மிளகு அத்தியாயம் இருபத்தைந்து

1599 ஜெரஸோப்பா

பரமன் அவசரமாகப் புறப்பட்டார். இன்றைக்கு பெனுகொண்டாவில் ஏதோ அரச குடும்பக் கொண்டாட்டம். ஜெருஸப்பாவிலும் அந்தக் கோலாகலத்தின் எதிரொலி அதே சந்தோஷத்தோடு கேட்க, அதைவிட முடிந்தால் பெரிய கொண்டாட்டமாக ராஜ்யோதய தினம் போல அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று ராணியவர்கள் ஆணையிட்டிருக்கிறார்கள். ஹொன்னாவர் மிட்டாய் அங்காடியும் இரண்டு நாளாக ஓயாமல் ஒழியாமல் இயங்கிக் கொண்டுள்ளது.

”பரமனவரெ, நீங்கள் வரத்தான் காத்திருக்காங்க. சர்க்கரை எவ்வளவு பாலில் சேர்க்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியாதாம்”.

கொஞ்சம் அதிகமோ அல்லது குறைவாகவோ போனால் ராணியம்மா கோபத்தைச் சந்திக்க வேண்டி வரும் என்று பயம் அவர்கள் எல்லோருக்கும். இவ்வளவுக்கும், சத்தம் போட்டுக்கூடப் பேசாத மென்குரல் மிளகுராணிக்கு. பிடிவாதம் மட்டும் ஒருபிடி அதிகம். வேணுமென்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். மாற்ற முடியாது யார் வந்து சொன்னாலும்.

விஜயநகர பேரரசர் திருமலைராயரே நேரில் வந்து சொன்னாலும், தன்முனைப்போடு தான், ஆனால் சகல மரியாதைகளும் அனுசரித்துச் செய்து முடிப்பாள் சென்னா.

அற்பமாக ஒரு இனிப்புப் பதார்த்தத்துக்கு இத்தனை பேர் உயிரை விடுகிறார்கள். நாலு நாளாகக் கிண்டிக் கிளறிக் கொட்டிப் பரத்தி செங்கல் மாதிரி பெரிய வில்லைகளாக நீளக் கத்தியால் வெட்டி, வாழைமட்டை பொதிகளாக அடுக்க, கையே தனியாகக் கழன்று விழப் போவதுபோல வலி.

விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இது என்ன வருடம் என்று கத்தோலிக்க மதகுரு ஒருவர் இனிப்பு வாங்க அங்காடிக்கு வந்தபோது அவரைக் கேட்டார் பரமன். பதினாறாம் நூற்றாண்டு இன்னும் இரண்டு வாரத்தில் முடிந்து பதினேழாம் நூற்றாண்டு தொடங்கப் போகிறது என்று சொல்லியபடி ஒரு பாதுஷாவைக் கடித்துத் தின்றார் குரு. எச்சில் பண்ணிச் சாப்பிடும் குரு சொன்னாலும் பரமன் நம்ப வேண்டியிருக்கிறது. நம்பாவிட்டால் அவருக்கென்ன போச்சு! ஆக, வர இருப்பது கிறிஸ்து சகாப்தத்தில் ஆயிரத்து அறுநூறாம் வருடம்.

”பரமாவரே”.

மிட்டாய்க்கடையின் உரிமைக்காரி அவரை சகல மரியாதையும் பிரியமுமாக அழைக்கிறாள். நாண் பூட்டிய வில் போல் விண்ணென்ற உடல். கவர்ச்சி விட்டுப்போகாத பேரிளம் பெண். ரோகிணி.

”சொல்லு ரோகிணி, என்ன புதுசாக சிருஷ்டிக்கலாம்?”

பரமன் அவளை புன்சிரிப்போடு கேட்கிறார். இதை அவர் மனம் இங்கிலீஷ் பாஷையில் கேட்கச் சொல்கிறது. காதில், உட்காதில் விழும் வார்த்தைகள்.

