இகபானா மலர்களின் வழி

உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் மலர்களின், மலர் வடிவங்களின் தாக்கம் இருக்கிறது. பண்டைய எகிப்திய ரோமானிய மற்றும் கிரேக்க  நாகரிகங்கள் அனைத்திலுமே  மலர்கள் அலங்காரத்திற்காகவும், வழிபாட்டிலும், தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டன.  

உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின்  மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள்,  குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.

உலக  நாகரீகங்கள் அனைத்திலுமே மலர்களின் தாக்கம் இருக்கிறது எனினும் ஜப்பானிய கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் மலர் அமைப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்.  மலர்ப் பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு ஜப்பானிய பண்பாட்டை அறிய முடியாது. ஹன கொத்தோபா என்பது (hana kotoba)  ஜப்பானிய ரகசிய மலர் மொழியை குறிக்கும் சொல். அதன்படி ஜப்பானிய மலர்களுக்கு அவற்றின் வண்ணம், அவற்றின் முட்களும், காம்பும், காம்பின் உயரம், மாலைகளில் இணைக்கப்பட்டிருக்கும் மலர்களின் கலவை ஆகியவற்றிற்கான தனித்தனியே சங்கேத அர்த்தங்கள் இருக்கின்றன 

’’விண்ணும் மண்ணும் மலர்களே
புத்தரும் பிற கடவுளரும் மலர்களே
மனிதனின்  இதயமும் ஆன்மாவும் மலர்களே’’!

பிரபல ஜப்பானிய  கடவுள் துதி ஒன்று இந்த வரிகளுடன் துவங்குகிறது,

எப்போதும் நமக்கு மறுபக்கத்தில்தான்  செழிப்பு இருக்கிறது என்பதை சொல்லும் சொல்லாட்சிகள், முதுமொழிகள் அநேகமாக உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் இருக்கின்றன ’’அக்கரைக்கு இக்கரை பச்சை என்னும் நமது பிரபல முதுமொழியை போல ஜப்பானில்  ’’அடுத்த வீட்டுக்காரனின் தோட்ட மலர்கள் அனைத்தும் சிவப்பு ’’ என்பார்கள். 

உலகின் அனைத்துக் கலாச்சாரங்களை காட்டிலும் ஜப்பானிய கலாச்சாரம் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. ஜப்பானிய ‘ஓரிகாமி’ என்னும் காகிதங்களின் மடிப்புகளில் வடிவங்களை உருவாக்கும் கலையில் ’காகிதம்’ என்னும் சொல்லுக்கான ஜப்பானிய சொல்லான ’காமி’ என்பதே கடவுளுக்குமான சொல். இயற்கையிலிருந்து உருவாகும் காகிதமும் கடவுளே அங்கு. ஜப்பானிய போன்ஸாய் கலையும் பிரபஞ்சத்தின் மீச்சிறு வடிவை  மரங்களில் உருவாக்குவதுதான்.   ’ஹனா’ என்றால் ஜப்பானிய மொழியில் மலர். (hanami)   ஹனாமி என்னும் ஜப்பானிய செர்ரி மலர்க்கொண்டாட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஜப்பானில் பல  பெண்களின் பெயரில்  ஹனா இருக்கும்  .

ஜப்பானிய கலைகளின் சிறப்புகளில் ஒன்று மிகக்குறைந்த அளவிலேயே பிற நாட்டுக்கலைகளின் சாயலை அவை  கொண்டிருப்பது. புத்த மதம் அங்கு தோன்றிய போது உருவான இகபானா மலர்க்கலை ஜப்பானின் சிறப்புகளில் ஒன்று. ஜப்பானிய  மூன்று முக்கிய நுண்கலைகளில் கொடொ (kōdō) என்னும் வாசனை பத்திகளின் வழிபாட்டு உபயோகம், சாடோ(chadō) என்னும் தேநீர்ச்சடங்கிற்கும் அடுத்தபடியாக இகபானா மலரமைப்பு இருக்கிறது   

ஜப்பானிய மொழியில் இக-பானா (Ikebana) என்பது  மலர்களை அமைப்பது என்று பொருள்படும். -ikeru  என்றால் அமைப்பது  -hana  என்பது  மலர்களை குறிக்கும்.  இச்சொல் ’மலர்களுக்கு உயிரளிக்கும் படி அமைப்பது’ என்னும் பொருளிலும் வழங்கப்படுகிறது

இகபானாவை பயில்பவர்கள் ’கடோகா’ என அழைக்கப்படுகின்றனர் இகபானா ’கடோ’ (kadō) என்றும் அழைக்கப்படுகின்றது. கடோ என்றால் ’மலர்களின் வழி’ எனப்பொருள்.  

