- ஏ பெண்ணே
- ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு
- ஏ பெண்ணே – அத்தியாயம் 3
- ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு
- ஏ பெண்ணே – 5
- ஏ பெண்ணே – 6
- ஏ பெண்ணே – 7
- ஏ பெண்ணே – 8
- ஏ பெண்ணே 9
- ஏ பெண்ணே 10
தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
என்னை ஏன் முட்டாளாக்கப் பார்க்கிறாய் பெண்ணே. காலையில் என் தலையணையின் கீழே பெப்பர்மிண்ட்களும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவன் தான் இப்படியெல்லாம் யோசிப்பான். நோய்வாய்ப்படாத காலத்திலும் கூட, எனக்காக குளிர்சாதனப்பெட்டியில் சாக்லேட்டுகளை வைத்து விட்டுப் போவான். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்புவதால் உனக்கென்ன லாபம்? பெண்ணே, உன் சகோதரன் வெகுளி. தூய்மையான மனம் படைத்தவன். அவனை வீட்டை விட்டுப் போக விடாமல் செய்திருப்பார்கள். அவன் வெறுத்துப் போயிருப்பான். சல்லடையில் சலித்து கற்களைப் பொறுக்கி எறிவது போல, அவன் மனைவி வீட்டிலிருந்து கொண்டே, அவனைப் பற்றி குற்றங்குறை கூறிக் கொண்டிருந்திருப்பாள்.. நான் போன பிறகு இன்னும் என்னவெல்லாம் வெளிவரப்போகிறதோ?
போகட்டும். விடுங்கள் அம்மா.
சரி. இப்போது இதைப்பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சாக்கு போக்கு சொல்லி என்னை ஏமாற்ற முயற்சிக்காதே. பெண்ணே, அங்கே, குடும்ப வரலாற்றின் கடைசி அத்தியாயம் திறக்கப்பட்டிருக்கும்.
அம்மா சிரிக்கிறார்.
சிறுவயதில் உன் சகோதரன் கொழுக்மொழுக்கென்று வெண்ணைக் கட்டியைப் போல் இருப்பான். சுருட்டை முடி. குறும்புத்தனமாகச் சிரிக்கும்போது பார்க்க மிகவும் அழகாக இருப்பான். பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடனேயே, புத்தகங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான். கேட்டால், பள்ளிப் பாடங்களை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன் என்பான். நான் சொல்ல வருவது புரிகிறதா உனக்கு? இப்போதும் அவன் கேள்வி பதில்களை மனப்பாடம் செய்து கொண்டுதான் இருக்கிறான்.
இல்லை அம்மா. அப்படி நினைக்காதீர்கள். அண்ணா உங்களுக்காக, ஒருவருக்கும் தெரியாமல், நிறைய செய்துகொண்டுதான் இருக்கிறார்.

ஏன் செய்யக் கூடாது? என் மகன்! மகன்கள் அம்மாவிடம் அன்பு செலுத்தக் கூடாதா என்ன? எதற்குக் கூச்சம்?
அங்குசம் போட்டு அடக்கி வைத்திருக்கிறார்கள். அம்மாவை மறந்து விட்டது போல நடிக்கிறார்கள்.
அதில் மனைவிமார்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தாய்மார்கள், முடிந்து போன அத்தியாயம் போல, மூலையில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். திரும்பத்திரும்பஅதே கேள்விகள் – எங்களுக்கு ஏன் சொல்லவில்லை? சரி, உனக்கு ஏன் நினைவு வரவில்லை? உங்கள் அம்மா இதை ஏன் சொல்லவில்லை, அதை ஏன் செய்யவில்லை? உரிய நேரத்தில் எனக்கு அதை ஏன் தரவில்லை?
அம்மா சிரிக்கிறார்.
இந்த விளையாட்டில் கேலி, கிண்டல், கோபம், ஆவேசம் எல்லாமும் தேவைதான். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நல்லவராக இருப்பது மட்டும் போதாது.
பெண்ணே, எனக்குக் கொள்ளியிட்டு, சடங்குகளைச் செய்யவேனும், உன் சகோதரன் நேரத்தில் வந்து சேர்ந்து விடுவானா?