ரோகிணி நாணுகிறாள். வேறு அர்த்தம் எடுத்துக்கொண்டிருக்கிறாள். பரமனுக்கு எழுபதில் காதல் வந்து நிற்கிறது. நானூறு வருடம் மூத்த இளம் பெண்ணோடு அது வந்து படிகிறது. காதலில்லை. வயது நோக்காத காமம்.

“இந்த புது இனிப்பு எப்படி இருக்கும், சொல்லு” அவர் யோசித்தபடி சொல்கிறார்.

பசு நெய்யும் சர்க்கரை இனிப்புமாகப் பொன் நிறத்தில் பொரித்த நீள்சதுரப் பேழையாகக் கடலைமாவுக் கூடு. ரோஜாவின் வாசனை மிகுந்த ஜீராவில் முழுக்க ஊறிய கூட்டின் அடியில் பொதிந்த பாதி கிராம்பு. கூட்டின் உள்ளே முதல் தளத்தில் பாதாம், அடுத்ததில் தேங்காய், மூன்றாவதில் முந்திரி என்று அடைத்த, வேகவைத்த பூரணம். குடுவையை மூடி மேலே சிறு கீற்றாக மிளகுப் பொடிக்கோடு.

கிராம்புக் காரம் ஒரு நொடி. உடனே ஜீராவும் நெய்யும் ரோஜாவும் கலந்த சுவை. அடுத்த வினாடி விதவிதமான இனிப்புப் பூரணச் சுவை என்று நாவில் கரைந்து, இறுதியில் மிளகுத் தீற்றல் சுவை. பரமன் சொன்ன, இனித்தும் உரைத்தும் மாய ருசி காட்டும் புது இனிப்பு எல்லோருக்கும் பிடித்திருந்தது.

நேற்று முழுக்க காலையில் இருந்து அந்தப் பெயர் குறிப்பிடப்படாத இனிப்பை மறுபடி மறுபடி செய்து பூரணத்துவம் அடைய வைத்துக் கொண்டிருந்தார் பரமன்.

கூடு சரியாக வந்தால், ஜீராவில் ஊறியதும் கொழகொழவென்று உருவம் சிதைந்து போகிறது. ஜீராவில் சரியாக ஊறினால் பிசின் மாதிரி வாய்க்கும் விரலுக்கும் பாலம் போடுகிறது. எல்லாம் சரியாக இருந்தால் மேலே மிளகுக் கீற்றுக்கோடு வரமாட்டேன் என்கிறது. வந்தால் சொதசொதவென்று கோடு கலைந்து மேலே எல்லாம் மிளகுப் பொடி நனைக்கிறது. அது சரியாக வந்தால் குடுவையின் தலையில் கத்தி செருகியதுபோல் கிராம்பு உட்கார மாட்டேன் என்று விழுந்து விடுகிறது. உட்கார்ந்தால், துளை பெரியதாக விழுந்து மொத்த வடிவமுமே பழுதுபட்டுப் போகிறது.

சேர்மானங்களின் அளவை, பதத்தை மாற்றி மாற்றி சோதனை செய்து, ஒரு வழியாக எல்லாம் சரியாக வர, ரோகிணி சீனாவில் இருந்து அறிமுகமான விலையுயர்ந்த காகிதத்தில் சாயம் தோய்த்த குச்சி தொட்டு, எப்படி இந்தப் புது இனிப்பு செய்வது என்று எழுதிப் பத்திரமாக வைத்தாள்.

இந்த சமையல் குறிப்பு இனி ரோகிணியின் குடும்பத்துக்கும் பரமனின் குடும்பத்துக்கும் மட்டும் தெரிந்தது. அதை யாருக்காவது சொல்லித் தரவேண்டும் என்றால், இரண்டு பேரும் சம்மதிக்க வேண்டும். ரோகிணி இந்த உரிமை பற்றிய குறிப்புகளை எழுதும்போது கிட்டத்தட்ட சமையலறையே காலியாக இருந்தது. மணி நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.

