காசில் கொற்றம்

எட்டுப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களின் தங்கத் தாமரை மலர் போன்ற செவ்விய இதயங்களைக் கவர்ந்த திரைப்பாடல் ஒன்று – ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பது. எழுதியவர், இசையமைத்தவர், இயக்குநர், அபிநயித்தவர் போன்ற விடயங்களில் எமக்கு ஆர்வமில்லை.

நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது தெரியும். எல்லாத் தமிழ்ச் சொல்லும் வராகன் மதிப்புடையது என்பதும் அறிவோம். ஆனால் இன்றைய தமிழர்களின் சொற் பயன்பாட்டு நிலை ‘காசுக் கூண்டு கரிக் கூண்டாய்ப் போச்சு’ என்றே கூறிவிடலாம். ஆனால் காசு எனும் சொல்லுக்கு சமூகத்தில் இன்றிருக்கும் மதிப்பு என்ன?

‘காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்’ என்றொரு பழமொழி உண்டு. ‘காசுக்கு ஒரு சேலை விற்றாலும், நாயின் சூத்து அம்மணம்’ என்றொரு சொலவமும் அறிவோம். சூத்து எனும் சொல் உடம்பில் தடிப்பும் அரிப்பும் ஏற்படுத்தலாம் உமக்கு. எம்மால் அதற்குக் களிம்பு பூச இயலாது.

‘காசேதான் கடவுளடா, அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா!’ என்றும் ஒரு சினிமாப்பாட்டு இருந்தது. எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள், ‘காசு பீயிலே கெடந்தாக் கூட எடுத்துத் தொடச்சு வச்சிக்கிடுவான்’ என்று.

‘CASH’ எனும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் தற்பவ வடிவமாக இருக்குமோ ‘காசு’ என்ற தமிழ்ச்சொல் என்று என்மனம் குதர்க்கமாகச் சிந்தித்தது. நூதனமான தமிழ்ச்சொல் ஒன்று பழந்தமிழ் இலக்கியங்களில் நமக்குத் தட்டுப்பட்டு, அதைக் குறிப்பிட்டு நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவருள் சிலர், உடனே அந்தச் சொல் சமற்கிருதம் என்று எடுத்துச் சாடி அழுத்தந் திருத்தமாகக் கருத்துரைப்பார்கள். எடுத்துக்காட்டு சொல்லப் புகுந்தால் அது தனிக்கட்டுரை ஆகிவிடும்.

சும்மாவா ‘மனோன்மணீயம்’ எழுதிய பெ. சுந்தரம்பிள்ளை, குடிலன் எனும் எதிர் நாயகன் மூலம் பேசினார், ‘‘நாஞ்சில் நாட்டான் நஞ்சிலும் கொடியோன்” என்று. என்னவோ தெரியவில்லை, நாஞ்சில் நாட்டார் எனில் உயர் தனிச் செம்மொழி மக்களுக்கு அத்தனை மூலக்கடுப்பு, காழ்ப்பு! மலையாளத்தில் சொல்வார்கள் அசூயைக்கும் கசண்டிக்கும் மருந்தில்லை என்று. அசூயை எனில் அழுக்காறு – பொறாமை. கசண்டி என்றால் தலை வழுக்கை.

‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்பார்கள் எம்மூரில் சிலரை. இன்று சோறு எனும் சொல்லே இழிந்த சொல். எதுவுமானாலும் இன்று ‘காசு கண்ட இடம் கைலாயம்’ யாவர்க்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்றால் காசு கைலாயம் வரைக்கும் பாயாதா?

அதன் காரணமாகவோ என்னவோ, திருவள்ளுவருக்குக் காசு எனும் சொல்மீது அத்தனை வெறுப்பு! 1330 அறம் – பொருள் – காமத்துப் பாடல்கள் எவற்றிலும் காசு எனும் சொல் காணக்கிடைக்கவில்லை. உடனே தமிழறிஞர் – தமிழ்ச் செம்மல் விருது பெற்ற எவரும் கேட்கக் கூடும், திருவள்ளுவர் பணம் எனும் சொல்லையும்தான் ஆளவில்லை என்று.

பணம் என்ற சொல்லுக்குப் பாம்பு என்றும் பாம்பின் படம் என்றும் பொருள் தரப்பட்டுள்ளன. உண்மையில் பணம் என்பதும் நச்சரவம்தானே!

