கயோட்டீ கதைகள்

இங்கிலிஷ் மூலம்: சார்ல்ஸ் டு லிண்ட்

தமிழாக்கம்: மைத்ரேயன்

நாற்புறமிருந்தும் வீசுகின்றன புனிதக் காற்றுகள்
நடுவில் நிற்கிறோம் நாம்
இன்னொரு வாய்ப்பு விழிக்கிறது ஒவ்வொரு காலையும்
நம் வாழ்வைச் சற்றே மேம்படுத்த

    கியா ஹார்ட்உட் – ‘விஷ்ஷிங் வெல்’ பாட்டிலிருந்து 1


யோட்டீ இன்று மிகவும் தாகமாக இருப்பதாக உணர்கிறான், அதனால் ஜோயியின் மதுக்கடைக்குள் போகிறான், அதை உங்களுக்குத் தெரியும், பாம் தெருவும் க்ராஸோ தெருவும் முட்டும் மூலையில், ஆண்களுக்கான பிரார்த்தனைக் கூடத்துக்கு எதிரில் இருப்பது அது, அங்கே சிறு தங்கக் கட்டி ஒன்றை முன்மேஜையில் வைக்கிறான், ஆனால் ஜோயி அவனுக்கு எதையும் பரிமாற மறுக்கிறார். 

“அப்ப இனிமே பழங்குடிக்கு எதுவும் விற்க மாட்டீங்களா?”

“போன தடவையும் நீ என் கிட்டே தங்கம்னுதான் கொடுத்தே, அது அப்புறமா குப்பைன்னு தெரிஞ்சுது, எனக்குத்தான் நஷ்டம்,” என்று ஜோயி சொல்கிறார். கயோட்டீயின் கையில் கட்டி இருக்கும் ரோலெக்ஸ் கடிகாரத்தைச் சுட்டுகிறார். “ஆனா, இதை வேணா நான் எடுத்துப்பேன். மிச்சம் என்ன இருக்கோ அதைப் பணமாக் கொடுக்கறேன்.”

கயோட்டீ தன் முகவாயைச் சொறிகிறான், இதைப் பற்றித் தான் கொஞ்சம் யோசிக்க வேண்டி இருப்பது போல நடிக்கிறான். “இருபத்தி அஞ்சு டாலர் செலவாச்சு எனக்கு,” என்கிறான். “நிஜக் கடிகாரத்தை விடவும் பார்க்க நல்லா இருக்கு.”

“நான் பதினஞ்சு கொடுக்கறேன், பணமாவும், அப்புறம் ஒரு பியரும் கொடுப்பேன்.”

“ஏன், ஒரு பாட்டில் விஸ்கியாக் கொடுக்க மாட்டீங்களா?”

ஆக, கயோட்டீ ஜோயியின் மதுக்கடையிலிருந்து வெளியே வருகிறான், ரோலெக்ஸ் இல்லாததை உணர்கிறான், ஆனால் இப்போது அவன் கையில் ஒரு ஜாக் (டானியல்ஸ் விஸ்கி) இருக்கிறது, அப்போதுதான் அவன் ஆல்பெர்ட்டைப் பார்க்கிறான், தெரு முக்கைச் சுற்றித் திரும்பினால், அவன் செங்கல் சுவரில் முதுகைச் சாய்த்து, கால்களைத் தெருவின் நடைபாதை மீது நீட்டிப் பரப்பித் தரையில் உட்கார்ந்திருக்கிறான், கடந்து போகவேண்டுமானால், காலை எட்டி வைத்து அவனைத் தாண்டித்தான் போக வேண்டி இருக்கும். 

”ஏய், ஆல்பெர்ட்,” கயோட்டீ சொல்கிறான். “உனக்கு என்ன பிரச்சினை?”

“ஜோயி எனக்கு ஒண்ணும் கொடுக்க மாட்டேங்கிறான்.”

“நீ பழங்குடிங்கறதாலயா?”

“இல்லை, எங்கிட்ட காசு ஏதும் இல்லை.”

அதனால், கயோட்டீ அவனுக்குத் தன் விஸ்கியைக் கொஞ்சம் கொடுக்கிறான். “ஒரு வாய் குடி,” என்கிறான், மிகவும் தாராளமாக இருப்பது போல உணர்கிறான், ஏனெனில் அவன் ரோலெக்ஸுக்கு இரண்டு டாலர்கள்தான் கொடுத்திருந்தான், அது வேலை செய்ததே இல்லை. 

