அம்மண(ன)ம்

இந்த வீக் என்ட் மீட் பண்ணலாமா? என்ற அவளின் சாட் மெசேஜூக்கு, இல்ல இந்த வீக் என்ட் நான் ஊருக்குப் போறேன், அப்றம் பாக்கலாம் என்று ரிப்ளை அளித்துவிட்டு என் லேப்டாப்பை மூடி வைத்தேன். ஏ சியை ஆன் செய்தேன். குளியல் அறையில் இருந்து அக்கா அவள் கைக்குழந்தையை குளிப்பாட்டி துண்டில் போர்த்தி எடுத்துக்கொண்டு வந்தாள். நான் குழந்தையைப் பார்த்து “அடி பட்டுக் குட்டி” என்று கொஞ்சி சிரித்தேன். துண்டை எடுத்துவிட்டு அந்த குழந்தையையும், ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரையும், காட்டன் சட்டை டிராயர் ஒன்றையும் என்னிடம் கொடுத்து போட்டு விடும்படி சொன்னாள் அக்கா. 

“என்னடா பாக்குற புடி குழந்தையை” என்றாள். 

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குக்கா” என்று சட்டென்று அந்த இடத்திலிருந்து நகர்ந்து விட்டேன்.

துண்டை எடுத்து என் முகத்தைத் துடைத்துக்கொண்டேன். தண்ணீர் குடிக்க எடுத்த டம்பளர் என் கையிலிருந்து தவறிக் கீழே விழுந்தது. நான் என் அறைக்குள் சென்று அங்கும் இங்கும் சற்று நேரம் நடந்தேன். என் டேபிலில் இருந்த நியூஸ் பேப்பரைப் புரட்டினேன். ‘காதல் தோல்வியில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்’ என்று தலைப்புச் செய்தி. அதை மூடி வைத்துவிட்டு, என் படுக்கையில் உட்கார்ந்து கொண்டேன். அதற்குள் என் அக்கா அந்த குழந்தைக்கு பவுடர் போட்டு டிரஸ் போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள்.

“என்னவோ மந்திரிச்சு விட்டமாதிருயே இருக்கடா நீ. சரி நான் குளிச்சிட்டு வரேன், இவன கொஞ்சம் வச்சுக்கோ” என்று மீண்டும் என் கையில்  குழந்தையை கொடுத்தாள் அக்கா.

நான் அந்த குட்டியை வாங்கிக் கொஞ்ச ஆரம்பித்தேன்.

“ஏன்டா வீட்ல ஒரு கண்ணாடி வாங்கி வெக்க கூடாதா? எப்படி நீ கண்ணாடிய பாக்காம டிரெஸ் பண்ணிக்கற?” என்றாள் நெத்தியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக்கொண்டே அக்கா.

நான் ஒன்றும் சொல்லாமல் அக்காவைப் பார்தேன். சற்று நேரத்தில் அக்கா அவள் குழந்தையை எடுத்துக்கொண்டு என் வீட்டிலிருந்து கிளம்பினாள்.

 “அம்மா, அப்பா, மாமா எல்லாரையும் கேட்டதா சொல்லுக்கா” என்றேன்.

“சரிடா, உடம்ப பாத்துக்கோ” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அக்கா. 

கதவை மூடும்போது “உன்ன நம்பிதான்டா மாமாவ ஹாஸ்பிட்டல்ல சேக்கப்போறேன். மறக்காம பணம் அனுப்பிச்சுரு” என்றாள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே .

நான் தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். லிஃப்ட்டில்  15  ப்லின்க் ஆகி நின்றது. நான் அதன் உள்ளே சென்றேன் காலேஞ் பெண்களின் சிரிப்பு சத்தம் கலகலத்தது. அப்பெண்களின் பளிச்சிடும் சுடிதார் வண்ணத்தையே பார்த்துக்கொண்டிருந்தது ஒரு சிறுமி. நான் நுழைந்ததும் அனைவரின் பார்வையும் என் மேல் படர்ந்தது. நான் கதவை பார்த்து திரும்பி நின்றுகொண்டேன்.. லிஃப்ட்டிலிருந்து இறங்கும்போது, ஒரு சிறுமி அவள் அம்மாவிடம் “ஏம்மா இந்த அன்கிள் எப்போதுமே ஹெல்மெட்டோடயே இருக்காங்க?” என்று சத்தமாக கேட்டுக்கொண்டே நடந்தது.

