சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்

‘கண்டனன் நாயகன் தன்னை, கண்ணுறா,
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான்,
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன், எழுந்து போய்த் தமரைக் கூடினான்.’
‘மூக்கு இலா முகம்’ என்று முனிவர்களும் அமரர்களும்
நோக்குவார் நோக்காமை, நுன் கணையால் என் கழுத்தை
நீக்குவாய்: நீக்கியபின், நெடுந்தலையைக் கருங்கடலுள்
போக்குவாய்; இது நின்னை வேண்டுகின்ற பொருள்’ என்றான்.

கம்பன் தன் அருங்காப்பியத்தில் கும்பகர்ணன் சொல்வதாக மேற்கூறிய இரு பாடல்களைக் காட்டுகிறார். சுக்ரீவன்- கும்பகர்ணப் போரில் முன்னவன், பின்னவனின் மூக்கையும், செவியையும் கடித்து பங்கம் செய்துவிடுகிறான். பின்னரும் நடக்கும் யுத்தத்தில் தன் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டும் கவலையுறாத கும்பன், தோல்வி நிச்சயம் என்ற தருணத்தில் ‘என் உடல் பாகங்களற்றுப் போய்விட்டது; ஆனாலும், குறைபட்ட நாசியோடும், செவியோடும் பிறர் நகைக்கும் விதத்தில் என்னை யாரும் பார்க்க வேண்டாம்; என் கழுத்தை நீக்கி கடலுள் என் தலையைப் புதைத்துவிடு, இராமா என்று வேண்டுகிறான்.

பண்டைக் காலத்திலிருந்து உறுப்புச் சிதைவு மனிதனின் மிகப் பெரும் வலியாக, அவமானமாக இருந்திருக்கிறது. சூர்ப்பணகையின் சினம் அவள் மூக்கறுந்ததால்தானே? உருவமோ, உருவம் கொண்டுள்ள சிலைகளோ, உருவப்படங்களோ அழிப்பிற்கு ஆட்பட்டு வந்திருக்கின்றன.

மார்ச், 1774-ல் கேப்டன் குக் தலைமையில் பயணித்த ‘ரிசல்யூஷன்’ மற்றும் ‘அட்வெஞ்சர்’ கப்பல்கள் தென் பசிபிக் கடலில் ஈஸ்டர் தீவுகளுக்கு வந்தன. தோட்டப் பயிர்களாலும், மீன்பிடித்தலாலும் தங்கள் வாழ்க்கையை பேணிக்கொண்டிருந்த ரபா நூயி (Rapa Nui) பாலினேசிய தீவுவாசிகளிடமிருந்து, இந்தக் கடலோடிகள் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டனர். இந்தத் தனிப்பட்ட தீவுகளுக்குப் பயணிக்கும் மூன்றாம் யூரோப்பியவர் இவர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பயணித்துத் திரும்பிய டச்சு மாலுமிகள் இந்தத் தீவுகளைப் பற்றியும், இந்த மனிதர்களைப் பற்றியும் கேப்டன் குக்கிற்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அங்கே சில பனை மரங்கள், கரடுமுரடான நிலம், சில நன்னீர் ஊற்றுகள் அவ்வளவுதான். குன்றுப் பகுதிகளிலும், கடற்கரையிலும் காணப்பட்ட கல்லாலான மனிதச் சிலைகள்- மோயி (மோய்-Moai) இந்தப் பயணிகளுக்கு ஆச்சர்யமூட்டவில்லை. இந்தப் பயணக் குழுவில் சிலர் பிரிந்து தீவின் உட்பகுதிக்கு உள்ளூர் மனிதர்களின் துணையுடன் சென்ற போது ஸ்காட்டிஷ் இயற்கையியலாளரான ஜோனான் ஃப்ராஸ்டர் (Johann Forster) ஒரு சிறிய நன்னீர் கிணற்றருகே தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்ட சிலைகளைப் பார்த்தார். கிட்டத்தட்ட 27 அடி உயரமுள்ள, அனேகமாக அந்தத் தீவின் மிகப் பெரிய சிலை என்று சொல்லத்தக்க சிலையும் கவிழ்ந்து கிடப்பதை தங்கள் பிரிட்டிஷ் கப்பலுக்குத் திரும்புகையில் அவர்கள் பார்த்தனர்.

அஹூ(Ahu) என அழைக்கப்படும் வழிபாட்டுக் கற்பீடங்களில் நிறுவப்பட்ட பல சிலைகள் நிலத்தில் வீழ்த்தப்பட்டும், சிதைக்கப்பட்டதுமான காட்சிகளை 1700 பிற்பகுதிகளிலும், 1800களின் முற்பகுதியிலும் அப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் பதிவு செய்துள்ளார்கள். 1868 வாக்கில் நிலத்தில் ஆழப் பதிக்கப்பட்ட ‘மோயிகளைத்’ தவிர நின்ற நிலையில் இருக்கும் சிலைகளே காணப்படவில்லை. அஹூவின் மேல் நிமிர்ந்த தலையுடன் எந்த உருவமுமில்லை. ஏன் இத்தகைய அழிவு என்ற கேள்விக்கு பல்வேறு பதில்கள் கிடைக்கின்றன- தீவு வாசிகளின் உட்போர் என வாய்மொழி விளக்கங்கள்; கால அரிப்பு மற்றும் நில நடுக்கங்கள் என மானுடவியலாளர்களின் கணிப்பு. கவனிக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால், அத்தனை சிலைகளும் முன்னோக்கி விழுந்திருக்கின்றன- அவைகளின் முகங்கள் நிலத்தைப் பார்த்திருக்க, தலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய நவீன நோக்கர்களுக்கு, கள்ளத்தனமாக இப்படிச் சிலைகளைக் கயிற்றால் கட்டி ரபானூயியினர் சிதைத்திருப்பார்கள் என்பது முதலில் நம்பக் கடினமான ஒன்றாக இருந்தாலும், இந்த விநோதங்களை, சிலை உடைப்பு, முகச் சிதைவு, முகம் தாங்கிய பதாகைகளைக் குத்திக் கிழித்தல், கால்களால் எத்துதல், காறி உமிழ்தல், ஆறுகளில் தூக்கி எறிதல் போன்ற இன்றைய செயல்களை இணையம் மற்றும் பல சமூக ஊடகங்களில் பரவலாகப் பார்த்து வருவதும் நினைவில் எழுமல்லவா? பரவசமாக ஒரு பிரிட்டிஷ் ஊடகவியலாளர் சொன்னார்: ‘சமூக ஊடகங்கள், உரு அழிப்புக் காட்சிகளைக் காட்டி, அதன் வீர்யத்தில் பங்கு பெறும் உணர்வைத் தருகின்றன.’