“நன்றி, ஆனால் எனக்கு இது வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்,” என்கிறான் ஆல்பெர்ட் அவனிடம். “எனக்கு ஒரு சைகை கிட்டியிருக்கிறதா நான் நினைக்கிறேன். பணம் இல்லைன்னா நான் குடிக்கறதை நிறுத்தணும்.”

கயோட்டீ தலையாட்டி மறுத்தபடி, தன் ஜாக்கிலிருந்து ஒரு மிடறு குடிக்கிறான். “நீ ஒரு கிறுக்குப் பழங்குடி,” என்கிறான். 

அந்த கயோட்டீ இருக்கிறானே, அவனுக்கு அந்த விஸ்கி பிடித்திருக்கிறது. அது தொண்டையில் வழுக்கி இறங்குகிறது, அவனுடைய கண்களில் ஒரு பளபளப்பைக் கொணர்கிறது. ஒருகால் அவன் போதுமான அளவு குடித்தால், நல்லதாக இருந்த காலங்களை நினைவுபடுத்திக் கொண்டு அவனால் சிரிக்க முடியலாம், ஒருவேளை அவனுடைய மனத்தில் கசப்பு ஊடுருவி, முன்பு அவன் செய்திருந்ததைப் போல ஒரு விளக்குக் கம்பத்தோடு சண்டைக்குப் போகலாம். ஆனால் அவனுக்கு ஒன்று தெரியும், அவனிடம் பணம் இருக்கிறதா, இல்லையா என்பது நிமித்தங்களோடு சம்பந்தப்படாதது. அவனுக்கு மட்டுமாவது அப்படித்தான். 

ஆனால் ஆல்பெர்ட்டுக்கும் பணம் இல்லாதது நிஜத்தில் சைகை போலில்லை; அது ஒரு வாழ்க்கை முறை. மற்ற பழங்குடிகளைப் போன்றவன் தான் ஆல்பெர்ட்டும். எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பிரதேசக் குடியிருப்புகளை விட்டு வெளியேறினோம், ஏனென்று எங்களுக்குத் தெரியாது. நகரத்துக்கு வந்தோம், அதுவும் ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. இன்னும் உயிரோடு இருக்கிறோம், ஏனென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஆல்பெர்ட்டுக்கோ அதெல்லாம் தனக்கு வித்தியாசமாக இருந்ததாக நினைவிருக்கிறது. அவன் தன் பாட்டியின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தான், நீண்ட வறட்சியால் காய்ந்து போய் தாகம் கொண்ட மண், மழையை உறிஞ்சுவது போல அவற்றில் நனைந்து ஊறினான். இப்போது அவனும் கதைகள் சொல்கிறான், அல்லது, கதைத் துணுக்குகளைச் சொல்கிறான், நீங்கள் கேட்கத் தயாரென்றால் இரவு முழுதும் கூடப் பேசுவான். 

ஆல்பெர்ட்டின் கதைகளில் எப்போதும் கயோட்டீதான் உண்டு, அவனே அவற்றை இட்டுக் கட்டினாலும் சரி, அல்லது வதந்தியைப் பரப்புகிறானென்றாலும் சரி. சிலசமயம் அவனே கயோட்டீயாகி விடுவான், சில சமயம் அவன் ஆல்பெர்ட்டாக இருப்பான், சில நேரம் அவன் வேறுயாரோவாகி விடுவான்.  அன்று ரோலெக்ஸை விற்று விட்டு, ஜோயியின் மதுக்கடை வாசலில் அவனைச் சந்தித்தது கயோட்டீ இல்லை, அது பில்லி யாஸீ (yázhí ). ஒருகால் இப்போதிலிருந்து பத்து வருடங்கள் முன்பு, பில்லியானவன் பசுமை கலந்த நீல வானத்தின் கீழ், சிலந்திப் பாறை அருகே நின்றிருந்திருக்கலாம், மேலே பார்த்திருக்கலாம், நிறைய நேரம் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம், பிறகு திரும்பி அருகிலிருந்த நெடுஞ்சாலையைப் பார்க்க நடந்திருக்கலாம், தன் கட்டை விரலை சாலையைப் பார்க்க நீட்டி இருக்கலாம், அதன் பிறகு திரும்பிப் பார்க்காமல் இருந்திருக்கலாம், அப்போது ஏற்கனவே எல்லாம் கடந்து போய்விட்டிருக்கும்.  ஒருநாள் காலை விழிக்கிறான், அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழிந்து போய் விட்டன, அவனால் தன் பாதையைத் தெரிந்து கொண்டு திரும்பிப் போக முடியவில்லை. 