அந்த லிஃப்ட்டில் வந்த சில காலேஜ் பெண்கள் துப்பட்டாவை சரிசெய்வது போல சற்றே குனிந்து என்னைப் பார்த்து கிசுகிசு என்று ஏதோ ரகசியம் பேசி சிரித்துக்கொண்டார்கள். 

“ஷ்ஷ் பேசாம வா” என்று அந்த சிறுமியின் அம்மா அவளை இழுத்துக்கொண்டு போனாள்.

அந்த சிறுமியின் கௌனில் இருந்த முயல்குட்டிகள் என்னை கொட்டகொட்ட பார்ந்துக்கொண்டே தாவிக்குதித்து ஓடின. நான் பைக்கை எடுத்துக்கொண்டு விரைந்தேன்.

நல்லவேளை நான் சென்ற அந்த க்ளீனிக்கில் அப்பொழுது எந்த பேஷன்ட்டும் காத்திருக்கவில்லை. நான் உடனே டாக்டர் அறைக்குள் நுழைந்து விட்டேன். ஒரு வயதான டாக்டரைத் தவிற வேறு யாரும் அந்த அறையில் இல்லை. அவரின் வெள்ளை கோர்ட் பளிச்சென்று கண்களைக் கூசியது. இந்த டாக்டர் கண்டிப்பா அங்க சாப்ட வந்திருக்கமாட்டாரு என்று என் மனதில் டைப் அடித்தது.

“சொல்லுங்க” என்று டாக்டர் என்னை ஊடுருவினார்.

அவரின் சோடாபொட்டி கண்ணாடிக்குள்ளிருந்து அவரது இரு கண்களும் அகண்டு விரிந்து முழித்தன, கண்ணாடித் தவளை ஒன்று வாய் பிளப்பது போல. என் உடலிலோ சட்டை உறித்த பாம்பொன்று ஊர்ந்தது. நான் தொண்டையை சரி செய்துகொண்டு என் உடல் உபாதைகளைக் கூறினேன்.

“அசிடிட்டி தான். நேரத்துக்கு ஒழுங்கா சாப்டுங்க, எட்டு மணி நேரம் தூங்குங்க, ஸ்ட்ரெஸ் ஆகாம இருங்க” என்று கூறிக்கொண்டே சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார் டாக்டர்.

நான் எழுந்திரிக்கும்போது என் உடலில் ஊரும் சட்டை உறித்த பாம்பு அவர் தவளை கண்களுக்குத் தெரிந்துவிட்டது போல, “ஏன் ஒரு மாதிரி அழுத்தமா இருக்கீங்க?” என்றார்.

நான் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டேன்.

“அப்டிலாம் இல்ல டாக்டர். ஜ யம் ஆல் ரைட்” என்றேன்.

அவர் கண்ணாடித் தவளை சுறுங்கியது ,எனக்கு பழகிவிட்ட பார்வை அது. நான் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினேன். பைக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். 

அந்த மாநகரத்தின் பொருளாதாரத்தை அந்த சாலையின் டிராஃபிக் சிக்னலில் அறிந்துகொள்ள முடிந்தது. எத்தனை வகை இம்போர்டட் கார்ஸ், பைக்ஸ். எல்லாமே வண்ணமடித்துக்கொண்டு அழகாக இருந்தன. அத்தனை மனிதர்களும் அழகான, ஆடம்பரமான ஆடைகளுடன் சிரித்ததுக்கொண்டோ, சீரியசாகவோ இருந்தனர். ஹெல்மெட்டுக்குள்ளிருந்து பார்க்கும் இவ்வுலகம் எத்தனை அழகானது என்று என் மனம் டைப் அடித்தது. பச்சை வர்ண சிக்னல் விளக்கு என்னை நகர்த்திச்சென்றது.

