- எங்கிருந்தோ
- துவாரகையில் இருந்து மீரா
- காலக் கணிதம்
- பொற் தேவன்
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
- பேயவள் காண் எங்கள் அன்னை
- ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும்
நான் கொல்கத்தாவில் தினமும் நீராடிய எங்கள் வீட்டருகே ஓடிய பூம்புனல் இன்னமும் புத்தம் புது நீரோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையை அடைய நான் ட்ராம் (Tram) பாதையைக் கடந்து செல்ல வேண்டும். இன்றும் ட்ராம் ஓடுகிறது. பழமையும், புதுமையும் இணைந்து நடக்கும் ஒரு நகரம். இன்று அந்த நதிக் கரையோரத்தில் இருந்த ஒரு மரத்தை சிறிதே உலுக்கி கீழே விழுந்த மலர்களைச் சேகரித்து தன் சின்னஞ்சிறு கைகளால் அள்ளி எடுத்து அந்த நதி நீரில் சமர்ப்பித்த அந்த சிறுவன் வங்காள மொழியில் ‘காளி மா கி ஜெய் ஹோ’ எனச் சொல்லி வணங்கினான்.
எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. காளி என்பவள் அளப்பரிய ஆற்றல் உள்ளவள்- ஊழிப் பெருந்தீ. அவளை அனைத்துமாக வழிபடுவது காலந்தோறும் பழகிய ஒன்று. அவள் நவீன யுகத்தில், பெண் விடுதலையெனக் கருதப்படும் பேதைப் போதைகளின் ஆதிக்கத்திலில்லை- தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் படைப்பாளி காளியின் வாயில் ‘சிகரெட்டை’ வைத்து சமீபத்தில் காட்சிப்படுத்தினார். இதை ஃபெமினிசம் என அவர் நினைத்திருப்பாரேயானால் அவருக்கு எந்தக் கொள்கையிலும் தெளிவில்லை எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது. கலைகளின் அரசியாம் வாணியை நிர்வாணமாக வரைந்து காட்சிப்படுத்திய எம் எஃப் ஹுசேனை முற்போக்காளர் என்று கொண்டாடிய இந்தியாவில் இப்படித்தான் நடக்குமோ, என்னவோ?

இசை, இலக்கியம், ஓவியம், சிற்பக்கலை, நாட்டியம் இன்னும் ஆய கலைகள் 64ல் வங்காளிகள் அடைந்துள்ள திறமைகளை கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன். வங்கத் திரை உலகின் தவப்புதல்வர் சத்யஜித் ரே (Satyajit Ray) பாரத்ரத்னா உட்பட 21 விருதுகள் பெற்றிருக்கிறார். இன்று வரை அவரது திரைப்படங்கள், கதைகள் பேசப்படுகின்றன. சிதார் இசையில் கமகங்களும், துள்ளிசையும், விரல் நடனங்களும் கலந்து விருந்து படைத்த ரவிஷங்கர் உலகம் முழுதும் வட இந்திய இசையை எடுத்துச் சென்றவர். இவரும் பாரத்ரத்னா போன்ற நல்விருதுகள் பல பெற்றவர். ரபீந்த்ர நாத் தாகூர், அன்னை தெரசா, ரொனால்ட் ராஸ், அமார்த்தியா சென், அபிஜித் பேனர்ஜி ஆகியோர் வங்காளத்தைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள். உலகப் புகழ் பெற்ற இயற்பியலாளரான சத்யேந்திர நாத் போஸ், குவாண்டம் மெகானிக்ஸில் சாதனைகள் செய்தவர். தத்துவார்த்த அறிவியலில் (Theoretical Physics) வல்லுனர். ஹிக்ஸ்- போஸானில் (Higgs-Boson) இடம் பெற்றுள்ள போஸான் அவரைக் குறிப்பதாகும். போஸ் புள்ளியியல், போஸ் மின் தேக்கி (Bose Condensate) அவரது முக்கிய பங்களிப்பு. பத்ம விபூஷண் பட்டம் பெற்றவர். மற்றொரு புள்ளியியல் நிபுணர் ப்ரசண்டா சந்த்ரமஹலானோபிஸ். (Prasanta Chandra Mahalanobis) இவரும் பத்ம விபூஷண் பட்டம் பெற்றவர். இன்றும் மஹலானோபிஸ் டிஸ்டன்ஸ் (Mahalanobis Distance) பயன்பாட்டிலுள்ளது. ஜகதீஷ் சந்த்ர போஸ் ஒரு உயிரியலாளர் (Biologist) இயற்பியலாளர், தாவரவியலாளர், அறிவியல் புனைவு எழுத்தாளர். உயிர் இயற்பியல் (Bio Physics) துறையின் முன்னோடி. அவர் வடிவமைத்த பல கருவிகள், நூற்றாண்டுகள் கடந்தும் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மிகச் சமீபத்தில் சுரஜித் தாரா, ஜோதிர்மயீ தாஸ், ரஜத் சுரா ஹஸ்ரா, சுபதீப் சட்டர்ஜீ, சுரேந்து தத்தா, அபிஜித் முகர்ஜி, கிங்சுக் தாஸ் குப்தா ஆகியோர் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுகளை வென்ற அறிவியலாளர்கள்.
