மிளகு அத்தியாயம் இருபத்தாறு 

1552 ஜெர்ஸோப்பா

வரதன் அமர்ந்திருந்த ஒற்றைக் குதிரை வண்டி ஜெர்ஸோப்பா தெருக்களில்    விரைந்தபோது கையில் எடுத்த காரியம் எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எதிர்ப்பட்டவர்கள் வைத்த கண் வாங்காமல் அந்தக் குதிரையைத் தான் பார்த்தபடி நின்றார்கள். 

கருப்பு நிறத்தில் நல்ல உயரமும், கம்பீரமும் கொண்ட குதிரை அது. பளபளவென்று மினுங்கி இருக்கும்படி அதன் மேல்தோலை நான்கு வேலைக்காரர்கள் தேய்த்துத் தேய்த்து எண்ணெய் போட்டுக் குளிப்பாட்டி இருக்கிறார்கள். இந்தப் பிரதேசத்திலேயே இப்படி ஒரு வேகத்தில் செல்லக் கூடிய குதிரை வேறு எதுவும் இல்லை. 

ராணி சென்னபைரதேவி மிர்ஜான் கோட்டையிலும் ஜெர்ஸோப்பா அரண்மனையிலும் அற்புதமான அரபு குதிரைகள் மொத்தம் பத்து வைத்துப் பராமரிக்கிறாள். ஆனாலும் அதில் ஒன்று கூட வரதன் உட்கார்ந்திருக்க  வண்டியில் பூட்டி வரும் குதிரை போல் அற்புதமானது இல்லை. 

குதிரைக்கு ஷேரு என்று பெயர் வேறு வைத்திருக்கிறார் அவர். ஷேரு நில்லு, ஷேரு போ இப்படி சொன்னால் போதும் ஷேருவுக்கு என்ன செய்யணும் என்று தெரியும். சாட்டையால் அடித்து உரத்த குரலில், நிற்கவோ, ஓடவோ செய்கிற இழிவு எல்லாம் காட்ட வேண்டாத குதிரை அது.

எக்காளம் ஊதிக் கொண்டு ஒரு சிப்பந்தி ஓட ஒருவன் அறிவிக்கிறான்- “எச்சரீகே எச்சரீகே”

“ராணி வந்து கொண்டிருக்கிறார். ஒதுங்கி நில்லுங்க’. அண்மையில் தன் பதினைந்தாம் வயதில் முடி சூட்டிய இளம் ராணி சென்னபைரதேவி அவள்.

சென்னாவின் ராஜ வாகனம் வேகம் எடுத்துப் பாய்ந்து வர எதிரே வந்த வரதனின் வண்டி மரியாதை நிமித்தம் ஓரமாக நின்றது. வரதன் கீழே இறங்கி நிற்கிறான்.

சென்னாவின் சாரட் நிற்க, சாளரம் திறந்து நோக்கினாள் வரதனை.

“உபாத்தியாயரே, நீர் இப்படி தெருவை அடைத்துக் கொண்டு வண்டியில் போனால், ராஜாங்க காரியம் கவனிக்க எப்படி வேகமாகப் போக முடியும்?

வரதனைச் சீண்டும் குரல். கண்டிப்பது இல்லை.

“மகாராணி, நான் ஓரமாக ஓட்டச் சொல்லியிருக்கிறேன். இதுக்கு மேல் ஓரம் இல்லை என்று தோணுது”

“பார்த்துப் போம்” அவரைப் பார்த்து அரைச் சிரிப்பு மாற்றி வைத்து சாரட்டை நகர்த்தச் சொல்கிறாள் சென்னா.  சாளரம் தரையில் நின்ற  வரதன் அருகே வந்தபோது ‘எங்கே குதிரை வாங்கினீர்?” என்று கேட்கிறாள் மகாராணி. அரபு வியாபாரியிடம் என்று மரியாதையோடு சொல்கிறான் வரதன்.

ராஜரதமான சாரட் கோட்டையை நோக்கிப் பரிகிறது.

 “என்ன ரெண்டு நாளாக வரதன் நினைப்பு?” சென்னாவின் படுக்கை அறையில் பெல்ஜியம் கண்ணாடிக்குள் பிம்பமாகத் தெரியும் அறுபது வயதுக்காரி கேட்கிறாள்.  பிம்பம் கலைந்து அவளது பிம்பம் பதினெட்டு வயதுக்காரி ஆகிக் கலகலவென்று சிரிக்கிறாள்.