“வொய்ல்ட்லைஃப்” என்ற ரெஸ்ட்ரான்ட் பார்க்கிங்கில் என் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த ரெஜிஸ்டரில் சூப்ரவைசர் என்ற பக்கத்தில், கார்த்திக் என்ற என் பெயரின் கீழே கையொப்பமிட்டேன். அப்பொழுது என் ஹெல்மெட் என்னிடம் இல்லை. அங்கிருந்த ஆபிஸ் பெண் சதையொன்று என்னைப் பார்துத்துக் கண்சிமிட்டி “குட் ஈவினின்ங்” என்றது.

இவளின் பெயர் கூட எனக்குத் தெரியாது. இவள் என்னிடம் எதைப்பார்த்து கண் சிமிட்டுகிறாள்!  நான் தலையசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். சிறிது நேரத்தில் நான் என் வேலையில் ஐக்கியமானேன். மெல்லிய தபேலா இசை ஒன்று அந்த இடத்தில் பரவிக்கொண்டிருந்தது. உணவுகள் பரிமாறப்படுகின்றன. ஆணும் பெண்ணுமாக உடல்கள் அங்கே திரிந்துகொண்டிருந்தன. சிரிப்பு, உரையாடல் என எல்லா மனித வாடைகளும் அடித்தது அங்கே. ஆனால் எதிலும் மனிதம் தென்படவில்லை.

அந்த அறையில், உயிருள்ள சதைப்பிண்டங்களைத் தவிற மற்றவைகளெல்லாம் ஆடை அணிந்திருந்தன. நாற்காலிகள், மேசைகள், கதவுகள், சன்னல்கள், சுவர்கள் மற்றும் எல்லாம். ஏன் பரிமாறப்பட்ட ரொட்டிகள் கூட துணியால் மூடப்பட்டிருந்தன. இந்த மனிதர்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை? உண்பவர்கள், சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், ஆபிசில் வேலை பார்ப்பவர்கள் என அத்தனை ஜீவன்களும் எதற்காக இங்கு நிர்வாணமாய் இருக்கிறார்கள்? எதற்காக இந்த நிர்வாண உணவகம்? என்ற கேள்விகளை என் மனம் டைப்படித்தது. 

என் மூளையோ நாராசமாய் சிரித்தது. சிரிக்காதா பின்ன, இரண்டு வருஷமா இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே தானே நானும் இங்கே நிர்வாணமாய்த் திரிகிறேன். அதுனால என்ன இப்போ? வெயிட்டரா சேர்ந்தேன், இன்று சூப்பர்வைசரா உயர்ந்திருக்கிறேனே! இம்முறை என் மனம் நாராசமாய் சிரித்தது, மனித அடையாளத்தை இழந்தவனுக்கு வெயிட்டர், சூப்பர்வைசர் என்ற அடையாளமெல்லாம் கூட உண்டா? என்று! 

அதற்குள் அங்கே இரு சதைப் பிண்டங்கள் சத்தமாக கத்திக்கொண்டிருந்தன. ஒரு பெண் சதை கைகளை ஒயர்த்திக் கத்திக்கொண்டிருந்தது. அதன் வயிற்றுத் தசைகளும் மார்புத் தசைகளும் அதன் ஆக்ரோஷத்துக்கிணங்க அசைந்து கொண்டிருந்தன.

பரிமாறப்பட்ட பன்னீர் கிரேவியில் ஏதோ முடி இருந்ததாம். ஆண் சதை செய்வதறியாமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது. அதன் கழுத்து தசைகள் குனிந்து வளைகயில் பிட்டத் தசைகள் குவிந்து பின் தள்ளிக்கொண்டிருந்தது. நான் அங்கு விரைந்து சென்றேன். என் கண்களை அந்தப் பெண் சதை கண்களில் உரையவிட்டு நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.

