பூரணம்

1998 செப்டெம்பெர் 2ஆம் தேதி  டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் அப்புகைப்படத்தைப் பார்த்தேன். காந்தி ஒரு சிறு மேடையில் கண்மூடி அமர்ந்திருக்க அவர் முன் மூன்று பெண்கள். அவர்கள் முன் இரண்டு மைக். காந்தி கண் மூடியிருப்பதிலும் அப்பெண்கள் வாய் திறந்திருக்கும் விதத்திலும் அது பஜனையின் போது எடுக்கப்பட்ட படம் எனத் தெரிந்தது. இரண்டு பெண்கள் கண்ணாடி அணிந்திருந்தனர். மூன்றாவதாக இருக்கும் பெண்ணை பார்த்ததும் சிறு அதிர்ச்சி. எதிர்பாராத கணத்தில் ஒன்று அறிவுக்கு வெளிச்சமாவதன் அதிர்வு. பாட்டியேதான். அம்மாவின் அம்மா. எனக்கு ஒன்பது வயதானபோது பாட்டி இறந்து போனாள். அப்போது பதிந்த ஒரு மென் ஞாபகத்தை வைத்துக்கொண்டு எப்படி பாட்டியின் இள வயது புகைப்படத்தை இனங்கண்டேன் எனத் தெரியவில்லை. வீட்டில் பாட்டியின் ஒரு புகைப்படம் கூட கிடையாது. காரணம் வீட்டில் எந்த ஒரு புகைப்படத்தை மாட்டுவதையும் பாட்டியும் தாத்தாவும் அனுமதித்தில்லை. அவர்கள் வீட்டிலிருக்கும் பொழுதைவிட பயணத்தில் இருந்த பொழுதுதான் அதிகம் எனும் போதும். ஆனால் காந்தியின் ஒரே ஒரு படம் மட்டும் விதிவிலக்கு. காந்தி லண்டன் சென்ற போது டார்வின் மில் பெண் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம். சிரித்தபடி பெண்கள் வெறும் புன்னகையாய் சூழ்ந்திருக்க மெலிந்த  உடலுடன் பூரித்து நிற்கும் ஒரு மனிதரின் புகைப்படம். அப்புகைப்படத்தில் இருக்கும் மகிழ்ச்சியின் அலையை கண்கூடாகக் காணலாம். ஒரு மனிதரால் உருவாக்கப்படும் மகிழ்ச்சியின் அலை. சிறுவனாக  நான் பார்த்து பார்த்து என் வேர் வரை நிரம்பிவிட்டிருக்கும் புகைப்படமது. மகிழ்ச்சியை ஓவியமாக வரைந்தால் அது அப்புகைப்படம் போலத்தான் இருக்கும்.

அந்த நாளிதழும் அதில் பார்த்த அந்தக் கருப்பு வெள்ளைப் புகைப்படமும்தான் என்னை இயக்கியது. நான் இதுவரை கங்கையை பார்த்ததில்லை. கற்பனையில் அது ஒரு பெரும் பிரம்மாண்டமான ஆறாக இருந்தது. அது போல்தான் வரலாறும் ஒரு பெருக்காக எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அப்புகைப்படம் ஒரு கணம் வரலாற்றை மிக அருகில் காட்டிவிட்டது போல் உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் அவ்வுணர்வை அறியத்தான் என் பாட்டியின் வழித்தடத்தைத் தேடிப்புறப்பட்டது. 

பாட்டியைப் பற்றி அறிய முதலில் அம்மாவிடம்தான் சென்றேன். ஆனால் அம்மா மெல்ல சொல்லை உதிர்க்கத் துவங்கியிருந்தாள். தேவை மீறி பேசுவதில்லை. வாரத்தில் இருமுறை பேசா நோன்பு. அம்மாவிடமிருந்து குஜராத்தில் இருக்கும் சோனிபட் எனும் கிராமத்தின் பெயர் மட்டும்தான் கிடைத்தது. நான் சோனிபட் போகப்போவதாக பாட்டியை பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளப்போவதாக  சொன்னேன். பாட்டியின் வாழ்க்கையை புத்தகமாக எழுத வேண்டும் எனும் எண்ணமிருந்ததை வெளிப்படுத்தவில்லை. மலர சிரித்து என்னை நெற்றியில் முத்தமிட்டு வெறும் கட்டைவிரலால் குங்குமம் ஏதுமின்றி திலகமிட்டாள்.

