நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1

ஒரு நீண்ட வேலைநாள் முடிவுக்கு வந்தது. முன்-கோடைக்காலத்தின் மாலையில் பகல்போல வெளிச்சம். 

சிகிச்சைகளின் நேரக்கணக்கும் பணக்கணக்கும் கவனிக்கும் விட்னி ஐந்து மணிக்கே கணினித்திரையைத் தூங்கச்செய்து கிளம்பிவிட்டாள். தீவிர-அதிர்ச்சியின் பாதிப்புக்கு உள்ளான ஜான் நியுமன் அனிகாவிடம் விடைபெற்றுப் போய்விட்டான்.    

கைப்பையை எடுத்துக்கொண்டாள். உள்பகுதியின் வெப்பநிலையை மூன்று டிகிரி உயர்த்தினாள். விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தாள். நுழைவிடத்து உச்சி விளக்கு எப்போதும் எரியும். இரட்டை வெளிக்கதவுகளைத் திறந்தபோது ஒரு இளைஞன் ஓடிவந்து காலை உள்ளே நுழைத்தான்.  

“ஆறுமணிக்கு பத்து வினாடிகள்.” 

களைப்பு, பொறுப்பு கலந்த அவள் முகத்தைப் பார்த்து, 

“தொந்தரவு கொடுக்கிறேன் என்று தெரிகிறது. ஆனால், மிக அவசரமான பிரச்சினை..” 

குறுந்தாடி, அளவோடு வெட்டிய தலைமயிர், கருநீல பான்ட்ஸ், வெளிர்நீலக் கட்டங்கள் போட்ட சட்டை. எல்லாவற்றிலும் அக்கறை வெளிப்பட்டது.   

“உன்னைப் பார்த்தால் தற்கொலையை யோசிக்கிறவன் போல் தெரியவில்லையே.” 

“நிலைமை அவ்வளவு தீவிரமானது இல்லை. சில வாரங்களாக மனதில் ஆழ்ந்த வருத்தம். அத்துடன், என் வாழ்க்கைப்பாதையில் திடீரென்று ஒரு பிளவு. ஒரு தடத்தில் உடனே கால்வைத்தாக வேண்டும். அதன் விளைவுகள் நெடுங்காலம் நீடிக்கலாம்.” 

அவன் வார்த்தைகளின் அவசரம் முகத்தில் பிரதிபலித்தது. 

—–

வேலைக்காக நாஷ்வில் வந்ததில் இருந்து மளிகை சாமான்கள் வாங்க ப்ரஷாந்த்துக்குப் பிடித்த கடை பப்ளிக்ஸ். அலுவலகத்தின் பக்கத்திலேயே ஒன்று. தனியாகவோ இல்லை நிவேதிதா ஊரில் இருந்தால் அவளுடனோ வாரம் ஒருமுறையாவது போவது வழக்கம். காரில் இருந்து இறங்கி, கடைக்கு நடந்தபோதெல்லாம் அந்த சிகிச்சையகம் அவன் கண்ணில்படும். பப்ளிக்ஸின் இடப்பக்கம் வரிசையாக பலரக உணவகங்கள், முடித்திருத்தகம், வளர்ப்புப் பிராணிகளின் தேவைகள், அலைபேசி… கட்டடத்தின் வலப்பக்க மூலையில் சிகிச்சையகம் மட்டும். அதன் கதவில்.. 

டாக்டர் அனிகா வேல்

இளைஞர் மனநல மருத்துவர்

நேர்காணல்: காலை 10:00 – மாலை 6:00

தொலைகாணல்: அனிகாவேல்@ஜிமெய்ல்.காம்

சிகிச்சையகம் திறந்திருந்த சமயங்களில் தனியாகவோ குடும்பமாகவோ சிலர் அதனுள் நுழைவதை அவன் பார்த்திருக்கிறான். கல்லூரியில் இரு செமிஸ்டர்கள் உளவியல் வகுப்பு எடுத்ததால் அவர்களை அவன் அலட்சியமாக நினைத்தது இல்லை. வாழ்க்கைச்சுமை மனதின் தாங்கும் சக்தியைத் தாண்டும்போது ஒருசிலருக்கு அனிகாவின் ஆலோசனை அவசியம். அவனைப்போல எல்லாரும் அதிருஷ்டசாலிகளாக இருப்பது சாத்தியம் இல்லை. அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஓரளவு புத்திசாலி. கல்லூரியில் இருந்து வெளியே வந்ததும் பிரபலமான நிறுவனத்தில் ஒரு வருடப்பயிற்சி. அது சில மாதங்களில் வெற்றிகரமாக முடிந்ததும் அங்கேயே பொறுப்பான பதவி. அனிகா எப்படிப்பட்ட மனநல மருத்துவர் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு நிச்சயம் நேராது.

—–

“மருத்துவர் என்ற தகுதியில் உன் வேண்டுகோளை மறுக்க இயலாத நிலையில் இருக்கிறேன்” என்று அவன் உள்ளே வர அனிகா வழிவிட்டாள்.   

“தாங்க்ஸ்.”  

“அத்துடன், என் நான்குவயதுப் பெண் என்னுடைய பெற்றோர்கள் இல்லத்தில்.”  

“அது என் அதிருஷ்டம். என் பெயர் ப்ரஷாந்த் பணிக்கர். வேலை முடிந்து வருவதற்குள் நேரம் ஆகிவிட்டது.”  

பார்த்ததுமே ப்ரஷாந்த்துக்கு அனிகாவைப் பிடித்துவிட்டது. இளைஞர்களின் மனதைத்திறக்கும் மருத்துவர் என்பதால் அவளே ஒரு கல்லூரி மாணவி போல இருந்தாள். ஆழ்ந்த கறுப்பு நிறத்தினால் முகத்தில்,கண் இமைகளில் சாயம் பூசிக்கொள்ளவில்லை. இடப்புறம் ஒதுக்கிப் பின்னலிட்ட கூந்தலில் மட்டும் ஒன்றிரண்டு மஞ்சள் இழைகள். முழங்கையையும் முழுங்காலையும் எட்டிய, வடிவத்துக்கு ஏற்ற கச்சிதமான நீல ஆடை. எளிய சங்கிலி, காதணிகள். 

“பொதுவாக நான் சாப்பிட இடைநேரம் இருக்கும். இன்றுபோல் ஒரு நோயாளியைப் பார்த்தவுடன் இன்னொருவர் என்று இருந்தது இல்லை. இத்தனைக்கும் ஒருமணி முன்னதாக வேலையைத் தொடங்கினேன். ஆனாலும் பலருடைய சந்திப்புகளை சில நாட்களுக்கு ஒத்திவைத்ததாக விட்னி சொன்னாள். மருந்தின் ப்ரிஸ்க்ரிப்ஷன் தீர்ந்துவிட்டது. அவசர சிகிச்சைக்கு எந்த டாக்டரும் அகப்படவில்லை என்று அவளுக்கு இன்று நிறைய அழைப்புகள்.”  

அதன் காரணத்தை அவன் யோசித்தான். 

“மனநோய் சிகிச்சையில் ஏகபோகம் அதிகரித்து வருவதால் இருக்கலாம்.” 

“சரி அப்படியே இருக்கட்டும். உன் அவசரப் பிரச்சினையைச் சொல்!” 

“வேலையில் ஒன்றைச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டுப் பிறகு நான் பின்வாங்க முடியாது. மேலதிகாரிகளிடம் நீதி, நேர்மை, நியாயம் என்று வீறாப்பாகப் பேசிவிட்டு அடுத்த நாள் அவர்கள் காலில்விழுந்து கெஞ்சவும் நான் தயாராக இல்லை” என ஆரம்பித்தான். 

விவரமாகச் சொல்ல நேரமாகும் என்று தோன்றியதால், 

“மன அழுத்தத்தில் நானும் காலை உணவுக்குப் பிறகு அதிகம் சாப்பிடவில்லை. முதலில் சாப்பாடு. பக்கத்தில் இருக்கும் சான்ட்விச் கடை?”  

அவள் முகத்தின் அதிருப்தியைப் பார்த்து அவன் அலைபேசியில் விரல்களை ஓட்டினான். 

“ஆந்திரா அட்ராக்ஷன்?”  

“தாலித்தட்டு, காரம் குறைவாக. காய்கள் இரண்டு மடங்கு. ஒரு பெரிய கோப்பை ஸ்ட்ராங் காஃபி.”  

“அரைமணியில் வந்துவிடும்.” 

நுழைவிடத்து விளக்குகளை மட்டும் எரித்தாள். 

“நான் சௌகரியமாக சோஃபாவில் சாய்ந்துகொள்ளப் போவதாக நினைத்தேனே.” 

“ஆலோசக அறையிலும் சோஃபா கிடையாது. பொதுவாக நான் பார்ப்பது பதின்பருவத்தினர். அவர்கள் என்னை சமமாக மதிக்க அவர்களுக்கு எதிரில் அதே மட்டத்தில் நான் உட்காருவது வழக்கம்.” 

“பதின்பருவத்தைத் தாண்டி..”  

