தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
பெண்ணே, தோழமை, ஒருவரின் வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை உண்டாக்கும் திறன் படைத்தது. அகதையும் புறத்தையும் நுரைத்து பொங்க வைக்கக் கூடியது.
நானேதான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீயும் ஏதாவது சொல்லேன். படியில் ஏற, கால்கள் யத்தனப் படவில்லை என்றால், புண்ணியம் தானாக வந்து மடியில் விழுமா? வந்த வாய்ப்பை ஒரு முறை தவற விட்டால், பிறகு பல ஜென்மங்கள் அதற்காக காத்திருக்க வேண்டி வரும்.
மகள் முறுவலிப்பதைப் பார்த்து, அம்மா மென்மையாக –
எதை எதையோ சொல்லிக் கொண்டே போகிறேன். விதி வலியதாக இருப்பின், வாய்ப்புகளும் தானாகவே வரும். நல்லூழும் சேரும்.
மகள் வாய்விட்டு சிரிக்கிறாள்.

அம்மா, தணிந்த குரலில், என் கண் முன்னே ஒரு குருவி, தன் சிறகுகளைப் படபடத்துக் கொண்டிருக்கிறது. மின்விசிறியில் மோதிக்கொண்டுவிடப் போகிறது. இல்லையில்லை, இது குருவியில்லை, முயல். அதைப் பிடித்து என்னிடம் கொடு. இல்லாவிட்டால், ஓடிப்போய்விடும். வெகுதூரம் போய்விடும்.
சூசன் அருகே வந்து, குனிந்து பார்த்து –
அம்மா உங்கள் ஈரத் துணிகளை கொஞ்சம் மாற்றி விடலாமா?
இப்போதுதான் ஞாபகம் வந்ததா உனக்கு? நினைத்த நேரத்தில் படுக்கை விரிப்பை மாற்றுகிறாய், மருந்தை நீட்டுகிறாய், தன்னுடைய அட்டவணையில் எதைஎதையோ நிரப்பிக் கொள்கிறாய். அவ்வளவுதான்! மற்றபடி, உனக்கு வேலையில் கவனமே போதாது.
அப்படி இல்லை அம்மா.
சூசன், இறைச்சி சமைத்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. இன்று எனக்கு இறைச்சி சாப்பிட வேண்டும் போல இருந்தது. முதுகுவலி குறைந்திருக்கிறது. இறைச்சி வறுபடும் நறுமணம் வருகிறது. பெண்ணே, நல்லவேளை, யக்னி சமைக்கச் சொல்லவில்லை. இல்லாவிட்டால், நான் இன்றே புறப்பட வேண்டியிருந்திருக்கும்.
அம்மா, திரும்பத் திரும்ப ஏன் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
நீ சொல்வது சரிதான். ‘புறப்பட வேண்டும், புறப்பட வேண்டும்’ என்று புலம்புகிற வியாதி என்னை பீடித்திருக்கிறது. போகத்தான் வேண்டும். பெண்ணே, புறப்படக் காத்திருப்பவர்களின் வரிசையில் நின்றுகொண்டிருப்பவர்கள், மேலே இருப்பவனின் கண்களில் படும் போது, கண்டிப்பாக அவர்களுடைய பிரயாணத் தேதி அறிவிக்கப்படும். ஒரு விஷயம் சொல். அடுத்த மாதத்திற்குள் முசுக்கொட்டை பழங்கள் பழுத்து விடும் இல்லையா? அடுத்த மாதத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?
பத்தே நாட்கள் தான் அம்மா.
அம்மா கவனமாக தன் விரல்களில்…
ஒன்று… இரண்டு… மூன்று… நான்கு… ஐந்து… ஆறு… இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன பெண்ணே, இன்னும் நிறைய நாட்கள் எஞ்சியுள்ளன.
மகள் அம்மாவின் நெற்றியை மென்மையாக வருடுகிறாள்.