மேற்கில், சமகாலத்தில் நடைபெறும் சிலை அழிப்பு போன்றவை வெளிப்படையாக இன வேற்றுமையைச் சுட்டுகின்றன என்ற போதிலும் இதன் தொடக்கமும், வரலாறும் இதனுடனே இணைத்துப் பார்க்கப் பட வேண்டியது அவசியம். ஈஸ்டர் தீவுகளில் நூற்றாண்டு நடந்த சிலை அழிப்புகள் மட்டுமே வரலாறு என்பதில்லை; முன்னர் புனிதமாய்க் கருதப்பட்டவைகளை காலந்தோறும் மனிதன் அழித்து வந்திருக்கிறான் என்பதும் வரலாறே. பதிவான வரலாற்றின் வயதையொத்த சில அம்சங்களை இந்த சிலை அழிப்புகளின் வயதுடன் பொருத்தமுடியும். பொது யுகம் 1200வாக்கில் கேனனைட் (Canaanite) நாகரீகத்திற்கு எதிரான கிளர்ச்சியில், நகரங்களில் தெய்வச் சிலைகள் நொறுக்கப்பட்டதும், திருடு போனதும், அந்நகரங்கள் கைவிடப்பட்டதும் நாமறிவோம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஹீப்ரூ அரசன் ஜோசையா (Josiah) கிராமங்களில் மீதமிருந்த கேனனைட் கடவுளர்களை அழித்து ஒழித்தார். ரோமாபுரியின் கடைசி காலத்தில், பாகன் (Pagan) மதக் கடவுள்களுக்குச் சக்தி இல்லை எனக் காட்டுவதற்காக கிருத்துவர்கள் இரவினில் சிலைகளை அழித்தனர்; செதுக்கப்பட்ட உருவங்களை இடித்தனர்; ‘ரிஃபார்மேஷன்’ (Reformation) சமயத்தில் ஸ்விஸ் கும்பல், தேவாலயங்களில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த துறவிகளின், தேவனின் சிலைகளையும், உருவப்படங்களையும் பெயர்த்தெடுத்து நகரச் சதுக்கத்திற்குக் கொண்டுவந்து எரித்தது.

உருவழிப்புச் சுழற்சி

சமீப காலத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சிலை அழிப்புகளைப் புரிந்து கொள்ள, சில சமூகச் சூழல்கள் மக்களை இதை நோக்கி எப்படிச் செலுத்தி வந்தன, என்ற வரலாற்றைம் அறிய வேண்டும். காலத்தாலும், நிகழ் இடத்தாலும் மாறுபட்டாலும் சில ஒற்றுமைகளையும் பார்க்க முடியும். பழைய ஹீப்ரூவின் கோட்பாடுகளை ஆப்ரகாமிய ஆதரவாளர்கள் ஏற்றுக் கொண்டு ‘சிலை வழிபாடு/ தேவ உரு அமைத்தல்’ போன்றவைகளை நிராகரித்தனர். மதம் சார்ந்த விஷயங்களில் மனித, விலங்கு, செடி, கொடித் தாவரம் போன்ற உருவங்களால் தேவனைச் சொல்வதற்கு முஸ்லீம் மதம் கடுமையான எதிர்ப்பினை, மதச் சார்பற்ற விஷயங்களில் கூடக் காட்டுகிறது. சிலை வழிபாடு நிஷித்தம் என்ற கருதுகோளில் கிருத்துவம் தெளிவற்றும், மீளமீளத் தனக்குள்ளே விசாரணை செய்து கொண்டாலும், இஸ்லாமிய பெருமித எதிர்ப்பான ‘உருவம்’ சில சமயங்களில் கிருத்துவத்திலும் மடை பாய்கிறது. ‘ஐக்னோக்ளாசம்’ (Iconoclasm) என்ற கிரேக்கச் சொல், ‘’உருவ அழிப்பு” என்று பொருள்படும். அரசின் கிழக்குப் பகுதியை இஸ்லாமியரிடம் இழந்தது, கடவுள் நமக்குத் தந்த தண்டனையோ என்ற பயத்தில் ‘பேசன்டீன்’ (Byzantine) அமைப்பு எட்டாவது நூற்றாண்டில் தேவாலயங்களிலிருந்தும், பலி பீடத்திலிருந்தும், தேவ, இறை தூத, துறவிகளின் சிலைகளை அடித்து நொறுக்கியபோது ஏற்பட்ட சொல் இது!

மேற்குலகில் நிகழ்ந்தவற்றிற்கு சிலை வழிபாடு ஒரு காரணியாகச் சொல்லப்பட்டாலும், ஆப்ரகாமிய நம்பிக்கைகள் இல்லாத இடங்களிலும் இந்தச் சிலை பெயர்ப்புகள், அழிவுகள் நடந்துள்ளன/ நடை பெற்றும் வருகின்றன. சூர்யக் கடவுளான எதெனின் (Aten) வழிபாட்டாளாரான எகிப்திய அரசரான எகெனான் (Akhenaten) மற்ற மாற்றுத் தெய்வங்களின் உருவச் சிலைகளை இடித்தழித்தார். கொடுங்கோலனான நீரோவை அரசாட்சியிலிருந்து தூக்கியெறிந்த ரோமானிய சபை ‘டம்னாஷியோ மெமோரியாயி’ (damnation memoriae) என்று அவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும், உருவப் படங்கள் உட்பட அகற்றி அழித்தது. அரசு சார்ந்த இந்த அழிப்புகள் விரைவாகவும், குறுகிய நோக்கத்திற்காகவும் நடைபெற்றன என்றால், இன்ன பிற இத்தகைய நடவடிக்கைகள் நிதானமாக, பரவலாக, ஆங்காங்கே சகாப்த நகர்வுகளெனும் வகைமையில் நடந்தன. உழவுத் தொழிலின் தெய்வமான ‘பர்கர்’ (Birger) சிலையை, 13-ம் நூற்றாண்டில், கொலம்பிய வருகைக்கு முன்னான, செழிப்பு மிக்க மிஸிசிப்பியன் நாகரீகத்தின் அழகழகான சிலையை, அம்மக்களே தலையைத் துண்டித்து, எரித்து, அடக்கம் செய்தார்கள். அந்தச் சிலை ‘பயிர்க்கடவுள்’ என வணங்கப்பட்டாள்- வளத்தின், செழுமையின், நிலவின் குறியீடு எனக் கொண்டாடப்பட்டாள்.

அடிப்படையான விஷயங்கள் ஆட்டம் காணும் போது, சமூகம் கலவர நிலைக்குத் தள்ளப்படும்போது, குறிப்பிட்ட இலக்கு இதுதான் என்றில்லாத போதிலும் உருவ அழிப்பு ஏற்படுகிறது. இல்லினாய்ஸ் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட மேற்கூறிய ‘பர்கர்’ தேவதை குனிந்து மண்வெட்டியால் பாம்பின் முதுகைப் பிளப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனேகமாக பொது யுகம் 1100 வாக்கில் நிறுவப்பட்டிருக்கலாம். சோளமும், மற்ற பயிர்களும் அதிகம் விளைந்த பொற்காலம்; ஆனால், நூற்றாண்டிற்குப் பின்னர், குளிர் தட்பவெப்பத்தால், பயிர்கள் நலிந்தன, நகரங்கள் சுருங்கின, முன்னர் செய்த வேட்டையாடுதலுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விளைவு- வளத்தின் அடையாளமான தேவதை வெறுத்து அழிக்கப்பட்டாள். கழுகு- மனிதன் என்ற தேவன், வேட்டையைக் குறிப்பவன், தேவனெனக் கொண்டாடப்பட்டான். மாறும் விஸ்வாசத்திற்கேற்ப அதிகார உருவெனக் கருதப்படும் தேவதையோ, அரசுகளோ சிலை உடைப்பின் மூலம் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதற்கு இந்த ‘பர்கர்’ சிலை ஒரு உதாரணம்.