கட்டாயம் வருவார் அம்மா.
இதுதான் உலக நியதி. காற்றடிக்கையில், பழைய படகுகள் அசைகின்றன. வழக்கமான கணக்கு வழக்குகள். யதார்த்தமான யோசனைகள/ திட்டங்கள். நீ முகம் திருப்பி நடக்க விரும்பினால், அந்த திசையில், ஒரு பாதை உனக்கு முன்னால் விரியும்.
பெண்ணே, எனக்குள் இருந்த ஈரம் காய்ந்து விட்டது போலத் தோன்றுகிறது. நீரை விட்டு நீங்கிய மீன் போல உணர்கிறேன். நாற்புறமும் மண் மூடி கிடக்கிறது.
அம்மா, பழச்சாறு கொண்டு வரட்டுமா இல்லை, அல்வாவா?
அம்மா சிரிக்கிறார்.
என்னுடையது எப்போதும் அதே பழைய பாட்டு தான் – அல்வா
பாதாம் பருப்பை அரைத்துப் போடவா?
நான் சொல்ல நினைத்ததை நீயே சொல்லிவிட்டாய் பெண்ணே! நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். நம் இருவரின் உள்ளங்களும் கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தில் ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைந்தி ருக்கின்றன.
அம்மா, சற்று நேரம் சூசனைப் பார்த்தபடியே படுத்திருக்கிறார். பிறகு கண்ணயர்கிறார்.
கண்ணைத் திறந்து, தனக்குத்தானே-
நீர் நதிகளை நோக்கி. நதிகள் கடலை நோக்கி. உயிர் விடுதலையை நோக்கி. பயணம் இன்னும் எவ்வளவு தூரம், அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியவில்லை. இது வெறும் தங்குமிடம் மட்டுமே. தூக்கத்தில், மழை ஓசை கேட்பது போல, நான் கடந்து போன காலத்தை கேட்டுக்கொண்டிருக்கிறேன். முதுகிழவியே, உன் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. இந்த உடலை விடுப்பது மட்டுமே எஞ்சி இருக்கிறது.
மகள், தட்டில் அல்வாவை எடுத்துக் கொண்டு அறைக்குள் வருகிறாள்.
அம்மா, மிகவும் சூடாக இருக்கிறது. கொஞ்சம் ஆறட்டும்.
அங்கே பார் பெண்ணே, எதிர்ப்புற ஜன்னலுக்கருகே ஏதோ அசைகிறது.
மகள் ஜன்னலை பார்த்து,
அம்மா அங்கு எதுவும் இல்லையே!
உன்னால் பார்க்க முடியாது. எனக்கு தெரிகிறது. ஜன்னலுக்கு வெளியே கடந்த காலத்தின் ஒரு நாள், மினுங்கிக் கொண்டிருக்கிறது. அன்று கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. பொழுது சாய இன்னும் நேரம் இருந்தது. நான் வேலையை முடித்துவிட்டு ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு மலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன். இடியும் மின்னலும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன. தகரக் கூரையிலிருந்து தண்ணீர் வேகமாக அருவியைப் போல ஊற்றிக் கொண்டிருந்தது. அப்போது மழைக் கோட்டு அணிந்த ஒருவர், வீட்டை ஒட்டிய மேட்டில் ஏறிக்கொண்டுருப்பதைக் காணமுடிந்தது.
கூர்ந்து கவனித்ததில் அது உன் அப்பாதான் எனத் தெரிந்தது. நான் ஜன்னலுக்கருகே நின்றுகொண்டு அவரைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன். வேகமாக ஓடி வாயிற் கதவை திறந்தேன். இன்னும் கதவைத் தட்டக் கூட இல்லையே, அதற்குள் எப்படி ஓடி வந்து திறந்தாய் என்று கேட்டார். நீங்கள் வருவதை பார்த்து விட்டேன். நீங்கள் ஒரு குழந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு வருவது போல இருந்தது என்றேன். பெண்ணே, உன் அப்பா முதலில் தீர்க்கமாக என்னை பார்த்துவிட்டு, பிறகு சிரித்தார். பகலில் வீட்டில் தனியாக இருப்பது பயமாக இருக்கிறதா என்று கேட்டார். பயமாக இல்லை, ஆனால் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால்தான், நான் உங்களை பார்த்திருக்கக்கூடும் என்றேன். உடை மாற்றிக் கொள்ளுங்கள், நான் தேநீர் தயாரித்துக் கொண்டு வருகிறேன் என்றேன்.