அம்மா, கூர்ந்து கவனித்தபடி,
வானில் பறக்கும் பறவைகளை நீ பார்த்திருப்பாய் இல்லையா? கிளைகளிலிருந்து உதிரும் பசுந்தளிர்களையும் பார்த்திருப்பாய். மாறும் பருவங்களின் காற்றையும் நீ அனுபவித்திருக்க கூடும். பனிபடர்ந்த புற்களின் மீது வெறுங்காலோடு நடந்தி ருப்பாய் இல்லையா? குளிர் காலத்தின் வெதுவெதுப்பான வெயிலையும் அனுபவித்திருப்பாய். பெண்ணே, இந்த உலகம், எத்தனை எத்தனை சுகங்களால் நிரம்பி இருக்கிறது தெரியுமா? கட்டில் சுகத்தை தவிர, வேறு பல சுகங்களும் இப்பூமியில் இருக்கின்றன, தெரியுமா உனக்கு?
தெரியும் அம்மா.
ஒருபோதும் உன்னை எண்ணி வருத்தப்பட்டுக் கொள்ளாதே. மனச்சோர்வை எப்போதும் தூரத் தள்ளியே வை. அருகே அண்ட விடாதே. உன்னை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. நீ யாருடைய மனவேதனைக்கும் காரணமாக இருக்க மாட்டாய். உன்னை யாரும் வேதனைப்படுத்தவும் அனுமதிக்க மாட்டாய். சற்று யோசித்துச் சொல், தேவை என வரும்போது யாருக்கு குரல் கொடுப்பாய்?
மகள், நீண்ட மவுனத்திற்கு பிறகு,
நான் யாரையும் கூப்பிட மாட்டேன். யார் என்னைத் தேடிக் குரல் கொடுக்கிறார்களோ, நான் அவர்களுக்கு பதிலளிப்பேன்.
இப்போது திருப்தியா அம்மா?
நீ எனக்கு மிகவும் பிடித்தமானவள். நான் விரும்பிப் பெற்றவள். முரட்டுத் தோலுக்குள் பலாச்சுளை இனிப்பது போல, உன்னுடைய இறுகிய வெளிப்புறத்தின் ஆழத்தில் நீரூற்றொன்று இருக்கிறது என்பதை
நான் அறிவேன்.
மகள் கோபத்தில், வெடுவெடுவென –
அம்மா, இதைப்பற்றிப் பேசவேண்டிய வேண்டிய அவசியமே இல்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியேதான் இருப்பேன்.
சரி, நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ தனி என்பதை எப்போதும் நினைவில் வைத்திரு. அதற்காக யாரையும் அருகில் வர விட வேண்டிய அவசியமில்லை. யாரும் யாரையும் ஓடும்படி வற்புறுத்த முடியாது. பின்னாலிருந்து தள்ளி விடுவதால் அல்ல, ஒருவன் தனக்கான ஓட்டத்தை, தானாகவே ஓடும்போது தான், ஓட்டப்பந்தய வீரனாகிறான்.
இது எல்லோராலும் முடியாது.
உன்னைப் போன்ற தற்சார்புடைய பெண்ணின் குரல் எதிரொலிக்க, பரந்த ஆகாசமும் விரிந்த பூமியும் தேவை. சிறிய, மதிப்பேதுமற்ற விஷயங்களைப் பொருட்படுத்தாதே. மனதைச் சங்கிலியிட்டு ஒடுக்கிக் கொள்பவர்களின் ஆகாயம், அவர்கள் வரைக்குமே விரிகிறது. அவர்களுடைய ஓட்டமும் அவர்களது வீடு வரைக்குந்தான். வீட்டுக் கணப்பருகிலேயே, சுடச்சுட, ரொட்டிகளைச் சுட்டு மலைபோல அடுக்குவதிலும், வீட்டை ஒட்டியே சிலந்தி வலை பின்னுவதிலுமேயே, அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறாயா, அந்த மாதிரியான வாழ்க்கையிலும் பெரிதாக ஒன்றுமில்லை.
