தேன் கூடுகளின் வீடு

தமிழாக்கம் : ஜெகதீஷ் குமார்

தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருக்கிறது. ஏற்கனவே ஒருவர் இங்கு வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. ஒருகாலத்தில் இங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் நான் அதன் மீது முட்புதர்களை வளர்த்து அதன் தடயங்களை அழித்து விட்டேன். நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் என் வீடு அமைந்திருக்கிறது.. புதர்களின் கரையில் மறைந்து, பள்ளத்தாக்கிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அடுக்குக் கட்டிடமாக, செந்நிறச் சாளரங்களும், வெண்ணிறச் சுண்ணம் பூசப்பட்டும் இருக்கிறது.

சுற்றியிருந்த கொஞ்ச நிலத்தில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நத்தைகள் மெல்லும் லெட்யூசுகள் கொண்ட ஒரு துண்டு காய்கறித் தோட்டம் எனக்குப் போதும். முள் கரண்டி கொண்டு கிளறி, ஊதா நிறத்தில் அரும்பும் உருளைக் கிழங்கு பயிரிட மலைத்தோட்ட அடுக்கில் ஒரு துண்டு நிலமும். எனக்கான உணவுக்காக நான் வேலை செய்தால் போதுமானது. யாருடனும் பங்கிட்டுக் கொள்ள என்னிடம் எதுவும் இல்லை.

கூரையின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிற, பயிரிடப்பட்டநிலத்தின் மேல் ஒரு பனிச்சரிவைப் போல் மெல்லப் பரவிக் கொண்டிருக்கிற முட்புதர்களை நான் வெட்டி விடவில்லை. எல்லாவற்றையும் அவை சூழ்ந்து மூழ்கடித்து விட வேண்டும் என்று விரும்புகிறேன், நான் உள்பட. சுவர்களின் பிளவுகளுக்கிடையில் பல்லிகள் கூடு கட்டியிருக்கின்றன. எறும்புகள் தரையில் செங்கற்களின் கீழே தங்கள் புற்றுகளை நுண்துளை நகரங்களைப் போல் குவித்து வைத்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிளவு உருவாவதைக் காண ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறேன். மனித இனத்தின் நகரங்கள் களைகளால் நசுக்கப்பட்டு, விழுங்கப்படுவதைச் சிந்தித்தபடியிருக்கிறேன்.

என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த கரடுமுரடான புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருக்கிறேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுக்கிறேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டுமிருகங்களையுமே நான் வெறுக்கிறேன். பிசுபிசுப்பான தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுக்கிறேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை மனிதனிடம் நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.

என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்கு சங்கிலி பூட்டிய நாய்கள் தேவையில்லை. மனிதர்களின் அசிங்கமான பாதுகாப்புக் கருவிகளான வேலிகளோ, தாழ்ப்பாளோ கூடத் தேவையில்லை. என் வயல் தேன்கூடுகளால் நிரம்பியுள்ளது. தேனீக்களின் பறத்தலென்பது முட்களாலான வேலியைப்போல; என்னால் மட்டுமே அதைக் கடக்க இயலும். இரவில் தேனீக்கள் பீன்களின் உமிகளில் உறங்கும்போது கூட ஒரு மனிதனும் என் வீட்டருகில் வருவதில்லை. மக்கள் என்னைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் அஞ்சுவது சரிதான். அவர்கள் என்னைப் பற்றிக் கூறுகிற கதைகள் உண்மை என்பதனால் அல்ல. அவை பொய்யே. அவை அவர்கள் என்னைப்பற்றி வழக்கமாகக் கூறும் விஷயங்கள்தாம். ஆனால் அவர்கள் என்னைக் கண்டு அஞ்சுவதும் சரியே. நானும் அதையே விரும்புகிறேன்.

