மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்

புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.

ஆங்கிலப் படிப்பு (English Medium)

மீட்பாளர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள வெள்ளையர், தாமஸ் பாப்பிங்டன் மெக்காலே. 1830ல், இந்தியாவில் கட்டாய ஆங்கில பாடத் திட்டத்தை, குறிப்பாக மேற்தட்டு மக்களுக்காக கொணர்ந்தார். இவர்கள் அதன் மூலம் நவீன மதிப்பான கருத்துக்களை சாமானியர்களிடம் கொண்டு செல்வார்கள் என்பது அவரது எதிர்பார்ப்பு. அந்த வரம்பிற்குள் அவருக்கு கிடைத்துள்ள ‘எதிரி’ என்ற உருவகம் சரியானதல்ல. மெக்காலே, ஆங்கிலமயமாதல் நவீன இந்தியாவிற்கு அத்தியாவசியம்; அது இந்தியர்களை சுதந்திரத்திற்கு தயார்படுத்தும் என நினைத்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விசுவாசியான காந்தி 100 வருடங்களுக்கு பிறகு முழு சுதந்திரம் என்ற சித்தாந்தத்தை கையில் எடுப்பதற்கு முன்னரே மெக்காலே, இந்தியர்கள் சுதந்திரமாகவும் ஆங்கிலேயர்களுக்கு சமமானவர்களாகவும் வாழக்கூடும் என்ற கருத்தை கொண்டிருந்தார். ஆயினும், அவருடைய கொள்கைகள் இந்தியா காலனியத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு பெரிய முட்டுக்கட்டையாக மாறிவிட்டது. ஆங்கில மொழி பராமரிப்பும், நேருவின் நிர்வாகத்தில் அதன் வளர்ச்சியும்தான், தற்போதைய இந்தியாவில் காலனியத்தின் மிச்சமாக நிற்கும் ஆங்கிலத்தின் ஆளுமை. மெக்காலேயின் நல்லெண்ணங்கள் காலனிய காலத்திற்கு ஒத்ததாக இருந்திருக்கலாம். ஆனால், இந்திய குடியரசின் ஜனநாயகத்திற்கு விரோதமான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மது கிஷ்வர் எழுதியுள்ளது போல், இந்தியாவில் ஒருவரது வேலை வாய்ப்பை நிர்ணயிப்பது அவரது சாதியோ மதமோ அல்ல; ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவரா என்பதுதான்.

ஆங்கிலம் காலனிய காலத்தியது எனபது ஒரு வரலாற்றுக் குறிப்புதான். இந்திய அரசியலமைப்புப் பிரகாரம், ஆங்கிலம் 1965க்குள் படிப்படியாக வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். வெளிநாட்டு சக்தி எதுவும் இதற்கு காரணமல்ல. இந்திய மேல்தட்டினர், திராவிடர்களின் சந்தேகங்களை சாக்காக வைத்து, மாற்றத்தை வரவிடாமல் நாசமடித்து விட்டனர். ஆங்கில ஆதிக்கத்தினால் இந்திய சாமானியர்கள் தங்கள் உரிமைகளை இழந்து தவித்ததில் ஆதாயமடைந்தவர்கள் இதே மேல்தட்டினர்தாம். உரக்கச் சொல்லாவிடினும், ஆங்கிலம் தங்களுக்கு அளித்த சிறப்புரிமைகளுக்காக மனதிற்குள்ளே மனதார மெக்காலேயை வாழ்த்தியிருப்பார்கள். (கிருத்துவ கோளத்தை சார்ந்த அம்பேத்காரர்களும், மேற்கத்திய மனிதாபிமானத்தையும், சமத்துவத்தையும் இந்தியாவிற்கு எடுத்து வந்ததற்காக மெக்காலேயை புகழ்கின்றனர்). காலனியத்திலிருந்து முழுவதுமான விடுபடுதல் என்பது ஏற்கனவே தாமதமான ஆங்கில மொழியிலிருந்தும் விடுபடுவதும்தான். ஆனால் அது உள்நாட்டிலுள்ள மேல்தட்டினரை தோற்கடிப்பதின் மூலம்தான் நடைபெற இயலும். வெளிநாட்டினரையும் காலனியர்களையும் தோற்கடிப்பதாலல்ல.

