
(1) சால்பு
குறுகுறுக்கும் விழிகளில்
குமிழ் சிரிப்பைக்
குளிர வாரி வழங்கும்
கைக்குழந்தையைத் தன்
இடுப்பிலேந்திய அவள்
கையேந்தும் முன்,
குறிப்புணர்ந்து அவன்,
குலையில் ’இளநி’யொன்றைச் சீவி
அவன் ஈயாதது போல் அளிக்க
அவள் இரவாதது போல் ஏற்க
ஈதலும் இரத்தலுமின்றி
உயர்ந்தென்றும் இழிந்தென்றுமின்றி,
ஒள்ளிய பரிதியினும் ஒள்ளியதாய்த்
தெரிய வரும் சால்பு
எவ்வளவு இயல்பானதென்று தெரிய
ஆச்சரியமாயிருக்கும்.
எவ்வளவு இயல்பாயாகியதாலா சால்பு,
அவ்வளவு உயர்வாய் அரிதாகியதா என்று
ஆச்சரியப்படுவதிற்கில்லையென்றும்
தோன்றும்.
என்ன பயத்ததோ
சால்பு?
என்ன பயத்ததோ வாழ்வு
அன்ன பயத்தது அது.
(2) சூக்குமம்
காலி செய்து சாமான்களை
வாகனத்தில் ஏற்றினேன்.
தமக்குள் அனுசரித்து
உட்கார்ந்து கொண்டன
சாமான்கள்.
விடுவதாயில்லை
’வசித்த வீடு’.
கூட்டிப் போகச் சொல்லும்.
சித்தத்திருத்தி
சூதானமாய்க் கூட்டிப் போனேன்
பழையபடி
ஒரு கட்டிடம் இருந்தது
அங்கு.
(3) நிரல்
விடியலில்
வீட்டு வாசல் திறந்ததும்
முந்தி நுழைந்தது
முன் காத்திருந்த
முற்ற வெளி.
பிறகு நுழைந்தன
பையப் பைய
பிற காட்சிகள்.
இறுதியாய் நுழைந்தவை
வீட்டினுள்
ஏற்கனவே இருப்பவையாய்
இருந்தன!
(4) விழி
உறைந்து போய் அச்சத்தில்
ஒளிந்து நோக்கும்
ஒரு குழந்தையின் விழி போல்
ஒளிந்து நோக்கியது, தான்
ஒளிந்து நோக்குவது எனக்குத்
தெரியுமென்று தெரியாது
கொடியிடுக்கில் ஒரு
குண்டு மல்லி.
சும்மா உறைந்திருக்கலாம் அது.
சூசகமாய்ச்
சொன்னது:
’விட்டு விடு
என்னை.’
கொய்தேன் முதலில் அதை-
கொடியின் விழியை-
கொய்த விழியில்
தெரிந்தேன்
உடலாய்
நான்.
சங்க கால நடையில் ஒன்று சம கால நடையில் ஒன்று – அருமை
நண்பர் தந்த ஊக்கத்திற்கு நன்றி. வணக்கம்.