பெண்ணே, நீ ஏன் சோகமாக நிற்கிறாய்? உன்னிடமிருந்து எதையும் மறைக்க வில்லையே! சிக்கலும் குழப்பமும் நிறைந்த இந்த சதுரங்க வலையிலிருந்து, அந்த ஒரு நாள் மட்டும் ஏனோ மேலெழும்பி நினைவுக்கு வருகிறது. மனம் தானே! அது நினைத்தபடி எல்லாம் நடந்து கொள்கிறது!
பெண்ணே, நீரும் எரியும், பனியும் உருகும். வெயில் மானல்ல, குதித்துக் கொண்டே இருக்க. வெளிச்சம் சூரியனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பூமியும் அதில் மயங்கிக் கிடக்கிறது. கேட்டுக் கொண்டிருக்கிறாயா? மகள்களின் காதுகளில் புதிதாக அணிவிக்கப்பட்ட குண்டலம் மிக அழகாக இருக்கிறது. அவர்களின் இடுப்பில் ஒட்டியாணமோ அதைவிட அழகு! குழந்தைகளின் உதட்டில் மலரும் புனிதமான முதல் புன்னகை, மனதைக் கிறங்கடிக்க வல்லது. சின்னஞ்சிறு பாதங்களால் குழந்தை முதல் அடி வைப்பதை பார்ப்பதென்பது, இந்த வாழ்க்கை நமக்களிக்கும் பரிசு. இதோ, உன் அப்பாவை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது! குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு, ஒருசமயம் அதன் நாக்கில் தேனைச் சொட்டுகிறார்; மறு சமயம் திராட்சை ரசத்தை. சில சமயம், இதைவிட ஆனந்தம் நிறைந்த விளையாட்டு வேறொன்றும் இல்லை இவ்வுலகில் என்பதைப்போல, ஒரு மாதுளை முத்தை குழந்தையின் உதடுகளில் மென்மையாக வைக்கிறார்.
பெண்ணே, இது மாயை இல்லை.
நிச்சயமாக இது மாயையோ அல்லது கண்கட்டு வித்தையோ இல்லை. வாழ்வும் வாழ்தலும் கண்டிப்பாக ஏமாற்று வேலை இல்லை. இவ்வுலகை விட்டு நீங்குவது மாயை. இறந்த பின்பு, மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சாறு நிறைந்த மாம்பழத்தை ருசிக்க, இரத்தத்தாலும் சதையாலுமான ஏதேனும் ஒரு உயிர் இந்த பூமியில் உள்ளதா? இல்லை பெண்ணே! பஞ்ச பூதங்களால் ஆன எந்த உயிராலும் அவ்வாறு செய்ய முடியாது. இருப்பினும், இந்த உலகம் மிகவும் வசீகரமானது பெண்ணே!
மகள் தாயின் கரங்களைத் தொடுகிறாள்.
காற்று- வெயில்- நிழல் – மழை – வெளிச்சம் – இருட்டு – நிலா – நட்சத்திரங்கள்- யாவும் இவ்வுலகின் அலகிலா விளையாட்டுகள். மிகவும் விசித்திரமானவை! அற்புதமானவை!
காலையில் எழுந்திருந்து…
இரவு நிம்மதியாகத் தூங்கி விட்டேன். டாக்டர் பெரும் நிம்மதியை கொடுத்துவிட்டார். சிறு வலிகளை யெல்லாம் நான் பொறுத்துக் கொண்டு விடுவேன். கடந்த இரண்டு நாட்களாக இந்த கொப்பளம் என்னை நசுக்கி சித்திரவதை செய்து விட்டது. எரிச்சல் மூட்டி விட்டது. உங்களிடம் என்னவெல்லாம் சொல்லி கோபப்பட்டு விட்டேனோ தெரியவில்லை.