“என் கண்காணிப்பில் உன் வயதிலும் ஒரு சிலர். இருபத்திநான்கு வயது இராணுவவீரன் ஒருவன் இப்போதுதான் இங்கிருந்து போனான்.”  

“அப்பாடா!”  

அந்த வார்த்தையும் அதன் உச்சரிப்பும் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தன. 

—–

அனிகாவின் சிகிச்சையகம் அந்தத் திங்கள்கிழமை ஒருமணி முன்னதாக செயல்படத் தொடங்கியது. விட்னி தொடர்பு சாதனங்களுடன் உறவு கொண்டாள். அன்று சந்திக்க வேண்டியவர்களின் பட்டியலை அச்சிட்டு க்ளிப்-அட்டையில் செருகினாள். 

அனிகா மருத்துவருக்கான முகத்தை அணிந்து அத்தினத்தை எதிர்கொள்ளத் தயார் ஆனாள். 

பதின்பருவத்தினரைத் தனியாகவும், ஏழுவயதுக்குக் குறைவான சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களுடனும் பரிசோதிப்பதும் அவள் வழக்கம். இரண்டுக்கும் இடைப்பட்டவர்களை நிலைமைக்குத் தகுந்தபடி. அன்று முதலில் பார்க்க வேண்டிய பெண் அந்த வயது எல்லைகளுக்குள். 

ஜெனினா டியாகோ. மார்டின் லூதர் கிங் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி. சமீபத்தில் அவளுக்கு ஆடைகளிலும் அலங்காரத்திலும் ஆர்வம் குறைந்துவிட்டது. அவள் தோழிகளுடன் அலைபேசியில் வம்புபேசும் நேரம் ஒருநிமிடத்தைத் தாண்டுவது இல்லை! வகுப்புப் பாடங்களில் முன்போல சிறப்பாகச் செய்யவில்லை என்று ஆசிரியர்களின் முறையீடு. 

அவளுடைய எதிர்கால நோக்கை அனிகா பிரகாசப்படுத்த வேண்டும். 

வரப்போகும் காலத்தில் நம்பிக்கை இழக்கும்படி அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? 

மஞ்சள்-நீராட்டல் முடித்து விருதுநகரில் இருந்து நாஷ்வில் வந்த அனிகாவை நினைத்தாள். உடல் வளர்ச்சியின் பொறுப்புடன் புதிய நாட்டின் அச்சம். ஆனால், வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள். பள்ளிக்கூடத்தில் நன்றாகச் செய்து மற்றவர்கள் மதிப்பை சம்பாதிக்க வேண்டும் என்கிற உந்துதல். அப்பா எந்த வியாபாரம் செய்தாலும் அவர் சாமர்த்தியத்தில் நல்லபடியாகப் போகும் என்ற நிச்சயம். பல வர்ண ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் பச்சை டாலர் பில்கள் என்றாலும் வீட்டுச்செலவுகளுக்குக் கவலை இராது என்ற நிம்மதி.   

அனிகா அறையின் கதவைத்திறந்து வெளியே நின்றாள். அவளைப் பார்த்ததும் ஒரு இளம்பெண்ணும் அவள் தாயும் எழுந்து வந்தார்கள். டியாகோ என்கிற பெயருக்கேற்ப அழகிய பழுப்பு முகமும் இரட்டைப்பின்னலில் கறுப்புக் கூந்தலும். தாயின் உயரத்தை எட்டிய அவள் இன்னும் சில மாதங்களில் அதையும் தாண்டிவிடுவாள். அப்போதே அவள் சட்டையும் குட்டைப்பாவாடையும் இடையில் சந்திக்க மறுத்தன. தாயின் நீலச்சீருடையில் கட்டடத்தின் மறு வரிசையில் இருந்த ‘டெய்ல்-என்ட் பெட் சப்ளைஸ்’ அடையாளம்.  

“நான் ஓல்கா. இது ஜெனினா. நான் கேட்டவுடனே ஜெனினாவைப் பார்க்க சம்மதித்ததற்கு நன்றி!”  

“அதற்காகத்தான் சிகிச்சையகத்தை ஒன்பது மணிக்கே திறந்தோம்.” 

“கடை திறப்பதற்கு முன்னால் சாமான்களை எடுத்துவைக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு ஓல்கா வெளியேறினாள். 

ஜெனினா அனிகாவைத் தொடர்ந்து ஆலோசக அறையில் நுழைந்தாள். கதவைச் சாத்திய அனிகா,  

“உட்கார் ஜெனினா!”

“தாங்க்ஸ் டாக்டர்…” 

“அனிகா.” 

அனிகா மேஜையின் ஒரு பக்கம் முதுகு உயர்ந்த நாற்காலியில் அமர்ந்தாள். அவள் முன் பிரித்த கணினி. எதிர்ப்புறத்தில் சாய்ந்துகொள்ள வசதியான நாற்காலியில் ஜெனினா. ஆனால், அதன் முதுகில் அவள் சாயவில்லை. 

அனிகாவின் புன்னகையில் இருந்த அழைப்பை ஏற்று வருத்தமான குரலில்,

“அனிகா! இந்த உலகம் இன்னும் இருபது ஆண்டுகள் இருக்குமா?”  

“நிச்சயம் இருக்கும்.”  

“அவ்வுலகத்தில் நீயும் நானும்?”  

“அதில் உனக்கு சந்தேகம்போல் தெரிகிறது.”   

“நீ உன் தந்தையின் பாதுகாப்பில் வளர்ந்திருக்கலாம். எனக்கு அந்த அதிருஷ்டம் முழுக்க இல்லை. நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் கௌடமேலாவில் இருந்து வந்தபோது, ஏதோவொரு சான்றிதழ் சரியாக இல்லை என்ற காரணத்தால் என் தந்தையைத் தடுத்து நிறுத்தவிட்டார்கள். நேரில் பார்க்க முடியாவிட்டாலும் அவர் எனக்கு அடிக்கடி மின்-கடிதங்கள் அனுப்புவது வழக்கம்.” 

“நல்ல மனிதர்.”  

“உண்மைதான். அங்கே பலரக உள்ளூர் விதைகளை சேமிக்கும் இயக்கத்தை நடத்துகிறார்.” 

“உயர்ந்த மனிதர்.” 

“சமீபத்தில் அவர் கடிதங்கள் உ லகைப்பற்றிய அவருடைய கவலைகளை வெளிப்படுத்துகின்றன. அவற்றைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி எனக்கு வந்துவிட்டது என அவர் நினைத்திருக்க வேண்டும்.” 

“க்வின்ஸநீரா (பதினைந்தாவது பிறந்தநாள்) வரை உன் தந்தை காத்திருக்கவில்லை” என்று அனிகா புன்னகைக்க ஜெனினாவும் சேர்ந்துகொண்டாள்.

சிரிப்பைப் பாதியில்  நிறுத்தி முக்கியமான விஷயத்தை சொல்வதற்கு ஜெனினா முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டாள். 

“கோரி ப்ராட்ஷாவை நீ கேள்விப்படாது இருந்தால் ஆச்சரியமில்லை.”  

அனிகா அப்பெயருக்கு உரியவரைக் கண்டுபிடித்தாள். (உலகளாவிய சூழலியல் பேராசிரியர், ஃப்ளின்டர்ஸ் பல்கலைக்கழகம், அடிலெய்ட், தென் ஆஸ்ட்ரேலியா.) திரையில் தோன்றிய தகவல்களில் கொஞ்சம் கவனமும், ஜெனினாவின் வார்த்தைகளில் மீதி கவனமும் வைத்தாள்.  

“அவர் தன் ஒன்பது வயது மகளுக்கு எழுதிய திறந்த கடிதம் நியுஸிலன்ட் செய்தித்தாளில் வெளிவந்தது. சிலமாதங்களுக்கு முன் என் தந்தை அதை எனக்கு அனுப்பினார்.”  

என் அன்புக்குரிய மகளே, 

ஒவ்வொரு காலையிலும் உன் பிரகாசமான முகத்தையும் பரவசப்படுத்தும் புன்னகையையும் பார்க்கும்போது உலகைப்பற்றிய என் கவலைகள் கரைந்துபோகின்றன. குறைந்தபட்சம் வேலைக்குப் போகும் வரையில். 

இப்போது உனக்கு ஒன்பது வயது. இரண்டு உயர்கல்வி பெற்ற பெற்றோர்களின் ஒரே பெண் என்பதால் புத்தகங்களைப் படித்து உனக்குப் பொது அறிவு வளர்ந்திருக்கிறது. உன்னைச் சுற்றிய இவ்வுலகம் வேகமாக மாறிவருவதை உன்னால் புரிந்துகொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். இம்மாற்றங்கள் உன் எதிர்காலத்தை சிதைக்கும் என்பது என் எண்ணம். 

கடவுள், க்றிஸ்மஸ் தாத்தா, பல்தேவதை, இவர்கள் வெறும் கற்பனை என்று சிறுவயதிலேயே உனக்குத் தெரியும். நாம் அவதிப்படும்போது இவர்களால் நமக்கு எந்த உதவியும் இராது. 