ஓ, அந்த பில்லி, அவன் நிறம் கருப்பு, உலர்ந்த தோல் போல இருக்கிறான். அவன் கையை நீங்கள் குலுக்கினால், மாடு மேய்ப்பவனின் காலணியைக் கையில் பற்றினால் போல இருக்கும். அவனுக்கு நிறைய பழைய பாடல்கள் தெரியும், யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள், அவனுக்கு நல்ல குரல் வளம், வலுவானதும் கூட. சொந்த ஊரில் நடனக்காரர்களுக்கு அவன் தாளவாத்தியங்களை வாசித்திருந்தான், ஆனால் இப்போது அவனுடைய கைகள் ரொம்பவே நடுங்குகின்றன என்கிறான். இப்போதெல்லாம் அதிகம் பாடுவதும் இல்லை அவன். மற்றவர்களைப் போல, ஃபிட்ஸெர்னி பூங்காவில் கிடந்தபடி, தெருக்களில் அலைந்து, ஆண்களுக்கான பிரார்த்தனைக் கூடத்தில் படுக்கக் கட்டில்கள் போதாமல் போய்விட்டால் சந்துகளில் படுத்துறங்கி எங்களில் ஒருவனாகி விட்டான். நாங்கள் எதற்கும் கலங்காத முகத்தை நன்றாகத் தரித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நாங்கள் கவனமின்றி இருக்கும்போது எங்களைப் பார்த்து விட்டீர்களானால், எங்கள் கண்களுக்குள் உற்றுப்பார்த்தீர்களானால், நாங்கள் எதையும் மறப்பதில்லை என்று தெரிந்து கொள்வீர்கள். ஆனால் என்ன, அனேக நேரங்களில் எதையும் நினைவு கொள்ள எங்களுக்கு விருப்பமிருப்பதில்லை. 

இந்த கயோட்டீ இருக்கிறானே, சில நேரங்களில் அவன் அத்தனை சாதுரியமாக இருப்பதில்லை. ஒரு நாள் மோட்டர் சைக்கிள்காரன் ஒருவனோடு அவன் வம்புக்குப் போகிறான், தன்னுடைய பண்டை காலத்துச் சமூகக் குழுவினரைப் போல சாகசத் தாக்குதல் நடத்தப் போவதாக, அந்த சைக்கிள்காரனை வீதியில் வீழ்த்தி உதைக்கப் போகிறதாக வீம்பு பேசுகிறான். இதைக் கேட்ட சைக்கிள்காரன் ஹிக்கரி மரக் கைப்பிடி கொண்ட வேட்டைக் கத்தி ஒன்றை எடுத்து கயோட்டீயின் தலையை வெட்டித் தள்ளி விடுகிறான். சண்டையை அது உடனே முடித்து விட்டது என்பதை மட்டும் நான் சொல்வேன். மீதமுள்ள மாலைப் பொழுது பூராவும் கயோட்டீ இங்குமங்கும் ஓடி அலைகிறான், தன் தலையைத் திரும்பப் பொருத்தித் தைத்துத் தர யாராவது கிடைப்பார்களா என்று பார்க்கத்தான். 

ஜிம்மி கோல்ட்வாட்டர் சொல்கிறான், “அந்த கயோட்டீ இருக்கானே, அவன் இதுலெ அதுலென்னு இல்லை, எதுலேயாவது தன் தலையைத் தொலைக்காம இருக்கறதில்லே.”

நாங்களெல்லாம் சிரித்தோம்னு சொல்லி விடுகிறேன். 