இகபானாவின் துவக்கம்

அனைத்து பருவங்களிலும் மலர்களை ஆராதிப்பதென்னும் வழக்கம் பண்டைய ஜப்பானில் பிரபலமாக இருந்தது

ஹேயான் காலத்தை சேர்ந்த  (Heian-794–1185) பிரபல ஜப்பானிய வாகா கவிதைத் தொகுப்புக்களில் (Waka) மலர்கள் குறித்த எராளமான கவிதைகள் இருக்கின்றன. புத்தமதம் அங்கே உருவானபோது புத்தரை  மலர்ளை கொண்டு வழிபடுவது பொதுவான ஒரு கலாச்சாரமாக  உருவானது

 புத்தமதம் தோன்றிய இந்தியாவில் தாமரையே மிக அதிகம் புத்த வழிபாட்டில்  இருந்ததென்றாலும் ஜப்பானில் அந்தந்த பருவத்திற்கான மலர்களே வழிபாட்டுக்கென எடுத்துக்கொள்ளப்பட்டன. சீனாவின் புத்த துறவிகள் பலவகையான மலர் அமைப்புக்களை கொண்டு புத்தரை வழிபடும் பாணியை ஜப்பானில் துவங்கினார்கள்

துவக்க காலங்களில் அவர்கள் எந்த குறிப்பிட்ட அர்த்தமும் இல்லாமல்  பொதுவாக மலர்களை ஆலயங்களில் புத்தர் முன்பாக  அமைத்து வழிபட்டனர்.

பின்னர் உருவான கூஜ் (kuge) எனப்படும் புத்தருக்கான பிரத்யேக மலர் வழிபாட்டில் மூன்று மலர்க்காம்புகள்  நீரிலிருந்து ஒன்றாக இணைந்து நிற்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. ஷின், சோ மற்றும் ஹைகாய் (shin, soe & hikae) எனப்பட்ட  அம்மூன்றும் சொர்க்கம், மனிதன். மற்றும் பூமியை குறித்தன.  

தொடர்ந்த கமாகுரா காலத்தில் மிட்ஷு குசோக்கு  (mitsu-gusoku)  எனப்படும் புகையும் வஸ்து, மெழுகுதிரி மற்றும் அழகாக அமைக்கப்பட்ட மலர்கள் இவைகளை கொண்டு வழிபடும் முறை உருவாகி வந்தது. 1392 வரை இம்முறை புழக்கத்தில் இருந்தது. பின்வந்த காலங்களில் புத்த சமய திருநூல்கள் பலவும் மலர்களின் பெயர்கள் கொண்டு உருவாக்கப்பட்டன. முராமோச்சியின் (1336–1573),  காலத்தில்  ஆலயங்கள் மற்றும் மடாலயங்களின் உள் அலங்கார அமைப்புக்கள் உருவானபோது மலர்களின் பயன்பாடு அதிகரித்தது 

முதன்முதலில் நேர்த்தியும் ஒழுங்குமாக நியதிகளுக்குட்பட்ட ஒரு மலர்க்கலை தோன்றியது  14 ம் நூற்றாண்டில் ஜப்பானில் ஷின் நோ ஹனா (Shin- no- hana) என்னும் ’மையத்தில் மலர்களை அமைக்கும் கலை’ உருவான போதுதான்,  பைன் போன்ற ஊசியிலை மரங்களின் சிறு கிளையொன்றை கிண்ணங்களில் மையப்பகுதியில் நேராக நிற்கும்படி அமைத்து அதனைச் சுற்றிலும் 3 அல்லது 5 பருவகால மலர்களை அமைக்கும் எளிமையான  இந்த மலரமைப்புக்களை 14 ஆம் நூற்றாண்டு ஜப்பானிய ஓவியங்களில் காணமுடியும். இந்த கலையில் மரக்கிளைகள்  சேய்மையின் இயற்கைக் காட்சியையும் மலர்கள் அண்மை இயற்கை காட்சியையும் குறிப்புணர்த்தின

ஜப்பானிய ராணுவ தளபதிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கலை ஆர்வத்தில் உதவவென்றே பிரத்யேக உதவியாளர்களாக டோபோஷுக்கள் இருந்தனர். (Doboshu) இதில் ஒருசிலர் உருவாக்கிய மலர் அலங்கார வடிவங்களே தத்தேபானா என்னும் மலரமைப்புக்கலையின் முன்வடிவங்கள் (tatebana)

