- உணவு, உடை, உறையுள், … 1
- உணவு, உடை, உறையுள், … – 2
- உணவு, உடை, உறையுள், … – 3
வெள்ளிக்கிழமை.
வெளி வராந்தாவில் ஒரு வட்ட மேஜை, இரண்டு இரும்பு நாற்காலிகள். ஒன்றை மாலை சூரியனின் மஞ்சள் பாதையில் இழுத்துப்போட்டு நீமா அமர்ந்தாள். குறுக்கு நெடுக்கான ஒற்றையடிப் பாதைகளில் மூன்று மற்றும் இரண்டு சக்கர சைக்கிள்களில் குழந்தைகள், அவர்களைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டிகள். பேசிக்கொண்டே நடந்துசென்ற சிறுவர்கள். நாய்களை நடத்திய நடுவயதினர். நடுவில் புல்தரையில் இருந்து பெண்களின் சிரிப்பொலியும் பேச்சுக்குரலும். ஒலிகள் இல்லாத வர்த்தக லோகத்தில் இருந்து பேசும் உலகில் நுழைந்தாள். பெண்களின் கலகல சத்தம் வந்த திசையில் இலைகளின் ஊடே பார்வையை ஓட்டினாள். மஞ்சள் விரிப்புக்குமேல் ஒரு செவ்வக பிரம்புக்கூடை அதைச்சுற்றி மூன்று பெண்கள். ஹிந்தி வார்த்தைகள் என்றாலும் பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. இப்படியொரு காட்சியை அங்கே அதுவரை பார்த்தது இல்லை. கூடையில் என்ன இருக்கும்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? பக்கத்தில் போய்ப் பார்ப்பது அநாகரிகம் என ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
கண்களை மூடி மனித சப்தங்களில் லயித்தாள்.

ஒலி அடங்கியதும் எழுந்து ஓரத்தில் வந்து எட்டிப்பார்த்தாள். இருவர் கட்டடத் தொகுதியின் கிழக்குப்பக்கம் நோக்கி நடக்க எதிர்த்திசையில் மூன்றாவது பெண். மடித்த மஞ்சள் விரிப்பு மூடிய பிரம்புக்கூடையுடன் அவள் இன்னொரு கையில் ஒரு உயரப்பாத்திரம்.
நீமாவைப் பார்த்து அவள் புன்னகையுடன் தலையசைத்தாள். நீமாவும் பதில் புன்னகை செய்ய அவள் படியேறி வந்தாள். இடைக்குக் கீழே இறுக்கமான ஆடை, மேலே தளர்ந்த சட்டை. இரு கலாசாரங்களின் சங்கமம். வட இந்திய வெள்ளை முகம். அளவாக வெட்டிய கூந்தல். ஒருவேளை தாயாகி இருந்தால் அவள் குழந்தை நிச்சயம் தவழும் வயதில்.
“ஹாய்! ஒரு நல்ல சேதி. இன்று மாலை நீ சமைக்க வேண்டாம்.”
‘நான் தினமுமே சமைப்பது இல்லை’ என்று அவள் ஆர்வத்தை அணைக்காமல்,
“நிச்சயமாக அது நல்ல சேதி தான்.”
அவள் நெருங்கி வந்ததும் என்ன விற்கிறாள் என்று பாத்திரத்தில் இருந்து வெளியேறிய ஆவியின் வாசனையில் தெரிந்தது.
மேஜைமேல் மஞ்சள் துணியை விரித்து பிரம்புக் கூடையை வைத்து அதன் ஒரு பாதியைத் திறந்தாள். அதில் ஒரே சீராக இளம்பழுப்பு வட்டங்கள்.
“என் பெயர் ஜீதா. மிஸ்-“
“நீமா.”
“அபூர்வமான பெயர்.”
“மூன்று சப்பாத்திகள் எடுத்துக்கொள்கிறேன்.”
“முழு கோதுமை மாவில் பால் கலந்து செய்தது” என்ற பெருமையுடன் அவற்றைப் பிரித்து ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொடுத்தாள். “சப்ஜிக்கு ஒரு பாத்திரம் கொடுத்தால் உதவியாக இருக்கும்.”
நீமா உள்ளே சென்று சரியாகப் பொருந்தாத மூடியுடன் இரண்டு க்வார்ட் (லீட்டர்) பாத்திரம், இரண்டு பத்து டாலர் நோட்டுகள் எடுத்து வந்தாள்.
மஞ்சள் விழுதில் சிவப்பு, பச்சை நிறத்துண்டுகள். பாத்திரத்தில் பாதிக்குக் கீழே நின்றது.
“இன்னொரு பங்கு போடலாம். நாளை காலை ப்ரெட்டுக்கும் சேர்த்து.”
“மொத்தம் பத்து டாலர்.”
ஒரு நோட்டைக் கொடுத்ததும்,
“தாங்க்ஸ். நீ இங்கே?”
“எட்டு வருஷங்களாக இருக்கிறேன்.”
“என் கணவனும் நானும் ஆறு மாதத்திற்கு முன் வந்தோம். அதற்கு முன் ஏர்போர்ட் பக்கத்தில்.”
பெயரும் தொலைபேசி எண்ணும் எழுதிய வட்டக் காகிதத்துண்டைக் கொடுத்தாள். “இன்று என் வியாபாரத்தின் முதல் நாள்.”
“நிறைய வாடிக்கைகள் கிடைக்கட்டும்! எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்கிறேன்.”
“தாங்க்ஸ். இப்போதைக்கு சப்பாத்தியும் ஒரு சப்ஜியும். போகப்போக சமோஸா, பூரி.”
“கேட்கவே நன்றாக இருக்கிறது.”
பிரம்புக்கூடையும் உயரமான பாத்திரமும் அவள் உடலில் ஒட்டிக்கொண்டன.
“நாளை இதே நேரம்..”
“கட்டாயம் பார்ப்போம்!”
ஜீதாவின் கைவண்ணம் ஆறுவதற்கு முன் நீமா சாப்பிடத் தொடங்கினாள். மூன்று நாட்களாகத் தருவித்த உணவில் இல்லாத வீட்டுச்சாப்பாட்டின் மணம். வீட்டுச்சாப்பாடு தான், ஜீதாவின் வீட்டில் சமைத்தது. ராகுலின் சப்பாத்தி விதவிதமான வடிவங்களில். சாப்பிடும்போது அது எதைப்போல என்று கண்டுபிடிப்பது ஒரு புதிர். பேஸ்பால் மைதானம், இல்லை முக்கோண முகம்.
– ஆர் யு ஓகே? –
வேலை நாட்கள் முடிந்துவிட்டதால் மனதின் மேல்மட்டத்துக்கு வந்த பதில் சொல்லாத, சொல்லத் தெரியாத கேள்வி. அதில் இருந்து தப்பிக்க மறுபடி வேலை.
முதல் உலகப்போரில் உயிரிழந்த போர்வீரர்களின் நினைவாக ‘சோல்ஜர்ஃபீல்ட்’ என்று அந்த களத்திற்குப் பெயர் சூட்டப்பட்டதால் அதை மாற்றுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அடுத்தது ஷிகாகோவின் யுனைடெட் சென்டர். கோவிட் விமானப் பயணங்களைக் குறைத்து யுனைடெட் ஏர்லைன்ஸின் லாபத்தை விழுங்கி இருக்கும். பணத்தை மிச்சம்பிடிக்க பெயரிடும் உரிமையை அவர்கள் விட்டுவிடலாம். இல்லை, தற்போது யுனைடெட் தருவதைவிட அதிகப் பணம் கொடுத்து அதை வாங்கலாம். இன்னும் சில மாதங்களில் சென்டரின் கெட்டித்தரையில் கூடைப்பந்தும், பனித்தடத்தில் வட்டும் எகிறும்போது ‘எலிப்டெக்ஸ்’ எழுத்துக்கள் பறக்கப்போகின்றன.
பிரபல ஆட்டக்காரன்? அவன் மாடல் மனைவி?
ஜீதாவிடம் சொன்னதுபோல் மிஞ்சிய கறி மறுநாள் காலை ப்ரெட்டுக்குத் தொட்டுக்கொள்ள.. ஆகா! கறி. ‘கோல்டன் ஸ்டேட் வாரியர்’ குழுவில் ஆடும் ஸ்டெஃபான் கறி. அவனும் அவன் மனைவி ஆயிஷாவும் எலிப்டெக்ஸைப் பிரபலப்படுத்த எல்லா விதங்களிலும் பொருத்தமான ஜோடி.
இரண்டு முயற்சிகளுக்கும் திட்டமிடுவதில் மறுநாள் பகல்பொழுது சென்றது.
ஜீதாவை எதிர்பார்த்து வெராந்தாவில் காத்திருந்தாள். மேஜைமேல் பத்து டாலர் நோட்டு பறக்காமல் இருக்க பாத்திரம்.
முந்தைய தினத்துக்கு சற்று நேரம் கழித்தே அவள் தோன்றினாள். விடுதிப் பணிப்பெண் போல நீலச் சீருடையில்.
“இன்று குருமா.”
“க்ரேட்!”
பிரம்புக்கூடையில் ஐந்தாறு சப்பாத்திகள் தான். வர்த்தகப் பரிமாற்றம் முடிந்ததும்,
“இன்று நல்ல விற்பனை போல.”
களைப்பையும் மீறி ஜீதா முகத்தில் மகிழ்ச்சிப்புன்னகை.
“உட்காரேன்!”
நாற்காலியில் அமர்ந்து இளைப்பாறினாள். அவள் ஆடைமேல் நீமாவின் பார்வை படிந்ததைக் கவனித்து,
“ஐந்து வருஷமாக ‘வெல்கம் கான்டினென்டலி’ல் காலை உணவை மேற்பார்வை செய்யும் வேலை. இரண்டு வாரத்துக்கு முன் அதை நிறுத்திவிட்டார்கள். விடுதிகளில் சாப்பாடு வாங்கி வீடுகளில் சென்று கொடுப்பதை விட சுதந்திரமாக விற்பனை செய்வது சுவாரசியமாகப் பட்டது.”