மகள் கோப்பையில் தேநீரை ஊற்றியவாறே,
அம்மா, உங்களுக்கு பொறுமையும் சுய கட்டுப்பாடும் மிக அதிகம். என்னால் நிச்சயமாக இவ்வளவு வலியை பொறுத்துக் கொண்டிருக்கவே முடியாது.
பெண்ணே, குழந்தை பெற்றுக் கொள்ளும் போதுதான் வலியின் பல பரிணாமங்களையும், அதன் பரிசுத்தமான அழகையும் உணர்கிறோம்.
அம்மா, இதென்ன இப்படிக் குத்தி காயப் படுத்துகிறீர்கள்?
வலியிலும் பலவகை உண்டு. மிதம் தீவிரம், அதிதீவிரம். இவ்வுலகின் மொத்த விளையாட்டும் இதற்குள்ளே தான் அடங்கியிருக்கிறது பெண்ணே!
மகள் புன்னகைப்பதைப் பார்த்து…
பெண்ணின் உடல், குழந்தைப்பேறு என்னும் பெரும் சூறாவளியை கடக்கையில், அவளுடைய எலும்புகளும் நரம்புகளும் தசைகளும் உறுதி அடைகின்றன. உனக்கு எப்படி வலி தாங்கும் உடல் அமைந்திருக்க முடியும்?
என்னை விடுங்கள். உங்களுக்கு முதல் குழந்தை பிறக்க இருந்த போது….
அம்மா உற்சாகத்துடன்..
நான் மிகவும் கவனமாக இருந்தேன். வீட்டு வேலைகளை எல்லாம் மிகவும் விரைவாகச் செய்தேன். ஒருவிதத்தில் குழந்தையை உருவாக்குவதென்பது ஒரு தவம் தான் பெண்ணே! அந்நாட்களில் பெண் முழு பிரம்மாண்டத்திடமிருந்தும் ஆற்றலை ஈர்த்து, தனக்குள் இருக்கும் சக்தியை ஒளிரச் செய்கிறாள். அந்நாட்களில் அவளது வாழ்க்கை அசாதாரணமாக மாறிவிடுகிறது. தனக்குள் இருக்கும் வான்வெளியை உற்று நோக்குகிறாள். ஒரு உயிரை தன்னுள் சுமந்து, அதை உருவாக்கும் போது, அவள் இயற்கையோடும், அதன் லயத்தோடும், நீக்கமற இணைந்து விடுகிறாள்.
அம்மா, குழந்தை பிறக்கும் நேரம் வரும்போது…
நான் குழந்தைக்கு அணிவிப்பதற்காக சிறிய சட்டைகளுக்கு நாடா வைத்து தைத்துக் கொண்டிருந்த போது, உள்ளே அசைவு தொடங்கிவிட்டது. உன் அப்பா தூங்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். “இன்று நீங்கள் தூங்க முடியாது. விரைவாக ஜேக்கப் கூப்பிட வேண்டியிருக்கும்” என்றேன்.
பிறகு?
பிறகென்ன? ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தேன். இந்தப் பக்கம் டாக்டர் நுழைகையில், மறுபக்கம், என் மூத்த மகள், என் நெற்றித் திலகம், அவதரித்தாள்.
அம்மா, மகள் பிறந்ததை நினைத்து உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கும் இல்லையா?
தன்னை மிகப் பெரிய புத்திசாலியாக காட்டிக்கொள்ள முயற்சிக்காதே பெண்ணே! தன்னையே கேட்டுக்கொள்! மகன்களுக்கும் மகள்களுக்குமி டையே எப்போதாவது வித்தியாசம் காட்டி இருக்கிறோமா?
இல்லை அம்மா. ஒருபோதும் இல்லை. ஆனால் எல்லா வீட்டிலும் மகள்களை அப்படி நடத்துவதில்லை. மகள் பிறந்ததுமே, வீட்டை சோகம் கப்பிக்கொள்கிறது.
