ஏ பெண்ணே – அத்தியாயம் 3

This entry is part 3 of 10 in the series ஏ பெண்ணே

தமிழாக்கம் : அனுராதா கிருஷ்ணஸ்வாமி

பெண்ணே, நோயாளி வயதானவராக இருந்தால் அவரது உடலின் மீது ஏதேனும் ஒரு பழியை எளிதாகச் சுமத்தி விடலாம். உண்மையில் வயதாவதே ஒரு குற்றம் தான். நம் டாக்டர் ஐயாவின் புத்தகத்தில் இன்னும் நோய்கள் குறையவில்லை. ப்ரிஸ்க்ரிப்ஷனு க்கு மேல் பிரஸ்ட்ரேஷன். மருந்திற்கும் பலனில்லை, கொடுக்கிற பணத்திற்கும் பலனில்லை. எனக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்கள் கடினமாகத்தான் உழைக்கிறார்கள். இருந்தாலும், இந்த உடலும் பழையதாகி விட்டிருக்கிறதே.

கடைசியில்…

அம்மா, இந்த பேச்சை கொஞ்ச நேரம் மறந்து விடுங்களேன் ப்ளீஸ்…

நீ சொல்வது சரிதான். ஆனால், நான் என்ன செய்யட்டும், நீயே சொல்லேன். கீழே விழுந்தாகிவிட்டது வியாதி வெக்கைகள் எல்லாம் எதிரிகள் தானே! ஐயா அம்மா என்று முனகுவதை யோ அல்லது அரற்றுவதையோ தவிர, இப்போது வேறு என்ன செய்துவிட முடியும்? காயப்பட்டுக் கிடக்கிறது இந்த உடல். இப்போது கட்டிலைச் சுற்றி கலகலவென வளையோசையோ அல்லது பிறந்த குழந்தையின் அழுகைச்சத்தமோவா கேட்கும்.. இங்கு டாக்டர்கள் செலவழித்த நேரத்தில், ஒரு குழந்தை பிறந்து, அது எழுந்தே நின்று விட்டிருக்கக்கூடும். வெறும் எண்ணங்களில் குழந்தையை உருவாக்க முடியாது பெண்ணே. குழந்தையை உருவாக்க உழைப்பு தேவை. தாயின் ரத்தமும் சதையும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.

நீண்ட மௌனம்.

குழந்தையைப் பிறப்பித்து மனிதன் மரணத்திற்கு சவால் விடுகிறான். எருமை மீது சவாரி செய்யும் எமன் உயிரைப் பறித்தால், சூரியனின் மகிமையால் நாங்கள் மறுபடியும் உருவாக்குவோம். இவ்வுலகின் மிகப்பெரிய தலைவன் சூரியன் தான் பெண்ணே. மற்ற கிரகங்கள் எல்லாம் அவனை விட சிறியவை தான்.

அம்மா குந்திக்கு சூரியன் மூலமாக ஒரு மகன் பிறந்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இல்லை. சூரியன் குந்தியை முழுவதுமாக மறைத்திருந்தால், உயிரின் ஆதி ஊற்றே அழிந்து போயிருக்கும். உண்மை என்னவென்றால், இயற்கையின் ஒவ்வொரு ஆண் பிறப்பும் சூரியனிடமிருந்தே சக்தியை உறிஞ்சிக் கொள்கின்றன. அவனுடைய அருளாலேயே தனது தவ வலிமையை பெருக்கிக் கொள்கின்றன.

அப்படியென்றால், பெண்?

அவள் தான் பூமி. அவள் பராசக்தியாக ஆணின் முன்னும் பின்னும், அவனைச் சுற்றி வியாபித்திருக்கிறாள். தன் பிடிக்குள் அவனைச் சிறை பிடித்து வைத்துக் கொள்கிறாள்.

சூசன் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? விளக்குகளை அணைக்காதே. எனக்கு இருட்டு பிடிப்பதில்லை. நான் இன்னும் உறங்க ஆரம்பிக்கவில்லை.

