மெய்யை அப்புறப்படுத்து

“போ உனக்கான நேரம் முடிந்துவிட்டது, உன் பணி நிறைவடைந்து விட்டது, இறுதி இலக்கிற்கான அடுத்த கட்டத்திற்குத் தயாராகு, அனைத்தையும் என்னாலேயே செய்திட முடியும், நீயும் ஒரு கருவியாக இதில் இணைய வேண்டும், உன் ஆழ் மன எரிமலை தணிந்திட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை கட்டமைப்பு, போ இளைப்பாறு, கொதி நிலையில் காத்திருக்கும் காபியை கோப்பையில் நிரப்பு, தாக சாந்தி செய்து கொள், இங்கிருந்து உன் மெய்யை அப்புறப்படுத்து” 

ஒரு வார கால பராக்கிரமத்தின் விளைவாக முக்கியப் புள்ளியை நோக்கி 60% என்னும் அளவிற்கு நகர்ந்தது போல ரஃபாயேல் மனதுள் ஒரு எண்ணம் பரவியது. 

போன வார ஞாயிற்றுக்கிழமை அலுவல் இல்லாத நாள் என்னும் சந்தோஷம் அதிகாலை 4.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. அசரீரி, தூக்கத்திற்கு சமாதி எழுப்பியது. தொலைக்காட்சியைப் பூட்டாது கண்ணயர்ந்து விட்டோமோ என்ற சிந்தனை பிழையானது என பெட்டித் திரையின் மௌனம் மௌனமாக உணர்த்தியது. இனி உறக்கம் பீடிக்க வாய்ப்பில்லை.‌ நீர், தூள் சேர்த்து மேக்கருக்கு உயிரூட்டி, கொதி கண்டவுடன் கோப்பையை நிரப்பி, ஜீனி சேர்த்து, ஸ்பூனால் கலக்கும் போது தான் விசித்திரமான யோசனைக்கு மனம் இழுத்தது. “இளைப்பாற காஃபி அருந்துகிறேன், எது இலக்கு? 

என்ஜே 246 (NJ 246) ட்ரெயினின் இருதயத்தை, மோதலிலிருந்து ரட்சிக்கும் உபகரணம் எங்கிருக்கிறது என்பதைத் தேடிப் பிடித்தாகிவிட்டது. மோதலைத் தடுக்கும் வஸ்து (anti collision device) இப்படியொரு அபூர்வமான கணிக்கக் கூடிய இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை சொப்பனத்தில் கூட யோசித்ததில்லை. 

இனி அடுத்து என்ன? நாளுக்கும், உத்தரவுக்கும் காத்திருக்கத் துவங்கினான் ரஃபாயேல். 

*********

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிந்த உடனேயே மேரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. க்ரூப் டிஸ்கஷனில் அனைத்து அதிகாரிகளையும் எதிர் கொண்டு ஸ்திரமானால் கண்டிப்பாக பணி நியமனம் கிடைத்துவிடும். வியன்னா மத்திய ரயில் கட்டுப்பாட்டு அறையின் ((vienna central train control room)  ஐடி பிரிவு ஆய்வாளராகியே தீர வேண்டுமென்பது அவளின் இரண்டு வருட வேட்கை. அது இந்த தருணத்திலும் நீர்த்துப் போகாது வலுத்து நிற்கிறது. 

ஸால்ஸ்பொர்க் (Salzberg) ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அந்த சபிக்கப்பட்ட ஞாயிறின் அதிகாலைப் பொழுதில் வந்து சேர்ந்த பேசித் தகவலெனும் பிரளயம் வாழ்க்கையையே அசைத்துப் பார்த்ததை மேரியால் மறக்க இயலவில்லை. 

தேர்வில் தேர்ச்சியான விவரத்தைக் காட்டிய பேசியை தந்தை மாக்ஸிமிலியன் படத்தருகே இருந்த டேபிளில் அமர்த்தினாள். 

“ஏனப்பா என்னைக் கைவிட்டீர்கள்? உங்களுக்கு ஏன் இந்த நிலை? என்னை எப்போதும் கர்த்தரின் பிரதிநிதியாகக் காத்த உங்களுக்கு ஏன் இப்படியொரு முடிவு? பணிக்கொடை, சேமிப்பு மட்டும் எனக்குப் போதுமானது என்று நிர்ணயிக்க ஆண்டவருக்கு ஏன் தோன்றியது? என்னால் உங்களின் இரண்டாவது மனைவியுடன் மனதார சங்கமிக்க முடியாது தவித்ததையும் ஏற்றுக் கொண்டீர்கள். தாயில்லாதவளுக்கு கணிசமான பணம் பாதுகாப்பைத் தந்துவிடும் எனக் கணக்கிட்டு தங்கள் கணக்கு முடிந்ததா? 

ஏதோ ஒரு சந்தேகம் விடுவிக்கப்‌‌‌படாது  பிணைகிறது. சங்கிலியை அறுத்தெரிய மனம் துடிக்கிறது. 