பெண்ணே, உன்னுடைய பெற்றோர், எந்த வேறுபாட்டையும் காண்பிக்கவில்லை. பெண்ணே, சொல்வதைக் கேள். தன்னையொத்த ஒரு உயிரை உருவாக்குவதென்பது, ஒரு தாய்க்கு மிகவும் பெருமை தரக்கூடிய விஷயம். புனிதமானதும் கூட. பெண் பிறந்ததுமே, தாய், சாகாவரம் பெற்று விடுகிறாள். அவள் எப்போதும் அழிவதில்லை. அவள் நிரந்தரமானவளாகி விடுகிறாள். அவள் இன்றும் நாளையும் வாழ்வாள். தாயிலிருந்து மகளுக்கு. மகளிடமிருந்து அவளுடைய மகளுக்கு. ஒரு தலைமுறையிலிருந்து, பல தலைமுறைகளுக்கு. அவளே சிருஷ்டியின் ஆதி ஊற்றுக்கண்.
அம்மா, தந்தையைப் புகழ்ந்தும் ஏதேனும் சொல்லுங்கள்.
தந்தையைப் புகழ்ந்து என்ன சொல்ல? தந்தை போற்றுதலுக்குரியவர். தந்தையின் ரத்தமே குழந்தைகளின் உடலிலும் ஓடுகிறது. இருள் தேவதையின் பக்தர். அத்தேவதையின் ஆசிகளினாலேயே, குடும்ப விளக்கு ஒளிர்கிறது. இயற்கை நியதியைப்பார்!
மனித உயிரின் வித்தை விதைப்பதற்கு தேவையான அனைத்து சக்தியையும் தந்தையிடமே தந்திருக்கிறது. உடலை வளர்த்தெடுக்கும் பணியிலிருந்து மட்டும் தந்தையைத் தள்ளி வைத்திருக்கிறது. தந்தை வெளியே நின்று கொண்டிருக்க, தாய், குழந்தையை, தனக்குள் உருவாக்குகிறாள். அதனால்தான் அவள் ஜனனி என்று அழைக்கப்படுகிறாள். அவளே குழந்தையை தனக்குள் பத்திரமாகப் பொதிந்து வைத்து, அதன் உடலை வளர்க்கிறாள்.
மகள் சிரித்துக்கொண்டே-
அம்மா, நீங்கள் புத்தகங்களில் இருப்பதைப் போல பேசுகிறீர்கள்!
பெண்ணே, உன் அம்மா பதஞ்சலியைப் படிக்காவிட்டால் என்ன? ஞானத்தை, பார்த்தோ, கேட்டோ அல்லது வாழ்ந்தோ கூட அடையமுடியும்!
ஆமாம் அம்மா!
ஒவ்வொரு ஆணும் தன்னை மகத்தானவனாக எண்ணிக் கொள்கிறான். ஏன் தெரியுமா? இந்த வாழ்க்கையின் கஸ்தூரி அவனிடம் இருப்பதால்தான். பெண்ணே, இந்த வாழ்க்கை மானைப் போன்றது. கஸ்தூரி மான். நீர்க்குமிழி போன்ற நிலையற்ற இந்த உலகில், கஸ்தூரிமான் போல, ஓரிடத்தில் நிற்காமல், இங்குமங்கும் துள்ளிக் குதித்து, நறுமணத்தை பரப்புகிறது. பெண், ஓடிக்கொண்டிருக்கும் இந்த மானை, சில நொடிகளுக்கு, தனக்குள் நிறுத்திக் கொண்டு, படைக்க ஆரம்பிக்கிறாள். இதுதான் சிருஷ்டியின் விளையாட்டு. இங்கிருந்துதான் தலைமுறைகளின் உடையா சங்கிலித் தொடர் ஆரம்பிக்கிறது. பெண்ணே, இவ்வுலகின் ஆன்மா, இதில் தான் வாசம் செய்கிறது. உடல் அழியக்கூடியது. ஆன்மா அழிவற்றது. தண்ணீர் வற்றக் கூடும். ஆனால் ரத்தம் ஒருபோதும் வற்றுவதில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறது… குழந்தைகளில்… குழந்தைகளின் குழந்தைகளில்… அவர்களின் குழந்தைகளில்…
அம்மா, அந்த ஆண் ….
