கு நான் வந்திருக்கிறேன்.”

ஏஞ்சலாவின் முகத்தில், ‘அதற்கு என்ன அர்த்தம்?’

“ஐ’ம் சாரி” என்று இளஞ்சிவப்பு வணிக அட்டையை கோட் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

தங்க எழுத்துக்களில்

நீரா காஸ்ட்ரோ
சீஃப் மெடிகல் ஆஃபீசர்
யோனிஜென்
உமன்ஸ்’ ஹெல்த் க்ரூப்

ஏஞ்சலாவுக்கு அது புதிய செய்தி. அதற்கு ஆச்சரியம் காட்டாமல்,

“யோனிஜென் என்ன பொருத்தமான பெயர்! முதல்பாதி பெண்ணின் பிறப்புறுப்பு, பின்பாதி பிறப்பு.”

நீராவுக்கு ஒருபாதி புரிந்தது.

“உன் மருத்துவமனையின் பெயர்கூட அழகு தான்.”

“நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் காலிகட்டில் வசித்தபோது நாங்கள் ஒவ்வொரு வாரமும் போன சர்ச்சின் பெயர்.”

“உனக்கு நல்ல ஞாபகசக்தி.”

உரையாடல் ஒரு வட்டத்துக்குள் நுழைவதற்காகக் காத்துநின்றது.

“மகப்பேறு மருத்துவர்கள் சரியான நேரத்தில் சாப்பிடமுடிவதில்லை. இன்று அதிசயமாக நீ வந்ததற்காக.. சான்ட்விச்?”

“தாங்க்ஸ். எனக்கும் உணவுநேரம்.”

செல்லாவுக்குத் தகவல் போனது.

“உனக்கே தெரியும், நித்யமாதா போன்ற மருத்துவகங்கள் நடத்துவதில் பல சிரமங்கள்” என்று வணிகக்குரலில் நீரா ஆரம்பித்தாள். “வாடகையும், தேவையான பொருட்களின் விலைகளும் ஏறுகின்றன. அரசின் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன. இன்ஷுரன்ஸ் அவசியமான சிகிச்சைகளை அநாவசியப் பக்கம் சேர்க்கிறது. நிலைமையை சமாளிக்க பல நகரங்களில் நாலைந்து சிகிச்சையகங்கள் கூட்டாக இயங்குகின்றன. நாட்டின் பல பகுதிகளில் அமைந்திருக்கும் அப்படிப்பட்ட மகளிர்நல இணையங்களை ஒரு திறமையான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது ‘யோனிஜெனி’ன் குறிக்கோள். அதனால் நிர்வாகச்செலவுகள் குறைவு, நோயாளிகளுக்குத் திருப்தி, மருத்துவர்களுக்கும் நிலையான சூழலில் வரும் நிம்மதி. புதிய வழிமுறைகளைப் புகுத்த வாய்ப்பு. எங்களைப்போல ஆறேழு தொடர் நிறுவனங்கள். இருக்கின்றன. ஆனால், யோனிஜென் வித்தியாசமானது.”

‘அப்படித்தான் மற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் வலைத்தளத்தில் பெருமை அடித்துக்கொள்வார்கள்’ என்று ஏஞ்சலா மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். ஆனால் வெளியில், “நூற்றுக்கணக்கான பிரசவங்களைப் பார்த்த உன்னை சீஃப் மெடிகல் ஆஃபீசராகப் போட்டதில் இருந்தே அது தெரிகிறது.”

“தாங்க்ஸ்” என்ற வெட்கப் புன்னகையைத் தொடர்ந்து, “எங்களுக்கு எண்ணிக்கையைவிட தரம்தான் முக்கியம். வேலையை ஏற்றதும் முதல்காரியமாக உன்னைத் தேடி வந்தேன். நித்யமாதா எங்கள் மகுடத்தின் ரத்தினக்கல்லாக இருக்கும்.”

ஏஞ்சலாவுக்கு நீராவின் வருகைக்கான காரணம் உடனே புரிந்தது. இதே போன்ற ஒருசில சந்திப்புகள் ஏமாற்றத்தில் முடிந்திருக்கின்றன. இதுவும் அதை நோக்கிப் போகப்போகிறது. இருவரின் நேரத்தை வீணாக்காமல், அதே சமயம் மற்றவள் மனதைப் புண்படுத்தாமல்,

“சமீபத்தில்.. மனநலம், நோயாளிகளுக்கு பில் அனுப்புதல், அவசர சிகிச்சை, முதியோர் இல்லங்கள் என்று மருத்துவசேவையின் எல்லா இடங்களிலும் ‘ப்ரைவேட் ஈக்விடி’யின் கடன் பணம் பாய்கிறது.”

குரலின் தொனியில், ‘அது நிச்சயம் நல்லதுக்கு இல்லை.’

நீரா நிதானமாக, “க்ரீன்மௌன்ட்டன் காபிடல் எங்கள் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது.” ஐம்பத்தியேழு மில்லியன் டாலர் என்ற கணக்கைச் சொல்லவில்லை.

“அப்பணத்தில் நீங்கள் நித்யமாதாவை வாங்குவதாக வைத்துக்கொள்வோம்..” மூலையில் தள்ளப்பட்டதை நீரா உணர்ந்தாள்.

“அரசியல்வாதிகளைப் போல, தனிப்பட்ட மூலதனத்தினர் பார்வையின் எல்லை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள். அது முடியும்போது கொடுத்த பணம் இரண்டுமடங்காகத் திரும்புவதை எதிர்பார்ப்பார்கள். அதற்காக நித்யமாதாவை ‘யோனிஜன்’ விற்க வேண்டி நேரலாம். இடைப்பட்ட காலத்தில் இதன் மதிப்பு இரட்டித்திருக்க வேண்டும். நித்யமாதாவின் முந்தைய ஐந்து ஆண்டுகளைப் பார்க்கும்போது அது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.”

“நிதித்திறனை அதிகப்படுத்த நாங்கள் வழிகாட்டுவோம்.” குரலில் அவநம்பிக்கை தான் வெளிப்பட்டது.

“அதற்கு இரண்டு மடங்கு பெண்களை நாங்கள் குணப்படுத்த வேண்டும். இல்லை வருமானத்தை அதிகப்படுத்த.. ஃபீஸை உயர்த்த வேண்டும். அவசியம் இல்லாத அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். இலவச சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். ஒருசிலரை வேலையில் இருந்து நீக்க வேண்டும். செல்லா போன்ற நிரந்தரப் பணியாட்களை நேரக்கணக்குக்கு மாற்ற வேண்டும்.”

அடுத்து ஒலிவடிவம் பெறாத வார்த்தைகள்.

‘இது எதையும் நான் இதுவரை செய்தது இல்லை. இனி செய்யப்போவதும் இல்லை.’

‘கேரளாவில் கற்றுக்கொண்ட சோஷலிசப்பாடத்தை என்னிடம் படிக்கிறாள். எவ்வளவு காலம் கூட்டு சேராமல் தனியாக இருக்கிறாள் என்று நானும் பார்த்துவிடுகிறேன். அடுத்தது, எல் கமினோ மகளிர்நல நிலையம். அதை..’

அசௌகரியமான மௌனத்தை செல்லா கொண்டுவந்த சான்ட்விச் பைகள் முடிவுக்குக் கொண்டுவந்தன.
ஒன்றை எடுத்துக்கொண்டு நீரா எழுந்தாள்.

“தாங்க்ஸ், நம் தொழிலில் உட்கார்ந்து சாப்பிடும் அதிருஷ்டம் இல்லை.”


வட்ட மேஜை மேல் கணினி மட்டும்.
“ஹட்சன் வேலியில் எத்தனையோ பெண்கள் நீராவின் கவனத்தில். பதவிக்காக அவர்களைக் கைவிட்டது ஒரு பொறுப்பான மருத்துவருக்கு அழகு இல்லை. மிகப்பிரபலமான ‘எல் கமினோ மகளிர்நல நிலைய’த்தை ‘யோனிஜென் ஹெல்த்கேரி’ன் நிர்வாகத்துக்கு நீரா கொண்டுவந்து விட்டாள். இது அவளுடைய முதல் வெற்றி. வட கலிஃபோர்னியாவில் இனி ஒவ்வொன்றாக. போட்டி குறைந்ததும் யோனிஜென் மருத்துவ செலவுகளை உயர்த்தும். அதனால், எத்தனையோ ஏழைப்பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அதுவும் அவளுடைய சிறந்த குணத்துடன் ஒத்துப்போகாது.”