‘பாவி போன இடம் பாதாளம்’ என்பார்கள். பணமும் எவரையும் பாதாளம் வரை கொண்டு செலுத்தும் வலிமை உடையது. எவரின் உயிரையும் கவர்வதற்கு சுபாரி வாங்குபவர்கள் செய்யும் பேரம் பணத்தில்தானே. பிறகென்ன, காவல்துறை பத்துப் பதினைந்து ஆண்டுகள், புலன் விசாரணை, தீவிர விசாரணை, புலனாய்வுத் துறை சிறப்பு விசாரணை, மத்திய புலனாய்வுத்துறை விசாரணை என மாய்ந்து மாய்ந்து செய்து அல்லற்படுவார்கள்.

பணம் என்ற சொல்லைப் பாம்பின் படம் என்ற பொருளில்  கையாள்கிறது சம்பந்தர் தேவாரம். ‘பணம் கொள் நாகம்’ என்றும், ‘பணம் கொள் ஆடு அரவு’ என்றும் குறிப்பிடுகிறது. திருவாசகம் ‘பணம் கச்சைக் கடவுள்’ என்கிறது. நாகப்பாம்பை அரைக்கச்சையாக, வாராக அணிந்த திருநீலகண்டன் எனும் பொருளில்.

பணம் என்றால் பருமை, திரவியம், பொற்காசு, வியாபாரச் சரக்கு, வேலை, வீடு, பாம்பின் படம், பாம்பு, அங்குசம் எனப் பற்பல அர்த்தங்கள் தருகின்றன சூடாமணி நிகண்டு, யாழ்ப்பாண அகராதி, பேரகராதி முதலியன.

‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பது சொலவம். திருக்குறளில் எலி என்ற சொல் ஒரேயொரு குறளில் வருகிறது. படைமாட்சி அதிகாரம். பாடல் கீழ்வருமாறு –

‘ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக் கெடும்’

எலிப்பகையானது கடல்போல் உரத்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாலும் நாகம் ஒன்று படமெடுத்துச் சீறினால் சிதறியோடிக் காணாமற் போய்விடும் என்பது பொருள். அதாவது பாம்பென்றால் படையும் நடுங்கும்.

அதுபோலவே பணம் என்றாலும் படையும் நடுநடுங்கும். படை மட்டுமா நடுங்குகிறது? அறம், ஒழுக்கம், நீதி, சட்டம், அதிகாரம், நிர்வாகம், இறைவர் யாவருமே நடுங்குவார்கள். இன்றைய அரசியலை, நீதியை, சட்டத்தை, அதிகாரத்தை, ஆட்சியை, அறத்தை, ஒழுக்கத்தைத் தீர்மானிப்பது பணமே! பண்டு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பாடினார் ஏதோவொரு சினிமாவில், ‘எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்’ என்று.

காசு என்ற சொல்லையும் பணம், துட்டு, செல்வம் என்ற பொருளிலேயே ஆள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழகத்துப் பேரகராதி, காசு எனும் சொல்லுக்குத் தரும் முதற்பொருள் குற்றம். மேற்கோள் சிலப்பதிகாரத்தின் பாடல் வரிகள். கோவலன் கண்ணகியை வர்ணிக்கும் இடம்.

‘மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!’

என்று உருகுவான். காசறு என்றால் காசு+அறு= குற்றமற்ற என்று பொருள். விரை என்றால் வாசனை, நறும்புகை, ஐவகை வாசனைப் பண்டம், சந்தனக்கலவைச் சாந்து, மலர் எனப் பல பொருள்கள்.

இங்கு காசு என்றால் குற்றம் என்பது பொருள். திவாகர நிகண்டு காசு என்றால் சூதாடும் கருவி, Dice என்கிறது. காசு என்றால் பொன் என்றும் அச்சுத்தாலி என்றும் பொருள். ஆண்டாள் திருப்பாவை ஏழாவது பாடல்,

‘காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?’

என்று பேசும். இங்கு காசு என்றால் ஆய்ச்சியரின் பொன்னாபரணம். காசுக்கு பழைய பொன் நாணயம் என்றும், செப்புக்காசு என்றும் பொருள்.

