- வாக்குமூலம் – அத்தியாயம் 1
- வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
- வாக்குமூலம் – அத்தியாயம் 3
- வாக்குமூலம் – அத்தியாயம் 4
- வாக்குமூலம் – அத்தியாயம் 5
- வாக்குமூலம் – அத்தியாயம் 6
- வாக்குமூலம் – அத்தியாயம் 7
- வாக்குமூலம் – அத்தியாயம் 8
- வாக்குமூலம் – அத்தியாயம் 9
- வாக்குமூலம் – அத்தியாயம் 10
- வாக்குமூலம் – அத்தியாயம் 11
- வாக்குமூலம் – 12
- வாக்குமூலம் – அத்தியாயம் – 13
- வாக்குமூலம் – அத்தியாயம் 14
- வாக்குமூலம் – அத்தியாயம் 15
- இறுதி வாக்குமூலம்
அவன்
அவளுக்கு டாக்டர்களும், ஆஸ்பத்திரிகளும் பெருகிப் போனது பெரிசாத் தெரியுது. யாராவது, எப்பமாவது இப்படி பிளாஸ்டிக் பாட்டல்கள்ள விக்கிற தண்ணிய வாங்கிக் குடிப்போம்னு நெனச்சுப் பாத்திருப்போமா? குடிக்கிற தண்ணிய வாட்டர் கேன்ல வாங்கிக் குடிக்கிற காலம் ஒண்ணு வரும்னு யாராவது நெனச்சிருப்பாங்களா? எல்லாம், தோசையப் பொறட்டின மாதிரி தலைகீழால்ல மாறிப் போச்சு. கோகோ கோலா கம்பெனிக்காரன் தாமரபரணி ஆத்துத் தண்ணிய உறிஞ்சி பேக்டரிக்கு இழுத்துட்டுப் போறான். ஶ்ரீவைகுண்டம் ஆத்துத் தண்ணி கால்வாய் வழியா தூத்துக்குடி ஸ்பிக் கம்பெனிக்கிப் போகுதுன்னு சொல்றாங்க. தண்ணி குடிக்கிறதுக்கும், வெவசாயத்துக்கும்னு இருந்தது போக, இப்பம் தொழிற்சாலைகளுக்கும் போவுது.
தொழில் வளர்ச்சி, உலகமயமாக்கல்னு என்னென்னவோ சொல்லுதாங்க. இதைச் சில பேரு எதிர்த்தெல்லாம் பார்த்தாங்க. ஒண்ணும் நடக்கலை. சுற்றுச் சூழல் பாதிப்புனு சில பேரு இன்னைக்கியும் சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. இப்போ கவர்மெண்டே சுற்றுச் சூழல் துறையைத் தொடங்கி நடத்துது. போலீஸ்காரங்க அடிச்சா, லாக்-அப் சாவுகள் நடந்தா அப்போல்லாம் மனித உரிமைக் கழகக்காரங்கதான் சத்தம் போடுவாங்க. அந்த மனித உரிமை மீறலை விசாரிக்க இப்போ கவர்மெண்டே தனித் துறையை ஏற்படுத்தி வெசாரிக்குது, தண்டனை எல்லாம் கூடக் குடுக்குது. இது எல்லாம் நல்ல வெசயங்கள்தான். இல்லைன்னு சொல்ல முடியாது.

சித்தப்பாவுக்கு கருங்கொளத்துல 1960-ல கல்யாணம் நடந்துச்சு. சித்தப்பா வேல பார்த்தது ஶ்ரீவைகுண்டத்துல. இப்போ இதை திருவைகுண்டம்னு சொல்றாங்க. ‘ஶ்ரீ’, ‘ஸ’ இதெல்லாம் கூடாதுன்னு அரசியல் கட்சிக்காரங்க சொல்றாங்க. சமஸ்கிருத எழுத்துகள் வேண்டாம்ங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, காலங்காலமா ஜனங்க சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ப் பேருகளை மாத்துறது என்ன ஞாயம்னு தெரியலை. பஸ்ஸை பேருந்துன்னு தமிழ்ப்படுத்தினாங்க. ஆனால் இந்த 2022-ல எத்தனை பேரு பேருந்துன்னு சொல்றாங்க?