கலாச்சார கோளிலும் ஆங்கிலத்தை ஒத்த முறையை நாம் காண முடிகிறது. காலனியம் உள்நாட்டு மேல்தட்டினரிடம் ஊசிவழியாக ஏற்றியுள்ள விவரங்களை அவர்கள்,பொதுமக்களிடம் திணிப்பதற்காக போர்கால வேகத்தில் பணி புரிகின்றனர். ஒரு விவரத்தைச் சொல்ல வேண்டுமென்றால் “மதசார்பின்மை”யை எடுத்துக் கொள்ளலாம். இது பிற்கால கிருத்துவ சமுதாயம் உருவாக்கிய சொல். அதன் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் இந்திய மேல்தட்டினர் அதன் உருக்குலைந்த அர்த்தத்தில் இந்திய அரசியலில் முழுவதுமாக திணித்து விட்டனர். மற்றொரு உதாரணம், மேற்கத்தியச் சிந்தனை முறைகளை மானுடவியலின் அனைத்து பகுதிகளிலும், ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதையாகப் புகுத்தி இந்திய சிந்தனை முறைகளை வெளியேற்றிவிட்டனர். குறிப்பாக, பட்டநாயக்கின் துறையான புராணக் கதை தொகுப்பிலேயே இத்தகைய திணிப்பு, தொன்மை வாய்ந்த உள்நாட்டு பாரம்பரியத்தை மேற்கத்தியச் சிந்தனை திட்டங்களுக்கு உட்படுத்தி மறுகட்டமைப்பு செய்கிறது.

காலனித்துவ நீக்கம் (Decolonization)

காலனியம், அதன் நீக்கம் போன்ற வார்த்தைகள் தற்போது வழக்கில் இல்லை. ஏனென்றால், போர்க்கோடுகள் 1947லியே மாறி விட்டன. சில ஹிந்து தேசியவாதிகள், வெள்ளையர்களின் குறுக்கீடுகள், அவர்களது சிப்பாய்கள்(வெள்ளையர்களோடு ஒத்துழைக்கும் இந்தியர்கள்) வெள்ளையர்களின் பின்புறத்தை முத்தமிடுகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகளை வைக்கும்போது அவர்கள் வாயில் நுரை ததும்புகிறது. தற்கால இந்தியாவில் வெள்ளையர்கள் ஏதோ சதி செய்கிறார்கள் என இவர்கள் எண்ணுகிறார்கள் போலிருக்கிறது. வெள்ளையர்கள் (பட்டநாயக்கின் பிரத்தியேக இனவாதச் சொற்றொடரிலிருந்து கடன் வாங்கியது) வெளியுலகில் அக்கறை காண்பித்தால் அது கலவரங்களுக்கு காரணமாக அவர்கள் நினைக்கும் இஸ்லாமிய உலகம் அல்லது எதிரியாகக் கருதும் சீனாவைப் பற்றியதாகும். இந்தியாவை பொறுத்தவரை, ஆதரிப்பவர்களோ எதிர்ப்பவர்களோ வெகு சிலரே என்பதை அடித்துக் கூறுவேன். இந்தியர்கள் வேண்டுமானால் இந்தியா விரோதிகளுடைய சதித் திட்டங்களின் இலக்கு என கற்பனை செய்து கொண்டு தங்களை முகஸ்துதி செய்து கொள்ளலாம். வெள்ளையர்கள், “ “வெள்ளையர்களுக்காக இந்தியர்களை முறியடிக்க வேண்டும் “ என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என இந்தியர்கள் நினைத்தால் அவர்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

இனம் எனும் வார்த்தைக்கு ஏதாவது முக்கியத்துவம் உள்ளதென்றால் அது இனவாத எதிர்ப்புக்கானது. இனவாத எதிர்ப்பு மேற்கத்திய நாட்டு அரசாங்கங்களின் மதமாகவே மாறி விட்டது. வெள்ளையர்கள் இந்தியர்களை எவ்வாறு நோக்கினார்களோ அதே நோக்கத்தைதான் மற்ற இனங்களும் கொண்டுள்ளன. இதற்கான காரணம் தேச அரசியல், நிறம் சம்பந்தப்பட்டதல்ல. ஆப்பிரிக்க-அமெரிக்க செயலாளர் காண்டலீசா ரைஸ் காலத்திலும், ஜனாதிபதி பராக் ஒபாமா காலத்திலும் அமெரிக்கா, ரிச்சர்ட் நிக்சன் காலம் போலவே பாகிஸ்தான் பக்கம்தான் சாய்ந்திருந்தது. நிறவாரியாக மனித குலத்தை பிரித்து விஷயங்களை அலசுவது சுலபமாக உள்ளதால் சோம்பேறி மனங்களை அது ஈர்க்கின்றது.

