புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21

This entry is part 21 of 23 in the series புவிச் சூடேற்றம்

இதுவரை நாம் விவரித்த தீர்வுகள், எப்படி உமிழைக் குறைக்கலாம் என்பதைப் பற்றியது. இவற்றை மட்டுமே செய்தால், நாம் தப்பிக்க முடியாது. இன்னொரு முக்கிய தீர்வு முறையையும் அதே நேரத்தில் நாம் மேற்கொள்ளுதல் அவசியம். நாம் உமிழும் கரியமில வாயுவை உட்கொள்ளும் இயற்கை முறைகளை மேலும் துரிதப்படுத்த உதவுதல் இரட்டிப்பாகப் பயனளிக்கும்.

முன்னமே பார்த்தது போல, இயற்கை, எப்பொழுதும் கரியமில வாயுவை, பல பில்லியன் ஆண்டுகளாக உள்வாங்கிக் கொண்டு வந்துள்ளது.

  • 24% – காடுகள் மற்றும் மரங்கள் நாம் உமிழும் கரியமில வாயுவை உள்வாங்கி, ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்ஸிஜனாக மாற்றுகின்றன
  • 17% – கடல், நாம் உமிழும் கரியமில வாயுவை உள்வாங்கிக் கொள்கிறது. இதனால், நாளுக்கு நாள், கடலின் அமிலத்தன்மை அதிகமாகிக் கொண்டு வருவதை முன்னம் பார்த்தோம்
  • 59% – மேல் சொன்ன இரண்டு இயற்கை முறைகளும் உள்வாங்கிக் கொண்ட பாக்கி கரியமில வாயு, நம் காற்று மண்டலத்தில் கலந்து இந்த பூமியைச் சூடேற்றுகிறது. விண்வெளிக்கு வெளியேற்றும் வெப்பம் அதிகமாகி வருவதற்கு இதுவும் முக்கிய காரணம்
  • பாவி மனிதன் இப்படி இயற்கையை சிதறடிப்பான் என்று ஒரு 150 வருடங்களுக்கு முன்கூட யாரும் யோசிக்க வில்லை

இந்தப் பகுதியில் நாம் பார்க்கப் போவது, இயற்கை உள்வாங்கும் 41% கரியமில வாயுவை மேலும் எப்படிக் கூட்டலாம்?

நாம் எவ்வளவு முயன்றாலும், இந்த விஷயத்தில், இயற்கையைப் போன்ற அளவை நம்மால் எட்ட முடியாது – அது ஒரு 4 பில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட விஷயம்! இயற்கையின் இந்த அருமையான சேவையைக் குலைத்த நம்மால், அதற்கு உதவவும் முடியும். முதல் காரியமாக, இயற்கையிடம் மிஞ்சியிருக்கும் கரியமில வாயு உள்வாங்கும் அளவை மேலும் குறைக்க மாட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். இன்னொரு யதார்த்தையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மனிதர்கள், நிலப் பிராணிகள். கடல் நமது வீடல்ல. அதனால், 17% உள்வாங்கும் கடலுக்கு உதவுவதை விட 24% சதவீதம் உள்வாங்கும் நிலத்திற்கு மேலும் உதவுவது நமக்கு சாத்தியம்!

இன்னும் நான்கு முக்கிய விஷயங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். இவற்றை மனதில் கொள்ளாததால் வந்த பிரச்சினையே இது.

  • புதிய உள்வாங்கும் முறைகள் (உதாரணம், காடுகள் வளர்ப்பது) பயனில் வருவதற்கு காலமாகும்
    • உள்ளூர் அனல் மின் நிலையத்தை மூடினால், இன்றே பயன். காடு வளர்த்தால், குறைந்த பட்சம் 30 ஆண்டுகளுக்குப் பின்னே பயன்
  • இயற்கை உள்வாங்கிகளுக்கு ஒரு எல்லை உண்டு. உதாரணத்திற்கு, புதிய முறைகளில் ஒரு விவசாயி, விவசாயம் செய்யத் தொடங்கலாம். அது தொடரும் என்று நிச்சயமில்லை. அவரது சந்ததியினர், இந்த முறைகளை கைவிடக்கூடும், அல்லது, விவசாயத்தையே துறக்கவும் வாய்ப்புண்டு
  • சில உள்வாங்கும் முறைகள் நிரந்தரமானவை அல்ல. நாம் வளர்க்கும் காட்டின் பங்கு அடுத்த வறட்சி அல்லது காட்டுத்தீ வரைதான்
  • நம்முடைய நிரந்தர கரியமில உள்வாங்கும் முறைகள், ஐஸிற்கு அடியில் உறைந்த நிலம், பாறைகள், பவளத்திட்டுகள்