அம்மா, இப்போது இந்த விஷயங்களைப் பற்றி யெல்லாம் பேசாதீர்கள்.
நான் போன பிறகு இவற்றையெல்லாம் உனக்குச் சொல்வதற்காக திரும்ப வரப்போவதில்லை. நீ யாரையும் சார்ந்து இல்லை. சுதந்திரமானவள். இதுவே உன் சக்தி. உன் பலம்.
சரி அம்மா.
வாழ்நாள் முழுவதும் உன் வீட்டாரின் ‘ஆம்’ ஐக் கேட்டு வந்திருக்கிறேன். வழுக்கிச் செல்லும் மிருதுவான சொற்கள். ஆனால் அவற்றின் பின்னிருக்கும் உண்மையை நான் அணுஅணுவாக அறிவேன். என் திருமணத்தின்போது எனக்கு பதினெட்டு வயது. உன் அப்பா அழகானவர். தூய்மையான உள்ளமும் கட்டுடலும் வாய்ந்தவர்.எங்களுக்குள் மிக நன்றாக ஒத்துப்போனது. நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். நான் எங்கே எப்போது என் வாழ்க்கையை ஆரம்பித்திருப்பேன் என்று கொஞ்சம் யோசித்துப் பார்.
ஏ பெண்ணே! ஒரு விஷயம் சொல். உன் குடும்பத்தினர் ஏன் தங்களை மற்றவர்களைவிட ஒரு மாற்று உயர்ந்தவர்களாக கருதிக் கொள்கிறார்கள்? பெரும்பாலான குடும்பங்களில், மூன்றாம் தலைமுறை, தானாகவே கீழே இறங்கி விடுகிறது. குடும்ப கௌரவம் தலைக்கேறி விடுவது சரியானதல்ல.
அம்மா, குடும்பங்களுக்கு அவற்றுக்கென விசேஷ நினைவுகள் உண்டில்லையா.
ஆமாம். உண்மைதான். ஆனால் குடும்பங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் எப்போதும் ஒரே நேரத்தில் நிகழ்வதில்லை.நிகழவும் முடியாது. பார், உன் எதிரில் தான் படுத்து கிடக்கிறேன். திருமணப் புடவை அணிந்த அந்த இளம்பெண்ணை எங்கிருந்தாவது திரும்பக் கொண்டு வாயேன்! கொண்டு வர முடியுமா உன்னால்? முடியாது இல்லையா?
சற்றே நிறுத்தி…
பெண்ணே மணமகள் அலங்காரத்தில் உன் அம்மா மிகவும் அழகாக இருந்தாள். உறவினர்கள் அவளை மிகவும் வாஞ்சையோடு பார்த்தார்கள். ஒருவரின் இளமையையும் ஆற்றலையும் காலம் எப்படி சீர்குலைத்துவிடுகிறது பார்! ஏணிப்படிகளில் ஏற ஒரு காலம். இறங்க ஒரு காலம். எப்போதும் ஒரே போல ஒளி வீசியவர் எவருமில்லை.
அம்மா திருமணத்துக்குப் பிறகு இந்தப் புதுக் குடும்பம் உங்களுக்கு எப்படி இருந்தது?
உன் குடும்பத்தை பற்றி பெரிதாக பெருமை பீத்திக் கொள்ளாதே. நான் திருமணமாகி இந்த குடும்பத்துக்கு வந்தபோது, அதன் செல்வ வளம் சற்றே ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. இருந்தபோதிலும், தற்பெருமைக்கும், கர்வத்துக்கும் ஒரு குறைச்சலும் இல்லை. கூடவே, பணிவும் அடக்கமும் கொண்டவர்களாகவும் உன் குடும்பத்தார் இருந்தார்கள். பெரிய மாளிகையின் பகட்டும் ஆடம்பரமும் வெளிறிப்போயிருந்த போதிலும், கொஞ்சம் இன்னமும் மீதமிருந்தது. வறுமையும் ஏழ்மையும் கலந்தே இருந்தது.