14ஆம் நூற்றாண்டில் சாமுராய்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க நினைத்தார்கள் அப்போது  டோகொனோமா என்னும் (tokonoma)  சாமுராய்களின் கவச உடைகள், படைக்கலன்களை மலர்களுடன் இணைத்து காட்சிப்படுத்தும் வழக்கம் பிரபலமாக இருந்தது அப்போதைய மலரலங்காரங்கள் ’’நிற்கும் மலர்கள்’’ என்று பொருள்படும்  தத்தேபானா /தத்தேஹனா  (tatebana or tatehana)  எனப்பட்டன. இதுவே  இகபானாவின் தூய ஆதி வடிவம்

15ஆம் நூற்றாண்டு வரை மிக மெல்ல வளர்ந்த இக்கலை அந்நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் புத்துயிர் பெற்று புத்தம் புதிதாக  முகிழ்த்தது.  தேநீர் சடங்குகள் புகழ்பெற துவங்கிய 15 ம் நூற்றாண்டின் இறுதியில் இக்கலை மறுமலர்ச்சி அடைந்தது. தேநீர்  விருந்துகள் நிகழும் அரங்குகளின்  முகப்பு அறைகளில்  காக்கேமோனோ (kakemono) என்னும் சுருள்துணிச் சித்திரம் மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும் அதனுடன் எளிய மலரமைப்பு ஒன்றும் வைக்கப்பட்டபோது தேநீர் சடங்குகளின் வசீகரம் மேலும் கூடியது.

1436-1490 வை சேர்ந்த அஷிகாகா (Ashikaga)வம்சத்தின் எட்டாவது ஷோகனான அஷிகாகா யோஷிமஸா(Ashikaga Yoshimasa)  சா நோ யூ (cha-no-you) என்னும் தேநீர் சடங்கையும் இகபானாவையும் இணைத்து சா-பானா என்னும் கலையாக  அழகுபடுத்தியவர்களில் முதன்மையானவர்  

 யோஷிமஸாவின் சமகாலத்தைய இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்த மலரமைப்பின் மேம்படுத்துதலில் பெரும் பங்காற்றினார்கள்  

16 ம் நூற்றாண்டில்  (1477-1561)  வழிபாட்டு தலங்களிலும் தேநீர் விருந்துகளிலும் பயன்படுவதைக்காட்டிலும் மேலான ஒரு இடத்தை இகபானா மலர் அமைப்புக்கள் அடைந்தன.அச்சமயத்தில் இகபானா ரிக்கா (Rikka) என்றழைக்கப்பட்டது. அதிலிருந்து மாறுபட்ட  இகபானாவின் மற்றோர் வடிவமான நாஜெயிரிபானாவும்  (nageirebana)ஏக காலத்தில் தோன்றி பிரபலமடைந்தது. 

நூற்றாண்டுகளுக்கு இவ்விரண்டு வகை மலரமைப்புக்களும் புழக்கத்தில் இருந்தன. ரிக்கா அலங்காரமானதாகவும் நாஜெயிரி மிக எளிமையாக இயற்கையுடன் ஒத்திசைவு கொண்டதாகவும் அமைந்திருந்தது தொடர்ந்த காலங்களில் ரிக்காவுடன் போட்டியிட முடியாத நாஜெயிரி வடிவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராட வேண்டி இருந்தது பின்னர் மெல்ல மெல்ல அது தனித்த மலரலங்காரக்கலையாக பிரபலமடைந்தது. 16 ம் நூற்றண்டின் இறுதியில் நாஜெயிரியின் எளிமையும் இயற்கையான அமைப்பும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.  பின்னர் இகபானா ஜப்பானின் பாரம்பரியங்களில் குறிப்பிடத்தக்க கலையானது. ஆண்களும் பெண்களும் எல்லா வயதிலும் இகபானாவை கற்றுக்கொள்ள விழைந்தனர். பலநூறு பள்ளிகளும் இகபானாவுக்கென உருவாகத் துவங்கின

19 ம் நூற்றாண்டில் இகபானாவில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு சிறந்த கணவர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர்கள் ஆகச்சிறந்த இல்பேணுநர்களாகவும் அன்னைகளாகவும் ஆவார்கள் என்றும் நம்பிக்கை இருந்தது.