வீழ மாட்டேன். எழுவேன். உங்கள் ஆன்மா என்னால் சாந்தியடையுமென தேவன் உத்தரவிட்டதாக நம்புகிறேன். கர்த்தரே என்னை ஆஸ்வாசப்படுத்து” 

மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தவள் பார்வைக்கு சலனமற்று அமைதியாக,, அகத்தில் எண்ண அலை மோதல்கள் சூழ மாக்ஸ்மிலியனின் உருவத்துக்குள் உழன்றுத் தேடிக் கொண்டிருந்தாள் மேரி. 

********  

போஸ்ட்மார்ட்டம் செய்த ரிப்போர்ட்டை மறுபடியும் ஒரு முறை நிதானமாகப் படித்தார் கேப்ரியல். குழுவின் சக மருத்துவரை அழைத்து அரை மணித்தியாலத்திற்கு அளவளாவியவர், சாதக பாதகங்களையும், சில சாத்‌‌‌தியக்கூறுகளையும் ஆராய்ந்தார். நுட்பமான சங்கதிகள் குறிப்பிடப்படாமல் தவறவிடப்பட்டுள்ளதா என்று தேடினார்.

“எந்தவொரு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் கச்சிதமானதல்ல, உண்மையானதல்ல ஆனால் உண்மைக்கு நெருக்கமானதாக இருத்தல் அவசியம். அறியாமல் தவறிப் போவது மனித இயல்பு ஆனால் அது பாதகத்திற்கு காரணியாகக் கூடாது. சரிதானே?”

“அறியாமல் செய்வது தவறு. அறிந்து செய்வது தப்பு ஆனால் சில தருணங்களில் அறியாமல் செய்த தவறு பெருந்தப்பாகிவிடும் சூழலை ஏற்படுத்தும். அவ்வாறான சிக்கல்களின்றி இந்த ரிப்போர்ட் சரியானதாகவே அமைந்துவிட்டது” – மருத்துவர் பதிலளித்தார். 

உள்ளுக்குள் பரவிய கலவரத்தையும், சில நினைவுகளையும் முகபாவத்தில் வெளிப்படுத்தாமல் அணை போட்டுத் தடுத்த கேப்ரியல், குழு மருத்துவரின் கருத்தை ஆமோதிப்பது போல் தலையசைத்து ரிப்போர்ட்டில் கையெழுத்திட்டார். 

ரிப்போர்ட்டைக் கோப்பில் பொருத்தி மருத்துவர் வெளியேறிய பின் தன் அலைபேசியை உயிர்ப்பித்தார். 

“ஹாய் நிக்கலஸ், திஸ் ஹிஸ் கேப்ரியல், குட் மார்னிங்”

“…”

“ப்ரீகென்ஸ் (Bregenz) பயணத்திற்கு, சனிக்கிழமை இரவு ட்‌‌‌ரெயின் டிக்கெட் புக் பண்ண ஏஜெண்ட் கிட்ட சொல்லிடறேன்”

“…”

“வியன்னாவுல இருந்து நைட் 11.05க்கு புறப்படுது, ப்ரீகென்ஸூக்கு காலைல 8.30 மணிக்குப் போய்டும். உங்களுக்குத் தெரியாதா? இன்வஸ்டிகேஷன் ஆஃபிஸர் ஸ்கில்லை எனக்கும் காட்றீங்களா?”

“…”

“எனக்கு ஃப்ளைட் ஜர்னி பிடிக்காமப் போயிடுச்சு. ஓபிபி நைட்ஜெட் ட்ரெயின் (OBB Night Jet train), தனி கம்பார்ட்மெண்ட், லாக் வசதி, கம்ப்ளீட் ப்ரைவஸின்னு லக்ஷூரியஸ் கம்ப்ஃபர்ட்னஸை அனுபவிக்கலாம்”

“…”

“சண்டே காலைல ஃபார்மலா ஆஃபிஸ் போய்டலாம் அப்புறம் ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… மண்டே கான்ஃபரன்ஸ்ல ப்ரஸண்டேஷனை முடிச்சுட்டுக் கிளம்பிடலாம்”

“எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணிட்டு இன்ஃபர்மேஷனை மட்டும் பாஸ் பண்றீங்க டாக்டர்” 

“அப்படியும் சொல்லலாம், பிடிக்கலன்னா மாத்திடறேன்” 

“…”

“தேங்ஸ் ஃபார் யுவர் அப்ரூவல்”

********

இன்ஸுலின் திரவத்தை செலுத்திக் கொண்ட லூயிஸா தன் இரவு உணவுக்காக அரை மணித்தியாலம் காத்திருந்தாள். காலை 4 மணிக்கெல்லாம் வந்துவிடுவதாக மாக்ஸிமிலியன் வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். “மேரியை நேரத்திற்கு எழுப்பித் தயார் செய்வது தன் பொறுப்பு, மூவரும் சண்டே ப்ரேயருக்குத் தேவாலயம் செல்லலாம்” என்று கிளைச் செய்தியும் அனுப்பியிருந்தான். 

