நீலமலைக் கள்ளன்

This entry is part 8 of 9 in the series எங்கிருந்தோ

“ப்ரளய பயோதி ஜலே, த்ருவானசி வேதம், விஹில வஹித்ர சரித்ரம் அகேதம், கேசவா த்ருத மீன சரீர ஜய ஜகதீச ஹரே”

புவனங்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக விளங்கும் புவனேஸ்வருக்கு, உங்களை பத்மாவதி என்றும், ஜெயா என்றும் அழைக்கப்படும் நான் அஷ்டபதியின் தசாவதாரப் பாடலுடன் வரவேற்கிறேன். கீத கோவிந்தம் என்ற அஷ்டபதியைப் பாடிய ஜயதேவரின் மனைவி நான். கலைகளில் நான் அவரது உற்ற துணைவி. பாடலும், ஆடலும், பக்தியுமான வாழ்க்கை எங்களுடையது.

எங்கள் மாநிலத்தில் இன்றுவரை ஜாதகங்களை ஓலைகளில் தான் எழுதுகிறோம். ஒரு நாள் ஓலைச் சுவடியில் வழக்கம் போல ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் என் கணவர். தன் தலையில் தானே அடித்துக் கொண்டு சுவடியில் உள்ளதை ஆணியால் துளையிட்டார். “எண்ணை எடுத்து வைத்திருக்கிறேன். குளித்து சாப்பிட்ட பிறகு எழுதலாம்.” என்று சொன்னேன். குளித்து விட்டு வந்து மீண்டும் எழுத உட்கார்ந்து விட்டார். கடிந்து எழுப்பி உணவினை அளித்தேன்; சிறிது வெளியில் போய் வருகிறேன் என்று சென்றவர் உடனே திரும்பி வந்து உணவு தருமாறு கேட்டார். எனக்கு ஆச்சர்யமாகி விட்டது. “பசிக்கிறதா என்ன? இப்போது தானே சாப்பிடீர்கள்?” என்றேன். ‘என்ன சொல்கிறாய்? நான் இப்போது சாப்பிட்டேனா?’ என்று பேசிக்கொண்டே திரும்பியவர் அந்தச் சுவடியைப் பார்த்தார். ‘நான் அடித்ததை நீ மாற்றி எழுதினாயா?’ என்றார். “நீங்கள் தானே குளித்து வந்த பிறகு உடனே எழுதினீர்கள். நான் கட்டாயப்படுத்தி அல்லவா சாப்பாடு கொடுத்தேன்?” என்றேன். கண்களில் நீர் மல்க அந்தச் சுவடியைப் படிக்கச் சொன்னார். ராதையின் கால்களில் கரம் பதித்து கண்ணன் அமர்ந்திருந்த அன்பைச் சொன்ன கவிதை அது. ‘ஜெயா, நான் உன் பாதங்களில் விழுகிறேன். ராதையின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணன் கீழே இருப்பானா என்று என்னையே நொந்து கொண்டு அந்த வரிகளை நான் அழித்தேன். ஆனால், அந்த ஜகன்னாதன் தானே வந்து நான் அடித்ததை மாற்றி எழுதி, உன் கைகளால் உணவினையும் எடுத்துக் கொண்டிருக்கிறான். என்னை விட தூய பக்தி உன்னுடையது.’

பக்தி, இலக்கியம், சிற்பக்கலை, கட்டிடக் கலை. சித்திரக் கலை, ஆடற் கலை எதைச் சொல்ல எதை விட? சென்னை, தில்லி போன்ற மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிதான புவனேஷ்வரில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத கோயில் கட்டுமானங்கள் நடந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு மிஞ்சியிருக்கும் 500 கோயில்களில் முந்நூற்றிலாவது வழிபாடுகள் நடை பெறுகின்றன. பல கோயில்களில் சிவனே முக்கிய தெய்வம். ஆனால், சக்திக்கும், விஷ்ணுவிற்கும், சூரியனுக்கும் அருமையான கோயில்களும் உள்ளன. எங்கள் கோயில்களில் ரேகா விமானங்கள் பிரசித்தி பெற்றவை. நேர்க்கோட்டில் புடைப்பாக காணப்படுவதை ரேகா விமானங்கள் என்போம்.