நான் சிறுவனாக இருந்தபோது, நாணயம் என்பது ரூபாய், அணா, காசு – பை – சல்லி. ஒரு ரூபாய்க்குப் பதினாறு அணா, ஒரு அணாவுக்கு 12 காசு/பை/சல்லி. அதாவது ஒரு ரூபாய் என்பது பதினாறு அணா = 192 காசு/பை/சல்லி. மூன்று காசு, அதாவது காலணா என்பது ஒரு தம்பிடி. காலணா, அரையணா, ஓரணா, இரண்டு அணா, நான்கு அணா (கால் ரூபாய்), எட்டு அணா (அரை ரூபாய்), ஒரு ரூபாய்க்கு நாணயங்கள் இருந்தன. ஒரு அணா என்பது நான்கு தம்பிடி. இவை ஓரணாக் காசு, ரெண்டணாக் காசு, நாலணாக் காசு, எட்டணாக் காசு எனப்பட்டன. 1938-ம் ஆண்டில் இட்லி – 4 காசு, தோசை – 4 காசு, வடை – 4 காசு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரை ஆசிரியன் 1947-ம் ஆண்டின் இறுதிநாள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தவன். 1956– நவம்பரில் செம்மொழியான தமிழ்மொழி பேசும் பகுதியோடு நாஞ்சில் நாடு இணைக்கப்பட்டது. இலாப நஷ்டக் கணக்கு பிறகு பார்ப்போம். இப்போது நாணயம் – காசு பற்றிப் பேசுவோம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாணயங்கள்:

16 காசு – 1 சக்கரம்

28 சக்கரம் – 1 திருவிதாங்கூர் ரூபாய் (நாணயம் இல்லை)

28½ சக்கரம் – 1 பிரிட்டிஷ் ரூபாய் (நாணயம் உண்டு)

4 சக்கரம் – 1 பணம்

7 பணம் – 1 திருவிதாங்கூர் ரூபாய் (நாணயம் இல்லை)

7 சக்கரம் – ¼ ரூபாய் (வெள்ளி நாணயம்)

14 சக்கரம் – ½ ரூபாய்

1 காசு – செம்பு நாணயம்

4 காசு – செம்பு நாணயம்

8 காசு – செம்பு நாணயம்

1 சக்கரம் – செம்பு நாணயம்

¼ ரூபாய் – வெள்ளி நாணயம்

½ ரூபாய் – வெள்ளி நாணயம்

1 பணம் – வெள்ளி நாணயம்

7 பணம்+8காசு – 28½ சக்கரம் = ஒரு பிரிட்டிஷ் ரூபாய்.

இந்த காலணா, அரையணா, ஓரணா, இரண்டணா, நாலணா, எட்டணா, ஒரு ரூபாய் என்ற நாணயக் காசுகள் எல்லாம் மாறி 1960-க்குப் பிறகு ஒரு ரூபாய்க்கு நூறு நயா பைசா அல்லது நூறு புதிய காசுகள் என்று வந்தன. என் சேமிப்பில் இன்றும் ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா, 25 பைசா, 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், அண்மையில் வந்த இருபது ரூபாய் நாணயக் காசுகள் உண்டு. காலணா, அரையணா, ஓரணா, நாலணா, எட்டணாக்களும் உண்டு.

ஒரு பொருள் மலிந்து போனால், இன்றும் மலையாளிகள் ‘காசினு எட்டு’ என்பார்கள். அதாவது அந்தப் பொருள் ‘காசுக்கு எட்டு’ என்ற அளவில் மலிந்துவிட்டது என்பது பொருள்.

உபயோகமில்லாத ஒருவனை, ‘அவன் பைசாவுக்குப் பிரயோசனம் இல்லப்பா’ அல்லது ‘அவன் காசுக்குப் பிரயோசனம் இல்லப்பா’ என்றனர் மேன்மக்கள்.

காசு என்றால் ரொக்கம் என்றும் பொருள் உண்டு. ‘அவன் காசுள்ள பார்ட்டிப்பா!’, ‘அவன்கிட்ட நல்ல கொழுத்த காசு பார்த்துக்கோ’ என்பார்கள். அரசியல்வாதிகளை, ‘நல்ல காசு அடிச்சு மாத்துகான்’ என்பது இன்றைய மக்கட் பயன்பாடு. காசு என்றால் இன்றைய கணக்கில் ஐம்பது கோடி முதல் ஐந்து லட்சம் கோடி வரை பொருள்படும்.