என் அப்பா ராம்லால் தொழில் நிமித்தமாக மெட்ராஸ் வந்து  செல்ல இருந்தவர் ஒரு கட்டத்தில் மெட்ராஸிற்கு குடிப்பெயர்ந்தார். ஆனால் நான் பிறந்தது குஜராத்தில் உள்ள ஜாம்நகரில்தான். வருடத்திற்கு ஒரு முறை ஜாம்நகர் சென்று வருவதுண்டு குடும்பமாக. ஜாம்நகரில் இன்னும் என் சித்தியின் வீடு உள்ளது. அம்மாவின் தங்கை. முதலில் ஜாம்நகர்தான் சென்றேன்.   

“பாட்டி ரொம்ப தைரியசாலி. அவ்வளவு துணிச்சலான ஒரு பெண்ண பார்ததில்ல” என்பதற்குமேல் வேறு எதுவும் சித்தியிடமிருந்து கிடைக்கவில்லை.பாட்டியின் பொருட்கள் புத்தகங்கள் எல்லாம் சோனிபட் கிராமத்தில் இருப்பதாக சித்தியும் சொன்னாள். சோனிபட்டில் இருப்பது பூர்வீக வீடு. அந்தக் காலத்திலேயே கட்டப்பட்ட காரைக் கட்டிடம். புதுப்பித்து புதுப்பித்து பழமை மாறாமால் இன்று வரை நின்றிருக்கிறது அக்கட்டிடம். இத்தனை மெனக்கெடல் ஏனெனில் அது காந்தி தண்டி யாத்திரையின் போது ஓரிரவு தங்கி உணவருந்திச் சென்ற இல்லம். பாட்டியின் மாமா சோனிலாலின் இல்லமது. 

வீடு பாட்டியின் அண்ணனான லலித் தாத்தாவின் மகனான ராஜ்ஜின் பராமரிப்பில் இருக்கிறது. ராஜ், கதர் மட்டும் உடுத்தும் நாளும் வாசிப்பும் பஜனையும் பல கிலோமீட்டர்கள் கால் நடையாக நடந்தும் வாழ்பவர். அவர்தான் அவ்வில்லத்தின் முக்கியத்துவம் அறிந்து பராமரிப்பார் என அவர் பொறுப்பில் சரியாக விடப்பட்டிருந்தது. ஜாம்நகரிலிருந்து ஒரு கடிதம் எழுதினேன். பதில் கடிதத்திற்குக் காத்திராமல் சோனிபட் சென்றுவிட்டேன்.

ராஜ் என்னை கட்டியணைத்து வரவேற்று சாப்பிடச் செய்தார். கடலையும் ஆட்டுப்பாலும் கொஞ்சம் ஆரஞ்சு பழமும். சாப்பிட்ட பின் வந்ததன் நோக்கத்தைச் சொன்னேன். அவர்தான் நான் தேடி வந்த பொக்கிஷத்தை கொடுத்தார். வீட்டின் பின் கட்டுக்கு செல்லும் வழியில்  விசாலமான ஒரு அறை முழுதும் புத்தகங்கள். இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டு முதல் அறை முழுதும் அல்மிராக்களும் புத்தகங்களும். அடுத்த கட்டு முழுவதும் புகைப்படங்கள். நான் அதுவரை காணாத கங்கையை கண்டது அங்குதான்.

புத்தக அல்மிராவில் முதலில் என் கண்களுக்கு பின் கைகளுக்கு சிக்கியது சோனிலால் அவர்களின் டைரி. சோனிலால் சோனிபட் கிராமத்தில் 1890ல் பிறந்தவர். தன்னுடைய பதினெட்டாவது  வயதில் இருபது பேர் கொண்ட  குழுவை தலைமைத்தாங்கி ஒரு ஆயுதக்கிடங்கை கைப்பற்றி அதன் ஆயுதங்களை தன்வசமாக்கியிருக்கிறார். தொடர்ந்து 1911ல் கார்ன் வார்டன் எனும் ப்ரிட்டீஷ் ராணுவ அதிகாரியை கொலை செய்யத் திட்டம் தீட்டி அதனை வெற்றிகரமாகவும் நிகழ்த்தியுள்ளார். இருமுறை சிறைபட்டுத் தப்பியிருக்கிறார். ஒரு முறை மரண தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்தும் தப்பியுள்ளார். ஏப்ரல் 13 1919ல் ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. அப்போது அம்ருத்ஸரில் சோனிலால் இருந்திருக்கிறார். அவர் பஞ்சாப் பயணப்பட்டதன் நோக்கம் தெளிவாக நாட்குறிப்பில் இல்லை. ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அந்நாளில் ஜாலியன்வாலாபாக் மைதானத்தின் அருகில்தான் இருந்திருக்கிறார். அந்நாளில் அப்பிணக்குவியலைக் காண நேர்ந்தபோது தன் வாழ்க்கையின் இலக்கு கிட்டியதாக எழுதியுள்ளார். அவர் வார்த்தைகள் பின் வருமாறு,


“எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான செயலிலேயே இவ்வொரு வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்றிருந்தேன். ஆனால் இன்று அநீதிக்கு எதிராக உயிரை விட்டே ஆக வேண்டும் எனும் உறுதிக்கு வந்துள்ளேன். அப்படி உயிர் நீங்கிய பின் அநீதி அழிந்து நீதி எங்கும் நிலைக்க இறைவன் அருளட்டும். உயிர் போகும் வரை என்னால் ஆனதை செய்வேன். அப்படியான மரணம் எவ்வளவு நிறைவான ஒன்று”

இரவு 07.30

13.04.1919


அப்படியான மரணத்தைதான் சோனிலால் எய்தினார்.  ஒரு போராட்டத்தில் எதிரியின் ஆயுதத்தின் தாக்குதலில்தான் அவர் உயிர் போனது. ஆனால்  சோனிலால் கையில் ஆயுதமேதுமில்லை. அப்படியான ஒரு ஆயுதம் மஹாத்மாவால் (சோனிலால் காந்தியை மஹாத்மா என்று மட்டும்தான் அழைத்தார்) சோனிலாலுக்கு கொடுக்கப்பட்டது. 1922ல்தான் சோனிலால் காந்தியை சந்தித்தார். எதுவும் பேசவில்லை. காந்தி சோனிலாலைப் பார்க்கவுமில்லை. ஆனால் தான் அன்று மீண்டும் பிறந்ததாக தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளார் சோனிலால். பின் காந்தியின் நிழல் போல் உடன் இருந்திருக்கிறார். காந்தியால் பல பணிகள் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தண்டி யாத்திரையின் போது சபர்மதியிலிருந்து முழு யாத்திரையிலும் உடன் நடந்தவர்களில் சோனிலாலும் ஒருவர்.

1934க்குப்பின் வாரமொருமுறை மாதமொருமுறை என மட்டும் நாட்குறிப்புகள் உள்ளன. ஒரு குறிப்பில் தான் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும் அவள் மீது விருப்பம் போல் எழுந்தது என்ன உணர்வென்று இனம் காண்பதற்குள் வேறு பணிகள் சூழ்ந்துவிட்டதாகவும் எழுதியுள்ளார். சோனிலால் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது கடைசி நாட்குறிப்பு பின்வருமாறு,

“போரட்டம் என்பது பெரும் பெருக்கு. பெருக்கு என்றாலே கங்கைதான் நினைவில் வருகிறது. துளிகள் சேர்ந்து கங்கையாவது போல் என்னைப்போல் சிறு சிறு துளிகளாகச் சேர்ந்துதான் இப்போராட்டத்தின் பெருக்கு. இந்தியர்கள் கங்கையின் துளி, இந்தியா கங்கை என்றால் மகாத்மா கங்கையின் விசை.”


இரவு 08.00

06.05.1941

சரியான நாள் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தனிநபர் சத்தியாகிரகத்தில்தான்  சோனிலால் உயிர் துறந்தார். திசைத்தெளிவுடன் எச்சலனமுமின்றி அவர் தன் வாழ்வை முன்னெடுத்தார் என்பதை இந்நாட்குறிப்பினை யார் வாசித்தாலும் உணர முடியும்.

இந்த ஒருவரின் டயரியிலிருந்து வெளி வர எனக்கு இரண்டு நாள் பிடித்தது. என்னால் கனவு கூட காண முடியாத ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார். காந்தியுடன் சோனிலால் இருக்கும் பல புகைப்படங்கள் இருந்தன. பர்தோலி சத்தியாகிரகம் என  அடிக்குறிப்பிடப்பட்ட  புகைப்படம் இருந்தது. தண்டி யாத்திரையின் போது எடுக்கப்பட்ட எண்ணற்ற புகைப்படங்களில் பெரும்பாலான படங்களில் சோனிலால் இருந்தார். சோனிலால் சுமாரான உயரம்தான். ஆனால் உடல் புஷ்டியாக ஒரு தேகப்பயிற்சியாளனின் உடல் கட்டமைப்பு. மாநிறம்.  உதட்டை ஒட்டி கன்னங்கள் நோக்கி எழும் ஒல்லியான முறுக்கிய மீசை. கதர் ஆடையில் சிரித்த முகமாய் அவர் நின்றிருக்க உடன் ஒரு சிறுமி நிற்கும் புகைப்படம். ஃப்ராக்குடன் முகமெல்லாம் பல் தெரியும் சிரிப்புடன். அதுதான் என் பாட்டி லீலாதேவி. சோனிலால் என் பாட்டியின் மாமா. அவரின் செல்லத்துக்கும் பெரும் அன்புக்கும் உரித்தானவர் லீலாதேவி.

