“Mother, I shall weave a chain of pearls for thy neck with my tears of sorrow. The stars have wrought their anklets of light to deck thy feet, but mine will hang upon thy breast. Wealth & fame come from thee and it is for thee to give or withhold them. But this sorrow is absolutely mine own, and when I bring it to thee as my offering, thou reward me with thy grace.”
இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திர நாத் தாகூர், கீதாஞ்சலியில் 83வது கவிதையில், அன்னையின் மலரடியில் தன் கண்ணீரைக் கரைக்கிறார்.. ‘உலக அன்னை’ எனப் போற்றப்படும் சாரதா தேவியாகிய நான், என் வங்காளத்தை, கொல்கத்தாவைப் பற்றி உங்களுடன் பேச விழைகிறேன்.
தொன்று முதல் இன்று வரை நிகழ்வது அனைத்தும் எங்கள் தேசத்தில் அன்பாலும், கருணையினாலும், தெய்வீகத்தாலும், நாட்டுப்பற்றாலும், இசையாலும், மற்ற கலைகளாலும், அறிவியலாலும், ஈரமற்ற மனப்பாங்கினாலும், நாத்திகத்தாலும், தேசமறியா மருட்சியினாலும், வடிவமைக்கப்பட்டே வந்துள்ளன.
பிரிவு படாத வங்காளத்தில் 16-ம் நூற்றாண்டு இலக்கியத்தின் பொற்காலமாகும். ‘மங்கள்காவ்யா’, பெண் தெய்வ வழிபாட்டை முன்னெடுத்து, கிராமத் தெய்வங்களை, சிவனின் உமையுடன் இணைத்து, கமலா, கங்கா, ஷீதலா, மானசா, போன்ற தேவதைகளைப் போற்றி பலப் பாடல்களைத் தந்தது. பக்தி கால இலக்கியம் மக்களின் ஆன்ம மேம்பாட்டிற்கும், அவரவர் வாழ்வில் அமைதி பெறவும் வழி சொன்னது. சைதன்ய மஹாபிரபு இதில் இரு பாலாரையும் ஈடுபடுத்தினார்.

ஆனால், 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வங்காளம் மொகலாயர்களால் (முகலாயர்களால்) ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அரிசி, பட்டு, பருத்தி இவைகளின் உற்பத்தி பெருகியது. 17, 18-ம் நூற்றாண்டுகள் முகத்திரைகளைக் கொண்டு வந்தன; கூடவே, அதிக அளவில் குழந்தைத் திருமணங்களை; சதிக் கொடுமையும் இருந்தது. ராம் மோஹன் ராய் (1829) சதியை எதிர்த்துப் போராடி வெற்றியும் பெற்றார்.
நான் 22/12/1853-ல் பிறந்தேன். என் ஆறாவது வயதில் ராமக்ருஷ்ண பரமஹம்சரை மணந்தேன். எளிமை, தனிமை, வறுமை, பொறுமை, தவம் இவையே என் அணிகலன்கள். என் பதினெட்டாவது வயதில் என் பிறந்த ஊரான ஜயராம்பாடியை விட்டு என் கணவர் வசித்து வந்த தக்ஷிணேஸ்வரத்திற்குத் தனியாகக் கால் நடையில் வந்து சேர்ந்தேன். நாங்கள் காளி உபாசகர்கள். உலக இன்பங்களை நாடியதேயில்லை.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது- அன்று ஃபாலஹரிணி பூஜை நாள். எங்களது ஜேஷ்ட மாத அமாவாசை தினத்தில் இந்தப் பூஜை செய்யப்படும். ஒரு பீடத்தில் என்னை அமர்த்தி சக்தி உபாசனை, மற்றும் தாந்திரீக முறையில் அவர், என் கணவர், என்னை வணங்கிய தினம். யோகியும், யோகினியும் ஆழ் நிலையில் இருந்த அற்புத தினம். எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு தாழ்வில்லை காண் என்று உலகோர்க்குச் சொன்ன தினம்.
என் கதையைப் பின்னர் தொடர்கிறேன். தானே முயற்சி செய்து, தனக்குத்தானே எழுதப் படிக்கக் கற்பித்துக் கொண்ட ராஸ்சுந்தரி தேவி, ‘அமர் ஜீபன்’ என்ற சுய சரிதையை பெண் குலத்தின் குரலாக 1875-ல் எழுதி வெளியிட்டார்.
தன் சகோதரரும், கணவரும் துணை நிற்க ரோகேயா சஹாவத் ஹொசேன், (Rokeya Sakhawat Hossain) 1911-ல் பெண்களுக்கான பள்ளிக் கூடத்தைத் திறந்தார்.
தாகூரின் குடும்பத்தைச் சேர்ந்த சரளாதேவி சௌதுராணி, இந்தியப் பெண்களுக்கான சங்கத்தைத் தொடங்கியதோடு பெண்களுக்கான வாக்குரிமைக்காக காங்கிரசில் பேசி வெற்றி பெற்றார்.