ப்ரஷாந்த்தின் ஏமாற்றம் அனிகாவுக்குப் பிடிபட்டது.

அவனுக்கு நீராவைப்பற்றி எந்த அளவுக்குத் தெரியும்?

அவன் கொடுத்த விவரங்களைக் கேட்டுக்கொண்டே வலைத்தளத்தில் ‘நீரா காஸ்ட்ரோ’ பற்றிய தகவல்கள் தேடினாள். எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்ததில், மற்றவர்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு முன்னேறும் ஒரு துடிப்பான பெண் அவள் என்ற முடிவுக்கு வந்தாள். ஒரு நல்ல மருத்துவருக்கான அறிவும் திறமையும் நீராவுக்கு இருப்பது உண்மை. ஆனால் சிறுவயதில் இருந்தே அவளுக்கு பதவி, அதன் வழியாகப் பணம், அது தரும் உல்லாசம் – இவற்றில் ஈடுபாடு உள்ளடங்கி இருந்ததாக நினைத்தாள். இப்போது, வாய்ப்பு கிடைத்ததால் அது வெளிப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் வளர்ந்தபோது அனிகாவின் அத்தை அடுத்த வீட்டிலேயே. அவளுடைய பெண், பையன் இருவருடன் ஒன்றாகப் பள்ளிக்கூடம் போனாள். திரும்பிவந்ததும் விளையாட்டு, அவர்களின் குணநலன்கள் அவளுக்கு அத்துப்படி. இங்கே அப்படி இல்லை. சிறுவன் ப்ரஷாந்த்தை நீரா பலமுறை ‘பேபிசிட்’ செய்திருப்பாள். சற்று வளர்ந்ததும் அவன் அவளை வருடத்துக்கு ஒன்றிரண்டு தடவை நேரில் பார்த்துப் பேசியிருப்பான். அவளை மற்றவர்கள் புகழ்வது அவன் காதில் விழுந்திருக்கும். அவனும் அவ்வப்போது அவளைப் பாராட்டி வாழ்த்து-அட்டை அனுப்பி இருப்பான். அவற்றின் அடிப்படையில் அவளை உயர்ந்த பீடத்தில் வைத்து, அதன்படி அவள் வாழ வேண்டும் என்று ப்ரஷாந்த் எதிர்பார்ப்பது எப்படி சரியாகும்?

அதேசமயம், அவனுடைய ஆழ்துயரமும் புரிந்தது. அபிமான பிரபலங்கள், மதிப்புக்குரிய வரலாற்றுத் தலைவர்கள். இவர்களின் நிஜ உருவம் தெரியும்போது ஏமாற்றப்பட்டது போல வருந்துகிறோம். நேரில் சந்தித்திராத மனிதர்களின் வீழ்ச்சியே நம்மைத் தாக்கும்போது, நினைவு தெரிந்ததில் இருந்து தலைநிமிர்த்திப் பார்த்த ஒருத்தி எல்லாரையும்போல தரைக்கு இறங்கியது அவனைப் பாதித்ததில் ஆச்சரியம் இல்லை.

“நீ ஆதர்சமாக நினைத்திருந்த ஒருத்தி உன் மதிப்பில் தாழ்ந்துவிட்டாள். அதுதான் உன் விரக்திக்குக் காரணமா?”

“அப்படித்தான் ஆரம்பித்தது.”

“நீராவுடன் பேசினாயா?”

“வேலை மாற்றியபிறகு அவளுக்கு ஒரே அலைச்சல். சென்ற சனிக்கிழமை அவளை நேரில் சந்தித்தேன். அப்போதும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான்.”

“மனிதர்களின் திட்டம் மாறுவது தினசரி நிகழ்வு. இதுவரை பயன்தரும் பணி செய்ததில் நீரா திருப்தி அடைந்தாள். இனி அவள் எதிர்கால நோக்கில் பணம் பயணம் பதவி. அதில் தவறு ஒன்றும் இல்லையே.”

“அங்கே தான் பிரச்சினை” என்று நிறுத்தினான்.

“ம்ம்.. சொல்!”

“நீ சொன்னது போலவே என்னை சமாதானம் செய்துகொண்டேன். தகவல் கேட்டதும் வந்த தாக்கம் ஒருசில நாளில் கொஞ்சம் மட்டுப்பட்டது. உன்னிடம் மன ஆறுதலுக்கு வர நினைத்து சின்ன விஷயம் இதற்குப்போய் மனநல மருத்துவர் எதற்கு என்று அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். ஆனால், இன்று…”

“இன்று..”

“என் நிலமையை விவரிப்பதற்கு முன்.. செயற்கை மூளை பற்றி உனக்கு எவ்வளவு தெரியும்?”

“என் தொழிலுக்கு ஆபத்து வராது என்ற மட்டிலும்.”

“அவ்வளவு நிச்சயமாக இராதே! அத்துறை மிக வேகமாக வளர்கிறது.”

“எதிர்காலத்தில் ஒரு ரோபாட் உன் பிரச்சினையைக் கையாளட்டும். இப்போதைக்கு என் வழி. முதலில், உன்னைப்பற்றிய விவரங்கள்..” என்று அவற்றைக் கணினியில் பதிக்கத் தயார் ஆனாள்.

“என் பெற்றோர் இருவரும் நியுமெக்ஸிகோ பல்கலையில். என் தந்தை அறுபது வயதுக்கு முன்பே பதவியில் இருந்து விலகி ஓய்வுக்காலத்தை அனுபவிக்கிறார். நிறைய புத்தகங்கள் வாசிப்பார்” என்று அவர் படத்தை அலைபேசியில் காட்டினான். அவர் முன்-மேஜையில், பின்-அலமாரிகளில், நாற்காலிகள் சோஃபா எங்கிலும் புத்தகங்கள். “ஒருநாளிலேயே ஒன்றைப் படித்து முடித்தால் ஆச்சரியம் இல்லை.”

“உன்னையும் படியென்று சொல்வார்.”

“எப்போதாவது.”

“கடைசியாக..”

“செலஸ்டி ஹெட்லியின் ‘டு நத்திங்’. நேற்று விமானத்தில் வந்தபோது படிக்க ஆரம்பித்தேன்.”

சென்ற ஆண்டு வெளிவந்த அப்புத்தகத்தின் திறனாய்வை ‘சைகாலஜி டுடே’யில் எழுதுவதற்காக அனிகா அதை வாசித்து இருந்தாள். வாழ்க்கைக்காக வேலை என்பது போய் வேலையே வாழ்க்கை என மாறிவிட்ட சமுதாயநியதியை உடைக்கும் அப்புத்தகத்தின் அறிவுரையை சில ஆண்டுகளாகவே ப்ரஷாந்த்தின் தந்தை பின்பற்றி வாழ்கிறார்.

“அடுத்ததாக, உன் கல்வி கம்ப்யூட்டர் சயன்ஸில் என்று தெரிகிறது.”

“கரெக்ட்.”

“எங்கே?”

“பி.எஸ். எம்.எஸ். இரண்டும் ஜியார்ஜியா டெக். ஐந்து வருஷத்தில் முடித்ததும் ‘மேக்னா ஏஐ (ஆர்டிஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ்)’. பக்கத்திலேயே ஹார்பெத் ஆஃபீஸ் பார்க்கில் இருக்கிறது.”

“அது என்ன செய்கிறது?”

“செயற்கை மூளையின் உதவியால் தீர்க்கக்கூடிய எந்த பிரச்சினையையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம்.”

“இப்போது உன் சொந்தப்பிரச்சினை..”

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். நியு ஆர்லியன்ஸில் ஏஏஏஐ (அஸோஸியேஷன் ஃபார் த அட்வான்ஸ்மென்ட் ஆஃப் ஆர்டிஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ்) கான்ஃபரன்ஸ். அதில் ‘மெஷின் லேர்னிங்’ சம்பந்தப்பட்ட என் போஸ்டர். பாஸ்டன் லிங்குவிஸ்டிக்ஸ் சென்டரைச் சேர்ந்த டாக்டர் கமலா குல்கர்னி அதை ஆர்வத்துடன் படித்து, ‘கம்ப்யூட்டரே கதை எழுதிவிடும் போல் இருக்கிறதே!’ என்றாள். ‘அப்படி இல்லை. ஸ்க்ரிப்ட் எழுதுகிறவர்களுக்கு உதவியாக உரையாடல்களில் சில முக்கியமான விவரங்களைப் பிரித்துத் தருவது என் ஆராய்ச்சியின் நோக்கம்’ என்றேன். இன்னும் நிறைய கேள்விகள் கேட்டாள். மொழிவழித் தொடங்கிய எங்கள் தொடர்பு நின்றுவிடாமல் தொடர்ந்தது.”