புது கிரேவியை இன்னும் ஐந்து நிமிடத்தில் அனுப்பிவைக்கிறேன் என்றேன் மற்றும் அவர்களுக்கு (அப்பெண் பிண்டத்துடன் இன்னும் பத்து பிண்டங்கள் சேர்ந்து வந்திருந்தது) அன்றைய உணவை காம்பிலிமென்டாக வழங்குவதாகக் கூறினேன். உயர்ந்து அசைந்துகொண்டிருந்த அக்கை தசைகள் மடங்கிக்கொண்டன.

எனக்குள் ஒரு மூச்சுத் திணறல், காட்டுக்குள் நடக்கும் வேட்டையின் ஓட்டம், என் கண்கள் உரைந்த வேளையில், என் தசைகளில் எத்தனை கண்கள் உரைகின்றனவோ என்ற நடுக்கம், என் முகம் சிதைந்து விடக்கூடாதா என்ற தவிப்பு. நான் அங்கிருந்து விடுக்கென்று நகர்ந்தேன்.

குறுக்கும் நெடுக்குமாய் உடல்கள், சதைகள் தொங்கிக்கொண்டும் ஒட்டிக்கொண்டும், குலுங்கிக்கொண்டும் என்னை சிதைத்துக்கொண்டிருந்தன. இன்று எத்தனைக் கண்கள் என் உடலைப் பார்த்ததோ என்ற அச்சம் என் மனதில் படர்ந்துகொண்டிருந்தது. 

டாக்டர் சொன்ன அசிடிட்டியை என்னால் உணர முடிந்தது. என் வயிற்றில் அப்படி ஒரு எரிச்சல். ஹெல்மெட்டுக்குள் முகத்தை நுழைக்க என் மனம் தவித்துக்கொண்டிருந்தது. இரண்டு வருடமாக இதே பயம், இதே சுய படுகொலை. ஒருவழியாக அன்றைய வேலையை முடித்துவிட்டு ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு அந்த வொய்ல்ட்லைஃப்பிலிருந்து கிளம்பினேன்.

என் ஆடையும் அந்த ஹெல்மெட்டும் எத்தனை சுகம். இருட்டுக்குள் தொலைந்த குழந்தையை அணைத்துக்கொள்ளும் தாயின் சுவரிசம். ஆடை வந்ததும் அமைதியும் வந்தது. என் மனம் தெளிந்த நீரோடையாய் ஆனது. வயிற்றிலும் கூட ஆசிட் வற்றிப்போய் அவ்வோடைத்தண்ணீர் பரவிய சுகம். 

அந்ந நிர்வாண உலகத்திலிருந்து அலங்கார உலகத்திற்கு என் பைக்கில் பயணித்தேன். இரவு காற்று சில்லென்று என்னை அணைத்தது. முழு நிலா என் கண்களில் தென்பட்டது கூடவே மனிதமும்.

நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் படுக்கையில் அமர்ந்து லாப்டாப்பைத் திறந்தேன். அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

“நாம் கண்டிப்பாக சந்திக்கவேண்டும். இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நீ நம் சந்திப்பை தள்ளிப்போடப்போற” என்று அவள் அனுப்பியிருந்தாள்.

அடுத்த வேட்டையின் ஓட்டம் என் மனதில் ஆரம்பமானது. அவள் ஆன்லைனில் வந்தாள்.

“ஹேய் ரகு நான் அனுப்புன மெசேஜ் பாத்தியா?” என்றாள்.

“பாத்தேன்டா. மீட் பண்லாம்” என்றேன்.

“நாளைக்கு?” என்ற மெசேஜ் சிறுத்தையின் கோரைப்பல் போல கூர்மையாய் என் மனதைக் குத்திக் கிழித்தது.

“சரி” என்று அனுப்பிவிட்டேன்.

“ஈவினின்ங் ஏழு மணிக்கு கிரீம் சென்டர் ரெஸ்ட்ராண்ட்?” என்று அடுத்த சில பற்கள் தெரிந்தது.

நல்லவேளை இவள் என் நியூட் ரெஸ்ட்ராண்ட்டை சொல்லவில்லை. இவளுக்கு அதில் விருப்பமில்லை போல என என் மனம் டைப் அடித்தது.