மலைமுகட்டின் மேலாகக் காலையில் நான் செல்லும் போது, வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்கையும்,என்னைச் சூழ்ந்து உயர்ந்த கடலையும், இவ்வுலகையும் பார்க்கமுடியும். அருகாமையில் இருப்பது போலப் பாசாங்கு காட்டியபடி, கடலின் விளிம்பில் அமைந்திருக்கும், சிதலமாகிக் கிடக்கிற இந்த மனித இன வீடுகளைப் பார்க்கிறேன். பழுப்பு மஞ்சளும், சுண்ணக்கட்டி போன்று வெண்ணிறமுமான நகரத்தைப் பார்க்கிறேன். அதன் ஜன்னல்கள் மின்னுவதையும்,. அதன் நெருப்புகளின் புகையையும் பார்க்கிறேன். ஒருநாள் புற்களும், முட்புதர்களும் அதன் பரப்புகளை மூடிவிடும்; கடல் மேலெழுந்து அதன் சிதலங்களைப் பாறைகளாக்கி விடும்.

இப்பொழுது என்னுடன் தேனீக்கள் மட்டுமே உள்ளன. நான் கூடுகளிலிருந்து தேன் எடுக்கும் போது அவை என்னைக் கொட்டாமல், என் கைகளைச் சுற்றி ரீங்கரித்தபடி இருக்கும். உயிருள்ள தாடியைப் போலச் சூழ்ந்திருக்கும். தேனீக்கள், நட்பான, வரலாறற்ற ஒரு பழங்கால இனம். வருடக்கணக்கில் தேனீக்களுடனும், ஆடுகளுடனும் இந்தப் புதர்களின் கரையில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வருடம் கழிவதையும் சுவற்றில் குறித்து வைக்கிற பழக்கம் இருந்தது. இப்போது முட்புதர்கள் புதர்கள் எல்லாவற்றையும் சூழ்ந்து நெருக்குகின்றன.. நான் எதற்காக மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்? அவர்களது வியர்வை படிந்த கரங்களையும், காட்டுமிராண்டித்தனமான சடங்குகளையும், அவர்களது நடனங்களையும், சர்ச்சுகளையும், அவர்களது பெண்களின் அமிலம் கொண்ட எச்சிலையும் நான் வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் என்னைப் பற்றிச் சொல்லுகிற கதைகளெல்லாம் உண்மையல்ல. நம்புங்கள். அவர்கள் எப்போதுமே என்னைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள். பொய்ப் பன்றிகள்!

நான் யாரிடமும் கடன் பட்டதுமில்லை; யாருக்கும் கொடுப்பதுமில்லை. இரவில் மழை பெய்தால் காலையில் கரையோரம் நெளிகிற நத்தைகளை சமைத்து உண்பேன். காட்டுக்குள் நிலம் மென்மையான, ஈரம் படர்ந்த நாய்க்குடைகளால் விரவிக் கிடக்கும். காடு எனக்குத் தேவையான பிற அனைத்தையும் கொடுத்து விடுகிறது. எரிப்பதற்கான குச்சிகள், பைன் கூம்புகள், மற்றும் கஷ்கொட்டைகள். முயல்களையும், த்ரஷ் பறவைகளையும் வலை விரித்துப் பிடிப்பேன். அதற்காக எனக்குக் காட்டு விலங்குகளின் மீது பிரியம் உண்டென்றோ, மனிதனின் அபத்தமான பாசாங்குகளில் ஒன்றான ‘மாசற்ற இயற்கை மீது அபிமானம்’ கொண்டவனென்றோ எண்ணி விட வேண்டாம். இவ்வுலகில் வலிமையுள்ளது மட்டுமே வெல்லும் என்பதும், நாம் ஒருவரையொருவர் விழுங்குவதே நியாயம் என்பதும் எனக்குத் தெரியும். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மட்டுமே கொல்கிறேன். அதுவும் வலை விரித்தே, துப்பாக்கியால் அல்ல. எனவே என் இரையைத் தேடி எடுக்க நாயின் உதவியோ, மனிதர்களின் உதவியோ தேவையில்லை.