இகபானா நூல்கள்

கெனெயி (Kenei) காலமான 1206 லிருந்து  எடோ (Edo) காலமான 1660-1704 வரை இகபானா குறித்த ஏராளமான நூல்கள் வெளியாகின. அவற்றில் செண்டென்ஸ்போ (Sendensbo) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது இகபானாவின் அடிப்படை விதிகளை விளக்கும் அந்நூல்களில் அனைத்து வகையான  மலரமைப்புக்களுக்கும் சித்திரங்களும் இடம்பெற்றிருந்தன 

அதை தொடர்ந்து இகனோபு (lkenobu) எழுதிய  கண்டென்ஸ்போ (Kandensbo) என்னும் நூலும் இகபானா வளர்ச்சியில்  மிக முக்கியமானது. கண்டென்சோவில் இகபானாவின்  விதிகளும் குறிக்கோள்களும் தெளிவாக விவரிக்க பட்டிருந்தன அதன் பிறகு இகபானா மலர் அலங்காரம் வெகுவாக புகழ்பெற்றது. 

17ஆம் நூற்றாண்டில், மரப்பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்கள் மீது பளபளப்பான வண்ணப்பூச்சுகள் பூசும்  லாகர் (Lacquer) கலையில் தேர்ந்தவரான  கொரின்  (Korin) இகபானா வடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். அவரது ஈடுபாட்டினால் இகபானா அமைப்புக்கள் வைக்கப்படும் கிண்ணங்கள் தட்டுக்கள் மற்றும் கொள்கலன்களில் பல அழகிய வடிவங்களும் வண்ணங்களும் உருவாக்கப்பட்டு, இகபானா அதன் அழகின் உச்சத்தில் இருந்தது. அந்த  காலகட்டத்தில் இகபானாவை பல்லாயிரக்கணக்கானோர் கற்றுத்தேர்ந்தனர் 

இகபானா வடிவம் முழுமையடைந்ததும் அப்போதுதான். 17ஆம் நூற்றண்டின் இறுதியில் இகபானாவின் இரு பிரபல வடிவங்களில் ஒன்றும், மிக அலங்கரமான மலர் அமைப்பு முறையுமான ரிக்காவின் மீதான விலக்கமும் உருவாகி இருந்தது. அப்போதிலிருந்து நாஜெயிரி  வகையே இகபானா அமைப்புக்களுக்கு பயன்படுகிறது. (இவ்விரு கலைகளையும் பயிற்றுவிக்கும் கலைஞர்களும், இவற்றை கற்க விரும்பும் மாணவர்களும்  இன்னும்  இருக்கிறார்கள்). இதன்பிறகு இகபானா கலை உச்சத்தை நோக்கி பயணிக்க துவங்கியது. 

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரிக்காவிற்கும் நாஜெயிரிக்கும் இடையேயான ஒரு கலப்பு வகையான செயிக்கா (Seika) உருவானது செயிக்கா என்றால் புத்தம் புதிய மலரென்று பொருள். செயிக்கா சமச்சீரற்ற முக்கோண  அமைப்பில் இருக்கும்.

ஜென் மற்றும் இகபானா

ஜென் மார்க்கத்திற்கும் இகபானாவுக்கும் இருக்கும் ஒற்றுமைகளாக; 

 1. சமநிலை, எளிமை மற்றும் ஒத்திசைவு
 2. இயற்கையுடனான  நெருக்கம் 
 3. பருவ காலத்தை அறிந்திருத்தல்
 4. அன்றாடங்களின்  எளிய அழகை ஆராதித்தல்
 5. மா (ma)  எனப்படும் காலி இடங்களை கண்டுகொண்டு அதையும் ஆராதித்தல். (இகெபானாவில் மலர்கள் அமைந்திராத வெற்று இடங்களும் உண்டு
 6. வேற்றுமை பாராட்டாதிருத்தல்
 7. தன்னை மறத்தல். (இகபானாவில் ஆழ்ந்து காலத்தை மறத்தலுக்கு இது இணையாக சொல்லப்படுகின்றது)
 8. எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்தல்
 9. இறையை உணர்தல் 
 10. ஆழ்ந்த அமைதியை உணர்தல்  -ஆகியவை சொல்லபடுகின்றன.

இகபானா கலவைகள்

இகபானாவின் பல வடிவங்களுக்கும் பல வகையான அடிப்படை கலவைகள் உள்ளன

சொர்க்கம் (அல்லது மெய்மை)- மனிதன்- பூமி என்பது போல பூமி- காற்று- நீர், அன்னை- தந்தை- மகவு என பல கலவைகளும் உபயோகிக்க படுகின்றன

அடிப்படை விதிகள்

தென்மே (Tenmei) காலத்துக்கு பிறகு இகபானா தனது தூய வடிவத்திலிருந்து சற்றே மாறி செயற்கையான சில இணைவுகளுடன் உருவானது. அந்த வடிவம்தான் இப்போதைய சொர்க்கம், மனிதன் மற்றும் பூமி ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய இறுதி இகபானா வடிவம் 