கணவனான மாக்ஸ்மிலியியியனை விட, பாசமுள்ள தந்தை மாக்ஸ்மிலியியியனாக தன்னை நிலைப்படுத்துவதில் கொஞ்சம் கொஞ்சமாக வென்று கொண்டிருக்கிறான். ஆறு மாத காலத்தில் கண்ட மூன்று காட்சிகளை அவளால் இயல்பாகக் கொண்டு போக முடியவில்லை. மூன்றிலும் ஒரே பெண்… ஈடுபாடு குறைந்து தன்னை அவன் தவிர்க்கத் துவங்கியது கடந்து ஒரு வருடமாகத் தான். தவிர்ப்பை பிரிவாக்கி முற்றுப் புள்ளி வைக்காமல் ஏன் நீடிக்கிறான்? தேவாலயத்தில் அவனுக்கு வாய்த்த தூய நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாக உருமாறிப் போனானா? 

லூயிஸா தன் கல்லூரி காலத்தை அசைபோட்டாள். 15 வருடங்களுக்கு முன்பு இந்தப் பிரபஞ்சம் எத்தனை வடிவாக இருந்தது? வியன்னா பல்கலைக்கழகம் எத்தனை நட்புக்களை மலர வைத்தது? தேவன் தன்னைப் படைத்ததே கவலைகளற்று ஆர்ப்பரிக்கத்தான் என்ற நம்பிக்கை எவ்வளவு முரணானது? ஜெர்மனி, ஆஸ்திரியா என்ற தேச எல்லைகள் பாடசாலைக்குள் நிறுவியிருக்கவில்லை. ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாக, பனி படர்ந்த இயற்கை எழிலை ஆசை தீர அள்ளிப் பருகுவதற்காக, மனமொத்த ஸ்நேகிதன்களுடனும், ஸ்நேகிதிகளுடனும் கை கோர்த்து வளைய வருவதற்காக…. அத்தனையும் கனவாக ஒரு ஓரப் புள்ளி போல் கரைந்து விட்டது. 

லைஸா எவ்வளவு ஆத்மார்த்தமான ஸ்நேகிதி… அவள் இப்போது எங்கிருக்கிறாள்? சமூக வலைத்தளத்தில் தேடியும் அவளைத் தரிசிக்கும் வாய்ப்புத் தகையவில்லை. பிறந்த நாளில் துணிச்சலாக முத்தமிட்ட மார்ட்டினின் செயலும், இருப்பும் எந்தவொரு சலனத்தையும் பிரசவிக்கவில்லை. 

ரஃபாயேல்… கொஞ்சம் கூச்ச சுபாவியாக, கவிதை எழுதுபவனாக, தனிமையைப் பூட்டிக் கொள்பவனாக வளைய வந்தான். தலை சாய்த்து மென்மையாக சிரித்து என்னை அழகாக்கினான். மெருகூட்டினான். என் வனத்தை எனக்குப் புரிய வைத்தான். அவன் மீதான ஈர்ப்பு துளிர்க்க காரணமென்ன? வழமையான ஐரோப்பியனின் குணாதிசயங்கள் ஏதுமின்றி மாறுபட்டவனாக, வேறுபட்ட இந்தியத்தனத்துடன் வளைய வந்தான். அது தான் ஈர்த்ததா? பனி சூழ்ந்த இரவில் கரம் பற்றி கண் கலங்க நின்றானே, அதுவா? ஏதேதோ பட்டியலிட்டாள். சிந்தனை வரிசைகளற்று ஓடியபடி இருந்தன.‌ தற்கால லௌகீகம் உசுப்பியது. 

அரை மணி நேரம் கடந்ததை உணர்ந்தவள் உணவருந்த ஆரம்பித்தாள். இரவு 10 மணிக்கு வீடு திரும்பவிருக்கும் மேரிக்காக தொலைக்காட்சிக்கு உயிரூட்டிக் காத்திருந்தாள்.

************

பரந்து விரிந்து காட்சியளித்த கட்டிடத்தின் தோற்றமே மேரிக்கு உற்சாகத்தைத் தந்தது. காலை 10.30 மணிக்கு க்ரூப் டிஸ்கஷன்.‌ நேரந்தவறாது அலுவலகத்தை எட்டியவளுக்கு பெருமிதத்தைத் தாண்டி படபடப்பு பரவியிருந்தது. கோப்புகளைப் பரிசோதித்த காரியாலய அலுவலர் அவளைக் காத்திருக்க சொல்லி 6 வதாக தேர்வாளர்கள் அறைக்கு செல்ல வேண்டுமென அவள் வரிசையைத் தெரியப்படுத்தினார். அவளும் காத்திருந்தாள். 

