ராகாங்கராகம்

அன்று வானம் மிகத் துல்லிய நீலத்திலிருந்தது. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே செம்மை பூண்டு பழுப்பாக ஆனது. அப்பா தன் தோளில் ஏற்றி மேலே பறக்கும் விமானத்தைக் காண்பித்தார். ‘நீ வளந்து பைலெட் ஆவியாம்; அந்த ப்ளேன்ல நாங்க உங்கூடப் பறப்போமாம்.’

அப்படித்தான் அலுமினியப் பறவைகள் ஆக்கிரமித்தன. மேலே மாடியில் படர்ந்து வந்திருந்த கொடி சம்பங்கி மலர்கள் சிறிதாகவே இருந்தன; ஆனால், வாசம் ஆளைத் தூக்கிற்று. அம்மா சமையலறையில் காய்ச்சும் பாலின் மணம் வழக்கம் போல இல்லை; அம்மா வேறெதோ செய்யப் போகிறாள்- ஒருக்கால் திரட்டிப் பால் காய்ச்சுகிறாளோ?  இல்லை, அம்மா அதில் எலுமிச்சையைப் பிழிந்தாள்; பால் திரிந்தது “என்னதிது’ என்று அப்பா ஆச்சர்யமாகக் கேட்டார். திரிஞ்ச பாலை துண்டுல வடிகட்டி அம்மா செஞ்ச ரஸகுல்லா எனக்குப் பிடித்தது. ‘பாலயே திரிச்சுட்டே’ என்று அப்பா கிண்டலாகச் சொன்ன போது எனக்கு சிரிப்புடன் கூடக்கூட மற்றொன்றும் மனதில் எழுந்தது; முதலில் கலக்கமாக இருந்தது. ஏதோ ஒன்று எச்சரித்தது. அதையும் மீறி குரலொன்று ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரிடம் கேட்பது, அம்மா, அப்பா, பாலுவிடம்..அவன் ஒருத்தன் தான் மற்ற நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களின் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான். ‘அத்தால போயி ஆட்றதுதான, சும்மா சும்மா எங்கள சுத்திட்டிருக்கே’ என்று சொல்லும் பிற நண்பர்களின் வாயை அடைப்பதும் அவன்தான். ஆனால், அவனுக்கும் என் வயதுதானே, அவனுக்கெப்படித் தெரியும்?

அம்மாதான் சரி; அவளிடம் எல்லாவற்றிற்கும் ஏதோ பதிலிருக்கும். முதலில் சிரித்தாள், பின்னர் திட்டி அடித்தாள், தொடையில் சூடு வைத்தாள். பின்னர், அழுது கொண்டே சூட்டுக் கொப்புளத்தில் மருந்தும் போட்டாள்.

அப்பா அதிர்ந்து கத்தி பெல்டால் விளாசியதுதான் பெரிய நடுக்கமாகிவிட்டது. காற்று அணைக்க இயலா தடுப்பில் ஒளிரும் விளக்கு போல அந்த எண்ணம் ஜொலித்துக் கொண்டே இருந்தது.

அப்பா எந்தெந்த டாக்டரிடமோ கூட்டிப் போனார். அம்மா கோயில் கோயிலாக அலைந்தாள். அப்பா பிடிவாதமாகப் பெண்கள் பள்ளியில் சேர்த்து அங்கேயே விடுதியிலும் தங்க வைத்து விட்டார்.

மொட்டுக்கள் சற்று பருப்பது போல இருந்த நிலையில், சம வயது தோழியரின் கேலிகள், ஆதங்கங்கள். ‘உனக்குப் பாருடி, சின்னதா, நான் ஆறு மாசத்துக்கு ஒருக்க சைஸ் மாத்தறேன்.’ அது பெருமையா, சலிப்பா தெரியவில்லை. மற்றொருத்தி கிசுகிசுத்தாள்- சுத்தமா, தட்டைடி; களுக்கென்று சிரித்தார்கள். ஒருக்கால் பொம்பளல ……… இவ? மீண்டும் ஹோஹோவென்று சிரித்தார்கள்.