“நாளைக்கு எக்சாம் இருக்கு படிக்கனும் சீ யூ” என்று ஆஃப் லைனில் போனாள் ஸ்வப்னா.

மீண்டும் என் வயிற்றில் ஆசிட் மழை கொட்டியது. பயம் என் இரவுகளை ஆர்ப்பரித்துக்கொண்டது. ஒருவேளை அவள் அங்கு சாப்பிட வந்திருப்பாளோ? எப்போதாவது என்னை நிர்வாணமாய்ப் பார்த்திருப்பாளோ? எதையாவது சொல்லி நாளை ஹெல்மெட்டுடனே அவளை சந்தித்து வந்துவிடலாமா? என்று கேள்வி மேல் கேள்விகள் என்னைத் துரத்தியடிக்கின்றன. 

இப்படியே எத்தனை நாட்கள் இருக்க முடியும். எப்படியாவது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நாளை அவளைப் பார்த்துவிடவேண்டும். தான் ஒரு நியூட் ரெஸ்ட்ராண்ட்டில் வேலை செய்வதை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனம் டைப்படித்தது. எனக்கு பயத்துடன் உறங்குவது பழகிவிட்டிருந்தது.

காலை விடியும்போதே என் மனதிற்குள் வேட்டையும் ஆரம்பமாகியிருந்தது. நான் அன்றாட வேலைகளை ஒவ்வொன்றாக முடித்துக்கொண்டிருந்தேன். இன்று ஆசிட் வெள்ளமே என் வயிற்றுக்குள் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த டாக்டரின் முகம் நினைவிற்கு வந்தது. அவர் என்னை நிர்வாணமாகப் பார்த்திருப்பாரோ என்ற கேள்வியுடன் அவர் கொடுத்த மாத்திரியையும் சேர்த்து விழுங்கினேன். மணி ஐந்து. கடிகாரம் நின்று விடக்கூடாதா என்று மனம் ஓடியது, கிளம்பிவிட்டேன்.

கிரீம் சென்டருக்கு வந்தும் விட்டேன். ஹெல்மெட்டுடன் உள்ளே நுழைய முற்பட்டபோது செக்யூரிட்டி என்னைத் தடுத்து நிறுத்தினார். ஹெல்மெட்டைக் கழட்டினேன். வணக்கம் சொல்லி கதவைத் திறந்துவிட்டார். உள்ளே வெயிட்டர்கள் (இவர்களை இப்படி அழைக்கலாம், இவர்களுக்குதான் மனித அடையாளம் இருக்கிறதே) அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்..

மனிதம் நிறம்பியிருந்தது அந்த ரெஸ்ட்ராண்ட்டில். நல்லவேளை இப்பொழுது அத்தனை கூட்டம் இல்லை. நான் அந்த அறையின் மூலையிலிருந்த ஒரு டேபிலில் போய் அமர்ந்தேன். லைட் டிம்மாக இருந்தது. அந்த மூலை இருக்கையில் நான் யார் கண்ணிலும் படுவதற்கு வாய்ப்பில்லை. என் மனம் பதபதத்தது, சிறுத்தையின் பிடியில் மாட்டாமல் ஓடும் மான் போல.

“ஹாய்” என்ற குரல் கேட்க திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த கணம் சிறுத்தையின் பற்களில் குத்திக் கிழிந்து கிடந்தேன். ஸ்வப்னா!!! வொய்ல்ட்லைஃப்பில் ரெஜிஸ்டரில் கையெழுத்து போடும்போது என்னைப் பார்த்து சிமிட்டும் அதே கண்கள்.

“கார்த்திக் நீங்களா? ரகுன்னு சொன்னீங்க?” 

என் உடல் நடுங்கியது. நா வறண்டது. நான் அங்கிருந்து கிளம்ப முற்பட்டேன். ஸ்வப்னா என் கைகளை பிடித்து இழுத்து தடுத்தி நிறுத்தினாள். நான் படபடப்பில் அமர்ந்தேன்.

“ஏன் என்கிட்ட பொய் சொன்னீங்க?” என்றாள்.

நான் அவள் கண்களைத் தவிர்த்தேன். என் குரல் தடுமாறியது.

