எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ?

மூலப்பாடம்

காஞ்சி எழுத்துருக்களில்
難波潟
みじかき葦の
ふしの間も
あはでこの世を
過ぐしてよとや

கனா எழுத்துருக்களில்
なにはがた
みじかきあしの
ふしのまも
あはでこのよを
すぐしてよとや

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: பட்டத்தரசி இசே

காலம்: கி.பி. 875-938.

இசே மாகாணத்தின் ஆளுநராக இருந்த ட்சுகுககேவுக்கு மகளாகப் பிறந்ததால் இப்பெயர் பெற்ற இவர் காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்றவர். பேரரசர் உதாவின் அந்தப்புரத்தில் பட்டத்தரசி ஒன்ஷிக்குப் பணிவிடை செய்யும் பணியில் சேர்ந்தார். பின்னர் ஒன்ஷி இறந்தபிறகு பேரரசருக்கு மனைவியானார். இவர்களுக்கு யுகிஅகிரா என்ற மகன் பிறந்தார். பேரரசர் உதா இறந்தபிறகு அவரது நான்காவது மகன் இளவரசன் அட்சுயோஷி மீது காதல்வயப்பட்டு மணந்துகொண்டார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாகக் கொக்கின்ஷு தொகுப்பில் 22 பாடல்களும் கொசென்ஷு தொகுப்பில் 72 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: பிரிவாற்றாமை

பாடலின் பொருள்: நானிவா விரிகுடாவின் கரைகளில் வளர்ந்திருக்கும் நாணல்களின் இரு கணுக்களுக்கு இடையிலான சிறு இடைவெளி அளவேனும் சந்திக்கமாட்டேன் என்கிறாயா?

இத்தொடரில் நம் சங்க இலக்கியங்களைப் போலவே புவியியல் தகவல்களைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கும் இன்னொரு அகப்பாடல். தற்போதைய ஓசகா மாகாணத்தின் நாம்பா எனும் பகுதிதான் இங்கு நானிவா விரிகுடாவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் கரையோரங்களில் நாணல்கள் வளர்ந்து அழகாகக் காட்சியளிக்கும். மூங்கில் போன்று இருக்கும் அந்த நாணல்களின் இரு கணுக்களை இணைக்கும் பகுதி சற்றுத் தடிமனாகவும் சிறியதாகவும் இருக்கும். அந்தச் சிறு இடைவெளி அளவுக் காலத்தைக்கூட என்னுடன் கழிக்க விரும்பவில்லை என்கிறாயா எனக் கவிஞர் தன் காதலரை எண்ணிக் கேட்கிறார்.

இப்பாடலின் நான்காவது அடியில் இருக்கும் யோ (世) என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உள்ளன. பெரும்பாலும் உலகம் என்ற பொருள் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்க்கை, உறவு போன்ற பொருட்கள் அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு மூன்று பொருட்களுமே பொருந்தி வருகின்றன. கணுஇடை அளவேனும் நீ சந்திக்க விரும்பாத இந்த உலகில், இந்த வாழ்வில், இந்த உறவில் தொடர்ந்து இருக்கச் சொல்கிறாயா? என்கிறார் கவிஞர். இவர் பெண்பாலாக இருந்தாலும் ஓர் ஆண் தன் காதலியிடம் சொல்வதுபோன்ற தொனியே ஒலிக்கிறது இப்பாடலில்.

வெண்பா:

போதவிழ் போதுநாடு வண்டும் கரைநாடி
மோதவரு பேரலையும் கண்ணுறு - காதலரும்
நின்போல் பிரிவே விருப்பமாய் அன்பின்மை 
கொள்வரோ ஏற்கா துலகு
Series Navigation<< கனவிலேனும் வாராயோ?உயிரையும் தருவேன் உனைக்காண >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.