தந்திரக்கை – பாகம் 3

This entry is part 3 of 3 in the series தந்திரக் கை

தமிழாக்கம்: மைத்ரேயன்

பாதை மாறுதல்கள் ஏதும் இல்லாமல், திரும்பிப் போகும் பயணம் கவனிக்கத்தக்க விதமாகச் சுருக்கமாக இருந்தது, அவள் முன்பு வந்ததை விடச் சுருக்கம். ஆனால் முன்பு அவள் மிக மெதுவாகத்தான் ஓட்டி இருந்தாள். அவளுடைய மனதில் அதற்குக் காரணம், அவளுக்கு முன்பு எந்தத் திட்டமும் இல்லை, யோசனையும் இல்லை, குறிப்பிட்ட இடமும் இலக்காக இல்லை, துக்கத்தைத் தவிர ஒரு சுமையும் இருக்கவில்லை. இப்போது, சந்தோஷத்தால் உடல் நிரம்பி இருக்க, ஆர்வம் மிக்க காட்சிகளால் மனம் நிரம்பி வழிய- அவர்கள் வாழ்வார்கள், அவர்கள் இருப்பார்கள், என் எலி ஒரு உயிருள்ள மனுஷியாய் இருப்பாள், யாருடைய நினைவாகவோ இருக்க மாட்டாள் – அவள் தன்னில் ஒரு சுயம் இருப்பதைக் கண்டாள், முன்பு அது அந்தப் பழைய காரை ஓட்டுவதாகவோ, அல்லது அது வழி நடத்துவதாகவோ அங்கீகரிக்காமல் இருந்தவள், இப்போது அந்தச் சுயம், அக்ஸிலரேட்டரில் இருக்கும் காலைப் போல, ஸ்டியரிங் சக்கரத்தில் பதிந்த கைகளைப் போல நிச்சயமாக இருப்பதை உணர்ந்தாள். ஒரு முழு நாள் கடந்தது, அதற்கு மேலும் ஆயிற்று, எப்படியோ அவள் சிறிதும் களைப்பாக உணரவில்லை, அது அந்த ஜாலவித்தைக்காரர் செய்ததாக இருக்கலாம் என்று அவள் தீர்மானித்தாள், அதை எதற்கு என்று அவள் கேட்பதாயில்லை. மாறாக அவள் குழந்தைகளுக்குப் பாடும் பழைய பாட்டுகளைப் பாடிக் கொண்டு ஓட்டினாள், ஆலனுக்குப் பிடித்திருந்த, கடலில் மாலுமிகள் வேலை செய்யும்போது பாடும் பழைய பாட்டுகளையும், கில்பர்ட் – சல்லிவன் பாடல்களையும் பாடினாள். இல்லை, பிடித்திருந்த என்று சொல்லக் கூடாது. அவருக்குப் பிடித்திருக்கும், இப்போதும் அவர் விருப்பப்படும், இன்னும் விரும்பிக் கொண்டே இருக்கப் போகும் பாட்டுகள், ஏனெனில் நான் வந்து கொண்டிருக்கிறேன். ஆலன், டாலி, நான் வந்து கொண்டிருக்கிறேன்.

கடைசி சில நூறு மைல்களுக்கு அவள் பல மாநில நெடுஞ்சாலையை விட்டு நீங்கி, கடற்கரைச் சாலைகள் வழியே வீட்டுக்கு ஓட்டிப் போனாள், அவளும் ஆலனும் தங்கள் தேநிலவின் போது போன பாதை அது. கடல் அவளது வலது புறம் தொடர்ந்து வந்தது, பெரும் செம்மரங்களும், ஹெம்லாக் கொடிகளும் இடது புறம் தொடர்ந்தன, இரவு நேரக் காற்றில் உப்பு வாடையும் பைன்ஸாப் புல்லுருவிக் கொடிகளுடைய வாசமும் கலந்து இருந்தது.  புதர்களில் மான்கள் இருந்தன, நரிகள் பதுங்கி ஓடின, ஒரு முள்ளம்பன்றி கூட பம்மிப் பம்மி, டகடகத்த சத்தத்துடன் சாலையைக் கடந்தது. ஒரு முறை மலைச் சிங்கம் ஒன்றைப் பார்த்தாள், அல்லது பார்த்ததாக நினைத்தாள்: நீண்ட வாலுடைய நிழல் இன்னொரு நிழலில் கலந்திருந்தபடி, அவளுடைய நிழல் விரைந்தோடிக் கடப்பதைப் பார்த்திருந்தது. செல்லங்களே! வந்து கொண்டிருக்கிறேன்!