பகவான் கண்ணன் ஒரு வேடனின் அம்பு பட்டு இறந்ததை நாம் படித்திருப்போம். அர்ஜுனனிடம் தன் இதயத்தை ஒரு கட்டையில் பிணைத்து அரபிக் கடலில் விட்டுவிடுமாறு கண்ணன் சொல்கிறார். அந்த இதயம் கடல் நீரில் பயணித்து இந்தியாவின் மேலைக் கடலிலிருந்து வங்காள விரிகுடாவிற்கு வந்து பூரியின் கடற்கரையில் ஒதுங்கியது. ஜரா என்ற அந்த வேடன், கண்ணனின் மேல் அம்பு எய்தவன், ஷபாரா என்ற மலைவாழ் பழங்குடி இனத்தில் விஷ்வ வாசு என்ற பெயரில் பிறந்து, அந்த இதயத்தைக் கண்டெடுத்து ‘நீல மாதவன்’ என வழிபட்டு வந்தான். ஸ்கந்த புராணத்தின் கூற்றுப்படி அரசன் இந்த்ராத்யும்னா ‘நீல மாதவனுக்கு’ ஆலயம் அமைக்க நினைத்த போது “தான் நான்கு வடிவத்தில், அதாவது, பலராமர், ஜகன்னாதன், சுபத்ரா, சுதர்சனம் என்று அங்கு எழப்போவதாக” கண்ணனின் வாக்கு வந்தது. சோடகங்கா வம்ச அரசனான அனந்தவர்மன் இதன் முக்கியக் கோயிலைக் கட்டியவன். கடற்கரையின் சமீபத்தில் இருந்த இருபதடி உயர சிறிய நீலக் குன்றின் மேல் 22 படிகளுடன் நான்கு வாயில்களுடன் இன்றைய பூரி ஜகன்னாதரின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பல சிறப்பம்சங்கள். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் கலை வண்ணமே’ என்று காலத்தால் அழியாத அந்தப் பாடல் காட்டும் உறவின் பெருமை, இந்தக் கோயில். இரு அண்ணன்மார்களும் தங்கள் தங்கையைக் கொண்டாடும் இடமிது. 214 அடியில் பூரியின் மிக உயரமான, பெரிதாக உள்ள திருக்கண்ணபுரி 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பூரண பூரியாக இதை அரசர் பீம தேவா 1198-ல் உருவாக்கினார். இதை நவீன பூரியாக்கியவர் ராமசந்த்ரா2. இந்தக் கோயிலின் மீது பல படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. மராத்தியர்கள், மொகலாயர்கள், பிரிட்டிஷார் பதினெட்டுத் தடவைகளுக்கும் மேலாக இதை சிதைத்துள்ளனர். ஔரங்கசேப், மறு உத்தரவு தரும் வரை இந்தக் கோயிலை மூட வேண்டுமென பலவந்தப்படுத்தியுள்ளார். கட்டாயமாக முஸ்லீமாக மதம்மாற்றப்பட்ட ராமசந்திர தேவா எனும் அரசர் மங்கையர்க்கரசி போல, முகம் மட்டும் கொண்ட சிறு உற்சவரைச் செய்து வழிபட்டு வந்திருக்கிறார். இதற்கு சிம்ம, யானை, குதிரை, புலி என்ற நான்கு வாயில்கள் உள்ளன.

பலராமர், க்ருஷ்ணன், சுபத்திரை மூவரும் இந்தக் கோயிலில் அருள் பாலிக்கிறார்கள். மூவரின் சிலைகளும் வேப்ப மரத்தாலானவை. கண்கள் மிகப் பெரிதாகக் காணப்படும்.

தேயுலாவினுள் ரத்ன பீடத்தில் முக்கோண தெய்வங்களாக இவர்கள் காட்சியளிக்கிறார்கள். ஜக்மோஹனா (முன் தாழ்வாரம்), நாத மண்டபம், போக (ப்ரசாத) மண்டபம் இருக்கின்றன. எப்போதும் நிழல் விழாத வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது; இந்த விஞ்ஞானத்தையும் இன்றுவரை அறிவாரில்லை.