ஆனால் ஆல்பெர்ட் இருக்கிறானே, அவன் அந்த சைகையைத் தீவிரமாகவே எடுத்துக் கொண்டான். அவன் இன்னும்தான் குடிக்கிறான், ஆனால் இப்போது அவன் குடிப்பது காஃபி, அண்டங்காக்கை போலக் கருப்புக் காஃபி, அல்லது ஒரு தகரக் குவளையில் கொதிக்க வைத்து அவனே தயாரிக்கிற தேநீர், அந்தத் தேநீருக்குத் தேவையான தாவரங்களைக் காலியாகக் கிடக்கிற மனைகளிலிருந்து பறித்து வெய்யிலில் உலர்த்திச் சேமித்திருக்கிறான். பாழடைந்த தொழில் கூடம் ஒன்றில் இப்போது அவன் தங்குகிறான், அதில் ஒரு சுவரில் இறகுகளையும், எலும்புகளையும் ஒட்டிக் கொண்டு வருகிறான். அவை ஏதோ அபாரமானவை இல்லை, கழுகுச் சிறகுகளிலிருந்து கிட்டும் இறகுகளோ, கரடிகளின் தாடைகளோ, ஓநாயின் மண்டை ஓடோ இல்லை. சும்மா புறாக்களின், காகங்களின் இறகுகள், எலிகளின் எலும்புகள், பறவை எலும்புகள், மூஞ்சூறுகளின் மண்டை ஓடுகளைக் கம்பியில் கோர்த்த ஒரு கழுத்துச் சங்கிலி, இப்படி எங்காவது கிடப்பவற்றைத்தான் அவன் சேகரிக்கிறான். குச்சிகள், உலர்ந்த பூண்டுச் செடிகள், தகர டப்பிகளிலிருந்தும், புட்டிகள், மற்றும் ஜாடிகளிலிருந்தும் அவன் தயாரிக்கும் கிலுகிலுப்பைகள். இத்தனை குப்பைகளோடு, சுவரில் உருவங்களை வரைந்து, வண்ணம் தீட்டுகிறான். இடிப் பறவை, கரடி, ஆமை, அண்டங்காக்கை இவைதான் அந்த உருவங்கள். 

எல்லாருமே ஆல்பெர்ட் ஒரு பைத்தியக்காரப் பழங்குடி என்று ஒத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். 

இப்போது அவனுக்குப் பணம் கிடைத்தால், சாப்பாட்டை வாங்கி அதைப் பலரோடு பகிர்கிறான். சில சமயம் பாம் தெருவுக்கு நடந்து போகிறான், அங்கே பழங்குடிப் பெண்கள் பால் தொழிலைச் செய்கிறார்கள், அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, ஓர் இரவுக்கு ஓய்வு எடுக்கும்படிச் சொல்கிறான். சில சமயம் அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சும்மா சிரித்து விட்டுப் போகிறார்கள், அடுத்ததாக அருகில் வந்து நிற்கும் காரில் ஏறிக் கொள்கிறார்கள். சில சமயம் பணத்தை வாங்கிக் கொண்டு, அருகில் இருக்கும் காஃபிக் கடையில் போய், ஜன்னலருகே அமர்ந்துகொண்டு, காஃபியைக் குடித்தபடி வெளியே, தாம் ஓர் இரவு விற்பனைக்கு அலையாமல் இருக்கிற அந்தத் தெருவைப் பார்த்து அமர்ந்திருக்கிறார்கள். 

ஆனால் அவன் கதை சொல்வதை ஒரு நாளும் நிறுத்துவதில்லை. 

என்னிடம் ஒரு தடவை சொல்கிறான், “அதுதான் நாம எல்லாம்.” ஆல்பெர்ட், அவன் சிரித்துக் கொண்டிருக்கிறான், அவன் உதடுகள் சிரிக்கின்றன, கண்களும் சிரிக்கின்றன, ஆனால் அதைச் சொல்லும்போது அவன் வேடிக்கையாக அப்படிச் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியும்.  “வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”

 “மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான். நம்ம கிட்டே கதைங்க இருந்தா, வேற யாரும் கொடுக்க முடியாத ஒண்ணை, நமக்குன்னு நாம மட்டுமே எடுத்துக்கக் கூடிய ஒண்ணை, அவங்க நமக்குக் கொடுப்பாங்க, ஏன்னா நம்மளோட கௌரவத்தை வேற யாரும் நமக்குத் திருப்பிக் கொடுக்க முடியாது. நாமளேதான் நமக்குன்னு அதைத் திரும்ப எடுத்துக்கணும்.”

“நம்ம கௌரவத்தை நாம இழந்தா, நாம எல்லாத்தையும் இழந்துடுவோம். நாம நம்ம கதைங்களைத் தெரிஞ்சுக்க விரும்பறதில்லே, ஏன்னா நாம் நினைவுபடுத்திக்க விரும்பல்லை. ஆனால் நாம நல்லதையும் கெட்டதையும் சேர்த்துத்தான் எடுத்துக்கணும், நம்மளைப் பூரணமாக்கிக்கணும், மறுபடியும் கௌரவமுள்ளவங்களா உணரணும். தன்னை மதிக்கிறவங்க ஒரு போதும் தோற்கடிக்கப்பட மாட்டாங்க. அவங்க சண்டைகள்லே இழக்கலாம், ஆனால் போரை இழக்க மாட்டாங்க, ஏன்னா அவங்க போர்ல தோற்கறதுக்கு எதிராளிங்க புறப்பட்டுப் போய் அவங்கள் ஒவ்வொருத்தரையும் கொல்ல வேண்டி இருக்கும், ஒரு சொட்டு ரத்தம் அவங்க கிட்டே இருந்தாலும் கொல்ல வேண்டி வரும். அப்போக் கூட, கதைங்க தொடர்ந்தபடியே இருக்கும். ஆனா அதைக் கேட்கப் பழங்குடி மக்கள்தான் இருக்க மாட்டாங்க.”