“நீ கூடத்தான் இதப்பத்தி என்கிட்ட சொல்லல” என்றேன்.

“முதல் தடவை சாட் பண்ணப்போவே, நான் தான் பார்ட்டைம் வேலை பார்க்கிறேன்னு சொன்னேனே. என்ன வேலைன்னு சொல்றதுக்குள்ள நீங்க வேற எதுவோ பேசினீங்க அப்றம் நானும் மறந்துட்டேன். அதுக்கப்றம் நாம ரெண்டு பேருமே வேலையப்பத்தி பேசிக்கவேயில்லை. நமக்கு தினமும் பேசறதுக்கு புதுசு புதுசா நிறைய டாப்பிக் இருந்தது. நான் பர்பஸா இதப்பத்தி மறைக்க நினைக்கல. ஆனா நீங்க உங்களோட பேரு, வேலைன்னு எல்லாமே பொய் சொல்லியிருக்கீங்க” என்றாள்.

நான் குற்ற உணர்வில் தவித்தேன்.

“சாரி” என்று கூறிவிட்டு எழுந்தேன்.

அவள் மீண்டும் என் கையைப் பிடித்து இழுத்து என்னை அமர்த்தினாள். 

“மத்த எல்லா வேலையும் மாதிரி இதுவும் ஒரு வேலை, இதுல மறைக்க என்ன இருக்கு” என்றாள்.

மறைக்காமல் இருப்பது எனக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் என்று அவளுக்குத் தெரியாதே. 

இவளால்தான் மறைக்காத நிர்வாணத்திலும் கண்சிமிட்டி சந்தோஷமாக மாலை வணக்கம் சொல்ல முடிகிறதே. இவளால் எப்படி காலேஜூக்குப் போக முடிகிறது என்ற பல எண்ணங்களும் கேள்விகளும் என்னில் நிறம்பிக்கொண்டிருந்தன.

“இது அசிங்கமான வேலை” என்றேன்.

“ஆதிவாசி மனுஷங்கல்லாம் டிரெஸ் போட்டுருந்தாங்களா? ஏன் நாம பொறக்கறப்ப டிரெஸ் போட்டுகிட்டு பொறந்தோமா என்ன? ஆடைங்கறது தட்பவெப்ப நிலையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மனுஷன் கண்டுபிடிச்ச ஒரு விஷயம், அவ்ளோதான். என்ன பொறுத்தவரைக்கும் அசிங்கம், வக்கிரம் இதெல்லாம் மனிஷன் உடலுக்குக் கிடையாது, மனசுல தான் இருக்கு. அங்க வந்து சாப்டுற எல்லாரும் சந்தோஷமா, சதந்திரமா தான உணர்றாங்க இதுல அசிங்கப் பட என்ன இருக்கு” என்றாள்.

அவளுடன் விவாதிக்கும் திராணி எனக்கு இல்லை. வேட்டையில் விவாதம் அர்த்தமற்றது. ஆனால் என் மனதிற்குள் நடக்கும் வேட்டை அவளுக்கு எப்படித் தெரியும். அவளின் இருப்பு என்னை விழுங்கிக்கொண்டிருப்பது நான் மட்டுமே அறிந்த விஷயம். இப்பொழுது டாக்டர் உருவமும் இவள் கோரைப்பல்லை பொருத்திக்கொண்டு பார்க்கிறது என் நிர்வாணத்தை. நான் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அப்பாடா என் ஹெல்மெட் உலகம். ஆசிட் வெள்ளத்திலிருந்து என்னை காக்கும் கவசம். வரும் வழியில் ஒரு முகக் கண்ணாடி விற்கும் கடையில் பைக்கை நிறுத்தி ஆளுயரத்திற்கு ஒரு நிலைக்கண்ணாடியை வாங்கிகொண்டு வீட்டிற்கு வந்தேன்.