அவள் கல்லூரியில் படிக்கப் போய், திருமணம் செய்து, ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் -அல்லது கட்டுப்பாடுகளுக்கு எந்த விருப்பமும் இல்லாமலும், அதன் பெரும் பகுதியில் ஒரு கட்டுப்பாடும் இல்லாமலும்,  குடும்பவாழ்வில் அமிழ்ந்து போன, அந்த நகரின் முதல் எல்லைப்புற புற நகர்களைக் கடந்தபோது விடிகாலை ஆகி இருந்தது. நகரம் அசைவற்று முன்னே கிடக்கும் நகைகளைப் போல இருந்தது, எப்போதோ ஒரு சமயம் பொலீஸ் சைரன் ஒலியும், தீயணைப்பு வண்டிகளின் ஆரவாரமும், நாய்களை ஓலமிடச் செய்தன. அவள் தன் வீட்டு நிறுத்துமிடத்தில் ப்யூயிக்கை நிறுத்தினாள், வீடு அப்படிக் கைவிடப்பட்டதான, அவாந்தரமான தோற்றம் அளித்ததைக் கண்டு துணுக்குற்றாள். நீ காணாமல் போனபோது, உன்னைத் தொடர்பு கொள்ள ஒரு வழியும் வைக்காதபோது, என்ன ஆகுமென்று நினைத்தாய்?  அவள் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை, ஆனால் அங்கேயே சிறிது நேரம் நின்றாள், ஆலன் அல்லது டாலி வீட்டுக்குள் அசையும் அரவங்கள் கேட்கின்றனவா என்று அபத்தமாகக் காத்திருந்து பார்த்தாள். பிறகு அவள் ஜாலவித்தைக்காரரிடமிருந்து விலகிப் போன மாதிரி அமைதியாக நடந்து விலகிப் போய் விட்டாள்.

ஆறு தெருக்கள், ஆறு தெருக்கள்.  அந்த விபத்து நடந்த குறுக்குச் சாலையைக் கண்டு பிடித்தாள். நடைபாதையின் முனைக் கோணத்தில் நின்றபடி, அங்கே தார் சாலையில் இருந்த கறையை, அவளுடைய வாழ்க்கை முடிந்து போய், இந்த நிழலான மிச்சம் துவங்கிய இடத்தைப் பார்த்தாள். எதிரே குறுக்குப் பாதையின் மறுபக்கம், சிறிய சமூகப் பூங்காவில் ஒளி பரவத் தொடங்கியது, கடல் நீரைப் போல தெளிவான வெளிச்சம். சூடாகத் தொடங்கும் கற்களின் வாசத்தையும், புறநகர் பயணிகளின் காலைச் சிற்றுண்டிகளின் வாசத்தையும் ருசித்தபடி, அவள் அதைக் குடித்தாள். இனி ஒரு போதும் கிட்டாது… எப்போதும் கிட்டாது… அவள் நினைத்தாள். தெருவில் மேலும் கீழும், கார்கள் வீடுகளின் கராஜிலிருந்து பின்னேகி வந்தன. அவற்றை ஒரு வினோதமான புதிய பேராசையோடு தான் பார்ப்பதை அவள் உணர்ந்தாள். ஆலனும், எலியும் இவற்றைப் பார்ப்பார்கள், வீட்டுக்கு மறுபடி வருவார்கள், எதிரே அந்தப் போலி ஏரியில் வாத்துகள் இரவுக்காக வந்து அமர்வதைப் பார்ப்பார்கள். நான் பார்க்க மாட்டேன், இனி ஒரு போதும் பார்க்க மாட்டேன்.

அவ்வளவு சீக்கிரமாகவே, தெருவில் போக்குவரத்து அடர்ந்து வந்தது. ஒரு பஸ் போவதைப் பார்த்தாள், தூரத்தில் இருந்த புது வளர்ச்சிப் பகுதிகளுக்குப் போன பள்ளிக் கூட பஸ் ஒரு சுற்றுச் சுற்றித் திரும்பி வந்து பள்ளிக்கு அருகில் வசிக்கும் டாலியையும், மற்ற குழந்தைகளையும் ஏற்றிக் கொள்ள வரும், அது கடந்து போயிற்று. அவர் இன்னும் இங்கு வரவில்லை, அவள் நினைத்தாள், பைக்குள் இருந்த வெள்ளிக் குதிரையை வருடிக் கொடுத்தாள். நான் ஒரு நாளை,இன்றை எடுத்துக் கொள்வேன் – ஒரு நாள் மட்டும், மறுபடி இவை எல்லாவற்றையும் ருசிப்பதற்காக, நாங்கள் போன எல்லா இடங்களுக்கும் ஒரு முறை சென்று வர, அவற்றை எல்லாம் சேகரித்து என்னோடு எடுத்துப் போக, வருந்தத் தக்க விதத்தில் இருக்கும் அந்த இடத்தில் நான் காலை எடுத்து வைக்குமுன்- நாளைக்குச் செய்யலாமா அதை? என் செல்லங்களுக்கு மற்ற எல்லா நாட்களும் கிட்டும், அவர்கள் வாழ்க்கை பூராவும்… நான் ஒரு நாளை எடுத்துக் கொள்ளக் கூடாதா? நான் நாளை விடிகாலை முதலில் இங்கே வந்து விடுவேன், போய் விடுவதற்குத் தயாராக- அவர்களுக்கு இது தெரிந்தாலும் கூட அவர்கள் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள்தானே? ஒரே ஒரு நாள்.

அவளுக்குப் பின்னேயிருந்து ஜாலவித்தைக்காரர் சொன்னார், “நீ அவர்களுக்காக துயரப்பட்ட மாதிரியே அவர்கள் உனக்காகத் துயரம் கொள்வார்கள். உன் வாழ்க்கை இங்கே முடிந்தது என்று நீ சொல்கிறாய்; அவர்களும் அதேதான் சொல்வார்கள், கொஞ்ச நாட்களுக்காவது.”

திரும்பாமல் அவள் சொன்னாள்,”என்னை நீங்க பேசி மனசை மாத்த முடியாது.”