தனக்கு முன்பாகச் செல்லவிருந்த ஐவரும் ஆண்கள். அவளுக்குப் பின் வரிசையில் காத்திருந்தவர்களில் நான்கு பெண்கள்.‌ முதலாவதாக உள்ளே சென்றவனுக்கு வெளியே வர 25 நிமிடங்களானது. வெகு இயல்பாக வந்தவனின் முகத்தில் அலட்சியம் மேலோங்கி காணப்பட்டது. பேசியை எடுத்து யாரிடமோ கதைக்க ஆரம்பித்தான். “நத்திங், ஜஸ்ட் ஏன் எக்ஸ்ப்ரீயன்ஸ் பேபி, காஃபி ஷாப் வா” வேகமாகக் கடந்தான். 

இரண்டாமவன் பத்தே நிமிடத்தில் வெளிப்பட்டான். முகத்தில் இயலாமையும், கோபமும் அவனைக் கவனித்தவர்களால் கேட்டுப் பார்க்க முடிந்தது. மேரியின் பதட்டம் அதிகமானது. அடுத்தடுத்து வெளி வருபவர்களின் தேக மொழியையும், பாவத்தையும் படிக்க ஆயத்தமானாள். 

மூன்றாவதாக வெளியே வந்தவன் அவசர அவசரமாக நடந்து, முற்றிலுமாக மறைந்தான். மேரி நகம் கடிக்க ஆரம்பித்தாள். சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அவளையே கவனிப்பதாக நம்பினாள். 

நான்காவதாக வெளியே தோன்றியவன் உள்ளே போன போது எப்படி ஆர்வத்துடன் சென்றானோ அந்தத் த்வனியோடு துள்ளல் மேலிட தன்னைப் பிரதிபலித்தான். லாவகமாக, வலிந்து திணித்துக் கொண்ட நிதானத்துடன் வாட்டர் டிஸ்பென்ஸர் நோக்கிச் சென்றான். குளிர்ந்த ஜலத்தை இரு முறை பருகினான். பேசிக்கு வேலை தந்தான். டயலிய பின் மறுமுனை குரலைக் கேட்டிருப்பான் போல! குரலில் சந்தோஷம் உச்சம் தொட்டது “மாம், ஐ வின், ஐ கான்கர்” என்றான். நுழைவிடக் கதவைத் திறந்து வெளியே போனான். நடை நடனத்தைப் பற்றிக் கொண்டது. 

மேரியின் படபடப்பு குறைந்தது. நிதானம் பழக ஆரப்பித்தவள் கண் மூடினாள். “ஜீஸஸ் க்ரைஸ்ட்” அவள் மனம் தெளிந்து அவளையறியாமல் உதடுகளிலிருந்து வார்த்தைகள் சன்னமாக உதிர்ந்தன. மூடிய கண்களுக்குள் லூயிஸா நிறைந்தாள். ‘அம்மா அம்மா’ என மனதார ஜெபித்தாள்.‌ அப்பா எப்போதும் அணுசரனையானவர் ஆனால் அம்மா? ஆத்ம பலம் தருபவள். உள்ளே ஐக்கியமாகிக் கலந்தவள். 

ஐந்தாமவனை கவனிக்கத் தவறினாள். அவள் பெயர் அழைக்கப்பட எழுந்தாள். நெஞ்சை அழுத்தமாக கரம் கொண்டு பற்றிக் கொண்டாள் “அம்மா”. 

மூன்று பேர் மாறி மாறி கேள்விகளை எய்தார்கள். கேள்வியாக கேட்பதைத் தவிர்த்து இயல்பு மொழி சம்பாஷணைத் தோற்றத்தைக் கொண்டு வர முயற்சித்தார்கள்.  

LZB (Linienzugbeeinflussung) கம்ப்யூட்டரும் லைனில் உள்ள கம்ப்யூட்டரும் எப்படித் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன? 

மேரி பதில் சொல்லத் துவங்கினாள்… 10 நிமிடங்கள் விவரித்து முடித்தவள், ‘இதை விடச் சுருக்கமாக விவரிக்கும் திறன் என்னிடமில்லை’ என்றாள். 

மூவரில் ஒருவரான பெண்மணி சிரித்தார். 

இரண்டாமவர் சிக்னல் பாக்ஸ் மற்றும் ஆன்டெனா குறித்து நுட்பமானதொரு கேள்வியை வீசினார். தண்ணீர் அருந்திவிட்டு பதிலளிக்குமாறு மேரியிடம் சொன்னார். 

இம்முறை ஆறே நிமிடங்களில் தெளிவாக பதிலைப் பதிவு செய்தாள் மேரி. ‘இண்டர்வியூவாகத் தான் நமது உரையாடலை அணுகுகிறேன். இயல்பான கதைத்தல் வகைமைக்குள் என்னால் இதை உருவகப்படுத்த முடியவில்லை, பொறுத்தருள்க’ என்றாள். 

பெண்மணி மீண்டும் சிரித்தார். 