பொருள் சார்ந்த கம்பீர சமூகக் கட்டமைப்பு ஆட்டம் கண்டால் அதன் உச்சியில் திகழ்ந்து அண்டத்துடன் பிணைப்பது எதுவாயினும் அதுவும் ஆட்டம் கண்டுவிடும். யுரோப்பியர் வருகைக்கு முன் இருந்த ஈஸ்டர் தீவுகளில் இருந்த ‘மோயி’க்கள் அலங்காரங்கள் மட்டுமல்ல, அது அவர்களின் முன்னோர் குடியிருக்கும் கூடு; அவர்கள் சமூக ஒழுங்கை சிலைகளின் மூலம் நிலை நாட்டினார்கள்; அச் சிலைகளை வழி நடத்துனராகப் பார்த்தார்கள். இந்தச் சமூக ஒழுங்கின் அடித்தளமென அமைந்தது அவர்களின் பனங்காடுகள் கொண்டு வந்த செல்வம். கிட்டத்தட்ட 1600 வாக்கில் பாலினேஷிய எலிகளின் தாக்குதலில் பனைகள் நோயுற்றன; பொருளாதாரச் சரிவினால், உட்பகை ஏற்பட்டது; அவர்கள் ‘மோயி’யைச் செய்ய மறந்தார்கள். பாரம்பர்ய ரபா ரூயியின் வாழ்வியல் சிதைவு யுரோப்பிய வருகைக்குப் பிறகு மேலும் அதிகரித்தது. புதுவகை நோய்கள் வந்தன; அன்னியப் பொருட்களுக்கான உள் நிலைவெறிப் போராட்டம் இந்தச் சரிவை ஆழப்படுத்தியது. நொறுங்கிப்போன தீவுவாசிகள் கடற்பறவைகளை வேட்டையாடி உண்டனர். மிஸிசிபியர்கள் செய்ததைப் போல பறவைமனிதன் இங்கே கடவுளானான்.

மோயி சிலைகளின் அழிப்போ, பர்கரின் சிதைவோ துல்லியமாக எந்தக் காலத்தில் மற்றும் சூழலில் நடந்தன என்பது தெரியவில்லை; ஆனால், இத்தகைய ‘உருவ அழிப்பின்’ பின்னே இயங்கும் மனநிலையை இதை ஒத்த பதிவுகள் காட்டுகின்றன. சொல்லப்பட்ட நோக்கங்களோ, சித்தாந்தங்களோ எதுவாக இருப்பினும், உணர்ந்தோ அல்லது உணராமலேயோ, மனித வடிவச் சிலைகளைச் சிதைப்பவர்கள் அவைகள் கண்காணித்து, தீர்ப்பு சொல்லும் வடிவிலிருப்பதாகக் கொள்கிறார்கள்! மனித முகத்திற்கு உள்ளுறை சக்தி ஒன்று இருக்கிறது; ஆதி முதல் இன்றைய நவீன யுகம் வரை; கண்ணிற்குப் புலப்படா சக்தி கொண்டுள்ளது என்றெண்ணி சிலைகளின் மூக்கைச் சிதைத்தார்கள் எகிப்தியர்கள். பாகன் சிலைக்கு உள்ளூர் மனிதர்கள் யாரும் மரியாதை செய்யக்கூடாதென நினைத்த 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முஸ்லீம் மதகுரு, ‘க்ரேட் ஸ்பிங்(க்)ஸ் (Great Sphinx) சிலையின் மூக்கை உடைத்தார். இந்த மூக்கு பங்கம் திட்டமிடப்பட்ட ஒன்று- அது விபத்துமல்ல- சாதாரண வெறியாட்டுமல்ல. மனித உருவின் சக்தி மகத்தானது- மனிதனின் இரு கண்கள் மட்டுமே போதும், நம்மை யாரோ கண்காணிக்கிறார்கள் என்று நினைக்க; மனித உரு கொண்ட ஒரு பதாகை தொங்கவிடப்பட்டுள்ள அறைகளில் திருடுவது, குப்பை சத்தை போடுவது போன்ற சாத்தியங்கள் குறைவு என்று நவீன அமெரிகாவில் நடந்த ஒரு சோதனையில் தெரிய வந்துள்ளது. {இங்கே நம் முன்னோர்கள் சூரியன் பகல் முழுதும் நம்மைப் பின் தொடர்கிறானென்றும், இரவில் ஆயிரம் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்றும் சொன்னது, இந்து சமயத்தாரின் உருவ வழிபாடு எத்தனை அர்த்தம் பொதிந்ததென்று உணர்த்துகிறது. ஐம்பூதங்களும் நமக்குத் தெய்வம்; மனிதனிடமிருந்து தேவதைகளைப் பிரித்துக் காட்டுவதற்காக, சிறகுகள், ஆறு முகங்கள், பன்னிரெண்டு கண்கள், பதினெட்டுக் கைகள் என வடிவமைத்தார்கள். மேலும் சொல்லப் போனால் உருவமே இல்லாத அருவமும், அருஉருவமும் இந்துக்களின் வழிப்பாட்டில் உண்டு. உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்ற மதங்கள் கூட சிலைகளும், (கிருத்துவம்) குறியீடுகளும் (இஸ்லாம்) தம்ம சக்கரமும் (பௌத்தம்) இல்லாமல் வழிபடுவதில்லை.}

விதிகள், தடைகள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் உள்ளார்ந்த பார்வையாளரைத் தாக்கும் வகையில் சிலை கொய்வாளர்களின் மனதிலிருக்கும் ஒரு நிழலெண்ணம் மிகப் பரிச்சயமான மனித உருவடிவத்தை-புனிதம் ஒரு புறமிருக்கட்டும்- அழிக்கச் செயல்படுகிறது. மன வடிகாலுக்காக சில சமயங்களில் சில கிளர்ச்சியாளர்கள், அதிகாரி உருவை உண்டாக்கி அதை அழிக்கிறார்கள். (முன்னர் ஜப்பானில் மேலாளர் அல்லது நிறுவனரின் முகத்தை வரைந்து ஒரு மல்யுத்தப் பையைத் தொங்கவிட்டிருப்பார்கள். கோபம் கொண்ட தொழிலாளர்கள் அதைக் குத்திவிட்டுச் செல்வார்கள்.)