அவருடைய அடிக்குரல் சிரிப்பு உலர்ந்து இருந்தது. “ஓ, நான் துவக்கத்திலேருந்தே அப்படி இருக்கும்னுதான் நினைச்சேன்.”

அவர் அப்போது திரும்பினாள், அவளுக்கு அடுத்தாற்போல அவர் நிற்பதைப் பார்த்தாள்: மாறாமல் இருந்தார், ஆனால் அவருடைய முதிய, பழைய கண்களில் மென்மையுணர்வு எட்டிப் பார்த்ததை, ஒரு குறுகுறுப்பான அரை இருளை அவள் கண்டாள். அவர் முகம் இரக்கமும் இல்லாமல், அன்பை விலக்கியதாகவும் இல்லாமல், வருங்காலத்தை அறிந்ததில் எந்த வெற்றியுணர்வும் இல்லாமலும் இருந்தது. ஆனால் பார்வையற்ற ஒரு நபரின் அவசரமான கூர்ந்த அவதானிப்பையும் காட்டியது. “அங்கே அவள் இருந்தாள், சென்ட்ரல் பார்க்கின் சிறுமி, அவ்வளவு வேகத்துடன், அத்தனை முனைப்புடன், தன்னந்தனியாகப் போய் சிங்கங்களைப் பார்க்க, சளைக்காமல் நடந்து போனாள். அங்கே நான் இருந்தேன், என்னோட பார்க் பெஞ்சில் அரைத் தூக்கத்தில்- “

“எனக்குப் புரியவே இல்லை,” அவள் சொன்னாள். “ப்ளீஸ். நான் போகிறத்துக்கு முன்னாடி, நீங்க யாருன்னு எனக்குச் சொல்லுங்க.”

“நான் யாருன்னு உனக்குத் தெரியும்.”

“எனக்குத் தெரியல்லியே!”

“உனக்குத் தெரிஞ்சிருந்தது. உனக்குத் தெரியப் போகிறது.”

அவள் அவருக்குப் பதில் சொல்லவில்லை. மௌனமாக, அவர்கள் இருவரும் தங்கள் தலைகளைத் திருப்பி, அந்தத் தெருவின் மறு சாரியில் ஒரு கருப்பின இளைஞர் நடந்து போவதைப் பார்த்தார்கள். அவர் தன் கைகளில் ஒரு சிறு குழந்தையை- ஒரு பையன், அவள் நினைத்தாள் – உயர்த்திப் பிடித்திருந்தார், ஏதோ யாரும் அதற்கு முன் குழந்தை ஒன்றைப் பெற்றதே இல்லை என்பது போல, அவருடைய வட்டமான கருத்த முகம் பெருமிதத்தால் ஒளிர்ந்தது. அந்த இளைஞரும், குழந்தையும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தனர்: குழந்தையின் சிரிப்பு உச்சஸ்தாயியில் கலகலவென்றிருந்தது, அந்த அப்பாவுடையது கிட்டத்தட்ட ஒரு பாட்டு போல ஒலித்தது. இன்னொரு பஸ் ஒரு கணம் அவர்களை மறைத்தது, அது கடந்த போது அவர்கள் முனை திரும்பி விட்டனர், மறைந்தனர்.

ஜாலவித்தைக்காரர் சொன்னார், “நான் நினைக்கறது தப்பில்லைன்னாக்க, உன்னோட உறுதியைத் தாண்டி நீ நினைச்சுகிட்டிருந்தது, உன்னோட பேரத்தை நிறைவேற்றறதை ஒத்திப் போடலாமான்னுதான்.”

”ஒரு நாள்தான்,” அவள் மிருதுவாகச் சொன்னாள். “அவங்க கிட்டே விடை பெறறத்துக்குத்தான். எல்லாத்தையும் விட்டுப் போகிறதுக்கு முன்னாடி, எங்களுக்குக் கிட்டியிருந்த எல்லாத்தையும் பத்தியும், அவங்களைப் பத்தியும் எனக்கே ஒரு தடவை நினைவூட்டிக்கத்தான். அது வந்து… அது சாத்தியமா? அல்லது அது….இந்த மாயத்தை, மந்திரத்தை … உடைச்சுடுமா?”

ஜாலவித்தைக்காரர் உடனே பதிலேதும் சொல்லாமல் அவளைப் பார்த்தார், தான் தன் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருப்பதாக அவள் அறிந்தாள்.

“இது இரண்டுமே இல்லை. இது ஒரு தந்திரம், உன் வசதிக்கேத்தபடி நிறைய காத்துகிட்டு இருக்கக் கூடியதும் இல்லே.”அவருடைய முகத்தில் சிறிதும் வளைந்து கொடுக்கும் உணர்ச்சி இல்லை.

“ஓ,” அவள் சொன்னாள். “சரி. அது நன்றாக இருந்திருக்கும், ஆனால் என்ன- எல்லாத்தையும் நாம அடைய முடியாது. நன்றி, உங்க கிட்ட மறுபடி விடை பெற்றுக்கறேன்.”

அவள் அந்தக் காலை நேரத்து போக்குவரத்து முழுதும் ஓயக் காத்திருந்தாள். பிறகு வேண்டுமென்று, ஒரு தயக்கமும் இல்லாமல், அவள் தெருவுக்குள் முன்னே போனாள். அவள் மேலும் முன்னேற இருந்த போது ஜால வித்தைக்காரரின் குரலைப் பின்னாலிருந்து கேட்டாள். “சூரியாஸ்தமனம். என்னால அதிகபட்சம் அவ்வளவுதான் செய்ய முடியும்.”