‘அனைத்தும் ஆட்டோமேடிக் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுநருக்கு ஆன்ட்டெனா உதவியின் மூலம் வேகத்தின் அளவை அதிகரிப்பது,, குறைப்பது குறித்து சமிக்ஞைகளை அனுப்பும் பணியினை அருகாமையில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் கண்ட்ரோல் ரூம் செய்கிறது. மத்தியக் கட்டுப்பாட்டு அறையும் அதைச் செய்கிறது. இந்த தொழில் நுட்பத்தை மேனுவலாக கட்டுப்பாட்டு அறையின் பணியாளர்களால் செய்ய முடியாது ஏன் அப்படியொரு கட்டமைப்பு? ஏதேனும் கோளாறெனில் ஏன் ஸ்டேஷன் சிக்னல் வண்ணத்தின் உதவியை அவர்கள் கைப்பற்றுகிறார்கள்? அதையும் தாண்டி ஆட்டோமெட்டிக் ப்ரேக் கண்ட்ரோல், இறுதியில் anti collision system என்று  ட்ரெயின் மோதல்களைத் தவிர்க்க ஏன் இந்த வரிசை விதிகளைப் பின்பற்றுகிறோம்?’ பெண்மணி கேள்வி எழுப்பினார்.

‘LZB தொழில் நுட்பம் பாதுகாப்பானது. தானியங்கியைத் தவிர்த்து அதைத் தாண்டி பணிபுரிபவர்கள் மேன்யுவலாக மாற்ற முடியுமென்றால் பயங்கரவாதிகள் பணியாளர்களை மிரட்டியே அசம்பாவிதங்களை சர்வ சாதரணமாக்குவார்கள். அது விபரீதத்தை வரவேற்பது போலாகிவிடும்’ என்றாள் மேரி. 

“வாவ் கிரேட்” – பெண்மணியின் பாராட்டு மேரியின் தயக்கங்களைத் தகர்த்தது. இரண்டு தேர்வாளர்களும் “யூ ஆர் செலக்டட், வெல்டன்!” என்றார்கள்.

“கன்கிராட்ஸ் யங் டர்க்” பெண்மணி கைகுலுக்கினார்.

“தேங்க் யூ மேம்” என்றாள் மேரி.

“நோ மேம் ஸே லூயிஸா” என்றார் பெண்மணி.

“ஓகே மாம்” மேரி தன்னை மறந்து வெளிப்பட்டாள். ஷ்னீபெர்க் (Schneeberg) சுற்றுலாவின் போது அகால நேரத்தில் அம்மா குறித்த துக்க செய்தி வந்தடைந்தது, அப்பா பணியில் இருந்தது, ஹைப்போ க்ளைஸீமியா (Hypoglycemia) மீது உண்டான பீதி… மேரி தன்னிலை மறந்தாள். தவித்தாள். பரவசமும் வலி நினைவுகளும் ஊடுருவி அவளைத் தடுமாறச் செய்தன.

**********

கேப்ரியலும், நிக்கலஸூம் தனித்தனியே தங்கள் பரிவாரங்களுடன் வியன்னா ரெயில்வே ஸ்டேஷனுக்கு நேரந்தவறாது போய் சேர்ந்தனர். பிரத்யேக கோச்சுக்குள் நுழைந்து அமர்ந்த சில நிமிடங்களில் இரவு உணவை முடித்து, விசேஷ வைன் குடுவைகளை உடனே பிரயோகிக்காது நள்ளிரவுக்காக பத்திரப்படுத்தினர். 

“ரூம்ல போய் ரிலாக்ஸ் செய்துட்டு மதியம் பனிரெண்டு மணி போல ஆஃபிஸ் போவோம். அடுத்த நாள் கான்ஃப்ரன்ஸ் பத்தி கொஞ்சம் நேரம் கதைச்சு பொழுதை நகர்த்திட்டு, லன்ச்சை அங்கேயே எடுத்துக்கலாம். மூணு மணி வாக்குல கிளம்பி ரூமுக்குப் போய் ரெஸ்டிங். ஈவ்னிங் ஆறு மணிக்கு கிளம்பி அவுட்டிங் முடிச்சு பத்தரைக்குத் திரும்பிடலாம். நைட் டைம் ப்ளஸண்டா மூவாக அல்ரெடி ஸ்பெஷல் கம்பானியன் அரேஞ்ச்ட். இது என்னோட ப்ரீ ப்ளான்ட் ப்ரொக்ராம். இட்ஸ் நாட் ஆன் இன்ஃபோ”

“ஆர்டரா நிக்கலஸ்?”

“எஸ்.”

“உங்க இன்வெஸ்டிகேஷன் பேட்டர்ன்ல ப்ளானிங் இல்லைன்னு நான் ஃபீல் பண்றேன்.”