அம்மா கண்களை மூடிக் கொள்கிறார்.

திடீரென கண்களைத் திறந்து மகளையே பார்த்தவண்ணம் இருக்கிறார்.

என்ன அப்படி பார்க்கிறீர்கள்?

பெண்ணே, என்னுடைய மரணம் உன்னை கரையான் போல அரித்துவிட்டடி ருக்கிறது. இதற்குள் அது உன் அகத்தையும் புறத்தையும் முழுமையாக அரித்துவிட்டிருக்கும். நீ ஏன் இன்னும் இங்கிருந்து போகாமலிருக்கிறாய்? ஏன் தன்னுடைய வேர்களையே தழுவிக்கொண்டு கிடக்கிறாய்? உன்னுடைய விருப்பம் தான் என்ன? மௌனமாக இருக்காதே. எதையேனும் சொல். எனக்கு பதில் சொல்.

அம்மா!

உன் பங்காகக் கடைசியில் நான்தான் எஞ்சினேன் என்று தானே சொல்லப் போகிறாய்? பெண்ணே, உனக்கு இது முன்கூட்டியே தெரிந்திருப்பின், கழுத்தைச் சுற்றிய பாம்பைக் கழற்றி எறிந்திருக்கலாமே! உன் கைகளை யாரும் கட்டிவைத்திருக்கவில்லையே. கேள் பெண்ணே, இவ்வுலகில் யாரும் யாருடைய மனவுறுதியையும் திருடிக் கொண்டுவிட முடியாது. இந்தப் பழியை ஒரு போதும் என் மீது சுமத்தாதே.. நான் இருக்கும் போதும், நான் போன பிறகும் இன்றும் நாளையும்.

அம்மா களைப்பில் கண்களை மூடிக் கொள்கிறார்.

சூஸன் அம்மாவுக்கு குளூகோஸ் கொடுக்கிறாள். அம்மா களைப்பு நீங்கி எழுந்து அமர்கிறார். மகள் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்.

கேள் பெண்ணே!

நான் சிறுமியாக இருந்தபோது வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டு மரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் பலமுறை அப்படி அமர்ந்திருப்பதை என் தாத்தா பார்த்திருக்கக்கூடும். ஒருநாள் அருகே அழைத்து ‘இப்படி கண்கொட்டாமல் இந்த மரங்களை ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? இவை பழம் கூடத் தராதே’ என்றார். நான், ‘தாத்தா, நான் இந்த மரங்களின் உச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காற்றில் அசையும் இலைகள், பாதி வெள்ளியைப் போலவும், பாதி கரும்பச்சை நிறத்திலும் காட்சியளிக்கின்றன. காற்றில் அசையும் போது மிகவும் அழகாக இருக்கின்றன’ என்றேன். பெண்ணே, என் தாத்தா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எவ்வளவு நேரம் என் தலையை வாஞ்சையுடன் தடவி ஆசீர்வதித்து கொண்டிருந்தார் என்று நினைவில்லை. மரத்திலிருந்து பறவைகள் விர்ரென்று பறந்து செல்வது போல அந்நாட்களெல்லாம் பறந்து விட்டன. விடு! இவ்வியாக்யானங்களை இப்போது பேசி என்ன ஆகப்போகிறது!

சூசன், என் தையல் பெட்டியிலிருந்து ஊசியும் நூலும் கொண்டுவா.. வேண்டாம் விடு. அந்த கம்பளி நூல் கண்டை என்னிடம் கொடு. படுத்தவாறே உருண்டையாகவேனும் உருட்டி வைக்கிறேன்.ஒன்றும் செய்யாவிட்டால் விரல்கள் மரம் போல விரைத்து விடும்.

பெருமூச்சு விட்டு…

பெண்ணே என் கைகள் மரத்துப்போய் விட்டன. விரல்கள் நமுத்துப்போய்விட்டன.

மகள் அருகே வந்து குனிந்து விரல்களை தொடுகிறாள்.