கோடரிகள் மரங்களை ஒவ்வொன்றாக வெட்டும் மந்தமான ஒலி சரியான நேரத்தில் என்னை எச்சரிக்காத பொழுதுகளில் நான் காட்டில் சில மனிதர்களை சந்திக்க நேர்வதுண்டு. அப்போதெல்லாம் நான் அவர்களை பார்க்காதது போல் பாவிக்கிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டுக்குள் சுள்ளிகள் சேகரிக்க குடியானவர்கள் வருவார்கள். அவற்றைத் தேமல் விழுந்த கற்றாழைச் செடிகளின் முனைகளை உரிப்பது போல உரித்தெடுப்பார்கள். வெட்டப்பட்ட மரங்கள் கயிறுகளால் இழுத்துச் செல்லப்பட்டு சொரசொரப்பான பாதைகளை உருவாக்குகின்றன. புயலின் போது மழை நீர் அவற்றில் சேகரமாகி நிலச்சரிவைத் தூண்டி விடும். மனித இனத்தின் நகரங்களில் உள்ள ஒவ்வொன்றும் இதே போன்றே அழிவைச் சந்திக்கட்டும். ஒரு நாள் நான் இவ்வழியே நடந்து செல்லும் போது, வீடுகளின் உச்சிகளில் எழுகிற சிம்னிகளைப் பார்ப்பேன். பள்ளத்தாக்குகளில் விழுந்து கிடக்கிற தெருக்களைச் சந்திப்பேன். காட்டின் நடுவில் ஓடுகிற இருப்புபாதைத் தடங்களில் இடறுவேன்.

ஆனால் என்னை அழுத்திக் கொண்டிருக்கிற என் தனிமையின் காரணமாக, நட்சத்திர ஒளி நீண்ட ஏதோ ஒரு மாலைப் பொழுதில், எந்த ஒரு குறிப்பிட்ட எண்ணமுமின்றி, மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் சென்றிருக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் ஐயுறலாம். ஆம். ஓர் இதமான மாலைப்பொழுதில் கீழே தோட்டங்கள் சூழ்ந்த சுவர்கள் கொண்ட வீடுகளை நோக்கி நான் சென்றேன். மெட்லர் மரங்களின் வழியாக இறங்கினேன். ஆனால் பெண்கள் சிரிப்பும், தூரத்திலொரு குழந்தையின் கூக்குரலும் கேட்டவுடன் திரும்பி விட்டேன். அதுதான் கடைசி முறை. நான் இப்போது தனியனாகத்தான் இருக்கிறேன். அத்தவறை நான் மீண்டும் இழைத்து விடுவேனோ என்று உங்களைப் போலவே நானும் அவ்வப்பொழுது அஞ்சுவதுண்டு. எனவே, நான் இப்போது முன் போலவே வாழ்ந்து வருகிறேன், உங்களைப் போலவே.

என்னைக் கண்டு நீங்கள் அஞ்சுவது சரிதான். ஆனால் அதுஅன்று நிகழ்ந்த அந்த நிகழ்வின் காரணமாக அல்ல. அது நிகழ்ந்ததோ, இல்லையோ. அது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இப்போது அது பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை.

அந்தப் பெண், அன்று அறுவடைக்கு வந்த அந்த கறுத்த பெண் – அப்போது நான் இங்கு வந்து அப்பொழுது சிறிது காலமே ஆகியிருந்தது. நான் முழுவதுமாக மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன் – அவள் ஒரு மலைச் சரிவின் மீது வேலை செய்து கொண்டிருக்கையில் கண்டேன். அவள் என்னைக் கண்டதும் வாழ்த்தினாள். நான் பதிலிறுக்காது அவளைக் கடந்தேன். ஆம். நான் அப்பொழுது மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அதே போல ஒரு பழைய வெறுப்பினாலும். அந்த வெறுப்பின் காரணமாக – அது அவள் மீது அல்ல. அவள் முகம் கூட என் நினைவிலில்லை – அவள் அறியாது அவளைப் பின் தொடர்ந்து சென்றேன்.

மக்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிற கதை நிச்சயம் தவறுதான். ஏனெனில் அன்று அந்தப் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை.எனவே என் கரங்கள் அவள் குரல்வளையைச் சுற்றியபோது யாரும் அவளைக் கேட்டிருக்க முடியாது. ஆனால் நிகழ்ந்ததை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் கதையை முதலில் இருந்து சொல்லியாக வேண்டும்.