காசு எனும் சொல்லுக்கு மணி – GEM என்றும் மேகலாபரணம் என்றும் பொருள் உண்டு. கோழை – Phlegm என்கிறது பிங்கல நிகண்டு.

வெண்பா இலக்கணம், ஈற்றடியின் இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் முடிய வேண்டும் என்பார்கள். எடுத்துக்காட்டுகள்:

  1. ‘உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் 

கல்லா ரறிவிலா தார்’ – 140 ஒழுக்கமுடைமை அதிகாரம். 

இது நாள் வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

  1. ‘ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்’ – 139, ஒழுக்கமுடைமை அதிகாரம்.

இது மலர் வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

  1. ‘பயனில பல்லார்முற் சொல்ல னயனில

நட்டார்கட் செய்தலிற் தீது’ – 192, பயனில சொல்லாமை அதிகாரம்.

இது காசு வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

  1. ‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு’ – 299, வாய்மை அதிகாரம்.

இது பிறப்பு வாய்ப்பாட்டில் முடியும் குறள்.

குறள் வெண்பா, சிந்தடி வெண்பா, நேரசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா எனக் கேட்டிருக்கிறேன். பயின்றேனில்லை. வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை எனச் செவிப்பட்டதுண்டு. நாள், மலர், காசு, பிறப்பு எனும் ஈற்றுச் சீர் வாய்ப்பாட்டுக்கு விதிவிலக்குகள் உண்டா என்றும் அறியேன்.

பல்லாங்குழி ஆட்டத்தில் காய்களைப் போட்டு வைக்கும் நடுக்குழிகள் இரண்டினையும் காசு என்பார்களாம்.

காசுக்கடை என்ற சொல் மலையாளத்தில் இன்றும் புழக்கத்தில் உண்டு. காசுக்கடை என்றால் பணம் மாற்றும் கடை. தங்கம் வெள்ளி விற்கும் கடை. பொன் வாணிபம் செய்தாரைக் காசுக்காரச் செட்டி என்றனர். பணக்காரனையும் காசுக்கடைக்காரனையும் காசுக்காரன் என்று குறித்துள்ளனர்.

செப்புக்காசு வைத்து விளையாடுபவரையும், பணம் வைத்து சூதாடுதலையும் – Gamling, Betting – காசு கட்டுதல் என்றனர். காசுக்காரர்கள் அங்கத்தினராக இருக்கும் கிளப்புகளில் நடக்கும் சீட்டு விளையாட்டுகள் பலவும் காசு வைத்துதான்.

Tax Payable in money (not in grains), காசு கடமை எனப்பட்டது. ரொக்க வரி எனலாம் எளிமையாக. நாமெல்லாம் பன், கடலை மிட்டாய், காராசேவு கூட இன்று ரொக்க வரி செலுத்தித்தானே வாங்குகிறோம். நம்மிடம் வாங்கப்படும் வரிப்பணத்தில் ஒரு பகுதியே அரசாங்கத்துக்குச் செல்லும் என்பதுவும் மறுபாதி மாற்றுக் கணக்கால் அபகரிக்கப்படும் என்பதும் நாம் அறியாததல்ல. நாம் அரசியல் தொழில் முனைவோரை மட்டுமே குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறோம். கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா?

நகைகளை எடை போடும் கற்களை காசுகல் அல்லது நிறைகல் என்றனர். எண்ணெயில் அல்லது நீரில் உரைத்து நெற்றியில் பூசும் காவிக்கல்லையும் காசுமண் என்றனர்.

காசுமாலை என்பது அன்று கீர்த்தி பெற்ற பொன்னாபரணம். பொற்காசு கோர்த்த மாலை என்கிறது பேரகராதி. அதாவது Necklace of gold coins worn by women. திருவாசகத்தில், திருப்பொற்சுண்ணம் பகுதியில், மாணிக்கவாசகர், “காசணிமின்கள்” என்பார். பொற்காசுகளை கோர்த்து வடம் அணியுங்கள் என்று பொருள். அவருக்கென்ன?

‘கிடக்கிறது ஒட்டுத் திண்ணை, கனாக் காண்கிறது மச்சுவீடு!’ என்பது நம்ம வீச்சாக இருக்கிறது.

