- புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்
- பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
- புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3
- பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
- புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5
- மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
- விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்
- புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8
- புவிச் சூடேற்றம்- பகுதி 9
- விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10
- மறுசுழற்சி விவசாயம்
- புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்
- புவி சூடேற்றம் பாகம்-13
- புவி சூடேற்றம் பாகம்-14
- பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்
- அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?
- நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?
- உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?
- புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19
- புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20
- புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21
- புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22
- விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை
இதுவரை நாம், இயற்கைக்கு எப்படி கரியமில வாயுவை உட்கொள்ள உதவுவது என்று பார்த்தோம். இன்று, பல விஞ்ஞானிகளின் பார்வையில், இயற்கை சார்ந்த முயற்சிகள் மட்டுமே நம்மைச் சூழ்ந்திருக்கும் அபாயத்திலிருந்து காப்பாற்ற முடியாது. கடந்த 170 ஆண்டுகளில், காடுகளை அழிப்பதை மட்டும் செய்யவில்லை நாம். பல மில்லியன் ஆண்டுகளாக பூமி புதைத்து வைத்த காடுகளையும் தொல்லெச்ச எரிபொருள் என்ற பெயரில் எரித்து, நம் காற்று மண்டலத்தில் கரியமில வாயுவைக் கலந்து விட்டுள்ளோம். இது நம்முடன், பல நூறு ஆண்டுகள் பயணம் செய்யும்.
சற்று, சர்ச்சைக்குள்ளான விஷயமென்றாலும், செயற்கையான கரியமில குறைப்பு விஞ்ஞான முயற்சிகளை எப்படி இந்தக் கட்டுரைத் தொடரில் விட்டுவிட முடியும்? அதையும் பார்த்து விடுவோம். சரி, இந்த விஞ்ஞான ரீதியான முயற்சியில் அப்படி என்ன சர்ச்சை?
- மனித செயற்கை முயற்சிகள், அரசாங்கம் மற்றும் விஞ்ஞானத்தின் போக்கைப் பற்றிய வலுவான சந்தேகத்தைக் கிளப்புவதே காரணம். செயற்கை முறைகளின் பால் கவனம் திரும்பினால், நாம், தொல்லெச்ச எரிபொருள் பயனிலிருந்து விடுபடவே மாட்டோம். அத்துடன், மேலும் இயற்கையை அழிக்க இது ஒரு சாக்காக அமையலாம்
- இன்றைய செயற்கை முயற்சிகளில், எண்ணெய் நிறுவனங்கள், அதிக முதலீடு செய்வது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. கடந்த 60 ஆண்டுகளாக எந்தப் புவி சூடேற்ற விஞ்ஞான முயற்சியையும் தவிடு பொடியாக்கிய திரித்தல் மன்னர்கள் இந்த எண்ணெய் நிறுவனங்கள். தங்களுடைய லாபம் மேலும் தொடர எடுக்கும் முயற்சிதான் இந்த செயற்கை முயற்சிகளோ என்ற சந்தேகம் ஏற்படுவது இயற்கை
- பல அரசாங்கங்கள், எப்படியோ தங்கள் நாட்டின் கரியமில உமிழைக் குறைத்து விடுவோம் என்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விட்டன. இதனால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க எப்படியோ எண்ணெய் நிறுவனங்களுடன் அரசாங்கங்கள் நடத்தும் நாடகம், இந்த செயற்கை விஞ்ஞான முயற்சிகள் என்ற கருத்தும் உள்ளது
எது எப்படியோ, ஒன்று மட்டும் நிச்சயம். காடுகளை உருவாக்குவதாலோ, கார்களைக் குறைப்பதாலோ, கரியால் இயங்கும் அனல் மின்நிலையங்களை மூடுவதாலோ, அல்லது காற்று, சூரிய ஒளி மற்றும் நீரால் இயங்கும் சக்தியைப் பயன்படுத்தினாலோ புவி சூடேற்றத்திலிருந்து நாம் தப்ப முடியாது. நம்மால் முயன்ற, நமக்குத் தெரிந்த முயற்சிகள் அனைத்தையும் செய்தால்தான் ஓரளவு சரிகட்ட முடியும். வருடம் 40 கிகா டன்கள் கரியமில வாயுவைக் காற்றில் கலக்கிறோம். எல்லா முயற்சிகளும், இதைக் குறைக்கத் தேவை.

