ஓநாய் பிரியாணி – குறுங்காவியம்

1. கடவுள் என்பது சாத்தானின் மறு பெயர்

தேச விரோதம் சிலருக்கு மத சேவை
மானுட விரோதம் சிலருக்குக் கடவுள் சேவை
கடவுள் என்பது சாத்தானின் மறு பெயர்
மதமும் அரசியலும்
உங்களை விலைக்கு வாங்கும் நாணயத்தின் இரு பக்கங்கள்
ஓநாய் மனிதர்களின் கைகளில் வேத நூல்
மேய்ப்பர்களின் கைகளில் கசாப்புக் கத்தி
இரண்டிலிருந்தும் தப்ப முடியாத மந்தைகளுக்கு
மெசஞ்சரில் பரவெளிச் செய்தி வருகிறது
உங்களின் ரத்த ஆறுகள் சொர்க்கத்தில் சங்கமிக்கின்றன
கடவுள் 39 செவ்விதயங்களால்
லைக் போட்டுக்கொண்டிருக்கிறார்


ஓநாய் மனிதர்களின் புராணம்

(1)
இறந்த பின்னும் நடமாடிக்கொண்டிருக்கும் ஓநாய் மனிதர்கள்
ஆயிரத்தாண்டுகளாக ஆண்டுகொண்டிருக்கிறார்கள்
வாழும் பிணங்களான
ஆட்டு மனிதர்களின் உலகத்தை
கடவுளின் அங்கீகாரமும் சர்வாதிகாரமும் பெற்ற
உலக ரட்சகன் நான் (மட்டுமே)
என்பதை வெவ்வேறு விதமாகச் சொல்கிற
ஒவ்வொரு ஓநாய் மனிதனுக்கும் பின்னால்
அவனை நம்பும் ஆட்டு மனித மந்தைகள்
கரும்புத் தோட்டத்துக் குள்ள நரிக்கூட்டம்
நிலா ராத்திரிகளில் இடும் உற்சாக ஊளை போல
இப்போது இரவு பகல் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது
ஓநாய் மனிதர்களால் கடிக்கப்பட்டு மசை பிடித்துவிட்ட
ஆட்டு மனித மந்தைகளின் வெறியூளை
மனித ரத்தம் சதைத் துணுக்குகளோடு வழியும் வாயிலிருந்து

(2)
கடவுள் வேட்டை ஓநாய் மனிதர்களுக்குப் பிடித்தமானது

இரை விலங்குகளையும் மனிதர்களையும் வேட்டையாடிக் கொல்வது
பசிக்காகவும் பொழுதுபோக்குக்காகவும்தானே தவிர
அதில் சவால் எதுவும் இல்லை
கடவுள்களை வேட்டையாடிக் கொல்வதில்தான்
சாத்தான் அசுரர் துர்மாந்தரீகர்கள் போன்ற வல்லமை உணரப்பட்டு
அகந்தை நிறைவுறுகிறது

கடவுள்கள் தமது சாயலிலேயே ஓநாய்களைப் படைத்தது மாதவறு
அதனால்தான் ஓநாய் மனிதர்களுக்குக் கடவுளாகும் ஆசை
அல்லது கடவுள்களைத் தீர்த்துக்கட்டிவிட்டு
அவர்களின் நாற்காலியைக் கைப்பற்றும் மோகம்

கடவுளுக்கு முன் பிறந்த பழங்குடிக் கூட்டங்களையும்
அவர்களின் சாம்பல் நிற ஓநாய் சிறு தெய்வங்களையும்
வேட்டையாடிக் கொன்ற ஓநாய் மனிதர்கள்
அருகிவரும் இனமான செந்நாய்ப் பெருந்தெய்வங்களை
கண்ணி வைத்து உயிரோடு பிடித்து வந்து
சங்கிலியால் கட்டிவைத்து
தமது கட்டளைகளை வாலாட்டியபடி நிறைவேற்றும்
வளர்ப்பு மிருகங்களாக வளர்த்தினர்
பிறகு அவற்றையும் கடித்து
ரத்த வெறி மிக்க கொடூர மசை ஓநாய்களாக மாற்றினர்