அவள் சுழன்று திரும்பினாள், அவள் முகம் ஒரு குழந்தையின் முகம் போல, விடுமுறை கிட்டியதால் ஏற்பட்ட ஒளியோடு காணப்பட்டது. “தாங்க் யூ! நான் சரியான நேரத்துல வந்துடுவேன், சத்தியமாச் சொல்றேன். ஓ, தாங்க் யூ!”

அவள் மறுபடி திரும்புமுன், வேறொரு குரலில் ஜாலவித்தைக்காரர் தொடர்ந்தார், “எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கு.” அவர் முகபாவத்தில் மாறுதல் இல்லை, ஆனால் குரல் மிக இளமையான மனிதனின் குரலாகக் கேட்டது, கிட்டத்தட்ட ஒரு பையனின் குரலாக ஒலித்தது. “எனக்கு இதைக் கேட்க உரிமை ஏதும் இல்லை, உன்னிடம் எனக்கு எந்த பாத்தியதையும் இல்லை-ஆனால் இந்தச் சில மணிகளை உன் கூடக் கழிக்க அனுமதித்தால் நான் தனிச் சலுகை பெற்றவனாக உணர்வேன்.” விக்டோரிய ராணி காலத்தில் ஒரு பெண்ணை தேநீர் அருந்த அழைக்கும் தடுமாற்றம் நிறைந்த இளைஞனைப் போல அவர் தெரிந்தார்.

அவள் அவரை உற்றுப் பார்த்தாள், அவருடைய முகபாவத்தைப் போலவே அவளுடைய முகபாவமும் இன்னதென்று சொல்ல முடியாததாக இருந்தது. நீண்ட கணத்துக்குப் பிறகு இறுதியாக அவள் ஆமோதிப்பில் தலையசைத்தாள், அவரை அழைத்தபடி சொன்னாள், “அப்ப வாங்க- இருக்கற நேரம் ரொம்பக் குறைவு. சடுதியா வாங்க!”

அவரும் கூட இருந்ததாலா அல்லது அது காரணம் இல்லையா என்று சொல்ல முடியவில்லை, ஆனால் அங்கே நிறைய நேரம் இருந்தது. அவள் அந்த ப்யூயிக்கை மறுபடி வெளியே எடுத்தாள், மலைகளின் மேல் பகுதியை நொக்கி ஓட்டிச் சென்றாள், விடிகாலையின் மிச்ச நேரம் நகரத்தின் மீது தன் விளையாட்டைத் தொடர்வதைப் பார்த்தாள், அப்போது தன் வாழ்வின் கதைகளை அவருக்குச் சொன்னாள். பிறகு அந்த சமூக விளையாட்டுத் தடலில் இளங்காலையில் வந்திருக்கும் நர்ஸரிப் பள்ளிக் குழந்தைகளோடும், அவர்களின் பெற்றோர்களோடும் அவர்கள் சேர்ந்து கொண்டார்கள். அவள் பரிவோடு பேசிய தன் நண்பர்களிடம், அவரை ஆலனின் குடும்பத்தைச் சேர்ந்த மாமன் ஒருவர் வந்திருப்பதாக அறிமுகம் செய்தாள், அவர்கள் தன்னிடம் எதிர்பார்க்கக் கூடிய  அடங்கிய சோகத்தைக் காட்டுபவளாக பாவனை செய்தாள்; ஜாலவித்தைக்காரர் குழந்தைகளுடன் ஒரு குட்டி ரயிலில் பயணம் செய்ய முயல்கையில், இருக்கையில் அமர, தன் முழங்கால்களை மடித்த போது அவை அவர் காதுவரை இருந்ததைப் பார்த்துச் சிரித்து வைக்கவிருந்தாள், சிரித்திருந்தால் அவளுடைய நாடகம் வெளியாகி இருக்கும். அதன் பிறகு அவரை தன் வீட்டருகே நெடுஞ்சாலைக்கு எதிரே இருந்த பொட்டைத் தடல் ஒன்றுக்கு அழைத்து வந்தாள், அங்கே இருந்த உணவு வங்கி ஒன்றில் அவள் வாரத்துக்கு இரண்டு நாட்கள் வேலை செய்திருந்தாள், அங்கே ஒரு கருப்பின பாப்டிஸ்ட் மூதாட்டி அவளை முரட்டு வாத்ஸல்யத்துடன் வரவேற்று அணைத்துக் கொண்டு, அவளுக்கு எச்சரிக்கை விடுத்தார், அவள் இத்தனை சீக்கிரம் வேலைக்குத் திரும்பத் தேவை இல்லை என்றார், ஆனால் அவளுக்கு முடிகிறது என்றால், சரி, நாளைக்கு இன்றை விட அதிகம் வேலை இருக்கப் போகிறது, இறைவனுக்குத் தெரியும், அன்று அவர்களுக்குக் கூடுதலாக ஒரு நபர் வேலைக்குத் தேவை என்று சொன்னார். ஜாலவித்தைக்காரர் அவளுடைய கண்களில் குற்ற உணர்வும், வருத்தமும் கலந்த ஒரு மின்வெட்டைப் பார்த்தார், ஆனால் வேறு யாரும் கவனிக்கவில்லை. அவள் தாமதம் செய்யாமல் வருவதாக உறுதி கொடுத்தாள்.

