உயிரையும் தருவேன் உனைக்காண

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
わびぬれば
今はた同じ
難波なる
みをつくしても
あはむとぞ思ふ

கனா எழுத்துருக்களில்
わびぬれば
いまはたおなじ
なにはなる
みをつくしても
あはむとぞおもふ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: இளவரசர் மொதொயோஷி

காலம்: கி.பி. 890-943.

இத்தொடரின் “வலிய காதல் வழிகிறதே!” என்ற 13வது செய்யுளை எழுதிய பேரரசர் யோசெய்யின் முதல் மகன்தான் இளவரசர் மொதொயோஷி. இவர் பட்டத்து இளவரசர் மட்டுமின்றிக் காதல் இளவரசரும் கூட. இவரது காதல்களைப் பற்றி “யமாதோவின் கதைகள்” என்ற 10ம் நூற்றாண்டுப் புதினம் பல்வேறு இடங்களில் பேசுகிறது. ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் கொசென்ஷு தொகுப்பில் 20 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இருபதும் மொதொயோஷி ஷின்னோஷு என்ற தனித் தொகுப்பாகவும் உள்ளது. கொசென்ஷூ தொகுப்பிலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதிலுள்ள குறிப்பின் மூலம்தான் இப்பாடல் யாரை நோக்கி எழுதப்பட்டது என்பது தெரியவருகிறது.

பாடுபொருள்: எப்பாடுபட்டாவது காதலியை மீண்டும் ஒரு முறை காணவேண்டும் என முயற்சித்தல்

பாடலின் பொருள்: நானிவா விரிகுடாவின் நீர்மட்டம் அளக்கும் கருவியால் என் கண்ணீரின் அளவை அளக்கும் நிலைவந்து உயிரே போகும் நிலை வந்தாலும் உன்னை ஒருமுறையேனும் காணும் முயற்சியைக் கைவிடேன்.

முந்தைய பாடலைப் போலவே இதுவும் பிரிவாற்றாமையைக் கூறுவதுதான். க்யோகொக்கு எனும் பெண் மிக்க அழகுடையவள். அதுவும் எப்படிப்பட்ட அழகு என்றால், இதுவரை பெண்களை ஏறெடுத்தும் பார்த்திராத 90 வயது மதகுரு ஒருவரையே இவர் பின்னால் பித்துப் பிடித்ததுபோல் அலையவைக்கும் அளவுக்கு. இவரது தந்தை தொக்கிஹிரா இவரை எப்படியாவது அரச குடும்பத்தில் மணமுடித்து வைக்கவேண்டும் என விரும்பினார். ஆனால் பேரரசர் உதாவோ தனது அந்தப்புரத்தின் பணிப்பெண்ணாக அமர்த்தினார். இவருக்கு மூன்று குழந்தைகளும் பிறந்தன. இருப்பினும் அழகின் இரசிகரான மொதொயோஷிக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் ஏதோ காரணத்துக்காக இருவரும் பிரிக்கப்பட்டார்கள். மொதொயோஷியால் இவரை மீண்டும் சந்திக்க முடியவில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுத்தான் இப்பாடலை இயற்றியிருக்கிறார்.

இப்பாடலிலும் சிலேடை பயின்று வந்திருக்கிறது. みをつくしても – மி ஓ ட்சுகுஷிதெமோ. இச்சொல்லை மூன்றாகப் பிரிக்காமல் மிவோட்சுகுஷி என்று படித்தால் அது நீர்மட்டம் அளக்கும் கோல் என்ற பொருளைத் தரும். நானிவா விரிகுடாவினுள் நாவாய்கள் நுழையும்போது தரைதட்டாமல் சென்று சேர இவ்வழியில் செல்லலாமா எனக் கணிக்க ஒரு கோலை வைத்துச் சோதித்துக்கொண்டே செல்வார்கள். காதலியைக் காண முடியாமல் கண்ணீர்ப் பெருக்கெடுப்பதால் அதன் அளவை இக்கோலை வைத்து அளக்கும் நிலை வரலாம் என்பது ஒரு பொருள். மூன்றாகப் பிரித்துப் பார்த்தால் தன்னையே பலிகொடுத்தாவது என்று பொருள் தரும். என் வாழ்வே முடிந்தாலும் உன்னைப் பார்க்க விரும்புவேன் என்கிறார். இரண்டாவது அடியில் வரும் “இப்போதும் இப்படித்தான் இருக்கிறது” என்பதையும் இணைத்து, வாழினும் சாவினும் ஒன்றுதான் என்று பொருள் கொள்வோரும் உளர்.

வெண்பா

பேரலை மேவிடும் வாரிதி போலக்கண்
நீரலை பீரிடும் போதிலும் – தாரகை
உன்பால் உயிரும் இழக்கும் நிலையும்
வரினும்நில் லாதென் முயல்வு

Series Navigation<< எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?நீ வருவாயென! >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.