அம்மா, அப்பாவைப் பற்றிச் சொல்லுங்கள்.
குடும்பத்தில் இறங்குமுகம் ஒருமுறை தொடங்கிவிட்டால், அது குடும்பத்தை ஒன்றுமில்லாமல் காலியாக்கி பிறகே நிற்கிறது. உன்னுடைய அப்பா மிகவும் அமைதியான குணம் கொண்டவர். நிதானமாகவும் தெளிவாகவும் நடந்து கொள்பவர். நான் சற்றுக் கடினமானவள்.
எனக்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருந்தது…. கற்றுக்கொண்டேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அம்மா திடீரென கோபத்துடன்…
என்னைத் தொடர்ந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறாயே, ஏன்? என் கவனத்தை வலி/வேதனைகளிலிருந்து திருப்புவதற்காகவா அல்லது உன்னுடைய பொழுதுபோக்குக்காகவா? முதுமை மனிதனின் எல்லாப் பெருமைகளையும் உறிஞ்சிக்கொண்டு விடுகிறது. மனிதனை மலினப்படுத்தி விடுகிறது. முதுமை மனிதர்களை விழுங்கும் கருமேகம்.உங்கள் எல்லோருக்கும் பாரமாக இருக்கிறேன். இவ்வளவு நீண்ட ஆயுளுக்கு என்ன அவசியம் ?
என் பேரன், என் மகளுடைய மகன், இருபத்தி ஏழு வயதில் இறந்து போனான். வாட்டசாட்டமாக உயரமாக அவன் எத்தனை அழகாக இருப்பான்! பெரிய இழப்பு அது. மரண அடி. அந்த அநீதிக்கு எதிராக, இங்கும் சரி, மேலேயும் சரி, எந்தவித ஆர்ப்பாட்டமோ, முறையீடோ செய்ய முடியவில்லை. அது மரணம் இல்லை; கொலை. பெண்ணே, ஒருமுறை அவனுடைய புகைப்படத்தை எனக்கு காட்டு. கண்களுக்கெதிரேயே நிற்கிறான். நீ உயிரோடு இருந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் மகனே! யார் உன்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது? அன்று அவனுடைய நிச்சயதார்த்தம். அவனுடைய வருங்கால மனைவி அலங்கரித்துக்கொண்டு காத்திருந்தாள். நிச்சயதார்த்த மோதிரம், அவன் விரலில் ஏறவே இல்லை. இத்தகைய மோசமான விளையாட்டை விளையாடுபவன் வேறொருவன் பெண்ணே! இவன் தான் இப்படி என்றால் என் மூத்த பேரனின் கதையை கேள். விதிக்கு சவால் விடுகிற வகையில், ஆகாயம் தொட அவனும் அதே வழியைத்தான் தேர்ந்தெடுத்தான். தம்பிக்கென நிச்சயித்திருந்த பெண்ணையே மணந்து வீட்டுக்கு மருமகளாக அழைத்துவந்தான். மகளே சித்ரா! உன்னைக் காப்பாற்ற எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டன! உன்னுடைய பங்கில் குறைந்த ஆயுளே விதிக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பாகவே, விளையாட்டு முடிவுக்கு வந்துவிட்டது.. பெற்ற குழந்தையை கண்ணாரப் பார்க்கக் கூட உனக்குக் கொடுத்து வைக்கவில்லை!
சூசன் என் கண்ணில் மருந்துவிடு. ஏனோ தெரியவில்லை, தண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டேயிருக்கிறது. என்னுடைய கண்கள் மிகவும் பழையதாகி விட்டன.
அம்மா ஹார்லிக்ஸா, சாக்லெட்டா அல்லது தேநீரா?
நீ எதை விரும்புகிறாயோ அதை கொடு. அக்கா எங்கே? இங்கிருந்து போய் விட்டாளா?
அம்மா, அக்கா ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனக்கு போர்வை போர்த்தி விடு.