ஓநாய்க் கடவுள்கள் உருவான புராணம் இதுதான்


3. ஓநாய் பிரியாணி

ஓநாய்கள் தாவர பட்சிணிகள்
புற்களையும் இலை தழைகளையும் மட்டுமே
தின்று வாழும் அவை
பூக்களைத் தேனுண்ணிகளுக்கும்
பழங்களைப் பழந்தின்னிகளுக்கும்
கிழங்குகளைக் கிழங்குதின்னிகளுக்கும் விட்டுவைக்கும்
நிலாகிரகணத் திருநாளில் அவ்வுணவு வகையறாக்களை
அந்தந்தத் தின்னி வகையறாக்களுக்கு தானமளிக்கவும் செய்யும்

ஓநாய்கள் மிருக நேயம் மிக்கவை
சக விலங்குகள் பறவைகள் பிராணிகள்
புழு பூச்சிகள் ஆகியவற்றோடு
எல்லையற்ற அன்பும் கட்டுக்கடங்காத பாசமும் கொண்டவை
தம் உதிரம் குடித்து வாழும் ஒட்டுயிரிகளான
உண்ணி தெனாசு சொள்ளை ஆகியவற்றைக் கூட
ஓநாய்கள் ஒருபோதும் கொல்லவோ
வாலால் அடித்து விரட்டவோ செய்யாது
அவ்வளவு அதி தியாகச் செம்மல்கள் அவை

கொடூர வன்மிருகங்களான ஆடுகள்
மூர்க்கத்தோடும் வெறியோடும் வெகாறியோடும் வந்து
அப்பிராணிகளான ஓநாய்களை
வேட்டையாடிக் கொன்று வயிறுமுட்டத் தின்னும்

வளர்பிறையில் ஓநாய்களின் நல்லி எலும்பு தின்பது
செம்மறிக் கிடாய்களின் ஆண்மையையும்
தேய்பிறையில் ஓநாய்களின் ரத்தம் குடிப்பது
வெள்ளாடுகளின் பால் சுரப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்பதால்
அக் காலங்களில் அது அவற்றுக்குக் களிவிருந்து
வரையாடுகளோ
நிலாக் காலங்களில் ஓநாய்களைக் கூட்ட வன்புணர்ச்சி செய்து
அதன் பின் அவற்றை வலியறியாது கொன்று
பிரியாணி சமைத்துப் பெருவிருந்துண்ணும்

அப்போது ஆட்டு வகையறா மந்தைகள் இடுகிற
வெறியாட்ட ஊளையின் அதிர்வில்
நிலா பாளங்கள் வெடித்து விரிசலுறும் என்றும் சொல்லப்படுகிறது
ஓநாய்களின் கூட்டத்தில்


4. உடையாத ஆன்மாக்கள்

வளைந்து கொடுக்கக் கூடிய
ஆனால், உடையாத ஆன்மாக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை
நான் சபிக்கட்டவன்
எனது ஆன்மா வளைவதுமில்லை; உடைவதுமில்லை

மீண்டும் மீண்டும் சமவெளிக்கு உருண்டு வந்துவிடக்கூடிய
கோளப் பாறையை
மீண்டும் மீண்டும்
மலையுச்சிக்கு உருட்டிச் சென்றுகொண்டேயிருக்கிறான் சிசிபஸ்
சலிக்காமல் பேருவகையோடு
அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்
அதையே செய்யும் நான் சபிக்கப்பட்டவன்

இன்றைய சூரியனை
வான அரைக்கோளத்தில் உருட்டி அஸ்தமிக்க வைத்துவிட்டு
பச்சைத் தேநீரை அருந்தியபடி
தொ.கா. செய்தி பார்த்துக்கொண்டிருக்கிறேன்