இடது பக்கம் இருந்த ஆரன்முளை உலோகக் கண்ணாடியில் இருந்து இருபத்தெட்டு வயதுக்காரியும் சேர்ந்து சிரிக்கிறாள். இரண்டு பிம்பங்களுக்கு நடுவே வயதாகி உடல் தளர்ந்து வரும் சென்னா உட்கார்ந்து தொலைவில் பார்வையை இருத்திப் பார்த்தபடி இருக்கிறாள். 

வரதன்.

பதினைந்து வயதில் ஜெர்ஸோப்பா அரண்மனை வளாகத்தில் போர்த்துகீஸ் மொழியும் இங்க்லீஷும் சென்னாவுக்கும் பிள்ளைப் பருவத்தோழனும் தற்போது பிரியமான சிநேகிதி அப்பக்காவின் கணவனுமான வீர நரசிம்மனுக்கும் சொல்லித்தர வந்த தமிழன் வரதன்.  இருபத்தைந்து வயது இருக்கும். நெடுநெடுவென்று ஆறடிக்கு மேலும் அரையடி உயரமாக, அளவாகத் திருத்திய மீசை வளர்த்தவன் வரதன்.

சென்னா ஒரு மகாராணி என்று வகுப்பு எடுக்கும் முன்பும், வகுப்பு முடிந்த அப்புறமும் எல்லா மரியாதையும் செலுத்துவான் வரதன். வகுப்பு ஆரம்பித்து விட்டாலோ?

“சென்னா, நேரே நிமிர்ந்து உட்கார். இன்னொரு தடவை கொட்டாவி விட்டால் அரண்மனைத் தோட்டத்தை இரண்டு தடவை காலில் செருப்பில்லாமல் சுற்றி ஓடிவர வேண்டியிருக்கும்” கண்டிப்பான ஆசிரியனாகச் சொல்வான் வரதன்.

வீரநரசிம்மன் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பே இரண்டு அல்லது நான்கு முறை காலில் செருப்பில்லாமல் அரண்மனைத் தோட்டத்தைச் சுற்றி ஓடிவருவான். அப்புறம் நிம்மதியாகக் கொட்டாவி விடுவான்.

அரண்மனை சமையலறையில் இருந்து வகுப்பு நேரம் முழுக்க சிற்றுண்டியும், பழத் துண்டுகளுமாக சென்னா வரவழைத்து சாப்பிடத் தருவது வீருவுக்குப் பிடித்தது. வாத்தியார் வரதன் நேரம் கடத்தும் பலகாரம் என்று கண்டிப்பான். பசி வந்திட அவனும் வடையைக் கடித்துக்கொண்டே வகுப்பெடுப்பான்.

வீரு வகுப்புக்கு வராமல் வயிற்று நோவு என்று விடுப்பு எடுத்துக்கொண்ட ஒரு தினம். வகுப்பு நடக்கிறது. சென்னா வரதனை விழுங்கிவிடுவது போல் பார்த்தபடி இருக்க, வரதன் பார்வை நொடிக்கொரு தடவை அவளுடைய கருவண்டுக் கண்களைச் சந்திக்கின்றன. மீளமுடியாமல் துடிக்கின்றன.

வகுப்பைக் கவனிக்காமல் நேரம் கடத்துகிறேனா? சரி ஆசிரியரின் தண்டனை நேரம் இது. தோட்டத்தைச் சுற்றி ஓடி வருகிறேன்.

சென்னா பதிலுக்குக் காத்திராமல் சிட்டுக்குருவியாக ஓடிப் போகிறாள். வரதன் புன்முறுவலோடு அவள் வரக் காத்திருக்கிறான். ஐந்து நிமிடம் போனது. பத்து நிமிடம். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள்.  அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன. யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.

நினைவுகளின் ஊர்வலம் தொடங்கி விட்டது. சென்னா கண்ணாடியைப் பார்த்தபடி மெத்தையில் அமர்ந்திருக்கிறாள்.

சென்னா உறைந்து இருக்க, ஆரன்முள கண்ணாடியில் தெரிந்த அவளுடைய பிம்பம் உயிர் பெறுகிறது. அந்தப் பெண் கண்ணாடியில் இருந்து இறங்கி வருகிறாள். மகாராணி, இது நீங்கள் செய்ய முடியாதது எல்லாம் விருப்பம் போல் செய்யக்கூடிய பிரதிபிம்பம். என் பெயர் திருச்செலுவி என்கிறாள். பார்த்துக் கொண்டிருக்கும்போதே திருச்செலுவி வரதனை இடுப்பை வளைத்துக் கொள்கிறாள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்னா கண்ணாடிக்குள்  நீள நடந்து போகிறாள்.

