”காலாழ் களரில்” – புத்தக மதிப்புரை

“எப்போதும் கைபேசி, காதுபேசி என அலைந்து திரிந்து மற்றவர்களை அலட்சியம் செய்தே அழிந்த மனிதனின் வம்சம்தானே”   - (காலாழ் களரில் உலகு – வித்யா அருண்)

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம், தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை,சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம்.  

காலாழ் களரில் உலகு  அண்மையில் கிடைத்த ஒரு சிறுகதைத் தொகுப்பு, படைப்பாளி சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளம் குடும்பத் தலைவி. பெயர் வித்யா அருண். அவர் குடும்பத்தலைவி மட்டுமல்ல, உயர்க்கல்வி பெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இருக்கிறவர், இந்தியப்பண்பாடு,  தமிழ்மரபு என்கிற பின்புலத்திற்குச் சொந்தக்காரர். நவீனம் தொன்மமென இலக்கியத்தின் இருகூறுகளிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  இவை அனைத்தும் புனைவின் மையப் பொருளில், சொல்லும் மொழியில், உத்தியில், கதையைக் கட்டமைக்கும் திறனில், பெரும்பாலான இவருடைய கதைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன. 

நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாள நண்பர் நாஞ்சிலார் காலாழ் களரில் உலகு  என்ற  சிறுகதை நூலின் பெயர்  குறித்து அவருக்கே உரித்தான ஆர்வத்துடன்  வேர்மூலத்தைத் தேடி வியக்கிறார். கவித்துமான மொழியில், நூலின் பெயர்கொண்ட சிறுகதையில் அன்றி பிறகதைகளிலும், அவற்றைக் காட்சிப்படுத்த கையாளும் காலப் பிரமாணங்களினாலும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் மொழியில் சொல்வதெனில் சுகமான வாசிப்புக்குச் சிறுகதை ஆசிரியர் துணைசெய்கிறார். 

ஏழாம் அறிவு, மோனம், வழித்துணை, தொட்டால் பூ மலரும், கானல் காலங்கள், வெட்டென மற எனத் தொகுப்பில் பன்னிரண்டு சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் ஆசிரியரையும், ஆசிரியரைச் சூழ்ந்துள்ள உலகையும், மனிதர்களையும், அவர்கள் மனங்களையும் அவற்றின் வாசத்தை உணரவும் அவர்களோடு பயணிக்கவும் உதவுகின்றன. செயல்பாடுகளே மனிதர் இருத்தலைத் தீர்மானிப்பதாக பிரெஞ்சுத் தத்துவவாதி சார்த்துரு கூறுவார். இப்பன்னிரண்டு சிறுகதைகளும் ஓர் எழுத்தாளரின் தன்னையும், பிறரையும் கூர்ந்து கவனித்து அவர்கள் இருத்தலைப் பேசுகின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் நூலாசிரியர் யார், என்பதைத் தெரிவித்திருந்தேன். இந்த யார் ?  சிறுகதைகளாக, வாழ்க்கைச்சித்திரங்களாக பிக்காசோ மொழியில் – பூடகமும் நவீனமும் இணைந்து- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று உலகிலும் பயணிக்கிறது. 

ஏழாம் அறிவு ,  காலாழ் களரில் உலகு  இரண்டும் அறிவியல் புனைகதைகள். இரண்டும் வித்தியாசமான கற்பனை (கொரோனா வுக்கு நன்றி), பிற்காலத்தில் நம்முடைய மனிதச் சந்ததியினர் இக்கதையில் நடமாடும் உயிரினங்களாக மாறவும் நேரலாம், நேற்றுவரை குரங்காக இருந்தவர்கள்தானே நாம், எதுவும் நடக்கலாம். 

மோனம் ,  தொட்டால் பூ மலரும் , இருகதைகளும் ஒரு தாயின், ஒரு சாராசரி குடும்பப்பெண்ணின் ஆசைகள், நிராசைகள் ; எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ; மருட்சிகள் மன உளைச்சல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றன. 