ரோகிணிக்கும் தனக்கும் கிட்டத்தட்ட நானூறு வயது வித்தியாசம் இருக்கும் என்று பரமனின் மனம் கணக்குப் போட்டது. அவளோடு காமம் கனன்று எழ வயது தடை சொல்லவில்லை. உறவு கொள்ள விழைச்சல் தன்னிச்சையாக எழுகிறது. கடாய்களில் வெல்லப்பாகும், நொறுக்கிய பாதாம், முந்திரியும், பால் சுண்டக் காய்ச்சியதுமாக சமையலறை இன்னும் கனன்று கொண்டுதானிருந்தது.

இந்த இனிப்பான சூழ்நிலையில் ரோகிணியோடு சுகம் துய்க்க மனம் ஊக்கப்படுத்தியது. அலம்பி விடப்படும் தரையில் எறும்புகள் எட்டிப் பார்த்து கொண்டிருந்தன. எறும்போடு அவளைத் தரையில் இட்டு முத்தமிடணும். மனம் பிடிவாதம் பிடித்தது. எழுபது வயதில் நானூறுக்காரி மேல் வந்த காமம் வடிகிற பாடே இல்லை.

அந்த எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பாக்குச் சீவலும் வெற்றிலையும் ஒரு துளி சுண்ணாம்புமாக மெல்லத் தொடங்கும்போது சீனிமிட்டாய்க்கடை உரிமைக்காரியிடம் மென்றிடக் கிராம்பு கேட்கச் சொல்கிறது மனம்.

ரோகிணிக்கு அவள் மெல்லும் கிராம்பு வனப்பு கூட்டுகிறது. ரோகிணி, உன் எச்சில் ஊறிய கிராம்பு கொடு. அப்புறம் மெல்ல என் நெஞ்சைத் தடவு.

பரமனுக்கு அவளை கிராம்பு மணக்க மணக்க தன்னோடு ஒன்றாக்கிக் கொள்ளத் தோன்றுகிறது. ஜெரஸோப்பாவுக்கு கூட்டி வந்து விட்ட எதோ ஒரு நாளில் இருந்து இந்த மையலும் காமமும் அவருக்குக் கூடி வந்திருக்கிறது.

கடையில் கிளறி வெட்டி ஒப்பனை செய்து விருந்துக்கான இனிப்புக் கட்டிகளைத் தயார் செய்யும் தொழிலாளர்கள் அம்மாவரே என்று தான் அவளை அழைக்கிறார்கள்.

ரோகிணியின் அம்மா போர்த்துகீசியர், அப்பா இந்தியன் என்பதால் இரண்டு வகை அழகும் உண்டு. ஐந்து வருடம் முன், இருபத்தாறு வயதில் வைதவ்யம் வாய்க்கப்பட்ட பெண். வேறே திருமணத்தில் மனம் போகாதவள். இனிப்பு வியாபாரம் தான் எல்லாம் என்று மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறாள். பரமன் வந்தபிறகு அழகுபடுத்திக் கொள்ள அதிக நேரம் செலவழிக்கிறதாகத் தெரிகிறது.

”இந்த இனிப்புக்கு என்ன பெயர் வைக்க?”

பரமன் காலையில் வந்ததும் முதல் கேள்வி இதுதான். விஜயா என்று பெயர் வைக்கலாம் என்றான் காலையிலிருந்து சாயந்திரம் வரை பாகு காய்ச்சிக் கொண்டிருக்கும் ரமணதிலகன்.

விஜயா யார் பெயர் என்று ரோகிணி கேட்க, விஜயநகரம் என்றான் அவன். அப்புறம் கொஞ்சம் யோசித்து என் பெண்டாட்டி பெயரும் விஜயாள் தான் என்றான்.