பட்டநாயக் விவாதத்திற்கு முன்வைக்கும் நிலைமை இனத்தை பற்றியதல்ல. ஹிந்து வாதிகள் வேண்டுமானால் 1940ல் இருப்பதாக நினைத்து இதை இனவாதம் எனக் கூறலாம். உறுதியாகச் சொல்கிறேன்! வெள்ளையர்கள்தான் உலகில் நடக்கும் தவறுகள் அனைத்திலும் குற்றவாளிகள் எனும் வாதம் கேட்பவரிடம் கொட்டாவியைத்தான் உண்டுபண்ணும். ஏனென்றால் இதை பலமுறை கேட்டாகி விட்டது. ஹிந்துக்களின் பிரச்சினை அவர்கள் மனதில் குடி கொண்டுள்ள சோம்பல். முதலில் அது தற்காலத்திற்கு ஒவ்வாதது; போர்க்களத்தில் அதன் யதார்த்த நிலையை அறிந்திருப்பதை விட வேறெதுவும் முக்கியமல்ல; இரண்டாவது விகாரமான தற்புகழ்ச்சி. இனவாதத்தை உண்மையாகவே எதிர்த்துப் போராடிய நெல்சன் மாண்டேலா அல்லது மார்ட்டின் லூதர் கிங் போல் தாங்களும் ஒருவர் என்ற எண்ணம்.

தார்மீக சமன்பாட்டை மீண்டும் கையிலெடுப்பது ஹிந்துக்களுக்கு உயர்வாகத் தெரியலாம். அதுவும் காலனியவாதிகள் கடற்கரையிலும் தாங்கள் தார்மீகக் கப்பலின் உச்சியிலும் நிற்பது போன்ற எண்ணம் மனநிறைவை அளிக்கக் கூடும். மேலும் இது மதச்சார்பற்றதாகவும் உள்ளது. அதனாலேயே, ஆங்கிலேயர்கள்தான் இந்தியாவின் பிரிவினையை திணித்தனர் என்பதை மக்கள் கேட்கும்போதெல்லாம் கரகோஷம் காதை பிளக்கிறது. ஆனால், இது மதச்சார்பற்ற நிறுவனங்கள் உயர்த்திப் பிடிக்கும் அப்பட்டமான பொய். இது, முஸ்லீம் லீகையும், அதற்கு உடந்தையாக இருந்த மஹாத்மா காந்தி ஜவஹர்லால் நேருவையும் இப்பழியிலிருந்து கழட்டி விடுவதற்காக செய்யப்பட்டதாகும். மார்ச் 1947 வரை, பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிவினை திட்டத்தை எதிர்த்தது. பிறகு, புதியதாக வைஸ்ராய் பதவியேற்ற லார்ட் மவுண்ட்பேட்டன், முஸ்லிம் லீகினுடைய வன்முறை அழுத்தத்தை பொறுக்க முடியாமல் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டார்.

இதனாலேயே, காலனித்துவ நீக்கம் என்ற வார்த்தை, நானே முன் மிகுந்த அளவில் பிரயோகித்திருந்தாலும், எனக்கே விருப்பமற்றதாகி விட்டது. இது இளம்பிள்ளை காலனியத் தந்தையிடம் சண்டையிடுவது போல் உள்ளது. அத்தந்தையோ இவ்விடத்தை விட்டு சென்று பல வருடங்களாகிவிட்டது. மிகச் சிறந்த நாகரீகத்தை உருவாக்கிய பலர் இருந்த நாட்டிலே, கபிலர், யாக்ஞவால்க்யர் போன்ற தத்துவஞானிகள் மட்டுமல்லாமல் லகாதா, பாணினி போன்ற அறிவியல் மேதைகளும், சாணக்கியர், பாஜிராவ் போன்ற ராஜதந்திரிகளும் இருந்த நாட்டில் இத்தகைய இளம்பிராய நடத்தை தகாத ஒன்று. காலனிய அடிவருடிகள் எனும் இயல்புக்கு ஒவ்வாத தாழ்வு மனப்பான்மையை விட்டு விட்டு சுயேச்சையான, போற்றத்தக்க பாரம்பரியத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.