இப்போதைய இகபானாவின் மூன்று  பள்ளிகளான  இகனோபு, என்ஷூ ரியூ மற்றும் மிஷோ ரியூ ,(Ike nobu, Enshiu- Ryu, Misho-Ryu) ஆகியவை  இந்த விதிகளையே பின்பற்றுகின்றன. இப்போதும் டோக்கியோ மற்றும் கியோட்டோவில்  இகபானாவின் பழைய தூய வடிவங்களை இன்னும்  கோ ரியூ, கோ ஷின் ரியூ (KO- Ryu, Ko Shin- Ryu)  என்னும் பெயர்களில் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

இகபானாவின் பிற விதிகள்

மலரமைப்புக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும், மலரமைப்பின் வடிவத்தை நிர்ணயிப்பதிலும்  இருளும்-ஒளியும், கடவுளும்-சாத்தானும், நல்லதும்-கெட்டதும் போன்ற இரு எதிரெதிரானவைகள் அவசியம் இருக்கவேண்டும்.

ஒரே வண்ண மலர்கள் அமைக்கப்படுவது  துரதிர்ஷ்டவசமானது என கருதப்படுகின்றது. சிவப்பின் நிறம் இறப்புடன் தொடர்புடையதால் பெரும்பாலும் இகபானாவுக்கு அவை விரும்பப்படுவதில்லை. மேலும் சிவப்பு நெருப்பின் நிறமாதாலாலும் ஜப்பானிய வீடுகள், எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும்படியான பொருட்களால் கட்டப்படுவதால் அவை இகபானாவில் உபயோகிப் படுவதில்லை

 அதுபோலவே ஒற்றைப்படை எண்ணிக்கையில் மலர்களை அமைப்பதும் துரதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது.  அப்படி ஒற்றைப்படையில் இருக்கும் எதுவும் சமச்சீரான வடிவத்தை அமைக்காது என்பதால்  அவ்வகையான அமைப்புக்கள் இயற்கையின் அம்சமாக இருக்காது என ஜப்பானின் அனைத்து கலை வடிவங்களிலும்  ஒற்றைப்படை எண்ணிக்கை பெரும்பாலும் விலக்கப்பட்டிருக்கும்

கொள்கலன்கள்; அடுத்த முக்கிய விதி எந்த கொள்கலனில் மலர்கள் அமைக்கப்படுகின்றன என்பதில் இருக்கிறது. ஜப்பானிய இகபானா கொள்கலன்கள் அனைத்தும் திசைகாட்டியைப்போல் நான்கு திசைகளையும் குறிப்பவையாக கருதப்படுபவை தான். எந்த திசையில் எவற்றை அமைப்பது என்பதை குறித்த தளர்வற்ற விதிகள்  இகபானாவில் உள்ளது

இகபானாவின் கொள்கலன்களில் வாயகன்றவை, உயரமானவை மூங்கில் அல்லது உலோகத்தால் ஆனவை என பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான ஜப்பானியர்கள் இகபானாவை வெண்கல கிண்ணங்களில் அமைக்க விரும்புகிறார்கள் வெண்கல நிறமே பூமியின் நிறமென  அங்கு கருதப்படுகிறது. வெள்ளியும் விருப்பத்துக்குரியதாகவே இருக்கிறது. கொள்கலன்களில் மூன்றில் ஒரு பங்கு  நீர் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும்

இகபானா மலர்மொழி

இகபானாவின் எந்த அமைப்பானாலும் நாம் அவற்றின் மலர்மொழியை புரிந்துகொள்ளும்படியே அவை அமைக்கப்பட்டிருக்கும் 

முக்கிய நிகழ்வுகளிலும், மங்கல நிகழ்சிகளிலும் விருந்தாளிகளின் வருகையின் போதும் மட்டுமல்லாது வீட்டிலிருந்து பயணம் செல்லுகையிலும் பூட்டிய வீட்டில் இகபானா அமைக்கப்படும்.  மணமுடித்து  தேனிநிலவு செல்லும் தம்பதியர்களின் வீட்டில் நீடித்த, மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் குறியீடாக கருதப்படும் வில்லோ மரக்கிளைகள் கொண்ட  இகபானா அமைக்கப்பட்டிருக்கும்

நீண்ட பயணம் செல்வதற்கான இகபானா அமைப்பில் வளைந்து ஒரு வட்டம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இளந்தண்டுகள் பத்திரமாக பயணம் முடிந்து அவர்கள் வீடு திரும்புவதை குறிக்கும்

புதிய வீடுகளின் புகுமுக விழாவில் பரிசளிக்கப்படும் இகபானாக்களில் எப்போதுமே நீரைக் குறிக்கும் தூய வெண்ணிற மலர்கள் அமைந்திருக்கும். கட்டாயமாக வீடுகளில் சிவப்பு நிறம் உபயோகத்தில் இருக்கவே இருக்கக்கூடாது. புதிய சொத்துக்கள் வாங்கப்படுகையிலும் குழந்தைகளின் பிறப்பின்போதும் நீண்ட காலம் வாடாமலிருக்கும் சாமந்தி போன்ற மலர்கள் அமைக்கப்படவேண்டும்.

