மேன்மைமிகு மனிதகுலத்தை எண்ணி நகைக்கிறேன் பாவத்தைத் தான் செய்துவிட்டுப் பழியை சாத்தானின்மேல் சுமத்துகிறான் = இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா (கியா ஹசீன் ஆத்திஹைமுஜே ஹஸ்ரத்-ஏ-இன்சான்பர் ஃபேல்-ஏ-பத் குத்ஹீ கரேன் அவுர் லானத் கரேன் ஷைத்தான்பர்)
உயர்ந்த இடத்தில் கண்ணபிரான் இருக்கட்டும் எதிர்பாராத தருணத்தில் என் முன்னே ஒலிக்கும் அவனுடைய புல்லாங்குழலிசை மட்டும் எனக்குப் போதும் = இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா (ஜாவே வோ சனம் புர்ஜ் கோ தோ ஆப் கன்னையா ஜட் சாம்னே ஹோ முர்லி கி துன் நசர் பக்கட்கர்)
இன்ஷா அல்லாஹ் கான் (1752 – 1817) வங்காளத்தின் நவாப் சிராஜ்-உத்-தௌலாவின் ஆட்சிக்காலத்தில் பிறந்தவர். இரண்டாம் ஷா ஆலம் காலத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவிய காலகட்டத்தில் டில்லிக்கு இன்ஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது.

முதலில் ராணுவத்தில் பணிபுரிந்து, பின்னர் தன்னுடைய மொழித் திறனாலும், கவிதை எழுதும் ஆற்றலாலும், யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி நகைச்சுவையாகக் கவிதையில் சொல்லும் திறனாலும் அரசவையில் இடம் பெற்றார்.
அவருடைய நகைச்சுவை காரணமாகவே தங்கள் நட்பு வட்ட்த்திலிருந்து அவரை ஒதுக்கிவைத்த கவிஞர்களும் உண்டு.
மொகலாயப் பேரரசின் கையில் இருந்து அரசாட்சி வெள்ளையர்க்கு மாறுவதுபோல் மயக்கம் கொடுத்த காலகட்டத்துக்குப் பின் இன்ஷா, டில்லியிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தார்.
அதன் பின்னர் அவாத் (இன்றைய உத்தரப்பிரதேசம்) சென்றார்.
இன்ஷா அல்லாஹ் கானின் மிகப்பெரிய சாதனையாகச் சொல்வதற்கு இரண்டு தகவல்கள் உள்ளன.
முதலாவது, உருது மொழியின் முதல் இலக்கண நூல் ‘தரியா-ஏ-லதாஃபத்’ (மொழிக்கடல்) இன்ஷாவால் எழுதப்பட்டது.
இரண்டாவது, இந்தி உரைநடையின் முதல் நூலாக அறியப்படும் ‘ராணி கேத்கி கி கஹானி’ இன்ஷாவாம்ல் எழுதப்பட்ட்து.
இத்தனை பெருமைகளைக் கொண்டிருந்தும் இன்ஷாவின் நகைச்சுவைப் போக்கு அவருக்கு எதிராகத் திரும்பியது.
தன்னைக் குறித்த நகைச்சுவையை விரும்பாத அவாத் மன்னர் இன்ஷாவை ஆதரிப்பதை விலக்கிக்கொண்டார். அதன் காரணமாக, தன்னுடைய கடைசிக் காலத்தை நோயிலும் ஏழ்மையில் இன்ஷா கழிக்க நேரிட்டுள்ளது.
‘மின்னலடிப்பது ஒன்றும் அரிதில்லை இடியும் மின்னலும் மழையும் போர்தான்’ எனத் துவங்கும் ஒரு கஜலின் கடைசிக் கண்ணியில், பாரசீகப்புலவன் ஸாதி சிராஸியின் காலமாக நிற்பவன் ‘இன்ஷா’ இங்கு நீ அபூபக்கர் ஸாத்! [ஸாதி சிராஸியின் புலமையில் பற்றுகொண்டிருந்தவர் அபூபக்கர் ஸாத். காலம்: பதின்மூன்றாம் நூற்றாண்டு] (ஷேக் ஸாதி-ஏ-வக்த் ஹை ‘இன்ஷா’ து அபூபக்கர்சாத் ஸங்கி (zangi) ஹை)
ஆட்சிப் பொறுப்பாளர் புலவனிடம் பற்றுகொண்டிருக்கவேண்டும் என்பதுபோல் இந்த வரிகள் ஒலிக்கின்றன.
தமிழ்ச்சூழலுக்கு இதை மொழிமாற்றம் செய்தால்,
கம்பனின் காலமாக நிற்பவன் ‘இன்ஷா’ இங்கு நீ சோழன் பன்முக வாசிப்பில், இன்ஷா சோழன் நீ கம்பன் என்றும் இன்னொரு பொருள்பட வாய்ப்பு உண்டு. மதபோதகரே தனிமையில் அமர்ந்து இறைவனிடம் யாசித்தீரே உங்கள் கைகளில் கிடைத்ததை எங்களுக்கும் சொல்லுங்களேன் நாங்களும் கனமான போதனையைக் கேட்கக் காத்திருக்கிறோம் (ஷேக்ஜீ யே பயான் கரோ, ஹம்பிதோ பாரி குச் சுனேன் ஆப்கே ஹாத் கியா மிலா கல்வத்-ஓ-இத்திகாஃப் மேன்)
மொழியின் இலக்கணத்தை வகுத்து, இரண்டு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்து இரண்டு வெவ்வேறு அவைகளில் தன் புலமையை நிரூபித்து ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்த இன்ஷா, கடைசிக்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சிறிது ஒத்துப்போயிருந்தாலோ, தன்னுடைய நகைச்சுவையை ஒரு அளவுடன் நிறுத்தியிருந்தாலோ, எழுத்தில் அதிக கவனம் செலுத்தியிருந்தாலோ, வாழும் காலத்தில் அவர் புகழ் மங்கியிருக்காது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கவிஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள், யாராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.
இன்ஷாவைக் கோபித்து அவர்கள் நீங்கினர் மீண்டும் மீண்டும் திரும்பி வந்து அன்பைக் காட்டினார்கள் (ரூட்கர் உட் சலேதே ‘இன்ஷா’ சே பாரே ஃபிர் ஹோக்கே மெஹர்பான் ஃபிரே) இன்ஷாவின் இந்த வரிகள் அவருக்குக் கனவாகிப்போனதை உணர முடிகிறது.