நீதிமன்றங்களின் அருகே, விடுதலைப் பிரகடனத்தைக் கேட்கக் குழுமிய அமெரிக்க நாட்டுப் பற்றாளர்கள், அரசரின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தூக்கலிட்டு எரித்து, சாம்பலை மண்ணில் புதைத்தார்கள். தன்னுடைய ‘அரசரின் மூன்று முகங்கள்: ராஜ அமெரிகாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ (The King’s Three Faces: The Rise and Fall of Royal America), என்ற நூலில் வரலாற்றறிஞர் ப்ரென்டென் மெக்கானோ(Brendan McCanville) எழுதுகிறார்: பல பிரிட்டிஷ் காலனிகள், புரட்சியின் போது கூட அரச விஸ்வாசத்தையும், தங்கள் உலகு ப்ராடஸ்டென்ட் ஒழுங்கினை உடையதென்றும், அரசபீடத்திற்கு தங்கள் இணக்கம் உண்டென்றும் சொன்னார்கள். காலனியப் புரட்சி எழுந்த நேரத்தில், அதை அடக்குவதற்காக நாடாளுமன்றத்தின் தூண்டுதலில் அரசு செயல்பட்டபோது தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக உணர்ந்த பிரிட்டிஷ் அமெரிக்கர்கள், அரச சின்னங்களைத் தாக்கி குறியீட்டு உருவ அழிப்பினைக் காட்டினர். லெக்சிங்டன் (Lexington) மற்றும் கன்கார்ட் (Concord) போரிலிருந்து திரும்பிய வீர்ர்கள் மதுக்கடைகளில், உணவு விடுதிகளில் இன்னமும் தொங்கிக்கொண்டிருந்த அரசக் கைகளில் துப்பாக்கிகளால் துளையிட்டனர். தங்கள் உள்ளாழத்தில் பதிந்து நீடிக்கும் பழைய ஒழுங்கு முறைகளை அகற்றும் ஒரு போராட்டமாகவே இதைப் பார்க்க வேண்டும்- இது அந்த பழைய கட்டுப்பாடுகளின் மீதான இயற்கையான வெறுப்பு என்பதைக் காட்டிலும், தன் உள்ளே பதிந்திருக்கும் அதை அகற்றுவதில் உள்ள முனைப்பு எனக் கொள்ளலாம்.

சமூக, இயற்கை விதிகள் நங்கூரமிடும் சின்னங்களாக, உருவங்களை, உரு அழிப்பாளர்கள் பார்க்கிறார்கள் என்று அவர்களின் மனோநிலையை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்தச் சின்னங்களை மிகவும் பொருட்பட வேண்டியதாகக் கருதி, அவற்றை அழிப்பதன் மூலம் அந்தச் சக்திகளை மாற்றவோ, கட்டுப்படுத்தவோ முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் புரட்சியாளர்களாக இருக்கலாம், ஆனால், அராஜகவாதிகளில்லை. பாரம்பர்யமான ஒழுங்கு நிலவி வரும் உலகில் நம்பிக்கைக் குறைவு ஏற்படும்போது, அதிக குழப்பங்கள் வரும் என அஞ்சி, குறீயீட்டாக உருவ அழிப்புகளில் ஈடுபட்டு, புது ஒழுங்கிற்கான பின்புலத்தை ஏற்படுத்துகிறார்கள் இவர்கள். சுழலும் புதிர் இது. அதிகார அழிப்பே மாற்றதிகாரத்திற்கு வழி கோலுகிறது. “சட்டத்தின் கரம் கொண்டு சில செயல்களைத் தடை செய்யலாம்; ஆனால், ஒரு சமூகம் பொதுக் குறிக்கோளுக்காகச் செயலாற்றும் உணர்வை, அந்தச் சட்டத்தால் வழங்க முடியாது.” என்று பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான அபு நாசர் அல் ஃப்ராபி (Abu-Nasr-Al-Farabi) சொன்னார். மனித உள்ளுணர்வைத் தூண்டும் வகையிலும், கற்பனைகளுக்காவும், உருவங்கள் மனித நாகரீகத்திற்குத் தேவையான ஒன்று என்று அவர் சொன்னார். ஆனால், இந்தக் கருத்து இஸ்லாமிய உலகில், உருவ ஆக்கலுக்கும், அதன் அழிப்பிற்கும் இடையேயான சிக்கலாகிவிட்டது. இந்த முரணைப் புரிந்து கொண்டு அவர் மேலும் சொன்னார்: “உரு அழிப்பாளர்கள், தங்களுக்கான உருவை ஏற்படுத்திவிடுகிறார்கள்; அவர்கள் எதை அழிக்க நினைத்தர்களோ அதையும் செய்து, அதை விஞ்சும் வடிவாக இவர்கள் ஏற்படுத்தும் உருக்கள், சின்னங்கள் உலகம் முழுதும் இந்தச் சிந்தனையைப் பரப்பும் விநோதத்தை என்னவென்று சொல்வது? (புத்தருக்கு வைத்த சிலை போல). புராதன மூல உருவங்கள் அடைந்த பார்வையாளர்களை விட, சில தெளிவற்ற சிலைகளை உடைத்தழித்த ஐஸிஸ் (ISIS) செயல்கள் விரைவாகப் பரவியதை கலை வரலாற்றாளரான ஏரன் டுகெங்க்தஃப்ட் (AaronTugendhaft) எடுத்துரைக்கிறார்.

சில சந்தர்ப்பங்களில், இந்த சிலை அழிப்பாளர்களை பழமைவாதி என்றும் சொல்லலாம்- அவர்கள் கட்டுப்படுத்தப்படாத குழுக்களை அஞ்சியோ, அதிக ஆதரவு பெறும் வலைத்தொடர்புகளுக்கு அஞ்சியோ, அதிகாரத்தை மையத்தை நோக்கிச் செலுத்துகிறார்கள். (சீனா- அலிபாபா) பேசன்டீன் அமைப்பு புனிதச் சிலகளை அடித்து நொறுக்கிய போது, அரசு சிதறிவிடும் என்று அஞ்சி நகர்ப்புறங்களுக்கு மாநகரக் கண்காணிப்பாளர்களை அரசாங்கம் அனுப்பியது. சிலை வழிபாடுகளை முன்னிறுத்திய அந்தந்த உள்ளூர் பிரமுகர்கள், துறவிகள், உயர்குடியினர் இவர்களின் நேரடியாக இல்லாத ஆனால் தாக்கம் செலுத்தவல்ல வல்லமையும் இவர்களால் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டது. உரு அழிப்பாளர்களின் பங்கு என்பது புரட்சி எழுச்சியில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்தான்; அவர்கள் இத்தகைய எழுச்சிகளுக்கான களமவைத்தவர்கள்; புதுக் கருத்துக்களின் ஒழுங்கவமைவிற்கு ஒரு சம நிரந்தரத்தை வழங்கியவர்கள். அமெரிகப் புரட்சியை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ஜூலை 9,1776ல் ந்யூயார்க் நகரின் பௌலிங்க் க்ரீனில் வாசிக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனத்திற்குப் பின், களி கொண்டு, குதிரை மீது வீற்றிருந்த அரசர் மூன்றாம் ஜார்ஜின் தங்கமும், ஈயமும் கலந்து செய்யப்பட்ட சிலையை கயிற்றினால் பிணைத்து பல நாட்கள் போராடி அதைக் கீழே தள்ளி வெற்றி முழக்கமிட்டார்கள் உருவழிப்பாளர்கள். தங்கம் வெகு விரைவில் வீழ்ந்த சிலையிலிருந்து களவாடப்பட்டது. ஈயத்தை உருக்கி குண்டுகள் செய்து பிரிட்டிஷ் சிப்பாய்களின் மேல் சுட்டார்கள். அந்தச் சிலை நிறுவிய ஆறு வருடங்களில் அதைப் பற்றி அறிந்திருந்தோர் அதிக நபர்களில்லை; அதன் நாடகத்தனமான வீழ்ச்சி, 1857ல் பாதி சரிந்த நிலையில் உள்ள சிலையையும், அதைக் கட்டி இழுக்கும் திரளையும் காட்சிப்படுத்திய வில்லியம் வால்கட்டின் (William Walcutt) ஓவியத்தைப் பல்வேறு ஊடகங்கள் மீளமீளக் காட்சிப்படுத்திச் சொன்னது போன்றவற்றால் அந்தச் சிலையை வடிவமைத்தவர் கனவிலும் எண்ணாத புகழை இந்த நிகழ்ச்சி கொண்டு வந்து சேர்த்தது. அமெரிக்க பொது சமுதாயத்தின் பண்பாட்டுச் சின்னமாக பல பள்ளிப் புத்தகங்களில் இது இடம் பிடித்தது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகைப்படங்கள், திரைப்படங்கள் போன்ற காட்சி ஊடகங்கள் இந்த ‘உருவழிப்பினை’ பலருக்குக் கொண்டு சேர்த்தன. இரண்டாம் உலகப் போரின் முடிவில் 20-ம் நூற்றாண்டில் ‘ரெய்ஸ்டேக்’ உச்சியிலிருந்த ஸ்வஸ்திகா சின்ன ஒழிப்பினை படமெடுத்து பரவலாக்கியதைத் தவிர, பேரளவில் இந்த ‘உருவழிப்பை’ சமூக இயக்கங்களோ, ஆட்சியாளர்களோ கைக்கொள்ளவில்லை எனச் சொல்லலாம். (1917-ல் ரஷ்யாவைக் கைப்பற்றிய போல்ஷெவிக்குகள், கலை விமர்சகர்கள் எடுத்துரைத்த கலை அம்சத்தை ஏற்றுக் கொண்டு ஜார்களின் உருவச் சிலைகளை சேதம் செய்யாமல் விட்டுவிட்டனர்.) 2001-ல், ஆப்கானில், பாமியனில் முதலாம் தாலிபானிய அரசு புத்தர் சிலைகளை உடைத்து அழித்து ‘உருவழிப்பின்’ மீது பரவலான கவனத்தைத் திருப்பியது. வட அமெரிகாவில், பிரிட்டனில், சமீபத்தில் நடந்த சிலை கொய்தல் மீண்டும் அதன் இருப்பை உணர்த்தியது. நடுவில் காணப்படாத இந்த ‘உருவழிப்பு’, 21-ம் நூற்றாண்டில் மீண்டும் தலை தூக்கியதற்கு, ஐஸிஸ், தாலிபான், மற்றும் மேற்குலகின் (புதிய) உருவழிப்பு ஆர்வங்களைக் காரணமெனச் சொல்லலாம்; இணையத்தின் வழியே ஒருங்கிணைத்து சிறிய, பரபரப்பான காணொலிகளை இந்தத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்ததையும் சொல்லலாம்.