மங்கல நிகழ்வுகளுக்கென  இருப்பது போல் அமங்கல நிகழ்வுகளுக்கும் தனித்தனி விதிகள் உண்டு

இறப்பிற்கு உபயோகிக்கப்படும் மலர்வளையங்களில் வெண்ணிற மலர்களும் காய்ந்த குச்சிகளும், வாடிய இலைகளும் அமைக்கப்படவேண்டும்.

இகபானா பரிசளிக்க படுகையில் எப்போதும் அரும்புகள் மட்டுமே உபயோக்கிக்கவேண்டும்.. அப்போதுதான் பரிசு பெற்றுக் கொள்பவர்கள் அவற்றின் மலர்தலை கண்டு மகிழ முடியும்   

இகபானா அமைத்தல்

இகபானா உருவாக்கத்தின் முதல்படியாக குபாரி   (kubari) எனப்படும் ஆதாரமான குச்சி நிறுவப்படும். இந்த குச்சியின் வடிவம் ஒவ்வொரு பருவத்திற்கும் வேறுபடும், நுனியில் பிளவு படாதவை, இரண்டாக பிளவுபட்டது, மூன்று பிளவுகளை கொண்டவை என இவை வேறுபட்டிருக்கும்

நீரில் கென்ஸான் (kenzan)என்னும் ஊசிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மெத்தை போன்ற அமைப்பை கொள்கலனில் வைத்து மலர்க்காம்புகள் ஊசிகளில் செருகி அமைக்கப்படும்

 • மலர்களை  தேர்ந்தெடுக்கையில் ஆதாரவிதியான சொர்க்கம்- மனிதன்- பூமி என்பதை அவை குறிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
 • அமைக்கப்பட இருக்கும் வடிவம் வெட்டி எடுத்த மலர்களை காட்டுவதாக இல்லாமல்  உயிருள்ள மலர்களை காட்டுவதாக இருக்க வேண்டும்
 • இகபானாவின் இறுதி வடிவம் அப்போதைய பருவத்தை குறிக்க வேண்டும்
 • எந்த நிகழ்வுக்கு இகபானா அமைக்கப்படுகின்றது என்பதை கருத்தில்கொண்டு மலர்களையும் உலர்ந்த இலைகளையும் அரும்புகளையும்  சரியான இடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்
 • மலர்த்தண்டுகளும், கிளைகளும் கொள்கலத்தின் நீர்மட்டத்துக்கு மேல் 4 இன்ச் உயரத்தில்  ஒன்றாக இணைத்த பின்னரே  அமைக்கப்படவேண்டும்’
 • கிளைகளும் இலைகளும் ஒன்றை ஒன்று ஒருபோதும் குறுக்கிடக்கூடாது
 • அமைக்கப்படும் மலர்களின்  பிரத்யேக இயல்பு மறைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்
 • கிளைகளோ, மலர்களோ, இலைகளோ ஒருபோதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைந்துவிடக்கூடாது
 • சொர்க்கத்தை குறிப்பவை பிறவற்றை விட உயரமாகவும்  மலரமைப்பின் மத்தியிலும் இருக்க வேண்டும்
 • மனிதனுக்கான இரண்டாவது அமைப்பு சொர்க்கத்தின் நீளத்தைவிட பாதியைத்தான்  கொண்டிருக்கவேண்டும்
 • மூன்றாவதும் மிகசிறியதுமான பூமியை குறிப்பது, மனிதனுக்கு வைக்கப்பட்டிருக்கும் மலரின் உயரத்தில் பாதி இருக்க வேண்டும்
 • மலர்களை தேர்ந்தெடுக்கையில் நீண்ட மலர்க்காம்புள்ளவைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். மேலும் ஒரே திசையில் இருக்கும் இரு கிளைகள் ஒரே நீளம் கொண்டவையாக இருக்க கூடாது. ஒன்றை ஒன்று மறைக்கும் இலைகளை இறுதியில் கத்தரித்து நீக்க வேண்டும்
 • மலர்களோ, இலைகளோ கிளைகளோ மற்றவற்றை முழுமையாகவோ அல்லது அவற்றின் விளிம்புகளையோ மறைக்கும் படி அமைந்திருக்க கூடாது, முழுமையாக அனைத்தையும் அமைத்தபின்னரெ தேவையற்றவை எவை என முடிவு செய்ய வேண்டும். இகபானா அமைப்பை மிக மிக பொறுமையுடன் செய்யவெண்டும்
 • அனைத்து இகபானா அமைப்புக்களிலும்  மனிதனை குறிக்கும் முழுமையாக மலர்ந்த மலர்களும்,  பூமியை குறிக்கும் அரும்புகளும்  சொர்க்கத்தை குறிக்கும் பாதி மலர்ந்த மலர்களும் கலந்திருக்க வேண்டும்.
 • ஒன்றுக்கு மேற்பட்ட முழுமையாக மலர்ந்த மலர்கள் இருப்பின் ஒன்றையடுத்து ஒன்று என உயரம் குறைவாக இருக்கும்படி அமைக்கவேண்டும்.
 • ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மலர்கள் சரியான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதும் மாறா விதிகளில் ஒன்று