உபாத்தியாயன் வரதன் பாடம் சொல்லத்தான்   கோட்டைக்குள் வரவேண்டும் என்றில்லை. பாடம் கேட்கவும் வரலாம். தோட்டத்துக்குப் போகும் வழியில் இருண்ட ஒழுங்கையில் முதல் பாடம் தொடங்கி விட்டாள். இன்னும் நிறைய உண்டு கற்கவும் கற்பிக்கவும். திருச்செலுவி சொர்க்கம் எது என்று வரதனுக்குச் சொல்லிக் கொடுப்பாள். அவனுக்கு நேரம் கிடைக்கும்போது இங்கே வரலாம். திருச்செலுவி கூப்பிட்டாலும் உடனே வரவேண்டும்.  கடைவீதியில் இனிப்பு மிட்டாய் வாங்கி வரவேணும். சரியா?

வரதனை அருகில் இருந்து பார்த்திருக்க அவள் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட சலுகை அது. சல்லாபம் என்று படுக்கை அறை முகம் பார்க்கும் பெல்ஜியம் கண்ணாடி சொன்னபோது  திருச்செலுவி தலையணையைத் தூக்கி அந்தக் கண்ணாடி மேல் போட்டாள். வரதன் இனிப்பு கொண்டு வந்து கொடுப்பது மட்டும் போதாது, அதை திருச்செலுவிக்கு ஊட்டி விடவும் வேண்டும் என்று கண்ணாடி கண் அடிக்க திருச்செலுவி நாணத்தில் போலிக் கோபம் மற்றொரு முறை மெல்ல எழ, இன்னொரு தலையணை பறந்தது.

திருச்செலுவியம்மா ஏதாவது செய்யணுமா? வெளியே இருந்து தாதி  கேட்க, ஒன்றும் இல்லையடி என்று அவசரமாக அவளை வராமல் நிறுத்தினாள் திருச்செலுவி. மனம் என்னமோ வரதன் மடியில் திருச்செலுவி அமர்ந்திருக்க, ஜெயவிஜய இனிப்பை அவர் பாதி கடித்து திருச்செலுவிக்கு எச்சில் நனைத்த மீதி இனிப்பை ஊட்டுவதாக மனம் தறிகெட்டுப் பறந்தது. உன் ஆடைகள் எங்கே செலுவி? அட வரதா உன் உடை எங்கேயடா? இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

அம்மா, வாத்தியார்  வந்திருக்கார். வரதன் வாத்தியார். மண்டபத்தில் இருக்கச் சொல்லட்டுமா? மறுபடி தாதி குரல். கொஞ்சம் யோசித்து திருச்செலுவி தைரியமாக ஒரு முடிவு எடுத்தாள்.   எனக்கு கொஞ்சம் தலை சுற்றல். நான் வெளியே போக வேணாம் என்று பார்க்கிறேன். அந்த உபாத்தியாயரை என் இருப்பிடத்துக்கே வரச் சொல்லிவிடு. பத்து நிமிடத்தில் மறுபடி நான் ஓய்வெடுக்க வேணும். அதற்கு ஏற்றபடி பேசிச் செல்லட்டும்.

அது பத்து நிமிடத்தில் முடியும் உரையாடலாக இல்லை. திருச்செலுவியை இழுத்து வரதன் தன் மடியில் இருத்திக்கொண்டான். ஓ உபாத்தியாயனே,   உன் குதிரை எப்படி இருக்கிறது என்று குறும்பாக விசாரித்தபடி அவனுக்கு உதட்டில் ஈரமுத்தம் ஒன்று ஈந்தாள் திருச்செலுவி.  

ஊரே பார்த்து அதிசயித்து நிற்கும் குதிரை அது ராணியம்மா என்று சொல்லும்போதே வரதனுக்கு சிருங்காரம் உச்சத்தில் உடம்பில் பரவி நிரம்புகிறது. உன் குதிரையை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று திருச்செலுவி தைரியமாகச் செய்ததை ஆரன்முள கண்ணாடியில் தெரிந்த இன்னொரு திருச்செலுவி சீய்ய்யென்று முகத்தை நாணத்தோடு திருப்பிக் கொள்கிறாள். இழுத்துப் பறிக்க வேண்டாம் எஜமானி. குதிரையை தரத் தயாராக இருக்கும் பிரஜை நான் என்று வரதன் சொல்ல இரண்டு பேரும்   கருப்புக் குதிரைமேல் ஆரோகணித்து   கடற்கரையில் சீரான வேகத்தோடு சென்று கொண்டிருக்கிறார்கள். 