“நல்ல தீர்மானம்.” ‘வெல்கம் கான்டினென்டல்’ மனதில் கிளறிய குற்ற உணர்வினால் நீமா, “வெல்கம் காலை உணவுப் பகுதியை மூடியதற்கு வருந்துகிறேன்” என்றாள்.
ஜீதா ரகசியம் சொல்வதுபோல் குரலைத் தாழ்த்தி,
“அது ஒரு நாடகம்.”
“அப்படியென்றால்..”
“ஏதோவொரு ஆலோசக நிறுவனத்தின் யோசனையில் அப்படிச் செய்ததாக வெளித் தகவல். அது சுத்தப்பொய். நிஜமான காரணம்..”
அலைபேசி ஒலிக்கவே,
“நான் போக வேண்டும்.”
முந்தைய தினத்தின் சப்ஜியை விட குருமா காரசாரமாக இருந்தது. ஆனால் நீமாவின் நாக்கில் அது உறைக்கவில்லை.
சென்ற மாதம் அவள் கவனத்துக்கு வந்த ‘வெல்கம் கான்டினென்டலி’ன் பிரச்சினை. விடுதியின் நடவடிக்கைகளில் பணம் எங்கோ வீணாகிறது. ஓட்டையைக் கண்டுபிடித்து அதை அடைக்க வேண்டும். அவர்கள் அனுப்பிய ஆண்டுக் கணக்கை ‘எக்ஸெல்லி’ன் பூதக்கண்ணாடி வழியே பார்த்தாள். மின்சாரம், சலவை, சுத்தம் செய்யும் பணிப்பெண்கள், நிர்வாகக்குழு – இச்செலவினங்களில் குறை தெரியவில்லை, குறைக்கவும் வழியில்லை. பல விடுதிகளைப் போல ‘வெல்கமி’லும் இலவசக் காலை உணவு. கேட்டதும் விருப்பப்படி சூடாகத் தயார் செய்த ஆம்லெட், சீஸ் டோஸ்ட், பலரக க்ரனோலா , கே-கப் காஃபி, காலத்துக்கேற்ற பதமான பழங்கள், க்ரீக் தயிர் கோப்பைகள் – மனித சேவையும் சேர்த்து சராசரி விலை பதினேழு டாலர். மிச்சம் பிடிக்க சீரியல், இயந்திர காஃபி, சர்க்கரையில் தோய்த்து பிளாஸ்டிக் கிண்ணங்களில் அடைத்த பழத்துண்டுகள், கடையில் வாங்கிய ப்ரெட் மற்றும் பேகல், சாதா தயிர் கோப்பைகள் எனத் தரத்தைக் குறைக்கலாம். அது ‘வெல்கமி’ன் ஐந்து நட்சத்திரங்களில் இரண்டைச் சாப்பிட்டுவிடும். வாடகையை உயர்த்தினால் போட்டி விடுதிகளுக்குத்தான் லாபம். காலை உணவுப்பகுதியைப் புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லி அதை முழுக்க மூடிவிட்டு ஒவ்வொருவருக்கும் ‘வெல்கமை’ ஒட்டிய உயர் மட்ட உணவு விடுதியில் செலவழிக்க பத்து டாலர் டோகன். ஒரு நாளைக்கு மூவாயிரம் டாலர் மிச்சம். அதற்கு பலி முகம் தெரியாத நாலு பேர். வணிக உலகில் தினம் நடப்பது தான்.
அவர்களில் ஒருத்தி ஜீதா. அவள் அதற்காக ஒடிந்துவிடாமல் புதிய வணிக முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது நீமாவின் குற்ற உணர்வைக் குறைத்தது.
கிளம்புவதற்கு முன் ஜீதா சொன்ன வார்த்தைகள் எதிரொலித்து நீமாவின் எண்ணங்களை அவள் நோக்கியே திருப்பின. ஒருவாரம் பல விவரங்களை ஆராய்ந்து எண்களை ஜீரணித்து அவள் ‘வெல்கமு’க்குக் கொடுத்த ஆலோசனை ஒரு தில்லுமுல்லுக்கு மேற்போர்வை. காலை உணவுப்பகுதியை மூடுவது அவர்கள் ஏற்கனவே தீர்மானித்த நடவடிக்கை. நிஜமான காரணத்தை மூடிமறைக்க பிரமிடின் முத்திரை. ‘வெல்கமி’ன் கபட நாடகத்தில் அவளும் ஒரு பாத்திரம். மனம் கசந்தது.
புதிய வீட்டின் கீழ்த்தளத்தில் பின்புறத்தை ஒட்டி ஆளுயர ஜன்னல்களுடன் ஓர் அறை. தெற்கு நோக்கி இருந்ததால் விளக்கை எரிக்காமலே பகலில் பிரகாசம். படம்வரையும் டெஸ்க், ஸ்டூல், மற்றும் வர்ணங்களின் சிமிழ்கள் வைக்கும் தட்டு அதைக் கலைக்கோவிலாக மாற்றின. வெள்ளிக்கிழமை அந்திவேளை அங்கிருந்து தெரிந்த ஒரு காட்சி ராகுலைக் கவர்ந்தது. இரண்டு நாட்கள் அவன் கண்ணும் கையும் ஒன்றாக இணைந்து நகர்ந்தாலும் பின்னணி எண்ணங்கள் வேறொரு தளத்தில்.
திங்கள்கிழமை ஷிகாகோவில் இறங்கியதில் இருந்து மறுநாள் வீட்டை முழுவிலை கொடுத்து வாங்கத் தீர்மானித்தது வரையில், நீமா பிரிவை யோசிக்கும்படி என்ன நடந்திருக்கும்?
பிரமிட் அலுவலகத்தில் வேலை முடியவில்லை. விமானப் பயணத்தைத் தள்ளிப் போடுகிறாள். அதை அவனுக்குத் தெரிவிக்கக் கைவரவில்லை. தீர்க்கமுடியாத பிரச்சினைகள்? ஊகும், அவளுக்கு எந்த சிக்கலையும் பிரிக்கும் திறமை, தன்னம்பிக்கை. இரவில், அமெரிக்க மொழியின் ‘ட்ரிஸ்ட்’? கட்டாயத்தினால், சபலத்தினால், அல்கஹாலின் தூண்டுதலால். எதுவானாலும் அவனுக்கு அவள் எந்த விதத்திலும் கறைப்பட்டவள் அல்ல. அதற்காக அவள் வெட்கப்பட்டு மணமுறிவை யோசித்தால் அது நீமா தனக்கு விதித்துக்கொண்ட ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது. குற்ற உணர்வில் இருந்து அவளை எப்படி விடுவிப்பது? முதலில் அவளாகவே மனம் தேறட்டும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை.
வாசலில் பேச்சுக்குரல்கள்.
“இந்தப் பள்ளத்தில வீடு கட்டமாட்டாங்கன்னு நினைச்சோம்.”
“நினைச்சேன்னு சொல்லு!”
“எந்த இடத்தையும் காலியா விட்டுவைக்க மாட்டாங்கன்னு நான் சொன்னேன்.”
“நீ அப்படிச் சொன்னதா எனக்கு ஞாபகமே இல்ல.”
“உனக்கு காலையில சாப்பிட்டதே மறந்துடும்.”
“தினம் எட்டுமணிக்கு மூணு தோசை. அது எப்படி மறக்கும்?”
ராகுல் எட்டிப் பார்த்தபோது தினம் அவ்வழியே நடக்கும் முதியவர்கள். நின்று பள்ளத்தில் எழுப்பிய வீட்டை அதிசயித்தார்கள். வார்த்தைகளில் இருந்த காரம் முகத்தில் வெளிப்படவில்லை.
மனிதக் குரல்கள் கவர்ந்து இழுக்க, பாதையில் மேலேறி வந்தான்.
“நான் ராகுல். வந்ததிலேர்ந்து தினம் உங்களைப் பார்க்கிறேன்.”
இளையவராகத் தோன்றியவர், “நான் சந்திரமோகன். மத்தவங்க ஸ்ரீவத்சன், ஜெயராம், வித்யாசாகர்” என்றார்.
“வீட்டை எப்படி கட்டியிருக்கான்னு உள்ளே வந்து பாருங்களேன்!”
வலது காலில் ஊன்றி நின்ற ஸ்ரீவத்சன் தயங்கினார்.
“நான் கூட்டிண்டு போறேன்.”
அவர் தோளைத்தாங்கி படி வழியாக இறக்கி சமையலறைக்கு அழைத்துப்போனான். மற்ற மூவரும் தாராளமாக வீட்டிற்குள் படிகளில் ஏறியிறங்கி,
“நான் நினைச்சமாதிரிதான். மூணு தளத்தில கச்சிதமா இருக்கு” என்றார் சந்திரமோகன்.
“வீட்டில சாமான்களே அதிகம் இல்ல. நீ அபார்ட்மென்ட்லேர்ந்து இங்கே வந்திருக்கணும்” என்றார் ஜெயராம். முழு வழுக்கை அவர் வயதைக் கூட்டிக் காட்டியது.
“ஷெர்லக் ஹோம்ஸ் கண்டுபிடிச்சுட்டார்.”
“நாங்க இதுவரை இருந்ததுக்கு இந்த வீடு பெரிசுதான்.”
“வீட்டுத்தலைவி இன்னும் வரல போல இருக்கு. அதனால தான் உன் முகத்தில கொஞ்சம் சோகம்” என்று இன்னொரு ஷெர்லக் ஹோம்ஸ்.
“நீமா போன வாரமே வந்திருக்கணும். ஷிகாகோல இன்னும் வேலை முடியல.”
அது மட்டும் காரணம் ஆகாது என்பதை அடுத்துவந்த மௌனம் விழுங்கியது. அதை முடிக்க,
“நீ படம் வரையற மாதிரி இருக்கு” என்றார் வித்யாசாகர்.
“பொழுது போறதுக்கு ஒரு கலை.”
