தமிழாக்கம் : இரா. இரமணன்

பழம்பெரும் நிலத்திலிருந்து வந்த
பயணி ஒருவன் கூறினான்
‘அந்தப் பாலை நிலத்தில்
கல்லில் செதுக்கிய
பெருத்த இருகால்கள்
உடலில்லாமல் நிற்கின்றன.
அதனருகில்
முறைத்த பார்வையும்
சுழித்த உதடும்
கொடும் கட்டளை பாவனையும்
கொண்ட சிதைந்த முகமொன்று
மணலில் புதைந்துள்ளது.
அதன் உணர்வுகளை
செவ்வனே உள்வாங்கிய சிற்பி
உயிரற்ற கல்லில் செதுக்கிய
உயிர்ப்பான வெளிப்பாடுகள்
இன்றும் மங்காதிருக்கும் சிறப்பு.
பிரதியெடுத்த அவன் கைகள்;
அவன் நெஞ்சோடு கலந்த கலை
என்றுரைக்கிறது அந்த சிலை.
அதன் பீடத்தில் பொறித்த வார்த்தைகளோ
‘நான் ஓஸிமாண்டியாஸ்
அரசர்க்கெல்லாம் அரசன்
எதிரிகள் நடுங்கும்
என் பராக்கிரமம் பாரீர்’
எல்லையற்ற வெறும் மணல் பரப்பு
தனிமையில் பரந்து கிடப்பதை தவிர
அழிவுறும் அம்மாபெரும் சிதறல்களைச் சுற்றி
வேறு எதுவும் மிஞ்சியிருக்கவில்லை.
ஷெல்லி -1792-1822 பிரபல இங்கிலாந்து கவிஞர் –
இந்தப் பாடலில் அவர் ஒரு குறிப்பிட்ட அரசனைப் பற்றி சொல்வது, தற்பெருமை பேசும் எல்லோருக்கும் பொருந்தும் என்கிறார் தொகுப்பாளர் வில்லியம் ஹார்மன். பாடலும் ஆசிரியர் குறிப்பும் கொலம்பியா பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘The Top 500 poems’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
மூலக்கவிதையை இங்கே காணலாம்:
https://www.poetryfoundation.org/poems/46565/ozymandias