அன்று மணப்பெண்ணுக்கு காசுமாலைபோடுவது செல்வச் செழிப்பின் அடையாளம். இன்று ஆடியோ – வீடியோ போட்டோ ஷுட்டுக்கு முப்பது கோடி செலவு செய்கிறார்கள் கலைவாணிக்கு சேவை செய்கிறவர்கள். ஊடகங்கள் யாவுமே அந்தச் செய்திகளை மெய் வருத்தம் பாராமல், ஊணுறக்கம் கொள்ளாமல் மாய்ந்து மாய்ந்து கூவிக் கூவிச் சொல்கிறார்கள்.

காசு என்ற சொல்லைப் பழந்தமிழ் இலக்கியங்களில் எப்பொருளில் ஆண்டார் புலவர் என்று பார்ப்போம்.

அகநானூற்றில் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனாரின் பாலைத்திணைப் பாடல் –

“புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங்காய்
கல் அதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்
பொலம் செய் காசின் பொற் பத்தா அம்”

என்று உவமை சொல்கிறது.
புல்போன்ற இலைகளை உடைய நெல்லிமரத்தின் வடுக்கள் இல்லாத பசுமையான காய்கள், கல் நிறைந்த வழியெங்கும் கடுங்காற்றால் உதிர்க்கப் பெற்று, பொன்னால் செய்யப்பட்ட காசுகள் போலப் பரவிக் கிடக்கும் – என்பது பொருள். முற்றி, முதிர்ந்து, விளைந்து, பச்சை மங்கி மஞ்சள் பூத்து மினுமினுப்புடன் கிடக்கும் உருண்டு திரண்ட காட்டு நெல்லிக்காய்கள் இங்கே பொற்காசுகளுக்கு உவமை.
குறுந்தொகையில் இளங்கீரந்தையாரின் முல்லைத்திணைப் பாடல் –

“செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போதுஈன் கொன்றை
குருந்தொடு அலம் வரும்”

என்கிறது. செல்வர் வீட்டுச் சிறுவரின் சீறடிகளில் பொலிந்த ஆபரணத்தின் தவளை வாய் போன்று பொற்காசுகளால் செய்த கிண்கிணிகள் குருந்த மரத்துடன் அசைந்தாடும் கொன்றை மர மொட்டுக்கள் போலிருந்தன என்கிறார் புலவர்.

நற்றிணையில் காவன் முல்லைப் பூதனாரின் பாலைத்திணைப் பாடல், குமிழ் மரங்கள் பொன்னால் செய்த காசு போன்று பழங்களை உதிர்க்கும் என்கிறது.

எனவே காசு எனும் சொல் Cash என்ற  சொல்லின் மொழிமாற்றமோ, தற்பவமோ அல்ல என்பது தெளிவாகிறது. ஒருவேளை இங்கிருந்து அங்கே போயிருக்கலாம்.

ஐங்குறுநூறு நூலில், பாலை பாடிய ஓதலாந்தையார், ‘பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்’ என்பார். பொன்னாலான பசுமையான வட்ட வடிவக் காசுகளைக் கோர்த்து அணியாகப் பூணப்பெற்ற அடிவயிறு என்பது பொருள். நற்றிணையில் இனி சந்த நாகனார் பாடல், ‘காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்’ என்கிறது. அடிவயிற்றின் மேல் அணிந்துள்ள எட்டுக்கொத்துக்களை உடைய அரைப் பட்டிகையான காஞ்சி மாலையின் காசுகள் மாறிப் புரண்டு கிடந்தாலும் – என்று உரை சொல்கிறார்கள்.

குறுந்தொகையில் அள்ளூர் நன்முல்லையின் பாலைத்திணைப் பாடல் –

“உள்ளார் கொல்லோ தோழி! கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புது நாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே!’’

என்னும். பிரிவு ஆற்றாத தலைவி தோழிக்குக் கூறியது.

கிளி தனது வளைந்த அலகில் வைத்திருக்கும், மஞ்சளாய் ஒளிரும் வேப்பம்பழமானது, பொற் கம்பியினுள் காசு நுழைத்து காசுமாலை செய்யும் பொற்கொல்லனின் விரல் நகங்கள் பற்றியிருக்கும் பொற்காசு போலக் காட்சி தரும். வெப்பத்தால் நிலம் கரிந்து கிடக்கும் கள்ளிக் காட்டைக் கடந்து செல்லும்போது தலைவன் என்னை நினைத்துப் பார்க்க மாட்டாரா தோழி! – என்று உரை சொல்லலாம்.