“கவலையை மறக்கவும் ஒரு வழி.”
“உண்மை தான்.”
“வரைஞ்சது இருந்தா காட்டு, பார்க்கலாம்!”
பின்னால் சூரிய அறையில் உலர்வதற்காக வைத்திருந்த ஓவியத்தை எடுத்துவந்தான். அதைப்பார்த்துக்கொண்டே அவர்,
“பூர்ண சந்திரனின் உதயம். தாமிர மஞ்சள் வட்டம் படத்தின் பிரதானம். பின்னணியில் ஆழ்ந்த கருநீலம். மரத்தின் கறுப்புக் கிளைகளில் கரும்பச்சை இலைகளும் செந்நிறப் பழங்களும். ஒரு ஜோடிப் பறவைகள். கண்களைத் தவிர மீதி முழுவதும் ஒரே வெள்ளை. எல்லாம் சேர்ந்து இரவு வந்துவிட்டதைக் காட்டறது. பிரமாதம்!”
“நான் வரைஞ்சது இருக்கட்டும். அதை ஒண்ணொண்ணா பிரிச்சு நீங்க ரசிக்கிறது இன்னும் பிரமாதம்.”
“பூக்களும் பறவைகளும் வரைய இந்த இடத்தில நிறைய சான்ஸ்.”
“பின்னாடி ஒரு ‘பர்ட் ஃபீடர்’ பார்த்தேன். இன்னும் கூட வைக்கலாம்” என்றார் ஸ்ரீ.
“ஹோம் டிப்போல வாங்கிண்டு வந்து..”
“வாங்க வேண்டாம். என் கிட்ட உபயோகப்படுத்தாம ரெண்டு இருக்கு. வந்து எடுத்துண்டு போ!”
“ரொம்ப தாங்க்ஸ்!”
படத்தை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வந்தான். புதிய வீட்டுக்கு முதன்முதலாக வந்தவர்களை உபசரிக்க,
“நீங்க தினம் நடக்கறதனால சர்க்கரைக்குப் பயப்பட வேண்டாம்” என்று தைரியம் சொல்லி நீமாவுக்குச் செய்த கேசரியை ஐந்து கிண்ணங்களில் சுடவைத்தான்.
“நீயே பண்ணினதா?”
“ம்ம்.. பிடிச்சிருக்கா?”
“பிரமாதம் போ!”
“படம் வரையறதோட நன்னா சமைக்கறே.”
“இதை ஜீரணிக்க இன்னிக்கி அதிகப்படியா நடக்கணும்.”
“நானும் கூட வரலாமா?”
“நாங்க மெதுவாகத்தான் நடப்போம்” என்றார் ஸ்ரீ.
“நான் நிதானமா நடக்கறேன். நீங்க பேசறதைக் கேட்க சுவாரசியமா இருக்கு.”
நீமா கடைசி வாடிக்கை. அவள் தூண்டாமலே ஜீதா நாற்காலியில் அமர்ந்து முந்தைய தினம் அலைபேசி நிறுத்திய உரையாடலைத் தொடர்ந்தாள்.
“வெல்கம் விடுதியில் காலை ஐந்து மணியில் இருந்து பதினோரு வரை எனக்கு வேலை. நான் போவதற்கு முன்பே மூன்று சமையல்காரர்கள் சூடான உணவுகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். நான் மற்ற சாப்பாட்டு சாமான்களை நேர்த்தியாக வைப்பேன். விருந்தினர்களுக்கு உதவி செய்வேன்.”
நீமாவின் மனக்கண்ணில் அக்காட்சி தோன்றியது. அவள் விடுதிகளில் தங்கியபோது சாப்பிட்ட காலை உணவுப்பகுதிகளைப் போலத்தான்.
“சில வாரங்களுக்கு முன் ஒரு நாள். நான் போனபோது தனித்தனியான எட்டு சதுர மேஜைகள் ஒட்டிக்கொண்டு ஒரு பெரிய செவ்வகத்தில். சுற்றிலும் தாறுமாறாக நாற்காலிகள். முந்தைய இரவில் பத்துப் பதினைந்து பேர் கூடிப் பேசியதற்கு அடையாளம். நான் அவற்றைப் பிரித்து அந்தந்த இடங்களுக்கு நகர்த்துவது வழக்கம். எப்போதும் போல மேஜை மேல் ஏராளமான கே-கப் குப்பைகள். அவறின் நடுவில் ஒரு நீண்ட காகிதம்…”
“கூட்டத்தனர் தவறுதலாக விட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும்.”
“அதன் தலைப்பில் இரண்டு வரிகள். கீழே வரிசையாக இரண்டுமூன்று எழுத்துக்கள். அவற்றின் பக்கத்தில் எண்கள். அத்தனை பூஜ்யங்களை நான் என் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. எழுத்துகள் எல்லாமே சைனீஸில். அவற்றைக் கணினி வழியாக அச்சிட முடியும் இல்லையா?”
“ம்ம். முடியும்.”
“ஆனால் அது முழுக்கக் கையால் எழுதியது. அதைக் குப்பையில் போடப் போனபோது மேனேஜர் பாய்ந்துவந்தான். காகிதத்தை என்னிடம் இருந்து பிடுங்கி ஜாக்கிரதையாக மடித்தான். ‘நீ ஏன் அதைப் படித்தாய்?’ என்று கத்தினான்.
“‘குப்பையில் போட காகிதத்தைத் தனியே பிரித்தேன். அவ்வளவுதான்.’ அந்த பதில் அவனுக்கு சமாதானமாக இல்லை.
“‘அது எதற்கு என்று சொல் பார்க்கலாம்!’ என்றான் சாமர்த்தியமாக.
“‘அதை நான் பார்க்கவே இல்லையே, எனக்கு எப்படித் தெரியும்?’
“அப்போதும் அவனுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. மற்றவர்களையும் துருவித்துருவிக் கேட்டான். அவர்களில் ஒருவன் சைனீஸ். வேலைக்கு முதலில் வரும் அவன் கண்ணில் காகிதம் நிச்சயம் பட்டிருக்கும். அதைப் படித்து விஷயத்தை ஞாபகத்தில் வைத்திருப்பான் என்று எனக்கும் சந்தேகம். இது நடந்து ஒரு வாரத்தில் எல்லாரையும் வேலையில் இருந்து தள்ளப்போவதாகப் பேச்சு. மாநில ஊழியர் சட்டம் தகராறு கொடுக்கும் என்பதால் உணவுப்பகுதியையே மூடிவிட்டார்கள்.”
“இம்மாதிரிக் கூட்டம் அடிக்கடி நடக்குமா?”
“மாதத்தில் ஒரு தடவை, பல வருஷமாக. ஆனால் குறிப்பிட்ட நாள் என்று சொல்வதற்கு இல்லை. நீ என்ன நினைக்கிறாய்?”
“முதல் இரண்டு வரிகளில் கூட்டத்தினர் செய்ய வேண்டிய காரியங்கள். அடுத்து அவர்களின் பெயர்களும், லாபத்தில் அவர்களுக்கான பங்குகளும். ரகசியமாக இருக்க சீன வரிவடிவத்தில் கணினி வழியாக அச்சிடாமல் கையால் எழுதியது. இதெல்லாம் சுலபமான ஊகங்கள்.”
“கூட்டத்தின் ஒருசில விவரங்கள் வெளிப்பட்டு விட்டதாக ‘வெல்கமு’க்குப் பயம். இம்மாதிரி தவறுகள் மறுபடி நடக்காமல் இருக்க ஜாக்கிரதை நடவடிக்கை.”
“நீ சொல்வது ரொம்ப சரி.”
ஜீதா எழுந்தாள்.
“உன்னிடம் மனம்விட்டுப் பேசியதில் எனக்கு ஒரு ஆறுதல். மற்றபடி, எங்கள் தொழிலில் வேலை மாறுவது சாதாரணம். அதனால் வருத்தம் இல்லை. பை!”
ஜீதாவுக்கு ‘வெல்கம்’ கதை முடிந்துவிட்டது. ஆனால் நீமா மனதில் அமைதியின்மை. குழுவின் ஒவ்வொருவர் பங்கிலும் எத்தனையோ பூஜ்யங்கள். அந்த அளவில் கைமாறுவது என்னவாக இருக்கும்? எதுவானாலும் அதை மூடிமறைக்க அவள் ஆலோசனை பயன்படுத்தப்பட்டதை அவளால் பொறுக்கமுடியவில்லை.
‘வெல்கம்’ விடுதியில் நடந்ததால் அதன் சம்மதமும் சம்பந்தமும் இருக்கும். மேனேஜரின் கோபத்திற்கும் அதுதான் காரணம். வீட்டிற்குள் வந்தாள். கூக்கில் தேடலில் ‘வெல்கம் இன்டர்நேஷனல்’. சில ஆண்டுகளுக்கு முன் அந்த விடுதியை அவள் யு.எஸ்.ஸில் பிரபலப்படுத்தப் போகும் ‘எலிப்டெக்ஸ்’ வாங்கியதாக ‘ப்ளும்பெர்கி’ல் ஒரு குறிப்பு.
‘எலிப்டெக்ஸி’ன் தளத்தில் நிதியுதவி நிதிப்பரிமாற்றம் நிதியாலோசனை என்ற மொட்டையான குறிக்கோள்கள். பக்கத்தை மேலே உயர்த்தியபோது க்ரிப்டோ காய்ன்கள் முக்கியமாக ‘டெல்ஃபியம்’ விற்பதும் வாங்குவதும் பிரதான நடவடிக்கை. அவளுக்குத் தரப்பட்ட தகவல் தான்.
நிறுவனத்தின் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் போல பன்னாட்டினர். அவர்களில்..
வால்டர் டியாகோ!
ஆகா! ஜீதா பார்த்த பூஜ்யங்களில் சில அவனுக்கு சொந்தம். அவை விரைவில் ஃப்ளாரிடா கடற்கரை மாளிகையாக உருவெடுக்கப் போகின்றன. அவன் மறுபடி அவளுடன் தொடர்பு கொள்ளாததில் மனநிம்மதி.