வழித்துணை, வெட்டென மற, போகாதே : மூன்று சிறுகதைகளும் இன்று உயர்கல்வி பெற்று ஆண்களுக்கு நிகராக பணியாற்றுகிற பெண்களுக்குள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவிழ்க்கின்றன. மேற்குநாடுகளில், பெண்விடுதலை என்பது ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால், இந்தியப்பெண்களுக்கு இன்றளவும் அது எட்டாகனி. இப்புதுமைப் பெண்ணின் அடையாளம் அலுவலகத்தில் திறமைசாலி, ஐம்பதுபேரை வைத்து வேலை வாங்குகிறாள், ஸ்கூட்டியில் வேலைக்குப் போகிறாள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள், என்பதெல்லாம் பெற்றோருக்கும் ஏன் அவளை மணமுடித்த கணவனுக்குக்கூட மகிழ்ச்சி அளிப்பவைதான். இருந்தும் அவள் பிறந்தவீட்டையும், புகுந்த வீட்டையும் மறக்காமல் இருக்கவேண்டும், எத்தனை மணிக்குத் திரும்பினாலும், எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துவிட்டு வீடு திரும்பினாலும், வீட்டின் பராமரிப்பு, பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம், குடும்பத்தின் வரவு செலவு அனைத்தும் அவள் தலையில்தான் விடியும். வேலைசார்ந்து பயணம் மேற்கொள்கிறபோது  அம்மா ஏன்போற ? எப்போ வருவே அம்மா ?  என பெட்டியை மூடும் நேரத்தில் மகன் கேட்டால், இவளுக்கு வயிறு பிசையத் தொடங்கும்.  ஆத்திலே ஒருகால் சேத்திலே ஒருகால் என்பார்கள் படித்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு’  என்கிறார், ‘போகாதே’ சிறுகதையில் நூலாசிரியர். இக்கதைகள் உயர் அலுவலராக பன்னாட்டு நிறுவங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை மூன்று விதமான கதைக் களனில், தன்மையில் வளவளவென்றில்லாமல், சிக்கனமான மொழியில், எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தெரிவிக்கின்றன. 

இத்தொகுப்பில் அதிர்வலைகள் , நவீன யுகத்தின் உறவுச் சிதைவுகளையும்,  கானல் காலங்கள்  மனப் பிறழ்வுக்கு உள்ளான மனைவியின் நிலைமை கண்டு ஆற்றாமையில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பக் கணவனின் குமுறலையும் பேசுபவை. இவை இரண்டுங்கூட தரமான சிறுகதைகள். 

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, புதையல் என்ற சிறுகதையையும். அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை  என்ற சிறுகதையையும். முதல்கதை பொதுக்கழிவறையைச் சுத்தம் செய்கிற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கதை, அப்பணியின் அத்தனைக் கூறுகளும், தொழிலாளிப் பெண்மணியின் ஒருநாள் வாழ்க்கை கொண்டு மனச்சுளிப்பின்றி சொல்லப்படுகின்றன. அதுபோல பெண்களின் தலையாய பிரச்சனைகளை, பலரும் சொல்லத் தயங்கும் சபிக்கபட்ட பெண்பிறவியின் உயிரியல் பிரச்சனகளை, துணிச்சலுடன் அது இருளால் செய்த ஒரு வழிச் சாலை  என்கிற கதையில் பெண்ணுக்கேயுரிய வலிகளுடன், அவள் சுமக்கும் பாரத்தை மொழி மருத்துவரின் துணைகொண்டு இறக்கிவைக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியுடன் உள்ளன்போடு கைகோர்க்க, இதனைக் கட்டாயம் வாசிக்கவேண்டும். 

ஓர் ஆரம்பம் ஒரு முடிவு, இடையில் எதையாவது நிரப்பி நானும் கதைஎழுதினேன், என கதைவிடும் உலகில், மனித உணர்வுக்கும், உள்ளத்தின் குரலுக்கும் செவிமடுத்து அழகான வார்த்தைகள் கொண்டு தொய்வற்ற நடையில் கதைசொல்லும் நூலாசிரியரின் திறனைப் பாராட்டுகிறேன்.

காலாழ் களரில் உலகு- வித்யா அருண்

தொடர்புக்கு :kavidhya@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.