கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்

கடந்த ஜூன் 24, 2022, அன்று அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினைப் பற்றியும் அதன் விளைவுகள் மற்றும் பாதிப்புகளைப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உலகின் மிக முன்னேறிய நாகரீக சமூகம் என பெருமையடித்துக்கொள்ளும் அமெரிக்க மண்ணில் கருக்கலைப்புக்கு நிரந்தர தடையினை அமெரிக்க உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. பெண்களின் உடல் மற்றும் உரிமைகள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதியாக, அத்துமீறலாக அதிர்ச்சியினையும், ஆவேசமான எதிர்ப்புகளையும் உருவாக்கியிருக்கிறது.  இதன் மூலம் பெண்கள் தங்களின் உடல் மீதான சுய நிர்ணய உரிமையை இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான சட்டங்களை அந்தந்த மாநிலங்கள் தான் தீர்மானிக்கின்றன. ஒரு பெண் தன்னுடைய கருவைத் தொடர்வதா, கலைத்துக் கொள்வதா என்கிற முடிவை தன் விருப்பத்தின் பேரில் எடுக்கலாம் என்கிற நிலைப்பாடு உடையவர்கள் தங்களை “Pro Choice” (சார்பு தேர்வு) என்றும், மற்றவர்கள் கரு என்பதே வாழ்வதற்கான உரிமை கொண்டது, அதன் மீது யாரும் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டினைக் கொண்டவர்கள். இவர்கள் தங்களை “Pro Life”(சார்பு வாழ்வு) என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த இரு பிரிவினரில் யாருடைய கை ஓங்கியிருக்கிறதோ அவர்கள் எடுக்கும் முடிவே அந்தந்த மாநிலங்களின் கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களாகின்றன.இப்போது வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம். 1969களில் டெக்ஸாஸ் மாநிலத்தில் கருக்கலைப்புத் தடை சட்டம் அமலில் இருந்தது. இதனை எதிர்த்து “ஜேன் ரோ” என்கிற கருவுற்ற பெண் வழக்குத் தொடர்ந்தார். அதில் மாநிலத்தின் கருக்கலைப்பு தடைச்சட்டம் தெளிவற்றதாகவும், அரசியலைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட தன்னுடைய தனியுரிமையை மீறுவதாகவும் குற்றம் சாட்டினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹாரி ப்ளாக்மேன் 1973ல் வரலாற்று சிறப்புமிக்க அந்த தீர்ப்பினை வழங்கினார். அதன்படி, “கருக்கலைப்பு செய்வதற்கான முடிவெடுக்கும் உரிமையை கருவுற்ற பெண்களிடமும், மகப்பேறு மருத்துவர்களிடமும் விட்டுவிட வேண்டும். மேலும் பெண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், கருவின் உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கும் மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம்” என்று தீர்ப்பளித்தார்.இந்த வழக்கு நடைபெற்ற காலத்தில் நான்கு மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தது. 16 மாநிலங்களில் வரையறுக்கப்பட்ட சூழ்நிலையில் கருக்கலைப்புக்கு அனுமதி இருந்தது. நீதிமன்றத்தின் இம்முடிவால் மீதமுள்ள 30 மாநிலங்களும் கருக்கலைப்புக்கான தடைகளை ரத்து செய்தது. இந்த புகழ்பெற்ற வழக்கின் பெயர் தான் “ரோ வி வேட்” ( Roe v. Wade).

இதனைத் தொடர்ந்து 1988-89 ஆம் ஆண்டுகளில் ஆளுநர் ராபர்ட் கேசி என்பவர் தலைமையிலான பென்சில்வேனியா காமன்வெல்த் புதிய கருக்கலைப்புச் சட்டங்களை இயற்றியது. இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, தென்கிழக்கு பென்சில்வேனியாவின் “Planned Parenthood” என்கிற அமைப்பு ஆளுனரின் இந்த சட்டவடிவின் அரசியலைப்புத் தன்மையை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கின் முடிவில் 1992ல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் முந்தைய ரோ வி. வேட் (1973)வழக்கில் நிறுவப்பட்ட கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பான பல விதிகளை மறுவரையறை செய்தது. குடும்ப வன்முறையைக் கருத்தில் கொண்டு திருமணமான பெண் கருக்கலைப்பு பற்றி கணவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றிருந்த விதியை “தேவையற்ற சுமை”யாக நிராகரித்து பென்சில்வேனியா சட்டத்தின் மற்ற விதிகளை நீதிமன்றம் உறுதி செய்தது. அமெரிக்க அரசியலமைப்பின் பதினான்காவது திருத்தத்தின் செயல்முறைப் பிரிவின்படி கருக்கலைப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்களின் உரிமைக்குள் அரசாங்கம் நுழைய முடியாது. கருக்கலைப்பு தொடர்பான சட்டங்களை ஆய்வு செய்ய நீதிமன்றங்கள் பயன்படுத்தும் சோதனையையும் இந்தத் தீர்ப்பு திருத்தியது.