காலனித்துவ நீக்கம் மேலும் கோழைத்தனமான ஒன்று. அது செத்த பாம்பை அடிப்பதில் ஒருவர் தனது பலத்தையெல்லாம் வீணடிப்பதற்கு ஈடானது. மேலும், இன்றைய எதிரிகளிடம் உள்ள பீதியினால் அவர்களிடம் சமரசம் செய்து கொள்கிறோம் என்பதை மறைப்பதற்கு வசதியாக உள்ளது. ஒருவர் காலனித்துவ நீக்கத்தை கையில் எடுத்தால் வெளிநாட்டு அதிகாரத்திடம் சிக்கியுள்ளதாக கருதும் நமது பிடரியை விடுவிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார் என்றே கொள்ள வேண்டும். உண்மையில், நமது தலைவிதி நம்மாலே நிர்ணயிக்கப்படுகிறது. வெளிநாட்டு சக்திகள் எந்த அளவிற்கு அதிகாரம் செலுத்துகிறது என்பது இந்திய அதிகாரிகள் எவ்வளவு அதிகாரத்தை அவர்களுக்குத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தது. இந்தியர்கள்தான் இதற்கு பொறுப்பு. காலனியர்களோ வெளிநாட்டினரோ அல்ல.

நல்லது செய்பவர்கள் (Do-Gooders)

எது எவ்வாறு இருப்பினும், இந்தியாவின் கலாச்சாரத்தை தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க அரசு -சாரா நிறுவனங்கள், சிந்தனைத் தொட்டிகள், மேற்படிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் இந்தியா ஒரு காலனிய நாடு போல்தான் உள்ளது. இவையெதுவுமே ஒரு ஏகாதிபத்தியத்தின் இலக்குகளை குறிவைத்து அமையவில்லை. இருந்தாலும், காலனிய மனநிலையைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பதை மறுக்க இயலாது. இவையெல்லாமே, இந்தியாவை அதன் நாகரீகமற்ற நிலையிலிருந்து மேலே கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உள்ளன. அராஜக விவரங்களை தொடர்ந்து படிப்பதின் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டு, இந்தியர்கள் பின்தங்கியவர்கள்; எனவே அவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது என ஒரு நியாயத்தை முன்னிறுத்தி அவர்களை நாகரீகமூட்டும் பணியில் இறங்கியுள்ளனர். “காட்டுமிராண்டித்தனம்” என்ற சொல் இவர்களால் மனித உரிமை என மாற்றப்பட்டு விட்டது. அமெரிக்காவிலுள்ள இந்திய கண்காணிப்பாளர்களும், கேட்காமலே தலையிடுபவர்களும், ஹிந்துயிசம் மனித உரிமைகளை அத்துமீறும் ஒரு வழிபாடு; எனவே, நாங்கள்தான் எங்களைப் போன்றவர்களுக்காகக் காத்திருக்கும் பல ஒதுக்கப்பட்ட பிரிவினரின் மீட்பாளர்கள் என தங்களை ஆஜர்படுத்திக் கொள்கின்றனர்..

பட்டநாயக் ஒரூ விவரத்தை நன்றாக கூர்ந்து நோக்கியுள்ளார்; “உயர் நிலையிலுள்ள இந்தியாவை கண்காணிக்கும் கல்வியாளர்கள், சுருங்கி வரும் நிதியுதவியில் பங்கு பெற வேண்டுமென்றால் அமெரிக்காவின் மீட்பாளர் மனோநிலையை கைகொள்ள வேண்டும். அவர்களது ஆய்வுகளின் குறிக்கோள் பாதிக்கப்பட்ட ஒருவரின் துன்பத்தை துடைப்பதாகவும் அதற்கு காரணமாகவுள்ள அயோக்கியனை எதிர்த்து சவால் விடுவதாகவும் அமைய வேண்டும். வெண்டி டோனிகர் புராணக்கதைகளில் பிராம்மணர்கள் மேலாதிக்கம் ஓங்கியிருப்பதற்கான சான்றுகளை கொடுப்பார். ஷெல்டன் போல்லாக் அவரது ராமாயணக் கட்டுரைகளை பாபிரி மசூதி தகர்ப்பதிலிருந்து ஆரம்பிப்பார். அவரது கட்டுரைகள் வெறும் தத்துவார்த்தமானது மட்டுமல்ல;அரசியல் நோக்கத்தையும் கொண்டுள்ளது என வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறாராம்.”நூற்றுக்கு நூறு சரியானது..