ஊழல் எம்.எல்.ஏ., அமைச்சராகிவிட்டார்
லஞ்ச அதிகாரிக்குப் பதவி உயர்வு
கொலைக் குற்றக் காவலர்களுக்கு விருதுடன் பணியிடமாற்றம்
ஜாதிக் கலவரத்தில் 5 பேர் பலி 17 பேர் படுகாயம்
நீதிபதிக்கு மத அமைப்பினர் கொலை மிரட்டல்
இதற்கிடையே
அடிமைத்தனம் எங்கள் பிறப்புரிமை என
முஷ்டி உயர்த்தி வீறாவேசமாக முழங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு பெருங்கூட்டம்

நான் என்பது உங்களில் சிலரும்தான் என்பது
ஆறுதலுக்குரியதா வருத்தத்துக்குரியதா


5.ஓநாய்கள் சந்திரனில் ஊளையிடுகின்றன

காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழக்கி
வீட்டு நாயாக்கிய மானுடவியல் எனக்கும் தெரியும்
ஓநாயை செல்லப் பிராணியாக வளர்க்க விரும்பும் உங்களுக்கு
சந்திரனில் அவை ஊளையிடும் என்பது தெரியுமா

மூதாதை ஓநாய்களின் ஆவிகள் சந்திரனில் ஊளையிடுகின்றன
உயிருள்ள நாய் நரி ஓநாய்கள்
பூமியில் நிலாக் காலங்களில் ஊளையிடுவது போல

பூமியிலுள்ள ஓநாய்களுக்கும் ஊளையிடுவது கடமை
மலையுச்சி அடர்வனம் அல்லது பாலைவெளியில்
முழு நிலவின் கீழ் வெறியூளையிடுகின்றன அவை
புனிதச் சடங்காக

ஓநாய் நிலவு எனப்படுகிற ஜனவரி முழுநிலவும்
13-ஆம் நிலவான நீல நிலவும்
ஓநாய்களின் பெருந்திரு நாட்கள்
அன்று ஓநாய்களோடும் அவற்றின் ஆவிகளோடும் சேர்ந்து
மூளைதின்னி நிலவும் மீயொலியில் ஊளையிடும் வானதிர

நிலவீர்ப்புவிசையால் மூளைச் சலவை செய்யப்படுபவை ஓநாய்கள்
அது ஆழ்மனதின் மேய்ச்சல்வெளியும் கூட என்பதால்
ஓநாய்கள் உங்கள் கனவுகளில் தோன்றலாம்
அவற்றின் பொருள் என்ன என்பது எனக்குத் தெரியாது
கனவு தின்னி ஆடுகளுக்குத்தான் தெரியும்


6. காடாளும் ஓநாய்கள்

சர்க்கஸில் நீங்கள் பார்க்கலாம்
மனித மூதாதைகள் முதல் காட்டரசன் வரையிலான
அடிமை விலங்குகளை
ஆனால் ஓநாய்களைக் கண்டதுண்டா
அது அவற்றின் ஆளுமை மற்றும் வலிமையின் அடையாளம்

ஆளும் வர்க்கங்களுக்கு வல்லமையும் பஞ்ச தந்திரங்களும் அவசியம்
எப்போதும் தோற்கிற தரப்பிலேயே இருக்கும் மனிதநீதி
அவைகளுக்கு வேண்டியதில்லை
ஆட்சிக்கானது மிருகநீதி; அதுவே ஓநாய்களின் வேதம்

தலைமை ஓநாய்கள் நுண்ணறிவு மிக்கவை
காடாளும் வித்தகமறிந்தவை
தன்னலமும் குடும்ப நலமும் பேணும் அவை
தொண்டர் ஓநாய்க் கூட்டத்திடம் இனவெறியூட்டி
உயிர்த் தியாக வெறியுடன் போராட வைக்கும்
இரைகளின் களப்பலிகளின் ரத்தத்திலேயே எழுதப்படுகிறது
கானக வரலாறும் ஆட்சி சாசனங்களும்