மிக முக்கியமாக, செயற்கை கரியமில வாயுக் கட்டுப்பாடு பற்றி இங்கு நாம் விவாதிக்க, மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:
- எண்ணெய் நிறுவனங்கள், இவ்வகை முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம், இவர்களிடம், புவியியல் நிபுணத்துவம் உள்ளது, 150 ஆண்டுகளாக, நிலத்தைத் தோண்டித்தான் தொல்லெச்ச எரிபொருளை வெளியே எடுத்து வந்துள்ளார்கள். கரியமில வாயுவை பூமிக்கடியில் மீண்டும் புதைக்க இவர்களது நிபுணத்துவம் தேவை
- ஐக்கிய நாடுகளின் புவி சூடேற்ற நிபுணர் குழுவான IPCC, செயற்கை கரியமில வாயு குறைப்பு தொழில்நுட்பம் தேவை என்று சொல்லியுள்ளது. நாம் எட்ட வேண்டிய இலக்கை அடைய எல்லா முயற்சிகளும் தேவை
- சில தொழில்நுட்பங்கள் விரைவில் மேம்பட்டால், ஒரு கணிசமான அளவு கரியமில வாயுவை காற்று மண்டலத்திலிருந்து நீக்க வழி வகுக்கும். அத்துடன், நீர், காற்று மற்றும் கதிரொளி மின்பலகைகளை நிறுவ இயலாத ஏழை நாடுகளுக்கு இந்த தொழில்நுட்பங்கள் உதவக்கூடும்
மேல்வாரியாகச் சொல்லப் போனால், இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!
விவரமாக இந்த்த் தொழில்நுட்பங்களை ஆராயுமுன், சில முக்கிய விஷயங்களை தெளிவாக்குதல் அவசியம்:
- இந்தத் தொழில்நுட்பப் போட்டியில், இங்கு விளக்கப்படும் சில நுட்பங்கள் பல பொருளாதாரக் காரணங்களால் தோற்றுப் போகலாம்
- சில நல்ல ஐடியாக்கள், வெற்றி பெறாமல் முதலீடில்லாமையால் முடங்கிப் போகலாம்
- சில தொழில்நுட்பங்கள், பெரிய அல்வில் ஒரு நாட்டிற்கு தேவையான அளவில் செயல்படுவதில் தடுமாறலாம்
- சில முயற்சிகள் சோதனைச் சாலையைத் தாண்டி வெளியே வராமலும் போகலாம்
இந்த்த் தொழில்நுட்பங்களுக்கு மிகப் பெரிய ஊக்கம், ஈலான் மஸ்க் அறிவித்திருக்கும் 100 மில்லியன் டாலர் கரிம எக்ஸ் பரிசு. உலகின் மிகச் சிறந்த செயற்கை கரிமகுறைப்பு தொழில்நுட்பத்திற்கு இந்த பரிசு என்று அறிவித்துள்ளார் மஸ்க். இதில், தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் யார் வேண்டுமானாலும் எந்த நாட்டிலிருந்தும் போட்டியிடலாம்.
சட்டென்று இந்த கரிமகவர்வு விஷயத்தின் பின்னணியைப் பார்த்து விடுவோம். இது புதிய தொழில்நுட்பமல்ல.
- 1938 -ல். முதல் முயற்சி
- 1972 -ல், டெக்ஸாஸை சேர்ந்த ஒரு அனல் மின் அமைப்பு, பூமிக்குள் கரியமில வாயுவை எப்படிப் புதைப்பது என்ற தொழில்நுட்பத்தில் முதன்முறையாக வெற்றி பெற்றது.
- 1990 -ல், நார்வேயைச் சேர்ந்த ஸ்கிப்னர் கடலடியே எப்படி கரியமில வாயுவை புதைப்பது என்று உலகிற்கு செய்து காட்டியது
- இதன் பின் சோகக் கதைதான். உலகம், இந்த முயற்சிகளை மறந்து, தொல்லெச்ச எரிபொருளை எரித்து, எண்ணெய் நிறுவனங்களை கொழுத்த பண்முதலைகளாக்குவதிலேயே கவனம் செலுத்தின
- சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்று உலகின் கரியை எரிக்கும் அனல் மின் நிலையங்கள் இரண்டில் மட்டுமே கரிமக்கவர்வு தொழில்நுட்பம் உள்ளது உலகில் கிட்டத்தட்ட 6,000 கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்கள் உள்ளன.