சித்தப்பாவுக்கு பொண் எடுத்த ஊரு திருநவேலி. கருங்குளத்துல இருந்து திருநவேலிக்கு எப்பமாவது ஒரு பஸ்ஸு திருச்செந்தூர்ல இருந்தோ, ஆத்தூர்ல இருந்தோ போகும். அந்தக் காலத்துல ஸ்டேண்டிங் எல்லாம் கிடையாது. கருங்குளத்தில இறக்கம் இல்லைன்னா நிறுத்தாமலே போயிருவான். ஒரு ஸீட் எறங்குனா ஒரு ஸீட்தான் ஏத்துவான். இதே மாதிரிதான் திருச்செந்தூர் ஸைடு போறதுக்கும்.
சித்தப்பா கல்யாணம் முடிஞ்ச மறுநாளு மறுவீடு போறதுக்காக பொண்ணு, மாப்பிள்ளைன்னு ஒரு பத்துப் பனிரெண்டு பேரு திருநவேலி போக மெயின் ரோட்டுக்கு வந்தோம். ஒரு பஸ்கூட நிற்கலை. நிப்பாட்டுன பஸ்ஸுலயும் ஒரு ஆள், ரெண்டு ஆளுதான் ஏற முடிஞ்சிது. இத்தனை பேரும் சேர்ந்தாப்புல ஏற முடியலை. மத்தியானம் சாப்பிட்டுட்டு ஒரு மணிக்கி பஸ் ஏற வந்தவங்க சாயந்தரம் அஞ்சு மணிக்கு மேல ஆகியும் பஸ் ஏற முடியலை. எடமில்லை. எல்லாரும் வீட்டுக்கே திரும்பிப் போயிட்டோம். எல்லா ஊர்லயும் இதுதான் நெலைமை. பஸ் போக்குவரத்து ரொம்ப மோசம். இப்போ எல்லாம் தலைகீழாயிட்டுது. கருங்குளம் ரூட்டிலே அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு திருச்செந்தூர் பஸ் போவுது. திருநவேலியில இருந்து கருங்குளத்துக்கே டவுன் பஸ் ஓடுது. சந்து பொந்தெல்லாம் டவுன் பஸ், மினி பஸ்ஸுன்னு ஓடுது. இதெல்லாம் நல்லதுதான்.
முன்னே முப்பது நாப்பது வருஷத்துக்கு முந்தி பால் கெடைக்காது. பாலுக்கு ரொம்ப டிமாண்ட். இப்போ பலசரக்குக் கடை, பெட்டிக் கடைகள்ள எல்லாம் பால் பாக்கெட் சீரழியுது. திருநவேலியில இருந்து கார்டு போட்டா கருங்கொளத்துக்கு அது வந்து சேர ரெண்டு மூணு நாள் ஆவும். எவ்வளவு முக்கியமான சேதியா இருந்தாலும் தகவல் போய் சேரதுக்கு நேரமாகும். தந்தி கூட லேட்டாகும். ஆனா இப்போ எல்லார் கையிலயும் செல்போன் இருக்கு. அமெரிக்காவிலே இருந்து செல்போனிலே பேசலாம். இங்கே இருந்து அங்கே பேசலாம். கை சொடக்குகிற நேரத்திலே இணைப்பு கெடைச்சிருது. ப்ளே ஸ்டோர்லே என்னென்ன ஆப்களோ இருக்கு. டாக்ஸி, ஆட்டோ, ரயில் டிக்கெட், ப்ளைன் டிக்கெட் கூட போன்லே இருந்து புக் பண்ணலாம். பேங்குல இருக்கிற பணத்த இன்னொருத்தருக்கு வீட்டிலே இருந்தே டிரான்ஸ்பர் பண்ணலாம். கூகுள்ளே தேடினா கிடைக்காத விஷயமே இல்லை. உலகமே செல்போனுக்குள்ளே வந்துட்டுது. அசுர வளர்ச்சி.