இன்னும் சற்று விவரமாக ஒவ்வொரு நாடும் இயற்கைக்கு உதவ வேண்டிச் செய்ய வேண்டியவை:

  • இருக்கின்ற காடுகளை அழியாமல் பாதுகாப்பது. பிரேஸில் போலத் தொடர்ந்து காடுகளை அழிக்காமல், மற்ற நாடுகள் பாதுகாக்கச் செயலாற்ற வேண்டும். அப்படியே செயலாற்றினாலும், பிரேஸிலின் அமேஸான் அழிவுப் பாதையை ஈடு கட்ட முடிமா என்ற சந்தேகம் வருவது நியாயம். எல்லா நாடுகளும், பிரேஸில் இயற்கை மீது செலுத்தும் பயங்கரவாத அழிப்பை நிறுத்த வழிகள் உருவாக்க வேண்டும்
  • நம்முடைய கிராமப் பகுதிகளில், கால்நடைகள் மேய இருந்த நிலம் குறைந்து வருகிறது. இதை grasslands என்று சொல்வதுண்டு. மேய்ப்பு நிலங்கள் அதிகரிப்பது, விவசாயத்திற்கு நல்லது. இது புவி சூடேற்றத்தையும் சற்றுக் குறைக்கும். இயற்கைக்கும் கரியமில வாயுவை உட்கொள்ள உதவும்
  • நாம் சேற்று நிலங்களை (peat land) அதிகம் மதிப்பதில்லை. இதன் முக்கிய உதாரணம் மும்பை. அங்கு, தானேவைத் தாண்டினால், சேற்று நிலங்கள் அதிகம் காணப்படும். மும்பையின் பல (மும்பை ஒரு 7 தீவுகளின் கூட்டணி) பகுதிகளில், இன்னும் சேற்று நிலங்களில், வீட்டைக் கட்டி காசு பண்ணுகிறார்கள். சென்னையிலும், இந்த நிலை இருக்கத்தான் செய்கிறது. கடும் புயல் மற்றும் உயரும் கடல் அள்வுகளிலிருந்து ஓரளவு நாம் தப்பிக்க இயற்கை உருவாக்கியது சேற்று நிலங்கள். கடலோரப் பகுதிகளில் சேற்று நிலங்களை அப்படியே பாதுகாத்தால், இரட்டிப்பு நல்ல விஷயங்கள் அதில் அடங்கியுள்ளது. முதல் விஷயம், சேற்று நிலங்களில் வாழும் உயிரினங்கள் காக்கப்படும். இரண்டாவது விஷயம், இந்த சூழலில் உள்ள பல்லுயிர்கள், பல கோடி சின்ன செடிகளை, தண்ணீருடன் வளர உதவுவதோடு, இயற்கைக்கு கரியமில வாயுவை உள்வாங்கவும் உதவுகிறது. இனிமேல் சேற்று நிலங்களில், வீடு கட்ட, கடலோர நகரங்களில் அனுமதிக்கக் கூடாது
  • காடு மீட்புப் பணிகள் குளிர் மற்றும் வெப்பப் பகுதிகளில் (tropical and temperate forestry) உடனே துரிதப் படுத்த வேண்டும். காடுகளின் விளிம்பில் ஆரம்பித்து, மெதுவாக பழைய காட்டுப் பகுதிகள் மீட்கப்பட வேண்டும். இங்கு குடியிருப்புகள் இருந்தால், மிகவும் சிக்கலான பிரச்சினையாக இது மாற வாய்ப்புண்டு. விவசாய நிலமாக இருந்தால், விலங்குத் தீனிக்காக உருவாக்கிய விவசாய நிலத்தை இவ்வகை விவசாய நிலத்துடன் மாற்ற வழி செய்தால், காடுகளுக்கு விளிம்பு நிலங்களைத் திருப்ப முடியும். இன்னொரு வகை விளிம்பு மீட்பு நடவடிக்கையும் சாத்தியம். காட்டில் ஓடும் நதி அல்லது ஏரியை சரியாகப் பராமரித்தால், விளிம்புக் காடுகளை மீட்பதும் சில தருணங்களில் சாத்தியம்
  • முன்னமே சொன்னது போல, புதிய விவசாய முறைகள், தண்ணீரை சேமிப்பதுடன், விவசாயம் சார்ந்த கரியமில வாயுவையும் குறைக்க வழி செய்யும். சில நாடுகளில் மீளாக்க விவசாயம் (regenerative agriculture) மூலம், பல பயிர்களை விளைவிப்பதோடு, அனாவசியமாக, கரியமில வாயுவை காற்று மண்டலத்தில் கலப்பதையும் இதனால் குறைத்து வெற்றி பெற்றுள்ளார்கள்