“அப்புறம்..”

“பட்டம் வாங்கி நான் ‘மேக்னா ஏஐ’யில் சேருவதற்கு முன் பத்து வார இடைவெளி. அதில் ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்காமல் அவளுடைய ‘லாபி’ல் வளையவந்தேன். பேச்சு வழக்கின் தொனியை ஆராய்வது அவள் நோக்கம். பல சமயங்களில் வார்த்தைகளைவிட தொனியில் அர்த்தம் அதிகம் இருக்கும். சொன்னதற்கு எதிரான அர்த்தம் அதில் இருப்பதும் உண்டு.”

“உண்மைதான்.”

“இப்போது.. ‘எனக்கு என்ன குறைச்சல்? நான் நன்றாகத்தானே இருக்கிறேன்.’ இதையே சந்தோஷத்தை, திருப்தியை, அதிருப்தியை, முறையீட்டை, கோபத்தை, வெறுப்பை, அலட்சியத்தை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமாகச் சொல்லலாம். நீயே உளவியலில் படித்து இருப்பாய்.”

“அத்துடன் மொழியில் ஓரளவு எனக்கு ஆர்வம் உண்டு. அதிலும் தமிழின் தொனி மிக ஆழமானது.”

“என்வீட்டில் மலையாளம். ஆங்கிலத்தைவிட அதில் தொனியைப் பலவிதங்களில் வெளிப்படுத்தலாம் என்று அப்பா சொல்வார். ஆனாலும் கமலாவின் கொள்கையின்படி உலக மொழிகள் பலவற்றில் ஒருவித ஒற்றுமை இருக்கிறது. ஹாலிவுட், பாலிவுட், ரஷ்யன் திரைப்படங்கள் அவள் ஆராய்ச்சிக்கு அஸ்திவாரம்.”

“கமலாவின் மேற்பார்வையில்..”

“தொனி ஒற்றுமையை இயந்திரமொழி வழியாக ஆராய முடியும் என்பதை நான் காட்டினேன்.”

‘மனித மொழிகளின் நிச்சயமின்மை அவற்றின் வலிமை. வார்த்தைகளுக்கும் அவற்றைத் தொடுத்து அமைக்கும் வாக்கியங்களுக்கும் நிலையான அர்த்தம் கிடையாது. பலவிதமான மனித அனுபவங்களைக் கோட்டோவியம்போல விவரிக்க அவற்றால்தான் முடியும்’ என்பதை மனதுக்குள்ளேயே வைத்து,

“பத்து வாரங்களுக்குள்.. உனக்கு புத்திகூர்மைதான்.”

“தாங்க்ஸ். அதன் அடிப்படையில் நான் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையை ‘கம்ப்யுடேஷன் அன்ட் லாங்குவேஜ்’ சஞ்சிகைக்கு அனுப்பினோம்.”

“அது..”

“சென்றவாரம் வெளிவந்தது. ஒரு சின்னஞ்சிறு சாதனை என்கிற திருப்தி.”

நொடியில் அனிகா அதைக் கணினித்திரையில் கொண்டுவந்தாள்.

“ம்ம்.. இதில் உன் பெயர் மட்டும்.”

“கமலாவின் விருப்பம்.”

சுருக்கத்தைப் படித்து அவள், “இதன் ஒரு உபயோகம் உடனே தெரிகிறது. இருவரின் முதல்சந்திப்பு முடிந்ததும் அதன் ஒலி வடிவத்தையும் தேவைப்பட்டால் உடல்மொழியையும் ஆராய்ந்து ‘டேட்’ எப்படிப்போனது, அடுத்த சந்திப்பு நடக்குமா என்பதை ‘ஏஐ’யின் முடிவுக்கு விடலாம். இது வர்த்தக சந்திப்புகளுக்கும் பொருந்தும்..”

“நான் சொல்லப்போவது சீரியஸான விஷயம்..”


காலையில் அலுவலகம் வந்தபோது ப்ரஷாந்த்துக்கு உடல் சோர்வு. சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடந்த பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிவந்த போது ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. ‘இன்னும் இரண்டுநாள் இருந்துவிட்டுப் போயேன்!’ என்று அத்தை சொன்னதை அவன் கேட்கவில்லை. ஒன்று, பயிற்சிக்காலத்தில் நீண்ட விடுமுறை மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தை சம்பாதிக்க உதவாது. இரண்டு, அப்படியே தங்கினாலும் நீராவைத் தனியாக சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை. கொண்டாட்டத்தின் மாலை விருந்துக்கு மட்டுமே அவள் வந்தாள். அவனுடன் ஒருசில வார்த்தைகள். அவன் எதிர்பார்த்தது மனம் திறந்த நீண்ட உரையாடல்.

‘புதுவேலை எப்படி? நீரா!’

‘என் திறமைக்கு சவால்.’

‘என் முன்மாதிரியாக நினைக்கும் உன்னிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை.’

‘ஏன்?’

‘ஹட்சன் வேலியில் இருநூற்றி ஐம்பதாயிரம் டாலர். யூ.எஸ்.ஸின் நடுநிலை வருமானத்துக்கு ஐந்து மடங்கு. பிரசவித்த தாய்களின் நன்றிகளையும் சேர்த்துக்கொள்! வாழ்வில் வேறு என்ன வேண்டும்?’

‘வாழ்க்கையின் சில கட்டங்களில் நிச்சயமான சூழலில் இருந்து தைரியமாக வெளியேபோய் அனுபவம் தேட வேண்டும். எனக்கு இன்னும் ஐந்து வயது கூடினால் ‘யோனிஜெனி’ல் கால்வைத்திருக்க மாட்டேன்.’

‘சரி. வசதி குறைந்தவர்கள் பகுதியில் ஒரு மகளிர் மருத்துவகம், பெண்கள் நோய்களைத் தவிர்த்து உடல்நலத்தை வளர்க்க எளிய வழிமுறைகள் – இப்படி ஏதாவது..’

‘நீ புதிதாக ஒரு ‘மெஷன் லேர்னிங்’ முறையை உருவாக்குகிறாய். வியாபாரத்தைப் பெருக்க அது உதவும் என்று தெரிகிறது. ‘மேக்னா ஏஐ’யில் இருந்து பிரிந்து நீயே ஒரு கம்பெனி தொடங்க ஆசை வருமா, இல்லையா? எதிர்காலத்தில் மைக்ரோசாஃப்ட்டோ அமெஸானோ அதை உன்னிடம் இருந்து வாங்கலாம்.’

‘என் கண்டுபிடிப்பை சமுதாயநலனுக்குத்தான் நான் பயன்படுத்துவேன்.’

‘இந்தப் பிரதாபம் இப்போது. நிஜமாகவே அப்படியொரு நிலைமை உருவாகும்போது உன் கதை வேறுவிதமாக இருக்கும். நான் அப்போது சொல்லிக்காட்ட மாட்டேன்.’

உடல் என்ன சொன்னாலும் பழக்கத்தை மாற்றாமல் ப்ரஷாந்த் ஆறாவது மாடிக்குப் படி ஏறினான். சதுரத்தடுப்பு அவனை வரவேற்றது. அவனுடைய (182 செமீ) உடலுக்கு அது போதும். உட்காரவும் எழுந்திருக்கவும் மேஜையில் இருந்து நாற்காலியைப் பின்சுவரில் இடிக்காமல் இழுக்க வேண்டும். அக்குறையை ஈடுசெய்ய ஜன்னல் வழியாகக் கண்ணில்படும் ரேட்னார் ஏரியின் நீலம். நாற்காலியை நகர்த்துமுன், அலைபேசியின் டிங்ங்.

என்னை உடனே சந்திக்க முடியுமா? – போரிஸ் (மஸ்காவ்).

இதோ வருகிறேன் – ப்ரஷ்

முகத்திரை அணிந்து காலியான நடைவழியில் நடந்து திறந்திருந்த அலுவலக அறை முன் நின்றான்.

“வந்து உட்கார்!”

நடுவயதைத் தாண்டி முதுமையைத் தொடாத வயது. ‘மேக்னா ஏஐ’யை ஆரம்பித்த அலெக்ஸ் காங்கின் வழிகாட்டி.

