சடைப்பூ

வள்ளி புத்தக மூட்டையை தூக்கி தோளில் போட்டு கொண்டு கொஞ்ச தூரம் நடந்ததும் முத்து பக்கத்து தெருவிலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்தாள்.

“நானும் வரேன்”.

அவளிடம் வறுத்த புளியங்கொட்டை வாசமடித்தது

” உனக்கு மட்டும் எப்படி தெனம் புளியங்கொட்டை கிடைக்குது?”

“உங்க வீட்டு வாசல்ல கூடத்தான் புளி காயுது அரியறப்ப எடுக்க வேண்டி தானேந்த.”

“எங்க அப்பத்தா எடுக்க விட்டிடுமாக்கும் விளையாட ரெண்டு கொட்டை எடுத்ததுக்கு முதுகுல விளாசிப்பிட்டு.”

பேசிக்கொண்டே முக்கு திரும்பியதும் வள்ளி நின்று கொண்டாள்.

“நில்லுந்த. நீலாக்கா வரும்.அவுக அம்மா நாம இரண்டு பேத்தையும்தானே இருந்து அழைச்சிட்டுப் போகச் சொன்னாக”.

“நீலாக்கா இனி வராது.அது வயசுக்கு வந்திட்டு.”

“வயசுக்கு வர்றதுன்னா என்னந்த?’

முத்து சுத்தி முத்தி பார்த்துகிட்டு மெதுவா அவ காதுல கிசுகிசுத்தாள்.

“ரெண்டு உள்ளங்கையும் சேப்பா போயிடுமாம்.”

“நம்ம கையும் சேப்பா தானே இருக்கு.”

“இல்லைந்த..இரத்த கலரா மாறிடுமாம்.”

”ஐயோ..பயமா இருக்கு.”

”வயசுக்கு வந்தா ஏன் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தறாங்க?”

பொம்பள புள்ள மட்டும்தான் வயசுக்கு வருமா?”

யார் கிட்ட கேட்கிறது அம்மாகிட்ட ஒருதர கேட்டதற்கு இப்ப இதுதான் குறைச்சல் னு முதுகில் ஒரு அடி வச்சுது.

இப்போ தெரிஞ்சு என்ன பண்ணப் போறேனு அப்பத்தாவும் கோபபட்டுச்சு.

இந்த முத்துவும் சாதாரணப் பட்டவ அல்ல ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதை சொல்றா. போன தடவை சாந்தியக்கா பள்ளிக்கூடத்திலிருந்து பாதியில வீட்டுக்கு போனப்ப இப்படித்தான் அவ கைல யாரோ ரோசாப்பூ கொடுத்தாங்கன்னு அளந்தா.

வகுப்பில் கூட வள்ளிக்கு இதே யோசனையா இருந்தது.வீடு திரும்பறப்ப நீலாக்காவைப் போய்ப் பார்த்தாலென்ன?

முத்துவுக்கு இதிலெல்லாம் கவனமில்லை. பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்து தெருவில் ஐயர் வீட்டோரம் ஒரு இலந்தை மரமும் நாவல் மரமும் இருக்கும்.மணியடிச்சதும் அங்கு ஓடிப்போய் பசங்களோடு சண்டைபோட்டு பழம் பொறுக்கி வருவாள். எப்போதாவது மனசு வச்சா இரண்டொரு பழம் வள்ளிக்குக் கொடுப்பாள்.

“இங்க பாரு வள்ளி.இன்னைக்கு ரீசஸ் பெல் அடிச்சதும் நாவப்பழம் பொறுக்க போறேன்.நீயும் வரணும். வரலைனா உன்னோட டூ விடுவேன்”

முத்து மிரட்டினதும் வள்ளியும் அவளோடு ஓடினாள்..

ஐயர் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. தரையெங்கும் கண்ணு திறந்த மாதிரி நாவப்பழம் சிதறிக் கிடந்தது.

“நல்ல வேளை பயலுக பார்க்கல. சீக்கிரம் பொறுக்கு..”

வேலி படலை இழுத்து உள்ளே கையை நுழைக்க ..

”நா வேணா பொறுக்கித் தரவா?”