அம்மா, இது என்ன, உங்கள் உடல் இப்படி கொதிக்கிறதே!

வலி மிகவும் கொடுமையானது பெண்ணே. மரணம் இரக்கமற்றது. ஒன்றையும் விட்டுவைக்காது. நான் முட்களின் மீது படுத்திருக்கிறேன். மிக ஆழமான காயங்கள் என் முதுகில். புதிதாக இன்னும் என்ன வந்திருக்கிறது என்று தெரியவில்லை. சூசன் என்னை திருப்பி விட்டு, புதிதாக காயம் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்று பார். முதுகுத் தண்டைச் சுற்றி சீழ் கூட பிடித்தி ருக்கக்கூடும்.

மகள், சூசன் இருவரும் குனிந்து பார்க்கிறார்கள்.

எவ்வளவு பெரிய கொப்பளம்! சீழ் நிரம்பியிருக்கிறது. டாக்டர் வந்து பார்க்கட்டும். முதலிலேயே என்னிடம் ஏன் சொல்லவில்லை அம்மா?

பேசாமல் இரு. என் வாயைக் கிளறாதே. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு சூசனுக்கும் உனக்கும்தான். சூசன் படுக்கை விரிப்பை மாற்றுகிறாள். பொய்யும் புரட்டுமாக எதையோ தனது அட்டவணையில் நிரப்புகிறாள். எனக்கு நேற்றும் காய்ச்சல் இருந்தது.

அம்மா, தப்பு என்னுடையது தான். தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

நான் எதுவும் சொல்லப் போவதில்லை டாக்டர் வந்து தானாகவே உன்னைக் கடிந்து கொள்ளட்டும். அடுத்தவர் தயவில் வாழும் நோயாளிகள், மரணம் சம்பவிப்பதற்கு முன்பாகவே இறந்ததுவிடுகிறார்கள்.

பெண் தொலைபேசியை கையில் எடுப்பதை பார்த்து…

விட்டு விடு பெண்ணே! டாக்டரிடம் இனி எந்த வைத்தியமும்

மிச்சமில்லை. இதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.. நம்மை போலியாக நம்ப வைப்பதற்காக…

நிறுத்தி.. நிறுத்தி.. தனக்குத்தானே…

ஏற்கனவே எலும்பை சம்மட்டியால் அடிப்பது போன்ற வேதனை. போதாததற்கு இந்த முதுகுப் புண் வேறு! பழைய கட்டடம். எங்கெங்கெல்லாம் விரிசல் விட்டிருக்கிறதோ. எனக்கு என்னென்ன வியாதிகள் வந்திருக்கின்றன என்று தெரிந்நுகொள்ளத்தானே வேண்டும்?

மகள் அருகே வந்து…

அம்மா படுக்கைப்புண் தான் உங்களை தொந்தரவு செய்கிறது.

வாழ்நாள் முழுவதும் இந்த உடல் கட்டிலைத்தான் அண்டியிருந்தது. இப்போது அதில் படுத்துக் கிடப்பது, புண்ணாக மாறுகிறது. எல்லாம் காலத்தின் கோலம்! பெண்ணே நான் சொல்வதைக் கேள். வாழ்க்கை முடிவுக்கு வரும்போது, எஞ்சியிருக்கும் சக்தியும் அழிந்துவிடும். இதைத்தான் முதுமை என்று சொல்கிறோம்.

சூசன் படுக்கையைப் பிறகு சரி செய்து கொள்ளலாம். முதலில் என் கை கால்களையும் முகத்தையும் துடைத்து விடு.

சூசன் அம்மாவின் முகத்தை துவாலையால் துடைத்துவிட்டு,

அம்மா, நீங்கள் என்னை மன்னித்து விட்டீர்கள் தானே.