போதுமான நேரம் இருந்தது. அவர்கள் காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, வளைகுடாவை ஒரு பயணக் கப்பலில் கடந்தனர், ஆலனை அவள் முதலில் சந்தித்த ஒரு தீவுக்குப் போனாள், அவர்கள் இருவரும் ஒரு முகாமுக்கு வற்புறுத்தி அழைத்து வரப்பட்டிருந்தனர், அதே தீவில் டாலி பிறந்தபின் அவளும், ஆலனும், டாலியும் ஒரு பிக்னிக்கிற்குப் போயிருந்தனர். அங்கு ஆலன் அவர்களுடைய மகளுக்குத் தண்ணீர் மீதிருந்த அச்சத்தை எப்படிப் போக்கினார், அதற்காக அவளைத் தன் முதுகின் மீது நேராக அமர்ந்து அவள் இப்போது ஒரு டால்ஃபினின் மீது சவாரி போவதாக எப்படிப் பாவனை செய்ய வைத்தார் என்பதை எல்லாம் அவரிடம் தான் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதாக அவள் உணர்ந்தாள். “அவள் இப்போது அதிசயமான நீச்சல்காரியாகி விட்டாள், எலியை நீங்க இப்போ பார்க்கணும். அதாவது நீங்க பார்க்கப் போறீங்க – ஆனா எப்படியுமே நீங்க அவளைப் பார்க்க முடியும். நான் பார்க்க முடியாது, ஆனால் நீங்க பார்க்க விரும்பினால்….” அவளுடைய குரல் தேய்ந்து மிதந்து போனது, ஜாலவித்தைக்காரர் பதில் சொல்லாமல் அவளது கையைத் தொட்டார்.

“நாம கடிகாரத்தைக் கவனிக்கணும்,” அவள் சொன்னாள். “என்னோட சாவை நான் தவற விட்டுட நான் விரும்பல்லை.” அது ஒரு ஜோக் என்று சொல்லப்பட்டது, ஆனால் அவர் சிரிக்கவில்லை.

போதுமான நேரம் இருந்தது. அவளுடைய உஷார் தன்மை சூரிய அஸ்தமனத்துக்கு மிக முன்னாலேயே அவர்களை வீட்டுக்குத் திரும்பி வரச் செய்தது. அதற்கு முன்பு, அவள் குடும்பத்தின் அபிமான ஐஸ்க்ரீம் கடையில் கோன் ஐஸ்க்ரீம் வாங்கச் சென்றார்கள். காஃபி ஐஸ்க்ரீம் அவளுக்கு- “ரெண்டு ஸ்கூப், இனிமே என்ன போச்சு?” – பிறகு நிறைய யோசனைக்குப் பிறகு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் ஜால வித்தைக்காரருக்கு. வீட்டுடைய முன் கதவை அடைந்த போது அவர்கள் இன்னமும் அவற்றைச் சுவைத்துக் கொண்டிருந்தனர்.

“கடவுளே, நான் காஃபியை இழந்ததுக்கு வருந்தப் போறேன்,” என்றாள் அவள், கனவு காண்பவள் போலிருந்தாள்; பிறகு சிரித்தாள். “ஆமாம் இல்லை, நான் வருந்த மாட்டேனில்லையா, இல்லை வருந்துவேனா? அதாவது நான் வருந்துவேனா இல்லையான்னு எனக்குத் தெரியப் போறதில்லை என்ன சொன்னாலும்.” அவள் அருகிலிருந்த ஜாலவித்தைக்காரரை துருவி நோக்கினாள். “இதுக்கு முன்னாடி ஒரு ஐஸ்க்ரீம் கோனை நீங்க சாப்பிட்டதே இல்லைதானே?”

ஜாலவித்தைக்காரர் மிக உண்மையாக ஒத்துக் கொண்டார். அவருடைய கோன் ஐஸ்க்ரீமை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டாள், அதன் ஓரங்களைக் கவனமாக நக்கினாள், அது எல்லாப் புறமும் சீராக ஆகும்வரை அப்படிச் செய்தாள்; பிறகு அவரிடம் திருப்பிக் கொடுத்தாள், தன்னுடைய காகித கைக்குட்டையையும் கொடுத்தாள். “நாம உள்ளே போறத்துக்கு முன்னாடி இதை முடிச்சுடணும். வாங்க.” தன்னுடைய ஐஸ்க்ரீமை முழுதும் தீர்க்கும் வரை அதில் கவனம் செலுத்தினாள், சூரியன் கீழிறங்கும் வேகத்தோடு ஒத்துப் போகும் வேகத்தில் அதைத் தின்று தீர்த்தாள்.

அவள் முடித்ததும், சாவியைக் கொண்டு கதவைத் திறந்தாள், உள்ளே நுழைந்தாள். முதல் கூடத்தில் பாதி தூரம் கடந்தபின், புழங்கும் அறையைச் சேரவிருந்தாள், ஜாலவித்தைக்காரர் தன்னோடு உள்ளே வரவில்லை என்பதை உணர்ந்து திரும்பினாள்.

“ஹேய்,” அவரை விளித்தாள். “நீங்க உள்ளே வரல்லையா?”