என்றபடி சிரித்தாள் அந்தப் பெண்.

பட்டுப்பாவாடை கட்டி கண்ணில மை பூசியிருந்தாள்..அவள் வேகமாகத் திரும்பும்போதுதான் பார்த்தாள்.

நீள பின்னல் குஞ்சம் வைத்து…அதில் முல்லையும் கனகாம்பரமும் வைத்து அடிவரை தைத்து..

அடி ஆத்தி..சடையெல்லாம் பூவா….இது எப்படி?

“எங்க பாட்டி தச்சு விட்டாங்க..”

ம்க்கும்…இதைப் பார்த்தா வாயைப் பிளக்கற..

நம்ம கோகிலா அக்கா சடங்கு சுத்தனப்ப சடைப்பட்டி வச்சு போட்டோ எடுத்தாங்க புள்ள..நீ பார்க்கல..”

முத்து கையை பிடிச்சு தரதரவென இழுத்து வந்தாள்.

“ஏந்த சடைப்பட்டி னா என்ன?”

“வாழைப் பட்டையில பூ வச்சு தச்சு கொடுப்பாங்க.நம்ம சடையில அதை கட்டிக்கணும்.”

வள்ளிக்கு அதிசயமாக இருந்தது.முத்துவுக்கு எப்படி எல்லாமே தெரியுது?

“வயசுக்கு வர்றப்ப மாமன் சீரா சடைப்பட்டியும் வரும் புள்ளை”

”யார் தச்சு கொடுப்பா?”

“பூக்கடையில முப்பது ரூபாய் கொடுத்தா தச்சு தருவாங்க. இது கூடத் தெரியாதா?” முத்து தலையிலடித்துக் கொண்டு சிரித்தாள்.

வள்ளிக்கு அழுகையாய் வந்தது. தனக்கு மட்டும் ஏன் எதுவுமே தெரியல.

வீட்டுக்குப் போனதும் அதிசயமா அப்பத்தா

“வந்திட்டியா ராசாத்தி” என குழைந்தது.

அப்பத்தா எப்போதும் இப்படித்தான்.அதுக்கு காரியமாகணும்னா கண்ணே மணியே னு குழஞ்சான் போடும்.இல்லாட்டி கண்டுக்காம உட்கார்ந்து கெடக்கும்.

“இந்தாடி ஒத்த ரூவாக்கு வெத்தில பாக்கு வாங்கியா..”

“அதானே பார்த்தேன். முடியாது போ”.

“உனக்கு பாக்கு முட்டாய் வேணுமா? இந்தா பத்து காசு.” ஆசை காட்டியது.

பத்து காசுக்கு ஆறு முட்டாய் கொடுப்பார் செட்டியார். நினைச்ச உடனே நா ஊறியது.

”ஒண்ணும் வேண்டாம் போ.”

வேறென்னடி வேணும்.சொல்லு”

அப்பத்தா இறங்கி வந்தது.

”எனக்கு சடைப்பட்டி வச்சு தச்சு உடுறியா?”

ஹ்ஹா ஹா… அப்பத்தா ஓக்காளமிட்டு சிரித்தது.

“இது என்னடி ஆச? எலிவால் சடைக்கு சடைப்பூ கேட்குதா? தலை தாங்காது.”

“ராஜிக்காவுக்கு என்னை மாதிரி தான் முடி. அதுக்கு வச்சிருந்தாங்களே”

“அடியே சவுரி வச்சு பின்னியிருப்பாக. நம்ம கிட்ட இல்லையே.”

“அது காசு கொடுத்து வாங்கனுமா?

ஆமாடி…”

“அப்ப எனக்கு சடைப்பட்டி வச்சு தைக்க முடியாதா?”

பேத்தியின் அழுகையும் ஆத்திரமுமான குரலைக் கேட்டு ரெங்காயிக்கும் கவலையானது.

”நீ தினம் தலைக்கு வேப்பெண்ணை வச்சு ஈறு பேனை வறண்டி சீவு. நீ வயசுக்கு வர்றதுக்குள்ள மயிரு வளர்ந்திடும். நானே சடைப்பூ வச்சு தச்சு தரேன்.”