முதலில் அக்காவை சமாதானம் செய். இல்லாவிட்டால் உன்னை வீட்டுக்கு அனுப்பி விட்டு தான் மறு வேலை பார்ப்பாள். உறுதியான மனம் படைத்தவள். என் மற்ற பெண்கள் தங்கள் அப்பாவைப் போல. துன்புறுத்த மாட்டார்கள். துன்பத்தை பொறுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். இவள் மீது மட்டும் தாய்வழி தாக்கம் அதிகம்.

அம்மா சிரிக்கிறார்.

சூசன், முதலில் எனக்கு தலை வாரி விடு. அலமாரியிலிருந்து என் கண்ணாடியை எடுத்துக்கொடு. உன் பதற்றம் நிறைந்த முகத்தை நான் பார்க்க வேண்டாமா? யோசித்துப் பார்த்தால், புதிதாக முளைத்திருக்கிற உபத்திரவத்துக்கு நீ ஒன்றும் காரணமில்லை. நோயாளிக்கு என்ன ஆகி இருக்கிறது என்று கவனிக்காமல் விட்டதுதான் தான் உன்னுடைய கவனக்குறைவு.

மகள் டாக்டருக்கு போன் செய்த பிறகு-

அம்மா உங்களுக்கு இத்தனை வேதனை இருந்திருக்கிறது. நீங்கள் என்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டாமா?

பெண்ணே, நோயாளியை கொஞ்சமேனும் சுயமரியாதையுடன் இருக்க விடு. ஐயோ அம்மா என்று அரற்றினால்தான் உனக்கு தெரிய வருமா? டாக்டர் வந்துவிட்டார் போலிருக்கிறது. அவர்தான் வாயில் மணி அடிக்கிறார். மணியை அழுத்துகிற தோரணையிலேயே அவர்தான் என்று தெரிகிறது. டாக்டர் இல்லையா? அதனால்தான் நிறுத்தாமல் மணியை அழுத்திக் கொண்டே இருக்கிறார். கேள் பெண்ணே, எல்லா ஓட்டமும் இங்கு வந்து நின்றுவிடும். பிறகு மறுபடியும் புதிதாக ஆரம்பிக்கும்.இதுதான் இயற்கை! இதுதான் தியதி! என்றென்றைக்குமாய்!

அம்மா, என்ன சேதி? எப்படி இருக்கிறீர்கள்?

மகனே, நான் நலமாக இல்லை என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், ஒரே நேரத்தில் டாக்டரையும் அவர் தரும் மருந்தையும் அவமதிப்பதா கிவிடும்.

டாக்டர், காய்ச்சல் இருக்கிறதாவென்று பார்க்கிறார். பிறகு முதுகில் ஏற்பட்டிருக்கும் கொப்புளத்தையும் பரிசோதிக்கிறார்.

இந்த கொப்புளம் குதூகலமாக வளர்ந்து கொண்டிருக்கிறது டாக்டர். இதற்கு நீங்கள் புது மருந்தைத்தான் தேட வேண்டும். முதுகுத்தண்டு, வலியை அதிகரிக்க, தானாகவே புதுவழி ஒன்றை தேடிக்கொண்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது.

வலி எப்போதிலிருந்து இருக்கிறது?

ஆரம்பத்தில் பொறுக்க முடிந்தது. இப்போது இரண்டு நாட்களாக அதிகமாகியிருக்கிறது. வெட்டி, கிழித்து, இன்னும் செய்ய வேண்டியது ஏதேனும் பாக்கி இருக்கிறதா?

அம்மா சீழ் கோர்த்து கொண்டிருக்கிறது. அதை எடுத்துவிட்டால் வலி கொஞ்சம் குறையும்.

மகனே, பயணியிடமும் கொஞ்சம் மீதம் விட்டு வை. கடைசியில், சுங்க வரி கட்டக் கூட முடியாமல் நின்று விடப் போகிறேன்.

அம்மா, கொஞ்சம் அசையாமலிருங்கள். ஆமாம், சுங்கவரியா? இதென்ன புதிய கதை?