போர்வையா? மிகவும் சூடாக இருக்கிறதே அம்மா.
நான் என்ன சொல்கிறதோ அதைச் செய். இந்தப் பாடலின் லயமும் தாளமும் உனக்குப் புரியாது. நீ உன்னுடைய அட்டவணையை நிரப்பிக்கொண்டிரு. மருந்து கொடு. கட்டு போடு. ஊசி போடு. காய்ச்சல் இருக்கிறதா என்று பார். டாக்டருக்கு போன் செய். திரும்பிப் படுக்க வை. ஏன் சிரிக்கிறாய்? நீ நிரப்பி வைத்திருக்கிற எல்லா காகிதங்களும் குப்பையோடு போகும். எல்லோருடையதும் அங்குதான் போகிறது.
அம்மா, ஹார்லிக்ஸ் கொண்டு வருகிறேன்.
வேண்டாம். முதலில் என் தலையைக் கவனி. கொஞ்சம் என்னை தடவு. என் மண்டை வலிக்கிறது.
சூசன் தலைக்கு தைலம் தடவுகிறாள். அம்மா கண்களை மூடிக் கொள்கிறார்.
தூங்கி எழுந்த பிறகு…
அக்கா எழுந்திருக்க வில்லையா? இன்னுமா தூங்கிக் கொண்டிருக்கிறாள்?
ஆமாம் அம்மா.
இந்த நகம் வளர்ந்து என்னை தொந்தரவு செய்கிறது. இதை வெட்டி விடு.
அம்மா, நேற்றுத் தானே வெட்டினோம்.
வெட்டி இருக்கலாம். ஆனால் என் திருப்திக்காக நான் சொல்வதைச் செய்.
சூசன், உன்னுடன் கூடப் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?
ஆமாம் அம்மா. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அம்மா அப்பாவுக்கு நீ பணம் அனுப்புகிறாயா?
ஆமாம் அம்மா.
தனக்காக ஏதேனும் பையனைத் தேடி வைத்திருக்கிறாயா? நீ தானாக தான் தேடிக்கொள்ள வேண்டும்.
இல்லை அம்மா. இன்னும் யாரையும் தேடிக் கொள்ள வில்லை. நான் முதலில் நர்சிங் படிக்கலாமென எண்ணியிருக்கிறேன்.
உங்கள் எண்ணம் நல்லதுதான். இறுகப் பற்றிக் கொள். நடுவிலே விட்டுவிடாதே. ஒன்றிரண்டு ‘நண்பர்களேனும்’ இருக்கிறார்களா உனக்கு?
சூசன் புன்னகைக்கிறாள்.
நீ அவர்களுக்காக வீணாகப் பணத்தைச் செலவழிப்பதி ல்லையே?
சூசன் சிரித்தவாறு, ‘இல்லை அம்மா’ என்கிறாள்.
நான் சொல்வதைக் கேள். முழுச் செலவையும் நீ ஏற்காதே. அவனையும் ஏற்க விடாதே. இருவரும் பாதிப் பாதி. என்ன புரிந்ததா? இல்லாவிட்டால் கால் மிதிக்கிற மிதியடி போல ஆகிவிடுவாய். உன்னை வளைத்து விழுங்கி விடுவார்கள். உனக்கு நான் சொல்ல வந்ததின் பொருள் புரிந்ததா?
புரிந்தது அம்மா.
சூசன், திருமணத்திற்கு பிறகு யாருடைய கையிலும் விளையாட்டு பொம்மையாகிவிடாதே. தன்னுடைய ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள விடாது முயற்சி செய். வாசலில் மணி அடிக்கிறது. யார் என்று பார்.
யாரும் இல்லை அம்மா.
போய் மறுபடியும் பார். இது ஷோபா ராம் வரும் நேரம்.
அம்மா, ஷோபா ராம் ஏற்கனவே வந்தாகிவிட்டது. சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
பாயசம் வைத்தாகிவிட்டதா என்று கேள். காலையிலேயே சொன்னேனே.