இந்தக் கயோட்டீ இருக்கானே, அவன் எப்பவும் ஏதாவது பிரச்சினைல அகப்பட்டுப்பான். ஒருநாள் அவன் பூங்காவில் உட்கார்ந்துகிட்டு செய்தித்தாளைப் படிச்சுகிட்டிருக்கான், ஒரு பொலீஸ்காரன் அங்கெ ஒரு பழங்குடிப் பெண்ணு கிட்டே குரலுசத்திப் பேச ஆரம்பிக்கிறான், மோசமாப் பேச ஆரம்பிக்கிறான், அவளை இழுத்துத் தள்ள ஆரம்பிக்கிறான். கயோட்டீ அன்னக்கி ஏதோ பொண்ணுங்களோட காவலனாத் தன்னை நினச்சுக்ட்டிருக்கிறான், ஏதோ அவன் ஒரு வெள்ளைக்காரங்களோட படத்தில இருக்கிற மாதிரி நினைச்சுக் கிட்டிருக்கிறான் போல, அந்த பொலீஸ்காரனோடு சண்டைக்குப் போகிறான். மோசமாக உதை வாங்குறான், பிறகு நிறைய பொலீஸ்காரங்க வந்து சேர்றாங்க, அவனை இழுத்துக்கிட்டுப் போய், சிறைல அடைக்கிறாங்க. 

அந்த ஜட்ஜ் இருக்குறாரே, அவர் கயோட்டீயை ஒரு வருஷத்துக்கு ஒரு சுண்டெலியாக மாத்தறார், அதனால இப்போ கயோட்டீக்கு இன்னும் அதே கோணவாய்ச் சிரிப்புதான், கூர்மையான தாடைதான், நீளமான காதுங்கதான், கூடவே புதர் மாதிரி அதே வாலும் இருக்கு, ஆனால் அவன் இப்போ எத்தனை சிறிய உரு என்றால், உங்கள் உள்ளங்கையில் அவனைப் பொருத்தி விடலாம். 

“என்னை எத்தனை சின்னவனா நீங்க ஆக்கினாலும் அதொண்ணும் பொருட்டே இல்லை,” கயோட்டீ ஜட்ஜிடம் சொல்கிறான், “நான் இன்னமும் கயோட்டீயாத்தான் இருக்கேன்.”

ஆல்பெர்ட் இல்லையா, அவன் இப்போது இன்னும் தீவிரமாக ஆகி விட்டான். ஜெயிலில் இருந்து வெளியில் வந்த பிறகு மறுபடியும் பாழான அந்தத் தொழிற்கூடத்திலேயே வாழ்க்கை நடத்துகிறான். சின்னப் பயல்கள் அவனுடைய அந்தச் சுவரை உடைத்தெறிந்து விட்டார்கள், அதனால் நேரடியாக அதைச் சரி செய்வதில் இறங்கி விட்டான். முன்னை மாதிரி சாப்பாட்டைப் பகிர்ந்து கொடுக்கிறான், தேநீரைக் கொதிக்க வைக்கிறான், முடிகிறபோது பழங்குடிப் பெண்களை அவர்கள் தங்களின் உடலை விற்பதிலிருந்து காக்கிறான், கதைகள் சொல்வதை மீண்டும் தொடர்கிறான். சில நபர்கள் அவனை ஒரு சாமியாடி (ஷாமன்) என்று நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள், அவனைப் பழைய கிக்கஹா சமூகத்துப் பெயரால் அழைக்கிறார்கள். 

டான் ஒய்ட் டக், பில்லி யாஸீக்கு அவன் பெயரை மொழிபெயர்த்துச் சொல்கிறான், ஆனால் பில்லிக்குத் தான் கேட்டது என்னவென்று தெளிவாகவில்லை. (க்)நோ மோர் ட்ரூத்துங்கறதா, இல்லை, நோ மோர் ட்ரூத்துங்கறதா, எது? (மேலும் உண்மையைத் தெரிந்து கொள் என்பதா, அல்லது உண்மை இனிமேல் இல்லை என்பதா?) 

“நீ அதை ஒரு ‘கே’ யோடு எழுதுவியா, இல்லையா?” என்று ஆல்பெர்ட்டைக் கேட்கிறான் பில்லி. 