அலெக்ஸ் குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆனதும் அவனுக்கு வலதுகை.

“உன் வாரக்கடைசி எப்படி?”

“சென்ற வாரம் குடும்பத்தினர் ஒன்றுகூடல். இன்றைய தினத்தின் ஆரம்பத்தில் தான் திரும்பிவந்தேன்.”

“முகத்தின் களைப்பைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன விசேஷம்?”

“என் பாட்டியின் தொண்ணூறாவது பிறந்த நாள்.”

“அவள் இன்னும் பல பிறந்தநாள் பார்க்கட்டும்! எப்போது கல்யாணம் என்று உன்னைக் கேட்டு இருப்பாளே?”

“அவள் என்ன, நாற்பது வயதைத் தாண்டிய எல்லாருமே.”

“உன் பதில்?”

“வேலை நிரந்தரம் ஆகட்டும். வருமானம் உயரட்டும்.”

“இரண்டும் நடக்கப்போகிறது. நீ உன் பெண்-தோழியை சம்மதம் கேட்கலாம்.”

‘எப்படி?’ என்று அவன் அதிசயப்படுமுன்,

“நானும் சென்ற வாரம் ஊரில் இல்லை. கஸாக்ஸ்டான் போயிருந்தேன். திரும்பிவந்ததும் ‘கம்ப்யுடேஷன் அன்ட் லாங்குவேஜி’ல் உன் பேப்பரைப் பார்த்தேன். பிரமாதம்!”

“தாங்க்ஸ்.”

“நீயே எல்லா வேலையும் செய்ததாகத் தெரிகிறது.”

“நான் நன்றி தெரிவித்து இருந்தேனே, அந்த டாக்டர் குல்கர்னியின் மேற்பார்வையில் தான் ஆராய்ச்சி நடந்தது. அறிவியலில் முதல் அடி வைத்திருக்கும் எனக்குப் பெருமை தர ஒதுங்கிவிட்டாள்.”

“இருந்தாலும் உன்னால் அதை மேலும் வளர்த்தமுடியும், இல்லையா?”

“அப்படித்தான் நினைக்கிறேன்” என்று ஜாக்கிரதையாகச் சொன்னான்.

“கட்டுரையில் விவரங்கள் அதிகம் இல்லையே.”

“இயற்கை மொழி, இயந்திர மூளை – இரண்டுக்கும் பொதுவான வாசகர்களுக்காகச் சுருக்கமாக எழுதியது. முழு விவரங்களைத் தனியே வலைத்தளத்தில் பிரசுரிக்கலாம் என்பது டாக்டர் குல்கர்னியின் அறிவுரை.”

“இன்னும் நீ அதைச் செய்யவில்லையே” என்று வேகமாகக் கேட்டார்.

“நேரம் கிடைத்ததும்.”

“செய்யாதே!”

“ஏன்?”

“சொல்கிறேன். முதலில் என் கஸாக்ஸ்டான் பயணம். ‘டெக்-ஸ்டாரி’ன் பல பில்லியன் டாலர் மூலதனத்தில் பெட்ரோலியம் தேடி அதை வெளியே கொண்டுவரும் வேலை நடக்கிறது. தேடலின் முதல் கட்டம் ஒலி அலைகளைத் தரைக்கு அடியில் வெவ்வேறு இடங்களில் செலுத்தி அவற்றின் பிரதிபலிப்புகளைக் கணினியில் படித்தல். பிறகு நம்பிக்கை தரும் இடங்களில் கிணறுகள் இறக்கி எண்ணெய் எடுத்தல். இம்முயற்சியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு, சராசரியைவிட அதிக வருமானம். இது இருபத்திநாலு மணிநேர வேலை. அதனால் இரண்டு பன்னிரண்டு மணி ஷிஃப்ட். ஒவ்வொருவருக்கும் தொடர்ந்து இரண்டு வாரம் வேலை. அங்கேயே தங்க வசதி. பிறகு இரண்டு வார விடுமுறை.”

பெட்ரோலியத்துக்கு மக்கள் படும் பாடு!

“சமீபத்தில் சிலர் நிர்வாகத்துக்கு எதிராகச் செயல்படுவதால் பணியாட்களின் தற்செயல் விடுப்புகள் அதிகரித்து இருக்கின்றன. அவ்வப்போது வேலை நிறுத்தம் நிகழலாம் என்கிற அச்சுறுத்தல். ஒன்று சென்ற ஆண்டில் நடந்தது. அதனால், ‘டெக்-ஸ்டாரு’க்குப் பல மில்லியன் டாலர் நஷ்டம். விஷமிக்கள் யார் என்று தெரிந்தால் எதிர் நடவடிக்கை எடுக்கலாம்.”

“அதற்கு விடியோ மானிட்டரிங்.”

“அதில் நிறைய கட்டுப்பாடுகள். தொழிலாளர்கள் கவனமாக, ஜாக்கிரதையாக வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்க மட்டுமே அதைப் பயன்படுத்தலாம். அத்துடன் விடியோக்களில் தேட மனிதர்கள் வேண்டும்.”
சொல்லிமுடித்ததும் அவனை உற்றுப் பார்த்தார். அதன் அர்த்தம்?

“ஒலி அப்படி இல்லை. பணியாளர்கள் தங்கும் விடுதிகள், சாப்பாட்டுக்கூடங்கள், விளையாட்டு அரங்குகள் – எல்லா இடங்களிலும் உரையாடல்களைப் பதிவு செய்யலாம். கஸாக், ரஷ்யன் இரண்டு மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன. வார்த்தைகளை மொழிபெயர்த்து அவற்றின் தொனியையும் சேர்த்து பலருடைய குரல்களைத் தனித்தனியாகப் பகுத்து செயற்கை மூளையால் ஆராய முடியும், இல்லையா?”

“முடியும் என்றுதான் தோன்றுகிறது.”

“வெரி குட்! நீ என்ன செய்யமுடியும் என்று யோசித்துப்பார்!”

யோசனையை ரேட்னார் ஏரியின் நீலத்தைப் பார்த்தபடி ப்ரஷாந்த் செய்தான். கமலா குல்கர்னியின் ஆய்வகத்தில் பத்து வாரங்கள். வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலம். படைப்பு மொழியில் பயிற்சிபெற நிவேதிதா அங்கே வந்திருந்தாள். இருவருக்குமே முதல் ஆழமான உறவு. அது போதாது என்று அவன் பெயரில் தரமான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை. அதற்கு உபயோகம்.. இம்மாதிரி உரையாடல்களைச் சலிக்க.

சே! என்ன வாழ்க்கை.

ஏன்?

போன வாரம் குழந்தையின் ஐந்தாவது பிறந்தநாள். வீட்டுக்குப் போக முடியல.

நான் ஒரு வழி சொல்றேன்.

என்ன?

இப்போ பெட்ரோலியம் என்ன விலை?

போன வருஷத்துக்கு இரட்டை மடங்கு.

நம்ம சம்பளம்?

அது அப்படியே தான்.

ஏன்?


“இது போல உலகின் பல இடங்களில் நடக்கிறது. இயற்கை வளம் நிறைந்த மூன்றாம் உலக நாடு. கனிமங்களை அகழ்ந்தெடுக்கும், இல்லை தினசரி உபயோகிக்கும் பொருட்களை லட்சக் கணக்கில் உற்பத்தி செய்யும் தொழிலகம். கடினமான வேலைகளுக்குக் கூலிச்சம்பளத்தில் ஆயிரக்கணக்கான உள்நாட்டுத் தொழிலாளிகள். ஓரளவு திறமையுடன் வெளிநாட்டு அலுவலர்கள் – பலமடங்கு வருமானத்துடன். அவர்களுக்கு தனிக் குடியிருப்புகள். நமக்கு வாய்த்தது இவ்வளவுதான் என்று பெரும்பாலான தொழிலாளிகள். நிலைமை முன்னேற வேண்டும் என்ற நோக்கில் ஒருசிலர் தூண்டிவிட அவர்கள் அதிகக்கூலிக்கும் ஆபத்து குறைவான சூழலுக்கும் குரல் எழுப்புகிறார்கள். அந்நிய முதலீட்டாளர்கள் முதலில் அலட்சியம் செய்கிறார்கள். வேலைநிறுத்தம் போராட்டம் என்று வரும்போது போலிஸ் நிர்வாகத்தின் பக்கம். அந்த ஒருசிலரை ஆரம்பத்திலேயே அப்புறப்படுத்தி விட்டால்..”

