
கற்களும் கரைந்து போகும்
இழைகிற நதிநீர் உரசி
சொற்கள் ஏன் தேய்வதில்லை
ஒன்றே பலவாறாகி
வரிசைகள் பலவாய் மாறி
மாயமாய் கிறங்கடிக்கும்..
ஒளிக்கதிர் கீறிப் படிகம்
பிரிக்கும் நிறங்கள் கற்றை
உடைபல அணிந்த சொற்கள்
உணர்வினை மாற்றிக்காட்டும்
காலங்கள் பல கடந்து
சுமந்திடும் பொருளின்
பாரம்
தாங்காமல் சொல்லுடைந்த
கதைகளும் கேட்பதுண்டு
தோளின் பின் மறைந்து நின்று கவியினைப்
படித்த புத்தன்
பொருளிலே குற்றம்
என்றான்…
“சொற்களோ காலிக் கூடு
வெறும் காற்றிலே கடக்கும் ஓசை
வேறொன்றும் செய்வதில்லை
அவரவர் மனதில் புனைவில்
கூட்டினில் பொருள் நிறைக்க
அறிவினில் ஒலிகள் மோதி
மனத்திரையில் விரிந்து நிறையும்
பிம்பமே
புரிதல் என்போம்..
ஏதோ ஒரு கணமொன்றில்
சொற்களும் மரித்துப் போக
மௌனம் வாய் திறக்கும்
கேள்விகள் எரிந்து போகும்..