உன் ஆர்வத்தை வளர்க்கும் இயற்கை உலகம் – அதன் செடிகொடிகள், மிருகங்கள், நிலப்பரப்புகள் – மனித குலத்தின் பேராசையால், முட்டாள்தனத்தால், குறுகிய கண்ணோட்டத்தால் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது. அதை சில ஆண்டுகளுக்கு முன் உனக்கு நான் சொன்னபோது நீ வடித்த கண்ணீர் இப்போதும் என் இதயத்தைத் தொடுகிறது. உன்னை அழவைத்ததற்கு வருந்துகிறேன். 

மில்லியன் கணக்கான ஆண்டுகளில் இல்லாத தீவிர தட்பவெப்ப மாற்றங்கள் இப்போது நிகழ்வதைப் பலர் புரிந்துகொள்வது இல்லை, சிலர் அதை நினைப்பதுகூட இல்லை, இன்னும் சிலர் அது பொய்யென்று பிரசாரம் செய்கிறார்கள். 

நமக்குப் பழக்கம் இல்லாத புதிய பூமியில் அடியெடுத்து வைக்கிறோம். அங்கே உயிரினங்கள் அதிவேகமாக நசிந்துவருகின்றன, கடல்மீன்களின் எண்ணிக்கை குறைகிறது, மகரந்தசேர்க்கைக்கு அவசியமான பூச்சிகள் அருகிவருகின்றன. 

உணவுப்பொருட்களின் பற்றாக்குறையும், அதனால் வரும் போராட்டங்களும் உன் எதிர்காலத்தில் காத்திருக்கின்றன. அவற்றில் இருந்து உன்னைக் காப்பற்ற இயலாத என் நிலையை எண்ணி மனம்நோகிறேன். 

நீ எங்கள் தலைமுறையை மன்னிப்பதுடன் நாங்கள் செய்த, இன்னமும் செய்துவரும் தவறுகளைத் தொடரமாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

என் தொழில் உயிரினங்களைப் பேணும் வழிகளைக் கண்டறிதல். எப்போதும் என் காதில் கெட்ட சேதிகள் தான். எவ்வழியில் பார்த்தாலும் சுற்றுச்சூழலில் ஒரு முன்னேற்றமும் எனக்குத் தெரியவில்லை. அதனால் வந்த சோகத்தினால் உன்னிடம் நான் பொறுமை இழந்திருக்கலாம். என்னை மன்னித்துவிடு!  

நான் இறக்கும்போது உன் எதிர்கால வேதனையைத் தணிக்க விஞ்ஞானி என்ற தகுதியில் நான் எதாவது செய்திருந்தால் திருப்தி அடைவேன். 

உன்மேல் உள்ள பாசமும், உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஆசையும் தான் தினமும் என்னை என் தொழிலில் ஊக்குவிக்கின்றன. என் ஆராய்ச்சி பலரின் மனதை மாற்றும் என்கிற நம்பிக்கையும் துளிர்விடுகிறது.

நீதான் என் உத்வேகம். 

ப்பப்பா. 

“அவர் உன்னிடம் சொல்ல நினைத்ததை வேறொருவர் சிறப்பாகச் செய்ததால் இருக்கலாம்.”  

“உண்மைதான். கோரி ப்ராட்ஷா சாதனைபுரிந்த விஞ்ஞானிகள் பலருடன் சேர்ந்து எழுதிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையையும் நான் படித்தேன்.”  

அதையும் அனிகா கணினித்திரையில் கொண்டுவந்தாள். 

Corey Bradshaw, Paul Ehrlich, et al.

Understanding the challenges of avoiding a ghastly future

Frontiers in Conservation Science. 13 January 2021

கொடூரமான எதிர்காலத்தைத் தவிர்க்க முடியுமா?

சுருக்கம்

உடனே கவனிக்க வேண்டிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நாம் அக்கறை காட்டத் தவறிவிட்டோம். நமக்கு உணவும் நலனும் தரும் இயற்கை வளங்கள் நாம் இதுவரை நினைத்ததைவிட மிகவேகமாகச் சீரழிந்து வருவதை நிலைநாட்டுவது எங்கள் முதல் குறிக்கோள். உயிர்க்கோளத்தையும் அதில் அடங்கியுள்ள எல்லா உயிரினங்களையும் – நம்மையும் சேர்த்து – எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை பலர் உணரவில்லை. அவற்றை எதிர்கொள்ளத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் அரசியல் தலைமை – இரண்டும் நம்மிடம் இல்லை. அதனால் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் வழிமுறைகளை மூடிமறைக்காமல் தைரியமாக எடுத்துரைப்பது அறிவியலாளர்களாகிய எங்களின் இரண்டாவது குறிக்கோள். அப்படிச் செய்யாவிட்டால், சூழலியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தருணம் இறந்தகாலத்துக்குப் போய்விடும். 

“அனிகா! நீ என்ன நினைக்கிறாய்?”

“உயிரியல் படித்ததால், அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை, நசிந்துவரும் உயிரினங்கள் இவற்றைப்பற்றி நான் ஓரளவு அறிவேன். ஆனால், நிலைமை நான் நினைத்திருந்ததைவிட மோசம் எனத் தெரிகிறது. எதிர்காலம் பற்றிய உன் கவலையும் புரிகிறது. அதை உன் வயது நண்பர்களுடன் நீ பகிர்ந்துகொள்ளவில்லையா?” 

பேசிக்கொண்டே அனிகா சாமிக்குத் தகவல் அனுப்பினாள். 

இயற்கை வளங்களின் அழிவினால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று ஆழ்ந்து கவலைப்படும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கு அறிவுரை தேவை. நன்றி! – அனிகா

“என் நெருங்கிய தோழி ஹேஸல் கார்சியா. முணுக்கென்றால் ஐரோப்பாவின் வரலாற்றுச் சின்னங்களையும், சைனாவின் ஆறுகளையும் பார்க்க வணிக வகுப்பில் பறந்துபோவாள். இளவேனில் விடுமுறை என்றால் யூடாவில் பனிச்சறுக்கல். சியாட்டிலில் இருக்கும் அவள் மாமாவின் திருமணம் சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தது. அதற்கு உறவினர்கள் நண்பர்கள்  கும்பலாகப் போனார்கள் – ஆஸ்திரேலியாவுக்கு. அவளுக்கு எப்படி புரியவைப்பது?” 

“உன் அம்மா?”  

“கடையை மூடாமல் இருக்க வேண்டும், அதன் வருமானத்தில் மூன்றுபேர் உயிர்வாழ வேண்டும். சேமிப்பு எதுவும் கிடையாது என்பதால், கார் மக்கர் செய்யக் கூடாது, வீட்டில் யாருக்கும் ஜுரம் வரக்கூடாது. இப்படி, அவளுக்கு எவ்வளவோ கவலைகள்.” 

சிலநிமிட  யோசனைக்குப்பின், 

“மனநோய்களை மருந்துகளால் குணப்படுத்தும் வழக்கமான முறைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவற்றின் அடிப்படை பாதிப்புகளை அறிந்து அவற்றை நிவர்த்திக்க வேண்டும் என்பது என் கொள்கை. எவ்வளவு நேரம் எடுத்தாலும் அவ்வழியில் சிகிச்சை செய்கிறேன். நான் இதைச் சொல்வதற்குக் காரணம்.. சில சமயங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதைவிட நமக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அவ்வழியில் நடப்பது புத்திசாலித்தனம். அது வெற்றியடைந்தால் பலர் அவ்வழியைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.”  

கணினியில் ஒரு புதிய மின்னஞ்சல். அதன் இணைப்பை அச்சிட உத்தரவிட்டாள். 

“என் நண்பரிடம் இருந்து உனக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் வந்திருக்கிறது. என்னைவிட இவ்விஷயங்களில் அவருக்கு அறிவு அதிகம்.”   

கதவைத்தட்டிவிட்டு விட்னி நுழைந்தாள். அச்சிட்ட காகிதங்களைக் கணினியின் பக்கத்தில் வைத்துவிட்டுப் போனாள். 

அனிகா காகிதத்தாள்களின் மேல் பார்வையை ஓட்டினாள்

அன்பான இளையவர்களே! 

நாங்கள் செய்யத் தவறியதை நீங்கள் சாதிக்க வேண்டும். 

இப்போது நாம் தினம் பயன்படுத்தும் பொருட்களும் நம் இயக்கங்களும் அகழ்ந்தெடுக்கும் எரிபொருட்களால் ஆனவை. அவை தரும் சக்தியை பிரகாசமான சூரியனோ வீசும் காற்றோ தராது. அதனால் உங்கள் மனித சக்தியை எரிபொருட்களைக் குறைக்க செலவிடுங்கள்! 

விமானத்தில் பறக்காதீர்கள்! 

உல்லாசக் கப்பல் பயணமும் அநாவசியம். 

இயந்திர சக்தியில் ஓடும் தனியார் ஊர்திகளுக்கு விடைகொடுங்கள்! 

அருகிலே விளைந்த இயற்கை உணவை சாப்பிடுங்கள்! 