எட்டு உலோகங்களின் கலவையான நீல சக்கிரம், கொடி மரத்தின் மேலே அமைந்துள்ளது. உள்ளே மூர்த்தியுடன் இருக்கும் சுதர்சனம் வேறு வகையான சக்கிரமாகும். ஒவ்வொரு நாளும் நீலசக்கிரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. எந்த இயந்திரங்களையும் பயன்படுத்தாமல் சுமார் 65 மீட்டர் உயரமேறி தினமும் உச்சியில் கட்டப்படும் இந்தக் கொடி காற்றின் எதிர் திசையில் பறக்கிறது. இதற்கான அறிவியல் உண்மை இன்றுவரை புரிபடவில்லை. கோயிலைச் சுற்றி பறவைகள் பறப்பதில்லை. சிங்க நுழைவாயில் வழியே உள் நுழைந்தவுடன் கடல் ஒலி கேட்காது. (ஒரு பயணி சொன்னார்: உள் நுழையும் கூட்டம் போடும் சத்தத்தில், ஸ்ரீ க்ருஷ்ண பகவானே கூப்பிட்டாலும் கேட்காது!) தரிசனம் முடித்து திரும்பும்போதுதான் கடலொலி கேட்கும். மிகப் பெரிய சமையல் கூடத்தில் பழமையான முறையில் மண் கலங்களில் உணவு சமைக்கப்படுகிறது. 58 வகைப் பதார்த்தங்களை நாள் முழுதும் செய்கிறார்கள். அந்தச் சமையல் மஹாலக்ஷ்மியின் மேற் பார்வையில் நடப்பதாக நம்பப் படுகிறது. விறகடுப்பின் மேலே ஏழு பானைகள் அடுக்கப்பட்டு உணவு தயாராகிறது. மேலே இருக்கும் கலத்தின் பதார்த்தம் முதலில் வெந்து விடுகிறது. அருண ஸ்தம்பம் என அழைக்கப்படும் உயர்ந்த ஒற்றைக்கல் தூண் முக்கிய வாயிலில் காணப்படுகிறது. அதன் உச்சியில் சூரியனின் தேரோட்டியான அருணனின் சிலையைப் பார்க்கலாம். இந்தத் தூணை கொனாரக்கிலிருந்து இங்கு எடுத்து வந்து நிறுவியிருக்கிறார்கள்.

இந்தக் கோயிலின் மற்றொரு வியப்பான சிறப்பம்சம் மூன்று தெய்வ உருவங்களும் 12 அல்லது 19 வருடங்களுக்கொரு முறை மாற்றப்படும், ‘நப களேபர’ என்றழைக்கப்படும், ‘ப்ரும்ம பரிவர்த்தன்’ நிகழ்ச்சி. பழைய சிலைகளிலிருந்து புது சிலைகளுக்கு ஆன்மாவை மாற்றும் செயல். இது நடை பெறும் சமயத்தில் ஊரில் எங்கும் விளக்குகள் அணைக்கப்பட்டுவிடும். அகற்றப்படும் மூன்று சிலைகளும், ஒன்றின் மேல் ஒன்றாக ‘கோயில வைகுந்தா’ என்ற இடத்தில் புதைக்கப்படுகின்றன. புதிய சிலைகளுக்கான வேப்ப மரங்களைத் தெரிவு செய்யும் பாணஜெக யாத்திரையை குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே செய்வார்கள். அந்த வேப்ப மரங்களுக்கும் குறிப்பிட்ட லக்ஷணங்கள் இருக்க வேண்டும்.

பூரியின் மூன்று தெய்வங்களும், ஆண்டு தோறும் ஆடி மாத சுக்ல பக்ஷ (வளர் பிறை) துவிதியை (இரண்டாம் நாள்) அன்று ரதங்களில் ஊர்வலம் வருவார்கள். மூன்று தேர்களுக்கும் பெயர்கள் உண்டு. த்வாரபாடலானா என்ற 42 அடி உயரமுள்ள இந்தத் தேரில் 12 சக்கரங்கள் இருக்கின்றன; அதில் சுபத்ரா தேவி வருகிறார். அவருடைய இரதம் என்று அடையாளம் காட்டும் வண்ணம் சிவப்பு மற்றும் கருப்புத் துணிகளால் விதானங்களும், பக்கவாட்டுச் சீலைகளும் அமைக்கிறார்கள். தாளத்வஜா என்றழைக்கப்படும் தேர் பலராமருடையது 14 சக்கரங்கள் உள்ள இந்தத் தேரின் உயரம் 43 அடிகள்; சிவப்பு, பச்சை நிறங்களில் இந்தத் தேரின் விதானங்களும், பக்க வாட்டு திரைகளும் அமைக்கப்படுகின்றன. 16 சக்கரங்கள், மஞ்சள், சிவப்பு விதானங்கள், 44 அடி உயரம் என்ற கம்பீரத் தேரான நந்திகோஷில் ஜகன்னாதர் ஊர்வலம் செல்கிறார். இந்த மூன்று தேர்களும் மௌசி மாதாவின் கோவில்களுக்குச் செல்வதற்காக, மூர்த்திகளை ஆற்றங்கரை வரை அழைத்துச் செல்லும். பின்னர் அங்கிருந்து படகுகளில் தெய்வ உருவங்கள் மறுகரைக்கு எடுத்துச் செல்லப்படும். அந்தக் கரையிலும் இதைப் போலவே மூன்று ரதங்கள் இருக்கும். அதில் அமர்ந்து அவர்கள் மௌசி மாதா ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுவிட்டு பின்னர் ஆற்றங்கரைக்கு வருவார்கள்; மீண்டும், படகிலும், தேரிலும் பயணித்து தங்கள் கோயிலை அடைவார்கள்.