தேவி ப்ரசாத் ராய் சௌத்ரி, சதீஷ் குஜ்ரால், ராம்கிங்கர் பாஜ் மிகப் புகழ் பெற்ற சிற்பக் கலை வல்லுனர்கள். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அருமையான உழைப்பாளர் சிலையை தேவி ப்ரசாத் ராய் சௌத்ரி தான் வடிவமைத்தார்.
‘சைன்ஸ் சிடி’ கொல்கத்தா, ஆன்மீகம் அறிந்த எனக்கும் உவப்பான ஒன்று. அங்கே ஆர்யபட்டரின் ‘ஸ்கொயர் ரூட், க்யூப் ரூட்’ சூத்திரங்கள் விளக்கப்பட்ட பதாகைகள், அணுத் தோற்றங்கள், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் புகைப்படம் மற்றும் அவரது சாதனை விளக்கக் கையேடு, ஒளி அமைப்பு மாறுபாடுகளால் உருவங்களைக் காட்சிப் படுத்தியிருக்கும் நேர்த்தி, மிக சுத்தமான பராமரிப்பு, அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் திரைக் காட்சிகள் என சுற்றுலாப் பயணிகள் சுற்றிச்சுற்றி வியந்தனர். இன்று வரை அறிவியல் அடைந்துள்ள முன்னேற்றங்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது ஒருவர் சொன்னார்: ‘அரசு மட்டுமே தொலைக்காட்சி நடத்தி வந்த காலத்தில் ‘க்வெஸ்ட்’ என்ற அபாரமான அறிவியல் நிகழ்ச்சியை கொல்கத்தா வழங்கி வந்தது. அதைப் போலவே கணிதத்திற்குமான ஒரு நிகழ்ச்சி பலரைக் கணிதக் காதலானாக்கியது. ஆனால், கணித நிகழ்ச்சி கொல்கத்தா செய்ததா என நினவிலில்லை. இப்போது அதெல்லாம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.’
விக்டோரியா ஹால் கன கம்பீரமாக இருக்கிறது. அதனுள் பல ஆங்கிலேய ஆளுநர்களின் புகைப்படங்களும், வரையப்பட்ட படங்களும் இருக்கின்றன. குறிப்பாக ராபர்ட் க்ளைவும், சுபாஷ் சந்த்ர போசும் அதிகமாகத் தென்படுகின்றனர். வங்காள மண்ணின் முக்கியத் தலைவர்களும், இலக்கியகர்த்தாக்களும், சமூக நீதியாளர்களும், பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட நாணயங்கள், உடைகள், ஆபரணங்கள் போன்றவையும் தென்படுகின்றன.
பிர்லா கோளரங்கம் மிக அருமையாக இருக்கிறது. அதன் நுழைவாயிலில் அழகான மலர்ப் பூங்கா. வங்காளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பால் வீதியைப் பற்றியும், கோள்கள், விண்மீன்களைப் பற்றியும் தரமான காணொலிகளைப் பார்க்கலாம். அரங்கத்தின் பின்புறத்தில் ஆய்வாளர்களுக்கான பகுதியும், அறிவியல் மாநாடு நடத்தும் கூடமும் உள்ளன. இன்று தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் வங்காளம் அறியாதவர்களுக்கு அந்தக் காணொலியை உடனுக்குடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழி பெயர்த்துதவும் கருவிகளைக் கொடுக்கலாமல்லவா?
வெண்புலியைப் பார்க்க வேண்டுமா? எங்கள் விலங்குப் பூங்காவிற்கு வாருங்கள். பெருந்தொற்று இந்த உயிரியல் பூங்காவையும் மறைமுகமாகப் பாதித்திருக்கிறது.
‘எகோ கார்டன்’ இந்த நகரின் புது வரவு. உலக அதிசயங்கள் ஏழின் நகல் மாதிரிகளை அமைத்து வருகிறார்கள். முக வாயிலில் மிக உயரமான ஏசுவின் சிலை இருக்கிறது. கொல்கத்தா வானூர்தி நிலையத்தில் சிறு வடிவக் கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விதம் நன்றாக இருக்கிறது.
சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போன்ற உலக அழகிகளின் பூமி எங்களுடையது. எங்கள் மண், எங்கள் சக்தி, எங்கள் சணல், எங்கள் மீன், எங்கள் நதி, எங்கள் கடல்!
பங்களாதேஷின் தேசிய கீதமென்றாலும் நான் சொல்வேன் ‘அமர் சோனார் பங்களா.’
‘வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை வேல் கையிற்பற்றிக் குதிப்பாள்; ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்தோதி யுலகெங்கும் விதைப்பாள்.’-பாரதி.