லீவில் ஊருக்குப் போகையில், அம்மாவும், அப்பாவும் அடித்த கூத்து தாங்கமுடியவில்லை. வயதிற்கு வந்துவிட்டேன் என்று அத்தைகள், பெரியப்பாக்கள், சித்திகள், மாமாக்களைக் கூட்டி என்னவொரு கொடுமை! அதிலும் விஜயா சித்தி ‘நாப்கின் கட்ட சொல்லித்தருகிறேன்’ என்று முன் வந்த போது “இல்ல, தெரியும்; ஃப்ரென்ட்ஸ் சொல்லித்தங்தாங்க.” என நழுவின அவஸ்தை; ‘அத்தோட நிறுத்திக்கச் சொல்லு, புள்ள பெற சொல்லிக் கொடுத்துடப் போறாளுக’ எனச் சிரித்தாள். அவளுக்கு ஏதோ சந்தேகம். இவர்களை விட ஹாஸ்டலே பரவாயில்லை.

தனிமை, ஆகாயக் கனவு, சுய அடையாளச் சிக்கல்.

அப்படியும் பைலட் கோர்ஸில் சேர்ந்தாகிவிட்டது. அந்தச் சீருடையே சொர்க்கத்தைக் காண்பித்தது. ஆம், இந்த மண்ணிலே வேண்டாம்; விண்ணிலே பறவைகள் போல்; யாருக்கும் தெரியாது; மாறி மாறிப் போகலாம்.

இன்ஸ்ட்ரக்ட்டர் மதன கோபால் எங்கள் வளாகத்தில் தனி அறையில் தங்கி இருந்தார். ‘உனக்கு என்ன பிரச்னை?’ என்றார் என்னை அவர் அறைக்கு வரவழைத்து.

‘குரல் மாறுது; மீசை வரப் பாக்குது. ஆணாகணுமா?’ பொட்டில் அடித்தாற் போன்ற அந்தக் கேள்வி. கண்ணீர்தான் வந்தது.

‘எதுக்கு அழுவற? ரமணின்னு பொதுப் பேரு இருக்கு; அத வச்சே ஓட்டிடலாம். இங்கப்பாரு, நீ ராகாங்கராகம், அப்படி ஒரு அமைப்பு.’

நான் விழித்தேன். எனக்கும் சங்கீதத்திற்கும் ஏழு காத தூரம்.

‘ஒவ்வொரு ராகத்திலயும் சில முக்கியமான சுரத் தொடர் இருக்கும்; அத்த, ஒருக்க தான் போடுவாங்க; அதான் அதோட ஸ்பெஷாலிடியே. நீ கேட்ருப்பயோ இல்லையோ தெரியாது. ஸ்ரீன்னு ஒரு ராகம். அதுல போட்டாங்க பாரு அட்டகாசமா ஒரு பாட்டு “தேவியர் இருவர் முருகனுக்குன்னு” அந்த ராகத்ல ஏறு வரிசல ஒரு சுரம் கெடையாது; என்ன கொறஞ்சு போச்சு அதனால’

எனக்கு ஒன்று மட்டுமே புரிந்தது. ராகாங்கராகம்-ராகம்- அங்கம்- ராகம்- அங்க ராகம். என் குற்ற உணர்வு பறந்தோடிப் போனது. என் மனம் யமுனையின் வன மலராக விகசித்தது. நானும் மனிதன் என்ற நம்பிக்கை வந்தது.

