மொழிபெயர்ப்புக் கவிதைகள்

தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

கவிதை ஓர் அறிமுகம்

அவர்களிடம் கேட்டுக் கொண்டேன் கவிதையொன்றை எடுத்து
வண்ணப் படத்தைப் போல
வெளிச்சத்தில் தூக்கிப் பிடிக்குமாறு

அல்லது செவியை அதன் தேன்கூட்டில் அழுத்தும்படி.

நான் சொன்னேன் எலியொன்றைக் கவிதைக்குள் விடுமாறு,
பிறகு அது நுண்ணாய்ந்து வெளியேறுவதைக் கவனிக்கும்படி,

அல்லது கவிதையின் அறைக்குள் நடந்து செல்லுமாறு,
பிறகு விளக்கின் மின் விசைக்காகச் சுவர்களை உணரும்படி.

நான் விரும்பினேன் அவர்கள் கவிதைப் பரப்பின் குறுக்காக
நீர்ச்சறுக்கி விளையாடிச் செல்ல வேண்டுமென்று,
கரையில் இருக்கும் எழுத்தாளரின் பெயருக்குக் கையசைத்தபடி.

ஆனால் அவர்கள் விரும்பியதெல்லாம்
கவிதையைக் கயிற்றால் நாற்காலியில் கட்டிவைத்து
கொடுமைப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கவே.

அவர்கள் அதைத் நீர்க்குழாயினால் அடிக்கத் தொடங்குகிறார்கள்
அது என்ன சொல்ல வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.

பில்லி காலின்ஸ்
*

மூலம்: ‘Introduction to Poetry’ from “The Apple that Astonished Paris”
By Billy Collins
*

பில்லி காலின்ஸ் பற்றி :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் 81 வயதான பில்லி காலின்ஸ் (வில்லியம் ஜேம்ஸ் காலின்ஸ்) கவிஞரும், எழுத்தாளரும், பேராசிரியரும், நூல் திரட்டாளரும் ஆவார். 2001 முதல் 2003_ஆம் ஆண்டு வரையிலும் அமெரிக்காவின் அரசுக் கவிஞராக நியமனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. 2014_ஆம் ஆண்டு கவிதைக்காக நார்மன் மெயிலர் பரிசைப் பெற்றவர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையால் “அமெரிக்காவின் மிகப் பிரபலமான கவிஞர்” எனப் பாராட்டப்பட்டவர்.

பில்லி காலின்ஸ் 1941_ஆம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் வில்லியம் – கேதரின் காலின்ஸ் தம்பதியருக்குப் பிறந்தவர். இவரை வளர்ப்பதற்காகத் தன் செவிலியர் வேலையை ராஜினாமா செய்த தாய் கேதரின், கவிதை உட்பட எந்தத் தலைப்பிலான எழுத்தையும் பாராயாணம் செய்து ஒப்பிப்பதில் வல்லவர். சிறுவயதிலேயே தான் படித்தவற்றைப் பாடி, ஒப்பித்து மகனுக்கு வார்த்தைகளின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியவர். தன் தந்தையிடமிருந்து நகைச்சுவை உணர்வைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறார் காலின்ஸ்.

இவர் ஹோலி க்ராஸ் கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டமும், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும், காதல் கவிதைகளுக்காக முனைவர் பட்டமும் பெற்றவர். நியூயார்க் நகரின் லேமன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 2016_ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரது முக்கியத் தொகுப்புகளாக அறியப்படுபவை: The Apple That Astonished Paris, Questions About Angels, The Art of Drowning.
*


வாசகரைத் தெரிவு செய்தல்

முதலில், நான் அவளைப் பெறுவேன் அழகானவளாக,
என் கவிதை மேல் மிகக் கவனமாக நடந்து வர,
பிற்பகலின் தனிமை மிகுந்த தருணத்தில்,
கழுத்தின் மேலான கூந்தலில்
குளித்ததால் ஆன ஈரம் இன்னும் இருக்க. அவள் அணிந்திருப்பாள்
மழை அங்கியை, பழையதான ஒன்றை, அழுக்கானதை
சுத்தம் செய்பவருக்குத் தர பணம் இல்லாது.
புத்தகக் கடையில், தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு
என் கவிதைகளைப் புரட்டுவாள், பின் மீண்டும் அது இருந்த இடத்தில்
அலமாரித் தட்டில் வைப்பாள். தனக்குத் தானே சொல்லிக் கொள்வாள்,
“இதற்காகக் கொடுக்கும் பணத்தில், நான் என் மழை அங்கியை
சுத்தம் செய்திடலாம்.” அவள் செய்திடுவாள்.