சமீப கால உருவழிப்புகள், இணையம் வாயிலாக உணர்வு பூர்வமாக, முந்தைய சமூக இயக்கங்களைக் காட்டிலும் திறம்பட வடிவமைக்கப்படுகிறது; இது பரவலாகவும், மையக்குவிப்பின்றியும், உடனடியாகவும் நடை பெறுகிறது. சிலைகள் தாக்கப்படுவதை சில நேரங்களில், அரசு கண்டும் காணாமல் இருந்தாலும், உடைக்கும் கும்பல், அச் செயல் சட்டபூர்வமானதில்லை என அறிந்திருப்பதால், சில மணித் துளிகளில் அந்த இடங்களை விட்டு அகன்றுவிடுகிறது- நோக்கங்களை, உந்துதல்களைத் தெளிவு செய்யாமலேயே. வரலாற்றில் உருவழிப்பு செய்ய எந்தக் காரணங்கள் இருந்ததோ, அதை இன்றைய சமூக மனவியல் நிலைகளுடன் பொருத்திப் பார்க்க முடியும்- நிலையான குறிக்கோள் இன்மை, தெளிவான கருத்தின்மை மற்றும் தலைவரின்மை. இன்றைய இணைய அரசியல் புதுமை எனத் தோன்றினாலும், மாறும் விஸ்வாசத்தின் வெளிப்பாடாக முன்னர் நிகழ்ந்த உருவழிப்பு, இப்போதைக்கும் பொருந்திப் போகிறது எனலாம்.

ஆர்வமிக்க உயர்குடியினரின் புரட்சி

பாஸ்டன், சான்ஃப்ரான்ஸிஸ்கோ, ரிஸ்மான்ட் ஆகிய நகரங்களில் நிகழ்ந்த சிலை அழிப்புகள்/அவமரியாதைகள் பெரும்பாலும் அங்கே வசிக்கும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மேற்கொண்டவையே. தங்கள் செயல் அட்டவணை பற்றிய தெளிவான செய்திகளை அவர்கள் பகிராத போதிலும், அவர்கள் நேரலையில் பதிவிடும் கருத்துக்களிலிருந்தும், பரவலாகச் செய்தித்தாள்களில் வெளிவரும் விவரங்களிலிருந்தும் இதை அறிந்து கொள்ளலாம். தங்களது சமூக தரநிலையின் தடுமாற்றத்தால், இளம் பட்டதாரிகளும், மாணவர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, தங்களை நிறுவும் வண்ணம், போராட்டத் தொனியோடு, கல்லூரி வளாகத்தில் சிலைகளை அகற்றுவதைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளைச் சொல்லி இந்த இயக்கங்களைத் தொடங்கினர். பிரிஸ்டாலில்,( Bristol, England) எட்வர்ட் கார்ல்ஸ்டன் (Edward Colston) சிலையை அகற்ற உதவிய போராளிகள், அந்த அனுபவம் அவர்களை வலிமை உடையதாக்கியதென்றும், அந்த நினைவுச் சின்னம் காட்சிப்படுத்திய ‘தலைமுறைகளாகத் தொடரும் உளைச்சலுக்கு’ (generational trauma) அதை அகற்றியது சரியான தீர்ப்பென்றும் சொன்னார்கள். இன்றைய செய்தி ஊடகங்கள், கல்லூரி வளாகங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்களின் தாரக மந்திரமான விசித்திரமான ஆற்றுப்படுத்துதலும், இனவெறிக்கெதிரானதான முழக்கங்களும் இதை ஒத்திருக்கிறதல்லவா? பிரிஸ்டலில் நடந்த சிலை அழிப்பில் எத்தனை வெள்ளையின மனிதர்கள் பங்கெடுத்தார்கள் என்பதும் தெரிந்த செய்தியே.