லீலாதேவி பிறந்தது 05.12.1911ல். சோனிலால் மாமாவின் நாட்குறிப்பில் அது பதிவாகியுள்ளது. அவருக்கு பெற்றோர்களால் வைக்கப்பட்ட பெயர் தேவி என்பதாகும். 1921ல் சபர்பதியில் சோனிலால் மாமா காந்தியை சந்திக்கச் சென்ற போது உடன் தேவியையும் அழைத்துச்சென்றுள்ளார். காந்தியிடம் தாங்கள் இக்குழந்தைக்கு பெயரிட வேண்டும் என்றிருக்கிறார் மாமா. முதலில் ஏன் பெயரிடப்பட்ட குழந்தைக்கு மற்றொரு பெயரிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார் காந்தி.சோனிலால் மாமா பிடிவாதக்காரர். விடவில்லை. காந்தி, லீலா எனும் வார்த்தையை முன் சேர்த்து லீலாதேவி என பெயரிட்டிருக்கிறார். பாட்டிக்கு அது குறித்து பெரும் மகிழ்ச்சி. தன் நாட்குறிப்புகளிலும் கடிதங்களிலும் பல இடங்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

லீலாதேவியின் நாட்குறிப்புகளை காந்தியின் இறப்புக்குப் பின் முன் என்று பிரிக்கலாம். சோனிலால் மாமா எழுதச் சொல்லித்தான் இந்த டையரியை எழுதுவதாக அவரின் முதல் குறிப்பு 02.03.1931ல் துவங்குகிறது. தினமும் எழுதப்படவில்லை. வாரமொருமுறை சில சமயம் மாதமொருமுறை என உள்ளது. பெரும்பாலும் அகம் தொடும் கணங்கள் அகம் நெகிழும் பொழுதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் கவிதைகளைக் காண முடிகிறது. சில தாகூரின் வரிகள் சில லீலாதேவியால் எழுதப்பட்டவை. அவரது முதல் நீண்ட குறிப்பு  தண்டி யாத்திரை பற்றியது. அது  பின் வருமாறு,


“நான் பாபுவை முதன் முதலில் பார்த்தது என் பத்து வயதில். நான் சோனிலால் மாமாவின் கையைப் பிடித்துக்கொண்டு சபர்மதி ஆஷ்ரமத்திற்குள் செல்கையில் பாபு ஒரு மரக்கன்றை நட்டுக்கொண்டிருந்தார். ஒரு சிறுவன் அவரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். எதையோ அவனிடம் விளக்கிக்கொண்டே மரம் நடுவதில் மும்முரமாய் இருந்தார். அப்போது முதலே பாபு எனக்கு புன்னகையாகத்தான் நினைவுள்ளார். பின் மெலிதான நியாபகம், என் கன்னத்தைத் தட்டி லீலாதேவி என்று பெயரிட்டார்.

ஆனால் இன்று பாபுவைக் காண ஊரே திரண்டிருந்தது. சொல்லப்போனால் உலகமே அவர் தண்டி யாத்திரையைப் பற்றி படித்தபடி மானசீகமாகப் பார்த்துக்கொண்டிருந்தது. காலையிலிருந்தே சோனிலால் மாமாவின் சிறு கிராமம் அல்லல் பட்டது. விழாக்கோலம் பூண்டெழுந்தது. ஒரு பெரும்பாதை முழுதும் தோரணம். அன்று காலை முதலே பாபு எந்த ஊரில் இருக்கிறார் எங்கு சாப்பிட்டார் என்பது போன்ற செய்திகள் வந்து  கொண்டே இருந்தன. மாலை மெல்ல சாயத் துவங்கியது. சூரியன் கண் கூசச் செய்யாத  பொன்நிறத்தில் ஒளிர்ந்தபடி இருந்தான். மொத்த ஊரும்  ஊருக்குள் பாபு நுழைய இருக்கும் இடத்தில் திரண்டிருந்தது. ஊர்ப் பெரியவரான ராம்தேவ் கையில்  மாலையுடன் நின்றிருந்தார். வழியெங்கும் லேசாக நீர் தெளிக்கப்பட்டது. மூன்று முறை காயவிட்டு மீண்டும் தெளித்தார்கள், கால்கள் வெப்பம் உணரக்கூடாது என்பதற்காக. துண்டை சுழட்டிக்கொண்டு சுக்வீர்தான் ஓடி வந்தான் ‘வந்தாச்சு வந்தாச்சு’ என்று. உடனே வாத்தியங்கள் முழங்கத்துவங்கின. அந்த பெரிய கூட்டம் இவ்வளவு வேகமாய் நகர்ந்து வரும் என எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட ஒற்றை உடலாக ஓடி வந்தது எனலாம். சந்தன நிறத் துண்டினை உடலில் போர்த்திக்கொண்டு கண்ணாடி அணிந்து கையில் கைத்தடியுடன் பாபு கும்பிட்டபடி நுழைந்தார். ராம்தேவ் மாலை அணிவித்தார். நால்வர் அவர் காலில் விழுந்தனர். நான் உடல் சிலிர்க்க அங்கு நின்றிருந்தேன். 