சிம்லா தடையரணுக்கு முன்பாக எல்லா வண்டிகளையும் நிறுத்திவிடுவார்கள். இப்போது நானும் சுங்கச்சாவடிக்கு அருகே நின்று கொண்டிருப்பது போலத்தான் எனக்குத் தோன்றுகிறது. சோதனை முடிந்து, என்னுடைய வண்டியை எப்போது போக விடுவார்கள் என்று தெரியவில்லை. இப்போது இது மட்டும் தான் நான் செய்ய எஞ்சியுள்ளது!

அம்மா, கொஞ்சம் வலிக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள். நான் பொறுத்துக் கொள்வேன். சிறுமியாக இருக்கும்போது மிக உயரத்தில் பறக்க விரும்புவேன். காற்று பலம் வாய்ந்தது. புயலாக வீசி, பழைய மரங்களை சாய்த்து விடும் வல்லமை படைத்தது. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் மகனே?

அதிக நேரம் ஆகாது.

டாக்டர், என்னைப்போன்றவர்களை உயிரோடு சந்திரனுக்கு அனுப்பி, அங்கேயே உரமாக அனுமதித்தால் எப்படி இருக்கும்? என்றாவது ஒருநாள், அங்கும் மனிதர்கள் பிறக்க முடியுமில்லையா?

அம்மா அங்கே ஆக்சிஜன் இருக்காது. உலகின் பல நாடுகள் சந்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றன.கூடிய சீக்கிரம், ஏதாவது ஒரு வழி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டாக்டர் சாஹிப், பாலில் பிராந்தி கலந்து குடிக்கலாமா. இந்த வலி என் சக்தியை வெகுவாக உறிஞ்சிக் கொண்டு விட்டது.

சூசன், அம்மாவுக்கு சாக்லேட் போட்ட பால் கொண்டு வா.

டாக்டர் சாஹிப், என்னுடைய எடை ரொம்ப வருடங்களாக ஐம்பது கிலோவைத் தாண்டியதில்லை. குழந்தைகள் பிறந்த போதும், ஒரு இன்ச் கொழுப்பு கூட ஏற விட்டதில்லை. ஒரே வேகத்தில் ஒரே மாதிரியான வாழ்க்கை. எல்லாம் நியமப்படி. பொரிக்கப்பட்ட அல்லது எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டதில்லை. குழந்தை பிறந்த சமயத்தில் மட்டும் டானிக் கண்டிப்பாக குடித்ததுண்டு.

ஒருபோதும் சோம்பியதில்லை. இப்போது அதற்கு முற்றிலும் மாறாக, படுத்தே கிடக்கிறேன். என் பங்கு உணவு அத்தனையையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். டாக்டர் சாஹிப், என்னை இன்னும் எவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு செல்வதாக உத்தேசம்?

அம்மா, ஓய்வெடுங்கள். என்ன சாப்பிடவேண்டுமென்று தோன்றுகிறதோ அதைச் சாப்பிடுங்கள். கவலையைத் தூக்கி எறியுங்கள்.

அம்மா சிரித்தபடியே,

அப்படியென்றால், நீங்கள் என் கதவைத் திறந்து விட்டீர்கள். தொண்டை வறண்டு போகிறது. குளிர்ச்சியான பொருட்களை நான் சாப்பிட முடியுமா?

ஏன் முடியாது? பால், தயிர், ஐஸ்கிரீம் என்ன வேண்டுமோ சாப்பிடலாம். ஆனால் இன்று சூடான பொருட்களை மட்டும் சாப்பிட்டால் நல்லது.

டாக்டர் சூசனிடம் மருந்துச் சீட்டை கொடுத்து-

இரவு தூங்கும் முன்பு, பிறகு நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை. அம்மாவுக்கு வலி அதிகமாக இருந்தால் எனக்கு ஃபோன் செய்யுங்கள்.

நல்லது அம்மா, நான் கிளம்புகிறேன்.

நலமாக இரு மகனே. நிறைய நிறைய சம்பாதி. நோயாளிகளை நிறைய நாட்கள் இழுத்துச் செல்.