கணினியிடம் விடைபெற்று சப்பாத்தி ஆலூ-மட்டர்-பனீரில் ஆழ்ந்தாள். ‘வெல்கம்’ ஜீதாவின் திறமையை அறியவில்லை. காலையில் சும்மா மேஜைகளை இழுத்துப்போடுவதற்கு பதில் அவளை மாலை விருந்தின் ‘ஷெஃப்’ ஆக உயர்த்தி இருக்கலாம். பிரமாதப்படுத்தி யிருப்பாள்.
மறுநாள் திங்கள்கிழமை என்பதால் ஒன்பது மணிக்கு விளக்குகளை அணைத்துப் படுக்கப்போனாள். தூக்கத்தின் வருகையைத் தடுத்தது எது? பழைய படுக்கையின் மேடுபள்ளங்களா? அவை கடந்த ஐந்து இரவுகள் தொந்தரவு தரவில்லையே. அப்படியென்றால் வெல்கமும் வால்டரும்.
எழுந்து கணினியில் இன்னொரு தேடல். ‘எலிப்டெக்ஸ்’ மற்றும் ‘டெல்ஃபியம்’. தனித்தனியாகவும் சேர்த்தும் எதிர்கால தங்கச்சுரங்கங்கள் என்று அவற்றின் புகழ்ச்சிகள். பல பக்கங்களைத் தாண்டியதும் இரண்டு கல்லூரிப் பேராசிரியர்கள் எழுதி அவர்களுக்கான சஞ்சிகையில் புதைந்துகிடந்த ஒரு கட்டுரை.
டெல்ஃபியம் காசைப் பறக்கவிட்டது யார்?
அதில் இருந்த வரைபடங்கள் எண்கள் சமன்பாடுகளை வடிகட்டி அவள் அறிந்துகொண்ட விவரங்கள். .
2017 ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு டெல்ஃபியம் காசின் விலை ஆயிரம் டாலர். டிசம்பர் முடிவில் இருபதாயிரத்துக்கு மேல். இந்த அசாதரண இருபது மடங்கு உயர்ச்சி எந்தவித உபயோகமும் இல்லாத ஒரு பொருளுக்கு எப்படி நிகழ்ந்தது? ஊடகங்கள் நிஜமான பணத்தை இரண்டு கைகளிலும் அள்ளி வாங்கிக்கொண்டு கரவுக்காசுகளின் பெருமையைப் பரப்பியது ஒரு காரணம். அதைவிட முக்கியம் ‘எலிப்டெக்ஸ்’ செய்த மோசடி. கையிருப்புக்கு பல மடங்கு அதிகமான டாலர்களால் ‘டெல்ஃபிய’த்தைத் திட்டமிட்டு வாங்கி அதன் விலையைப் படிப்படியாக உயர்த்தினார்கள். இருபதாயிரத்தைத் தாண்டி பலர் கவனத்தை அது ஈர்த்ததும் யூ.எஸ். அரசின் வட்டியில்லாத கடன் பணத்தில் முப்பது நாற்பது என்று ஆயிரக்கணக்கில் அதன் விலை ஏறியது. ‘காய்ன்-பர்ஸ்’ போல பல வர்த்தகத் தளங்கள் முளைத்தன.
வெல்கம் விடுதியின் மாதாந்திரக் கூட்டங்களில் டெல்ஃபியம் விலையை செயற்கையாக இறக்கி ஏற்றி அதற்குத் தகுந்தாற்போல் அதை வாங்கி விற்கத் திட்டம் போடுவார்களாக இருக்கும். அது சட்டவிரோதமா இல்லையா என்பது முக்கியமில்லை. ஜீதா தன் வாழ்நாளில் பார்த்திராத பூஜ்யங்கள் பூஜ்யத்துக்குப் போகாமல் இருக்க கூட்டத்தின் நடவடிக்கையை ரகசியமாக வைப்பது அவசியம்.
திரும்பவந்து படுத்தாள்.
டிங்.
பெயர் தெரியாத இடத்தில் இருந்து வந்த தகவல்.
– டெல்ஃபியம் நாளை 65கே. விற்றுவிடு! –
வால்டர் சம்பந்தப்பட்ட ரகசியக் குழுவின் திட்டமிட்ட காரியங்களால் டெல்ஃபியம் உயரத்தை எட்டப்போகிறது. அவள் வசம் இருந்த நான்கு காசுகள் மனதில் கனத்தன. மனதை இலேசாக்க நாளை விற்றுவிடலாம். நாளைக்கு வேண்டாம். வாங்கிய விலைக்கு நூறாயிரம் டாலர் அதிகம் போகும். அது யாருடைய பணமோ? ஏற்கனவே கூட்டங்களின் ரகசியத்தைக் காப்பாற்ற ‘வெல்கமு’க்கு உதவியிருக்கிறாள். இன்னொரு பாவம் எதற்கு? மறுபடி டெல்ஃபியம் நாற்பதாயிரத்துக்கு இறங்கும். அப்போது அதைத் தள்ளிவிடலாம்.
மணி மூன்று. வேலைக்கு நேரத்தில் தூங்கிவழிந்து போவதைவிட நேரம் கழித்து சுறுசுறுப்பாகப் போவதே மேல். ஸீஸீஸீக்வில் மாத்திரை. மனம் காசுகளை எண்ணாமல் அடங்கியது.
“ராகுல்! எப்படி போறது?”
காலை உடற்பயிற்சியை முடித்தபோது சித்தி அழைத்தாள்.
“நீமா கிட்டேர்ந்து எதாவது தகவல் வருமான்னு எதிர்பார்த்திண்டிருக்கேன்.”
“அந்தக் கவலையில நீ நியுஸ் பார்த்திருக்கமாட்டே. உன் கிட்ட ‘டெல்ஃபியம்’ மாதிரி க்ரிப்டோ காய்ன்ஸ் இல்லையே?”
“என் கிட்ட நிஜமான காய்ன்ஸே குறைச்சல்.”
“ரொம்ப நல்லது.”
“ஏன்?”
“இப்ப ஒரு க்ளினிக்கின் வருஷ வருமானம் நூறாயிரம் டாலர்னா, பத்து மடங்கு கொடுத்து சுதாகர் அதை வாங்கறது நியாயம். க்ரிப்டோ காய்ன்ஸின் மதிப்பு இவ்வளவுன்னு போடறதுக்கு உபயோகமோ வருமானமோ கிடையாது.”
“அப்ப கணக்கில சொல்றமாதிரி அதன் விலை பூஜ்யத்திலேர்ந்து இன்ஃபினிடிக்குள்ள எங்கேயும் இருக்கலாம்.”
“நிஜத்திலியும் அப்படித்தான். ஆரம்பத்தில ஒரு டாலர் கொடுத்து அதை வாங்கினவங்க அது பத்து டாலருக்குப் போகும்னு புரளி கிளப்பினாங்க.”
“பத்து டாலருக்கு அதை வாங்கின ஆசாமிகள் சீக்கிரமே நூறை எட்டிவிடும்னு டமாரம் அடிச்சிருப்பாங்க.”
“இப்படியே போய் ஒரு ‘டெல்ஃபியம்’ அறுபத்தைந்தாயிரம் டாலர்.” இடைவெளி கொடுத்து, “நேத்திக்கி” என்றாள்.
“இன்னிக்கி?”
“கிட்டத்தட்ட பூஜ்யம்.”
“எப்படி இவ்வளவு சீக்கிரத்தில கீழே விழுந்தது?”
“நூறு பேர் கிட்ட காய்ன்ஸ் இருக்குன்னு வச்சுப்போம். அது உசரத்துக்குப் போகும்போது ஐந்தாறு பேர் மட்டும் தங்களுக்குள்ள கூடிப்பேசி வித்து லாபம் சம்பாதிக்கலாம்.”
“அதை வாங்கறதுக்கு மத்த ஏமாளிகள்.”
“என்ன காரணம்னு தெரியல. இன்னிக்கி ஆயிரக்கணக்கான பேர் காய்ன்ஸை ஒரே சமயத்தில விற்று பணம் பண்ணப் பார்த்தாங்க. வாங்கறதுக்கு ஆள் இல்ல.”
“ஒரு சுமாரான ‘ஸ்ப்ரெட் ஷீட்’டுக்குப்போய் அநியாய விலை கொடுத்து வாங்கினவங்களுக்கு நஷ்டம். கதை முடிந்தது. சுபம்.”
“இன்னும் முடியல. இந்த மாதிரி சூதாட்டத்தில பணம் போட்ட கும்பலில் பல பெரிய புள்ளிகள், ஹெட்ஜ் ஃபன்ட் மேனேஜர்கள். அவங்க கிட்டேர்ந்து அந்த செல்லாக்காசுகளை சென்ட்ரல் பாங்க் முழுவிலை கொடுத்து வாங்கி தங்களைக் காப்பாத்தும்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க.”
“சில வருஷங்களுக்கு முன்னாடி சிடி பாங்க், ஜெனரல் மோட்டர்ஸ் போன்ற கம்பெனிகளைக் கைதூக்கின மாதிரி.”
“அதே. ஆனா சென்ட்ரல் பாங்க் கைவிரிச்சுடுத்து. அதனால மொத்த ஸ்டாக் மார்கெட்டும் பயங்கரமா சரியப்போறது.”
ஆலோசக நிறுவனங்கள் வர்த்தகப் பிரமிட்டின் உச்சியில். அடிப்பகுதிகள் குறுகும்போது உச்சி சரிய வேண்டியது தானே. அப்படியென்றால் நீமா?