அன்று சூரியன் சாயும் வேளையில் ஊரின் நடுவில் இருக்கும் ஹனுமன் கோயிலில் பஜன் நடந்தது. என்னை பாடச் சொன்னார்கள். ‘அன்பினால் அன்புருவாகி அன்பால் நெஞ்சு பிளந்து காட்டுகிறான் தரிசியுங்கள் அன்பினை அன்பானவனை’ எனும் ஹனுமன் மீதான பாடல். பாபு கண் மூடிக் கேட்டிருந்தார். பின் அருகழைத்துக் கைப்பிடித்துக் கண்ணம் தொட்டு அழகாய் பாடுகிறாய் என்றார். தினமும் பாட வேண்டும் என்றார். ஏழரை மணிக்கெல்லாம் எல்லோரும் படுத்துறங்கினர். பாபு எங்கள் வீட்டின் முன்பகுதியில் ஒரு துண்டை விரித்துப் படுத்துக்கொண்டார். இதனை எழுதும் போது பாபு பத்தடி தூரத்தில்தான் தூங்கிக்கொண்டிருக்கிறார் . சற்று முன் அவர் அருகில் சென்று பார்த்தேன். வெகு அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தார். ஒரு தேசத்தின் மையம் இப்படி அமைதியாக சப்தமின்றி இருக்குமா? பாபுவின் மூச்சொலி கேட்டது  பின் மெல்லொளியில் அவர் வயிறு மூச்சுக்கு ஏறி இரங்குவது தெரிந்தது. பாபு மனிதர்தான்.”

21.03.1930

இடம் சோனிபட்

லீலாதேவிக்கும் கிஸன்லாலுக்கும் 1931ல் திருமணம் நடந்தது.  என் தாத்தா கிஸன்லால் செல்வந்தர். அவர் குடும்பம் பரம்பரையாய் துணி விற்பனையில் இருப்பது. கிஸன்லாலின் அப்பா அவர் காலத்தில் பல தொழில்களிலும் காலூன்றினார். என் தாத்தா கிஸன்லாலின் புகைப்படம் ஒன்று கிடைத்தது. அவர் மட்டும் நிற்கும் படம். கையில் ஒரு வைர மோதிரமும் கழுத்தில் ஒரு பெரிய தங்கச் சங்கிலியுடன் கையில் பளபளக்கும் கைத்தடியுடன் தீவிர முகத்துடன் நெஞ்சு உயர்த்தி நிற்கும் படம். வியாபாரத்தை எதற்காவும் விடாத மனிதர். நேர்மையானவர். காந்தி கேட்டால் மொத்த சொத்தையும் கொடுத்துவிடக்கூடியவர். காந்தியின் மீதான விருப்பம் எனும் ஒரு புள்ளியில் மட்டும்தான் பாட்டியும் தாத்தாவும் ஒத்துப் போனார்கள். அவர்களுக்குள் மனம் ஒத்துப்போகாமல் இருப்பது பல கடிதங்களின் வழி நாட்குறிப்புகளின் வழி அறிய முடிகிறது.

10.01.1951 அன்று அவர் எழுதிய குறிப்பு ஒன்று. காந்தியை இரு தரப்பின் மத்தியில் சமாதானம் செய்பவராக நிறுத்துகிறது.  ஒரு பக்கம் இந்தியா பாகிஸ்தான் எனும் இரு நாடுகள், ஒரு பக்கம் நேரு படேல், ஒரு பக்கம் லீலாதேவி கிஸன்லால். சமாதானம் செய்ய முனையும் தாய் என காந்தி குறிப்பிடப்படுகிறார் அக்குறிப்பில். 


‘பாபு எனக்கும் கிஸானுக்கும் சமாதானம் செய்து வைத்தபடியேதான் தேசத்தை விடுதலை நோக்கி அழைத்துச் சென்றார்.பாபுவை நினைக்கையில் சண்டையிடும் குழந்தைகளிடன் மன்றாடும் தாய்தான் அவர் எனத் தோன்றுகிறது. குழந்தைகள் உண்மையிலேயே மோசமாகச் சண்டையிட்டன. பாபுவின் சொல் கேளாமல் புரியாமல் சண்டையிட்ட குழந்தைதான் நானும்.’ 