சாந்தி, அவள மாதிரி எனக்குக் கடவுள் பக்தி இல்லைன்னு ரொம்ப வருத்தப்படுதா. ரெண்டு பேரும் எல்லா விஷயத்திலேயும் ஒத்த மனசோட இருக்கணும்னு நெனைக்கிறா. இது எப்படி நடக்கும்? சாப்பாட்டிலே இருந்து எல்லாமே ஆளுக்கு ஆள், மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசப்படுகிறதுதான உலக இயற்கை. இந்த விதியை யாராவது மீற முடியுமா? பன்முகத் தன்மை இல்லாமல் பிரபஞ்சமே இல்லையே. நான் அவளுடைய எந்த ரசனையிலும் குறுக்கிட்டது இல்லை. வித்தியாசமான சினிமாக்களை அவளுக்கு அறிமுகப்படுத்திப் பார்த்தேன். இலக்கியப் புஸ்தகங்களை வாசிக்கச் சொன்னேன். இது தப்புதான். அவளை என் பக்கம் இழுத்து அவளை மாத்தணும்னு நெனைச்சு இப்படிச் செய்யலே. ஒரு வித்தியாசமான உலகத்தை அவளும் தெரிஞ்சிக்கிடட்டுமேன்னுதான் பார்த்தேன்.
அவளாலே இதையெல்லாம் ரசிக்க முடியவில்லை. நான் திருநவேலியிலே இருந்தப்போ படிச்ச புஸ்தகங்கள், பார்த்த சினிமாப் படங்களை இப்போ படிக்கவோ, பார்க்கவோ முடியலை. ரொம்ப நகர்ந்து, வெகு தூரத்துக்கு வந்துட்டேன். ஸீரியஸான சினிமா, நாடகம், இலக்கியம் எல்லாம் வறட்டுத்தனத்துலதான் இப்போ என்னைக் கொண்டு விட்டிருக்கு. எல்ல விஷயங்களையும் யாந்திரீகமா மனசு பார்க்குது. திருநவேலியிலே, உலகத்தை ரொம்பப் புரிஞ்சுக்கிடாமல் இருந்த காலம்தான், அந்த மனநிலைதான் பச்சையான, பசுமையான மனநிலைன்னு தோணுது. நல்ல வேளையா சாந்தி மனசளவிலே ரொம்ப வறண்டு போகாமே தப்பிச்சிட்டா. என் பின்னாடி, என் ரசனை பின்னாடி வந்திருந்தா அவளும் என்னை மாதிரி மனசெல்லாம் வறண்டுபோய், முட்டுச் சந்துல வந்து நிக்கிற மாதிரிதான் ஆகியிருப்பா.
சாந்தி திருநவேலியிலே இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பான்னுதான் தோணுது. அவளோட வேர்கள் மெட்ராஸுக்கு வந்து ரொம்ப மாறிடலை. அவளோட பேசிப் பழகினவங்க, சொந்தக்காரங்க அத்தனை பேரும் அங்கே இல்லை. சொந்தக்காரங்க ஒண்ணு ரெண்டு பேரு இருக்காங்க. அவளோட படிச்சவங்க யாரும் அங்க இருக்கிற மாதிரித் தெரியல. இருந்தாலும் அவங்களும் அந்தக் காலத்து மனசோட அப்படியே இருப்பாங்கன்னு, பழகுவாங்கன்னு சொல்ல முடியாது. ஊரே மாறியிருக்கும்போது மனுஷாள்களோட மனசு மாறாமல் இருக்குமா?