தன் பதினைந்து வயதில் சாந்தி கோஷ் என்ற சிறு பெண் தன் போன்ற சிறுமியான சுனிதி சௌத்ரியுடன் இணைந்து ஆங்கிலேய மேஜர் ஸ்டீவன்ஸை (Stevens) சுட்டுக் கொன்றார்.
73 வயது மூதாட்டி, மாதங்கினி ஹஸ்ரா, (Matangini Hazra) காங்கிரஸ் கொடி ஏந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக கொடி ஏந்திய வலது கையில் ஒரு முறையும், நெற்றிப் பொட்டில் மறுமுறையுமாக சுடப்பட்டார்.
வங்காளம் கண்ட பல முத்துக்களில் சிறந்த நல் முத்தான சுபாஷ் சந்திர போஸ், நம் தேச விடுதலையைப் போரின் வழியே பெற விரும்பினார். அதைப் பற்றியெல்லாம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். நான் சொல்ல வருவது அவர் பெண்களையும் இராணுவ சேவையில் ஈடுபடுத்தியதைத்தான். ஜான்ஸி ராணி படைப் பிரிவை உருவாக்கியவர் அவரே. அதில் பணியாற்றிய புகழ் பெற்ற வீராங்கனையும், மருத்துவரும், களப் பணியாளரும், தீரரும், மார்க்சீயரும், தமிழகத்தைச் சேர்ந்தவரும், அன்புடன் கேப்டன் லக்ஷ்மி என்று அழைக்கப்பட்டவருமான லக்ஷ்மி சாகலை மறக்க முடியுமா?
ஆங்கிலேயர்கள் தங்கள் போர்முனைக்காக அத்தனை உணவுப் பொருட்களையும், இன்ன பிறவற்றையும் இங்கிருந்து அறமற்று, மனித நேயமற்று திருடிச் செல்ல, வங்காளிகள் கடுமையான பஞ்சத்தால் பீடிக்கப்பட்டு இலட்சக் கணக்கில் மடிந்தனர். மனிதன் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சமிது. இன்றும் உலகெங்கும் இது ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டிருக்கிறது. ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகினைக் கொளுத்துவோம்’ என்று அறச் சீற்றம் கொண்ட கவிஞர்கள் எங்கே?
இன்று நீர் கங்கை ஆறெங்கள் ஆறே! ஹூக்ளி என்பது இங்கு அதன் பேரே! என் ஆன்மீக குரு மற்றும் கணவருமான ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சருக்கு இந்த ஹூக்ளியின் மேற்கரையில் 40 ஏக்கரில் மிக அழகிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதனுள் எனக்கும், ஸ்வாமி விவேகானந்தருக்கும், தனித்தனியே கோயில்கள் உள்ளன. வளாக முகப்பினுள்ளேயே என் கோயில்! பரமஹம்சருக்கு இவ்விதம் ஆலயம் அமைத்து சமூக நல்லிணக்கதிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென விவேகானந்தர் விழைந்தார். உலகம் முழுதும் பார்த்தவராதலால், இந்தியாவில் பின்பற்றப்படும் மும்மதங்களான இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகியவற்றைச் சுட்டும் படியும், முன்னர் நிலவி வந்த பௌத்த, சமண சமயங்களைக் காட்டும் வகையிலும் அவரது கோயில் கட்டுமானம் இருக்கிறது. தமிழ் நாட்டின் கோபுர வகை, புத்த ஸ்தூபி, அஜந்தாவின் நளின வேலைப்பாடுகள், முகலாயர்கள் மற்றும் ராஜஸ்தானின் அலங்கார வண்ணச் சாளரங்கள், என்று அழகு மிளிர்கிறது இதில். நடுவிலுள்ள குவிமாடம் ஃப்ளாரென்ஸ் கதீட்ரலைப் போல அமைந்துள்ளது. ‘டமரு’ வடிவான பளிங்கு அடிப்பீடம்; நூற்றிதழ் தாமரையில் அவரது பளிங்குச் சிலை. அவரெதிரே பெரிய கூடத்தில் மக்கள் அமர்ந்து தியானம் செய்கிறார்கள். எங்கும் அமைதியும், சுகந்தமும் நிலவுகின்றன.
நாற்பது வயதிற்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொன்ன விவேகானந்தர், அவர் எப்போதும் தியானத்திலிருக்கும் வில்வ மரத்தின் அடிவாரத்தில் உயிர் நீத்தார். அவரைப் போலவே சாந்த கம்பீரமாக அவர் கோயில் உள்ளது.
அவருக்கு பல மாணவர்கள், மாணவிகள். அதில் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது சகோதரி நிவேதிதாவைப் பற்றி. அவர் பெண் கல்வியை முன்னெடுத்தவர்; சமூகத்தில் நிலவிய மத, இன, நிற வேறுபாடுகள் எவ்வாறு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறு என்பது பற்றி தொடர்ந்து பேசியவர்.
“அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய், எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாய், இங்கு பொருளுக்கு வழியறியாவறிஞர்க்குப் பெரும் பொருளாய், புன்மைத்தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய், நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.” எத்தனைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் பாரதி.