- இந்த இரண்டு கரிமக் கவர்வு அனல் மின் நிலையங்களைச் சொல்ல வேண்டியது அவசியம். அமெரிக்காவில் உள்ள NRG Petronova மற்றும் கனடாவில் உள்ள SaskPower in Boundary Dam
- இன்று, உலகில், 18 தனிப்பட்ட கரிமக்கவர்வு (Carbon Capture) அமைப்புகள் இயங்கி வருகின்றன.
- எல்லா அமைபுகளும் சேர்ந்து உட்கொள்ளும் கரியமில வாயு 35 மில்லியன் டன்கள். நாம் காற்றில் கலப்பதோ 40 கிகா டன்கள். அதாவது .1% குறைக்க, இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. 2060 -க்குள், ஒரு கணக்கு, சரியான தொழில்நுட்பத்துடன் நாம் 115 கிகா டன்களை வருடத்திற்கு உறிஞ்சும் திறம் பெற்று விடுவோம் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. காத்திருந்து,, எவ்வளவு தூரம் உண்மையாகிறது என்று பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை
இந்த விஷயத்தில் ஏன் துரிதமாக உலகம் செயல்படவில்லை? முதல் காரணம், எண்ணெய் நிறுவனங்கள், வெற்றிகரமாக, விஞ்ஞானத்தைத் திரித்து, வெற்றி பெற்று, ஏராளமான லாபம் சம்பாதித்தார்கள். இரண்டாவது காரணம், இவ்வகை முயற்சிகளுக்கு அரசாங்கங்கள் அதிக ஊக்கம் அளிப்பதில்லை. இதில் விதிவிலக்கு, கலிஃபோர்னியா மாநிலம். புதிய சட்டத்தின் மூலம், கரிமக்கவர்வுக்கு ஊக்கமளிக்க உள்ளது. இன்றும் அந்த நிலை தொடருகிறது. இன்று, பல முயற்சிகள், கரியமில வாயுவை ஒரு லாப நோக்குடைய கருவியாக பயன்படுத்துதலையே முன் வைத்து முன்னேறுகின்றன. உதாரணத்திற்கு,
- சில அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள், இவ்வகை முயற்சிகளை முன் வைத்து, இன்னும் அதிகமாக எண்ணெய் கிணறுகள் தோண்ட உரிமம் பெறுகின்றன
- ஸ்விஸ் நிறுவனமான க்ளிம்வர்க்ஸ், தன்னுடைய கரிமகவர்வு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கரியமில வாயுவை உரம் மற்றும் குளிர்பாண நிறுவனங்களுக்கு விற்கிறது
- சில நிறுவனங்கள், புதிய கட்டிட மூலப்பொருள் உருவாக்கத்திற்கு, கவர்ந்த கரியமில வாயுவை பயன்படுத்துகின்றன. ஈரமான கான்க்ரீக்ட் பதப்படுவதற்கு, இந்தக் கரியமில வாயுவைப் பயன்படுத்துகின்றன. இவ்வகைப் பயன்பாட்டினால், ஒரு கெட்டியான கட்டிட மூலப்பொருள் அதிக சக்தி செலவில்லாமல் உருவாக்கலாம்
கரிமக் கவர்வு என்பது மிகவும் சிக்கலான ஒரு பிரச்சினை. ஒரு அனல் மின்நிலையம் அருகில், காற்றில், 10 முதல் 20 சதவீதம் கரியமில வாயு இருக்கக்கூடும். இந்த சூழலுக்காக உருவாக்கப்பட்ட கரிமக் கவர்வு எந்திரம் அந்த சூழலில் மட்டுமே இயங்கவல்லது. மற்ற இடங்களில், கரியமில வாயுவின் அடர்த்தி, வெறும், 0.04% மட்டுமே. இவ்வளவு சன்னமான வாயுவை கவர்வது சற்று சிக்கலான விஷயம். இன்னொரு முக்கிய புரிதலும் இதற்குத் தேவை. இது, மரம் நடுவதைச் சார்ந்த விஷயம். மண்ணிற்கு கீழே உள்ள கரியமில வாயுவை 170 ஆண்டுகளாக காற்றில் மிதக்க விட்டதன் விளைவு இது.