சரி, அந்த மாலையைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இப்போது நான் இலைகளைத் துளையிடுகிற நத்தைகளோடு லெட்யூசுகளைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். நாய்க்குடைகள் எங்கு வளரும் என்றும் அவற்றில் நல்லது எது, விஷம் கொண்டது எது என்றும் என்னால் சொல்ல இயலும். பெண்கள் பற்றியும், அவர்களது விஷத்தன்மை பற்றியும் இப்போது சிந்திப்பதில்லை. கற்புடனிருப்பது என்பது பழக்கம் தவிர வேறென்ன?

புல்லரிவாளோடு வந்த அந்த கறுத்த பெண்தான் கடைசி. வானம் மேகங்கள் நிறைந்து கிடந்தது. கருத்த மேகங்கள் மிதந்து சென்றது நினைவுக்கு வருகிறது. இது போன்று மேகங்கள் விரைகிற, மலைச்சரிவில் ஆடுகள் மேய்கிற ஒரு பொழுதில்தான் முதல் மனிதக் கூடல் நிகழ்ந்திருக்க வேண்டும். மனிதத் தொடர்பில் பரஸ்பர திகிலும், வெட்கக்கேடுமே நிகழ வாய்ப்புண்டு. அவற்றைத்தான், அந்தத் திகிலையும், வெட்கக்கேட்டுணர்வையும்தான், அவள் கண்களில் அன்று நான் காண விரும்பினேன். அதற்காகவே அந்தக் காரியத்தைச் செய்தேன். நம்புங்கள்.

யாரும் என்னிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. ஏனெனில் அந்த மாலையில் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை. ஆனால், இருளில் மலைகள் தொலைந்து போய்விடுகிற இரவுகளில், லாந்தர் விளக்கின் ஒளியில் ஒரு பழைய புத்தகத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள நான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இரவுகளில், கீழே நகரத்தில் தங்கள் இசையோடும், ஒளியோடும் இருக்கிற மனித ஜீவன்களின் இருப்பை என்னால் உணர முடிகிறது. உங்கள் எல்லாரது குரல்களும் என்னைக் குற்றஞ்சாட்டுவதை என்னால் உணர முடிகிறது.

அந்தப் பள்ளத்தாக்கில் யாருமே என்னைப் பார்த்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அந்த மாதிரிப் பேசுவதற்குக் காரணம் இங்கு வரும் பெண்கள் வீடு திரும்பாதுதான்.

மேலும் எப்பொழுதும் இவ்வழிச் செல்லுகிற நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, உறுமியபடி மோப்பம் பிடித்து, தங்கள் பாதத்தால் தரையைக் கிளறினால், அதற்குக் காரணம் அங்கு ஏதேனும் ஒரு எலி வளை இருப்பதுதான். சத்தியமாக, அங்கிருப்பது ஏதேனும் ஒரு எலி வளைதான்.

  • தொகுப்பு: Adam, One Afternoon and Other Stories
  • வெளியீடு: 1957
  • ஆங்கில மொழியாக்கம்: Archibald Colquhoun, Peggy Wright
  • மேலும்: 21 short stories: Adam, One Afternoon; The Enchanted Garden; Father to Son; A Goatherd at Luncheon; Leaving Again Shortly; The House of the Beehives; Fear on the Footpath; Hunger at Bévera; Going to Headquarters; The Crow Comes Last; One of the Three is Still Alive; Animal Wood; Theft in a Cake Shop; Dollars and the Demi-Mondaine; Sleeping Like Dogs; Desire in November; A Judgment; The Cat and the Policeman; Who Put the Mine in the Sea?; The Argentine Ant.
  • ISBN-10 ‏ : ‎ 0749399341 / ISBN-13 ‏ : ‎ 978-0749399344

One Reply to “தேன் கூடுகளின் வீடு”

  1. மிக அழகிய நுட்பமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட உறையின் உள்ளே மறைந்திருக்கும் கூர்மையான கத்தியைப் போலவே குரூரம் ஒன்று ஒளிந்திருக்கிறது இந்த கதையில். கடற்கரையில் குழந்தைகள் ஒருமுறைக்கு இருமுறை திருப்பி பார்த்துச் சேகரிக்கும் சிப்பிகளைப் போலத் திரு. ஜெகதீஷ் அவர்கள் இந்த கதையின் உயிரோட்டத்தைச் சிதைக்காமல் மிக நுட்பமான சொற்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.