கொடுங்கோன்மையும் சாணக்கியமும் மிக்க ஓநாய்கள்
கச்சிதமாகத் திட்டமிட்டே செயலாற்றுகின்றன
வியூகம் அமைத்து
இரைகளை வேட்டையாடவும் எதிரிகளுடன் போரிடவும் கூடிய அவை
தன்னிலும் பெரிய வன்மிருகங்களையும் கொல்லும் பலம் வாய்ந்தவை
மூர்க்கம் கொடூரம் குரூரம் வக்கிரம்
அனைத்தையும் வெளிப்படுத்தி வெற்றி காண்பதில்
ஓநாய்க் கூட்டத்துக்கு நிகராக வேறெந்த மிருகங்களும் இல்லை
ஓநாய்கள் தேவை நிறைவேறக் காத்திருப்பது கிடையாது
கூட்டம் சேர்ந்து இரைகளை வேட்டையாடும்
எதிரிகளை அழித்தொழிக்கும் அல்லது விரட்டியடிக்கும்
உழைப்பு இனப்பற்று ஒற்றுமை மூர்க்கம் ரத்தவெறி காடாளும் வேட்கை
ஆகியவையே அவற்றின் வாழ்வாதாரம்

குட்டிக் காலம் முதலே வன்மம் பயிற்றுவிக்கப்பட்டு
வெறியூட்டப்படும் ஓநாய்த் தொண்டர்களுக்கு
கூட்டத்தின் மீதான இனப்பற்றும் தலைவனுக்கான தியாகமுமே
உயிரினும் மேலானது

இதன் விளைவாகவே
வேறெந்த மிருகங்களாலும் வீழ்த்திவிட முடியாத
காடாதிக்க சக்தியாக ஓநாய்கள் ஓங்கி நிற்கின்றன
ஒரு தனி ஓநாயைக் கொல்வது கூட
புலிக்கே சவாலானது
சிறு மிருகங்களான ஓநாய்களிடம் நெருங்குவதற்கு
சிங்கம் புலி கரடி யானை காட்டெருமை ஆகிய பெருமிருகங்களே
அஞ்சி ஒதுங்குவதும் அதனால்தான்

இனி, ஆடுகள் நனையாது காக்க
ஓநாய்கள் குடை பிடித்த கதையை நீங்கள் சொல்லுங்கள்


7. தார்மீகம்

நிக்கனோர் பர்ரா தனது கோப்பையை உயர்த்துகிறார்
ஒருபோதும் வராத நாளைகளுக்காக
இன்றிரவும் எழுதக்கூடும்
பாப்லோ நெரூடா துயர் மிகு வரிகளை

பயங்கரவாத சூதாட்டத்தில் கனசதுர உலகம்
2022 ஆகியும் இனம் மதம் ஜாதி மொழி வெறியாட்டங்கள்
காலத்தின் பாதங்கள் பிடரிப் பக்கம் திரும்பிவிட்டனவா
மனித மந்தைக்குப் பரிணாமத் தேய்வா

செவ்விலக்கியங்கள் சமூக அரசியல் சித்தாந்தங்கள்
மகத்தான மானுடச் சிந்தனைகள் பேருண்மைகள் வாழ்வியல் நெறிகள்
அனைத்தும் வீண்
மக்களை மாமந்தைகளாக்கும் மந்திரங்கள்தான்
உலகாள்கின்றன இன்னமும்

சிந்திப்பதனால் நாம் இல்லை
உனது கவிதைத் தொகுப்பைத் தூக்கியெறி
என்னுடையதை எரித்துவிடு


8. கடைசி விருந்து

நாற்காலிகள் நடந்து வருகின்றன
விருந்து மேஜையை நோக்கி
அவற்றின் கால்கள்
முட்டி தேய்ந்த ஆட்டுக் கால்களாகத்தான் உள்ளன
ஆனால் பாதங்களில் பிளவுண்ட குளம்புக்கு பதிலாக
வன்மிருகக் கூர் நக விரல்கள்
விருந்துண்ணவிருப்பவர்கள் யார் என்பது
உணவாகப் பரிமாறப்பட்டிருக்கும் உங்களுக்குத் தெரியுமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.