பொருளாதார அறிவு நீமாவில் இரத்தத்தில். செலவு செய்தால் அதற்கு ஏற்ற திருப்தியோ சந்தோஷமோ அவளுக்குக் கிடைக்க வேண்டும். டிவி கேப்ள் கம்பெனிகள் பல வருஷமாக அவளிடம் பணம்பறிக்க முயற்சித்துக் கடைசியில் கைவிட்டார்கள். வீடு வாங்கி அவன் ஒருவருஷச் செலவை அனுப்பிய பிறகும் அவளிடம் சேமிப்பு இருக்கும். அது எவ்வளவு என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் இப்போதைக்குக் கவலைப்பட அவசியம் இல்லை. நீண்ட காலத்துக்கு? வேலை அழுத்தத்தை அவள் எத்தனை நாள் தாங்குவாள்? பணம் சம்பாதிப்பதை அவன் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
நீமா விழித்தபோது வால் ஸ்ட்ரீட்டின் திறப்பு மணி அடித்து இரண்டு மணிகள். வேலைநாளின் வழக்கத்தில் கைநீட்டி எடுத்த அலைபேசியில் வர்த்தகச் செய்திகளின் மேல் ஒரு பார்வை. கறுப்பு கொட்டை எழுத்துக்கள். எழுந்து உட்கார்ந்தாள்.
பங்கு மார்க்கெட் வீழ்ச்சி க்ரிப்டோகாய்ன்ஸ் பரிமாற்றங்களுக்கு வழிசெய்த காய்ன்பர்ஸ், எலிப்டிக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையிருப்பு காலி. டெல்ஃபியம் முதல் மற்ற காசுகளும் மதிப்பு இழந்தன. டாமினோ கட்டைகள் சரிவது போல மற்ற கம்பெனிகளின் பங்குகள் அவற்றின் நியாயமான விலைகளுக்கு இறங்கின. முதலீட்டாளர்களைச் சமாதானப்படுத்த தங்கள் செலவினங்களில் பலவற்றை உடனே வெட்டப்போவதாக அவை அறிவித்தன. இனி வியாபாரத்தைச் சுருக்க ஆலோசக நிறுவனங்கள் அவசியம் இல்லை.
நீமா மனக்கண்ணில் நூற்றைம்பது டாலர் எரிந்து சாம்பல் ஆனது, பிரமிட் புல்தரையில் சாய்ந்தது. ஆனாலும் அவளுக்கு அடங்கிய மகிழ்ச்சி. டெல்ஃபியம் காசுகளின் நினைவைப் போக்க அவற்றை விற்க வேண்டாம். ‘எலிப்டெக்ஸி’ன் கறைபடிந்த நூறாயிரம் டாலர்களில் ஒரு கணிசமான பங்கு அவள் சம்பளமாக மாறாது. டெல்ஃபியம் புதையல் என நினைத்து மக்கள் போடும் பணம் புதைமணலின் ஆழத்துக்குப் போகாது. ஸ்பெல்டாவின் தயவு இல்லாமல், மைடோகான்ட்ரியாவைக் குறிவைத்த எளிய மருந்துகள் மலிவான விலையில் கிடைக்கப் போகின்றன.
அந்த சந்தோஷம் அடங்கி நிலைமையை எதிர்கொள்ளும் யதார்த்தம். அதுவரையில் அவளுக்கு எதிர்காலம் கொஞ்சி விளையாடும் நாய்க்குட்டி. யூ.எஸ். வரும்வரை பெசன்ட் நகர் தனிவீடும், அதன் வாசலில் காத்திருக்கும் இரண்டு கார்களும். அவள் பிரமிட்டில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தபோது பெற்றோர்கள் ஆறுமாத இடைவெளியில் இறந்தது வருத்தத்தைக் கொடுத்தாலும், அதைத் தொடர்ந்து அவள் தந்தை பெற்றெடுத்து வளர்த்த மின்பொருள் தொழிலகத்தை அண்ணன் பாழ்செய்தது அவளைப் பாதிக்கவில்லை.
இப்போது எதிர்காலம் நெருங்கினாலே வள் என்று குரைக்கும் வேட்டைநாய்.
எழுந்து ஜன்னல் திரைகளைப் பிரித்தாள். சூரியன் உச்சத்தை நோக்கி நடந்தான். அணில்கள் மரக்கிளைகளில் தாவிக்குதித்தன. ஒரு மருத்துவப் பணிப்பெண் வேலைக்குப்போகக் காரைக் கிளப்பினாள். உலகம் நின்றுவிடவில்லை.
மதிய நேரத்தில் காலைஉணவு. திருமணம் ஆனதில் இருந்து அதைச் செய்தது இல்லை. ராகுலுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட ஆறுமணிக்கு எழுந்து எட்டு மணிக்கு முன் சாப்பிட்டாக வேண்டும். இந்த பொருளாதாரக் குழப்பம் தொடாத ஒரே ஆள் அவனாக இருக்குமோ? அவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற கவலை அவனுக்கு நிச்சயம் இருக்கும். அது அவசியம் இல்லை. வீடு, டெல்ஃபியம் போக, மிச்சம் இருக்கும் நூற்றைம்பது டாலர், பணவீக்கத்தில் மதிப்பை இழக்காது இருந்தால், இரண்டு வருஷத்துக்குத் தாங்கும். இந்த அபார்ட்மென்ட்டின் மாத வாடகை ஆயிரத்து.. ஏன்? எல் டொராடோ ஹில்ஸில் சொந்த வீடே இருக்கிறதே…
இனி எதை வாங்குவதாக இருந்தாலும் அதற்கான பணம் கையில் இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். அவள் தான் வேலைக்குப் போக வேண்டாமே வாடகைக் கார் அவசியம் இல்லை. அதைத் திருப்பிக் கொடுக்க ஏற்பாடு செய்தாள். பாதி முதுகை எட்டிய கருங்கூந்தல். அதை வெட்டித் திருத்துவதை சில வாரங்கள் தள்ளிப்போடலாம். ஜீதா இருக்கும்போது பத்து டாலர் சாப்பாட்டை இருபது டாலருக்குக் கொண்டுதரும் ‘ஆப்’ இனி தேவைப்படாது. ஆடைகளுக்கு உலர் சலவை அநாவசியம். ஏற்கனவே இருக்கும் காலணிகளையும் ஆடைகளையும் வைத்து இன்னும் இரண்டு ஆண்டுகள் தள்ளிவிடலாம். இன்னும் எத்தனையோ திட்டங்கள். நீர்க்குமிழிகள் போலத் தோன்றி மறைந்தன.
எளிமையான எதிர்காலத்துக்கு ஜீதா ஏற்கனவே அஸ்திவாரம் போட்டுவிட்டாள்.
‘உன்னை அற்பமாக நடத்திய வெல்கமின் பங்கு இன்று சீப்பிடுகிறது’ என்று அவளிடம் சொல்லக் காத்திருந்தாள்.
அவளுக்கு ஏதோ அவசரம்.
“நாளை விவரமாகப் பேசலாம்” என்று வேகமாக மறைந்துவிட்டாள்.
செவ்வாய்க்கிழமை.
வேலைநாளில் நீமாவின் அலைபேசி ஆறுமணிக்கு ஒலிக்கும். அன்று அதைச் செய்யாததால் ஏழுமணிக்கு மேல் எழுந்து நிதானமாகக் காரியங்கள் செய்தாள். அப்படியும் அவள் வழக்கமாக வேலைக்குக் கிளம்பும் எட்டு மணிக்கு எல்லாம் முடிந்துவிட்டது. மீதி நாளில் என்ன செய்வது?
ஒன்றும் செய்யாமல் பொழுது தானாகக்கழிந்த நாளே அவளுக்கு இருந்தது இல்லை.
பள்ளிக்கூடக் காலத்தில் கோடை விடுமுறைகளின்போது போட்டித் தேர்வுகளுக்கு வகுப்புகள். கல்லூரி ஆண்டுகளின் இடைவெளிகளில் அயல்நாட்டு நிறுவனங்களில் இன்டெர்ன் பயிற்சி.
யூ.எஸ்.ஸின் காரியக் கலாசாரம் அவளுக்கு ஒத்துப்போனது. வகுப்பிலோ வேலையிலோ குறிப்பிட்ட தினத்திற்குமுன் இந்த ப்ராஜெக்ட் முடிக்க வேண்டும், இத்தனை தகவல்கள் ஜீரணிக்க வேண்டும் என்ற கட்டுத்திட்டம். சனி ஞாயிறு வரும் வாரத்திற்கான ஏற்பாடுகள். நொடிகளை எண்ணும் அதிநவீனக் கடிகாரத்தின் கதியில் அவளும் நடந்தாள்.
விமானத்தில் பயணிக்கும்போது முன்-தட்டை படுக்கவைத்து அதில் மடிக்கணினி. ஆண்டுக்கு மூன்று வாரம் விடுமுறை. எங்கே போனாலும் யூ.எஸ். அலுவலகநேரம் அங்கேயும்.
ராகுலின் நிதானம் அவளுக்கு ஆச்சரியம்.
“எட்டு மணிலேர்ந்து நாலு மணி வரைக்கும் வீட்டில உனக்கு எப்படி பொழுது போறது?”
நீமா ஊரில் இருக்கும் நாட்களில், நான்கு மணிக்கு சமைக்க ஆரம்பித்து அது முடிந்ததும் குளித்து நல்ல பான்ட்ஸ்-சட்டையில் அவளை எதிர்பார்த்து (குளிராக இல்லாத நாட்களில் வெளி வெராந்தாவில்) ‘ஹாப்பி டேஸ்’ போன்ற ப்ளாக் உலகில் நுழைவது ராகுலின் மாறாத நியதி. மற்றபடி..
“எனக்கு எந்த டைம்டேப்ளும் கிடையாது. சில நாள் காலையிலேயே ஜிம் போவேன், மத்த நாள் மத்தியானம் சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஆனதும். அங்கே ஒரு மணி. அறுபது டிகிரிக்கு (15 டிகிரி சென்டிக்ரேட்) மேல இருந்தா காட்டன்வுட் பார்க் வரை நடந்துட்டு வருவேன். தரை அழுக்காத் தெரிஞ்சா பெருக்கித் துடைப்பேன். தூசி பறந்தா ‘வின்டெக்ஸ்’ நேரம். துணி தோய்க்கறது எப்பவும் இருக்கு. நடுநடுவில படம் வரைவேன். எப்படியோ நாள் ஓடிப்போயிடும்.”