”அப்போ வேணாம், விஜயாளை தின்னேன் நடுவில ஒரு ருசி, மேலே வேறே ஒண்ணு என்று ஊரில் உலகத்தில் இருக்கறவன் எல்லாம் எச்சில் வடிய நிற்பான்” என்றாள் ரோகிணி சிரித்தபடி.

“நல்ல வேளை நான் முதல்லே சொல்லலே” என்றார் பரமன் ரோகிணியைப் பார்த்து. அவள் மென்மையாகச் சிரித்தபடி பார்த்த பார்வையின் அர்த்தம் ’உங்களுக்கு இல்லாத ரோகிணியா’ என்றுதான்.

விஜயீபவ என்று பொறித்த மஞ்சள் பட்டுக் கொடி பறக்கும் நீளமான வேகன் வண்டி இனிப்பு அங்காடி வாசலில் வந்து நின்றது. அரண்மனையிலிருந்து வருவது என்று ரமணதிலகன் சொல்லியபடி அடுக்கி வைத்திருந்த இனிப்புப் பொதிகளை இன்னும் நேராக வைத்தான்.

அரண்மனை அதிகாரி சொத்தைப் பல் தெரியும் சிரிப்போடு ”திலகரே, இவ்வளவு தானா?” என்று கேட்க, ரோகிணி அவன் பக்கத்தில் நடந்து போய் ”சேனாபதியாரே, உங்களுக்கு எவ்வளவு இனிப்பு எடுத்துப் போக வேண்டியது என்று கணக்கு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“தெரியாமல் என்ன?”, அவன் ரோகிணியின் அண்மையால் கிளர்ச்சியுற்று அவள் உதடுகளைப் பார்த்து தன்னுதடுகளை நாவால் நீவியபடி சொன்னான் – ”ரோகிணியவரே, என்ன ஒரு லட்சம் பொதிகள் இருக்குமா? சுடச்சுட எடுத்து வேகனில் வைக்கச் சொல்லும்” என்றான் குறும்புச் சிரிப்போடு. “துணைக்கு இனிப்பு என்ன?” என்று கேட்க, லட்டு உருண்டைகள் என்றான் ரமணன்.

”குஞ்சாலாடா? சின்ன சின்னதாக குஞ்சாலாடு உருண்டைகளை வாழ்நாள் முழுக்க தின்னு அலுத்துப் போச்சு. பெரிசாக ரெண்டு கை பிடிக்க எப்போ கிடைக்கும்?” என்று சேனாபதி ரோகிணியின் தனங்களைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னபோது பரமனுக்கு அவனுடய மூக்கைப் பாகு வைக்கும் வெங்கல உருளிக்குள் வெட்டிப்போட்டு எரிக்கணும் என்று கோபம் வந்தது. பாகு எல்லாம் வீணாகி விடும், வேண்டாம்.

”நூற்றுக்கணக்கான இனிப்புப் பொதிகள் இங்கே உண்டு” என்று ரமணதிலகன் சொல்ல, அதிலே ஒண்ணு எனக்குக் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள் என்று சொத்தைப்பல் சேனாபதி மன்றாடும் குரலில் கேட்டான்.

ரோகிணி உள்ளே நாலைந்து தடவை பரமன் செய்து பார்த்து நிராகரித்த சோதனை இனிப்புகள் இரண்டை அங்கங்கே தேங்காய்ப்பூ சிதறி சூடான வெல்லப் பாகுமாகக் கொண்டு வந்து சேனாபதி முன்னால் வைக்கும்படி ரமண திலகனிடம் சொன்னாள். அவன் பெருமகிழ்வோடு ஆகாரம் செய்தான்.