ஆணுக்கு தன் வாரிசாக பிள்ளையைப் பெறவேண்டும் என்கிற ஆழ்ந்த விருப்பம்! அது அவனுடைய உடல் – மனம் அனைத்திலும் வியாபித்திருக்கிறது. அவனது இயல்பான குணத்திலும், விருப்பங்களிலும், இது இரண்டறக் கலந்திருக்கிறது. ஒரு தந்தையாக, அவன் தனது மகன்-பெயரன்-கொள்ளுப் பெயரன் என, தனக்குப் பிறகு வரவிருக்கும் தனது சந்ததியைக் குறித்தும், நீண்ட தொலைவில் இருக்கும் வருங்காலத்தைக் குறித்தும் யோசிக்கிறான். குடும்பத்தைப் பொட்டலத்தில் பொதிந்து வைத்துக் கொள்கிறான். கேட்டுக் கொண்டிருக்கிறாயா பெண்ணே? எங்கே உனது கவனம்? நமது வெற்று விருப்பத்தால் மட்டுமே குடும்பத்தை உருவாக்கி விட முடியாது. மனிதனின் முற்பிறவி வினைகளும் அதை வெகுவாகத் தீர்மானிக்கின்றன. தந்தை என்பவர் நீர்த்தேக்கத்தை போன்றவர். அவரே தனது ஒவ்வொரு தலைமுறைக்கும் நீர் பாய்ச்சுகிறார். தந்தையிடம், மகனை விட, பெயரன் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறான். அவர் குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிட்டாலும் தன் கடமைகளை செய்யத் தவறுவதில்லை.
அம்மா சிரித்தவாறு,
மோட்சத்திற்கான பாதையை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பெண்ணே, தொண்டையை நனைத்துக் கொள்ள எனக்கு ஏதேனும் வேண்டும். குளிர்பானமாக கொடுப்பதென்றால் எலுமிச்சை ரசம். சூடாகக் கொடுப்பதெ ன்றால் தேநீர்.
மகள் தேநீர் கோப்பைகள் வைக்கப்பட்ட தட்டை மேஜையின் மீது வைக்கிறாள்.
நல்லது. குளிர்பானம் குடிக்க வேண்டும் போல தோன்றினாலும், உண்மையில் நான் குடிக்க விரும்பியது தேநீரையே. பெண்ணே அனுபவம், படிப்பு மற்றும் யோசித்தல் போன்றவை நிச்சயம் புத்தியை கூர்மையாக்குகின்றன. ஆனால் வாழும் போதுதான் அவை உண்மையில்பொருள் கொள்கின்றன. எண்ணம் மூளையில் உற்பத்தியாகிறது. மூளையோ ஆன்மாவில் உறைகிறது. ஆன்மாவால் இயக்கப்படுகிறது.
அம்மா, அப்படி என்றால், மனம்?
மனம் மிகவும் பொல்லாதது. எப்போதும் சுற்றிவளைத்துப் பேசி, ஏமாற்றவே செய்யும். ஆத்மாவே பரிசுத்தமானது. எப்போதும் விழிப்பு நிலையிலும் உணர்வு நிலையிலும் இருக்கும். விழிப்புநிலை தண்ணீரை ஒத்தது. பரிசுத்தமானது. தெளிவானது. அதுவே இவ்வுடலில் உறையும் தெய்வம்.
அம்மா!
திடீரென கோபத்துடன்…
போதும். நிறைய உபதேசங்கள் கொடுத்தாயிற்று இப்போது கொஞ்ச நேரம் என்னை ஓய்வெடுக்க விடு.
மகள் எழுந்து கதவை நோக்கி நடக்கிறாள். அம்மா, பின்னாலிருந்து அவளைக் கூப்பிட்டு…
வா. வந்து உட்கார். என் பேச்சை முடிக்க விடு.
மகள் மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்கிறாள்.