அம்மா இதென்ன டாக்டர் சாஹிப்பிடம் இப்படி சொல்கிறீர்களே!

பெண்ணே, நீ இதைப் பற்றி குழப்பிக் கொள்ளாதே. டாக்டர் என்பவர் நோயாளிக்கு சொந்தக்காரர் போலத்தான். மனதில் சொல்லத் தோன்றுவதை சொல்லிவிடவேண்டும். மனம், வலி இரண்டுமே லேசாகிவிடும்.

இல்லையா டாக்டர் சாஹிப்?

டாக்டர் சிரிக்கிறார்.

அம்மா, ஏதாவது பிரச்சனை இருந்தால், நீங்களே நேரடியாக எனக்கு போன் செய்து விடுங்கள்.

என்னுடைய டாக்டர் மருமகள் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டாளா?

அம்மா சிரிக்கிறார்

மகள் டாக்டரை வாயில் வரை சென்று வழியனுப்பி விட்டு வருகிறாள்.

அம்மா, நோயாளிகளை ரொம்ப காலம் இழுத்துச் செல்கிற விஷயத்தை கேட்டு டாக்டர் சாஹிப் சங்கடப்பட்டிருப்பார்.

இல்லை, நான் அவரை வம்புக்கிழுக்கிறேனென்று அருக்குத் தெரியும்.

அம்மா, இப்போது கொஞ்சம் வலி குறைந்திருக்குமே. மனதில் குறை, வருத்தம், பயம் ஏதாவது இருக்கிறதா உங்களுக்கு?

இல்லை. உப்பும் இனிப்பும் கலந்ததுதான் வாழ்க்கை. இதில் குறைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது? எல்லோருடைய ஜாதகத்திலும் பலவிதமான வண்ணங்கள் – அடர் மற்றும் வெளிர் வண்ணங்கள் நிறைந்துதான் இருக்கின்றன. சந்தோஷம்- துக்கம் லாபம்- நஷ்டம், உயர்வு-தாழ்வு, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வண்ணம் எவருடைய கைகளுக்கும் பலம் கொடுக்கப்பட்டி ருக்கவில்லை. கோடையும் குளிரும், நல்ல நாட்களும் நலங்கெட்ட நாட்களும் இணைந்து தான் வருகின்றன. மேலே இருப்பவனை தவிர வேறு எவராலும் இதைத் தடுக்க இயலாது. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. யார் தனக்கெனக் கப்பலை உருவாக்கிக் கொள்கிறார்களோ, அவர்களே சமுத்திரத்தில் குதிக்க முடியும். உழைப்பவர்கள் மட்டுமே பலனை எதிர்பார்க்க முடியும். இதுதான் வாழ்க்கையைக் கொண்டாடும் விதம். வாழ்பவர்கள் அடையும் பெருங்கொடையும் இதுவே.

என்னுடைய பயணம் கொஞ்சம் அதிகமாகவே நீண்டுவிட்டது.

அம்மா, நீங்கள் விருப்பப்பட்டால் ஏதேனும் பூஜைக்கு ஏற்பாடு செய்யலாமா?

நீ சொல்வதென்னவோ நல்லதுதான். பூஜைகளும் மந்திர உச்சாடனங்களும் அமிர்தம் போன்றவை. அவற்றைக் கேட்பதால் மனம் அமைதி கொள்கிறது. ஆனால் பாட்டு பஜனை இவற்றை எல்லாம் பிறகு வைத்துக்கொள். பெரிய சடங்குகளில் சிக்கிக் கொள்ளாதே. வழமை என்கிற பெயரில் உனக்கு ஒவ்வாததைச் செய்ய முற்படாதே. எது தேவையோ அதை மட்டும் செய்.

சமையலறையிலிருந்து இது என்ன மணம்? அல்வா தயாரித்துக் கொண்டிருக்கிறாயா? பெண்ணே உணவுப் பிரியர்களுக்கு அல்வா மிகவும் பிடித்தமானது. இதன் நற்குணங்களை எண்ணுவதென்பது மிகக் கடினம்.