ஆனால் பாபுவின் எத்தனையோ பிரயத்தனத்திற்குப்பின்னும் எத்தரப்பும் சேரவில்லை. லீலாதேவியும் கிஸன்லாலும் பாபுவின் எத்தனையோ மன்றாட்டிற்குப் பிறகும் பிரிந்தார்கள்.

லீலாதேவியை மூன்று மரணங்கள் வெகுவாக பாதித்துள்ளது. முதலாவது அவரின் மாமா சோனிலாலின் மரணம்,


‘நான் கண்ணிர்ப் பெருக்கி ஓடோடி வந்து குரலெடுத்து அழுதபடி மாமாவின் முகத்தைப் பார்த்தேன். அடுத்த கணம் அமைதியானேன். அது ஒரு நிறைவில் உறைந்திருந்தது. இப்படியான மரணம் கொண்டாடப்படவேண்டியது. மாமா தன் வாழ்வை சேவைக்கு அர்ப்பணித்தார். நியாயம் எனத் தான் நம்பிய ஒன்றுக்காக போராடி உயிர் விட்டார். இது தான் மாமா வேண்டிக்கொண்டது. இதுதான் மாமாவுக்கு கடவுளின் ஆசி.’

இரண்டாவதாக காந்தியின் மரணம், 


‘இந்தியா கங்கை என்றால் பாபு அதன் விசை என்று மாமா சொல்லியிருக்கிறார். விசையற்ற கங்கை நீர்போல் இந்தியா காந்தியின் மரணத்தின் பின் நின்றது. பின் அது மெல்ல அசைந்தது. அது முன்னெப்போதும் போல் இல்லை. ஆனால் தேசம் முன் சென்றது. நானும் முன்சென்றேன். என்னில் முழுமையாக ஏதோ மாறிவிட்டிருந்தது’

மூன்றாவதாக அவரின் மகன் இர்ஃபானின் மரணம். 

தெளிவான குறிப்புகள் இல்லாவிடிலும் தோராயமாக 1943ல் நிரந்தரமாக லீலாதேவியும் கிஸன்லாலும் பிரிந்தார்கள் என்று சொல்ல முடியும். லீலாதேவியின் கைகளுக்கு காந்தி அவர் கடைசி நாட்களில் கிஸன்லாலுக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அது பற்றி ஒரு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பாபு என்னுடன் பேசியதிலிருந்து இரண்டு நாட்களில் அந்தத் துப்பாக்கி வெடித்தது. நான் மூர்ச்சையுற்று விழுந்தேன்.

பின் என் கைக்குக் கிடைத்தது, பாபு கிஸானுக்கு எழுதிய கடிதம். மன்றாட்டுதான். மன்றாடும் பாபுவை நான் கைவிட்டேன். இன்று வரை பாபு என்னிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆனால் இன்றுவரை நான் பாபுவை கைவிட்டுக்கொண்டே இருக்கிறேன்.’ 


05.06.1952ல் எதேர்ச்சையாக கிஸன்லாலும் லீலாதேவியும் அஹமெதாபத் ரயில் நிலையத்தில் சந்தித்துக்கொண்டார்கள். ரயில் வழி சபர்மதிக்கு வர நினைப்பவர்கள் அகமெதாபாத் ரயில் நிலையம்தான் வரவேண்டும்.  இருவருமே அன்று சபர்மதிக்குத்தான் சென்றுகொண்டிந்தார்கள். பாபுவின் மரணம் இருவரையுமே மாற்றிவிட்டிருந்தது. அன்று சபர்மதியில் என் பாட்டியும் தாத்தாவும் மீண்டும் சேர்ந்தார்கள். அதற்கு முன்பே என் தாத்தா கிஸன் பிரிவினையில் பெற்றொரை இழந்த இரு குழந்தைகளை தத்தெடுத்திருந்தார். ஒருவர் என் அம்மா சீதா. இன்னொருவர் இர்ஃபான். 


இர்ஃபான் தன் எட்டு வயதில் 1955ல் ஜான்டீஸால் இறந்து போனார். லீலாதேவி முழுதும் உடைந்து போனார் எனலாம். இம்மரணத்தால் பெரிதும் உலுக்கப்பட்டார். அக்காலக்கட்டத்தில் ‘பற்று பற்றின்மை இரண்டிற்குமான கோட்டினை முதன்முதலில் காண்கிறேன்’ எனும் வரிகள் மட்டும் அவர் நாட்குறிப்பில் உள்ளது. இம்மரணம் குறித்து மீரா பென்னிற்கு நீண்ட கடிதம் ஒன்று எழுதியுள்ளார் எனத் தெரிய வருகிறது. அதற்கு மீரா பென் எழுதிய பதில் கடிதம் மட்டும்தான் கிடைத்தது.