“அதற்கு, தொழிலாளர்களைக் கண்காணிக்க வேண்டும்.”

“வேலையில், இடைநேரங்களில், கூடும் இடங்களில் அவர்கள் மனம்விட்டுப்பேசும் பேச்சில் இருந்து பல விவரங்கள் சேகரிக்கலாம். வார்த்தைகள் அவற்றின் தொனி, இவற்றில் இருந்து நிர்வாகத்துக்கு எதிரான ஆட்களை அடையாளம் காண்பது சுலபம். அவர்கள் குறுக்கீடு இல்லை என்றால் வர்த்தகச் செயல்பாடுகளில் தடங்கல் இராது.”

“இங்கேதான் உன் ஆராய்ச்சிக் கட்டுரை.”

“நான் எதிர்பார்க்காத திருப்பம். பழைய சோவியத் யுனியன் நாட்டில் எரிபொருளை எடுக்கும் ஒரு கம்பெனி ‘மேக்னா ஏஐ’யின் உதவியைக் கேட்டிருக்கிறது. தொழிலகத்தில் அதிருப்தி பரவுவதற்கு முன்பே சலசலப்பைத் தவிர்க்கும் ஒரு செயற்கை மூளையின் அமைப்பு அதை சாதிக்கும் என்பது பாஸின் எண்ணம்.”

“நீ?”

“முடியும், சக்திவாய்ந்த ‘க்ளவுட்’ உதவியில்.”

“ஒரு கேள்வி.”

“என்ன?”

“எண்முறை அடிப்படையிலான ஒலிப்பதிவுகளை அலசி செயற்கை மூளை விவரம் சொல்லட்டும். அது சரியா தவறா என்று ஒரு மேலாளர் கணித்து, நிலைமையை மனிதத்துவ நோக்கில் பார்த்து, குறிப்பிட்ட தொழிலாளர்களுடன் பேசி அவர்கள் குறைகளுக்குத் தீர்வு காண்பது சிறந்த வழி இல்லையா?”

“அப்படிச் செய்வது தோல்வியை ஒப்புக்கொள்வது போல.”

“ஏன்?”

“இப்போது, ஒருவரைப்பற்றிய உளவியல் சோதனைகளின் விவரங்கள் உனக்கு வருகின்றன. அவற்றை வைத்து அவரின் மன ஆரோக்கியத்தை நீ தீர்மானிக்கிறாய்.”

“பலமுறை.”

“இப்பழைய தொழில்நுட்பம் வெறும் கருவி. செயற்கை மூளை பல படிகள் மேலே. அதுவே தரவுகளைத் தரம் பார்த்து, அவற்றின் அடிப்படையில் முடிவு எடுத்து, அதை நிறைவேற்றவும் செய்யும். அதன் பயன் அதைப் பயன்படுத்துகிறவர்களின் புத்திசாலித்தனத்தைப் பொறுத்தது என்று அதன் கையைக்கட்டினால் அது எப்படி செயற்கை மூளை ஆகும்? ஊர்தி போகும் வழியைச் சொல்வது ஜிபிஎஸ். அவ்வழியில் தானாகவே அதை இயக்குவது ‘ஏஐ’.”

“வித்தியாசம் புரிகிறது.”

“நாளை இதுபற்றி ஒரு முக்கியமான கூட்டம்.”

“அதற்குள்ளாகவா?”

“எங்கள் தொழிலில் யோசனை, திட்டம், செயல்படுத்துதல் – எல்லாம் ஒளி வேகத்தில்.”

“நாளைய கூட்டத்தில்..”

“சிஈஓ முதல் நேற்று வந்த நான் வரை, ஏழு பேர். சம்பிரதாய அறிமுகம், முன்னுரைக்கு அடுத்ததாக இன்று நாள் முழுக்க நேரம் செலவழித்துத் தயாரித்த என் உரை. ப்ராஜெக்ட்டின் குறிக்கோள், அதனால் நிறுவனத்தின் லாபம். அதை செய்யத் தேவையான மனித மற்றும் பொருள் வளம். அத்தகவல்களை வைத்து அவர்கள் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வரையலாம்.”

“இக்கட்டுரையில் இருக்கும் விவரம் ‘மேக்னா ஏஐ’யில் சேருவதற்கு முன்பே நீ செய்தது என்பதால், உன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் தலைமைப் பொறுப்பு உனக்குத்தான்.”

அனிகாவின் வார்த்தைகளில் ப்ரஷாந்த்தின் எதிர்காலம் தெரிந்தது.

“பயிற்சி முடிந்ததும் நான் ‘மெஷின் லேர்னிங் சீனியர் சயன்டிஸ்ட்’. ஆண்டுக்கு இருநூறாயிரம் டாலருடன் இரண்டாயிரம் ‘மேக்னா ஏஐ’ பங்குகள். நிறுவனம் விரைவில் தன் பங்குகளைச் சந்தையில் வெளியிடப் போகிறது. அதன் மதிப்பு ஐம்பது டாலரில் ஆரம்பித்து அடுத்த சில ஆண்டுகளில் பலமடங்கு உயரும். முப்பதுக்கு முன்பே நான் மில்லியனேர்.”

கடைசி வாக்கியத்தை அவன் பெருமையுடன் சொல்லாததை அனிகா கவனித்தாள். அதிகப்படி புன்னகையுடன்,
“இத்திட்டத்தில் உனக்குத் தொந்தரவு தரும் விஷயங்கள் ஒருசில இருக்கின்றன. அதனால்தான் நீ என்னைத் தேடி வந்திருக்கிறாய்.”

நீண்டநேர சிந்தனைக்குப்பின் அவன்,

“எவ்வளவு ஆல்க்ரித்ம் இருந்தாலும் ‘ஏஐ’ தவறு செய்ய வாய்ப்புகள். அதனால், ஒருசில நிரபராதிகள் வேலையில் இருந்து தள்ளப்படலாம், இல்லை அநாவசியமாகத் தண்டிக்கப்படலாம்.”

“தடங்கல் இல்லாமல் வேலை நடப்பதற்கு விலை. சரி, அடுத்தது..”

“நீ முன்பு சொன்னது போல் வீட்டு விற்பனை மங்கை, வீடு வாங்க விருப்பம் உள்ள ஒருவர். இருவரிடமும் தொனியை அளவிடும் ஐ-ஃபோன். ஒருவரின் ஆர்வத்தையும் விருப்பத்தையும் மற்றவர் அளந்து மேற்கொண்டு வியாபார நடவடிக்கை எடுக்கலாம். இதில் இருவரும் சமமான மட்டத்தில். எங்கள் செயற்கை மூளை அப்படி இல்லை. அதைச் சொடுக்கும் சாட்டை நிர்வாகத்தின் கையில். தொழிலாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.”

“ரொம்ப சரி.”

“அரசியல் அல்லது சமுதாயவியல் – எந்தக்கோணத்தில் பார்த்தாலும், பேச்சு உரிமை ஜனநாயகத்தின் அஸ்திவாரம். தொனியும் அதில் அடங்கும் இல்லையா?”

“உண்மைதான்.”

“இம்முயற்சி வெற்றி அடைந்ததும் அடுத்த கட்டம், குற்றவியல். மனிதர்களின் உரையாடல்களையும் தொனிகளையும் அலசி எதிர்காலத்தில் இவர்களால் பொது மக்களுக்கு ஆபத்து நேரும் என்று ஒரு சிலரை, முக்கியமாக சிறுபான்மை இனத்தவரை, சமுதாயத்தில் இருந்து விலக்கிவைத்தல். தனிமனிதர்களின் சுதந்திரம் அப்போது என்ன ஆகும்?”

“சரி, நாளைய கூட்டத்தின் ஆரம்பத்திலேயே ப்ராஜெக்ட்டைப் பொறுப்பெடுத்து நடத்த உனக்கு ஒப்புதல் இல்லை என்று நீ அறிவிப்பதாக வைத்துக்கொள்வோம்.”

“நிறுவனத்தின் வணிக ஒப்பந்தத்துக்கு அவசியமானதைச் செய்ய மறுப்பது சின்ன விஷயம் இல்லை.

பயிற்சிக்காலத்தில் இரண்டு மாதம் பாக்கி. அது முடிவதற்குமுன்பே ‘மேக்னா ஏஐ’யில் இருந்து நான் விலக வேண்டும்.”

“இது போன்ற இன்னொரு நிறுவனத்தில் வாய்ப்பு..”