முந்தைய காலத்தில் செயல்பட்ட ‘உருவழிப்பாளர்கள்’ பெற்றிருந்த மதிப்பினை இன்றைய, நாகரீகமானவர்களாகக் கருதப்படும் சிலை கொய்தர்களும் பெற்றிருக்கிறார்கள் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பொதுவாகவே, உருவழிப்பாளர்கள் ஆர்வமிக்க உயர்குடியினர்; அவர்களுக்கு சமூக ஒழுங்கின் குலைவு தேவையில்லை- கருதுகோளுக்கு ஏற்ப அதன் மறுசீரமைப்பு தான் வேண்டும். உண்மையில் நசுக்கப்படும் கீழ்த்தட்டு மக்கள், கிளர்ச்சியில் ஈடுபடும் போது வாழ்வதற்குத் தேவையானவற்றில் கவனம் செலுத்துகின்றனர்- சிலைகளை அழிப்பதில் அல்ல. ரிஃபார்மேஷனின் தொடக்கக் காலத்தில், வளர்ந்து வந்த வணிக நகரங்களான ஜூரிச், ல ரஷல் (Zurich and La Rochelle) ஆகியவற்றில் தான், ‘இறைத்தூதர்களின் பெருமை மிக்க புனித சக்தி என்ற கருத்தினை ஆட்சேபித்தவர்கள்’ சிலைகளைத் தரைமட்டமாக்கினார்கள். இதற்கு நேர் எதிராக 1520களில் ஜெர்மனி முழுதும் நடந்த குடியானவர்களின் கிளர்ச்சிப் படை ஓவியங்களையோ, சிலைகளையோ அழிக்கவில்லை; அவர்கள் கேட்டதெல்லாம் ‘அடிமை முறை ஒழிய வேண்டும், நியாயமான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும், அதீத வரி விதிக்கப்படக் கூடாது’ என்பதே. இந்த வர்க்க வேறுபாட்டினை இத்தகைய உருவழிப்பு வகைமைகளிலும் நாம் பார்க்கலாம். இங்கிலாந்திலுள்ள வொர்ஸ்டர், கேன்டர்பரி (Canterbury and Worcester) தேவாலயங்களில் இடம் பெற்றிருந்த அழகிய கண்ணாடி வரைபடங்களை அடித்து நொறுக்கியது, தங்களைக் கிளர்ச்சியாளர்களுடன் இணைத்துக் கொண்ட குடியான புரட்சியாளர்களில்லை- மாறாக புனித வாதம் பேசும் நடுத்தரத் தலைகள் தான். அமெரிக உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில், தென் கரோலினாவில், நெல் வயல்களை வைத்திருந்த முதலாளிகள் தங்கள் சொத்துக்களைக் கைவிட்டு ஓடிய போது, விடுதலை பெற்ற அடிமைகள், தங்கள் முன்னாள் எஜமானர்களின் கலைப் பொருட்களையும், அறைகலன்களையும் அழிக்காமல் தமக்குள் பங்கீடு செய்து கொண்டனர். செழிப்பான நிலங்களை வன்முறையாகத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள் அரசு அதிகாரிகள்.

சிலைகளைப் பொருட்படுத்துதல்

நம்பிக்கை, நன்னடத்தை ஆகியவற்றின் குறியீடுகளாக இருந்து வந்த சிலையோ, ஓவியமோ, குறியீடோ மேற்கூறிய தங்கள் சக்தியை இழக்கத் தொடங்கிய பின்னர்தான், இந்த ‘உருவழிப்பாளர்கள்’, எழுகிறார்கள் எனச் சொல்லலாம்; தங்களைக் கிளர்ச்சியாளர்கள் என நினைத்துக் கொண்டாலும், கருத்தியல் மாற்றத்திற்கு தாங்கள் அடிகோலியதாகச் சொன்னாலும், அவர்களுக்கு அத்தனை பங்கு புதுக்கருத்தியலின் தோற்ற வளர்ச்சியில் இல்லை. (செத்த பாம்பை அடிக்கும் வித்தகர்கள்) உருவழிப்பை ஒரு நுண்ணிய செயல்திட்டமென்றும், புது அரசு அமைய உதவுமென்றும் புரட்சியாளர்கள் நினைத்து அதைப் பயன்படுத்துகிறார்கள். இன்றைய ஆங்கில- அமெரிகன் சமூகம், அடிமை முறையை அருவெறுக்கத்தக்க கொடும் பாவமென்றும், அந்த வரலாறும் அழிக்கப்படவேண்டிய ஒன்றே என்றும் சொல்கிறது. இந்த உணர்வு, நிலையாக வளர்கிறது. ஆனால், இதுவே உருவழிப்பாளர்கள் சொல்லும் ‘அடிமைகளைக் கொண்ட ஆள்வோரின் சிலைகள் நயவஞ்சகக் கருத்தினைக் காட்டுகிறது’ என்பதன் எதிர்மறையாகவும் போய்விடுகிறது. பொது அமைப்புகளின் பழைய பெயரை மாற்ற வேண்டும், கூட்டாச்சி சின்னங்களைக் (Confederate monuments) காலத்திற்கேற்றாற் போல் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒன்றும் புதிதல்ல; வெற்றிகரமாக சமூகப் பொது உரிமைகள் கொண்டு வந்த பலப் பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்டவைதான். கொள்கையில் திடமும், குறைந்த எண்ணிக்கையிலுமுள்ள எதிர் அணியின் ஆக்க்ஷேபணைகளைப் பொருட்படுத்தாமல், நகர சபைகளிலும், பள்ளி நிர்வாகக் கூட்டங்களிலும், தெளிவற்ற சட்டமன்றக் கூட்டங்களிலும் பெயர் மாற்றம், மற்றும் நினைவுச் சின்னமகற்றல் குறித்து விவாதங்கள் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. ஆனால், உள்ளூர் செய்தித்தாள்களில் மட்டுமே இந்த விவரம் வருகிறது! 2015-ல் சார்ல்ஸ்டனில் ( Charleston) வழிபாடு செய்த ஒன்பது கறுப்பின மனிதர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்த உருவழித்தல் வேகமெடுத்துள்ளது. ஒருகாலத்தில், கூட்டாச்சியின் மிகப் பெரும் நகராக இருந்த ந்யூஅர்லின்ஸ்,( New Orleans), ‘டிக்ஸி’ என்ற சொல்லின் பிறப்பிடம், மே 2017ல், கூட்டாச்சி நினைவுச் சின்னத்தை அகற்றியது.

உருவழிப்பு மீள எழுந்ததற்கு, மக்களாட்சியின், படிப்படியான மாற்றம் கொணரும் முறையின் மேல் தவறில்லை- மாறாக அதன் வெற்றியைச் சொல்லலாம்! சார்லஸ்டோவின் (Charlottesville, Virginia) தேர்ந்தெடுக்கப்பட்ட நகர சபை பிப் 2017ல் ராபர்ட் லீயின் சிலையை (Robert E. Lee) அகற்றவும், அது இருந்த இடத்தின் பெயரை மாற்றவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல வலது சாரி இயக்கங்கள் ‘வலதினை ஒற்றுமைப்படுத்து’ (Unite the Right) என்று கூவின. இதற்கு எதிராக, தாராளவாதிகள், இடது சாரியினர், ஃபாஸிஸ்ட்டுக்களுக்கு எதிரானவர்கள், ஒரணியில் திரண்டு களமிறங்கினர். வன்முறை வெடித்தது- ஒருவர் இறந்தார். இந்த நிகழ்வைக் குறித்து சில பார்வையாளர்கள் சொன்னார்கள்- ‘இது ஜனநாயக முறையில் எடுக்கப்பட்ட முடிவின் வெற்றியல்ல; மாறாக, கருத்தியல் எதிரிகளின் மீது கட்டவிழ்க்கப்பட்ட சட்டத்தை மீறிய சட்டவன்முறை. இந்தத் தோல்விக்குப் பின்னர், வெள்ளையர்களும், ஃபாஸிஸ்ட்டுகளும் பொது மக்களின் கண்களுக்குத் தட்டுப்படாமல் மறைந்தனர். இவர்களை எதிர்த்தவர்கள், சிலைகளை அழித்து, அதை வெள்ளை இனத்திற்கெதிரான, அது கொண்டாடும் மேன்மைக்கு எதிரான ஒன்றாக அடையாளம் காட்டினர். உயிருள்ள மனிதருடன் மோதாமல், கல்லாலும், வெண்கலத்தாலும் அமைக்கப்பட்ட சிலை அழிப்புகளில் 2017-2020 வரை உருவழிப்பாளர்கள் ஈடுபட்டனர். (இதை ஒட்டி ஒரு செய்தி- தெய்வம் இல்லை என்று மேடையில் தமிழ் நாட்டில் பேசிய ஒரு பெரிய மனிதர் கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்- இந்தச் சிலையை அருகில் ஓடும் ஆற்றில் போடுங்கள்; என்னையும் போடுங்கள். யார் நீந்தி கரைக்கு வருகிறோம் எனப் பாருங்கள் என்றார்; கூட்டம் கொக்கரித்தது. ஒரு மனிதன் கூட்டத்திலிருந்து எழுந்து மேடைக்கு வந்தார்; பின்னர் கேட்டார்- முள் சவுக்கால் நான் உங்களையும், இந்தச் சிலையையும் 10 அடிகள் அடிக்கிறேன். யார் குருதி வழியக் கத்துவார்கள் என்று பாருங்கள்.)