புறநானூற்றில் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடலும்,

“ஆசு இல் கம்மியன் மாசறப் புனைந்த
பொலம் செய் பல்காசு அணிந்த அல்குல்”

என்று பேசும். தொழில் நேர்த்தியுள்ள பொற்கொல்லன், மாசில்லாமல் புனைந்த பொன்னால் செய்த பல் காசு மாலை அணிந்த அல்குல் என்பது பொருள்.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படை, ‘பல்காசு நிரைத்த சில் காழ் அல்குல்’ என்கிறது. பல மணிகளால் கோர்க்கப்பட்ட சில வடங்களை உடைய அணியை அணிந்த அல்குல் என்பது பொருள்.
கம்பன் எல்லாக் காண்டங்களிலும் சில பாடல்களில் காசு வாரி இறைக்கிறான். ‘காசடை’ என்றொரு சொல் பயன்படுத்துவான். அடை காசு, அடியில் தங்கிய மணி முதலியன என்பது பொருள். கிட்கிந்தா காண்டத்தில், பம்பைப் படலத்தில் ஒரு பாடலில், ‘காசின் கல்’ என்றொரு சொல் கிடக்கிறது. இரத்தினக்கல் என்று பொருள்.
காசு என்ற சொல்லைக் குற்றம் எனும் பொருளிலும் ஆள்கிறான். சுந்தர காண்டத்தில், காட்சிப் படலத்தில், அனுமனின் காட்சியாகப் பாடல்:

“கூசி ஆவி குலைவுறுவாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று எனக்கண்டான் –
ஊசல் அடி உளையும் உளத்தினான்”

என்கிறது.

அருவருத்து உயிர் குலைகின்ற சீதையையும், காமத்தால் உயிருக்கு ஆதாரமான ஒழுக்கம் சிதைய நின்ற இராவணனையும், குற்றமற்ற இரு கண்களாலும் சாட்சியாக நின்று கண்ட அனுமன், தடுமாற்றம் அடைந்து உளைச்சல் அடையும் உளத்தினன் ஆனான் – என்பது பாடலின் பொருள்.

காசினம் – காசு+இனம் = மணி வகை எனும் பொருளில் கையாள்கிறான். காசு எனும் சொல்லை அழுக்கு எனும் பொருளில் பயன்படுத்துகிறான். சுந்தர காண்டத்தில், காட்சிப் படலத்தில், சீதையைத் தேடி அலைந்து கண்ட அனுமனின் மகிழ்ச்சியைச் சொல்லும் பாடல்:

“மாசுண்ட மணி அனாள், வயங்கு வெங்கதிர்த்
தேசுண்ட திங்களும் என்னத் தேய்ந்துளாள்;
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால்; அறத்துக்கு ஈறு உண்டோ?”

என்று விளம்பும்.

மாசால் மூடப்பெற்ற மணி போன்றவள், பிரகாசமான வெம்மையான கதிரோனின் ஒளியால் ஒளி குறைந்த திங்கள் போலத் தேய்ந்துள்ளாள். அழுக்குப் படிந்த கூந்தலை உடைய சீதையின் உறுதிப்பாடும் இராமர் பால் அவள் கொண்ட காதலும் தாழ்ச்சி உறவில்லை. அறத்துக்கு அழிவு உண்டா? – இது பாடலின் பொருள்.

பால காண்டத்தில், தாடகை வதைப் படலத்தில், ‘காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன்’ என்பான். நவமணிகள் கிடந்து அசைகின்ற பொன்னாலாகிய அணிகள் தரித்த இராமன் என்பது பொருள். இங்கு காசு என்றால் நவமணிகள்.

கம்பன், இராமாவதாரம் தொடங்கும்போது, பாயிரம் என்றழைக்கப்படும் நூல் முகமாகப் பாடிய பாடல்கள் மிகச் சிறப்பானவை. அவற்றுள் ஒன்று –

“ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசில் கொற்றத்து இராமன் கதை அரோ!”

என்பது முழுப்பாடல்.

ஓசைப்படும்படி அலையடிக்கும் பாற்கடலை அடைந்து, ஒரு பூனை இதனை முழுமையாக நக்கிக் குடித்து விடுவேன் என்று துணிந்து புகுந்ததைப் போல, ஆசையின் காரணமாக – இராம காதையை – குற்றமற்ற ஆட்சியைத் தரும் இராமனின் கதையை நான் கூறவந்தேன் – என்பது உரை.