“உடனே கிடைக்காது. சிலகாலம் பல்கலைக்கழகத்திலோ, அதுபோன்ற ஒரு ஆராய்ச்சிக் கூடத்திலோ மாணவன். குறைந்த ஆனால், தேவையான வருமானத்துக்கு.”

“இந்த ப்ராஜெக்ட்.”

“நான் போனால் என்ன? அதை நிறைவேற்ற என்னைப்போல எத்தனையோ பேர். ஏழெட்டு மாதங்கள் தாமதப்படும். என் பங்கு அதில் இல்லை என்கிற ஒரே திருப்தி.”

அந்தத்திருப்தியில், “மறுக்க ஏன் தயக்கம்?”

“இன்றைய உலகில் பணம் ஒரு அளவுகோல். நீராவை எடுத்துக்கொள்வோம். ‘யோனிஜெனு’க்குத் தாவியதில் அவள் வருமானம் இரட்டித்தது ஒரு சாதனை தானே?” அவளுக்கு.

“தொழிலாளர்களின் சுயமரியாதையையும் கட்டுப்பாட்டையும் இந்த ப்ராஜெக்ட் பாதிக்கும். அத்துடன், சமுதாயத்தை வழுக்கும் தடத்தில் இழுத்துப்போகும். இதைக் கைவிடுவதுதான் நியாயம் என்பது உன் எண்ணம். அதைப் பலருக்கு முன்னால் தைரியமாகப் பேசுவதையும் நீ யோசிக்கிறாய்.”

ப்ரஷாந்த் மனத்திரையில் அடுத்த நாளின் உயர்மட்ட சந்திப்பு. அதை ஊகித்த அனிகா அவனுக்குப் பல நொடிகள் கொடுத்தாள். அவளைப் புதிய பாதையில் சிந்திக்கவைத்த ஜெனினா, ஏரன் வரிசையில் இன்னொரு இளைஞன். நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் அவன் மனதில் ஒரு காம்பஸ். அதையும் சேர்த்து அவனை வளர்த்த அவன் பெற்றோர்கள் பெருமைப்பட வேண்டும்.

“நிஜமாகவே இந்த ப்ராஜெக்ட்டில் பங்குகொள்ள மறுத்தால் உனக்கு அது ஒரு பெரும் சாதனை இல்லையா? எத்தனை பேர் அப்படிச் செய்வார்கள்?”

அவன் கவனம் விவாத அறையில் இருந்து அனிகா பக்கம் திரும்பியது.

“உண்மைதான். உயரிய செயலைச் செய்ய அப்படிச் செய்தவரை, அதுவும் நன்கு அறிந்தவர் செய்ததை நினைத்துக் கொண்டால் சுலபம். சிறுவயதில் இருந்தே நான் யாரை உயரத்தில் வைத்துப் பார்த்திருந்தேனோ அவளே எல்லாரும் போகும் பாதைக்கு இறங்கிவிட்டாள். நான் எம்மாத்திரம்? நானும் அவளைப்போல் செய்து, ‘இப்போது நானும் ஒரு மில்லியனேர்’ என்று அவளிடம் பெருமை அடித்துக்கொண்டால் என்ன? என்று மனதில் ஒரு உத்வேகம்.”

நோயாளிகளை மருத்துவம் வாங்கும் வாடிக்கைகளாக நினைக்கும் வர்த்தக நிறுவனங்களின் தொகுதிக்கு நீரா ஆலோசகராகப் போனதின் தாக்கம் இன்னமும் ப்ரஷாந்த்துக்குக் குறையவில்லை. அதிலிருந்து அவனை மீட்க,
“மனம் ஒரு வினோதப் பிராணி. ஒருமுறை அதற்கு ஒப்புதல் இல்லாத காரியத்தைச் செய்தால், அடுத்தமுறை அதேமாதிரி ஒரு நிலைமை உருவாகும்போது அது இடித்துக்கூடக் காட்டாது” என்றாள்.

ப்ரஷாந்த்தின் முகம் அவன் மனம் இரண்டு சாத்தியங்களுக்கு நடுவில் ஊசல் ஆடுவதைக் காட்டியது. அனிகாவின் குறுகியகாலத் தொழில் வாழ்க்கையில் இம்மாதிரி ஒரு பிரச்சினையுடன் யாரும் அவளை அணுகியது இல்லை. அவன் நிலைமையை ஆழ யோசித்தாள். அவன் தீர்மானத்தில் அவனுடைய பெற்றோர்கள் தலையிடமாட்டார்கள் என்று தெரிகிறது. அவன் கொடுத்த விவரங்களில் இருந்து அவனுடைய பெண்-தோழி சின்ன விஷயத்துக்காக உறவை முறிப்பாள் என்றும் தோன்றவில்லை. இவ்விஷயத்தில் அவனே மனமுவந்து முடிவுசெய்ய வேண்டும்.

“உன் அறிவிலும் திறமையிலும் இந்த ப்ராஜெக்ட் முடிய ஆறு மாதங்கள்?”

“முன்னதாகவே முடிந்தாலும் முடியலாம்.”

“நீ சொல்வது போல் அதன் பக்க விளைவுகள் பல காலத்துக்கு. அவை உன் மனசாட்சியை சுடலாம். அதை மில்லியன் டாலரில் கரைப்பது ஒன்றும் பிரமாத காரியம் இல்லை. சாதாரணமாக நடப்பது தான். அதற்குத் தேவை – அந்தப் பணத்தை மனம்விட்டு அனுபவிக்க நிவேதிதாவுக்கும் உனக்கும் ஒரு திட்டம்.”

ப்ரஷாந்த் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி யோசித்தான். சூரியனின் கதிர்கள் தரையில் எங்கும் விழவில்லை. பப்ளிக்ஸ் கடையில் இருந்து பல பைகளைத் தூக்கிக்கொண்டு நடந்த ஒரு பழுப்புநிறக் குடும்பம். சாப்பாட்டுப் பொருட்கள் வாங்கிய மகிழ்ச்சி பெரியவர்களின் முகங்களிலும் குழந்தைகளின் கூச்சலிலும்.

சாந்தமான முகத்துடன் எழுந்தான்.

“உன்னுடன் விவாதித்ததில் என் மனம் தெளிவு அடைந்திருக்கிறது. இரண்டு பாதைகளில் என்ன நடக்கும் என்று தீர்க்கமாகக் காட்டிவிட்டாய். தீர யோசித்து இரவு முடிவதற்குள் தீர்மானிக்கிறேன். தாங்க்ஸ், அனிகா!”

“நான் அதிகம் செய்யவில்லை. உன் முகத்துக்கு எதிரே ஒரு கண்ணாடியை வைத்தேன். நீ ஒரு வித்தியாசமான இளைஞன். நீ என்னைத்தேடி வந்ததில் எனக்கு மிக்க சந்தோஷம். காலையில் எந்நேரம் ஆனாலும் கூப்பிட்டு உன்முடிவைச் சொல்! நட்புமுறையில் எனக்கு அது தெரிந்தே ஆகவேண்டும்.”

“நிச்சயமா.”

வெளிக்கதவு தட்டும் ஒலி. தான் தனியாக இல்லை என்கிற தைரியத்தில்,

“கம் இன்!”

“நீங்கள் பேசி முடித்ததுபோல் இருந்தது. அதனால்..” என்று உள்ளே வந்தவன் மன்னிப்புடன் சொன்னான். முகம் நாற்பதுக்கு இப்பக்கம், அதனால் முழு வழுக்கை கூட அழகாக இருந்தது. அந்நேரத்திலும் அப்பழுக்கற்ற வணிக ஆடை.

‘என் வேலைநாள் முடிந்துவிட்டது. இனி நாளை, அதுவும் உன் வயதினருக்கான மனவியல் மருத்துவர் ஒருவரை விட்னி பரிந்துரைப்பாள்’ இல்லை ‘நீ முதலீட்டு ஆலோசகர் என்றால் என்னுடன் பேசுவதில் உன் நேரம்தான் வீணாகும். என்னிடம் அதிகப்படி பணம் கிடையாது’ என்று அனிகா சொல்வதற்குள்,

“வேலாயுத ரெட்டியார்..” என்று அவன் ஆரம்பித்ததும் அவள் எண்ணம் மாறியது. அவள் தந்தையின் இந்தியப்பெயர் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கப் போகிறது?

“யெஸ்!..” முகத்தில் ஆர்வமும் ஆவலும் வெளிப்பட்டன.

அதை எதிர்பார்த்த அவன் இன்னொரு நாற்காலியைப் பக்கத்தில் இழுத்துப்போட்டு சௌகர்யமாக அமர்ந்தான்.