- உலகில் உள்ள காடுகளின் பரப்பில் 25% நம்மால், மனது வைத்தால், அதிகப்படுத்த முடியும் – இது வெறும் கோட்பாடு என்று விரைவில் புரிய வரும்!
- அதாவது, 900 மில்லியன் ஹெக்டேர் அல்லது 2.2 பில்லியன் ஏக்கரை காடுகளாக மாற்றுவது வழி என்று வைத்துக் கொள்ளலாம்
- ஏன் இதைச் செய்ய வேண்டும்? ஏனென்றால், 205 கிகா டன் அதிக கரியமில வாயுவை புதிய காடுகள் உள்வாங்கும். இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? விடிந்தால் சுபிட்சம் என்று சொல்லிவிட்டு, இழுக்கிறாரே என்று பார்க்கிறீர்களா?
- அதாவது 500 பில்லியன் மரங்களைப் பற்றி இங்கு சொல்லியுள்ளோம்
- இத்தனை மரங்கள் நட்டு அவை வளர்ந்து பயன் தர எத்தனை நாட்கள், வருடங்கள் ஆகும்? 2,000 வருடங்கள்!
ஏன் கரிமக் கவர்வு தொழில்நுட்பம் தேவை என்று IPCC சொல்லுகிறது என்று புரிந்திருக்கும். புதிய கரிமக் கவர்வு முயற்சிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
- நார்தர்ன் லைட்ஸ் ப்ராஜக்ட், (Project Northern Lights) நார்வே நாட்டின் மேற்கில் கடலில் உள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு. நிலத்தில், தொழிற்சாலைகளின் கரியமில வாயு உமிழைக் கவர்ந்து, கடலில் இருக்கும் இந்த அமைப்பிற்கு கப்பல் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த அமைப்பு, வடக்கு கடலின் அடியைத் தோண்டி, கரியமில வாயுவை புதைத்து விடும் திட்டம்.
https://northernlightsccs.com/what-we-do/
இதில், வருடத்திற்கு ஐந்து மில்லியன் டன் வரை இவ்வாறு புதைக்கப்படும். இதன் அடுத்த கட்ட திட்டம், கப்பலுக்கு பதி, கடலாழ குழாய்கள் மூலம், கரியமில வாயுவைக் கொண்டு செல்லுவது. கப்பல் மூலம் புதைக்கும் வேலை இன்று தொடங்கி விட்டது. - ப்ராஜக்ட் டண்ட்ரா (Project Tundra, ND) வடக்கு டெகோடா மாநிலத்தில், நிலத்திற்கு அடியில் உமிழ் கடியமில வாயுவைப் புதைக்கும் திட்டம். இதன், வடிவைப்பாளர்கள், அந்த மாநிலத்தின் புவியமைப்பு, இவ்வகை புதையலுக்கு உதவும் என்று சொல்லுகிறார்கள். பல அடுக்குகளாக இருக்கும் பாறைகளைத் தோண்டி, கரியமில வாயுவைப் புதைத்து, துவாரத்தை மூடிவிட்டால், பாறைகளுக்கு இடையே வாயு தங்கி விடும்
https://www.projecttundrand.com/
வருடத்திற்கு 4 மில்லியன் டன்கள் கரிமக்கவர்வு இந்த அமைப்பில் சாத்தியம். - இன்னொரு சோதனை முயற்சி, அமின் என்ற ரசாயனத்தைக் கொண்டு, உமிழ் கரியமில வாயுவைக் கவர்வது. குறிப்பாக, மோனோஈதலினமின் (monoethanolamine (MEA) பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அதிகமாக உமிழும் தொழிற்சாலைகள் இதை நிறவுவது எளிது. இன்னும் பெரிய அளவில் வளர வாய்புள்ள தொழில்நுட்பம்.
https://www.carbonclean.com/blog/solvent-based-carbon-capture - எம்.ஐ.டி யின் ஆராய்ச்சி ஒன்று பல விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பத்திற்கு, Electroswing absorption technology என்று பெயர். இதன் முக்கிய அம்சம், மில்லியனில் நானூறு பங்கு கரியமில வாயு இருந்தாலும், அதை தனிப்படுத்தும் திறம் வாய்ந்த தொழில்நுட்பம்.