“உனக்கு என்ன வேணுமோ அந்த மாதிரி எழுது,” என்று அவன் தான், அந்த ஆல்பெர்ட் சொல்கிறான். 

 பில்லி இருக்கிறானே, அவன் அந்தப் பெயரை எப்படி எழுதுவது என்று கற்றுக் கொள்கிறான், ஆல்பெர்ட்டைப் பற்றிப் பேசுகையில் அதைத்தான் அவன் பயன்படுத்துகிறான். நிறைய மக்களும் அதையே செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் மற்றவர்கள் ஆல்பெர்ட் என்றேதான் அழைக்கிறார்கள். 

ஒரு நாள் இந்த கயோட்டீ, சமூகக் கூட்டம் (பாவ் வாவ்) ஒன்றைக் கூட்ட வேண்டும் என்று தீர்மானிக்கிறான், அதனால் இந்த காலி மனையிலிருந்து குப்பை கூளத்தை எல்லாம் அகற்றுகிறான், வட்டத்தை வரைந்து இடம் பண்ணுகிறான், நெருப்பை மூட்டுகிறான். ஜனங்கள் வருகிறார்கள், ஆனால் யாருக்கும் பாட்டுகள் ஏதும் இப்போது தெரிந்திருக்கவில்லை, நடனமாடுவோருக்குத் தேவையான தாளவாத்தியங்களை வாசிக்கவும் யாருக்கும் தெரியவில்லை,  யாருக்கும் நடனத்துக்கான அடவுகளும் தெரியவில்லை. எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, சுற்றி நின்றுகொண்டிருக்கிறார்கள், அசட்டுத்தனமாக இருப்பதாக உணர்கிறார்கள், அப்போது கயோட்டீ இருக்கிறானே, அவன், பாடத் துவங்குகிறான். யா-ஹா-ஹேய், யா-ஹா-ஹேய், பாடிக் கொண்டு வட்டத்தில் தரையில் காலை உதைத்துக் கொண்டு சுற்றி வருகிறான், மண்ணையும் புழுதியையும் கிளப்புகிறான். 

கயோட்டீ செய்கிறதை கோமாளித்தனமாகப் பார்த்து மக்கள் எல்லாரும் சிரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆஞ்சி க்ரோ உரக்கச் சொல்கிறாள், “நீ ஒரு பைத்தியக்காரப் பழங்குடிதாம்பா!” மற்றவர்கள் இன்னும் கொஞ்சம் சிரிக்கிறார்கள், கயோட்டீ வட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து நடனம் ஆடுவதைப் பார்க்கிறார்கள். 

ஆனால் அவனிருக்கிறானே, ஜிம்மி கோல்ட்வாட்டர், ஒரு குச்சியை எடுத்துக் கொள்கிறான், கயோட்டீ செய்த ஒரு மேளத்தைப் பார்க்க நடக்கிறான். அது இந்தப் பெரிய உலோகத் தொட்டிதான், ஓட்டை உடைசல் கூடத்திலிருந்து மீட்டு எடுக்கப்பட்டது, அதை கயோட்டீ ஒரு தோலால் மூடி இறுகக் கட்டி இருக்கிறான், அவன் எங்கேயிருந்து அந்தத் தோலைக் கொண்டு வந்தானென்று யாருக்குத் தெரியும், அதை யாரும் கேட்கவில்லை. ஜிம்மி அந்த மேளத்தின் தோலை அடிக்கிறான், எல்லாரும் சிரிப்பதை நிறுத்துகிறார்கள், அவனை நோக்குகிறார்கள், அதனால் ஜிம்மி அந்தத் தோலை மறுபடி அடிக்கிறான். சீக்கிரமே அவனுக்கு கயோட்டீயின் நடனத்துக்கான ஜதி கிடைத்து விடுகிறது, அப்போது டான் ஒய்ட் டக் இல்லையா, அவன், ஒரு குச்சியை எடுத்துக் கொள்கிறான், ஜிம்மியோடு அந்த மேளத்தைத் தட்டுவதில் சேர்ந்து கொள்கிறான். 