பட்டநாயக்கின் மற்றொரு ஊகம், “ஐரோப்பிய அமெரிக்க கல்வியாளர்கள் தாங்கள் மொத்தமாக கீழை நாட்டினரை தனிப்படுத்தவில்லை என காண்பிப்பதில் மிகுந்த கவனமாக உள்ளனர். அதே சமயம், இத்தனிப்படுத்தும் முறை உலகளாவியது; மேற்கு நாடுகளை மட்டும் பாதித்துள்ள பிணி அல்ல எனக் காண்பிக்க வேண்டும்.எனவே அவர்களுடைய எழுத்துக்களில் எவ்வாறு சமூகத்தில் சலுகையுள்ள ஹிந்துக்கள், தலித்துகள் , முஸ்லிம்கள் பெண்கள் ஆகியோரை தனிப்படுத்துவதற்கு சம்ஸ்க்ருதம், ராமாயணம், மீமாம்சம், தரும சாஸ்திரம், மனுஸ்ம்ருதி போன்றவற்றை உபயோகிக்கின்றனர் என்பதை காட்டுவதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்”.

இது ஒரு முழு விளக்கமாக இல்லையென்றாலும் இன்றைய கீழ்த்திசைவாணர்களின் அறிவியல், சமூக நீதிக்காக போரிடுவது போல் அமைந்துள்ளது எனும் இவரது சரியான கூர் நோக்கு வரவேற்கத்தக்கதாகும். ஆனால் இவர்களது அறிவியல் அதிக அளவில் அடிக்குறிப்புகளை கொண்டிருக்குமே தவிர பாகுபாடற்றதாகவோ நடுநிலைமையானதாகவோ அமைந்திருக்காது. இது காலனியவாதிகளுடைய முயற்சியின் அப்பட்டமான தொடர்ச்சியாகும். ஹெர்னியன் கார்டெஸ், மெக்ஸிகோவை கைப்பற்ற, கீழ்க்குடி மக்களை திரட்டி அவர்களை ஆண்ட அஸ்ட்டெக் சமூகத்தினரை எதிர்க்கும் கைக்கூலிகளிகளாக மாற்றுவதற்கு அவர்களது சமூக, இனக் குறைகளை உபயோகித்தார். இவர்களது வழியும் இதுதான். பண்பாடற்ற சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களை தரைமட்டமாக்கினால் இவர்களது நாகரீகப் போக்கிற்கு வழி பிறக்கும்; அதற்கான சிறந்த வழி ஆதிக்கம் செலுத்துபவர்களிடம் அதிருப்தியுள்ள குழுக்களுடன் கூட்டு சேர்வது என்பதாகும்.

இவ்விடத்தில்தான் வெண்டி டோனிகரும் ஷெல்டன் பொலாக்கும் உள்ளே நுழைகிறார்கள். இவ்விருவர்களும், இந்தியாவின் கருத்தியல் துறையில் இன்றுவரை மகத்தான செல்வாக்கை கொண்டுள்ள மேற்கு நாடுகளின் பிரதான பிரதிநிதிகளாவர். காலனிய காலத்து கீழ்த்திசைவாணர்கள் மேற்தட்டு அறிவுஜீவிகளைத்தான் சிறிய அளவில் தங்களுடைய சிந்தனைமுறைக்கு அடிமைப்படுத்தினர். ஆனால் இன்றோ, இந்தியா, இந்துயிசம் பற்றிய மேற்கு கண்ணோட்டம், மக்கள் கல்வி மற்றும் ஊடகங்கள் வாயிலாக அனைவரையும் ஈர்ப்பதோடல்லாமல், கொள்கை நிர்ணயிப்பிலும் முக்கிய பங்கேற்றுள்ளது. ஏனென்றால், இந்தியர்கள் டோனிகர், போல்லாக் போன்றவர்களை கை குவித்து வரவேற்கிறார்கள்.