“இந்த நாளுக்காக உனக்கு நன்றி சொல்றேன், ஆனால் இந்தக் கணம் முழுக்க உன்னோடதா இருக்கணும். நான் வெளியே காத்திருக்கிறேன். நீ அவசரப்பட வேண்டாம்,” அவர் சொன்னார், ஆகாயத்தைப் பார்த்தார். “அதுக்காக ரொம்ப தாமசப்படுத்தாமலும் இரு.”

அதோடு அவர் கதவை மூடினார், அந்த வீட்டையும், அதன் நினைவுகளையும் அவளுக்கென்று விட்டவராக.

அரை மணி கழித்து, ஆறு தெருக்களைத் தாண்டி, நடைபாதையில் அவருக்குச் சிறிது பின்னால் அவள் நின்றாள், தெருச் சந்திப்பைக் கவனித்துப் பார்த்தாள். அவர் தன் கையை நீட்டவில்லை, ஆனால் அவள் அதைத் தன் இரு கரங்களில் பற்றி உயர்த்தினாள். “நீங்க ரொம்பக் கனிவானவர்.”

அவர் தன் தலையை வருத்தத்தோடு அசைத்தார். “நீ நினைக்கறத்தை விடக் குறைவாகத்தான் இருக்கேன். நான் விருப்பப்படறதை விட ரொம்பக் குறைச்சுத்தான் செய்ய முடியறது.”

“சும்மா சொல்லாதீங்க,” அவளுடைய குரல் அவர் சொன்னதை விலக்கியது, ஆனால் அதை ஒரு அடங்கிய சிரிப்போடு மட்டாகச் செய்தது. “நீங்க எனக்காகக் காத்திருந்தீங்க. நீங்களே சொன்னீங்க. நான் எங்கே ஓட்டிக் கொண்டு போயிருந்தாலும் உங்களைச் சந்திச்சிருப்பேன் இல்லையா? சந்திச்சிருப்பேன் தானே? நான் தெற்கால போய் மெக்ஸிகோ போயிருந்தா, அல்லது ப்ளேன் பிடிச்சு ஹானலூலுவுக்கோ, யூரோப்புக்கோ போயிருந்தா, முன்னப் பின்ன, நீங்க சொல்றதைக் கேட்க நான் தயாராக இருக்கும்போது, இந்த பேரத்தை நான் ஏற்கத் தயாராக இருக்கும்போது, டின்னர் மாஜிக்னு போர்டு இருக்கற ஒரு ரெஸ்ட்ராண்டுக்குள்ளே நான் நுழைஞ்சிருப்பேன். சரிதானே?”

“முழுக்க அப்படி இல்லை. நீ போகக் கூடிய திசையிலெதான் நீ போனே, நான் அங்கேதான் உன்னைச் சந்திச்சிருக்க முடியும். ஒவ்வொரு விஷயமும் இருக்கு, இருக்கும், அது எப்பவும் அந்த மாதிரியெ இருந்திருந்தது. நான் அதை முன்னேயே சொல்லியிருக்கேன்.”

“நான் அதையெல்லாம் கவனிக்கப் போறதில்ல. நான் இன்னும் நன்றியோடத்தான் இருக்கேன். நான் இன்னமும் தாங்க்ஸ்தான் சொல்ல விரும்பறேன்.”

ஜாலவித்தைக்காரர் மெல்லச் சொன்னார், “இரு, போகாதே.”

அவள் தலையை அசைத்து மறுத்தாள், “உங்களுக்கே தெரியும், நான் இருக்க முடியாது.”

“இந்தத் தந்திரம்… இந்த திசை மாற்றம்… அது என்ன கொண்டுவரும்னு என்னால் உனக்கு உறுதி கொடுக்க முடியாது. உன்னோட கணவரும், மகளும் உசிரோட இருப்பாங்க, ஆனால் எத்தனை காலம்ன்னு யாருக்கும் தெரியாது. அவங்க நாளைக்கே இன்னொரு முட்டாள், தூங்குமூச்சி ட்ரைவரால கொல்லப்படலாம் – ஒரு விஷக்கிருமி, ஒரு ப்ளேன் விபத்து, துப்பாக்கி வச்சிருக்கற ஒரு பைத்தியம் எதாலயோ கொல்லப்படலாம். அவங்களுக்காக நீ என்ன இப்பொ விட்டுக் கொடுக்கறயோ அது முழுக்க வியர்த்தமாக, பொருளே இல்லாததாக அடுத்த சூரிய உதயத்துக்குள்ளேயே ஆகி விடலாம். இரு- உன்னோட இந்தக் கணத்தின் தேர்வை, உன்னோட சக்திக்குள்ள இருக்கற வாய்ப்பை வீணாக்காதே. இரு.”

அவர் அவளைத் தொடக் கை நீட்டினார், ஆனால் அவள் நகர்ந்து பின்னே போனாள், தெருவுக்குள் திடீரென்று இறங்கி இருந்தாள், அதனால் ஒரு காரோட்டி அவளை நோக்கி ஆத்திரத்துடன் தன் ஹார்னை முழக்கிக் கொண்டு வேகமாக ஓட்டிக் கடந்தார். அவள் சொன்னாள், “நீங்க சொல்றது எல்லாம் முழுக்க உண்மைதான், ஆனால் அது எதுவும் இப்பொ ஒரு பொருட்டில்லை. என்னால அவங்களுக்கு ஒரே ஒரு வினாடிதான் கூடுதலாத் தர முடியும்னாலும், நான் அதைக் கொடுப்பேன்.”