காசில் கொற்றம் என்றால் காசில்லாத – கஜானா காலியான – அரசு என்பதல்ல பொருள். குற்றமும் மாசு மறுவும் இல்லாத அரசு என்று பொருள். கூற்றம் என்றால் யமன், கொற்றம் என்றால் ஆட்சி. கம்பனுக்கு கொற்றம் என்றால், அரசு என்றால், அது குற்றமற்று, இருத்தல் வேண்டும்.

மலையாளத்தில் கடுமையாக இலஞ்சம் வாங்குகிறவனைக் கோழை வீரன் என்பர். ஆம், அங்கு கோழை என்றால் Phlegm  ஒரு பொருள், கோழைத்தனம் கொண்டவன் இரண்டாம் பொருள், இலஞ்சம் மூன்றாம் பொருள். எனவே கோழை வீரன் என்றால் காசு வீரனும் ஆகும்.

ஆனால் கம்பளி விற்ற பணத்தில் மயிர் முளைக்குமா என்று கருதி ஆறுதல்படுகிறார்கள். அதாவது நாம் கேட்கிறோம் அல்லவா, நாய் விற்ற காசு குரைக்குமா என்று, அதுபோல!

மேலும் உபசார வார்த்தை காசாகாது!

உண்டால் ஒழிய பசி ஆறாது!

6 Replies to “காசில் கொற்றம்”

  1. கட்டுரை சொல்வனத்தை நோக்கி தெளிந்த நீரோடையாய் செல்கிறது. இலக்கியமானாலும் பழமொழியானாலும் மேற்கோள்கள் சிறப்பாக வலம் வருகின்றன. எடுத்த காரியம் எதுவாயினும் அதனை நுண்ணறிவால் ஆழ்ந்து ஆராய்ந்து வாழைபழத்தை தோலை உரித்து நமக்கு ஊட்டும் பெருந்திறனாளர். நெறி பிறழ்வனவற்றை சுட்டிக்காட்ட சொற்சவுக்கை சுழற்ற தயங்காதவர். எவ்வளவு சொற்கள் காசுக்கு காசைப்போல. கணக்கு படித்த நாஞ்சில் ஐயாவுக்கு காசுக்கணக்கு கடினமாகவா இருக்கும்..தம்படி‌, பணம், சக்கரம், வெள்ளி நாணயம் என காசுக்கணக்கு அருமை..அணா கணக்கு எளிதாக புரியும்படி சொல்லப்பட்டிருக்கிறது…. செம்மையான கட்டுரை…இப்பி ஈன்றிட்ட எறிகதிர் நித்திலம்.❤️❤️❤️💐💐💐🙏🏽🙏🏽🙏🏽

  2. அருமை. சங்க பாடல்களில் வந்த காசு, பின்னர் கம்பர் வேறு பொருளில் கையாண்ட காசு, திருக்குறளில் எங்குமே வராதது எனக்கு ஒரு வியப்பே. ஏதாவது விளக்கம் உண்டோ?

    காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி – ரத்தக்கண்ணீர் பாடல். அது முன்னர் பழ மொழியோ?

    சரஸ்வதி சபதம் சொன்னதுதான். கல்வி, செல்வம், வீரம் – மூன்றுமே ஓரளவு இருந்தால்தான் இங்கு மரியாதை, என்றே நினைக்கிறேன்.

    காசு என்ற ஒரு வார்த்தையில் இலக்கிய உலா அழைத்து சென்ற உங்களுக்கு எத்தனை ‘காசு’ கொடுத்தாலும் தகும் 😊

  3. எங்கள் பக்கத்தில் பாம்பு சுருட்டி படுத்திருப்பதை “பணை கோயிலிக் கொண்டிருக்கிறது ” எம்போம் அதே போல் வைக்கோல் போரில் இருந்து பிடுங்கிய வைக்கோலை சுருட்டி எடுத்துக்கொண்டு போவதை “பண்ண” என்போம் ஆக பாம்பு எப்பதற்காக மட்டும் பணம் அழைக்காமல் சுருட்டி படுத்திருக்கும் பாம்பை பணம் என்று சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்

  4. சுருட்டி படுத்திருக்கும் பாம்பை பணம் என்பதுபோல் சுருட்டி வைக்கும் வகையிலான காகித வடிவ செல்வத்தை பணம் என்று சொல்லியிருக்கலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.