அவருடைய எழுத்துக்கள் மூலம் டோனிகர் தெரிந்தே தன்னை ஹிந்துக்களின் எதிரியாக நிறுத்திக் கொள்ளவில்லை. இருந்தாலும், நிச்சயமாக பாகுபாடுடையவர். உதாரணம்: – பட்டநாயக் பார்வைக்கு தெரிந்த ஒன்று – தடை செய்யப்பட்ட அவர் புத்தகத்திற்கான சமர்ப்பணத்தில் அவர் கூறுவது, “ஹிந்துத்துவாவை எதிர்த்து நடத்தும் ஒரு சிறந்த யுத்தம்” அவ்ருடைய நினைப்பு, ஹிந்துக்களுக்காக போரிடுபவர்கள் என அடையாளம் செய்யப்பட்டவர்கள் அவர்களது மதத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்; உண்மையான ஹிந்து மதத்தை நான்தான் மீட்டுள்ளேன் என்பதாகும். இவர் பயன்படுத்தும் சிக்மண்ட் ஃபிராய்டின் விளக்குமுறைதான் ஹிந்து புராணங்களில் பொதிந்துள்ள உண்மையான அர்த்தங்களையும் ஹிந்துயிசத்தில் மறைந்துள்ள தர்க்க விவரங்களையும் வெளிக் கொணருகிறது என டோனிகர் உண்மையாகவே நம்புகிறார்.

இன்னும் சொல்லப் போனால், பட்டநாயக்கே, ஹிந்து புராணக் கதைகளை மதச் சார்பற்றவர்களும், வேரூன்றாத ஆங்கிலேயத்தனத்தில் ஊறிய இந்துக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக இதே முறையைத்தான் கையாளுகிறார். அவ்வாறு பார்க்கும்போது, பட்டநாயக் இப்போது டோனிகரை சாடும் நிலைப்பாட்டிற்கு மாறியுள்ளது வரவேற்கத்தக்கது.. இதற்கு காரணம், பட்டநாயக் இந்தியக் கதைகளை சொல்வதற்கு டோனிகரின் அணுகுமுறையைத்தான் கையாளுகிறார் என்ற ராஜிவ் மல்ஹோத்ராவின் விமரிசனத் தாக்கம் எனக் கொள்ளலாம்.

ஹிந்து மதத்தைப் பற்றிய டோனிகரின் கருத்துக்களை நன்றாக அலசுவதற்கு மல்ஹோத்ரா ஆரம்பித்து வைத்த விரிவான தீர்க்கமான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆனால், மனோபகுப்பாய்வு ரீதியில் ஹிந்துயிசத்தை கட்டவிழ்க்கும் தற்போதைய மனப்பான்மையைப் பற்றிய பொதுவான கணிப்பு ஒன்றை இங்கு கவனிக்க வேண்டும். டோனிகர் உபயோகித்துள்ள ஃபிராய்டின் விகாரம் நிறைந்த கருத்துக்களின் வாயிலாக பிரக்ஞை மற்றும் மனித இயல்பைப் பற்றிய ஹிந்துக்களின் ஆழ்ந்த ஆய்வுகளை பற்றிய புரிதல் அரைகுறையானது. மனோபகுப்பாய்வை கரைத்துக் குடித்த ஒரு இந்திய உளவியலாளர், “குருவை பின்பற்றுபவர்கள் அவரை தந்தையாக பாவிக்கிறார்கள்” என ஒரு பெரிய தத்துவத்தை முன்வைப்பதாக நினைத்துக் கூறுவதை ஒரு தரம் கேட்டேன். அவர் கூறியதை ஒரு ஆழ்ந்த கருத்தாக அவரே சுவைப்பதை அவரது முகபாவம் காட்டியது. தந்தைகள் பலவிதம்;ஆனால் குருவிற்கான லக்ஷணங்களை கொண்டவர்கள் ஒரு சிலரே. மனோபகுப்பாய்வின் மூலம் குருவானவர்கள் ஹிந்துக்களிடையே இல்லை. ஒரு சிறிய பாத்திரத்தினுள் பெரிய பாத்திரத்தை என்றுமே அடைக்க முடியாது.