அம்மா, வணக்கம்.
நலமாக இரு ஷோபா ராம்.
பாயசம் தயாராகிவிட்டது. ருசி பார்க்கிறீர்களா?
கொஞ்சமாகக் கொண்டுவா. இரண்டே இரண்டு ஸ்பூன்.
இந்தாருங்கள். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டடி ருக்கிறேன்.
உனக்குத் தெரியுமில்லையா, என் பற்கள் அசலான உறுதியான பற்கள்.
அம்மா, மாலை பூரி செய்யவா?
வேண்டாம். வேண்டாம். பாயசமே ஜீரணமாகாமல் வயிற்றில் உட்கார்ந்து கொண்டிருக்கும்.
எதோடு எதை சேர்த்து சமைக்க வேண்டும் என்று நான் உனக்கு எப்பொழுதாவது சொல்லிக் கொடுக்கிறேன். இந்த விஷயத்திற்காகவே பெரும் நஷ்டங்களை சந்தித்தி ருக்கிறேன். இதற்காக எத்தனை அபராதம் கட்டி இருக்கிறேன் தெரியுமா?
மகள் அருகே வந்து நின்று –
அம்மா, அது என்ன அபராத கட்டணம்? சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே. சொல்லுங்களேன் கொஞ்சம்.
ஷோபா ராம், பாயசம் பிரமாதமாக இருக்கிறது.
அல்வா- பூரி பாயசம் – பூரி பக்கோடா – பஜ்ஜி தயாரித்து, எல்லோருக்கும் பரிமாறு. ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள். நீ செய்ய வேண்டிய வேலை இன்னும் ஒன்று மீதி இருக்கிறது. சாக்குப்போக்கு எதுவும் சொல்லாதே. அம்மாவை கரையேற்றி விடும் வரை கூட இரு.
மகள், வேடிக்கையாக-
அது என்ன அபராத கட்டணம் அம்மா?
முக்கியமாக எதுவுமில்லை. சமைப்பதும் சாப்பிடுவதும் தொடர்பான சிறுசிறு சச்சரவுகள். வாதங்களும் தர்க்கங்களும் நிற்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, அவற்றை நிறுத்த என்னிடமும் ஒரு உபாயம் இருந்தது.
தேநீர் தட்டை உன் அப்பாவின் முன்னால் வைத்து விடுவேன். தேநீர் உங்களுக்காக காத்திருக்கிறது, குடித்துவிட்டு, வழக்கை முடித்து தீர்ப்பு சொல்லுங்கள் என்பேன். உன் அப்பாவுக்கு நல்ல தேநீர் மிகவும் பிடிக்கும். நன்றாக தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை தேநீரில் அனைத்தையும் மறந்து விடுவார்.
அம்மா உண்மையிலேயே உங்களுக்கிடையே இத்தனை வாக்கு வாதங்கள் ஏற்பட்டதா?
ஏற்பட்டிருந்திருக்கலாம். இப்போது எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நீ ஏன் என்னை தூண்டி விடுகிறாய்? இதையெல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன?
அம்மா, தெரிந்துகொள்வதில் என்ன தவறு?
பெண்ணே, எல்லோருடைய பயணமும் இதே மாதிரி கொலை மற்றும் பழிக்குப்பழி என்றே கழிகிறது. இந்தக் குடும்ப நாடகம் சமமானவர்களுக்கிடையே நடப்பதல்ல. சமமற்றவர்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டு தான் இது. வீட்டு எஜமானர், தன் வருமானத்திலி ருந்து, குடும்பத்திற்காக வசதிகளை செய்து கொடுக்கிறார். கூடவே அவரது அதிகாரமும் ஆளுமையும் வளர்கிறது. இந்த அதிகாரத்தின் கீழ் தான் குழந்தைகளின் தாய் சிறைப்பட்டுப் போகிறாள்.
அம்மா!