பில்லி யாஸீ இருக்கிறானே, அவன் அப்போது பாடத் துவங்குகிறான், கயோட்டீயின் பாட்டை எடுத்துக் கொண்டு, அதைச் சுற்றி ஒரு ஓட்டம் ஓட விடுகிறான், இப்போது அவன் சிலந்திப் பாறையைப் பற்றியும், நீலப் பச்சை வானத்தைப் பற்றியும் பாடிக் கொண்டிருக்கிறான், ஆனால் ஒவ்வொருத்தரும் அதைத் தன் வழியில் கேட்கிறார்கள், தாங்கள் விரும்பும் கதைகளை அதில் கேட்கிறார்கள். இப்போது அங்கே மேலும் பலர் தாளம் தட்ட வருகிறார்கள், நடனம் ஆட நிறையப் பேர் முன்வருகிறார்கள், யாருக்கும் நடப்பதெல்லாம் பிடிபடுவதற்கு முன், இரவு முடிந்து விடுகிறது, அங்கேயிருக்கும் கைவிடப்பட்ட தொழிற்கூடத்தின் கூரைக்கு மேலாக விடிகாலை எட்டிப் பார்க்கிறது, இங்கே எத்தனை பைத்தியக்காரப் பழங்குடிகள் என்று எண்ணுகிறது. ஜனங்கள் இங்குமங்கும் படுத்துக் கிடக்கிறார்கள், உட்கார்ந்திருக்கிறார்கள், தட்டை ரொட்டியைச் சாப்பிடுகிறார்கள், கயோட்டீ கொதிக்க வைத்த தேநீரை அருந்துகிறார்கள். அவர்கள் எல்லாரும் களைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய இதயங்களில் ஏதோ இருக்கிறது அது நெஞ்சை நிரப்பி விட்டிருக்கிறது. 

கயோட்டீ இருக்கிறானே அவன் சொல்கிறான், “இது ஒரு அருமையான பாவ் வாவ்.”

ஆஞ்சி இருக்கிறாளே அவள் தலையசைத்து ஆமோதிக்கிறாள். அவள் கயோட்டீயின் அருகே அமர்ந்திருக்கிறாள், வியர்த்து வழிகிறாள், சூடாக இருக்கிறாள், இதற்கு முன் இத்தனை எழிலாக அவள் இருந்ததில்லை. 

     “ஆமாம்,” என்கிறாள், “நாம இதை மறுபடி நடத்தணும்.”

அந்த ராத்திரிக்குப் பிறகு அடிக்கடி பாவ் வாவ்களை நாங்கள் நடத்துகிறோம். மாதம் ஒருதடவையோ, இல்லை சில முறை இரண்டு தடவையோ நடக்கின்றன. சில பழங்குடிகள் நடனத்துக்குத் தகுந்த உடுப்புகளைத் தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள், தங்களுடைய சிறப்புக் குடியிருப்புகளுக்குத் திரும்பிப் போய், அங்கே முதியோரிடம் நடனத்துக்கான அடவுகளையும், பாட்டுகளையும் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். இப்போது நாங்கள் ஒரு சிறு சமூகம்போல உணர ஆரம்பிக்கிறோம், புலம் பெயர்ந்து வாழ்கிற ஒரு சிறு பழங்குடிச் சமுதாயமாக இருக்கிறோம். பாழடைந்த குடியிருப்புகளும், கைவிடப்பட்ட கட்டடங்களும் எங்களைச் சுற்றிலும் நிற்கின்றன. இப்போது எங்களுடைய கதைகளை நாங்கள் நினைவு கூரத் தொடங்குகிறோம், மதுப்புட்டிகளைப் பகிர்வதற்குப் பதிலாக இவற்றை ஒருவரோடொருவர் பகிர்கிறோம். ஒரு கட்டத்தில் நாங்கள் மதிப்புள்ளவர்கள் என்று உணர ஏதோ இருக்கிறதாக நாங்கள் அறிகிறோம். 

எங்களில் சிலர் வேலைகளைத் தேடிக் கொள்கிறார்கள். எங்களில் சிலர் இருக்கிறோமே, நாங்கள் போதையடிமைத் தனத்திலிருந்து மீண்டு மேலெழ முயல்கிறோம், ஆனால் அவ்வப்போது கீழே விழுந்தவண்ணம் இருக்கிறோம். எங்களில் சிலர் எங்களால் இருக்க முடியாத குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், அந்த வீடுகளில் மூச்சுக் கூட விட முடியாமல் இருந்தவர்கள், இங்கும் அங்கும் அலைந்து விட்டு, கடைசியில் ஆல்பெர்ட் உதவி செய்ததால் நாங்கள் கண்ட இந்தச் சமூகக் குழுவில் சேர்ந்திருக்கிறோம். 