வண்டியில் இனிப்புகள் ஏற்றப்பட்டபோது சொத்தைப் பல் எல்லாம் இளித்துத் தெரிய சேனாபதி ரோகிணியிடம் ஏதோ அபத்தம் பேச முயன்று கொண்டிருந்தான். ஆகட்டும் ஆகட்டும் சீக்கிரம் ஏத்துங்க என்று சேனாபதி பதவியை நினைவுறுத்தும் வெற்றுக் குரல் எழுப்பிக் கொண்டு நின்ற அவன் கண்ணில் ஓரமாக ஒதுங்கி நின்று வெற்றிலை மென்று கொண்டிருந்த பரமன் கண்ணில் பட்டார்.

”ஏடா பொம்மா, உனக்கு தனியா சொல்லணுமா? இனிப்பை எடுத்துப் போய் வண்டியில் வச்சுட்டு வா. சும்மா வெத்தலை போட்டுக்கிட்டு கீழே இழுத்து சொரிஞ்சிட்டிருக்கே” என்றான் வாய் வார்த்தை அதிகமாகி. அடுத்த வினாடி பரமனின் வலுவான வலது கை அவனுடைய வாயில் கனமாகப் பட்டது.

பல் நொறுக்கப்பட்ட வலியில் துடித்து சேனாபதி துடிக்க கடையில், அங்காடியில், அடுத்த தெருவில் என்று செய்தி பரவி தெரிந்த எல்லோரும் பரமன் பக்கம் பேசினார்கள். இலவசமாக கடைக்காரர்களிடம் காய், பழம், எண்ணெய், வாசனைத் தைலம், முட்டை, ஜவுளி என்று தீபாவளி நேரத்தில் நிறைய பரிசு வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கி இருக்கிறான் அவன் என்பதால் பொதுவான எரிச்சல் அவன் மேல் பரவலாக உண்டு. அவனை சமாளிக்கவும் ஓடஓட விரட்டிப் பல்லைத் தட்டித் தரையில் உதிர்க்கவும் ஆள் உண்டு என்பதைப் பார்க்க அவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

பாதி இனிப்பு ஏற்றி, மீதி கடையிலேயே கிடக்க, வண்டி கிளம்பிப் போனது. சேனாபதி சொல்படி பரமனையும் வண்டியில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்ட பின்னரே புறப்பாடு ஆனது.

மிர்ஜான் கோட்டைக்குள் நுழைய அரசாங்கச் சின்னம் பொறித்த அடையாள மோதிரம் இல்லை என்பதால் பரமனுக்கு அனுமதி கிடைக்கவில்லை. வாயைக் கையால் பொத்தியபடி ”இந்த பொம்மன் உள்ளே வரணும். என் பல்லை உடைச்சிட்டான்” என்று கோட்டைக் காவல் அதிகாரியிடம் முறையிட்டான் சேனாபதி.

“அதுக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி இல்லை” என்று சிரிக்காமல் சொன்னான் அந்தக் காவல் அதிகாரி.

ஐந்து நிமிடம் இது தொடர, பரமன் கீழே இறங்கி, இரண்டு பேரோடும் நல்ல கனமான குரலில் இங்க்லீஷ் மொழியில் கடகடவென்று பேசினான், அவர்களுக்குப் புரியாது என்று தெரிந்த போதும் –

”கனவான்களே, உங்கள் தாவா ஏதாவது இருந்தால் இந்தக் கோட்டையிலோ, விஜயநரப் பேரரசின் தலைநகர் பெனுகொண்டாவிலோ, வடக்கு இந்தியாவில் தில்லியிலோ ஐரோப்பாவில் லண்டன், லிஸ்பன், பாரீஸிலோ தீர்த்து வைக்க வசதி உண்டு. சொல்லுங்க, ஏற்பாடு செய்கிறேன். நான் முக்கியமான வேலை ஒன்றை, என்ன என்று சொல்வதற்கில்லை, ஜெர்ஸோப்பா தேசத்தின் பெருமதிப்புக்கு உரிய நம் அனைவரின் அன்புக்கு உரிய மிளகுராணி சென்னபைரதேவி ராணி சாய்பா அவர்களுக்காக செய்துகொண்டிருக்கிறேன். நீங்க என்னடா என்றால் வேண்டுமென்றே தொந்தரவு படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். சேனாபதி, உம் பெயர் என்ன சொல்லும். அரசியை சந்தித்து புகார் தருகிறேன். என்னைப் போன்ற வெளிநாட்டார்களை மரியாதையோடு மதித்து உரையாட வேண்டும் என்று அவர் சொன்னபோது நீங்கள் காதில் வாங்கவில்லை போலிருக்கு”.