இதன் பின்னர் கருக்கலைப்பு தொடர்பில் கொண்டு வரப்பட்ட பல வழக்குகளும் “தவறான/தேவையற்ற சுமை” என்பதன் பொருளையே மையமாகக் கொண்டிருந்தன. ஒருவரது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டத்தை சட்டமன்றத்தால் உருவாக்க முடியாது என்று “தேவையற்ற சுமை தரநிலை” கூறுகிறது. ஆனாலும் அன்று முதல் இன்று வரை பழமைவாத கொள்கைகளை பின்பற்றும் மாநிலங்கள் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை அகற்றி இன்னும் பல நீதிமன்ற சவால்களை உருவாக்கியே வந்திருக்கின்றன. மேலும் பல சட்டங்கள் மூலம் கருக்கலைப்பு மையங்கள் நிரந்தரமாக மூடப்பட்டும் வருகின்றன.ஜூன் 2013ல் டெக்சாஸ் செனட் மசோதாவில் கருக்கலைப்புத் தொடர்பான மாற்றுச் சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இது ”House Bill 2 ”(HB2) என்று அழைக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவில் கையெழுத்து இடுவதற்கு முன்னர் நடந்த ஒரு பேரணியில் “கருக்கலைப்பு இல்லாத ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க சட்டங்களைத் தொடர்ந்து இயற்றுவோம்.” என அப்போதைய டெக்சாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி அறைகூவல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 2015ல், டெக்சாஸ் மாநிலப் பிரதிநிதியும், HB2 சட்ட நகலை எழுதியவருமான ஜோடி லாபென்பெர்க், “ரோ வி. வேடுடன் தொடங்கியதைத் திரும்பப் பெற முயற்சிப்பதில் டெக்சாஸ் எப்போதும் முன்னணியில் இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள் இருவரும் குடியரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

இந்த நிலையில் மிசிசிபி மாநில அரசு கருவுற்ற 15 வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பிற்குத் தடை விதித்த நிலையில், உச்சநீதி மன்றமும் “ரோ வி வேட்”, “கேசி வி பிளாண்ட் பேரண்ட்ஹூட்” வழக்குத் தீர்ப்புகளை ரத்து செய்துள்ளது. இதன் எதிரொலியாக ஓக்லஹோமா, அலபாமா, ஆர்கன்சாஸ், கென்டக்கி, லூயிசியானா, மிசோரி, சவுத் டகோட்டா, யூட்டா மாநிலங்களில் உள்ள சிகிச்சையகங்கள் கருக்கலைப்பு செய்வதை உடனே நிறுத்திவிட்டன. ஒஹையோவில் கருவின் இதயத் துடிப்பு கண்டறியப்பட்ட பின் பெரும்பாலான கருக்கலைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐடஹோ, டெனீசீ , டெக்சாஸ், மிஸிஸிப்பி, நார்த் டகோட்டா, வயோமிங் மாநிலங்களில் விரைவில் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் நிலையில் உள்ளது. மருத்துவ காரணங்கள் இன்றி கருக்கலைப்பு செய்பவருக்கும் செய்து கொள்பவர்களுக்கும் அந்தந்த மாநில சட்டத்தின்படி பல ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று குடியரசுக்கட்சியினர் ஆளும் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கருக்கலைப்புக்கு எதிரானவர்கள் இத்தீர்ப்பை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தால் இப்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பின் பின்னால் இருப்பதாக பேசப்படும் அரசியல் கொஞ்சம் சர்ச்சையானது. ஆரம்பம் தொட்டே கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சியினர் தீவிரமாக கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த தீர்ப்பு குடியரசுக் கட்சியினரின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நீதிபதிகளினால் வலுவூட்டப்பட்ட உச்சநீதிமன்ற அமைப்பு இது போன்ற பிற்போக்குத்தனமான தீர்ப்புகளுக்கு காரணமாகி விட்டதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இதில் நீல் கோர்சச், பிரட் கவன்னா நீதிபதிகள் இருவரும் “ரோ வி வேட் வழக்கின் தீர்ப்பு முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளப்படுமே ஒழிய, ரத்து செய்யப்படமாட்டாது” என தங்கள் பதவியேற்பு முன்னர் நடைபெற்ற செனட் விசாரணையில் சத்திய பிரமாணத்தின் கீழ் பொய் சொன்னதற்காக குற்றஞ்சாட்டப்பட்டு பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஓகாசியோ-கோர்டெஸ் பிரதிநிதிகள் சபையில் முறையிட்டுள்ளார்.தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸின் கீழ் உச்ச நீதிமன்றம் அமெரிக்க வரலாற்றில் எப்போதும் இல்லாத பிற்போக்குத்தனமான முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கப் பெண்களிடமிருந்து கருக்கலைப்பு உரிமைகளைப் பறித்து அரசியலமைப்பு முன்மாதிரிச் சட்டத்தை நீதிமன்றம் முதன்முறையாக ரத்து செய்துள்ளது போலவே வாக்குரிமைச் சட்டத்தையும் தொழிற்சங்க உரிமைகளையும் இந்த நீதிமன்றம் கொன்றுவிட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என அதிருப்தியாளர்கள் பட்டியலிடுகின்றனர்.