“நெசம்மா…”

அவள் கண்கள் மின்னின.

”எங்காத்தா மேல சத்தியமாடி.”

“ம்க்கும் நீ பொய் சொல்ற. எனக்கு தான் மாமன் கிடையாதே.சீரா வரப்போவுது?”

“அட சிறுக்கி மவளே! உனக்கு இதெல்லாம் எவ சொல்லிக் குடுக்கறது? ஒத்தை மவனை கொள்ளையில போற லாரிக்காரன் கொண்டு போயிட்டானேடி. உனக்கு அதிர்ஷ்டமில்லாம போச்சே!”

அப்பத்தா ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சது.

உள்ளேயிருந்து வந்த அம்மா முதுகில் சுள்ளென ஒன்று வைத்தாள்

“சனியனே சும்மா கிடக்கிறதை ஏண்டி கிளப்பி விடறே? படிக்க அனுப்பி வச்சா பராக்கு பார்க்கிறது. ஊரு கதை பேசறது.நாளையிலிருந்து நீ படிச்சு கிழிக்க வேணாம். எங்கூட வேலைக்கு வா”

”சும்மா இருடி.விளங்காதவளே! அப்பனில்லாத புள்ளையை ஆடு மாடு மாதிரி அடிக்கிற. நான் வாங்கித்தரேண்டி. நீ தலையை சீவு.” அப்பத்தா வக்காலத்து வாங்கியது.

வள்ளி இப்போதெல்லாம் இரண்டு வேளையும் வேப்பெண்ணை தடவி தலை சீவினாள்.

பள்ளிக்கூடத்தில் தான் ஒரே பிரச்சினை.

மெத்தை வீட்டு மாலா இவள் பக்கத்தில் உட்கார மறுத்தாள்.

”வேப்பெண்ணை நாத்தம் குடலை புரட்டுது டீச்சர்.”

“ஏண்டி இப்படி எண்ணையைக் கவுத்திட்டு வர்ற”..டீச்சர் அதட்டினார்.

“அப்பத்தா தான் சொன்னிச்சு.தினம் தடவுனா நான் வயசுக்கு வர்றதுக்குள்ள நீளமா சடை வளருமாம்.”

“சடை வளர்த்து?”

“சடைப்பட்டி வச்சுக்குவேன் டீச்சர்.”

பசங்களும் டீச்சரும் விழுந்து விழுந்து

சிரித்தார்கள்.

“இங்க பாருங்க நாகு டீச்சர் இந்த உழக்குக்கு சடைப்பட்டி தச்சுக்கணுமாம்”

டீச்சரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“விடுங்க டீச்சர்.ஹெச்.எம் வர்றாங்க. நான் கிளாசுக்குப் போறேன்.”

வள்ளிக்கு அழுகையாய் வந்தது.

அப்பத்தா பொய் சொல்லுதா? வேப்பெண்ணெய் வச்சா முடி வளராதா?எல்லோரும் ஏன் சிரிக்கிறாங்க?

முத்து தான் இப்போதும் அதட்டினாள்.

“லூசா நீ? கோவிலடியில சவுரி வாடகைக்குக் கொடுப்பாங்க புள்ள.

அஞ்சு ரூபா கொடுத்தா அந்தக்கா கொடுக்கும். ஒருநாள் கழிச்சு திரும்ப கொடுத்திடலாம்.”

வள்ளிக்கு இதே கவலையா இருந்தது.

“முப்பது ரூபா சும்மாவா? நாலு நாளைக்கு புளிப்பு உரப்பா சாப்பிடலாம்.இந்தப் புள்ள தான் கிறுக்கு புடிச்சி அலையுதுனா நீ வேற அதை ஏத்திவிடறே,” அம்மா அலுத்துக் கொண்டாள்.

“ஏட்டி உம்புள்ளைக்கு சடைப்பட்டி வச்சு தச்சுவிடு.இல்லைனா ஏங்கியே செத்திடுவா போல,” அன்னைக்கு காலையில அப்பத்தா முப்பது ரூபாயைக் கொடுத்தது.

அப்போதும் அம்மா தான் முணங்கினாள்.