கடுங்காற்று வீசும் மார்ச் மாதங்களில், இகபானா அமைப்புக்களின் தண்டுகள் காற்றில் வளைந்தவை போல அமைக்கப்பட்டிருக்கும். கோடைக்காலங்களில் அகலமான நீர்நிரம்பிய தட்டுக்களில் மலர்களும் இலைகளும் அமைக்கப்படும்.

பைன் மரங்கள் நீளாயுளுக்கும், சாமந்திகள் உயர்குடியினரை குறிக்கவும் தாமரை  உடல் மற்றும் உள்ளத்தின்  தூய்மையையும் பிற பருவ கால மலர்கள் அழகையும் வசீகரத்தையும் குறிக்கின்றன. இகபானாவின் மையப்பகுதி புத்தரை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. அனைத்து மலர்களின் அருகிலும் இலைகள் இருக்க வேண்டும். 

கோடையில் பசும் இலைகள் மிக அதிகம் இருக்கும்படியும்,இலையுதிர் காலத்து அமைப்புகளில் பொன்மஞ்சள் நிறத்தில் பழுத்திருக்கும் இலைகள் ஆங்காங்கே இருக்கும்படியும் அமைந்திருக்கும் இதே விதிகளின் படி தொங்கும் ஜாடிகளிலும் இகபானா அமைக்கப்படுவதுண்டு

அரிதாக  பிரத்யேக காரணங்களின் பேரில் சிறப்பு நிகழ்வுகளுக்கென இலைகளின்றி மலர்கள் மட்டுமோ அல்லது மலர்களின்றி இலைகள் மட்டுமோ கொண்டும் இகபானா அமைக்கப்படும் 

இலைகளின் சுருளுக்குள் இருக்கும் சிறு பூச்சிகளுடனும், கிழிந்த இலைகளும், அழுகும் கனிகளும் கூட இகபானாவில் அமைக்கப்பட்டு இயற்கையின் அதே காட்சியை பிரதிபலிப்பதும் உண்டு.

 இகபானாவின் பால் பேதங்கள்

ஜப்பனியர்கள் பாறைகளில், கற்களில், அருவிகளிலும் கூட பால் வேற்றுமையை காண்பவர்கள். மலர்களின் பருவங்களிலும் கூட இவ்வாறு பால் பேதம் உண்டு அரும்புகள் பெண், மலர்ந்தவை ஆண், மலர்ந்து வாடியவை மீண்டும் பெண் என ஜப்பானில் கருதப்படும்

இகபானா அமைப்புக்களில் இலைகளின் அடியில் இருக்கும் மலர்ந்த மலர்கள் பெண்மையை குறிப்பதாக கருதப்படும் இது (In)  இன் எனப்படும். எப்போதும் பெண்மைக்கு இடப்பக்கமே பூமி இருக்கவேண்டும்.  (yo) யோ எனப்படுவது ஆண்மையை குறிக்கும் இதற்கு வலப்பக்கம் பூமி இருக்க வேண்டும்.  இகபானாவில் இலைகளின் பின்புறம் ஆணென்றும் முன்புறம் பெண்ணென்றும் கருதப்படும். இரட்டை இலைகள் இணைந்து அமைந்திருக்கையில் கொள்கலனின் வெளிப்புறத்தை நோக்கி இருப்பது ஆண். உள்நோக்கி இருப்பது பெண்.

இப்படியான இகபானா மலரமைப்பின் இந்த பால் வேறுபாடுகளுக்கான  நியதிகள் ஜப்பானில் மட்டுமே முறையாக பேணப்படுகின்றன. ஜப்பானுக்கு வெளியேயான இகபானா அமைப்புக்களில் இவை தளர்த்த பட்டிருக்கும். 