அவசியமான பொருட்களை மட்டுமே யோசித்து வாங்குங்கள்! 

சமுதாயத்தில் உங்களை பிணைத்துக்கொள்ளுங்கள்!

வலைத்தளம் ஒரு சுருக்குவலை. 

மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துங்கள்! 

பூமியின் தட்பவெப்பத்தைப் பாதிக்கும் தொழிலில் ஈடுபடாதீர்கள்!

உங்கள் எளிய வாழ்க்கை நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழிகாட்டட்டும்! 

“இதுதான் உன் மனதை உயர்த்தும் மருந்து. நீ பின்பற்றக்கூடிய வழிமுறைகள். உயர்நிலை வகுப்பில் கால்வைக்கப் போகிறாய் என்பதால் இதில் ஒரு அறிவுரை எனக்கு முக்கியமாகப் படுகிறது.”

“அது..” 

“வாழ்க்கையை நடத்தத் தேவையான தொழிலை நீ யோசிக்கலாம். நிதி சம்பந்தப்பட்ட துறைகளின்  பக்கம் போகாமல் இருப்பது நல்லது. அவைதான் இயற்கையின் சமனநிலையை சிதைக்கும் இயந்திரப் பொருளாதாரம் வளர பணப்புழக்கத்தையும் கடனையும் அதிகப்படுத்துகின்றன. உன் சக்திக்குள் செலவுசெய்ய பழக்கிக்கொள்! வால் ஸ்ட்ரீட்டில் முதலீடுசெய்யும் அளவுக்குப் பணமும் சேர்க்காதே!”

அனிகா நீட்டிய காகிதக்கற்றையை வாங்கி ஜெனினா வேகமாக வாசித்தாள். 

“உலகைப்பற்றிய கவலை போய் என்னால் இவ்வளவையும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியுமா என்கிற அச்சம்” என்றாள் கைவிட்ட குரலில். 

“இப்படி யோசித்துப்பார்! ரிப் வான்விங்க்ல் கதைபோல இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. இப்போது உனக்கு வயது முப்பத்தியிரண்டு.”

அவள் மேஜைமேல் இருந்த பென்சிலை எடுத்து உதட்டுச்சாயம் பூசுவதுபோல பாவனை செய்தாள்.  

“ஜெனினா! இருபது ஆண்டுகளுக்குமுன் இந்த உலகத்தைக் காப்பாற்ற ஒரு கையளவு வாய்ப்பு இருந்தது. அதைத் தவறவிடாமல் உன்னால் முடிந்ததையெல்லாம் நீ செய்தாயா?” என்றாள் குற்றம்சாட்டும் குரலில்.

“நான் செய்தேன்.” 

“கத்திச்சொல்! நெஞ்சை நிமிர்த்திச்சொல்!” 

“அனிகா செய்யச்சொன்னது அனைத்தையும் செய்தேன்.” 

சொன்னதும் அவளுக்குக் கண்ணீர்.

“வெரி குட்!” 

அனிகா எழுந்து முகத்திரை அணிந்து அவளைக் கட்டி அணைத்தாள். 

“அதே கேள்வியை என்னையும் நீ கேட்கலாம். அதனால் நானும் செய்யப்போகிறேன், என்னால் முடிந்ததை.” 

“இவ்வுலகம் இன்னும் இருபது ஆண்டுகள் இருக்குமா?” 

“நிச்சயம் இருக்கும். நாமும் இருப்போம்.” 

எழுந்து நின்றார்கள். மௌனமாகக் கதவைத்திறந்து வெளியே வந்தார்கள். ஓல்கா காத்திருந்தாள். 

“சிகிச்சை சந்திப்பு முடிந்துவிட்டது. ஜெனினா மட்டுமல்ல, அவளால் நானும் என் அறியாமையில் இருந்து குணம் அடைந்திருக்கிறேன். அதனால் பாதி ஃபீஸ்.” 

“தாங்க்ஸ், டாக்டர்!” கவலைக்கோடுகள் போட்ட அவள் முகத்தில் நிம்மதி. 

“அனிகா ஈஸ் க்ரேட்!”

“ஜெனினா! உன்னை என்னிடம் அழைத்துவந்த உன் அம்மா என்னைவிட க்ரேட்.”  

“அடுத்த சந்திப்பு?” என்றாள் விட்னி மறக்காமல்.

“இருபது ஆண்டுகளுக்குப் பிறகு?” என்று அனிகா ஜெனினாவைப் பார்த்து புன்னகைத்தாள். “இந்த இடமும் நாங்களும் நிச்சயம் இங்கே இருப்போம் என்று நம்புகிறேன்.” 

“இல்லை. இரண்டு மாதத்தில் வந்து பார்க்கிறேன். பத்து நிமிடம் போதும்.” 

ஓல்காவும் ஜெனினாவும் விடைபெற்று வெளியே நடந்தார்கள். 

ஒருவிதத் திருப்தியுடன், அனிகா சுற்றிப்பார்த்தாள். வரவேற்புப் பகுதியின் கோடியில் ஒரு பதின்பருவப்பையன். சற்றுத்தள்ளி தாயும் ஏழு வயதுச் சிறுவனும். 

பையனுக்கு சுருள்சுருளான, தந்தத்தையும் தங்கத்தையும் கலந்து வார்த்த தலைமயிர். அது பல பெண்களுக்குப் பொறாமையைத் தரும். எந்த பதின்பருவப்பெண்ணும் அவனுடன் ‘ப்ராம்’ போக மறுக்கமாட்டாள் என்றுதான் நினைக்கத் தோன்றும். அது தவறு என்று அவன் தாயுடன் சென்ற வாரம் பேசியபோது தெரியவந்தது. 

“ஏரன் எங்களுக்கு ஒரே பையன். ப்ரென்ட்வுட் உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது போக இருக்கிறான். எட்டாம் வகுப்பு வரை முப்பதுமைல் தள்ளி ஒரு சின்ன ஊரில். இங்கே கல்வித்தரம் நன்றாக இருக்கும் என்று சென்ற ஆண்டு வீடுமாற்றி வந்தோம்” என்று நிறுத்தினாள். 

“இந்த ஊரிலேயே எட்டாவது வரை படித்தவர்களுக்கு அவன் வகுப்பின் புதிய பையன். ஆரம்பத்தில் அவனை ஏளனம் செய்து தள்ளிவைத்து இருப்பார்கள்.”  

“அத்துடன், அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். யாருடனும் வலியப்போய் பேசமாட்டான். கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அவன் வகுப்பில் ஒரு யுக்ரெய்ன் பெண். அவள் இந்நாட்டுக்குப் புதியவள். அவள் ஆங்கிலமும் கொஞ்சம் அரைகுறை. மற்றவர்கள் அக்கறை காட்டாத இருவருக்கும் நட்பு மலர்ந்ததில் அதிசயம் இல்லை. அவள் தந்தை யுக்ரெய்னில் இயற்பியல் பேராசிரியர். கல்லூரியின் ஒன்பது மாத ஒப்பந்ததில் குடும்பத்துடன் வந்தார். சில வாரங்களுக்கு முன் திரும்பிப் போய்விட்டார்கள்.”  

“ஏரனின் பிரிவுத்துயரம் எதிர்பார்க்கக் கூடியது தான்.”   

“கதை அத்துடன் முடிந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். என்ன காரணத்தினாலோ அவளுடன் அவன் தொடர்பு கொள்வதை அவள் விரும்பவில்லை. உறவு அத்துடன் முறிந்துவிட்டது. அதைத்தொடர்ந்து ஏரனுக்கு வந்த ஆழ்துயரம். ஒரு வாரம் தூங்காமலும் சரியாகச் சாப்பிடாமலும் பாதியாக மெலிந்துவிட்டான்.”  

பதின்பருவத்தில் உணர்ச்சிகள் மலை உச்சிக்கும் பள்ளத்தாக்கின் ஆழத்துக்கும் போவது இயற்கை. 

“அவள் அருகில் இல்லாமல் மற்ற மாணவர்களைச் சந்திக்க அச்சமாக இருந்திருக்கும்.”

“நானும் அப்படித்தான் நினைத்தேன். பள்ளிக்கூட கௌன்சிலர் சொன்னதற்காக அவனை ஒரு சைகியாட்ரிஸ்ட்டிடம் அழைத்துப்போனேன். அவர்…” 

“பெயரைச் சொல்ல வேண்டும் என்பது இல்லை.”  

“அவர் சிபாரிசின் பேரில், ப்ரோஸாக்.”  

“பொதுவாக.. முதல் இரண்டு வாரத்துக்கு தினம் பத்துமிகி. பிறகு இருபது. அப்படி ஒரு வாரம்.” 

“கரெக்ட். காலையில் எழுந்ததும் மருந்து. அவன் நாள் நல்லபடியாகப் போனது. பழைய நிலைக்கு வந்ததாக சந்தோஷப்பட்டோம்.” 