அவசஅவசரமாய் அந்தக் கண்ணாடியைப் பிரித்து என் அறையில் நிறுத்தினேன். ஹெல்மெட்டை கழட்டி விட்டு அதில் என் முகத்தைப் பார்த்தேன். அதெப்படி ஆடைங்கறது வெறும் தற்காப்பு விஷயமா இருக்கமுடியும்? ஆடை மனிதத்தின் அடையாளம் இல்லையா? நாகரிகத்தின் மூலாதாரம் இல்லையா? சமூக அமைப்பின் அதன் விதிமுறைகளின் பிரதிபலிப்பு இல்லையா? தன்மானத்தின் வெளிப்பாடு இல்லையா? உன்னால எப்படி ஸ்வப்னா  அசிங்கப்படாம இருக்க முடியுது? என்ற கேள்விகளை அந்தக் கண்ணாடி மேல் எரிந்தேன். என் கோர முகம் அதில் நெளிந்து கொண்டிருந்தது.

அது சரி நான் அசிங்கப்பட்டு என்ன சாதித்துவிட்டேன். பட்டதாரியாக இருந்தாலும் என் படிப்பிற்கு ஏற்ற வேலையை தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் எனக்கு இல்லையே! வயிற்றுப் பசி, வீட்டுப் பொருளாதாரம் என்னை இந்த நிர்வாண உலகத்திலிருந்து விடுவிடுத்துக்கொள்ள விடமாட்டிங்குதே! ரகு இந்த வேலையை வாங்கிக்கொடுத்தபோது நிர்வாணத்தை விட அக்காவின் விதவைக்கோலம் கோரமாய்த் தெரிந்ததே. மாமாவின் மருத்துவ செலவு என்னை இந்த ஹெல்மெட் உலகத்திற்குள் தள்ளிவிட்டதே! என்று என் மன நியாங்களை அந்தக் கண்ணாடியில் வீசி நெளிந்த முகத்தை சரிசெய்துகொண்டேன்.

லைட்டை அணைத்துவிட்டு படுக்கையில் சரிந்தேன். என்னால் தூங்க முடியவில்லை. அவமானம் என்னை ருசித்து தின்றுகொண்டிருத்தது. ஸ்வப்னாவின் சிமிட்டும் கண்கள் என் வயிற்றில் ஆசிட் மழையை கொட்டிக்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் திணறும் நண்டாய் என் மனம் ஊர்கிறது. சித்திரவதையாய் இருந்தது. நாளை ஸ்வப்னாவை சந்திப்பதை என்னால் கர்ப்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை.

அவசரஅவசரமாக பால்கனிக்கு சென்று துணிகாயப்போட கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தேன். இழுத்துப்பார்த்தேன், ஸ்டாரான்ங்காகத்தான் இருக்கிறது. கதவை மூடிவிட்டு உள்ளே வந்து சீலின்ங்கில் இருந்த கொக்கியில் அதைக்கட்டினேன். சேர் ஒன்றை இழுத்துப்போட்டு அதன் மீது ஏறி நின்று கயிற்றைக் கழுத்தில் கட்டிக்கொண்டேன். சட்டென்று ஹெல்மெட் மனிதில் பளிச்சிட்டது. கயிற்றைக் கழுத்திலிருந்து கழட்டிவிட்டு கீழே இறங்கி ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டேன். மீண்டும் சேரில் ஏறி கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டேன். இதையெல்லாம் செய்யும்வரை என் மனதில் வேட்டையின் ஓட்டம் இல்லை, ஆசிட் மழையை அக்கணம் நான் உணரவில்லை. என்ன ஒரு சுகம். கயிற்றை இறுக்கிவிட்டு சேரை தள்ளிவிட்டேன். 

அதற்குப் பின் அம்மணம் அம்மனத்தை வேட்டையாடவேயில்லை. அவன் ஹெல்மெட் முகத்தை யாருமே அங்கு பார்க்கவில்லை. அவன் வீடு பூட்டியே கிடக்கிறது. அவன் இல்லாததை யாரும் அங்கு உணரவேயில்லயா? அந்த பிளாட்டில் யாரும் அவன் வீட்டை திறக்க முற்படவேயில்லயா? 

நண்டு ஊர்ந்த மண்ணில் தடங்கள் உண்டோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.