சிறிய இளம் செயல்பாட்டாளர்கள் அதிக அளவில் வன்முறை எனும் ஆயுதத்தை எடுத்துக் கொண்டாலும், பெரும் அரசியல் களம் நிதானமாகத்தான் மாறுகிறது. சார்லஸ்டோ கலவரத்திற்குப் பிந்தைய மூன்றாண்டுகளில், சட்டபூர்வமாகவே பல சிலைகள் அகற்றப்பட்டன. கான்ஃபிடரேட்டின் நினைவுச் சின்னங்களையும், ராஜர் பி டேனியின் (Roger B. Taney) சிலையையும் சத்தம் காட்டாமல் பால்டிமோர் (Baltimore) நீக்கியது. இதற்கு எதிர்ப்புகளில்லை. சர்ச்சைக்குரிய சிலைகளை அகற்றுவதற்கும், நினைவுச் சின்னங்களை மாற்றுவதற்கும் அரசுச் செயல்பாடுகள் மூலம் முன்னர் முட்டுக்கட்டை போட்டு வந்த பிரமுகர்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாகிவிட்டனர். உள்ளூர் நினைவுச் சின்னங்களை அகற்றக்கூடாதென்ற சட்டம் அலபாமாவில் (Alabama) நிறைவேறியது; டெக்ஸாசில் (Texas) அது தோல்வியுற்றது. 52% அமெரிக்கர்கள் கான்ஃபிடரேட் சிலைகளை அப்புறப்படுத்த வாக்களித்துள்ளனர்.

இப்படியெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், புதுயுக உருவழிப்பாளர்கள் எளிதாகக் கிடைக்கும் வெற்றியை ஏற்கவில்லை. அமைதியான சிலை அகற்றல், கும்பல் செயல்பாடுகளுக்கு அவசரத்தைக் கூட்டின. அமைதியாக சிலைகள் அகற்றப்பட்டால், இவர்களுக்கு, பிரசாரம் செய்வதற்கு என்னதான் இருக்கிறது? 2020ல் நடந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் (George Floyd) படுகொலையை எதிர்த்து நடத்தப்பட்ட ஊர்வலத்திலும், பேரணியிலும் இருந்தவர்களில் சிலர் சிறு கும்பலாக இரவில் சில கேள்விப்படாத சிலைகளை அழித்தனர். முன்னர் பலர் அறிந்திராத எட்வர்ட் கால்ஸ்டன், பிரிஸ்டலில் அழிக்கப்பட்டதாலேயே பிராபல்யமடைந்தார். இன்னமும் வேடிக்கை என்னவென்றால், பலருக்கு அவர்கள் உடைக்கும் சிலைகள் எதைக் குறிப்பதென்று கூடத் தெரியாது- இந்தச் சிலைகள் கால்ஸ்டன் அளவில் கூட பெயர் வாங்கவில்லை.

உருவழிப்பாளர்களின் கோபாவேசமும், பொது மக்கள் சிலைகளின் பால் கவனம் செலுத்தாமையும் அப்பட்டமாகத் தெரிகிறது. 2017க்கு முன்னர், கவனிக்கப்படாமலோ, தேவையான ஒக்கீடுகள் செய்யாமலோ, அரசுகளின் ஒப்புதல் இல்லாமலோ, ஏற்கப்படாத வரலாற்று நினைவுச்சின்னங்கள், உருவங்கள், கரைந்து அழிந்து போயின. (ஒருக்கால் மறு சுழற்சி முறையில் அதன் கட்டமைப்பிற்காக சில சிலைகளை- ரோமானிய அதிகாரிகளின் தலையற்ற சிலைகளை- பைசேன்டைன் காலத்தில் தாங்கும் தூண்களாகப் பயன்படுத்தியதைப் போல செய்கிறார்கள் எனவும் நினைத்துக் கொள்ளலாம்.) பொது மக்கள் நினைத்தும் பார்க்காத அந்தஸ்தினை, கருது கோள்களை, அதீதமான சக்தியை, அழிக்கப்படும் சிலைகளுக்கு, உருவழிப்பாளர்கள் தந்து அதை அழிப்பதற்கானக் காரணியாகச் சொல்லி சந்தர்ப்பத்த்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை உயர் ஊடகங்களும், மெத்தப் படித்தவர்களும் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். சயன்டிஃபிக் அமெரிகன் இதழில் ஒரு பத்தியில் கார்னெல் பேராசிரியர் ஒருவர் 2020ல் இவ்விதம் வாதிட்டார்: “பளிங்கோ, கல்லோ, வெண்கலமோ, சிலைகள் அதிகாரத்தின், கருத்தியியலின் குறியீடுகளே”