பீறிட்ட அழுகை உரையாடலை நிறுத்தியது. சுதாரித்துக்கொண்டு, 

“டாக்டர் அடுத்த ஒரு மாதத்துக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தார். விழித்ததும் சாப்பிட அவன் படுக்கைக்குப் பக்கத்திலேயே மருந்து பாட்டில். மெமோரியல் விடுமுறையின்போது நாங்கள் ஃப்ளாரிடா போவதாக இருந்தது. சனிக்கிழமை காலை எட்டுமணி வரையில் எழுந்துவராததால் அவன் அறைக்குப்போனேன். படுக்கையில் சுருண்டு கிடந்தான். திறந்துகிடந்த மருந்து பாட்டில். இதயத்துடிப்பு 180 இருக்கலாம். கண்ணின் இமையைப் பிரித்தபோது சந்தேகம் வந்தது.”  

இன்னொரு அழுகை. 

“உடனே எமெர்ஜென்ஸிக்குப் பறந்தோம். எப்படியோ மருந்தை வயிற்றில் இருந்து வெளியேதள்ளி அவனைப் பிழைக்கவைத்தார்கள்.”  

“நல்ல வேளை. கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.” 

“அதை நான் நினைக்காத நாளே இல்லை.”  

அவளுக்கும் சேர்த்து அனிகா மகிழ்ச்சி அடைந்தாள். 

“கோடை விடுமுறை. அவனுக்குத் துணையாக நான் வீட்டிலேயே தங்கி இருக்கிறேன். சில வாரங்களிலேயே அவன் ஒருவித சமனநிலைக்கு வந்ததாக நினைக்கிறேன். முன்பெல்லாம் வீட்டுவேலை கொடுத்தால் முனகிக்கொண்டே காமாசோமாவென்று செய்வான். இப்போது அவனே உதவி வேண்டுமா என்று கேட்கிறான். ஆனால், நடந்ததை நினைத்து அவனுக்கு வெட்கமும் அவமானமும். முகத்தின் சோகம் போகவில்லை. அதிகம் பேசுவதும் கிடையாது. கூக்கிலில் தேடியபோது நீ வித்தியாசமான மருத்துவர் என்ற புகழ்ச்சி பலமுறை கண்ணில்பட்டது.”   

“நன்றி! அவனை உடனே கவனிக்கிறேன். விட்னி நேரம் சொல்வாள்.” 

“தாங்க்ஸ்.” 

விட்னி ஏரனை அழைத்ததும் அவன் எழுந்து வந்தான். முகத்தில் உணச்சிகளை உள்ளடக்கிய  அமைதி. 

“ஹாய்! ஏரன்!” என்று முகத்திரையை எடுத்தாள்.

“ஹாய்! டாக்டர் வேல்!”  

“அனிகா என்றே அழைக்கலாம்.”  

“அனிகா! உன் நாள் எப்படி?”  

“இதுவரை நல்லபடியாகப் போனது. இப்போது ஒரு இளம்பெண் சந்தோஷமாக வெளியே போனதை நீ கவனித்து இருப்பாய். இங்கே நுழைந்தபோது அவளுக்கு உலகத்தையே பறிகொடுத்த வருத்தம்.”  

“அவள் செய்ததை நானும் செய்யவேண்டும், இல்லையா?” என்று சற்று அவநம்பிக்கையுடன் கேட்டான்.  

“அதற்கு நாம் இருவருமே முயற்சி செய்வோம்.”  

மேஜையின் இருபக்கமும் உட்கார்ந்தார்கள். ஏரனை உரையாடலில் இழுக்க, 

“நேற்று ‘ப்ரூய்ன் டூயிங்கி’ல் (பள்ளிக்கூட மாணவர் மின்வடிவ-செய்தித்தாள்) அறிவியல் புதினங்கள் பற்றிய உன் கட்டுரையைப் படித்தேன்.”  

“ஆறு மாதங்களுக்குமுன் எழுதியது.” 

“நான் புனைவுகள் அதிகம் படிப்பதில்லை. அதிலும் விஞ்ஞானக் கதைகள் என்றால் எனக்குத் தெரிந்த ஒரேபெயர் ஐஸக் அஸிமாவ்.” 

“அறிவியல் படித்த நீ இப்படிச் சொல்வது ஆச்சரியம்.”   

“ஒருவேளை அறிவியலில் பத்து ஆண்டுகள் மூழ்கியதால் இருக்கலாம். இல்லை, ரோபாட், செயற்கைமூளை பற்றி அதிகம் தெரியாததாலும் இருக்கலாம். எதுவானாலும் உன் கட்டுரை கட்டுக்கோப்பாக எழுதப்பட்டு இருந்ததால் அது என் ஆர்வத்தைத் தூண்டியது. நான் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் ‘த மினிஸ்ட்ரி ஃபார் த ஃப்யுச்சர்’ பிரமாதம் என்று புகழ்ந்திருந்தார். நூலகத்தில் இருந்து எடுத்துவந்தேன். நீ நிச்சயம் வாசித்து இருப்பாய்.” 

“கிம் ஸ்டான்லி ராபின்சன் எனக்குப் பிடித்த கதாசிரியர். அவருடைய பல நாவல்களைப் படித்திருக்கிறேன். இதை இன்னும் தொடவில்லை. எப்படி?”  

“கொஞ்சம் கனமான, நிஜமாகவே கனமான புத்தகம். ஈரம் நிரம்பிய 35 டிகிரி சூழலில் நம் உடல் வேர்த்து குளிர்ந்துவிடும் சக்தியை இழந்துவிடுதால் உயிருக்கே ஆபத்து. அப்படிப்பட்ட கட்டத்தில், இந்திய மக்கள் படும் அவதியில் கதை ஆரம்பிக்கிறது. படித்தவரையில் நம்பக்கூடிய கதை. முடித்ததும் அதை விவாதிப்போம்.” 

ஏரன் பழக்கப்பட்ட இடம்போல சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். 

“‘சைஃபை’யின் இலக்கணம் முழுக்க உனக்குத் தெரிந்திருக்கிறது. நீயே ஒன்று எழுத வேண்டியது தானே.”  

“ஒன்று எழுதியிருக்கிறேன்.”  

“எனக்கு அனுப்புகிறாயா? படித்துப் பார்க்கிறேன்.” 

“ஊகும்..”  தலையசைத்தான்.

“ஏன்?”  

“‘டெராய்ட்’ மக்கள் வசிக்கும் கிரகம் ‘க்யுடோலி’. ஆண்டு 2220. உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் ரோபல், அவன் தங்கை ரூஹா. இருவரின் நண்பர்கள் கும்பலில் ஒரு ஆன்ட்ராய்ட். அவர்களைச் சுற்றிய கதை.” 

“அப்புறம்..”  

“அப்புறம் ஒன்றும் இல்லை. காலையில் அருந்தும் ‘துசம்’ பழச்சாறு, இன்னொரு கிரகத்துக்கு விண்வெளிக்கலத்தில் உல்லாசப்பயணம். இந்த ஜாலங்களை யெல்லாம் எடுத்துவிட்டால் டிஸ்னியின் சாதாரண பதின்பருவத்தினர் கதை. அவ்வளவுதான். என்னாலேயே படிக்க முடியவில்லை.” 

“சரி, ‘சைஃபை’க்காக இருநூறு வருஷம் போக வேண்டாம். பத்து இருபது ஆண்டுகள்கூடப் போதும்.” 

“நீ நம்பமாட்டாய். மருத்துவமனையில் இருந்து நான் வந்தபிறகு..” 

அங்கே போனது அவன் சோக நினைவுகளைக் கிளற முகம் வெளிறியது. 

‘அதற்குமுன் நடந்ததை நீ முற்றிலும் மறந்துவிட வேண்டும்!’ என்று அனிகா சொல்லவில்லை. அது சுலபம் அல்ல என்று தெரியும். ஒருநிமிட மௌனத்திற்குப்பிறகு,   

“நீ சொன்ன தீமில் ஒரு புது ஐடியா கிடைத்தது.” 

“என்ன? சொல்! சொல்!” 

“அதைவைத்து நான் இன்னும் ஒரு வரிகூட எழுதவில்லையே” என்று சோகமாகச் சொன்னான்.  

“அதனால் என்ன? ப்ளாட் கிடைத்துவிட்டால் பள்ளிக்கூடம் திறப்பதற்குள் எழுதித்தள்ளி விடலாம்.” 

அவன் தயக்கத்தைப் போக்க,

“நம் சந்திப்பில் இன்னும் பாதி நேரம் பாக்கி. முழுவதற்கும் உன் அம்மா ஏற்கனவே பணம் தந்துவிட்டாள்.”  

“வெளிநாட்டில் இருந்து இங்கே குடியேறிய ஒரு வசதியான குடும்பம்” என்று ஆரம்பித்தான்.

“எந்த நாட்டில் இருந்து?”  

அவளைச் சிலநொடிகள் நேரே பார்த்து, 

“இந்தியாவில் இருந்து.”  

யுக்ரெய்ன் என்று அவன் சொல்லாததை அனிகா கவனித்தாள்.