“நான் ஊரில் இல்லாதப்ப..”
“எனக்கு ஒரு ர க சி ய கா த லி. அவளோட நேரம் போறதே தெரியாது.”
“சும்மா கதை விடாதே! உனக்கு அதுக்கெல்லாம் சாமர்த்தியம் பத்தாது.”
“உன் நம்பிக்கைக்கு தாங்க்ஸ்.”
இப்போது மட்டும் அந்த சாமர்த்தியம் வரப்போகிறதா? அவன் தனிமரமாக நிற்கப்போகிறான் என்ற எண்ணம் மனதை அழுத்தியது.
எல்லா ஆடைகளும் அழுக்கு என்பது ஞாபகம் வர அவற்றைத் துவைத்து உலர்த்தி மடித்தாள்.
பொருளாதாரம் விரிவடைந்தபோது, உலக சந்தையின் ஒரு மூலையில் ஏகாதிபத்தியத்தை உருவாக்க, யூ.ஸ்.ஸில் ஒரு பொருளைப் பிரபலப்படுத்த அவளுடைய மார்கெடிங் அறிவுக்கு விலை இருந்தது.
இப்போது ?
தொழிலாளர்கள் ஒன்று நேர்ந்து நியாயமான கூலிக்கும் நிலையான வேலை நேரங்களுக்கும் போராட ஆலோசனை கொடுக்கலாம்.
மதிய உணவுக்குப் பின் காட்டன்வுட் பார்க். குழந்தைகள் விளையாடும் திடலை ஒட்டிய பெஞ்ச்சில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தாள்.
அவள் எதிரில் ஒரு மெர்ரி-கோ-ரவுன்ட். அதில் ஒரு பெண் குழந்தை உடலை அசைத்து நகர்த்தப் பார்த்தது. நீமா அருகில் சென்று கைப்பிடியை மெதுவாகத் தள்ளினாள்.
“ஃபாஸ்ட்.”
நீமா வேகமாகச் சுற்றிவிட்டு கையை எடுத்தாள். மெர்ரி-கோ-ரவுன்ட் பல சுற்றுகளுக்குப் பிறகு சத்தத்துடன் நின்றது.
“தாங்க்கூ!”
குழந்தை இறங்கி சறுக்கு மரத்தை நோக்கி ஓடியது. அதைப் பார்த்தபடி நீமா வெகுநேரம் நின்றாள்.
மாலை.
அழைப்பு மணியின் ஓசை நீமாவை வாசலுக்கு வரவழைத்தது.
“ஜீதா!”
கழுத்தில் இருந்து கால்வரை நீண்ட ஆடை அவள் உயரத்தை உயர்த்தியது.
“ஓ! நான் மறந்தே போய்விட்டேன்.”
பிரம்புக்கூடையின் அடியில் மூன்று சப்பாத்திகள் மட்டும்.
“சன்னா தீர்ந்துவிட்டது.”
“பரவாயில்லை. ஜாம் தடவி சாப்பிட்டுவிடுகிறேன்.”
“இன்று பாதிதான் சமைக்க முடிந்தது.”
“ஏன்?”
“என் கணவன் உதவி செய்வான். அக்காவுக்கு உடல் சரியில்லை என காலையில் செய்ன்ட் லூயிஸ் கிளம்பிப் போனான்.”
யோசனையோ தயக்கமோ இல்லாமல் ,
“நாளை நான் உனக்கு எடுபிடி வேலை செய்கிறேன். என் ரேட், மூன்று சப்பாத்திகளும் ஒரு க்வார்ட் சப்ஜியும்.”
“நீயா?”
“கவலைப்படாதே! உன் வியாபார ரகசியங்களைத் தெரிந்துகொண்டு உனக்குப் போட்டியாக மாட்டேன்.”
“அதற்காக இல்லை…”
“எனக்கும் வேலை போய்விட்டது.”
சிறு யோசனைக்குப்பின்,
“அபார்ட்மென்ட் எஸ்-211. இரண்டு மணிக்கு.”
“பார்ப்போம்.”
புதன்கிழமை காலை.
ராகுல் தோசை வார்ப்பது நீமாவுக்கு அதிசயம்.
“தோசை எப்படி காம்பஸ் வச்சு போட்ட மாதிரி வட்டமா வாக்கறே? நான் பண்ணினா கல்லுல ஒட்டிக்கும். துண்டுதுண்டா வரும்.”
“மாவு சரியான விஸ்காசிடில இருந்து, தோசைக்கல் சரியான சூட்டில இருந்தா மாவை ஊத்தும்போதே அது ஒரு வட்டத்தில பரவும். அதைப் பெரிசு படுத்தணும். அவ்வளவுதான். அம்மா கத்துக்கொடுத்தா.”
“யு-ட்யுபைப் பார்த்து தெரிஞ்சிக்க முடியாது?”
“ஊகும்.'”
அழைப்பு மணியின் ஓசை. கதவைத் திறந்த ராகுல் “குட் மார்னிங்!”குக்குப் பிறகு,
“இரண்டு கேள்விகள்: இன்னும் எட்டு கூட ஆகலியே? ஸ்ரீ எப்படி படியில இறங்கினார்?”
“பத்துமணிக்கு அப்புறம் நாள்முழுக்க மழை. இப்பவே நடையை முடிச்சுடலாம்னு கிளம்பினோம்.” ஸ்ரீ கைத்தடியை உயர்த்திக் காட்டினார்.
ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவனும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்து இருந்தான்.
“ஒரு நிமிஷம். சட்டையை மாத்திண்டு வரேன்.”
“என்ன சமையல்? வாசனை தூக்கறதே.”
“பிரமாதமா ஒண்ணும் இல்ல. தோசை, தொட்டுக்க சாம்பார். அவ்வளவு தான்.”
“இன்னிக்கி தோசையா? பலே!” என்று ஸ்ரீயைத் தொடர்ந்து மற்றவர்களும் நுழைந்தார்கள்.
“ஒரு தோசைக்குத்தான் மாவு இருக்கு.”
“சீட்டுக்குலுக்கிப் போடலாமா?”
“எனக்கு வேணும்னு இல்ல. இன்னைக்கி காலையில முட்டைதோசை அடிச்சேன்” என்றார் சந்திரமோகன்.
ஒரு தோசையை வார்த்தெடுத்து மூன்றாகப் பிரித்து, சாம்பருடன் உயர் மேஜையில் வைத்தான்.
“இவ்வளவு பெரிசா வார்த்திருக்கியே. சாமர்த்தியம் தான்.”
“இஞ்சினீர் எப்படி வட்டத்தை 120 டிகிரியில வெட்டி யிருக்கான் பார்!”
“வெந்தயம் போட்டது நன்ன இருக்கு.”
“சாம்பார் வாசனையே பிரமாதம்.”
“பொடி வெங்காயம் காரணம்.”
“உன் தோசையை இவ்வளவு ரசிக்கறதுக்குக் காரணம் சொல்றேன். ‘மெட்றாஸ் மசாலா’வில ஏழெட்டு வருஷமா தோசை மாவு வித்திட்டு இருக்காங்க. நாங்களும் நாள் தவறாம வாங்கறது வழக்கம். திங்கள் ஸ்டாக் மார்கெட் படுத்ததில ரொம்ப பேர் தோசைலேர்ந்து ப்ரெட்டுக்கு மாறிட்டாங்க. அவங்களும் விக்கறதை நிறுத்திட்டாங்க.”
“அரைக்கிற க்ரைன்டர், மாவை பிளாஸ்டிக் டப்பாவில நிரப்பற மெஷின், எல்லாத்தையும் கவனிக்க ஆள் – இப்படி நிறைய ஓவர்ஹெட். பாதி வாடிக்கைகளை வச்சு லாபம் சம்பாதிக்க முடியாது” என்று ஜெயராம் கணக்கு சொன்னார்.
“இரண்டு நாளா காலையில தோசை கிடையாது, சீரியல். நிச்சயம் என் சர்க்கரை அதிகம் ஆகியிருக்கும்” என்று முனகினார் ஸ்ரீ.
ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு ராகுல் கனமான குரலில்,
“நீங்க எல்லாரும் எனக்கு அப்பா மாதிரி. சந்திரமோகனைத் தவிர.”
“தாங்க்ஸ், தம்பி!”
“அதனால மனம்விட்டு சொல்றேன். கெமிகல் இஞ்சினீரிங்ல நிதானமா பிஎச்.டி. அப்பறம் போஸ்ட்-டாக். எல்லாம் முடியறப்ப எனக்கு முப்பத்தி மூணு வயசு. என்னையும் என்னோட படிப்பையும் வச்சு லாபம் சம்பாதிக்க முடியும்னு யாருக்கும் நம்பிக்கை வரல.”
“ப்ரோக்ராமிங்க்ல கோர்ஸ் எடுத்திருக்கலாமே.”
“நீமாவும் அதைத்தான் சொன்னா. என் மூளை அதில ஈடுபடல.”
“சமையல், ஓவியம் – இரண்டு கலைகளும் உன் மூளையைக் கெடுத்துடுத்து” என்றார் வித்யாசாகர்.
“இருக்கலாம். என் படிப்புக்குக் கொஞ்ச நஞ்சம் வாய்ப்பு இருந்தா, அது திங்கள்கிழமையோட போயிடுத்து. படம் வரையறதில நான் வான்கோ இல்ல. அம்மா கிட்டேர்ந்து கத்துண்ட கலையை வச்சுத்தான் பணம் பண்ணியாகணும். எப்படின்னு இரண்டு நாளா யோசனை. எதுவும் சரிப்பட்டு வரல. உங்க நாலு பேருக்கும் தினம் ஏழு தோசைக்கான மாவு என்னால தரமுடியும்” என்று நிச்சயமான குரலில் முடித்தான்.
நாலு பேரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“இன்னொண்ணும் சேர்த்துக்க முடியுமான்னு யோசிச்சு சொல்!”
