
காலை
செய்தித்தாள் போடும் பையன்
நாளின் தொடக்கத்தை
சைக்கிள் மணி அடித்து
விழிக்கச் செய்தான்
இரவில் குளித்த காலை
இன்னும் ஈரமாக இருந்தது
அப்படியே இருக்கப் போவதில்லை எதுவும்
அடுத்த நாள்
அதே போல் தான் என்றாலும்
அது ஒரு புதிய நாள்
இன்னும் விடியவில்லை
பொக்கிஷமான ஒன்று
முழுதாக மறையப் போகிறது
அனைத்து கேடுகளையும்
கரைத்த அந்த நீர்
காணாமல் போகப் போகிறது
இவ்வளவு மென்மையானது
நீண்ட நாள் நீடிக்காது
இயல்பிலேயே அது அப்படித்தான்
உலகத்தை எழுப்பாத காலையில்
நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மனிதன்
எளியவனாய் காண்பான்
அத்தனை கேட்டையும் வடிகட்டிய
அக்காலைப் பொழுதில்
ஒரு பறவையின் குரல்
திரையைக் கிழித்தது
இருள் தீரவில்லை
அது தான் வெளிச்சமென
விடியும் நேரம்
எவ்வளவு ஏமாறுகிறேன்
இன்னும் நான்
புத்தகம்
கதவைத் திறந்தால்
ஒரு வீட்டின்
அறை இருந்தது
மேஜை மீதிருந்த
புத்தகத்தின் வடிவம்
புராதன காலத்திலிருந்து
இன்றுவரை நீடித்திருந்தது
காகிதத்தில்
இருக்கும் எழுத்துக்கள்
அச்சு அசலாக
ஒரே அர்த்தத்தை
எல்லோருக்கும் கொடுக்கவில்லை
முதலில் உருவாகிய சித்திரம்
இன்னும் அப்படியே இருந்தது
ஒரே ஒரு புத்தகம்
வேறுவேறு கதைகள்
சாராம்சத்தின் கவர்ச்சியில்
மனம் ஒன்றிய வார்த்தைகள்
ஒன்றன்பின் ஒன்றாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
இலகுவான இதயம்
நிஜ வாழ்க்கையை
புறக்கணித்தது
ஒருவன்
நான் என்
நிகழ் காலத்துச் சமாச்சாரங்களோடு
குப்பைத் தொட்டிக்குப் போகிறேன்
உண்மையில் நான் வாழ்வது
கடந்த காலத்திலோ
நிகழ் காலத்திலோ அல்ல
மின்னி மறையும் எதுவும்
என் நினைவில் நிற்பதில்லை
எனக்கான வழியை
என்றோ நான்
தேடிக்கொண்டுவிட்டேன்
அதற்கான வழியை
எல்லா வழிகளிலிருந்தும்
தேர்வு செய்கிறேன்
சரி செய்கிறேன்
தோற்றுப்போகிறேன்
அங்கேயே உறங்கிப் போகிறேன்
பின்பு எழுந்து
அறையைக் கூட்டிப் பெருக்கி
இன்னும் நான் இருக்கிறேன்
வெளியில் வருகிறேன்
சாட்சியாக ஆட்கள்
தேர்வு செய்யப் படுகிறார்கள்
பதுக்கி வைத்திருக்கும்
ஞாபகத்தின் அடுக்குகளிலிருந்து
அறிந்த வாழ்க்கைக்கு அப்புறம்
நான் பொறுப்பல்ல
இருந்தாலும் சொல்லியபடி இருக்கிறேன்
கேட்பவர்கள் யாரும் இல்லை
என்ற போதிலும்
பயணம்
வயல் வெளிக்கு அப்பால் இருக்கும்
சாலையில் நடந்து போனபோது
காற்றின் வேகத்தில்
மனிதனாய் இருப்பதற்கான
அர்த்தம் என்னை விம்மச் செய்தது
கண் பார்வை கடந்த
மன வெளியில்
ஆரம்பத்தில் மலை மேல்
இருப்பதற்கான பயத்தை உணர்ந்தேன்
காய்ந்த புற்களும் வெய்யிலும்
காலம் தாழ்த்தி வரும் இருளும்
நீ எப்பொழுது எப்படி
எங்கு வந்து பார்க்கிறாயோ
அப்படியே இருந்தது
நினைவில் தங்கிய அது
உணர்வில் நெருப்பைப் போல்
பற்றிக்கொண்டது
சாகச நிகழ்வுகள்
அனைத்தும் ஆயுத்தமாகி
நடந்து முடிந்த பின்
பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்
யார் அவன்
அவனிடம் ஏதும் இல்லை
இயற்கையும் அவ்வாறே இருந்தது
நாளை பிறக்கப் போகும் அவன்
இன்று தன்னை இழந்தான்
அவன் அவனது பாதை
என்று ஏதும் இல்லை
இளமையில் அறிந்த வாசனை
அவனை நினைவு கூர்ந்தது
காலம் வளர்த்த அவனை
காலமே கொண்டு சென்றது
நினைவின் குமிழ்கள்
தோன்றிய வன்னம் இருந்தது
இருதத்தலின் அவதி
தன் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டது
நான் இல்லாமல்
வேறு யாரோ ஒருவன்
இங்கு இருக்கிறான்
அவனை நம்பி முடித்தால்
அவன் இன்னொரு
வேலையைத் தொடங்கி
தொடர்கிறது அது
மறைபொருள் குறையாமல்
அவன்
நிறைவேறாத விருப்பம்
தன்னிச்சையாக அவனை
காத்திருக்க வைக்கிறது
எது எவ்வாறு இருந்தாலும்
அதில் அவனுக்கு
உடன்பாடில்லை என்றாலும்
அவனுக்கு விடுதலை என்பது
அனைத்தையும் விட்டுச் செல்வது
தனித்தனியே அவரவர்
விருப்பத்திற்கு உட்பட்டது
அது எங்கோ இருக்கிறது
யார் கண்ணிலோ படுவதற்கு
அனைவரையும் இணைக்கும்
சொல்லின் பெயர் மௌனம்
அதி காலையில்
மலர்ந்த ஒரு பூவை
பறிப்பதைப் போல்
அவன் ஒன்று சொல்ல
எல்லோரும் அவனை
அன்புடன் பார்த்தனர்