படுக்கை அறை. ஆரன்முள கண்ணாடி முழுக்க அடைத்துக்கொண்டு கிடக்கும் அரச சயனப் படுக்கை. அதில் அமர்ந்து திருச்செலுவிக்கு புது இனிப்பை ஊட்டுகிறான் வரதன். இதன் பெயர் என்ன? திருச்செலுவி கேட்க, ஏதோ பெயர் சொல்கிறான் அவன். சீய்ய் என்று   பழுப்பு நிறத்தில்  நீண்ட இனிப்பை முழுக்க வாயிலிட்டு மெல்லுகிறாள் திருச்செலுவி. முழு முத்தத்தில் அது அவன் வாய்க்கு இடம் மாறுகிறது. அவனிடம் மீதி இனிப்பை  நீட்ட   அவனும் மெல்லுகிறான். கூழான இனிப்பை அவன் வாயிலிருந்து தோண்டி எடுத்து அவசரமாக விழுங்குகிறாள் திருச்செலுவி. குதிரை தடையை மீறி குதித்து ஓடுகிறது.  

திருச்செலுவி ஆரன்முள கண்ணாடிக்குள் நோக்க, சென்னா கைகள் கொண்டு முகம் பொத்திக் குத்துக்காலிட்டு உடல் நடுங்க அமர்ந்திருக்கிறாள். நீதான் நான் என்று திருச்செலுவி சென்னாவைப் பார்த்துச் சிரிக்கிறாள். சென்னா இல்லை இல்லை என்கிறாள். நீயேதான் நான் நானே தான் நீ என்றபடி கண்ணாடிக்குள் வருகிறாள் திருச்செலுவி. சென்னா கண்ணாடிக்கு வெளியே வர, வரதன் காத்திருக்கிறான்.

காட்சி குழம்பிப் போய் வரதன் திருச்செலுவிக்கு வாக்குறுதி அளிக்கிறான். நான் தமிழகத்தில் என் ஊர் மதுரை சென்று திரும்பி உன்னைக் கைப்பிடிப்பேன். எந்தத் தடை வந்தாலும் அஞ்சேன். நீ மகாராணியாக முடிசூடி இரு. நான் வெறும் குடிமகனாக சந்தோஷமாக உனக்குக் குற்றேவல் செய்திருப்பேன்.

காட்சி மறுபடி குழம்ப, அரிந்தம் வைத்தியர் மூலிகை அரைத்துத் திருச்செலுவிக்குக்  கலக்கித் தருகிறார். 

“வெறும் வயறாகிடுச்சு இப்போ”

அவர் கண்கலங்கிச் சொல்ல, திருச்செலுவி விசும்புகிறாள். 

மதுரை நாயக்கர் பேரரசு விஜயநகரப் பேரரசோடு பொருதி வெல்லப் போகும் யுத்தம் இது  என்று யாரோ கண்ணாடிக்குள் இருந்து சொல்கிறார்கள். போர்வீரன் உடுப்பு தரித்த வரதன் கண்ணாடிக்குள் இருந்து கையாட்டி ஏதோ சொல்கிறான். திருச்செலுவிக்குக் கேட்கவில்லை. அவளும் கண்ணாடிக்குள் நுழைய படுக்கையில் திடுக்கிட்டுத் துயில் கலைந்து சென்னா அமர்ந்திருக்கிறாள். கண்ணாடிக்குள் இருந்து அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வரதன் போகிறான்.

பரமன் திடுக்கிட்டுக் கண் விழிக்க, மேலெல்லாம் மிளகுக் கொடியின் பச்சை வாடை கலந்த மழை வாடை. தாங்குகட்டைகள் தரையில் விழுந்து கிடக்க, படுக்கை அறையில், வீடெங்கும் மின்சாரம் நின்றிருந்தது. வெளியே மழை பெய்யும் சத்தம். 

வரதன் வரதன் வரதன் வரதன் பரமன் பரமன் பரமன் பரமன்.

மழைத் தாரைகள் சத்தமிட்டு ஜன்னல் கதவடைத்து விழுகின்றன.

சென்னா ஓ சென்னம்மா ஓஓஒ சென்னபைரம்மா

பரமன் முனகியபடி தரையில் உருண்டுகொண்டிருந்தார்.

Series Navigation<< மிளகு அத்தியாயம் இருபத்தைந்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.