“அவரும் அவர் தந்தையும் விருதுநகரில் பலசரக்குக்கடை நடத்தியபோது, அதற்கு அடுத்த இடத்தில், என் தந்தையும் தாத்தாவும் வீடுகட்டும் பொருட்கள் விற்றார்களாம். அந்த நட்புறவை வளர்க்க, எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் யூ.எஸ். வந்த எனக்கு ஆசை. இப்போது தான் அதற்கு வேளை வந்தது. உன் தந்தையைத் தேடி அவர் வழியாக, அனிகா! உன்னையும் கண்டுபிடித்தேன். தவறு இல்லையே?”

“நிச்சயமாக இல்லை.”

“என் வணிக அட்டை.”

“சுதாகர் புதுமலை.”

அட்டையில் பெயரை மட்டும் சத்தமாகப் படித்து, அதை எட்டி வரவேற்பு உயர் மேஜைமேல் வைத்தாள்.
சம்பிரதாயத்துக்கு ப்ராஷாந்த்திடமும் ஒன்றை அவன் நீட்டினான்.

“தாங்க்ஸ், மிஸ்டர் புதுமலை, நான் ப்ரஷாந்த்.”

“ஹாய் ப்ரஷாந்த்!”

குரலின் அலட்சிய தொனி, ‘இங்கே உன் வேலை முடிந்துவிட்டது,இல்லையா? இடத்தைக் காலிசெய்!’ என்று அவனைக் கதவுக்கு வெளியே பிடித்துத் தள்ளியது.

சுதாகர் புதுமலை
க்ளவுட்லெஸ் ஸ்கை
மனநலச் சிகிச்சையகங்களின் தொகுதி
பிரதான ஆலோசகர் மற்றும் வர்த்தக நிபுணர்

அட்டையைப் படித்ததும் நின்றிருந்தவன் அனிகாவின் அனுமதிக்குக் காத்திராமல் உட்கார்ந்தான். அலைபேசியின் வலைத்தளத்தில்.. சுதாகர் முன்பு பணியாற்றிய டெனெட் ஹெல்த்கேர் அவசியம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்ததற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பல மில்லியன் டாலர் அபராதம் செலுத்தியிருக்கிறார்கள்.
நடக்கப்போகும் நாடகத்தின் ஸ்க்ரிப்ட் ப்ரஷாந்த்துக்கு உடனே தெரிந்துவிட்டது. அதன் முடிவைப்பற்றியும் அவனுக்கு ஒரு ஊகம்.

“உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இது வெறும் அறிமுக சந்திப்பு மட்டுமில்லை. ஒரு முக்கியமான நிதிப்பரிமாற்றத்துக்காகவும்..” என்று ப்ரஷாந்த்தின் பக்கம் மற்றவன் சந்தேகப் பார்வையை ஓட்டினான்.

அவன் அசைவதாக இல்லை. கதை எதிர்பார்த்தபடி போகிறதா என்று பார்ப்பதிலும் சுவாரசியம் இருக்கிறது. அதைக் கவனித்த அனிகா,

“அவனுக்கு என் நலனில் அக்கறை உண்டு.”

“நாம் மில்லியன் கணக்கில் பேசப்போகிறோம்.”

“மூளையை ஏலம்விட்டால் மில்லியன் அவனுக்கு சில்லறை.”

ப்ரஷாந்த் பக்கம் குறும்புச்சிரிப்பை வீசினாள். அவனும் அதை ஏற்றுக்கொள்வது போல் சத்தம்போட்டுச் சிரித்தான்.

ப்ரஷாந்த் இருப்பது சுதாகருக்குப் பிடிக்காவிட்டாலும் அனிகாவை நெருக்க இதுபோல் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது.

அத்துடன், அவள் சிகிச்சையகத்தை வாங்குவதில் ‘ரி-ஃப்ரெஷ் மென்டல் ஹெல்த்’ மும்முரமாக இருப்பதாகத் தகவல்.

“இதில் உன் வருமானத்தின் ஆண்டுக்கணக்கு.”

அவன் நீட்டிய அச்சிட்ட காகிதத்தை அனிகா மேலோட்டமாகப் பார்த்தாள். எப்படி கிடைத்தது என்று கேட்கவில்லை.

மணிக்கு சராசரி 120 டாலர் $250 000
விட்னியின் சம்பளம் $60 000
கட்டடத்தின் அடமானக்கடன் $40 000
மின்சாரம் தொலைபேசி பிற செலவுகள் $50 000

“ஏறக்குறைய சரி தான்.”

“நீ சிகிச்சைக்கு இன்ஷுரன்ஸ் ஏற்பது கிடையாது.”

“அவர்களிடம் பணம் வாங்குவது தொல்லைபிடித்த வேலை. வசதி உள்ளவர்களுக்குக் கவலை இல்லை. இன்ஷுரன்ஸ் இல்லாதவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கு வைத்திருக்கும் பணத்தைக்கொடு என்று நான் ஒருபோதும் கேட்டது கிடையாது.”

“இந்த இடம் உனக்கு சொந்தம்.”

“எனக்கு முன் இந்த இடத்தில் எந்த வியாபாரமும் நிலைத்து நிற்காததால் என் தந்தை இதைக் கடனில் நல்ல விலைக்கு வாங்கினார்.”

தலையை உயர்த்தி அதிகாரக் குரலில், “உன் தகுதிக்கும் திறமைக்கும் நூறாயிரம் மிகக்குறைச்சல், அனிகா!”

அவள் பதில்சொல்வதற்குள்,

“என் எண்ணமும் அது தான். அவசரப் பிரச்சினையை நான் சொன்ன மாத்திரத்தில் அனிகா என் குழப்பத்தைத் தீர்த்துவிட்டாள். ஒரு ஆண்டுக்கு கால் மில்லியன் சரியாக இருக்கும்” என்று ப்ரஷாந்த் தலையை ஆட்டிச் சொன்னான்.

“நாம் அதைச் சாதிக்கப்போகிறோம்” என்றான் சுதாகர் ப்ரஷாந்ததைப் பார்த்து. அனிகா பக்கம் திரும்பி, “மனநல சிகிச்சையின் அவசியத்தை சமீபத்தில் மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். உன் சேவைக்கு கிராக்கி வந்திருக்குமே.”

“கவனித்தேன்.”

மனநல மருத்துவத்துக்கு பொற்காலம்

கோவிட் வைரஸின் தாக்குதலால் பொருளாதாரம் தடைப்பட்டது, சமூக உறவுகள் அறுபட்டன. அதனால், மக்களின் விரக்தியும் ஆழ்துயரமும் அதிகரித்து இருக்கின்றன.


குறிப்பிட்ட கெடுவுக்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தினால் மன இறுக்கமும் தூக்கமின்மையும். பணியாளர்களின் மனம் சிதையாமல் இருக்க ஸ்டார்பக்ஸ், ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்கள் மனநல சிகிச்சையகங்களின் உதவியை நாடுகின்றன.

எங்கும் பரவலாக இருக்கும் நீல ஒளியின் பாதிப்பால் தூக்கமின்மை பெருகிவருகிறது. நிலையற்ற எதிர்காலத்தினால் கவலை, ஒரே காரியத்தைத் திரும்பத்திரும்பச் செய்வதால் மனச்சோர்வு. இரண்டும் பலரை அல்கஹால் மற்றும் பிற போதைப்பொருளுக்கு அழைத்துப்போகின்றன. வலைத்தளத்தில் அலைதலும், காரணம் இல்லாத அரசியல் கோபமும் புதிய போதைகள். அவற்றில் இருந்து விடுபட நடத்தையை மாற்றும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

குழந்தைப்பருவத்தில் இருந்தே கணத்துக்கு கணம் மாறும் திரையைப் பார்த்துப்பழகிய சிறுவர்களுக்கு கவனக்குறைவு-பரபரப்பு. ஆசிரியர்களுக்கு அவர்களால் தொல்லை.

அண்மையில் தொலைவழி மருத்துவ சந்திப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதன் முடிவில் மனமாற்ற மருந்துகளைப் பரிந்துரைக்க தற்போது அரசின் தடை இல்லை.

போட்டி விளையாட்டிலும் ஆட்டக்காரர்களின் நிதானத்தை அதிகரிக்க அவற்றை நிர்வகிக்கும் கூட்டமைப்புகள் வருமானத்தின் ஒரு பகுதியைச் செலவிடுகின்றன.