எனக்கு மருத்துவர் வினோதினியும் நினைவில் எழுந்தார். அப்பா அவரைத் திரும்பத்திரும்பக் கேட்ட போது அவர் அமைதியாகச் சொன்னார். “ஸார், ஏன்னு கேட்டீங்கன்னா என்ன பதில் சொல்ல முடியும்? டி என் ஏல ஒரு பதிவு, முக்கியமா ஆணா, பெண்ணாங்கறதுல ஏறுமாறா ஆகியிருக்கலாம். மனம் பாக்கற உடலுக்கும், வெளில தெரியற உடலுக்கும் நடக்கற யுத்தம்னு பாக்கலாம்; மூள, இந்த மாற்றத்த விரும்பலாம். உங்க பரம்பரைல யாருக்கோ முன்னர் இது இருந்திருக்கலாம். ரமணி ஒரு போராட்டத்ல இருக்கா. அவளக் காயப்படுத்தாதீங்க. அவ விரும்பினா அவ ஆணா வரத்துக்கு ட்ரீட்மென்டெல்லாம் இருக்கு. அதுக்கு செலவும் ஆகும்; காலமும் ஆகும். அந்த ட்ரீட்மெண்ட வாழ் நாள் முழுக்க எடுத்துக் கொள்ளவும் தேவைப்படும். ஆனா, அது அவளுக்கு நிம்மதி தரும். உங்க விருப்பப்படி ஒன்னு ஆணா இருக்கணும், இல்லேன்னா பெண்ணா இருக்கணும் அதுதானே? அவ ஆணா மாறிட்டா, உங்களுக்குச் சரிதானே?’

அப்பா அழுது அன்றுதான் பார்த்தேன். ‘ஊருக்கு என்ன சொல்லுவேன், வுறவுக்கு என்ன சொல்லுவேன்? இதத் தொரத்தவும் முடியல. என் மனசுல இவ பொண்ணு; பொண்ணைத் தொரத்திட்டு எந்த அப்பனால வாழ முடியும்?’

மதனகோபால் சாரின் குரல் என் சிந்தனையை இடை வெட்டியது.

“என்ன ரமணி, இந்தப் பாரு. டெஸ்டாஸ்டிரொன் தெரபி ஒன்னு இருக்கு. அது உனக்கு உபயோகமா இருக்கும். நீ ஏற்கெனவே 20 மணி நேரம் என்னோட விமானத்ல பயிற்சி எடுத்து எந்தப் பிழையுமில்லாம ஸ்டுடன்ட் பைலட் லைசென்ஸ் வாங்கிட்ட.”

‘சார், மெடிகல் டெஸ்ட்ல கண்டுபிடிச்சுவாங்களே.’

“ஆமாம், அது ஒன்னும் தகுதிக் கொறவில்ல. நாளைக்கி நீ தனியா பறக்கப் போற. தெரியுமில்ல, விட்டுவிட்டு இருவது மணி நேரம் நீ தனியாப் பறந்து காட்டணும். ப்ரைவேட் பைலட் லைசென்ஸ்-பி பி எல் வாங்கப் பாரு முதல்ல. அறுபது மணி மொத்தமாப் பறந்து காமி; சும்மா பூக் கணக்கா எடுத்து, ஆட்டாம ஓட்டி, சீரா வேகம் புடிச்சு, பறந்து காட்ற திறம உங்கிட்ட இருக்கு.”

நான் உற்சாகமானேன். ‘சார், எனக்கு கமர்ஷியல் லைசென்ஸ் வேணும்.’

“அதெல்லாம் கிடைக்கும். முதல்ல பி பி எல் வாங்கு.”

வாங்கினேன். 250 மணி நேரம் கால வரையறைக்கு உட்பட்டு பயிற்சி விமானத்தையும், சிறிய ரக விமானங்களையும் ஓட்டிக் காட்டினேன்.

கடைசியில் நடந்த மருத்துவ சோதனையில் நான் டெஸ்டாஸ்டிரோன் சிகிச்சையில் இருப்பது தெரிய வந்துவிட்டது.

“ஆறு மாதம் சிகிச்சையை நிறுத்து. பின்னர் வா” என்றார்கள்.