இரதங்கள் அனைத்தும் வேப்ப மரங்களால் செய்யப்பட்டு இணையுமிடங்களில் இரும்பும், வெண்கலமும் பயன்படுத்தப் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேர்கள் புதிதாகச் செய்யப்படுகின்றன. வண்ணக் கோலத் திருவிழா இது. எங்கிருந்தெல்லாமோ வந்து இந்த உற்சவத்தை மக்கள் கண்டு களிக்கிறார்கள், பாடி மகிழ்கிறார்கள், பக்தியில் உருகுகிறார்கள். ஆதி சங்கரரின் நான்கு முதன்மைச் சீடர்களில் ஒருவரான கோவர்த்தன் இங்கே அத்வைத பீடம் (சங்கர மடம்) அமைத்தார். ஆதி சங்கரர், இராமானுஜர் போன்ற ஞான குருக்களும் இங்கே வழிபட்டுள்ளனர்.

லிங்கராஜா கோயில், புவனேஷ்வரில் பார்க்க வேண்டிய ஒன்று. 11ம் நூற்றாண்டில் 180 அடி உயர விமானத்துடன் கட்டப்பட்ட இதில் சுயம்புவான எட்டு அடி அகல லிங்கம் காணப்படுகிறது. கோயில் வளாகத்தினுள் 150 சிறு கோயில்கள் உள்ளன. கச்சிதமாகத் திட்டமிட்டு, வளைவுகளைச் சரியாகப் பொருத்தி, வியக்க வைக்கும் கட்டிடக் கலை நுட்பத்தில் கோயில்கள் அமைத்து, அதி நுட்ப வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்களை விமானந்தோறும், வெளிக் கோட்டங்களிலும் அமைத்த சோமவம்சி மன்னர்களின் பக்திக்கும், நுண்ணறிவிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக லிங்கராஜா கோயில் அமைந்திருக்கிறது. ராஜா ராணி கோயில், அனந்தவாசுதேவர் கோயில், (மிகப் பெரிய சமையலறை உள்ளது) ப்ரும்மேஸ்வரா கோயில், சத்ருகனேஸ்வரர் கோயில், பரசுராமேஸ்வர் கோயில், முக்தேஸ்வர் கோயில் என்று கலையம்சத்துடன் தெய்வீகம் கமழும் பல கோயில்கள் இங்கே இருக்கின்றன. 9ம் நூற்றாண்டில் வட்ட வடிவில் கட்டப்பட்ட மேற்கூரையற்ற 64 யோகினி கோயில் இங்கே உள்ளது. பௌமாகாரா வம்சத்தினர் தாந்திரீக வழிபாடுகள் செய்தவர்கள்.

கோபிநாத் மொஹந்தி, மூர்த்தி தேவி, பிரதிபா ராய், சச்சிதானந்த ரௌத்ரி, சீதாகாந்த் மொஹாபத்ரா இந்த மாநிலம் பெற்றெடுத்த ஞானபீட விருதாளர்கள். கேளு சரண் மொஹாபத்ரா, ரகு நாத் ஆகியோர் ஈடற்ற கலைஞர்கள். சோனால் மான்சிங், சித்ரா கிருஷ்ணமூர்த்தி புகழ் பெற்ற ஒடிசி நாட்டியக் கலைஞர்கள். மரம், கல், மண், வெள்ளி ஆகியவற்றில் நாங்கள் சிறந்த கலைப்பொருட்களை படைக்கிறோம். சுதர்சன் பட்நாயக் உலகப் புகழ் பெற்ற மண் சிற்பி. எங்கள் படசித்ரா கவராத மனிதர்களே இல்லை. கொனாரக் கோயிலுக்கு அடுத்த இதழில் பயணிப்போம்.

உலகப் புகழ் பெற்ற ரஸகுல்லா, சக்தி வழிபாடு, இசை இவற்றிலெல்லாம் நாங்கள் வங்கர்களுக்குச் சளைத்தவர்களில்லை. தமிழ் நாட்டில் அரசு முதன்மைச் செயலாளர்களாக பல ஒடிசியர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.

Series Navigation<< ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும்எங்கிருந்தோ—இறுதிப் பகுதி >>

One Reply to “நீலமலைக் கள்ளன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.