இந்தப் புது உருவழிப்பின் பலவீனம் அது குறிவைக்கும் இலக்குகளே. ஈஸ்டர் தீவுகளின் மோயிக்களுக்கு இருந்த இறை அந்தஸ்து, ஆங்கில அமெரிகன் சமூகத்தில் மேயர்களுக்கோ, கல்லூரி நிறுவனர்களுக்கோ எப்போதும் கொடுக்கப்படவில்லை. எனவே, விநோதமாக, இந்த உருவங்களுக்கு சிறப்புச் சக்திகளை, அழிப்பாளர்களே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஜேம்ஸ் மேடிசன், தியோடர் ரூஸ்வெல்டின் (James Madison or Theodore Roosevelt) சிலைகளைக் கடந்து செல்ல நேரிடும் சமகாலப் பார்வையாளர்கள் எவருமே, இனவாதிகளாகவோ, அந்தக் கருத்தியல் சிந்தனையில் ஈடுபாடு கொண்டவர்களாகவோ இச் சிலைகள் தங்களை மாற்றவில்லை எனக் கூறினாலும், உருவழிப்பாளர்கள், அந்தச் சிலைகள் சுட்டுவதாக இவர்கள் நினைக்கும் சக்தியை அல்லது கருத்தியலை நேரடியாகவோ, மறைமுகமாகவோச் சொல்கின்றன என்றே வாதிடுகிறார்கள். இந்த மெல்லிய, மனோயூகங்கள் சார்ந்த வாதம் ஒரு புறத்தில் அதன் பலவீனத்தையும், தன் கருத்துக்கான கோரிக்கையை மறுபுறத்திலும் கொண்டிருக்கிறது. மறக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சிலைகளை இலக்காக வைத்து அவற்றை அழிப்பதன் மூலம், அவற்றை மறுகவனிப்பிற்குக் கொண்டு வந்து வழமையான இன்றைய போரை நிகழ்த்துகிறார்கள். இதில் இன்றைய செல்வாக்காளர்களோ நிறுவனங்களோ விடுபட்டுப் போய்விடுகிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் அந்தச் சிலைகளுக்கு உயிரூட்டி அதன் சமூகத் தீங்கை எடுத்துக்காட்டி அவைகளுக்கு ஈஸ்டரின் மோயிக்களைப் போல அதீத சக்தியும் கொடுத்துவிடுகிறார்கள். பழங்கால மதவெறியர்களிடமிருந்து கட்டளைகள் பெற்றவர்களைப் போல, சமகால அமெரிகர்கள் இந்த நினைவுச் சின்னங்களை எதிர்கொள்வதாக ‘ஹில்’ பத்திரிக்கையாளர் எழுதினார். சமகால நிகழ்வுகளுக்கு ஒரு மாயத் தன்மையை இந்தப் புது உருவழிப்பாளர்கள் கொண்டு வருகிறார்கள். காவல்துறை அராஜகத்தையும், குற்றவியல் செயல்பாடுகளில் சட்ட நிர்வாகத்தினரிடையே ஏற்படும் சிக்கல்களையும் இன்றைய செயல்திட்டங்களின் விளைவெனப் பார்க்காமல், ஆங்கில-அமெரிகன் சமூகத்தின் உள் மன ஆழத்தில் புதைந்துள்ள, வாயடைக்கமுடியாத ‘கட்டமைப்பு’ என்றே இவர்கள் பார்க்கிறார்கள். சமூகத்துடன் உடன் பிறந்த, பரவுகிற, ‘முதற் குற்றத்தின்’ தீமை இதுவெனச் சொல்லி இன்றைய ஆட்சியாளர்களின் கடுங்குற்றங்களை இவர்கள் குறைத்துவிடுகிறார்கள்.

இந்தப் புது உருவழிப்பார்கள், சிறந்த மாற்றத்திற்கான வழி மற்றும் ஆள்வோர்களின் பொறுப்பு என்பதிலிருந்தும் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட பொறுப்பை ஆட்சியாளர்களிடம் எதிர்பார்ப்பது இயல்வதல்ல என்பது அவர்களின் எண்ணம். இது, தங்களைக் கிளர்ச்சியாளர் என்று எண்ணி புளகாங்கிதம் கொள்ளும், அரசின் உயர்குடியில் இடம்பெறும் நோக்கமுள்ளவர்களுக்குத்தான் எத்தகையதொரு முகமூடி! பெருமளவில் கொள்கைகள் மாற வேண்டும் என்று குரல் கொடுப்போர், சிலை அழிப்போ, சேதமோ, தங்கள் எண்ணத்தின் எதிர்மறையல்ல என்றும் சொல்லலாம். பழைய சின்னங்களின் அழிப்பின் மூலம் இன்றைய ஆட்சியாளர்களின் பொறுப்பை இனங்காட்டி செயல்படச் செய்ய முடியும் என இனப்பெருமை எதிர்ப்பாளர்கள் கருதுவது அழித்தலுக்கும், பொறுப்பை நிறுவுவதற்காகவும் இடையே உள்ள இணைப்பாகும். ஆனால், ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்த போது நிகழ்ந்த வரலாறு காணாத ஊர்வலமும், கோஷங்களும் இந்த இரண்டாண்டுகளில் குற்றத் தீர்ப்புக்களிலோ, காவல் துறையின் அராஜகங்களிலோ குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றங்களைக் கொண்டுவரவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், எத்தனையோ சிலைகள் மேற்கு யூரோப்பிலும், அமெரிகாவிலும் வீழ்ந்துபட்ட பிறகும், வெள்ளையின மேன்மை என்ற பிறழ்வு கொண்டோரில் டெரிக் ஷௌவினைத் (Derek Chauvin) தவிர யாரும் சட்டத்தின் முன்னே நிறுத்தப்படவில்லை. உருவழிப்பாளர்கள், உண்மையான, உண்மை என கற்பிக்கப்பட்ட அநீதிக்கு எதிரான போரில், தடை ஏற்படுத்தவில்லை எனக் கொண்டாலும், அந்தப் போரை சிறப்பாக முன்னெடுக்கவில்லை என்பதும் உண்மை.

உருவழிப்பாளர்களின் வெற்றிக்கும், கொள்கை மாற்றம் நிகழா சூழலிற்கும் இடையே ஒத்திசைவின்மை இருக்கையில், இளையப் போராளிகள் கணிக்கக்கூடிய இடைவெளிகளில் சிலைகளை அழிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கனடாவில், பழங்குடி குழந்தைகளுக்கான இருப்பிடப் பள்ளியில் மாபெரும் கல்லறையைப் பற்றிய செய்தி வெளியான போது கொந்தளித்தவர்கள், 2021-ல் வின்னிபெக்கில் (Winnipeg) விக்டோரியா அரசி மற்றும் அரசி எலிசெபெத்2 (Queen Victoria and Elizabeth II) ஆகியோரின் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள்- இது எவரையுமே ஆச்சர்யப்படுத்தவில்லை. இத்தகைய செயல்பாடுகளின் அடித்தளமாக இந்த உருவழிப்பாளர்களின் மனநிலையைச் சுட்டமுடியும். இன்றைய சிக்கல்களின் குரலை அடக்கவும், நிச்சயமற்ற எதிர்காலத்தில் தங்கள் இருப்பை பாதுகாக்கவும், தங்கள் உலகப்பார்வையை இவர்கள் இப்படித்தான் வரலாறு முழுதும் பரப்பியிருக்கிறார்கள். ப்ராடஸ்டென்ட், ஃப்ரெஞ்ச் புரட்சிக் கால உருவழிப்பாளர்கள் போல, சமகால படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள், தங்கள் கவலைகள், முரண்பாடுகளை புறந்தள்ளுவதற்கு இத்தகைய எழுச்சிகளை மேற்கொள்கிறார்கள். குறைந்து வரும் பிரிட்டிஷ், அமெரிக்க காலனிகள், இயந்திரக் காலத்திற்குப் பின்னான மேற்குலகின் கவலைகள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவைகளின் பின்னணியில் இளைய உருவழிப்புச் சமுதாயம், தார்மீக, மீப்பொருண்மையின் மூலம், தங்கள் இருப்பை அர்த்தப்படுத்திக் கொள்ள விழைகிறார்களோ என்னவோ? பெரும்பாலும் பேச்சு மற்றும் உருவக் கட்டுப்பாடுகளைச் சுற்றியே இந்த சித்தாந்தங்கள் அமைகின்றன. ‘வரலாறு காட்டும் குறிகள், சின்னங்கள் பொருட்படுத்தத்தக்கவையே’ என்று ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் ‘கறுப்பின உயிர்களும் உயிர்களே ‘ என்ற போராட்டம் நடந்த போது சொன்னார்.

‘பிறர் நாணத்தக்கது தான் நாணாண் ஆயின் அறம் நாணதக்கது உடைத்து’- திருக்குறள்

உசாவிகள்: கம்ப இராமாயணம், செய்தித் தாள்கள்,

https://americanaffairsjournal.org/2022/05/iconoclasm-of-the-vanities-why we-are-destroying-statues/by Samuel Biagetti

2 Replies to “சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.