அமெரிக்க உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு அமெரிக்க சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகள் மற்றும் பாதிப்புகளை உருவாக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களில் பெரும்பாலானவர்கள் போதிய படிப்பறிவு இல்லாதவர்களாகவும், கருத்தடை சாதனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

கெய்ட்லின் நோல்ஸ் மையர்ஸின் மதிப்பீட்டின்படி, இத்தகைய பெண்கள் மருந்துகள் மூலமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ கருக்கலைப்பு செய்து கொள்ளும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கருக்கலைப்பு செய்து கொள்ளாத அல்லது வசதியற்ற சுமார் 75,000 பெண்கள் அடுத்த ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார். இவர் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு கொள்கைகளின் தாக்கம் குறித்த அவரது சமீபத்திய ஆராய்ச்சிக்காக பெரிதும் அறியப்பட்ட மிடில்பரி கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர்.வருங்காலத்தில் கருக்கலைப்பைத் தடை செய்யும் மாநிலங்களில் அனாதைக் குழந்தைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தக் குழந்தைகளைப் பராமரிக்க அரசின் திட்டங்கள் மேலும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். கருக்கலைப்பை எதிர்க்கும் அல்லது கட்டுப்படுத்தும் மாநிலங்கள், குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கும் நிதியாதாரங்கள் ஒப்பீட்டளவில் கருக்கலைப்பை ஆதரிக்கும் மாநிலங்களின் குழந்தைகள் நல நிதி ஒதுக்கீட்டை விட குறைவாகவே இருக்கின்றன. இத்தகைய போக்கு எதிர்காலத்தில் சமூக, பொருளாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இனி வரும் காலங்களில் கருக்கலைப்பு செய்து கொள்பவர்களைக் கொலைக் குற்றவாளிகளாக கருதி அவர்களின் வாக்களிக்கும் உரிமையையும் பறிக்கும் கொடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது இச்சட்டம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், கனெக்டிகட், வயோமிங், நியூயார்க், மெயின், நியூஜெர்சி, மினசோட்டா, ரோட் ஐலண்ட் , பென்சில்வேனியா மாநிலங்கள் குழந்தைகளைப் பேணும் அரசு நலத்திட்டங்களில் நாட்டில் முதல் பத்து இடங்களில் உள்ளன. இவற்றில் ஒரே ஒரு மாநிலத்தில் மட்டுமே கருக்கலைப்புத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. மற்ற ஒன்பது மாநிலங்களிலும் இப்போதைக்கு கருக்கலைப்பைத் தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் சட்டங்கள் எதுவும் இல்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும் பல சட்டங்கள் வாஷிங்டன், ஓரிகன், கலிஃபோர்னியா, நெவாடா, கொலராடோ, இல்லினாய், நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாண்ட், வெர்மாண்ட், மாசசூசெட்ஸ், கனெக்டிகட், டெலாவேர், மெயின், ரோட் ஐலண்ட், ஹவாய் மாநிலங்களில் உள்ளன என்பது மட்டுமே தற்போதைய ஆறுதலான செய்தி.