“உண்மை தான் கேப்ரியல். இது வொர்க் ரிலேட்டட் கிடையாது. ஃபுல் & ஃபுல் ஃபன் & ஓபன். என்னோட துப்பறியும் யுக்தி எளிமையானது, என்னால சீன் பிஹைண்ட் க்ரைம்னு க்ரியேட் செய்யவும் முடியும் நத்திங் பிஹைன்ட் க்ரைம்னு கொண்டு போகவும் முடியும்” 

“அதாவது குற்றம்னு பின்னணி தெரிஞ்சாலும், பார்க்கும் போது ஒன்னுமே இல்லைன்னு திரை எழுப்பிடுவீங்க.” 

“அஃப்கோர்ஸ்.” 

“இதையெல்லாம் பர்சனல் பெனிஃபிட்டுக்கு செய்வீங்க, ஆம் ஐ ரைட்?”

“என்னால பதிலளிக்க முடியாத கேள்வி இது.” 

அடுத்ததாக இருவரும் தங்களின் துறை சார்ந்த சகப் பணியாளர்களின் தகாத உறவுகள், அவரவரின் தற்போதைய அஃபேர் குறித்து சளைக்காது பேசிப் புல்லரித்து திளைத்தனர். 

செரிமானம் ஆன உணர்வை இருவரும் எட்டினர். வைன் பாட்டில் அமர்க்களமாக ஆடை விலக்க இருவரும் அரை மணித்தியாலத்தில் திரவக் குடுவையை நிர்வாணமாக்கி ருசித்துக் களைத்தார்கள். 

ட்ரெயின் வேல்ஸ் (Wels) ஸ்டேஷனில் இரு நிமிடங்கள் நின்று தன் மனிதச் சுமையைத் திருத்திக் கொண்டு புறப்பட்டது. நிக்கலஸ் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். நிகழ் காலம் இரவு 01.15 மணி… விரைவில் ‘இறந்த காலத்தை’ அவர்களுக்கு வழங்க ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. 

********

இரு நாட்களுக்கு முன்பே வரும் சனிக்கிழமை இரவு வியன்னா – ப்ரீகென்ஸ் (Bregenz) ட்ரெயினை ஓட்டும் இரு ட்ரைவர்களில் ஒருவராக இருக்கும்படி உத்தரவு வந்து சேர்ந்தது.‌ 

அசரீரியின் பேரில் இரு வாரமாக உபகரணத்தைத் தேடும் பணியும் முடிவை எட்டியது. சிசிடிவி காமிராவை தற்காலிக மாற்றுத் திறனாளியாக்கிய பிறகு மோதலைத் தடுக்கும் உபகரணத்தை செயலிழக்கச் செய்ய அரை மணித்தியாலமே தேவைப்பட்டது. செய்ய 30 நிமிடங்கள், செய்வதற்கான திட்டமிடல், பூர்வாங்க ஏற்பாடுகள், ஒத்திகை, கூட்டல் கழித்தல் கணக்கு… இரண்டு வாரங்கள். 

ரஃபாயேல் யோசிக்க ஆரம்பித்தான். ஏன் அசரீரிக்கு கட்டுண்டு போனோம்? ஆழ்மனதின் நெடுநாளைய வஞ்சத்தைப் பரிச்சயமான, மனதுக்கு நெருக்கமான அக்குரல் தூண்டியதாலா? 

நாகரீகமானவனாக, பதவிஸாக, பிறரைக் கடிந்து பேசாதவனாக, அனைவருக்கும் நல்லவனாக… இதனால் கண்டது ஏதுமில்லை. சுய விருப்பங்கள், அபிலாஷைகள், இச்சைகள், ஆசைகள், ரசனைகள் என சகலமும் தொலைத்து அனாதை சிந்தனையைச் சுவீகரித்துக் கொண்டதில் சூன்யமே நிலைத்தது. 

விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து வாழ்க்கையே கைவிட்டுப் போனது நிதர்சனமானது. 

வியாதிகளில், குறைபாடுகளில் மிக மோசமானது சுய பச்சாதாபம். அனைத்தையும் கடந்து போனாலும் அவள் மட்டும் துளி மிச்சமாகிக் கலந்து விட்டதை தவிர்க்க முடியவில்லை. விருப்பங்களை, சூழலுக்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்பவன் பச்சோந்தி ஆனால் ஆபத்தற்றவன். சாந்தமாக வளைய வந்தாலும் சில பிடிமானங்களை விலக்காதவன் கைப்பிடியில்லாத கூர்மையான கத்தி போன்றவன். 

மணிக்கு 200 கி.மீட்டர் வேகத்தில் ட்ரெயின் சீறிப் பாய்ந்தபடி சென்றது. ஸாங்க்ட் வாலண்டீன் (Sankt valentin) ஸ்டேஷனை எட்டிப்பிடித்த போது மணி 00.37, மூன்று நிமிட மனித சுமை விகிதாச்சார மாறுதலுக்குப் பிறகு 00.40க்கு வண்டி மீண்டும் புறப்பட்டது. ரஃபாயேல் ட்ரெயினை இயக்கும் இருக்கையில் அமர்ந்தபடி கம்ப்யூட்டர் தகவலுக்கு ஏற்ப பணியைத் தொடர்ந்தான். இரவு உணவை அவனும் புசிக்கவில்லை, உடனிருந்த ட்ரெயின் டிரைவரும் அருந்தவில்லை. 