  • உணவுக் கழிவைக் குறைக்க பல வழிகள் உள்ளன. வளரும் நாடுகளில், எங்கு பயிர் வளர்க்கப்படுகிறதோ, அந்த இடத்திலிருந்து (குறிப்பாக பழங்கள்) ஒரு 50 கி.மீ சுற்று வட்டாரத்தில், அதற்கான நுகர்வோர் அல்லது தொழிற்சாலையைச் சென்றடைய வேண்டும். கரும்பு விவசாயம் இதை அருமையாகச் செய்து வந்துள்ளது. சர்க்கரை ஆலையின் அருகே இந்த கரும்பு விவசாயம் பெரிதாக நடக்கிறது. இதனால், விவசாயிக்கும் நல்லது, சர்க்கரை ஆலைக்கும் போக்குவரத்து செலவு மிச்சம். பயிரும் வாடாது. அமெரிக்காவின் சோளப் பயிர் இந்த மாதிரிதான் இன்றைய ராட்சச நிலையை அடைந்தது
  • வளர்ந்த நாடுகளில், உணவுக் கழிவைக் குறைக்க வேண்டிய வழிகள் பற்றிய விழிப்புணர்வு தேவை. எத்தனையோ ஆண்டுகளாக கழிவைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நாகரீகத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. மேற்குலகில் பெரிய உணவு விடுதிகள், மீதப்படுத்திய உணவை, நுகர்வோர் கேட்டால், பொட்டலமாக்கி கொடுத்து விடுகிறார்கள். ஆனால், இதைப் பரவலாக பின்பற்றப்படுவதில்லை. மேலை நாடுகளில் உள்ள இந்திய உணவு விடுதிகள், பெரும்பாலும் வாரக் கடைசி நாட்களில், பஃபே என்று எவ்வளவு வேண்டுமானாலும் உணவு என்ற ஒரு முறையைப் பின்பற்றுகிறார்கள். என் பார்வையில், ஏராளமான உணவு இங்கு விரயப்படுத்தப்படுகிறது. நான் சென்ற ஒரு இந்திய உணவகம், ‘தட்டில் உணவுடன் மிச்சம் வைத்தால், அதற்கு $2 வசூலிப்போம்’ என்று அறிவித்து, இந்த விரயத்தைக் குறைத்துள்ளது. இதைப் போல, அனைத்து விடுதிகளும் தைரியமாக செயலில் இறங்க வேண்டும்

நாம் இங்கு சொன்ன விஷயங்களை எல்லா நாடுகளும் சொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொண்டு செயலில் இறங்கினால், நிலத்தின் பங்கான 24% -ஐ, நிச்சயமாக 30% முதல் 35% ஆக அடுத்த பத்தாண்டுகளில் உயர்த்த முடியும். அப்படியே நாம் செய்தாலும், நம்மை சூழவிருக்கும் அபாயத்திலிருந்து தப்ப முடியுமா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை இன்னும் இதை மேலும் துரிதப்படுத்த, மனித முயற்சிகள் தொடருகின்றன. அதாவது, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை உள்வாங்கி, மண்ணின் அடியில் சேமிப்பது, மற்றப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது என்று பல புதிய முயற்சிகளில், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகிறார்கள். இதில், தொல்லெச்ச எரிபொருளை விற்ரு காசு பண்ணும் திரித்தல்காரர்களும் சேர்ந்துள்ளார்கள். எது எப்படியோ, இந்த முயற்சிகளும் தேவை. இதைப் பற்றி விவரமாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.