நீங்கள் சங்கராந்தியன்று தயாரிக்கும் அல்வாவுக்கு ஈடு இணை எதுவும் ஆகாது அம்மா.

அம்மா தன் எண்ணங்களைப் பின்தொடர்ந்தபடியே…

பெண்ணே, இன்னாட்களில், உன் தாத்தாவின் நினைவுகள் என்னை முழுவதுமாக ஆட்கொண்டிருக்கின்றன.. அவரது கடைசி நாட்களில், அவர் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார் – வீடு முழுவதும் இது என்ன நறுமணம்? மிதமான தீயில் ரவை வறுபடும் நறுமணம். அல்வா தயாரித்து முடித்ததும் கொண்டுவாருங்கள். கொஞ்சமேனும் கொடுங்கள் காலம் தாழ்த்தாதீர்கள் என்று நாள் முழுவதும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

கேட்பவர்கள் சிரிப்பார்கள். ஆனால், உன் பாட்டிக்கு கைகால் வெலவெலத்து விடும். காலையிலேயே ஆரம்பித்துவிடும் அவரது விருப்பங்களை, உன் பாட்டி மிகுந்த சிரத்தையுடன் நிறைவேற்றுவார். தாத்தாவுக்குமிகச் சிறப்பாக பணிவிடை செய்தார். பெண்ணே, இதுவும் மனிதர்கள் கடக்க வேண்டிய ஒரு நிலைதான். மனிதனின் மீது மௌனம் இறங்க ஆரம்பிக்கிறது. உள்ளுக்குள் ஆழ்ந்து நோக்க ஆரம்பித்தால், மனக்கிடங்கில் பழைய நினைவுகள் அம்பாரமாய் குவிந்து கிடப்பது தெரியும். எது நினைவுக்கு வருகிறதோ, அதைத் தேட ஆரம்பிக்கிறோம்.

ஏன் எழுந்து கொள்கிறாய்?என்னுடன் கொஞ்ச நேரம் உட்கார்ந்திரு. பெண்ணே, சிலருடைய உள்ளம் மோக மாயையில் சிக்கி உழல்கின்றது. என்னையே எடுத்துக்கொள்.அது உன் வாழ்க்கையோடு ஒட்டிக் கிடக்கிறது. உடல் படுக்கையில் கிடந்தாலும் மனம் உன்னையே சுற்றி வருகிறது. படுத்தபடியே, இப்போது வெளியே போய் இருக்கிறாள், இதோ வந்து விட்டாள், என்ன யோசித்துக் கொண்டி ருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கச் சொல்கிறது. மாறி மாறி வந்து கொண்டிருக்கும் காலம், பல்வேறு எண்ணங்களையும் வேதனைகளையும் உள்ளடக்கியே வருகிறது.

அம்மா, மனதுக்குப் பிடிக்காத எண்ணங்களை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஆமாம். நீ சொல்வது சரிதான். காற்றைக் கையால் அளப்பது என்பது அத்தனை எளிதில்லை. முடியவும் முடியாது. வாழ்நாளில் நான் சம்பாதித்து வைத்திருப்பது இந்த நினைவுகளை மட்டும்தான். அதிகப்படியாகக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே கூடுதல் வெகுமதிதான். பெண்ணே, கவனமாக கேள்.

வீட்டில் மண் விளக்கு இருக்கும். அதைத் தேடி எடுத்து கைக்கெட்டும் இடத்தில் வைத்துக்கொள். தேவைப்படும்போது, அதை நீ எங்கே தேடிக் கொண்டிருப்பாய்.

உன் சகோதரன் தென்படவில்லையே? நேற்றிலிருந்து அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன விஷயம்?

அம்மா, அவர் அலுவலக வேலையாக நகரை விட்டு வெளியே சென்றிருக்கிறார்.

(தொடரும்)

Series Navigation<< ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டுஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.