அட்னாங் புக்ஹைம் (Attnang puchheim) ஸ்டேஷன்ல ஸீட் மாத்திக்கலாம் – ரஃபாயேல் யோசனையை ஆமோதித்தான் சக லோகோ பைலட். 

என்ன நடக்கப் போகிறது? எப்படி தீரப் போகிறது? நிகழ்ந்த பிறகு ஆழ் மனப் பிரளயம் முடிவுக்கு வருமா? அறிந்து கொள்ள முடியாத, யாராலோ தீர்மானிக்கப்பட்ட சம்பவம் நிகழுமெனில் நான் எதற்கு? அதன் கருவியாக சில இடங்களில் பயன்‌‌‌படுகிறேனா? ஒரு கட்டத்தில் நடப்பவையெல்லாம் பிறழ்வாக மனசுக்குப்பட்டது. துளி கூட தர்க்க ரீதியற்ற, சாரமில்லா அடுக்குகளாக காட்சி தந்தன. என்ன தான் மாற்று சிந்தனைகள் உதித்தாலும் தேக அசைவுகளனைத்தும் புலனின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் யந்திரகதி அமானுஷ்யத்தின் வெளிப்பாடாய் வினை புரிந்தன.

ட்ரெயின் வேல்ஸைக் (Wels) கடந்து துவக்க நிதானம் விலகி வேகமெடுத்தபடி செல்ல ஆரம்பித்தது. அடுத்த ஸ்டேஷன் அட்னாங்…  மாற வேண்டிய நேரம் நெருங்குகிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு நிறுத்தப்பட்டு 1.37 க்கு கிளம்பி… மனம் பரபரத்தது. 

ஆள் இடம் மாறிய பிறகு மீண்டும் ட்ரெயின் இலக்கண சுத்தமாகப் புறப்பட்டது. பத்து நிமிட பயணத்திற்குப் பிறகு கம்ப்யூட்டர் திரையில் அபாய அறிவிப்பைக் காட்டும் மாற்றங்கள் ஒளிரத் துவங்கின. பார்த்துக் கொண்டிருந்த மாக்ஸிமிலியனால் எதையும் அறிய முடியவில்லை. புத்தி எதையும் ஏற்காத நிலையை எட்டியிருந்தது. 

“போ உனக்கான நேரம் முடிந்துவிட்டது, உன் பணி நிறைவடைந்து விட்டது, இறுதி இலக்கிற்கான அடுத்த கட்டத்திற்குத் தயாராகு, அனைத்தையும் என்னாலேயே செய்திட முடியும், நீயும் ஒரு கருவியாக இதில் இணைய வேண்டும், உன் ஆழ் மன எரிமலை தணிந்திட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை கட்டமைப்பு, போ இளைப்பாறு, கொதி நிலையில் காத்திருக்கும் காபியை கோப்பையில் நிரப்பு, தாக சாந்தி செய்து கொள், இங்கிருந்து உன் மெய்யை அப்புறப்படுத்து” 

மீண்டும் அசரீரி! ஃப்ளாஸ்க்கில் இருந்த காபியை கோப்பையில் சரித்து தொண்டையை நனைத்துக் கொண்டான். 

ஆக்கிரமித்த கட்டுகளை பலவந்தமாக சிந்தையைச் சிதறடித்து, உடைத்து ட்ரெயினின் வேகத்தைக் குறைத்தான். தலை சுழல ஆரம்பித்தது. வேகமாக ட்ரைவர் கேபினிலிருந்து வெளியே வந்தவன், அனிச்சையாகத் தள்ளப்பட்டு திறந்திருந்த ஒரு கம்பார்ட்மெண்ட் உள்ளே போய் விழுந்தான். 

“லூயிஸா… லூயிஸா”

“ரஃபாயேல், தீர்க்கமாக இரு, தெளிவாக இரு நீ என்னை எப்போதும் மறக்காது இருந்தாய். உன்னை மறந்து விட்டோமே என்று நினைவை மீட்டெடுத்த போது தொலைந்த கதியை எட்டிய நான் துயரில் சிக்கி இருந்தேன். மீள முடியவில்லை. இனியும் உன்னை இழந்துத் தனித்திருக்க நான் தயாரில்லை உன்னுடன் எப்போதும் இணைந்திருப்பேன். கலந்திருப்பேன்” 

50 கி.மீட்டர் வேகத்தில் சென்ற ட்ரெயின் கட்டுப்பாடிழந்து எதிரே நிதானமாக வந்து கொண்டிருந்த ட்ரெயினோடு மோதியது. இரு வண்டிகளின் பல கம்பார்ட்மெண்ட்கள் மோதிக் கொண்டன, உரசிக் கொண்டன. ஒரு சொகுசு கம்பார்ட்மெண்ட் மட்டும் மோதலின் விளைவாக பலத்த சேதாரத்திற்கு ஆளானது. தீப்பிடித்து எரியத் துவங்கியது. 5 நிமிடங்கள் எரிந்த நிலையில் மழை பொழிய ஆரம்பித்தது. பிற கம்பார்ட்மெண்ட்களுக்குத் தீ பரவாது அணைந்தது. 