பாருங்க, இந்த கயோட்டீ இருக்கிறானே, அவன் மறுபடியும் தொல்லையில் சிக்கிக்கிட்டான், இந்த கயோட்டீ, அவன் எப்போதுமே தொல்லையில் மாட்டிக்கிறான், எனக்கு இது தெரிகிற மாதிரி, உங்களுக்கும் இதெல்லாம் இப்பொ தெரியும். இந்த முறை அவன் சிறைல இருந்தப்ப, அவன் கவனிச்சது என்னனா, வெளில இருக்கிறது போல உள்ளேயும் எல்லாமே சமூகக் குழுங்கதான். 

வெள்ளையரின் குழுக்கள், கருப்பர்களின் குழுக்கள், மஞ்சள் நிறத்தவர் குழுக்கள், பழங்குடிக் குழுக்கள். இறுதியா அவனுக்குப் புரிகிறது, ஒருகால் எப்பவுமே ஒரே ஒரு சமூகமாக இருக்கிறது சாத்தியமில்லையோங்கிறது. ஆனால் அதற்காக நாம் அப்படி இருக்க முயற்சி செய்வதை நிறுத்தத் தேவையில்லைன்னும் புரிஞ்சுக்கிறான். 

ஆனால் ஜெயிலில் கூட அந்த கயோட்டீ, அவனால் சிக்கல்ல மாட்டிக்கிடாம இருக்க முடியல்லை, ஒரு நா அவன் இன்னொரு சண்டைல அகப்பட்டுக்கிடறான், மறுபடியும் வெட்டப்படறான், ஆனால் இந்த தடவை தான் இறக்கப் போறோம்னுதான் அவன் நினைக்கிறான். 

கயோட்டீ இருக்குறானே, அவன் சொல்றான், “ஆல்பெர்ட், நான் ஒரு பைத்தியக்காரப் பழங்குடி. நான் ஒருபோதும் கத்துக்கப் போறதில்லை, அப்படித்தானே?”

“ஒருகால் இந்தத் தடவை அப்படித்தான் இருக்கும்போல,” ஆல்பெர்ட் சொல்லுறான், அவன் கயோட்டீயின் தலையைப் பிடிச்சுக் கிட்டிருக்கான், கயோட்டீயின் வாயிலிருந்து பக்கவாட்டில் ஒழுகி, முகவாயின் மேல் வழியும் ரத்தத்தைத் துடைக்கிறான்,  “ஆனாக்க, அதனாலெதான் நீ கயோட்டீயா இருக்கே. சக்கரம் இன்னொரு சுத்து சுத்தி வரும், உனக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டும்.”

கயோட்டீ தைரியமாக இருக்க முயல்கிறான், ஆனால் அவன் சோர்வா உணர்றான், அது இப்போ வலிக்கிறது, அவனுடைய நெஞ்சில இருக்குற வெட்டு, எலும்பு வரை போயிருக்கு, அது வலிக்கிறது, அவனை இந்தக் கதையோடு சேர்த்துக் கட்டுற கயிற்றை அது வெட்டி இருக்கு. 

கயோட்டீ, அவன் தான், சொல்றான், “எனக்கு நினைவு இருக்க வேண்டியதா ஒண்ணு இருக்கு, ஆனா என்னால அதைக் கண்டு பிடிக்க முடியல்லை. என்னால அந்தக் கதையைக் கண்டு பிடிக்க முடியல்லை.”

“உன்னை எத்தனை சிறுமைப்படுத்தணும்னு அவங்க முயற்சி பண்ணினாலும் கவலையில்லை,” ஆல்பெர்ட் இருக்கானே, அவன் நினைவுபடுத்துறான், “நீ இன்னமும் கயோட்டீதான்.”

“யா-ஹா-ஹேய்,” கயோட்டீ, அவன் சொல்கிறான், “இப்ப எனக்கு நினைவு வருது.”

அப்போது கயோட்டீ உதடுகள் அகலச் சிரிக்கிறான், வலி அவனை இன்னொரு கதைக்கு இட்டுச் செல்ல அனுமதிக்கிறான். 

*** ***

மூலக்கதையான   “கயோட்டீ ஸ்டோரீஸ்” 1993 ஆம் வருடம் பிரசுரமானது. இந்த மொழி பெயர்ப்புக்கு அதைப் பெற்ற இடம், ‘த வெரி பெஸ்ட் ஆஃப் சார்ல்ஸ் டு லிண்ட்’ என்கிற கதைத் தொகுப்பு. பிரசுரகர் டாகியான். 2004 ஆம் ஆண்டு பிரசுரமான புத்தகம். 

தமிழாக்கம்: மார்ச் 2022 

1. கியா ஹார்ட் உட் ஒரு ராக் இசைப் பாடகர். இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். https://www.kiyaheartwood.com/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.