https://news.mit.edu/2019/mit-engineers-develop-new-way-remove-carbon-dioxide-air-1025
இது மின்கலன் போன்ற அமைப்புடையது. மின்னேற்றம் மற்றும் மின்னிறக்கம் இரண்டும் இதில் உண்டு, இந்த தொழில்நுட்பத்தில், மின்முனையில் ஒரு polyanthraquinone என்ற ஒரு கரிம நுண்குழாயால் அமைந்த (carbon nanotube) ஒரு பூச்சு, காற்றில் உள்ள கரியமில வாயுவுடன் மின்னேற்ற சமயத்தில் ரசாயன மாற்றமடைகிறது. இப்படி ரசாயன மாற்றமடைந்த கரியமில வாயு தனியொரு அமைப்பிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மின்னிறக்கத்தின் போது,சேர்க்கப்பட்டுள்ள கரியமில வாயு தனியாக ஒரு சேமிக்கும் சிலிண்டருக்கு மாற்றப்படலாம். இது சாதாரண வெப்பத்தில் இயங்கும் கருவி.கரியமில பயனாளர்கள், இந்த அமைப்பை எளிதாக தங்களுடைய தயாரிப்பு தொழிற்சாலையில் பயன்படுத்தலாம். எம்.ஐ.டி., இந்த தொழில்நுட்பம், தனிப்பட்ட பெரிய அளவு கரிமக் கவர்வுக்கு எளிதாகப் பயன்படுத்தலாம் என்கிறார்கள் - கனடாவின் கார்பன் எஞ்சினியரிங் நிறுவனம், சாதாரண காற்றை உள்வாங்கி, மிக அதிக வெப்பத்திற்கு உள்ளாக்கி, ஹைட்ராக்ஸைடுடன் கல்யாணம் செய்து, எரிபொருளை (திரவம்) குழந்தையாக உருவாக்குகிறார்கள்.
https://carbonengineering.com/
எரிபொருளை விமானங்களுக்காக விற்கிறார்கள். இந்த நிறுவனம், தன்னுடைய ஒவ்வொரு தொழிற்சாலையும் 40 மில்லியன் மரங்கள் செய்யும் வேலையைச் செய்யும் என்கிறது. அதாவது, இது போல, 4,000 தொழிலகங்களை நிறுவினால், உலகின் காற்றுமண்டலத்திலிருந்து 160 பில்லியன் டன் கரியமில வாயுவை வருடத்திற்கு வெளியேற்றி, புதைக்கலாம். இதற்கான முதலீடு கிடைத்தால்,இது சாத்தியமாகலாம் - ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த ஆர்தனா (Airthena) இதன் கரியமில வாயு விவாகரத்து தொழில்நுட்பம் Metal Organic Framework (MOF) என்கிறது.
https://www.csiro.au/en/work-with-us/ip-commercialisation/marketplace/co2gen
இந்த அமைப்பின் நோக்கம், கரியமில வாயு பயன் தொழிற்சாலைகளுக்கு, இந்த அமைப்பை விற்பது.
கரிமக்கவர்வு ஆராய்ச்சி இன்று திரிதமாக முன்னேறி வருகிறது. உரங்கள், கட்டிட கச்சா பொருட்கள், ப்ளாஸ்டிக் மற்றும் பெட்ரோல் யாவற்றையும் தயாரிக்க மண்ணைத் தோண்டத் தேவையில்லை. காற்றில் அபரிதமாக இருக்கும் கரியமில வாயுவைப் பயன்படுத்தினாலே போதும் என்பது ஒரு சார் ஆராய்ச்சியாளர்களின் வாதம். ஒரு அளவிற்கு மேல், ஏழை நாடுகள் மாறாத பட்சத்தில், இவ்வகை தொழில்நுட்பங்கள் நிச்சயமாக பயனளிக்கும். உலகின் மிகப் பெரும் கரி மற்றும் பெட்ரோல் பயனாளர்கள் இந்தியா மற்றும் சைனா. இந்த இரு நாடுகளிடமும் கச்சா எண்ணெய் கிணறுகள் அதிகமில்லை. இந்தத் தொழில்நுட்பங்கள் இந்த இரு நாடுகளின் போக்கை மாற்றினாலே போதும். உலகின் பாதி மக்கட்தொகை வாழும் இந்த இரு நாடுகளின் வாழ்க்கைத் தரம் உயரும். இதன் ஒரு பக்க விளைவாக, காற்று மாசும் ஏராளமாகக் குறையும்.