அந்தக் கிழவரின் முகம் மிருதுவானது. “ஆ, நீ நான் எப்படி உன்னை நினைவு வச்சிருந்தேனோ, அப்படியே இருக்கே. அப்படின்னா சரி. நான் உனக்கு ஒரு தேர்வைக் கொடுக்க வேண்டும். நீ பாசத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய், எனக்கு அதில் ஒரு குறையும் இல்லை, இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. இந்தக் கணத்தில் நீதான் தந்திரவாதி, நான் இல்லை.”

“அப்படீன்னா சரி. இதை நாம செய்யலாம்.”

பசுமையான தொடுவானில், பெரிய சிவப்புச் சூரியன் தன் நுனிவிரல்களில் நடனமாடினான், ஆனால் அவள் அந்த ஜாலவித்தைக்காரர் தலையசைக்கும் வரை காத்திருந்து விட்டு, சாலைச் சந்திப்பை நோக்கி நடந்து போனாள். போக்குவரத்து அத்தனை கூடி இருந்ததால் அவளால் ஆலனும் டாலியும் இறந்த இடத்தின் கறையை நோக்கி நடந்து போக வழியே கிடைக்கவில்லை. ஜாலவித்தைக்காரர் தன் கைகளை உயர்த்தினார், ஒரு மொத்த சாரியும் திறந்து கொண்டது, கார்களும், ட்ரைவர்களும் இருந்த இடத்தில் அப்படியே உறைந்தனர், அவள் போக வேண்டிய இடத்துக்குத் திறந்த வழி கிட்டியது. தன் தோளுக்குப் பின்னே நோக்கி அவள், “தாங்க்யூ,” என்றாள், முன்னே எட்டு எடுத்து வைத்தாள்.

அந்தச் சிறு பெண் தன் தலையை அசைத்துத் தெளிவாக்கிக் கொண்டாள், தன்னைச் சுற்றி நோக்கினாள். அவள் பார்த்தது அவளுக்குக் குழப்பம் உண்டாக்கியது. அந்தப் பூங்காவில் அந்தக் கிழவரைத் தவிர வேறு யாரெனும் இருந்திருந்தால், அந்தப் பெண் நின்று தன் சூழலை நோக்கிய விதத்தில் இருந்த வளர்ந்த பெண்ணின் பாவனையைப் பார்த்துக் கொஞ்சம் வியந்திருப்பார்கள்.

“ஹலோ,” அந்த ஜாலவித்தைக்காரர் அவளிடம் சொன்னார்.

”நான் எதிர்பார்த்தது இதில்லை.”

“இல்லைதான். பார்வையாளர்கள் ஒரு பெண் இரண்டாக வெட்டப்படுவதைப் பார்க்கிறாங்க, ஆனா அந்த மாஜிக் பெட்டிக்குள்ள ரெண்டு வெவ்வேறு பகுதிங்கள்லெ கவனமாக மடிச்சு வச்சிருக்கிற ரெண்டு பெண்கள் அதையே ரொம்ப வேற விதமாக அனுபவிக்கிறாங்க. நீ இப்ப ஒரு தந்திரத்தின் நடுவில் இருக்கே, அதனால நீ எதிர்பார்த்ததை விட நடந்ததெல்லாம் வேறாக இருக்கிறதா உனக்குத் தெரியும். முன்னாடியே அது எப்படி நடக்கும்னு ஊகம் பண்ண முடிஞ்சா அதை மாஜிக்னு எப்படிச் சொல்ல முடியும்?”

அவள் தன் சிறு கைகளை ஆச்சரியத்தோடு பார்த்தாள், குனிந்து தன் குள்ளமான கால்களையும், கைகளையும் பார்த்தாள். “எனக்கு நிசம்மாவே புரியல்ல. நீங்க நான் செத்துடுவேன்னு சொன்னீங்க இல்ல?”

“நீ சாகத்தான் போறே, ஒரு குறிப்பிட்ட நாள்லெ, அதுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்துல போவே. அப்ப நீ உன் கணவரை உன் கார்லெ ஆயில் சேஞ்ச் செய்யற வேலையைப் பார்த்துத் தரச் சொல்வே, ஆனா முடிவை மாத்திகிட்டு- ஒரு மின்னற வினாடியில, ஏன்னு உனக்குத் தெரியாமலே – அவருக்குப் பதிலா நீயே இந்த சுலபமான வேலையைச் செய்யணும்னு தீர்மானிப்பே.” அவர் பெரிய அளவில் சோகமாகக் காட்சியளித்தார், இதைச் சொல்கையில். “நீ இப்ப சாவே, ஆனா வேற விதமா, ஏன்னா ஆழமா உனக்குள்ள புதைக்கப்பட்ட அந்த மின்னற வினாடியோட நினைவை மட்டும்தான் நீ வச்சுக்கலாம். இந்த நாளையோ, நான் உனக்குக் கொடுத்த பரிசுகளையோ அல்லது என்னையோ நீ நினைவுல வச்சிருக்க முடியாது. இல்லைன்னா இந்தத் தந்திரம் வேலை செய்யாது. சாவுக்கு புத்தி கூர்மையா இல்லாம இருக்கலாம், ஆனால் அவர் முட்டாளும் இல்லை- எல்லா சீட்டுங்களும் கட்டுக்குள்ளெ போகத்தான் வேணும், இல்லைன்னா அவர் கவனிச்சுடுவார். நானும் நீயும், நமக்குள்ளே, ஒரு சீட்டை லேசா குறிச்சு வச்சோம்னா… அது கவனிக்கப்படாம போயிடும். ரொம்ப நெருக்கியடிச்சுத்தான் போகும்.”