“உனக்கு கேரக்டர், இந்திய வாழ்க்கை என்று எந்த விவரம் தேவைப்பட்டாலும் என்னிடம் கேட்கலாம். புத்தகமாக வரும்போது என் பெயரைச் சேர்க்க வேண்டும் என்பதில்லை.” 

ஏரன் அடங்கிச் சிரித்தான். சிரிப்பு ஓய்ந்ததும் சுவரில் மாட்டியிருந்த தஞ்சாவூர் ஓவியத்தில் பார்வையைப் பதித்து,    

“கணவன் மனைவி இரு குழந்தைகள். அவனுக்கு முதலீட்டு நிறுவனத்தில் வேலை. அவள் மருத்துவ மென்பொருள் துறையில். இருவருக்கும் சேர்த்து கால் மில்லியனுக்குமேல் வருமானம். வாழ்க்கைப்படகு அலுங்கல் குலுங்கல் இல்லாமல் போகிறது. யோசிக்காமல் செலவு செய்கிறார்கள். குழந்தைகள் எப்போது எதைக்கேட்டாலும் வாங்கித்தருகிறார்கள். கார்களிலும் விமானங்களிலும் அடிக்கடி பயணம் போகிறார்கள். அண்டைவீட்டினருடன் பழக்கம் பரிச்சய அளவில்…” 

அண்மையில் யூ.எஸ். வந்த இந்தியர்களைப் பையன் நன்றாகக் கவனித்து இருக்கிறான். 

“கணவனும் குழந்தைகளும் கோடை விடுமுறைக்கு ம்ம்.. இந்தியா போகிறார்கள். போய்ச்சேர்ந்ததும் மனைவி அவர்களுடன் பேசுகிறாள். இரண்டு வாரங்களில் மின்சாரத் தொகுப்பு முறிந்துவிடுகிறது. அதற்கான காரணம்…” 

“அது கதை நடக்கும் வருஷத்தைப் பொறுத்தது.” 

“கரெக்ட். சூறாவளி மழையினால் இருக்கலாம், இல்லை அதிவெப்பத்தில் குளிர்சாதனங்களின் சுமையினால் இருக்கலாம்.” 

“தொடர்பு சாதனங்களுக்கு மின்சாரம் அவசியம் என்பதால் அவர்கள் பக்கத்தில் இருந்து அவளுக்கு எந்தத்தகவலும் இல்லை” என்று கதையை வளர்த்தினாள்.

“அத்துடன் விமானப்பயணம் இல்லை. டீஸல் குறைந்துவிட்டதால் அது விவசாய இயந்திரங்களுக்கும் கனரக ஊர்திகளுக்கும் மட்டும்தான்.”    

“இன்னும் பத்துப்பதினைந்து ஆண்டுகளில் உலகம் இப்படி மாறிவிடுமா?”  

“அதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.”

“சரி,மேலே சொல்!” 

“அவள் குடும்பத்தினர் இந்தியாவில் என்ன ஆனார்கள் என்று தெரியாது. அவளுக்கும் இங்கே எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மை. மருத்துவமனையில் நேரடி சிகிச்சைகள் மட்டுமே என்பதால் அவள் சேவை அவசியம் இல்லாமல் போகிறது. அவளைப்பொறுத்த வரையில் நேரம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. அவள் நிலைமையில் நீ என்ன செய்வாய்?” என்று அனிகாவைக் கதாநாயகி ஆக்கினான்.

ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, 

“நான் பதின்மூன்று வயதுவரை இந்தியாவில். என் பாட்டியிடம் இருந்து சமைக்கக் கற்றுக்கொண்டேன். என் அம்மாவால் முடியாதபோது நானே சமைப்பேன். யூ.எஸ். வந்தபிறகும் அவ்வழக்கத்தைக் கைவிடவில்லை.” 

“இந்திய சமையலுக்கு நிறைய நேரம் எடுக்கும்.”  

“அதனால் மனம் கவலைதரும் எண்ணங்களையே சுற்றி வராது. நீ சொல்லும் கதையில் வருவதுபோல் நான் தனியாக இருந்தால், சமைத்ததை அண்டை வீட்டினருடன் சேர்ந்து சாப்பிடுவேன். அதுவும் மனநோய்க்கு மருந்து.” 

ஏரன் முகத்தில் மாணவன் சரியாகப் பதில் சொன்னதும் ஆசிரியைக்கு வரும் திருப்தி. 

“இங்கிருந்து நேராகப்போனால் அரை மைலில் எங்கள் வீடு. லெனெக்ஸ் தெருவின் கோடி. அதைத்தாண்டி போவெல் பார்க். நீ பார்த்து இருக்கிறாயா?” 

“நான் அங்கே போனதில்லை.” 

“எங்கள் வீட்டின் பின்னால் திறந்தவெளி. அதில் துணி உலர்த்த இரண்டு கொடி கட்டினேன். தினமும் எங்கள் மூன்றுபேருடைய துணிகளையும் துவைத்தபிறகு அவற்றை உலர்த்துவது நானே ஏற்றுக்கொண்ட வேலை. கொடியில் எப்படித் தொங்கவிட்டால் சுருக்கம் விழாது, எந்தவிதமான துணிகள் சுலபமாக உலரும், எது சீக்கிரம் கிழியும் எல்லாம் எனக்கு இப்போது அத்துப்படி.”   

“உன் கதையின் பெண் என்னைப்போல சமைக்கலாம், உன்வழியில் துணிகளைத் துவைத்து உலர்த்தலாம். அத்துடன் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்! நெருக்கடி நிலைமையில் குழந்தை பெற்ற ஒரு தாய்க்கு உதவலாம்.” 

“அதற்காக, பதினேழு வயதிலேயே தாயான ஒருத்தியை நான் ‘டேட்’ செய்தால்..” 

“இருவருக்கும் ஒத்துப்போவதும் அவசியம்.” 

ஏரன் அந்த சாத்தியத்தை யோசித்தான். 

சந்திப்பில் இரண்டு நிமிடங்கள் பாக்கி.

“ஏரன்! இதை நீ எழுதியே ஆகவேண்டும். உன் கதையில் இரண்டு சக்திகள். தற்போது மிக அவசியம் என நாம் நினைக்கும் பல விஷயங்கள் காணாமல் போகின்றன. அதனால், தட்டுப்பாடுகள் குழப்பங்கள். மனம் ஒடிந்துவிடாமல் அவற்றுக்கு கதாநாயகி அனுசரித்துப்போகும் சாமர்த்தியம். இரண்டு சக்திகளுக்கும் இடையில் போராட்டம். அதுதான் கதைக்கு இறுக்கத்தைத் தருகிறது. அப்படி இல்லாமல் ஒருநாளில் மனித நாகரிகம் நிலைகுலைந்து விடுகிறது, நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சுவாரசியம் இல்லாத நாவல்கள் திரைப்படங்கள். இன்னொரு பக்கம், நம் புத்திசாலித்தனத்தைக் கேலிசெய்யும் முடிவில்லாத விஞ்ஞான அதிசயங்கள்.”  

எழுந்தார்கள். 

“அடுத்தமுறை பார்க்கும்போது ஒரு அத்தியாயம் முடிந்திருக்க வேண்டும்.”  

“கதையின் முடிவு?” 

‘இணைவதும் முறிவதும் மனித உறவுகளின் இயற்கை என்பதை உணர்ந்து வாழ்க்கையை முன்னோக்கிப் பார்த்தல்’ என்று சொல்லவில்லை. 

“அதைக் கதாபாத்திரங்களே தீர்மானிக்கட்டும்.” 

ஏரன் வெளியே சென்றதும் விட்னியுடன் சிரித்துப்பேசினான். 

வரவேற்பறையில் சிறுவன் பூத்தொட்டியில் இருந்த செடியின் இலைகளைப் பிய்த்து இறைத்திருந்தான். குடிதண்ணீரைக் கோப்பையில் எடுத்துத் தரையில் சாய்க்குமுன் அவன் தாய் எழுந்துவந்து அவன் கையைப் பிடித்தாள். அவனை ‘ரிடாலின்’ இல்லாமல் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது அவள் விருப்பம். அதை நிறைவேற்றுவது எப்படி? 

யோசித்தபடி அனிகா நின்றாள்.  

அன்றைய கடைசி நோயாளி ஜான் நியுமன். 

ஒரு மாதத்திற்கு முன். மாவட்ட உடற்பயிற்சி மையம். ‘கார்டியோ’ பாடம் முடிந்து குழு கலையத் தொடங்கியது. அதை நடத்திய பென்னி நியுமன் அனிகா பக்கம் வந்து,  

“அனிகா! நீ ஒரு மனநல மருத்துவர் என்று சொன்னதாக ஞாபகம்.”  

“யெஸ்! அலுவலகம் பப்ளிக்ஸ் பக்கத்தில்.”  

அவள் சிறிது தயங்கினாள். பிறகு,

“என் தம்பி ஜான் ஆஃப்கானிஸ்தானில் ஒரு வருஷம் இருந்தான். அவனுக்கு தீவிர அதிர்ச்சியின் பாதிப்பு (பி.டி.எஸ்.டி.) இருப்பதாகச் சொல்கிறார்கள்.”  