சொல்லி நிறுத்த வியர்த்து விறுவிறுத்துப் போனார்க்ள் அவர்கள் இருவரும்.

”இந்த பொம்மன் ஆள் சாதாரணமாக இருந்தாலும், துரைத்தனத்து பாஷை எல்லாம் சரளமாகப் பேசுகிறான். லண்டன், குண்டன் என்று ஏதேதோ பெயர் எல்லாம் சொல்கிறான். அங்கெல்லாம் போய்விட்டுத்தான் இங்கே வந்திருக்கிறான். அதி புத்திசாலியாக இல்லாமலா அவனைக் கூப்பிட்டு மிட்டாய்க்கடைப் பெண், இனிப்பு செய் என்று நிறைய பணம் கொடுத்து உத்தியோக ஏற்பாடு செய்து வைத்திருக்கிறாள். இப்போது அரண்மனையும், இனிப்பு அங்காடியும் ஆஹா என்று சொல்லும்படி அப்படி இழைகிறார்கள். அவர்கள் ஏதாவது ராணியம்மாவிடமே நேரில் சொல்லிவிட்டால் வேலையில் இருந்து அனுப்பி விடுவார்கள். அது நடக்கணுமா?”,சேனாபதியும் மற்றவனும் வேண்டாம் என்று வைத்தார்கள்.

ஐரோப்பா பாஷை பேசும் பொம்மனை நமஸ்கரித்து அவனை அரண்மனை வண்டியிலேயே திரும்பக் கொண்டு விட்டார்கள். வைத்தியர் ”விழுந்த மூன்று பல்லையும் திரும்ப வாயில் பத்திரமாக ஒட்டவைக்கிறேன். மகாராணியோடு நான் யாத்திரைக்கு மங்கலாபுரம் போய்ட்டு வந்ததும் எடுத்து வா” என்று சேனாபதியை அனுப்பி வைத்தாராம்.

இந்த பஹளம், என்றால் கும்பல் கூடிச் சச்சரவோ ஏதோ கோட்டைக்கு வெளியே நடந்து கொண்டிருக்க, சென்னபைரதேவி மகாராணியின் மிகப் பெரிய நான்கு குதிரைகள் இழுத்துக் கொண்டு சிட்டாகப் பரியும் வாகனம் வெளியே வந்தது. உரத்த குரல் எழுவது பார்த்து சென்னா மகாராணி என்ன விஷயம் என்று கேட்க வண்டியை நிறுத்தச் சொன்னாள்.

கூட்டத்தைப் பார்த்தபோது பரமன் மேலும் பார்வை பட்டது. விரல் சுண்டி அவரை அழைத்தாள் மகாராணி.

அவர் சாவதானமாக வண்டி அருகில் வந்து அந்நிய மொழியில் ஏதோ கேட்டார். இன்று முழுக்க ஐரோப்பிய மொழியில் பேசி எதிர்ப்பட்டவர்களை ஒருவழி பண்ணுவது தவிர வேறேதும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்த மாதிரித் தோன்றியது.

சென்னபைரதேவி இங்க்லீஷ் மொழியை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள். உன் பெயர் என்ன என்று போர்த்துகீஸ் மொழியில் வினவினாள் அவள். வந்த மூன்று ஆண்டுகளில் கேட்டுக் கேட்டுப் பழகிய போர்த்துகீஸ் உதவிக்கு வர, ”மகாராணி வாழ்க. உங்கள் பணிவான அடிமை நான். எங்கிருந்தோ இங்கே வந்திருக்கிறேன்” என்றார்.