10.11.1955

அன்புள்ள லீலா,


பாபு தன்னை குருவாக நினைக்க வேண்டாம். கடவுள் ஒருவன் மட்டுமே நமக்கு வழிக்காட்டி என்பார். ஆனால் நம் காலத்தில் குருவின் அத்தனை லட்சணங்களுடன் இருந்தவர் பாபு மட்டும்தான். நான் பாபுவின் சொற்களுக்குத்தான் மீண்டும் மீண்டும் செல்கிறேன் என் குழப்பங்களின் போது. அதையே உனக்கும் சொல்கிறேன். பின் வருவது பாபுவின் பேரன் (ஹரிலாலின் இளைய மகன்) ராஸிக் மரணப்படுக்கையில் இருந்த போது பாபு எனக்கு எழுதிய இரண்டு கடிதங்கள்,

 02.02.1929

அன்புள்ள மீரா,

அதிகக் குளிர் இருப்பதால் என்னை மேலும் இரண்டு நாள் சபர்மதியிலேயே நிறுத்திவிட்டார்கள். திட்டங்கள் எல்லாம் இரண்டு தினங்கள் தள்ளிப் போகிறது. ராஸிக் ஆபத்தான நிலையில் டெல்லியில் இருக்கிறான். பா அங்கு சென்றிருக்கிறாள். கடந்த ஐந்து தினங்களாக அவனுக்கு பிரக்ஞை இல்லை. கடவுளின் சித்தம் நடந்தேறட்டும். நான் 15அம் தேதி மந்திருக்கு திரும்புவேன். நாங்கள் மூன்றாம் வகுப்பிலேயே பயணிக்கிறோம். கழிவறை படுமோசம், மற்றபடி எல்லாம் சரி. ப்ரொஃபஸர் க்ருபால்னி உடனிருக்கிறார்.

அன்புகள்

பாபு

ஸ்ரீமதி மீராபாய்,

காதி ஆலயம்,

ச்சத்வான்

பீஹார்

09.02.1929

அன்புள்ள மீரா,

இப்போதுதான் தகவல் கிடைக்கப் பெற்றது. நேற்று ராஸிக் இறந்து போனான். கடவுளின் சித்தம் நம் விதி. என் நாளின் செயல்பாடுகள் தடையின்றி நடந்துகொண்டிருக்கின்றன. நான் உணர்வதெல்லாம் தன்மைய சிந்தனையால்தான். ராஸிக்கின் இந்த உடலோடு அவ்வளவு பற்றினை உருவாக்கிவிட்டிருக்கிறேன். ராஸிக்கின் ஆன்மா ஒரு உயர் நிலையை அடைந்து விட்டது. கடந்த இருமாதமாக இதுதான் அவனில் நிகழ்ந்தது.

நான் புதன்கிழமை ஹைதராபாத் அடைவேன். அங்கிருந்து சபர்மதியல்ல, டெல்லிக்கு. மோதிலால் என்னை இரண்டு தினம் அங்கிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.சாத்தியமிருப்பின் அடுத்த செவ்வாய் மந்திர் அடைவேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இத்தினங்களில் உன் கடிதங்களை கேர் ஆஃப் பண்டிட் மோதிலால் நேரு, க்ளைவ் ஸ்ட்ரீட், டெல்லி எனும் முகவரிக்கு அனுப்பு.

மேலும் சொல்ல நேரமில்லை. உன் கடிதங்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. நான் ராஸிக் பற்றி உடனடியாக உனக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்தது காரணமாகத்தான். நாம் செயல்புரிவோம்.


அன்புகள்,

பாபு

ஸ்ரீமதி மீராபாய்

பீஹார்

லீலா, பாபு தொடர்ந்து முன் செல்பவர். தன் எல்லைகளையும் அவ்வெல்லைகள் எல்லையின்மையில் ஆடுவதையும் புரிந்துகொண்டவர். செயலில் தன் மனதை நிலைநிறுத்தியவர். பாபு கீதையின் ஒரு சுலோகத்தை பற்றி எனக்கு எழுதியிருக்கிறார். ‘கர்ம யோகம் என கீதை சொல்வது செயலை செய்து முடிவை பரம்பொருளுக்கு விட்டுவிடுவது. இதனை சிறிதளவு கடைப்பிடித்தாலும் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழுமென கிருஷ்ணர் உரைக்கிறார்.’ அந்தச் சிறிதளவு போதும் லீலா. நம் வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல.


அன்புகள்,

மீரா

ஸ்ரீமதி லீலாதேவி,

ஜாம்நகர்,

குஜராத்.