சொல்லுங்கள் அம்மா.
ஆண் புழங்கும் நீரை, பெண் தரித்துக்கொண்டு செழித்து மலர்கின்றாள்.
அவன் இரவை சிதறடித்து தூளாக்குகிறான். இவள் அந்த துகள்களைக் கோர்த்து மாலையென அணிந்து கொள்கிறாள். குழந்தையைப் பெற்றெடுப்பதென்பது, அவளுக்கு விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து கொள்வதற்கு ஒப்பானது. அவளுக்கு அளிக்கப்பட்ட பெரும் கொடை இது. ஆத்மா, அவளுடைய ஏகாந்தமான, ப்ரத்யேக ஏரியிலிருந்து வெளிவந்து, அவளுடைய உடலில், குழந்தை உருவாகும் முன்பே பிரவேசிக்கிறது.
அம்மா, மிக அழகாகச் சொல்கிறீர்கள்!
பெண்ணே, இப்படியாக ஒரு தாய், மரணத்தை வெற்றி கொள்கிறாள், புரிகிறதா? புண்ணியம் ஏதுமின்றி வெறும் கையுடன் நிற்பவர்கள், அழிவைச் சந்திப்பார்கள்.
மகள் சங்கடத்துடன் கூரையை வெறிக்கிறாள். அம்மா கோபத்துடன் –
எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறாய்? எதுவும் மீதமில்லை எனும்போது, எங்கே தேடுவாய்? உன்னுடைய பங்கில் எஞ்சியிருக்கிற புத்தகங்களைப் படி; புத்தகங்களை எழுது. உயிருடன் இருக்கும் வரை நீ இதைத்தான் செய்ய வேண்டும். உன்னால் இதை மட்டுந்தான் செய்ய முடியும்.
நீண்ட மௌனம்.
பெண்ணே, விரிந்து பரந்த பாலைவனத்தைக் காட்டிலும் ஒரு குடம் தண்ணீர் சிறந்தது. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வர?
அம்மா, தயவு செய்து இந்த விஷயத்தை இங்கேயே நிறுத்திவிடுங்கள். தந்தையைப் பற்றி கூறுங்கள்.
தந்தையாகி, ஆண், நஷ்டத்தையே அடைகிறான். தனிமைப்பட்டு விடுகிறான். குழந்தைகளைப் பெற்றுவிட்ட தாய், அவன் விரும்பும் போதெல்லாம் அவனை மகிழ்விப்பதில்லை. அவள் தன் குழந்தையின் தாயாக மாறி விடுகிறாள். நீ வேதத்ரயீ போன்ற அடிப்படை இலக்கணங்களை படித்திராவிட்டாலும், ஆத்மாவும் தேகமும் இணைந்துதான் இவ்வுலகின் வசீகரமான கனவுகளை நெய்கின்றன என்பதை நிச்சயம் அறிந்திருப்பாய். தனித்தனியாக, அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை, புரிந்ததா?
மகள் சற்றே எரிச்சலுடன்-
இல்லை. எனக்கு புரியவில்லை.
பெண்ணே இது வெறும் ஆசை, பாசம், தாய்மை குறித்த புகழாரம் மட்டுமில்லை. அதற்கும் அப்பாற்பட்டது. உண்மையாகச் சொல்! எவரேனும் உன்னை, நீ விரும்பியபடி, அறிந்திருக்கிறார்களா? விரும்பி இருக்கிறார்களா?
மகள் மௌனமாக இருக்கிறாள்.
சமரசம் செய்து கொள்ளத் தெரியாவிட்டால், விட்டுக்கொடுக்கத் தெரியாவிட்டால், யார் தாமாக முன்வந்து உன் வழியை மறித்து நிற்கப் போகிறார்கள்? நேற்று இருந்த இடத்திலேயே தான் நீ இன்றும் இருக்கிறாய். இன்று நிற்கும் இடத்திலேயே தான் நாளையும் இருக்கப் போகிறாய். நான் உனக்கு விளங்குகிற மாதிரி பேசுகிறேனா இல்லையா?
ஆம் அம்மா.