“தோசை மாவுடன் சாயந்தர டிஃபன் வாங்கறது வழக்கம். பொங்கல், இட்லி, உப்புமா – இந்த மாதிரி. அதுவும் இப்ப இல்லாம போயிடுத்து.”
“ஒவ்வொருவருக்கும் தனித்தனியா செய்யறது கஷ்டம். உங்க எல்லாருக்கும் எனக்கும் சேர்த்து ஒண்ணு பண்ணமுடியும்.”
“சரி, நாளைலேர்ந்து.”
ஜன்னலில் அடித்த சாரலின் ஓசை அவர்கள் கவனத்தைத் திருப்பியது.
“அச்சச்சோ! வெளிலே மழை கொட்டறது.”
“கவலையே வேண்டாம். நான் உங்களைக் கொண்டுபோய் விடறேன். முதல்ல என் காரில் நாலு பேருக்கும் இடம் பண்ணணும்.”
“நான் உதவி செய்யறேன்.”
சந்திரமோகனும் ராகுலும் கராஜில் நுழைந்து கதவை சாத்தியதும்,
“மத்தவங்களும் கவனிச்சிருப்பாங்க. ஆனா நான் உனக்கு வயசில பக்கத்தில இருக்கறதால கேட்கலாம்னு நினைக்கிறேன்.”
ராகுல் நெற்றியைச் சுருக்கினான். எதற்கு இந்த முன்னுரை?
“நீமா இந்நேரம் இங்கே வந்திருக்கணும் இல்லையா?”
“போன வாரம் வரைக்கும் அப்படித்தான் நினைச்சேன். அவளோட சில காரியங்களைப் பார்க்கும்போது பிரிவை நினைக்கிற மாதிரி தெரியறது” என்று தலை குனிந்தான்.
“நேரடியாச் சொல்லலையே.”
“இல்ல. போன திங்கள்கிழமை ஷிகாகோல இறங்கினப்ப எப்பவும்போல ‘அர்ரைவ்ட்னு’ தகவல் வந்தது. அப்புறம் எந்தத் தொடர்பும் இல்ல. வாடகைக்குன்னு வந்த இந்த வீட்டை முழு விலை கொடுத்து வாங்கியிருக்கா. என் வருஷ செலவுக்கு இருபத்திநாலாயிரம் டாலர் என் கணக்கில சேர்த்திருக்கா.”
சந்திரமோகன் அலுவலகத்திலும் சொந்த வாழ்விலும் பல மணமுறிவுகளைப் பார்த்தவர் .
“உங்களுக்குள்ள சீரியஸா..”
“தகராறு வந்ததில்ல. சம்பாதிக்கறதனால அவ பாஸ்ஸியா நடந்திருக்கலாம், அதுகூட எப்பவாவது தான். நான் அவளோட விருப்பத்துக்கு எதிராப் போனது கிடையாது.”
“நீ சொல்றதாப் பார்த்தா அவ அவசரத்தில எடுத்த முடிவுன்னு தோணுது. நிஜமாகவே டிவோர்ஸ் செய்யறதா இருந்தா இப்படி சுத்துவழியியில நேரத்தை வீண்செய்ய மாட்டா. நேரிலயே கணக்கைத் தீர்த்துட்டுப் போயிடுவோ. என் கசின் பையன் கேஸ்ல அப்படித்தான் நடந்தது. பத்து நிமிஷத்தில பத்து வருஷம் காணாமபோயிட்டுது.”
“போன வாரம் நான் அனுப்பின டெக்ஸ்ட்டுக்கு அவ இன்னும் பதில் போடல” என்று தயங்கினான்.
சந்திரமோகன் அவன் தோளில் கைவைத்து,
“காதல் டென்னிஸ் மாதிரி இல்ல, தம்பி! ‘பந்து உன் பக்கம், நீதான் அடிக்கணும்’னு காத்திருக்கக்கூடாது. இந்த சமயத்தில நீ விட்டுக்கொடுக்கணும். ஒரு படம் அனுப்பிப் பார்!”
இன்னொருவருடன் சேர்ந்து வேலைசெய்வதை நீமா ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
அவள் தொழில் வாழ்க்கையில் கூட்டாக ஒரு ப்ராஜெக்டில் ஈடுபட்டாலும் நேரடியான மனித சந்திப்புகள் எப்போதாவது தான். அவற்றிலும், ‘இத்தனை மில்லியன் டாலர்கள்’, ‘இவ்வளவு சாதனைகள்’, ‘இவற்றில் என் பங்கு அதிகம்’ போன்ற உணர்ச்சியற்ற சப்தங்கள். அங்கே இல்லாத வார்த்தைப் பரிமாற்றத்திற்கும் சேர்த்துவைத்து அவள் வீட்டில். மனத்தாபத்தில் கூட ராகுலுக்கு வெகுநேரம் மௌனம் காக்க முடியாது.
எப்போது உரையாடலைத் தொடர வேண்டும், எப்போது ‘டாபிக் க்ளோஸ்ட்’ என்று அந்தரத்தில் நிறுத்த வேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.
பிரமிட்டின் கோடைகால பிக்னிக் மற்றும் கிறிஸ்மஸ் விருந்துகளுக்கு அவனை அழைத்துப்போய் இருக்கிறாள். அவற்றுக்கு அடுத்த நாள்,
“பாஸ்லேர்ந்து இன்டெர்ன் வரை எல்லாரும் நீ ரொம்ப நன்னா பேசறேன்னு சொன்னா.”
“அதுக்குக் காரணம்.. அரசியல் இல்ல ஸ்போர்ட்ஸ் வெட்டிப்பேச்சை ஆரம்பத்திலயே வெட்டிடுவேன். இல்லாட்டா வீண் வம்புல முடியும். ஒருவரையொருவர் புரிஞ்சிக்கிற உரையாடல்கள் சுவாரசியமா இருக்கும். நான் இந்தியால க்ரிக்கெட் ஆடினேன்னு சொல்ல, உன் பாஸ் சின்ன வயசில ‘லிட்டில் லீக் பேஸ்பால்’ ஆடினதைப் பெருமை அடிச்சிப்பார். அடுத்த ரவுன்ட்ல எந்தப்பந்தை வீசறது சுலபம்னு பேசுவோம். மூணாவது ரகம் கொஞ்சம் சீரியஸான பேச்சு. அடுத்த ஆள் என்கிட்ட அறிவுரை கேட்கறாரா இல்ல, ஆறுதல் தேடறாரான்னு பார்த்து அதுக்குத் தகுந்தமாதிரி பேசுவேன்.”
“சாதாரண பேச்சை இவ்வளவு அனலைஸ் பண்ணி வச்சிருக்கியே. நீ ‘சோஷியல் கான்வெர்சேஷன்ல’ பிஎச்.டி. பண்ணலாம்.”
“ஏற்கனவே ஒரு சொத்தை பிஎச்.டி. இருக்கறது போறாதா?”
ராகுலை முதலில் சந்தித்தபோது அவன் பேச்சுத்திறன் தான் அவளைக் கவர்ந்தது. பல ஆண்டுகள் தனித்து வாழ்ந்த அவளுக்குத் திருமண பந்தத்தில் நுழைய அச்சம், நிச்சயமின்மை. அவள் மனநிலையைப் புரிந்துகொண்டு,
“என் வாழ்க்கை இதுவரைக்கும் சராசரி ‘ஸ்க்ரிப்ட்’ படிப்போகல. ஆனாலும் ஒருவிதத் திருப்தி, சந்தோஷம்.”
“அப்ப நம் திருமண வாழ்க்கைக்கு.”
“எந்த ‘ஸ்க்ரிப்ட்டு’ம் எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால், என் அம்மா அடிக்கடி சொல்லும் எட்டாவது சமுதாயக் குற்றம்: பந்தம் இல்லாத உறவு (ரிலேஷன்ஷிப் வித்அவுட் கமிட்மென்ட்). அதை இதுவரை தவிர்த்துவிட்டேன். நீ சம்மதித்தால் நம் உறவில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்வேன்.”
அவன் நீட்டிப் பிரித்த கையில் நீமா தன் கையை வைத்தாள். “இப்போதிருந்து நானும்.”
அப்போது போட்ட பந்தத்தின் கயிறு நைந்துவிட்டது. இல்லை அதன் ஒரு இழையை அவள் வெட்டிவிட்டாள். அதில் முடிச்சுப்போட்டு..
பிற்பகல் இரண்டு மணி. ஜீதாவின் சமையலறை. அவள் ஏற்கனவே மாவு பிசைந்துவைத்து இருந்தாள். சப்ஜிக்காக நீமா வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு நறுக்கினாள்.
“ஒரே சீராக இல்லையே.”
“வெந்ததும் வித்தியாசம் தெரியாது.”
குழவி ஜீதாவின் கையில் சுழல வட்டின் சுற்றளவு வட்ட வடிவை இழக்காமல் வளர்ந்தது. நீமா வியப்புடன் பார்த்தாள்.
“நீ செய்தது இல்லை?”
“என் கணவன் நன்றாகச் செய்வான்.”
“அவன் வெளியூர் போயிருக்கிறானோ?”
“நாங்கள் கலிஃபோர்னியாவுக்கு நகர்வதாக இருந்தது. அவன் முன்னால் போய்விட்டான்.”
“நீயும் அங்கே போய் வேலை தேடலாமே.”
“அதற்குத்தான் இந்த ட்ரெய்னிங்” என்றாள் புன்னகையுடன்.
இடுவதை நிறுத்தி ஜீதா,
“திங்கள்கிழமை ஓபி-ஜிஎன் டாக்டரைப் பார்க்கப் போனேன்.”
முகமகிழ்ச்சியில் அந்த சந்திப்பின் முடிவு வெளிப்பட்டது.
“பாராட்டுகள். சந்தோஷம்.”
‘எனக்குக் குழந்தை இல்லை’ என்று வருத்தப்படுவதை விட அதற்கான காரணத்தைச் சொல்வது சுலபமாகப்பட்டது.