குறுக்குத்துறை ஆறு இருக்கு. அந்த ஆத்துல 1954-55லே அவ்வளவு கூட்டம் ஆத்துக்கு குளிக்க வரும். திருப்பணி முக்கிலே இருந்து குறுக்குத்துறை ரோட்டிலே குளிக்கப் போறவங்களும், குளிச்சிட்டுத் திரும்புகிறவங்களுமா இருக்கும். படித்தொறைகளிலே துணி தொவைக்க எடம் கெடைக்காது. ஆத்துக்குள்ளே ஒரே சோப்பு வாசனையும், மஞ்சளோட வாசனையுமா இருக்கும். குறுக்குத்தொறை ரோட்டிலே குளிச்சிட்டுப் போகிற பெண்கள் பக்கத்திலே நடந்துபோனா மஞ்சளோட மணம் மூக்கிலே ஏறும். இப்போ அந்தக் கூட்டமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. இப்போ வெத்தல பாக்கு வச்சு அழைச்சாக்கூட யாரும் ஆற்றுக்கு குளிக்க வர மாட்டாங்க. அதான் அப்பிடி ஆயிப் போச்சுன்னா, நெல்லையப்பர் கோவில் திருவிழா, தேர் இழுக்கிறது எல்லாம் என்ன ஆச்சு?
தேரை ஒரே நாளிலே, ரெண்டு, மூணு மணி நேரத்திலே கூட இழுத்து முடிச்சிருதாங்களாம். 50, 60-கள்ளே தேரோட்டம் ஒரு வாரம், பத்து நாள்னு நடக்கும். ரொம்ப மெள்ளத்தான் தேர் இஞ்ச் இஞ்ச்சா நகரும். தேரு, ரத வீதியிலே தெருவை அடச்சு நிக்கிறதைப் பார்க்கவே சந்தோஷமா இருக்கும். தினசரி சாயந்திரம்தான் வடம் புடிச்சு இழுப்பாங்க. ஒரு ரெண்டு மணி நேரம் இழுத்தாலே அதிகம். தேர் நெலைக்கிப் போகிற வரை அந்த எட்டு நாள், பத்து நாளும் ஊரே கொண்டாட்டத்திலே முங்கிக் கெடக்கும். அதெல்லாம் போச்சு. அந்தச் சாவகாசம் எல்லாம் போச்சு. அவசர அவசரமா இப்போ இழுத்து விட்டுருதாங்க. திருவிழாவை, கொண்டாட்டத்தை அவசர அவசரமா நடத்தி முடிக்க முடியுமா?
நெல்லையப்பர் கோயிலுக்குள்ளேயே, எங்க அம்மா சொல்றாப்பிலே, ‘அருள் இல்லை’. கோயிலே இருண்டு கெடக்கிற மாதிரி இருக்கு. சாயந்திரம் கூட ஆட்கள் அதிகமா வருகிறதில்லை. நான் சின்னப் பையனா இருக்கிறப்போ காலையிலதான் ஆள் நடமாட்டம் கொஞ்சமா இருக்கும். சாயந்தரம் கோயில் கலகலன்னு இருக்கும். திருவிழா நாட்கள்ளேன்னு இல்லை சாதாரண நாட்களிலேயே கூட்டமா இருக்கும்.
வருஷா வருஷம் கீழ ரத வீதியிலே, நாயுடு டாக்டர் ஆஸ்பத்திரி முன்னாலே ராமலிங்க சுவாமிகள் குருபூஜை விழா பத்து நாள் நடக்கும். தினசரி கச்சேரிகள் நடக்கும். அதெல்லாம் இப்போ நடக்குதான்னு தெரியலை. பார்வதி டாக்கீஸைக் கல்யாண மண்டபமாக்கிட்டாங்களாம். ராயல் டாக்கீஸை இடிச்சாச்சு. சென்ட்ரல் டாக்கீஸ் பூட்டிக் கெடக்கு. பாலஸ் டி வேல்ஸ் பாழடைஞ்சு கெடக்கு. பாப்புலர் டாக்கீஸை கணேஷ் டாக்கீஸ்னு மாத்தி நடக்குது. ரத்னாவும் அதுவும்தான் இருக்குது. ஊரோட அடையாளமே மாறிட்டுது. ஏதோ சில வீடுகள் பழைய மாதிரி இருக்குது. மற்றபடி நானும் சாந்தியும் பார்த்த அந்த ஊர் இப்போ இல்லை. எல்லாம் மாறுகிற மாதிரி ஊரும் மாறிப் போச்சு. ஆனா நம்ம மனசிலே இருக்கிற அந்த ஊர் அப்பிடியே இருக்குது. மனசால வாழ முடியுமா?