”என்ன செய்துகிட்டிருக்கே?’

“ரோகிணி அம்மாள் நடத்தும் மிட்டாய் அங்காடியில் புது இனிப்புகளை அறிமுகப் படுத்திட்டு இருக்கேன்”

”ஓ, உன் வேலை தானா இது? இனிப்பிலே மிளகு வைத்து மேலே கிராம்பாலே தச்சு இருக்கறது மாதிரி மூடி? பிடிச்சிருக்கு”

பரமன் நன்றி சொன்னார்.

”எங்கே இருந்து வந்திருக்கே?”

இருகை கூப்பி அவர் சென்னாவிடம் சொன்னார் – அம்மா, என் பெயர் பரமன். இந்த ஊர் இல்லே. இங்கே வந்து மூணு வருஷம் ஆறது. விமானத்திலே தில்லியில் இருந்து பம்பாய் வந்தபோது நாக்பூரில் காணாமல் போய் இங்கே வந்துட்டேன்”

சென்னா சாரட்டைக் கிளப்பச் சொன்னாள். ஏதோ உளறுகிறான். இனிப்பு செய்ய திறமை இருக்கிறது. மனோவியாதி வேறு இருக்கும் போல.

பரமனை உற்றுப் பார்த்தபடி போனாள் சென்னபைரதேவி மகாராணி.

”பேர் என்ன?”

“பரமன்”

இந்த பொம்மனை அவளுக்குத் தெரியும். இவனை இல்லை என்றால் அச்சு அசல் இவன் சாயலில். ஒரு பிடி அல்லது கால் பிடி உயரம் அதிகம். மேல்தோல் நல்ல வெளுப்பு. குரல் கணீரென்று. சென்னாவுக்குத் தெரிந்த ஒருவன். மிகவும். அப்போது சென்னாவும் பதினைந்து வயதுக் கன்னியாக வனப்போடு இருந்தாள். அவன். பெயர்?

பெயரில் என்ன இருக்கு? இவன் பரமன் அவன் வரதன். சொல்லு, அவன் யாரு?

வரதன்.

திரும்பச் சொல்லு. அவன் யார்? மிளகு ராணி மறுபடி கேட்கிறாள்.

வரதன். வரதன். பரமன் விழித்துக் கொண்டார். பிளாஸ்டிக் பாட்டிலில் மினரல் வாட்டரை அவரை அறியாமல் மூடி திறந்து மேலே எல்லாம் அபிஷேகம் போல் சிதறிக் கொண்டது ஏன் என்று அவருக்குத் தெரியவில்லை. திலீப் ராவ்ஜி ”என்னாச்சு அப்பா?” என்றபடி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார்.

”மிளகு ராணியைப் பார்த்தேன். அங்கே நின்னுண்டிருந்தா” என்று திலீப் ராஜீவ்க்குப் பின்னால் கை சுண்டினார் பரமன்.

திலீப் அவரை தீர்க்கமாக ஒருமுறை நோக்கினார்.

”அப்பா, எதுக்கும் மனநல மருத்துவரை இன்னிக்குப் பார்த்துட்டு வந்துடலாம். ரொம்ப சீரில்லாம போய் கஷ்டப்படறதுக்கு ஆரம்பத்திலேயே சரி பண்ணிட்டா நல்லது. சூடா காபி சாப்பிடுங்கோ”.

கையில் எடுத்து வந்த காப்பி கோப்பையை பரமனிடம் கொடுத்தார் அவர்.

***

Series Navigation<< மிளகு  – அத்தியாயம் இருபத்துநான்குமிளகு அத்தியாயம் இருபத்தாறு  >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.