“என் நிலைமையில் நிறைய பேர். படித்து முடிக்கும்போதே இருபத்தியைந்து வயது. வெளிநாட்டில் வந்து வேலையில் காலூன்ற இன்னொரு ஐந்து. கல்யாணம் ஆகும்போது முப்பதுக்கு மேல். நம் பாட்டிகளுக்கு நாற்பத்தைந்து வயதில் இருந்த ஃபெர்டிலிடி இப்போது பெண்களுக்கு இருபத்தைந்து வயதில் கூட இல்லை என்று வேறு சொல்கிறார்கள்.”
“கல்யாணத்துக்கு முன்?”
அக்கேள்வியை நீமா எதிர்பார்க்கவில்லை. மறைக்காமல்,
“அவன் ஒருவிதத்தில் பாஸ்.”
“காந்திஜியின் ‘பிஸினஸ் வித்அவுட் மொராலிடி’யில் இதையும் சேர்க்க வேண்டும். எனக்கு அந்த சிக்கல் நேர்ந்திருந்தால் நானும் சிக்கியிருப்பேன்.”
கருத்தடை செய்யாது இருந்தால்.. அந்த சாத்தியம் நீமாவைக் கடந்து சென்றது.
“உங்களிடம் குறை..”
“மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை.”
ஜீதா பக்கத்து அறைக்குப் போய் ஒரு ஃப்ரேம் போட்ட படத்தை எடுத்துவந்தாள்.
ஹரேக்ரிஷ்ணா வெளியிட்ட அப்படத்தில் இளம் யசோதா கையில் குழல் பிடித்த குழந்தை கண்ணனைக் கட்டியணைக்கிறாள். அவள் அலங்காரமும் அவன் ஒளிவட்டமும் இருண்ட பின்னணியில் பிரகாசமாகத் தெரிகின்றன. அதே மாதிரி படத்தை நீமா நண்பர்கள் வீட்டில் பார்த்த நினைவு.
“சென்ற ஆண்டின் கடைசியில் என் கணவனின் அக்கா கொடுத்தாள். நீ எடுத்துச்சென்று உன் படுக்கை அறையில் வை!”
கருத்தரித்தல் நிகழாமல் தடுக்க எத்தனையோ தடைகள்.
“உனக்கு எந்த நஷ்டமும் இல்லை. பலன் கிடைத்தால் வேறு யாருக்காவது அன்பளிப்பாகக் கொடு! இல்லையென்றால் வீட்டில் அலங்காரமாக இருக்கட்டும்.” மறுக்கக் காரணம் இல்லாதபடி, “விமானத்தில் கையோடு எடுத்துப்போகும் பெட்டிக்குள் அடங்கும்” என்றாள்.
“முயற்சி செய்கிறேன்.”
இட்ட சப்பாத்தியைக் கல்லில் போட்டு மூன்று முறை திருப்பிப்போடுவதை நினைவுபடுத்த இருபது நொடிகளுக்கு ஒரு முறை அலைபேசியின் மணியோசை. முதலில் சரியாக வராத சப்பாத்திகளையும் கொஞ்சம் சப்ஜியையும் நீமா தனக்கு வைத்துக்கொள்ள, ஜீதா மறக்காமல் யசோதா-கண்ணன் படத்தை தடியான காகிதத்தில் சுற்றிக்கொடுத்தாள்.
தன்னிடத்திற்கு நடந்தாள். வேலையின் இறுக்கம் போனதால் ஜீதாவுக்கு நடந்தது நீமாவுக்கும் நடக்கலாம்.
‘டோக்யோலேர்ந்து வந்த அன்னிக்கி சாயந்திரம். பிரமிட்ல இருந்த என்னோட பழைய பாஸ் க்ரிப்டோல சுலபமா பணம் பண்ண வழிகாட்டினான்.’
‘நீ அதை வாங்கலியே.’
‘அந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சிருந்தா எவ்வளவோ நன்னா இருந்திருக்கும்.’
‘இன்னொரு தப்பை நீ இப்ப சொல்லலாம். இல்லை அப்புறம் எப்பவாவது. சொல்லாமலே விட்டாலும் தப்பு இல்லை. நான் துருவிக் கேட்கமாட்டேன்.’
மறுநாள் காலை ஏழுமணிக்கு நிதானமாக விழித்தாள். அலைபேசியில் வர்த்தக செய்திகளை இனித் தேட வேண்டாம். அவள் கவனத்துக்கு இரண்டு தகவல்கள்.
மூன்று மணிக்கு முன்னால் ராகுலிடம் இருந்து. இரவு இரண்டு மணிவரை தூங்காமல் என்ன முக்கியமான வேலை? புத்தாண்டின் பிறப்பைக் கொண்டாடக்கூட அவன் நள்ளிரவு வரை விழித்தது இல்லை. தயக்கத்துடன் தகவலைப் பார்த்தாள்.
– நீ முன்பு கேட்டபடி உன் படத்தை வரைந்திருக்கிறேன் –
குபுக்கென்று கண்ணீர். அதைக் காகிதத்துண்டில் துடைத்துத் தகவலை அழுத்தினாள்.
அவள் ஓவியம்.
மறுபடி கண்களில் குளம்.
இன்னொரு முறை துடைத்துக்கொண்டு படத்தைப் பெரிதாக்கினாள். கையில் பிடித்த விளக்கேற்றியின் சுடர் மெழுகுவர்த்தியின் திரியைத் தொடுகிறது. முகத்தில் பிறந்தநாள் மகிழ்ச்சியுடன் நாற்பதுக்கு இன்னும் ஆயிரத்துச் சில்லறை நாட்கள் தான் என்பதால் நெற்றியில் வரிகள். பழுப்பு மஞ்சள் இரண்டு வர்ணங்களில் மட்டுமே எழுதப்பட்ட ஓவியம்.
புகைப்படத்தை இணைக்காமல் அதைப் பார்த்து தானே வரைந்து படம்பிடித்து அனுப்பி இருக்கிறான். எவ்வளவு மணி நேரம் எடுத்திருக்கும்? அத்தனை காலமும் அவள் அவன் தூய மனதில்.
‘இந்தப் படத்தில் இருப்பது நான் இல்லை.’
‘அதை நாம் இருவரும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.’
‘உனக்கு என்னைப்பற்றிய முழுவிவரம் தெரியாது.’
‘தெரிந்தால் நான் உன்னை வரவேற்க மாட்டேன், அப்படியே ஏற்றுக்கொண்டாலும், உன்னை ஒதுக்கிவைப்பேன், பலவீனமான தருணங்களில் அதை மறைமுகமாகச் சொல்லி உன் மனதைப் புண்படுத்துவேன் என நீ நினைத்தால், ஐந்து ஆண்டுகளில் நீ என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று ஆகிறது.’
ராகுல்! நிச்சயமாக அப்படி இல்லை. அப்படியென்றால்..
சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அன்று காலையில் அனுப்பப்பட்ட இன்னொரு தகவல் –
நீமா சேதுராமன்,
சில நாட்களுக்கு முன் காலிசெய்த இடத்துக்கு நீ மீண்டும் திரும்பிவந்ததாக அறிகிறோம். தொடர்ந்து அங்கேயே நீ வசிக்க விரும்பினால் – வாடகையைப் பல வருஷங்கள் தவறாமல் செலுத்தியதற்கு நன்றியாக – அடுத்த ஆண்டிற்கான குத்தகையில் ஏற்றம் இராது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். காலி செய்யத் தீர்மானித்தால் அடுத்த திங்கள்கிழமை மாலை வீடு சுத்தமாய்ப் பழுதில்லாமல் இருக்க வேண்டும்.
ட்ரீடாப் ப்ராபர்டீஸ் நிர்வாகம்.
நீமா சுறுசுறுப்பாக எழுந்தாள். ரெஃப்ரிஜரேட்டரில் மிச்சம் இருந்த பால் பழங்கள் அடுத்த இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். மற்ற உணவுப்பொருட்களில் மிச்சம் இருந்தால் நீமாவுக்கு. பழைய படுக்கையையும் மேஜை நாற்காலிகளையும் எடுத்துப்போக மறுநாள் ஏற்பாடு செய்துவிடலாம். தரையை, ஜன்னல்களை ஈரத்துணியால் தூசிபோகத் துடைக்கத் தொடங்கினாள்.
இரண்டு மணி உழைப்புக்குப்பின் காப்பி இடைவேளை. முன்பு ரத்து செய்த டிக்கெட்டுக்குப் புத்துயிர் கொடுத்தாள். அது கொடுத்த தைரியத்தில்,
– அடுத்த திங்கள்கிழமை யுனைடெட் ஃப்ளைட் 2287-இல் வருகிறேன், நீமா –
உடனே வந்த பதில்.
– உன் தகவலைப் பார்த்து எனக்கு வந்த நிம்மதி! –
பதிலும் அதன் வேகமும் அவள் எதிர்காலத்தைப் பழகிய நாய்க்குட்டி ஆக்கின.
– அதே போல் எனக்கும் ஒரே சந்தோஷம் –
– விமான நிலையத்தில் பார்ப்போம், ராகுல் –
ராகுலை அழைத்து, ‘உன்னைச் சந்திப்பதற்கு முந்தைய என் வாழ்க்கையை இன்னொரு தடவை மறக்க ஆசை’ என்று ஆரம்பித்து அவள் மனப்போராட்டத்தைச் சொல்லாமா? வேண்டாம். சில விஷயங்களை நேருக்கு நேர் விவரிப்பது தான் நல்லது. கேட்பவரின் ஆர்வம் தகவலை உணர்ச்சியுடன் சித்தரிக்கத் தூண்டும். செயற்கைத் திரை தகவலின் ஆழத்தை மூடிமறைத்துவிடும்.
சில நிமிடங்கள் கழித்து,
– படேல் ப்ரதர்ஸில் இருபது பவுன்ட் இட்லி அரிசி வாங்கி வா! இங்கே கிடைக்கவில்லை –
– நோ ப்ராப்ளம் –
***