‘கடவுளின் சித்தம் நம் விதி. என் நாளின் செயல்பாடுகள் தடையின்றி நடந்துகொண்டிருக்கின்றன.’ – இந்த வரிகளை லீலாதேவி மீண்டும் மீண்டும் தன் டையரியில் எழுதியிருக்கிறார். மீராபென் சொன்னது போல் எல்லையின்மையும் நம் மானுட எல்லைகளும் சந்தித்துக்கொள்ளும் கணம் இவ்வரிகளில் வெளிப்படுவது காரணமாக இருக்கலாம். நம் அறிவின் எல்லையும் நமக்கு அப்பாற்பட்ட பெரிதினும் பெரிதான ஒன்றும் ஒன்றையொன்று தொட்டறியும் கணம். அச்சந்திப்புப் புள்ளியில் தன் சித்தத்தை நிறுத்தியவர்தான் காந்தி. லீலாதேவியின் வாழ்க்கை இப்புள்ளியில் இருந்து தீர்க்கமானதாக மாறியது. சோனிலால் மாமாவின் வாழ்க்கையைப் போல.”பாபு எப்பொழுமே வானத்தை பார்க்கக் கூடியவர். ஆனால் நம்‌ கழுத்துக்கு அவ்வளவு தெம்பில்லை” என விளையாட்டாக ஒரு குறிப்பு அவர் நாட்குறிப்புல் உள்ளது. ஆனால் இவ்விடத்தில் லீலாதேவி வானம் எங்கும் இருப்பதை கண்டுகொண்டுவிட்டார் என்பது என் புரிதல்.

கிஸன்லால் தன் பரம்பரை செல்வம் அனைத்தையும் கிராமங்களில் பள்ளிகள் திறக்கச் செலவளித்தார். லிலாதேவி பயணப்பட்டுக்கொண்டே இருந்தார். கிராமங்கள் மலைக்கிராமங்கள் எனப் பயணித்து அங்கிருந்து  சாத்தியமான தூரத்தில் கல்வி கற்ற ஒருவரை அவ்வூருக்கு தினமும் வந்து எழுத்தறிவிக்க அமைத்து ஒரு மாதம் உடன் இருப்பார். அப்படியாக ஆசிரியராக அமர்த்தப்படும் ஒருவருக்கு  கிஸன் லீலாதேவி ட்ர்ஸ்டிலிருந்து  ஒரு உதவித் தொகை வழங்கப்படும். பல இடங்களில் அவ்வூர்மக்களே அவ்வாசிரியருக்கு உதவித் தொகை கொடுக்க முன் வருவர்.  இப்படியான பயணங்களில் அவருடைய முழு வாழ்க்கையும் கழிந்தது. 1982ல் தன் எழுவத்து ஒன்றாம் வயதில் சற்று உடல் நலம் குன்றி சென்னையில் இருந்த தன் மகள் சீதாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போதுதான் நான் முதன் முதலாக லீலாதேவியைப் பார்த்தது. பால் வண்ணத்தை நெருங்கிய நிறத்திலான மென்மையான உள்ளங்கையில் என் கண்ணத்தை ஏந்தி என்னைக் கொஞ்சியது லேசாக நினைவுள்ளது. அதன் பின் பாட்டியை அவ்வப்போது பார்த்து வந்தேன். 1985ல் அவர் உடல்நிலை மிகவும் மோசமானது. அப்போது எனக்கு பத்து வயது. பாட்டியின் கையில் எப்போதும் தாகூரின் கீதாஞ்சலி இருக்கும். தினமும் மாலை ஆறுமணிக்கு பஜன். நான் பாடுவதுண்டு. பாட்டியின் உடல் மெல்ல அடங்கிக்கொண்டிருப்பதை எல்லோரும் உணர்ந்தோம். அதனை பாட்டியும் அறிந்திருந்தார். அன்று 09.08.1985. மாலை என்னை அருகழைத்து பாடச் சொன்னார். பாட்டிக்கு காந்தி பிடிக்கும் எனும் அளவுக்கு எனக்கு அப்போது தெரிந்திருந்ததால் வைஷ்னவ ஜனதோ பாடக் கற்றிருந்தேன். பாடிய போது பாட்டி சிரித்தது என் நினைவில் உள்ளது. நன்றாக பாடுகிறேன் என நினைத்திருக்கலாம். அல்லது காந்தி சோனிபட்டில் சிறுமி லீலாதேவியின் கன்னத்தை ஏந்தி நன்றாகப் பாடுகிறாய் தினமும் பாட வேண்டும் என சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கலாம். அச்சிரிப்புடன் ஒரு பூரணமான மரணத்தை நான் கண்டேன்.

***

2 Replies to “பூரணம்”

  1. பூரணம் கதையை படித்தேன் சிறப்பான கட்டமைப்போடு காந்தியின் செயல்பாட்டையொட்டி பின்னப்பட்ட அழகான புனைவு , காந்தியின் ஆளுமையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை நிருபனமாகிறது நல்லது நன்றி ஐயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.