
உலகின் மிகக் கொடூரமான கவிதை
1.
பதுங்கிப் பதுங்கி
பட்டாம்பூச்சி பிடிக்க முனைந்த சின்னஞ்சிறுமி
முடியாமல் போகவே
சட்டென்று செடியாகிவிட்டாள்
தேன் மலர்கள் பூத்துக் குலுங்க
முடிந்தால் பிடி என ஓடிக்கொண்டிருக்கிறாள் இப்போது
பட்டாம்பூச்சிகள் அவளைத் துரத்த
2.
உலகின் மிகக் கொடூரமான கற்பனை இந்தக் கவிதை
நிஜம் எதுவென சிறுமிகளிடம் கேட்டுப் பார்
வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
அன்பு, பிரியம், பாசம், நேசம்,
கருணை, நேயம், மனிதம்
ஆகிய சொற்களைக்
கவிதைகள் தோறும்
வாரி வாரி இறைத்துச் செல்கிறான் கவிஞன்
அச் சொற்கள் பட்டு மண்டையுடைந்து
ரத்தம் வழிய
குற்றுயிராகக் கிடக்கிறது கவிதை
ரத்தம் தோய்ந்த சொற்கள் தடயமாகி
கவிஞன் கைதாகிவிடக் கூடாது என்பதற்காகவும்
வரவிருக்கும் வாசகர்கள்
அச் சொற்களில் இடறி விழுந்து
கை கால் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவும்
அவற்றை அப்புறப்படுத்த முயற்சிக்கிறான்
விமர்சகன்
இம்மியும் அசைக்கவியலாதபடி
பொணக் கனம் கனக்கின்றன அச் சொற்கள்
பொடோர்னு அவனது பொடனியில் வந்து தாக்குகிறது
பல்லுயிர் நேயம் எனும் இன்னொரு சொல்
கெட்ட கவிதைகளைத் தீர்த்துக் கட்டுவது எப்படி?
நல்ல கவிதை என நீங்கள் கருதுவதும்
சிறந்த கவிதை என நீங்கள் பாராட்டுவதுமான கவிதை
கற்பனை, புனைவு, கனவு, சார்பு ஆகியவற்றால் ஆனது
அது உங்களுக்கு வாலாட்டுகிறது உங்களின் காலை நக்குகிறது
உங்களின் முதுகு அரிப்புக்கு இதமாக
சொரிந்து கொடுக்கிறது
உங்களின் ஜாதி, மதம், இயக்கம், கட்சி, கொள்கை, கோட்பாடு
ஆகியவற்றுக்கு சொம்பு தூக்குகிறது
நீங்கள் அந்தக் கவிதையைக் கொஞ்சிக் குலாவி
முத்தம் கொடுக்கிறீர்கள்
கெட்ட கவிதை என நீங்கள் கருதுவதும்
உங்களால் புறக்கணிக்கப்படுவதுமான கவிதை
உண்மை, எதார்த்தம், நனவு, சார்பின்மை ஆகியவற்றால் ஆனது
அது உங்களைக் கண்டிக்கிறது, எதிர்க்கிறது
உங்களின் பிடரியில் அடித்து
கசப்பான உண்மைகளைச் சொல்கிறது
உங்களின் ஜாதி, மதம், இயக்கம், கட்சி, கொள்கை, கோட்பாடு
ஆகியவற்றைச் சவுக்கால் விளாசிக் கேள்வி கேட்கிறது
நீங்கள் அந்தக் கவிதையை வெறுத்து ஒதுக்குகிறீர்கள்
அதைத் தீர்த்துக் கட்டுவது எப்படி என
உங்கள் கூட்டத்தினரோடு சதித் திட்டம் தீட்டுகிறீர்கள்
அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது
கெட்ட கவிதைக்கு
அருஞ்சாதனை பெருந்தொகை விருது கிடைத்தது
கொடுத்தது உங்கள் கூட்டமைப்பு