“அதற்காக வருந்துகிறேன்.” 

“நீ எதாவது செய்ய முடியுமா?”  

அதுவரை அப்படிப்பட்ட சிகிச்சை செய்தது இல்லை என்பதால் அனிகா தயங்கினாள். 

“பாதிப்பு இலேசானது என்பதால் வி.ஏ.க்கு (முன்னாள் இராணுவத்தினருக்கு உதவும் அரசு நிர்வாகம்) அவ்வளவாக அக்கறை இல்லை.”   

“ஜான் எங்கே இப்போது?”  

“என்னுடன் தங்கியிருக்கிறான்.”  

கோவிட் வைரஸினால் மையத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் பயிற்சி வகுப்புகள் நடக்காததால் அவள் வருமானம் நின்றிருக்கும். அரசாங்க உதவித்தொகை எந்த மூலைக்கு? கூடவே தம்பி வேறு. 

“பிற்பகல் ஐந்து மணிக்குப் பிறகு நான் பணம் வாங்குவது இல்லை. அந்நேரம் நீ அவனை அழைத்துவர முடியுமா?”   

“ம்ம்.. தாங்கஸ், அனிகா!”

கைப்பையை எடுத்து அதில் இருந்த வணிக அட்டையைக் கொடுத்தாள். 

“இந்த எண்ணில் விட்னி பதில் சொல்வாள். ஜான் பற்றிய ரிபோர்ட் இருந்தால் அதை என் மின்-முகவரிக்கு அனுப்பு! உதவியாக இருக்கும்.” 

முந்தைய வாரம் முதல் சந்திப்பு. பென்னி ஜானை அழைத்துவந்தாள். இராணுவ க்ராப், உறுதியான உடல் தசைகள் சாதாரண இளைஞர்களில் இருந்து அவனை வித்தியாசப்படுத்தின. 

அனிகாவின் அறைக்குள் நுழைந்ததும், 

“நீ மிக அழகாக இருக்கிறாய், டாக்!” என்றான். 

“தாங்க்ஸ். அதற்குக் காரணம் பென்னி. என் உடலைக் கட்டுதளராமல் வைத்திருக்கிறாள்.” 

“ஷி’ஸ் க்ரேட்.” 

“நீ உட்காரலாம்!” 

அதைச் செய்தான். அவன் பார்வை எதிலும் நிலைக்கவில்லை. ஆலோசக அறையைச் சுற்றிலும் ஓடியது. அவனை உடற்பயிற்சி மையத்தில் பார்த்திருக்கிறாள், அரங்குகளில் எப்போதும் தனியாக.    

“நேற்று நீ கூடைப்பந்து ஆடுவதைப் பார்த்தேன். நன்றாகப் பந்தை எறிகிறாய்.” 

“தாங்க்ஸ். பள்ளிக்கூடத்தில் ஆடியிருக்கிறேன்.”  

“எங்கே?” 

“சென்டென்னியல் ஹை.” 

“நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அது மாநில சாம்ப்பியன்ஷிப் வென்றதாக ஞாபகம்.” 

“நான் அதில் பாய்ன்ட் கார்ட்.” 

அவன் முகம் அந்நினைவில் மலர்ந்தது. அக்கணத்தைப் பயன்படுத்தி,

“பென்னி நீ இராணுவத்தில் இருந்ததாகச் சொன்னாள்.” 

“யெஸ்.” 

“எப்படிப்பட்ட அனுபவம்.”

“கொஞ்சம் சிரமம்தான்.” 

“இராணுவத்தில் உன் பொறுப்பு?”  

“வெடிமருந்துப் பகுதியில்..”  

“அதில் ஆபத்து..”  

“நிறைய. அத்துடன் முன்ஆயத்தமின்றி தயாரித்த வெடிகள், கவசவாகனங்கள், சாப்பாட்டின் கிருமிகள்..” 

ஏழ்மை என்ற ஒரே காரணத்தால் பதினெட்டு வயது இளைஞனின் அடுத்த நான்கு ஆண்டுகள் கவலை இல்லாத கல்லூரிக்கு பதில் கட்டளைக்கு அடிபணியும் இராணுவத்தில். ஓர் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில். ‘சேவிங் ப்ரைவேட் ரயன்’ போன்ற திரைப்படங்களின் போர்க்காட்சிகளைப் பார்த்தாலே அவளுக்கு ஒரு வாரம் தூக்கம் வராது. ஹெலிகாப்டர்களின் சத்தமும், எல்லா திசைகளிலும் பாயும் குண்டுகளும், எக்கணத்திலும் உயிர் போகலாம் என்கிற அச்சமும். போர்முனையை நிஜமாகவே அனுபவித்த ஒருவனுக்குத் தீவிர மனக்கிலேசம் இயற்கை. சாதாரண வாழ்க்கைக்கு அவனைத் திருப்ப, அவன் அச்சத்தை அவனுக்கு உணரவைப்பது முதல் படி.  

“எனக்கு தண்ணீரில் மூழ்கிவிடுவேனோ என்று பயம்.” 

அதைக்கேட்டு அவனுக்கு ஆச்சரியம். அவளை ஏறஇறங்கப் பார்த்து,

“நீ சுலபமாக மிதக்கலாம்.” 

“அது மூளைக்குத் தெரியும். ஆனாலும் தண்ணீரைப் பார்த்ததும் மனதில் பயம் பற்றிக்கொள்ளும். நதிக்கு மேல் பாலத்தில் போகும்போது, விமானம் ஓடுதடத்தைத் தொடுவதற்குமுன் கடல் பரப்பின்மேல் தாழ்வாகப் பறக்கும்போது, உடல் நடுங்கும்.” 

“கண்ணை மூடிக்கொண்டு தண்ணீரில் குதித்துப் பார்!” 

“அதுதான் நீச்சல் கற்றுக்கொள்ளப் போனபோது நடந்தது. ட்ரெய்னர் கரையில் இருந்த என்னைக் குளத்தில் தள்ளிவிட்டாள். கால்களை உதைத்து கைகளை இழுத்து எப்படியோ நீர்மட்டத்துக்கு வந்தேன். ஒருமுறை மூழ்கி மேலேவந்ததும் என் பயம் குறைந்துவிட்டது.”  

அவன் கவனமாகக் கேட்டான். எதற்கு என்ற புரியாத பார்வை மெல்ல மறைந்து குற்ற உணர்வின் சாயல். 

“இறப்புக்கு நாம் எல்லாருமே பயப்படுகிறோம். அது நம் உள்ளுணர்வு. விஷமில்லாத தோட்டத்து பாம்பைப் பார்த்தால் கூட எனக்கு மூச்சு இரைக்கும்.” 

“எது என் அச்சத்தைத் தூண்டிவிடும் என்று முன்கூட்டியே சொல்வதற்கு இல்லை. காரை நிறுத்தியபிறகு டபடப என்று சத்தம் போட்டால் அதுகூட என் உடலை உறைவித்துவிடும்.” 

“அது உன் மனதில் ஆழமாகப் பதிந்த பயத்தின் வெளிப்பாடு. அதை எதிர்த்துப் போராடாமல் அதை நேரில் சந்திக்க வேண்டும்.” 

நெற்றியைச் சுருக்கி யோசனை செய்தான்.

“நிரந்தர முடிவின் அச்சத்தைப் போக்க நாம் நிஜமாகவே இறக்க முடியாது. இறந்ததுபோல பாவனை செய்யலாம்.”  

எப்படி? என்று அவளை ஏறிட்டுப்பார்த்தான். 

“பென்னி யோகாவும் கற்றுத்தருகிறாள்.” 

“தெரியும்.” 

“யோகா பயிற்சியின் கடைசியில் ஷவாசனா. கார்ப்ஸ் போஸ்.”  

“அசையாமல் படுத்திருக்க வேண்டும்.”  

“சுவாசத்தைத்தவிர மற்ற ஒவ்வொரு அங்கமும் செயல் இழந்ததாக நினைக்க வேண்டும். கடைசியில் இறப்பு நிகழ்ந்துவிட்டதாக நம்ப வேண்டும். தினமும் தூங்குவதற்குமுன்.” 

“முயற்சி செய்வேன்.”  

“தட்’ஸ் மை பாய்.”  

“மறுநாள்..” 

“நீ இறக்கவில்லை என்கிற சந்தோஷம். அந்தத்தினம் உனக்குக் கடவுள் கொடுத்த அன்பளிப்பு. இரவு மறுபடியும் கார்ப்ஸ் போஸ்.”   

இருவரும் வெளியே வந்ததும் பென்னியிடம் ஜான் ‘இறப்பதற்கு’ உதவிசெய்யச் சொன்னாள். 

அன்றைய சந்திப்புக்கு ஜான் தனியாக வந்தான். 

“எப்படி இருக்கிறாய்? ஜான்!”  

“நான் ஜான் இல்லை. அவன் சவம்” என்று சத்தமாகச் சிரித்தான். 

அனிகாவுக்கு நம்பிக்கை பிறந்தது.  

“சவத்துக்கு இறப்பைப் பற்றிய பயம் போய்விட்டதா?”  