”இத்தனை காசு ஏது? வேப்பங்கொட்டை பொறுக்கி சேர்த்ததெல்லாம் வீணாப் போவுதே.”

வள்ளிக்கு ஒரே சந்தோஷம். முகமெல்லாம் பூரிச்சு போனது.

பள்ளிக்கூடம் போகவே பிடிக்கவில்லை.சாயந்திரம் எப்ப வரும் னு இருந்தது.

கூடப்படிக்கிற பிள்ளைகள், ஆயா னு எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.

குண்டுமல்லியும் கனகாம்பரமும் வரிவரியாய்க் கண்ணை மலர்த்திச் சிரிப்பது போலிருந்தன.நடுவில ஒரு பட்டு ரோஸ் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் ல.கையில் வைத்துத் திருப்பித் திருப்பிப் பார்ப்பதற்கே நாள் போதாது போல.

“போதுண்டி.வச்ச கண்ணு வாங்காம பார்க்காதே.கண்ணு சூடுபட்டு பூவெல்லாம் வாடி போயிடும்.”

அப்பத்தா சொன்னதும் பயமா இருந்தது.

”சீக்கிரமா வாடிப்போயிடுமா அப்பத்தா?

கவலைப்படாதேடி. காஞ்சு போறவரைக்கும் தலையிலேயே வச்சுக்க,”

அப்பத்தா சிரித்தது.

“சரி.அப்ப இரண்டு நாளானாலும் தலையை விட்டு அவுக்க மாட்டேன்.”

அம்மா எங்கிருந்தோ சவுரியும் கொண்டுவந்தாள்.சடைப்பட்டி வச்சு தச்சதும் தலையைப் பிடித்து இழுப்பது போலிருந்தது. கனம் தாங்காமல் தலை வலித்தது.ஆனாலும் அம்மாவிடம் சொல்லவில்லை.அவளுக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது.

அதுக்காகவே தலையை ஆட்டி ஆட்டி நடந்தாள். பள்ளிக்கூடம் போகிற வழியில் எல்லோரும் அவளையே பார்க்கிற மாதிரி பெருமையாய் இருந்தது.

தேரடிக்குப் பக்கத்தில் ரோடு போட்டுக் கொண்டிருந்தார்கள்.வேலை செய்பவர்கள் பக்கத்து மண்டபத்தில் தங்கியிருந்தார்கள்.ரோட்டு வேலை செய்யும் கூட்டத்தில் வள்ளியை யொத்த சிறுமியொருத்தி தம்பிப்பயலை இடுப்பில் வைத்தபடி தினம் வள்ளிக்கு கைகாட்டுவாள். நைந்துபோய் இடுப்பில் தங்காத பாவாடையை சணல் போட்டு சுற்றியிருப்பாள்.

ஒரு நாள் பராக்கு பார்த்துக் கொண்டே வந்ததில் ரோட்டோர சரளையில் சறுக்கி விழுந்தாள் வள்ளி. இவள் விழுந்ததும் அக்கா இடுப்பில் உட்கார்ந்திருந்த பயல் கைதட்டி சிரித்தான்.அந்த புள்ளை தான் ஓடி வந்து எழுப்பிவிட்டு கை எரியுதானு ரத்தம் வந்த இடத்தில எச்சி தொட்டு வச்சது.

வள்ளி ஓடிப்போய் அவளிடம் தலையைக் காட்டினாள்.அந்தச் சிறுமி ஆசையாய் பார்த்தவள் மெதுவாய்க் கேட்டாள்.

“இதை எப்ப கழட்டுவ?”

“பூ வாடினப்புறம். ஏன் கேட்கிற?”

“பூ வாடினதும் கழட்டி என்கிட்ட கொடுக்கிறியா?

எனக்கும் ஆசையாயிருக்கு.”

“ஐய காஞ்சு போனா நல்லாயிருக்காது.

பள்ளிக்கூடத்தில எல்லோருக்கும் காட்டிட்டு ரீசஸ் பெல் அடிக்கிறப்ப வந்து

அவுத்து தர்றேன் வச்சுக்கோ.” முன்னைவிட சந்தோஷமாய் நடந்தாள் வள்ளி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.