டெட் கூஸர்
*

மூலம்:
“Selecting a Reader”
by
Ted Kooser
**

அமெரிக்கக் கவிஞரான டெட் கூஸர் (Theodore J. Kooser) 1939_ஆம் ஆண்டு ஏம்ஸ் நகரில் பிறந்தவர். 2005_ஆம் ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசை வென்றவர். 1979_ல் தொடங்கி 2005_ஆம் ஆண்டு வரையிலுமாகப் பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்றவர். தனது உரையாடல் பாணியிலான கவிதைக்காக அறியப்பட்டவர்.

ஏம்ஸ் அரசுப் பள்ளியில் பயின்றவர். உயர்நிலைப் பள்ளியில் எழுத்தின் மீதான கூஸரின் ஆர்வத்தை வளர்த்ததில் ஆசிரியர் மேரி மேக்னலிக்கு பங்கு இருந்திருக்கிறது. அவரது வாழ்வைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளையும், கவிதைகளையும் எழுத ஊக்கம் அளித்திருக்கிறார். கூஸர் தனது பதின்ம வயதில் மூன்று காரணங்களுக்காகப் பிரபலமான கவிஞராக வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்: புகழ், அமரத்துவம், போஹேமிய நாட்டவரின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்வது ஆகியன.

1963_ஆம் ஆண்டு லோவா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலக் கல்வியில் இளங்கலைப் பட்டமும், 1967_ஆம் ஆண்டு நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் 35 ஆண்டுகள் பணியாற்றி அறுபதாவது வயதில் வைஸ் ப்ரெஸிடெண்டாக உயர்ந்து ஓய்வு பெற்றார். ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்றரை மணி நேரம் எழுத்துக்காக ஒதுக்கி, ஓய்வு பெறுகையில் ஏழு புத்தகங்களை வெளியிட்டிருந்தார் கூஸர்.


மோசமில்லை, அப்பா, மோசமில்லை

நான் நினைக்கிறேன் நீங்கள் நீங்களாக அதிகம் இருப்பது நீங்கள் நீச்சலடிக்கும் பொழுதுகளில்;
ஒவ்வொரு வீச்சுக்கும் நீரைத் துண்டமிட்டபடி,
நீங்கள் மூச்சுவிடும் வேடிக்கையான முறை, கொட்டாவி விடுவது போல்
உங்கள் வாய் ஒரு பக்கமாக வளைந்து கொள்வது.

நீங்கள் இங்கிருந்து அங்குவரை செல்வது
அருமையும் அல்ல பரிதாபத்துக்குரியதாகவும் அல்ல.
உங்களால் எந்தப் பதங்கங்களையும் வெல்ல முடியாது, அப்பா,
ஆனால் நீங்கள் மூழ்கி விட மாட்டீர்கள்.

நான் நினைக்கிறேன் எப்படி எல்லாமே வேறுமாதிரியாக இருந்திருக்கும்
என்னால் மட்டும் உங்கள் அன்பை மதிப்பிடத் தெரிந்திருந்தால்,
நீச்சலில் உங்களது பக்கவாட்டு வீச்சு, உங்களது பட்டாம்பூச்சி நுட்பம் மற்றும்
ஆஸ்திரேலிய தவழ்தலை மதிப்பிடத் தெரிந்திருந்தது போல.

ஆனால் நான் எப்போதும் நினைப்பேன்
நமக்கிடையே இருக்கும் அந்தப் பனிப் பெருங்கடலில் நான் மூழ்குவதாக,
நான் எப்போதும் நினைப்பேன் என்னைக் காப்பாற்ற நீங்கள் மிக மெதுவாக நகருவதாக,
உங்களால் முடிந்த வரையில் நீங்கள் வேகமாக நகருகையிலும்.

ஜேன் ஹெல்லர் லீவை
*

மூலம்:
“Not Bad, Dad, Not Bad”
By
Jan Heller Levi
*

கவிஞர் ஜேன் ஹெல்லர் லீவை 1954_ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்து, மேரிலான்டில் உள்ள பால்டிமோர் நகரில் வளர்ந்தவர். சாரா லாரன்ஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 1999_ல் வெளியான Once I Gazed at You in Wonder (ஆச்சரியத்தால் ஒருமுறை உன்னை உற்று நோக்கினேன்) எனும் இவரது கவிதைத் தொகுப்பு அமெரிக்கக் கவிஞர்கள் கழகத்தின் வால்ட் விட்மன் விருதைப் பெற்றது.

2005 மற்றும் 2019_ஆம் ஆண்டுகளில் முறையே Skyspeak, That’s the Way to Travel ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. இவரது கவிதைகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த, பெண்களின் வாழ்க்கையைக் குறித்த பார்வையாக அமைந்துள்ளன.

நியூயார்க் நகரில் உள்ள ஹன்டர் கல்லூரியில் நுண்கலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். எழுத்தாளர் கிரிஸ்டோஃப் கெல்லர் இவரது கணவர். நியூயார்க் நகரிலும் சுவிட்சர்லாந்திலுமாக மாறி மாறி வசித்து வருகிறார்.
*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.