“ஒரு வாரத்தில் எப்படிப் போகும்? ஆனால், டபடப சத்தம் காதில் விழுவது இல்லை.”  

“குட்! குணமாகும் பாதையில் கால்வைத்து இருக்கிறாய்.” 

“இன்னொரு விஷயம். எனக்கு வேலை கிடைத்திருக்கிறது.” 

“ரொம்ப சந்தோஷம்.” 

“பிரமாதமாக ஒன்றும் இல்லை. கூடைப்பந்து பயிற்சி முகாமில் உதவி கோச். ஆறு வாரத்துக்கு.”  

குறைந்தபட்சம், அவன் மற்றவர்களுடன் பழகப்போகிறான். 

“அப்புறம்?”  

யோசித்தான். 

“வெடிமருந்தைக் கையாண்டபோது அதில் அடங்கிய இராசயன சக்தி எப்படி விசையுடன் வெளிப்படுகிறது என்று ஆச்சரியப்படுவேன். அதைப்பற்றி முழுக்கத் தெரிந்துகொள்ள ஆசை.”  

“அப்போது அதை சமாதானக் காலத்துக்குப் பயன்படுத்தலாம்.”  

“தட்’ஸ் இட்” என்று கூவினான்.

“வரும் கல்வி ஆண்டு சமுதாயக் கல்லூரியில் சேரலாமே. இப்போது அது இலவசம்.”  

“அதற்குமுன் அடிப்படை தெரிந்தால் நல்லது இல்லையா? பள்ளிக்கூடத்தில் வேதியியல் பாடம் சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை. நானும் சிரமப்படவில்லை.”   

“ம்ம்..” 

“வலைத்தளத்தில் இருக்குமா?”  

இருக்கும், அதில் நாலாபக்கமும் கவனத்தைச் சிதறடிக்கும் தகவல்கள் அவன் அச்சத்தைத் தூண்டிவிடும் என்பதால், 

“நான் ஒரு புத்தகத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நாளை எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிப்போகலாம். விட்னியிடம் இருக்கும்.”  

“தாங்க்ஸ், டாக்! பை!” என்று ஜான் எழுந்துபோனான். 

—–

அனிகா அலுவலக அறையில் கைப்பையை வைத்துவிட்டு, தன் கணினியை எடுத்துவந்தாள். வட்ட மேஜையின் எதிர்ப்புறங்களில் அமர்ந்தார்கள். நேரத்தைக் கடத்தாமல் ப்ரஷாந்த் உடனே ஆரம்பித்தான். 

“சிறுவயதில் நீ யாரையாவது ஆதர்சமாக நினைத்தது உண்டா? இவரைப்போல வளர வேண்டும், இவருடைய லட்சியப் பாதையில் நடக்க வேண்டும், இவர் சாதனைகளை நானும் செய்ய வேண்டும் – இப்படி. உறவினர் இல்லை வயதான நண்பர்கள்?” 

“இந்த இடத்தில் நான் தான் உன்னைக் கேள்விகள் கேட்க வேண்டும்” என்று அனிகா புன்னகைத்தாள். 

“இந்தப் புன்னகையும் இந்த இடத்தின் எளிமையும் என் பிரச்சினையை சரியான இடத்திற்குக் கொண்டுவந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையைத் தருகின்றன.”   

“உன் கணிப்பிற்கு நன்றி!”  

சிறு யோசனைக்குப்பின் அவள், 

“என் மதிப்பிற்கு உரியவர் என் தந்தை வேல் ரெட்டி. அவரைப்போல எதுவந்தாலும் வாழ்க்கையை சமனநிலையில் எதிர்கொள்ள வேண்டும் என்பது என் குறிக்கோள்.” 

அதை அவன் மனதில் குறித்துக்கொண்டான். 

“நீ ‘குசின் சப்ஸ்’ சான்ட்விச் விடுதிகளில் சாப்பிட்டு இருக்கலாம்.”  

“ஒருசில தடவை. சமீபத்தில் அவை காணாமல் போய்விட்டன.”  

“அப்படியென்றால் உனக்கு நான் சொல்வது புரியும். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் அது ‘சப்வே’க்குப் போட்டியாக இருந்த காலத்தில், இங்கே மூன்று விடுதிகளின் முழு உரிமையாளர் என் தந்தை. இந்தியாவில் வாழ்ந்த எளிமையை இங்கேயும் கடைப்பிடித்தார். பணியாட்களைப் பாசத்துடன் நடத்தினார். பணத்தைக் குமிப்பதில் நேரம் செலவிடவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன் ‘குசின் சப்ஸி’ன் நிர்வாகம் செய்த குளறுபடிகளால் பெருத்த நஷ்டம். அப்போது அவரும் எல்லாவற்றையும் இழந்தார். பக்கத்தில் இருக்கிறதே பப்ளிக்ஸ். அது ஆரம்பித்தபோது அதில் சாதாரண பணியாளராக நுழைந்தார். முதலாளியாக இருந்த நான் ஏன் இந்த அடிமட்ட வேலையைச் செய்யவேண்டும் என்று வறட்டு கௌரவம் பார்க்கவில்லை.”  

அவள் மனக்கண்ணில் நடுவயதைத் தாண்டிய அவள் தந்தை பச்சைச்சீருடையில் கடை சாமான்களை ஒழுங்காக அடுக்கி, அநாவசியமாக எரிச்சல்பட்ட வாடிக்கைகளை சமாளித்து, கடை வண்டிகளைக் கார் வரை தள்ளிச்சென்று பைகளை அதன் பின்னால் வைக்கும் காட்சி. மௌனமாக சில கணங்கள். சுதாரித்துக்கொண்டாள். 

“மருத்துவப் படிப்பும் பயிற்சியும் முடித்து தொழில் தொடங்க நான் இடம் தேடியபோது இந்த மூலைப்பகுதியை எனக்குப் பிடித்துக்கொடுத்தார்.” 

அவள் சொன்னதைக் கவனமாகக் கேட்ட அவன், 

“என் கசின் நீரா வேறு விதம். என்னைவிட பன்னிரண்டு வயது பெரியவள். நான் என் பெற்றோருக்கு ஒரே பையன் என்பதால் எனக்கு அக்கா மாதிரி. ஒன்பது வயதில் இந்தியாவில் இருந்து வந்தாள். பள்ளிக்கூடத்தில் அவள் வாங்காத பரிசு இல்லை. ஹார்வேர்ட், ஸ்டான்ஃபோர்ட். அவள் அங்கே போனதில் அவர்களுக்குத் தான் பெருமை. மகளிர்நல மருத்துவத்தில் அவள் தேர்ந்தவள். எந்த சிரமமான பிரசவமும் அவள் கைகளில் வெற்றிகரமாக முடியும் என்ற பெயர். கர்ப்பம் தரிப்பதின் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்திருக்கிறாள். அவள் தான் பிரசவம்பார்க்க வேண்டும் என்று அடுத்த மாநிலங்களில் இருந்து ஹட்சன் வேல்லி மருந்தகத்துக்கு பெண்கள் வருவது வழக்கம்.” 

“அப்படி ஒருத்தி இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி.”  

“இருந்தாள். இப்போது இல்லை.” 

‘அவளுக்கு ஏதாவது..’ என்ற பார்வை. 

“ஷி’ஸ் ஃபைன். ஹட்சன் வேலியின் நிர்வாகத்தில் புதிதாக வந்த சோம்பேறிகள் அவள் திறமைக்கு மதிப்பு தரவில்லை. பதவியை உதறிவிட்டாள்.” 

“இப்படித்தான் சிலசமயம் நடக்கிறது.” 

அவள் சமாதானத்தை அவன் ஏற்பதாக இல்லை. 

“எந்த இடத்தில்தான் அரசியல் இல்லை? அதற்காக சமுதாயம் ஒப்படைத்த கடமையைக் கைவிட முடியுமா? அப்படிப் பார்த்தால் அவள் ஏற்றிருக்கும் புதிய வேலையில் அழுத்தமும் அரசியலும் இன்னும் அதிகம்.” 

“அதற்கேற்ற சன்மானம்.” 

“மிக அதிகமாகவே. இனி குழந்தைகளை வெளியே கொண்டுவரும் வேலை இல்லை.” 

அதற்கு பதில்,

“மனசாட்சி உள்ளே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.” 

“அப்படியா?” என்ற கேள்வியில், ‘உனக்கு எப்படித் தெரியும்?’ என்று இன்னொன்று.

“என் பெண்-தோழி ஒரு சுதந்திர எழுத்தாளர். மேல் மட்டத்தினரின் அக்கிரமங்கள் அவள் அறிக்கைகளுக்குத் தீனி. அவள் எழுதிய…”  

பெயரையும் கட்டுரையின் தலைப்பையும் சொன்னான்.

‘ட்ரூத்-இன்’னில் வெளிவந்த கட்டுரையை அனிகா மேலோட்டமாகப் படித்தாள். சமுதாய உணர்வுடன் ஒருபெண்.

இரண்டாம் பகுதியைப் படிக்க

தொடரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.