என் மருத்துவர் சிகிச்சையை நிறுத்துவது ஆபத்து என்றார். வானில் பறக்கும் அந்த மன உற்சாகம், அந்தச் சீருடை, ‘வெல்கம் ஆன் போர்ட் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென். திஸ் இஸ் யுவர் கேப்டன் ரமணி; வானிலை அற்புதமாக இருக்கிறது. நம் பயணம் சிறப்பாக இருக்கும்.’ எத்தனை முறை சொல்ல ஆசைப்பட்ட வாக்கியங்கள்.

தெரபியை நிறுத்துவதா, அல்லது கனவைக் கைவிடுவதா? ஒன்று, நான் உணரும் என் சுயத்தை இழப்பது; மற்றொன்றோ வானத்தை ஏங்கி ஏங்கிப் பார்ப்பது.

திடீரென்று ஒரு எண்ணம். பல்லைக் கடித்துக் கொண்டு ஆறு மாதங்கள் தெரபியை நிறுத்தினால், பின் உரிமம் கிடைத்துவிடும்; அப்புறம் சிகிச்சையைத் தொடர்வதில் ஒரு சிக்கலும் இல்லையல்லவா?

என் மருத்துவர் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஆயிரம் காகிதங்களில் என் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு சம்மதித்தார்.

காலை முதலே பரபரவென்றிருந்தது. வானும், மேகமும், பகலும், இரவும் என்னுடன் இருக்கும். நான் கம்பீரமாக நடப்பேன்; திறமையாக வானூர்தியை இயக்குவேன். பயணிகள் என்னுடன் அன்பாக நடந்து கொள்வார்கள். என் பெற்றோர் நான் ஓட்டும் விமானத்தில் பெருமையுடன் பயணிப்பார்கள். பணம், செல்வாக்கு எல்லாம் தானாகவே வரும்.

இத்தனை எண்ணங்களுடன் மீண்டும் நேர்காணலுக்குச் சென்றேன். 

“மிஸ். ரமணி ஆர் மிஸ்டர் ரமணி?”

‘ஐ ப்ரிஃபெர் மிஸ்டர் ரமணி.’

“உங்க விருப்பம் முக்கியமில்ல; உங்க ஜென்டர் தான்.”

‘அதான், சார், நான் ஆண்.’

“நீங்க அப்டிப் பொறக்கல, ரமணி. உங்க ஷர்ட்டக் கழட்டுங்க.”

‘சார்?’

“நீங்க ஆணுன்னு சொல்றீங்க இல்ல; அப்ப என்னத் தயக்கம்?”

‘இன்டர்வ்யூ ரூம்ல எப்படி சார்?’

“கமான், ரமணி, இங்க நாங்கதான இருக்கோம், பொண்ணுங்க யாருமில்லல்ல.”

‘சார், என்னோட அந்தரங்கத்தை அசிங்கப்படுத்துறீங்க.’

“என்ன அசிங்கப்படுத்திட்டோம் இப்ப. பாக்கப்போனா உங்க ஜீன்சை கழட்டச் சொல்லியிருக்கணும் நாங்க.”

‘நான் மாட்டேன், சார்.’

“அப்ப, லாரென்ஸ், நீங்க அவரோட ஷர்ட்டைக் கழட்டுங்க. தேவைன்னா பேன்டையும்…”

எதற்கென்று புரியாமல் சிரித்தார்கள். இதென்ன நேர்காணல்?

‘நீங்க சொன்ன ஆறு மாசம்; கடந்த ஆறு மாசம். உயிரைப் பணயம் வச்சு சிகிச்சை எடுக்காம வந்திருக்கேன். என் பயிற்சியில, என் ஃப்ளையிங் ரெகார்டில, எழுத்துத் தேர்வுகள்ல நான் ஃப்ஸ்ட். அப்படியிருந்தும் நீங்க மீள மீள இப்படித்தான் என்ன வதைப்பீங்களா?’

“வெல் ரமணி, எல்லாம் சரிதான். உங்களுக்குக் கல்யாணமாகுமா? கொழந்தை பொறக்குமா?”

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.