இந்த உளவியலாளர், ஹிந்துக்களின் தொன்மை வாய்ந்த மனவியல் கருத்துக்களை இருட்டில் தட்டித் தடுமாறிக் கொண்டிருக்கும் புதிய, பழக்கமில்லாத மனோபகுப்பாய்விற்குள் அடைக்கப் பார்க்கும் முயற்சி நகைப்பிற்கிடமானது. டோனிகரின் ஆழ்ந்த சிந்தனையற்ற,பொறுப்பற்ற அணுகுமுறை ஹிந்துயிசத்தை சிறுமைப்படுத்துவதாகவும், பரிகசிப்பதாகவும் இருப்பதால், ஹிந்துயிசத்தை பல முனைகளில் எதிர்க்கும் இந்திய மேல்தட்டினர் அதை வரவேற்று உயர்த்தி பேசுகின்றனர். இத்தனைக்கும், டோனிகர் ஒரு உளவியலாளர் கூட இல்லை. வேறு ஒரு இடமாக இருந்தால் அவரது மாறுபட்ட மதக் கட்டவிழ்ப்பு ( உண்மையாகச் சொல்லப் போனால் வாசகர்களை கூச்சப்படும் வகையில் எழுதியுள்ளதுதான் இவரது புத்தகத்திலுள்ள ஒரே மாறுபாடு) தகுதியற்றதாக விமரிசிக்கப்பட்டிருக்கும்.

அரசியலாக்கப்பட்ட மொழியியல்

ஸம்ஸ்கிருத மொழியை நன்றாகக் கற்றுத் தேர்ந்த போல்லாக், மத போதகர்களும், அம்பேத்காரர்களும் ஊக்குவிக்கும் ஹிந்துக்களுக்கு எதிரான பிரசங்கங்களில்தான் வெளிப்படையாக பங்குகொள்கிறார். இப்பிரசங்கங்கள் முதலாவதாக மதச்சார்பற்றவர்களைத்தான் குறி வைக்கிறது. போல்லாக், அவரது சம்ஸ்க்ருத நுண்ணறிவை உபயோகித்து சில உருப்படியான விவரங்களை வெளிக் கொணர்ந்துள்ளார். ஸம்ஸ்க்ருதத்துடன் சேந்து உலாவிய மாவட்ட மொழிகளான காந்தாரியிலிருந்து ஜாவானீஸ் வரை எதையுமே அது ஒடுக்கவில்லை. மாறாக அனைத்து மொழிகளும் சேர்ந்து வளர்ந்ததால் ஆதாயமடைந்தன. அதே சமயம், போல்லாக் இராமாயணத்தை சிறுமைப்படுத்துவதற்கும் அரசியல்படுத்துவதற்கும், ‘ஹிந்து மதம் மட்டமானது, புத்த மதம் உயந்தது’ போன்ற ஆய்வுகளுக்கும் மிகுந்த உதவிகளை செய்துள்ளார்.

இதை இவர் ஒன்றும் சுயமாக கண்டறியவில்லை. பலர் பொதுவாக கொண்டுள்ள கண்ணோட்டத்திற்கு ஒரு நவீனப் பூச்சு கொடுத்துள்ளார். பட்டநாயக், இதே கண்ணோட்டத்தை டோனிகரிடமும் பார்க்கிறார். “புராணங்களைப் பற்றிய டோனிகரின் கட்டுரைகள் ஹிந்துயிசத்தை சர்வாதிகார சக்தியாகவும் அதற்கான சவாலாக வன்முறையற்ற சமத்துவ புத்தமதத்தையும் வாசகர்களை காண வைக்கின்றன” ஹிந்துயிசத்தை ஓங்கியடிக்கும் தடியாக புத்திசத்தை சித்தரிப்பதில் போல்லாக் மற்றவர்களை எல்லாம் தாண்டி வெகு தூரம் சென்றுவிட்டார். 1993ல் அவர் எழுதிய “ஆழமான கீழைநாட்டு மரபு”(Deep Orientalism) என்ற கட்டுரையில் ஹிந்துயிசம் (முக்கியமாக, பிராம்மணீயத்தில் தலைசிறந்த மீமாம்சம்) நாஜிக் கொள்கையின் மையத்தில் அமர்ந்துள்ளது என்கிறார். இது பல வருடங்களுக்கு முன்னதாக எழுதப்பட்டது. அயோத்தி சச்சரவினால் கிளம்பிய போர்க்கால மனப்பான்மையையும் ஒரு விளக்கமாகக் கொள்ளலாம். அச்சமயம். இந்திய வரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் செய்த பேரழிவை முற்றிலும் மறுக்கும் பள்ளியின் பக்கம் இருந்தார். ஆனால்,அன்று இவர் சொன்ன வார்த்தைகளை இன்றுவரை திரும்பப் பெறவில்லை.