***** 

இரண்டு மாதங்களில் மேரி காரியாலயத்திலுள்ள அனைவரிடமும் சௌஜன்யமாகப் பழகி ஸ்நேகிதர்களை உருவாக்கிக் கொண்டாள். ரெகார்ட்ஸ் பிரிவிலிருந்த சாம்ஸனிடம் பேசிப் பேசி மூன்று வருடங்களுக்கு முந்தைய விபத்து தொடர்பான டிஜிட்டல் விசாரணை அறிக்கைகளைப் பார்க்கும் வரத்தைப் பெற்றாள்.

தந்தை மேக்ஸிமிலியன் திடீரென ஏற்பட்ட ஹைபோ க்ளைஸீமிக் காரணமாக மூளைச் செயல் திறன் பாதித்து இறந்து போனதாக, முன்பே தெரிந்த தகவலை அறிக்கை சொன்னது. 

உடனிருந்த ட்ரைவர் ரஃபாயேலுக்கும் அதே குறைபாடு ஏற்பட்டுள்ளது. இருவரும் இரவு உணவருந்தாதே இதற்கு காரணம். காஃபி அருந்தியதில் சர்க்கரை அளவில் குழப்பமான அளவு மாற்றம் ஏற்பட சுய நினைவின்றி நடந்து போய் இரு கம்பார்ட்மெண்ட் தாண்டி மூர்ச்சையானதால், ரஃபாயேல் உயிர் பிழைத்ததாக ரிப்போர்ட்டில் எழுதப்பட்டிருந்தது. 

ஃபாரன்ஸிக் ஃபிஸிஷியன் கேப்ரியல்

சிறப்புப் புலனாய்வு விசாரணை அதிகாரி நிக்லஸ் 

இவ்விருவரும் தீப்பிடித்த கோச்சுக்குள் இருந்து உயிரிழந்தவர்கள். தங்கள் கம்பார்ட்மெண்டைப் பூட்டி விட்டு கண்ணயர்ந்த நிலையில் மரணமடைந்திருக்கிறார்கள். 

இரு பெயர்களைப் பார்த்தவுடன் அவளுக்கு ஏதேதோ நினைவுகள் எழும்பத் துவங்கின. 

அப்பாவுடன் உடனிருந்த லோகோ பைலட் ரஃபாயேலின் விவரங்களை அவதானித்தவள் தன் அலைபேசியை எடுத்து ஃபேஸ்புக்கிற்குள் புகுந்து ஸர்ச்சில் ரஃபாயேல் பெயரைத் தட்டச்சு செய்தாள். பீபிள் பிரிவில் ஏராளமான ரஃபாயேல்கள் வரிசையாக முளைத்தார்கள். ஒவ்வொன்றாகப் பார்த்தவளுக்கு 11 வதாக இருந்த ப்ரொஃபைல் புகைப்படம் அடையாளங்காட்டியது. வேக வேகமாக சுய விவரங்களைப் பார்க்கத் துவங்கினாள். 

யுனிவர்ஸிட்டி ஆஃப் வியன்னா, படிப்பு, பேட்ச், படித்த வருடம் எனத் தகவல்களை கிரகிக்கையில் ஏதோ புரிந்தது போல இருந்தது. 

கம்ப்யூட்டரை நிறுத்தி, பேசி மற்றும் இணைய இணைப்பைத் துண்டித்தவள் தலை உயர்த்தி மேலே பார்த்தாள். அவளுக்கு இணக்கமான இரு கரங்கள் தலையைக் கோதுவது போன்றதொரு உணர்வில் கட்டுண்டாள். தாகமாக இருந்தது. “காஃபி” குடிக்க முடிவெடுத்து, முடிந்தது என்று தெளிவாக நிதானமாக நடக்க ஆரம்பித்தாள் மேரி.

************

6 Replies to “மெய்யை அப்புறப்படுத்து”

  1. ஆஸ்திரிய நாட்டில் உள்ள ரெயில்வே சிஸ்டம் குறித்து கூகிளில் தேடித் தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையைக் கதை தூண்டுகிறது. ஒவ்வொரு பகுதியையும் வெறும் விவரிப்பு என்கிற ரீதியில் எழுதாமல் அனைத்தையும் கதையின் மையப்புள்ளியோடு இணைத்திருப்பது சிறப்பு. நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

  2. கதை சொல்லும் நேர்த்தியால், விறுவிறுப்பு குறையாமல் இருந்தது!
    ஆனால், இன்னமும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அதிகம் உள்ளது!
    வாழ்த்துகள் சத்யா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.