ஆரம்பம் முதலே அமெரிக்க சமூகத்தில் கருக்கலைப்பு என்பது மத நம்பிக்கை, கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார கூறுகளை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய, பிளவுபடுத்தும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. குடியரசுக் கட்சி கருக்கலைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும் குற்றமாக்கவும் முற்படுகிறது. அதேசமயம் ஜனநாயக கட்சி கருக்கலைப்புக்கான அணுகலைப் பாதுகாத்து கருத்தடை செய்வதை எளிதாக்கியுள்ளது. கருக்கலைப்புத் தடை மீதான போராட்டம், மாநிலத் தலைநகரங்களிலும், வாஷிங்டனிலும் வாக்குப் பெட்டியிலும் தொடரும் என இரு தரப்பினரும் கணித்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ், ஓரினச்சேர்க்கை, ஒரே பாலின திருமணம், கருத்தடைகளைப் பயன்படுத்துவதைப் பாதுகாக்கும் மற்ற உயர் நீதிமன்றத் தீர்ப்புகளையும் ரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளதும் குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கத்தில் நடைபெறும் இச்செயல்களுக்குப் பலத்த எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது.

கருக்கலைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பு. கருவைக் கொல்லக் கூடாது என்பவர்கள் பிறந்த பிறகு அந்தக் குழந்தையின் வளமையான வாழ்விற்கு உத்திரவாதம் அளிக்க முடியாத நிலை தான் இங்கு உள்ளது. கோவிட் காலத்தில் தடுப்பூசிக்கு எதிராக “தன் உடல், தன் உரிமை” என்று கூச்சலிட்டவர்கள், இன்று “தன் உடல் தன் உரிமை” என போராடுபவர்களை எதிர்க்கிறார்கள் என்பது நகைமுரண்.

கருவிற்கும் வலி உண்டு என்று வாதிடுபவர்கள், குழந்தைகளைக் கொத்துக் கொத்தாக கொன்றுபோடும் துப்பாக்கி வன்முறைக்கோ, சீரழிக்கும் குடி, போதை மருந்துகளுக்கு எதிராக போராடுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர்களுடைய ஒருதலைச் சார்பில் எந்தவித நியாயமும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை ஆதரிப்பவர்கள் மாநில மற்றும் கூட்டாட்சி மட்டத்தில் வலுவான சமூகக் கொள்கைகளுக்கு வாதிடாத பட்சத்தில் குழந்தைகளின் நலன் என்பது பிறப்பதற்கு முன்பு மட்டுமல்ல, பிறந்த பிறகும் ஆதரிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

“கருக்கலைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதால் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை குறையாது என்று சான்றுகள் காட்டுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் பெண்களையும் சிறுமிகளையும் பாதுகாப்பற்ற நடைமுறைகளை நோக்கித் தள்ளுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளைத் தடுக்க விரும்பினால், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு தகவல், சேவைகள் மற்றும் தரமான கருக்கலைப்பு பராமரிப்புக்கான அணுகலை வழங்க வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவர் டாக்டர் கணத்ரா அறிவுரை கூறியுள்ளார்.

இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படப்போவது பெண்கள் மட்டுமல்ல கருப்பையைச் சுமக்கும் திருநங்கைகளும் மாற்றுப்பாலினத்தவரும் கூட. “ஒரு பெண்ணின் தேர்வு உரிமை” என்பதற்குப் பதிலாக கருக்கலைப்புப் பராமரிப்பை “மனித உரிமை”யாகக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததையும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் மீறியிருப்பது கண்டனத்துக்குரியது.

“இந்த நாள் நீதிமன்றத்திற்கும் நாட்டிற்கும் ஒரு சோகமான நாள்” என்று அதிபர் பைடனும் கருக்கலைப்பு உரிமை ஆதரவாளர்களுடன் போராடப் போவதாக உறுதியளித்துள்ளார்.

நீதிமன்றம், காங்கிரஸ், வெள்ளைமாளிகை மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மக்களுக்காக இயங்கவேண்டும் என்ற அடிப்படையில் தான் அமெரிக்க அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆதிக்கம் பெற்ற ஒன்று எத்தகைய அதிகார அத்துமீறலைச் செய்யும் என்பதைத்தான் இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு எடுத்துரைக்கிறது. மக்கள் அனைவரும் இணைந்து “மனித உரிமை” மீறலை எதிர்க்க வேண்டிய நேரமிது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.