இக்காரணங்களால் மனநல சிகிச்சை ‘ப்ரைவேட் ஈக்விடி’ நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆண்டு வருமானத்தின் பத்து மடங்கைக்கூட கொடுத்து ஒரு ப்ராக்டிஸை வாங்க அவை தயாராக இருக்கின்றன. அதன் மதிப்பு ஒருசில ஆண்டுகளில் இன்னும் பெருகும் என்கிற எதிர்பார்ப்பில்.

“‘க்ளவுட்லெஸ் ஸ்கை’ என்ற குடையின் கீழே நாடெங்கும் நூற்றுக்கும் அதிகமான மனநல சிகிச்சையகங்கள். சில சிறியவை, சிலவற்றில் ஐந்தாறு மருத்துவர்கள், இன்னும் சில படுக்கைகளுடன் மருத்துவ மனைகள். மொத்தம் இரண்டாயிரம் மனநிலை சிகிச்சையாளர்கள். ஆண்டுக்கு ஒரு மில்லியன் நோயாளிகள்.”

“சராசரியாக, ஒரு மருத்துவருக்கு ஐநூறு வாடிக்கைகள். ம்ம் கொடுத்துவைத்தவர்கள். என்னைப்போல் இல்லை.”
“நான்கு ஆண்டுகளில் நாங்கள் மூன்று மடங்காக வளர்ந்திருக்கிறோம். அதைக் கவனித்த ‘க்ரோயிங் சர்க்ல் காபிடல்’ எங்களுக்கு அறுபது மில்லியன் டாலர் வழங்கியிருக்கிறது.”

“அவர்களுக்கு என்ன தாராளம்!”

“இந்த ஊரிலேயே போதைமருந்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கும் இரண்டு இல்லங்கள் எங்களுக்கு சொந்தம். அவற்றின் பெயர் மாறாததால் உனக்குத் தெரிந்திராது.”

தந்தைவழி நட்பு என்று ஆரம்பித்த உரையாடல் எங்கோ போவதாக அனிகா வியப்பதற்குள், “முக்கியமான கட்டத்துக்கு வந்துவிட்டோம். உன் சிகிச்சையகம் ‘க்ளவுட்லெஸ் ஸ்கை’யுடன் சேர்ந்தால் நாம் இருவரும் பயன் அடையலாம். எங்கள் கணிப்பில் இதன் மதிப்பு அரை மில்லியன் டாலர்.”

“இதற்கா?”

“உனக்கு இதன் முழுமதிப்பும் தெரியவில்லை. ஒன்று, நடந்துபோகும் பலரின் பார்வையில் இது இருக்கிறது.”

“நான்கூட அதனால்தான் இங்கே நுழைந்தேன்.”

சுதாகர் ப்ரஷாந்த்தை நன்றியுடன் பார்த்தான்.

“இரண்டு, இந்த வட்டாரத்தில் உனக்கு நல்ல பெயர். கூக்ல் ரிவ்யுவில் கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திரம்.”

“என் சிக்கலான பிரச்சினையை அனிகா புரிந்துகொண்டு அதற்கான முடிவெடுக்கும் வழியைக் காட்டினாள் என்று நான் ஒரு நீண்ட ரிவ்யு எழுதப்போகிறேன்” என்றான் ப்ரஷாந்த்.

“மூன்று, உனக்கு ஆதுரமான குரல். தொலைகாணலிலேயே நீ பலருடன் உரையாடி மருந்துச்சீட்டுகளை எழுத முடியும்.”

அனிகா, ‘அப்படியா?’ என்பதுபோல் கண்களை விரித்தாள்.

“சிகிச்சையகத்தை நடத்த க்ளவுட்லெஸ் ஸ்கை உனக்கு சன்மானம் தரும். ப்ரஷாந்த் சொன்னது போல் கால் மில்லியன். இது ஆரம்பம். வியாபாரத்தைப் பெருக்கி வெற்றிகரமாகச் செயல்பட எல்லா கட்டங்களிலும் துணைநிற்போம்.

நோயாளிகளைக் கவனிப்பது மட்டுமே உன் கடமை. அவர்களுக்கும் அதனால் திருப்தி.”

“இப்போதும் அப்படித்தான் நடக்கிறது.”

அதைக் காதில் போடாமல் சுதாகர் எதிர்காலத்திட்டத்தை உருவாக்கினான்.

“விட்னி இனி அவசியம் இல்லை. இங்கே இன்னொரு ஆலோசக அறை. உனக்கு உதவியாக விட்னியின் சம்பளத்தில் ஒரு சிகிச்சையாளர். பத்து நிமிடங்களுக்கு ஒருவர் என்று நோயாளிகளை வரிசையாக அனுப்புவதும், அவர்களிடம் பணம் வாங்குவதும் எங்கள் பொறுப்பு. உனக்கு அந்தக் கவலை இராது.”

சுதாகரின் கடைசி ஆயுதம்.

“இருபது ஆண்டுகள் நீ தனியாக இந்த சிகிச்சையகத்தை நிர்வகிப்பதற்கும் எங்களுடன் கூட்டாக நடத்துவதற்கும் வித்தியாசம்.” அலைபேசியில் விரல்களை ஓட்டி அவளிடம் காட்டினான். நான்கு அதைத்தொடர்ந்து ஆறு இலக்கங்கள்.

“இந்தப்பணத்தை எப்படியெல்லாம் செலவழிக்கலாம் என்பது தான் உன் வாழ்க்கைப் பிரச்சினையாக இருக்கும்.”

“எங்கே? என்னிடம் காட்டு பார்க்கலாம்!” என்றான் ப்ரஷாந்த். “அனிகா! என் பிரச்சினையின் எல்லா பரிமாணங்களையும் புரிந்துகொண்டு எனக்கு ஆலோசனை சொல்ல உனக்கு ஒருமணிக்கு மேல் ஆகிவிட்டது. நீ இவர்களுடன் சேர்ந்தால்.. பத்தே நிமிடம். நேரில் பார்க்க வேண்டும் என்பதுகூட இல்லை. வேலையில் பிரச்சினையா? உடனே ‘க்ஸனாக்ஸ்’ இல்லை ‘ப்ரோஸாக்’. இவர்கள் எனக்கு இருநூற்றியைம்பது டாலர் பில் அனுப்பிவிடுவார்கள். நீ டாலர் மழையில் நனையலாம்.”

அனிகா அவனை உற்றுப்பார்த்தாள். ப்ரஷாந்த்தை ஒரு கையால் ஒதுக்கித்தள்ளி அவளை அதிகம் யோசிக்கவிடாமல்,
“அனிகா! நீ என்ன நினைக்கிறாய்?” என்று அவள் கவனத்தைத் தன்பக்கம் சுதாகர் திருப்பினான்.

அன்றைய தினம் அனிகாவின் மனக்கண்ணில் வேகமாக நகர்ந்தது – ஜெனினா, ஏரன், … ஜான். ப்ரஷாந்த்.

அநாவசியமாக இயற்கை வளங்களை விரயம் செய்யாமல்.. இந்த உலகம் இன்னும் இருபது ஆண்டுகள் இருந்தால்..
கையால் துணி துவைத்து, கையில் இருக்கும் சாமான்களை வைத்து தினம் சமைத்து, கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்க்கு ஒத்தாசை செய்து..

மனதுக்கு ஒப்புதல் இல்லாத காரியத்தைச் செய்யாமல்..

அவள் முகத்தில் மெதுவாக ஒரு பரவசப்புன்னகை நெளிந்தது. அது சம்மதத்தின் அறிகுறியாக நினைத்து சுதாகர்,
“நாளையே கையெழுத்திடலாம்” என்றான்.

புன்னகையை மாற்றாமல் அனிகா ப்ரஷாந்த்தின் பக்கம் திரும்பினாள்.

“ப்ரஷாந்த்! நீ முதலில். உன் தீர்மானத்தைச் சொல்! காலை வரை காத்திருக்க எனக்குப் பொறுமை இல்லை.”

அதேபோன்ற விரிந்த புன்னகையுடன் அவன் ஆள்காட்டி விரலை ஆட்டினான்.

“ஊகும்! நீ முதலில். உன் முடிவைக் கேட்க சுதாகர் ஆவலுடன் காத்திருக்கிறான்.”

உருக்கமான குரலில் தொடர்ந்தான்.

“இனிமேல் நீ தான் என் ஆதர்ச அனிகா அக்கா.”

  • நிஜமான ‘ப்ரஷாந்த்’துக்கு –

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.