ஆம் திருமணத்திற்குப் பிறகு பெண், குடும்ப கப்பலின் மாலுமியாக மாறி விடுகிறாள். ஏரியில் மிதக்கும் படகுகளையும் ஷிகாராக்களையும் நீ பார்த்திருப்பாயே! அப் படகுகளில் அமர்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கவலையற்று சந்தோஷமாக இருக்கும்போது, தாய் மாலுமியாகி, துடுப்புகளை வலித்து, கப்பலை கவனத்துடன் செலுத்துகிறாள். வாழ்நாள் முழுவதும் கப்பலை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். அவள் சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கும் போதுதான், அவளது வாழ்க்கை சீரடையும். யோசித்துப்பாரேன், ஒரு ஆண் உழைக்கும் போது, அவனுடைய உழைப்புக்குப் பதிலாக, அவனுக்கு சம்பளம் கிடைக்கிறது. பெண் இரவும் பகலும் உழைத்தால் கூட அவளுக்கு சம்பளம் எதுவும் கிடைப்பதில்லை. பாசத்திலும் மோகம் மாயையிலும் கட்டுண்டு, அவள் தன்னை மறந்து கிடக்கிறாள்.போதமற்று. சிரத்தையற்று. அவள் தன்னைப் பற்றிய கவனமற்று இருந்தால், வேறு யார் அவளைப் பற்றி கவலைப்படப் போகிறார்கள்.
அம்மா, உங்களிடம் எத்தனை ஞானம்!
சும்மா இரு பெண்ணே!
நான் பேசுவதைக் கேட்டு உடனடியாக என் மீது பாய்கிறாயே. ஏன்? உன்னுடைய தந்திரங்களை நான் நன்கறிவேன்.
பயணம் என்னுடையது. அதன் சாரத்தை அனுபவிப்பது என்னவோ நீ!
ஜன்னலை நோக்கி-
இந்த கணத்தை திரைச்சீலையை அகற்றிவிடு. புதுக் காற்று உள்ளே வரட்டும்.
பெண்ணே, கொஞ்ச நேரம் என்னை மௌனமாக இருக்க விடு. என் இறந்த காலம் எனக்கு முன்னே விரிந்து கிடக்கிறது.
அம்மா கண்களை மூடிக் கொள்கிறார்.
சிறிது நேரம் கழித்து, மகள் தன் முன்னே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து,
இன்னும் இங்கேயேவா உட்கார்ந்திருக்கிறாய்? இந்த உலகில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கொஞ்சம் சொல்கிறாயா? இந்தப் பிறவியில் நீ சம்பாதித்த ஏதாவது ஒன்றையேனும் சொல். நீ இதுவரையில் என்ன சாதித்திருக்கிறாய்? நான் இதுவரை என்ன சாதித்திருக்கிறேன் என்று கேட்க வந்து விட்டாயே!
மகள் எழுந்து நிற்கிறாள்.
நான் என் அறைக்கு போகிறேன்.
வேண்டாம். இங்கேயே என்னருகேயே உட்கார்ந்திரு. உனக்குப் பிடித்தமானதைப் பேசுகிறேன். காலம் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளது. நீ எங்கே நிற்கிறாய், உன் இடம் என்ன என்றேனும் சொல். எந்தத் திருப்பத்தில் நிற்கிறாய்? வரிசையில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? உன் சகோதர சகோதரிகளின் குடும்ப வட்டத்தில் உனக்கு அனுமதி இல்லை.
அம்மா, மறுபடியும் அதே பேச்சா?
பெண்ணே, நடுவில் குறுக்கிடாதே. நான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல விடு. கேள், பிள்ளைகள், பெண்கள், பேரன்கள் பேத்திகள் என என் குடும்பம் விரிந்து பரந்தி ருக்கிறது. இருப்பினும் நான் தனியாகத்தான் இருக்கிறேன். ஆனால் நீ? நீயோ கணவன் குழந்தைகள் குடும்பம் என்கிற பழைய ஏற்பாட்டிற்கு வெளியே நிற்கிறாய்.
(தொடரும்)