இதிலும், இதைப் போன்ற மற்ற விவகாரங்களிலும் (உதாரணமாக, ஐரோப்பிய நாகரீகத்தில் கிருத்துவத்தின் பங்கு இந்தியாவில் அடிக்கடி மிகைப்படுத்தப்படுவதுடோனிகரும், போல்லாக்கும் கிருத்துவ மதத்தின் மீதுள்ள அக்கறையினால் தூண்டப்படவில்லை, பட்டநாயக் கூறுவது போல் “கல்வி வட்டாரத்தின் தரக்குறியீடான நடுநிலைமை”யாக பார்க்கப்படும் மதச்சார்பின்மை என்ற நிலை நாட்டம்தான்) எனது பங்கு, வாக்குவாதங்களுக்கு தேவையான ஐரோப்பிய வரலாற்றில் இந்தியர்களுக்கு புரிதலை உண்டுபண்ணுவதாகும். 1945ற்கு முன், இந்தியாவின் மீது அளவு கடந்த அக்கறை கொண்டிருந்த ஒரு சில ஜெர்மானிய இனவெறியர்களும் போல்லாக் போன்ற மதச் சார்பற்றவர்களும் இரு எதிர் துருவங்களல்ல. மாறாக, இவர்களிருவருமே பிராம்மணிய எதிர்ப்பாளர்கள்; புத்த மத ஆதரவாளர்கள். ஜெர்மானிய இனவெறியர்கள், பிராம்மணர்கள்தான் கருமை நிற உள்நாட்டுவாசிகள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருப்பதற்கும் அவர்களது சிறுபிள்ளைத்தனமான சமயச் சடங்குகளுக்கும் காரணிகள் என்றும், ஆரிய படையெடுப்பினரின் பரிசுத்தமான கலாச்சாரத்தை அவர்கள் மாசுபடுத்துகின்றனர் எனவும் கருதினர். மேலும் புத்தர் ஒரு உண்மையான ஆரியர் என்றும் உண்மையான தலை சிறந்த ஆரிய பாரம்பரியங்களை மீட்க முயன்றார் என்ற நம்பிக்கையிலும் உறுதியாக நின்றனர். ஹிட்லர், யூதர்களை வெறுத்தது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சமமாக கருதப்பட்ட பிராம்மணர்களுடைய எதிர்ப்பாளர்களின் தொண்டராகவும் இருந்தார். இதனால்தான், போல்லாக்கும், தேசிய சோஷலிச கட்சியின் இந்து அறிவியலாளர்கள், ஜய்மினி, குமரிலபட்டர் மற்றும் இதர மீமாம்சகர்களை புகழ்ந்து கூறியுள்ளதை முற்றிலுமாக தவிர்த்துள்ளார். ஆனால் புத்தருடைய பெயர் மட்டும் பலமுறை அடிபடுகிறது.

இது போன்ற கருத்துக்கள் இவரது புலமையின் அடிமட்டத்திற்கு இட்டுச் செல்லும் குட்டிப் பயணங்கள் என வைத்துக் கொண்டாலும், ஜெர்மானிய இந்தியவியலில் இவர் செய்யும் தவறான பிராம்மணிய எதிர்ப்பு இந்தியாவில்தான் உபயோகமாகிறது. பிராம்மண எதிர்ப்பு, அமெரிக்காவை சேர்ந்த மதபோதகர்கள் இந்துக்களை மத, இன, அடிப்படையில் எதிரும் புதிருமாக நிறுத்துவதற்கு கருவியாக உதவுகிறது. ( ஆரிய படையெடுப்பாளர்’களுக்கு எதிராக ‘திராவிடர்களும்’ ‘ஆதிவாசிகளும்’). 19ம் நூற்றாண்டில் மதபோதகர்கள்தான் இதை ஆரம்பித்து வைத்தனர். ஆனால். இப்போது இது ஒரு இந்திய சித்தாந்தமாக மாறி பாலிவுட் அரசியல் வட்டாரங்களில் நாளம் புடைக்குமளவிற்கு விவாதிக்கப்படுகிறது. மேற்கத்திய அறிவாளர்கள், மத்திய உளவுத் துறையுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்வதை விட மின்சார வேகத்தில் பரவி விரியும் இத்தகைய நிகழ்வுகளோடு தங்களை இணைத்துக் கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

Series Navigation<< கல்வித் துறைக் கொடுமையாளர்கள்மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி) >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.