அவர் பேசுவதை நிறுத்தினார், கொஞ்ச நேரம் அந்தச் சிறுமியில் இருந்த பெண்ணுக்கு, கரிய மரத்துக்குள் பார்ப்பதுபோல அவர் முகத்தைக் கடைசித் தடவையாகப் பார்க்கையில், அவர் இனிமேல் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார் என்று தோன்றியது. அப்போது அவர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டார். “நான் அத்தனை கனிவுள்ளவன் இல்லை என்று சொன்னேனே.”

அவள் கண்கள் மின்னுகையில், அவள் கை நீட்டி அவருடைய கன்னத்தைத் தொட்டாள். “வேறு யாரும் இதை விட அன்பாக இருந்திருக்க முடியாது. நீங்க என்னோட விருப்பத்தைக் கொடுத்ததோட இல்லாமல், நான் அவர்களை மறுபடி பார்ப்பேன்னும் சொல்றீங்க. நான் ஆலனை மறுபடி பார்ப்பேன், அவரைக் காதலிக்க ஆரம்பிப்பேன், என் குட்டி எலியை என் கைகளில் எடுத்துக் கொள்வேன், எல்லாம் முன்னெ மாதிரியே. அதைத்தான் நீங்க சொல்றீங்க இல்லையா?”

அவர் தன் இரு கைகளை அகல விரித்தார், தன் கோலமான விரல்களைக் குவித்து சூரியனை அவற்றிடையே பிடித்தார். “சென்ட்ரல் பார்க்கில் இருக்கும் அந்தக் குழந்தை நீ, சிங்கங்களைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கெ. நானோ ஒரு கிழவன், பெஞ்சில பாதித் தூக்கத்தில இருக்கேன்….இந்த இடத்திலேர்ந்து உலகம் முன்னெ எப்படி இருந்ததோ அப்படியே போகிறது, ஒண்ணே ஒண்ணு, இன்னிலேர்ந்து நிறைய நாட்கள் கழிச்சு, அது அத்தனை பெரிய விஷயம் இல்லை அதைப் பத்திப் பேசறதுக்கு, கொஞ்சம் வித்தியாசமா ஆகும். உன்னோட பையில பாரு, குழந்தெ.”

அவள் தன் டெனிம் ஓவரால்களின் பைக்குள் கையை விட்டாள், பிறகு, அவளுடைய நான்கு வயதுச் சிறுமியின் கை அந்த வெள்ளிக் குதிரை உருவைப் பற்றிய போது, சிரித்தாள். அதை வெளியே எடுத்தாள், அவருக்கு ஒரு மிட்டாய் தருவது போல அதைக் கொடுக்க நீட்டினாள்.

“நீங்க யாருன்னு எனக்குத் தெரியல்லை, ஆனா நீங்க என்னன்னு எனக்குத் தெரியும். நீங்க ஏதோ ரொம்ப நல்ல விஷயம்.”

“உளறல்,” என்றார் அவர், ஆனால் அவர் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் என்று அவளால் பார்க்க முடிந்தது. ”இப்ப….” ஜாலவித்தைக்காரர் தன் பெரிய, கோடுகள் நிறைந்த கைகளால் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார், ஒரு முறை அவற்றை மெதுவாக அழுத்தினார், பிறகு சொன்னார் “மற.” அவர் கைகளை எடுத்த போது வெள்ளிக் குதிரை காணாமல் போயிருந்தது.

அந்தச் சிறுமி பசும் புல்லின் மீது நின்று கொண்டிருந்தாள், கண்களை மூடியபடி நின்ற கிழவரை நிமிர்ந்து பார்த்தாள். அவர் அவளிடம் பேசினார், “இப்ப நீ எங்கே போகிறே, நான் அதைக் கேட்கலாமில்லையா?”

“நான் சிங்கத்தை எல்லாம் பார்க்கப் போறேன்,” அவள் அவரிடம் சொன்னாள். “அப்புற ட்ராஃப்ங்களை. ட்ராஃபுங்க ரொம்ப பிரமாதமான மிருகங்க.”

“நிச்சயமா அதுங்க அப்படிப்பட்டவைதான்,” கிழவர் ஒத்துக் கொண்டார், தன் தலையைக் கீழே குனிந்து அவளைப் பார்த்தார். அவர் அவற்றைத் திறந்தபோது, அந்தக் கண்கள் அவள் அதுவரை பார்த்தவற்றிலேயே மிகவும் நீலமாக இருந்தன.

***குறிப்பு: கடல் மாலுமிகள் வேலை செய்வதில் களைப்பு ஏற்படாமல் இருக்கவும், கூட்டாக உழைக்க வேண்டும்போது செயலில் ஒரு இசைவு ஏற்படவும் பயன்படுத்தும் பாடல்களை இங்கிலிஷில் Sea Chanteys என்று அழைக்கிறார்கள். இங்கே சில இங்கிலிஷ் பாட்டுகளைக் கேட்கலாம்: https://www.youtube.com/watch?v=-CuyLbC2TZo

Series Navigation<< தந்திரக் கை – 2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.