இந்து நவரத்னா கோயில்களில் ஒன்றான தக்ஷிணேஸ்வர் காளி கோயில், ஹூக்ளி நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இவள் பவதாரணி, எங்கள் காளி, அமுதாய் எங்கள் இல்லம் புகுந்த தேவி. 20 ஏக்கரில் அழகான கோயில். ஒன்பது கோபுரங்கள்; மூன்றடுக்குக் கட்டிடம். ஆயிரத் தாமரை இதழ்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி சிம்மாசனம்; அன்னை, படுத்திருக்கும் சிவனின் மார்பில் காலூன்றியிருக்கிறாள். சிவனை, ‘பித்தா, பிறைசூடி பெருமாளே’ என்று துதிப்போம். இங்கே ‘பித்தி, சிவனை எழச் செய், செயலூக்கம் கொடு’ என வேண்டுகிறோம். சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் சொல்கிறார் “ சிவசக்த்யா யுக்தோ யதி பவதி ஸ்க்த: ப்ரபவிதும் ந சே தேவம் தேவோ ந கலு குஸல ஃஸ்பந்திதுமபி.”
சுற்றியுள்ள வளாகத்தில் பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்களுக்கென தனித்தனி சன்னதிகள். ராதாகாந்தா, (ராதா மாதவன்) கோயிலும் இங்கே அமைந்துள்ளது.
ஐம்பதியோரு சக்தி பீடங்களில் ஒன்றான ‘காளிகாட்’ தான் கல்கத்தாவாகி தற்சமயம் கொல்கத்தாவாகி இருக்கிறது. தக்ஷனின் யாகத்தில் தன்னைப் பலியிட்ட சக்தியின் உடலை ஏந்தி சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அவரது சினம் அனைத்து உலகங்களையும் பொசுக்குகிறது. தன் திகிரியால் திருமால், சக்தியின் உடலை துண்டாக்கி வீசியதில், அன்னையின் வலது கால் விரல்கள் விழுந்த நிலம் காளிகாட். இது தொடக்கத்திலிருந்த ‘ஆதி கங்கையின்’’ கரையோரத்தில் விழுந்தது.
பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பத்மாபதி தேவி (பத்மாவதி தேவி)க்கு ஒரு தெய்வீகக் காட்சி தென்பட்டது. காட்டில் காளிகுன்டா என்ற ஏரியில் அன்னையின் பெரு விரல் இருப்பதை அவர் சொன்னார். சௌரங்க கிரி அங்கே ஆலயம் எழுப்பினார். அந்த சௌரங்கரின் பெயரில் தான் ‘சௌரங்கி லேன்’ என்ற இடம் கொல்கத்தாவில் உள்ளது. பலக் கால மாறுதல்களைச் சந்தித்த இந்த ஆலயம், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்மாராம் கிரியால் புதிதாகக் கட்டப்பட்டது. தேவி முப்பெரும் கண்களுடன், நான்கு தங்கக் கரங்களுடன், மிக நீண்ட தங்க நாக்குடன் சமதளத்தின் கீழே இருக்கிறாள். பார்க்கப் பார்க்கப் பரவசமும், வியப்பும் தரும் தோற்றம்; தடாதகையான மீனாட்சி மூன்று திருத் தனங்களுடன் யாக குண்டத்தில் தோன்றியது போல. சிறப்பான செய்தி என்னவென்றால் மூவெழுத்து மந்திரம் அன்னைக்கானது. ஆனால், அவளை தரிசிக்க நாம் அதிகம் கையூட்டு தர நேர்கிறது. மகர சங்கராந்தி தினத்தன்று, இன்றைய வங்காள முதல்வர் வழிபாட்டிற்கு வந்ததால் பாதுகாப்பினை காரணமெனச் சொல்லி பொது மக்களைத் தடுத்துவிட்டனர். அன்று அனைவருக்குமே முக்கியமான நாளல்லவா? அதிக அளவில் இடைத் தரகர்கள் (தரிசனத்திற்கு வந்துள்ள பக்தர்களிடத்தில், சன்னதியிலும், வளாகத்திலும் உள்ள கோயில் பணியாளர்கள்) பணம் பார்த்தார்கள். ஒரு பயணிக் குழு இதைப் பற்றியும், அடிக்கடி வரிசைகளை மாற்றும் தக்ஷிணேஸ்வர் கோயில் நடைமுறையைப் பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டே சொல்லியதைக் கேட்டேன்.
நல்லொழுக்கங்களுக்கான பிரார்த்தனையைத் தொடங்கினேன். ஆன்மிகம் மட்டுமல்ல எங்கள் ஊர். அறிவியலும், கலைகளும், முற்போக்கும் நிறைந்த ஒன்று.
எங்கள் ஊரின் மற்ற சிறப்புக்களைத் தொடர்ந்து சொல்வேன்.
Is it going to be continued as a serial? Very nice and informative.
Thanks,Mam. Past episodes can be seen in previous issues of Solvanam.