மலர்கள் வாடாமலிருத்தல்

இகபானாவில் அதிமுக்கியமானது  அலங்காரமாக அமைக்கப்பட்டிருக்கும் மலர்கள் வாடாமல் நீண்ட நாட்களுக்கு இருப்பதற்கான ரகசிய வழிமுறைகள் தான். இகபானா ஆசிரியர்கள் பலரும் இதற்கான மருந்துக்கலவை என்ன என்பதை மிக ரகசியமாக வைத்துக்கொண்டு  கல்விகற்று முடித்து பட்டம் வாங்குகையில் மாணவர்களுக்கு தெரிவிப்பது உண்டு. எப்போதுமே  அந்த ரகசியங்களை  வெளிப்படுத்தாமல் மரணப்படுக்கையில் இருக்கையில் மாணவர்களுக்கு தெரிவிக்கும் ஆசிரியர்களும் உண்டு.

பலவகையான மூலிகை மருந்துகளும், அவற்றின் ரகசிய கலவைகளும் இகபானா மலர்கள் வாடாமலிருக்க உபயோகப்படுத்தபப்டுகின்றன.

மலர்கள் வாடாமல் இருக்க மலர்க்காம்பின் அடிப்புறத்தை வேகவைப்பது, எரிப்பது, நீராவியில் காட்டுவது, நசுக்குவது என பல்வேறு ரகசிய வழிமுறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் பிரத்யேகமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ரசாயன பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன என்றாலும் மலர்க்காம்புகளை நீருக்கடியில் வைத்து வெட்டுவது இவற்றில் அடிப்படையான ஒன்று. இதுவே இகபானா மலரமைப்புக்களை நெடுநாட்கள் வாடாமல் வைத்திருக்கிறது இம்முறை மிஸுகிரி (mizugiri)  எனப்படுகிறது

இகபானா பள்ளிகள்

இகபானா கலைக்கான பள்ளிகள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமாக ஜப்பானில் மட்டும் உள்ளது. உலகின் பிறபாகங்களிலும் இகபானா பள்ளிகள் உள்ளன, இவற்றில் மிக பிரபலமானது இகனோபு பள்ளி, அடுத்தது ஷோகெட்ஷு பள்ளி

இகனோபு (I K E N O B U), 70 0 AD

 ஓனோ நோ இமோகோ (Ono- no- Imoko) வினால் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இதுவே இகபானா பள்ளிகளில் மிக பழமையானதும் சிறப்பானதாகவும் ஜப்பானில் கருதப்படுகிறது இதன்  முதன்மை ஆசிரியர் எப்போதும் இகனோபு என்றே அழைக்கப்படுவார். இப்பள்ளியின் இப்போதைய ஆசிரியர் 45 ஆவது தலைமுறையை சேர்ந்தவர்

ஷோகெட்ஷு (SHOGE TSU  ) 1171 — 1231

இப்பள்ளியை உருவாக்கியவர்   மையோயி ஷோமின்  (Myoye Shomin).

இவற்றோடு பிரபலமாக இருக்கும் பிற பள்ளிகள்;

 1. ஹிகாஷியாமா பள்ளி  (HIGASHIYAMA )  1436- 1492 

இது  அஷிகாகா யோஷிமஸா வால் துவங்கப்பட்டது (Ashikaga Yoshimasa)

 1. சென்கி கோ ரையூ (SENKE- KO – RYU) 1 5 2 0 .

பிரபல சென் நோ ரிக்யூவால் துவங்கப்பட்ட பள்ளி  ( Sen- no- Rikyu )

 1. பிஷோ ரையூ (BIS HO- RYU)1545

கோட்டோ டாய்காக் உனோக் அமியால் துவங்கப்பட்ட  (Goto Daigak unok ami) இதுவே பிறவற்றைக்காட்டிலும் ஏராளமான கிளைகளை கொண்டிருப்பது

 1. கோஷின் ரியூ  (Ko-SHIN- RYU) 1600 — 1624.

ஷின் டெட்சு சாய் துவங்கியது இப்பள்ளி (Shin- tetsu – sai)

இகபானா கற்றுக்கொள்பவர்களுக்கு முதலில் கண்களை இயற்கையின் நுண்மையான அழகுகளை காணும் பயிற்சி அளிக்கப்படும். மலர்களின் மெய்யான அழகை ஆராதிக்க துவங்குபவர்களே இகபானாவில் இறங்கமுடியும். 

கராத்தே பள்ளிகளின் கருப்பு பெல்ட்டை போலவே இகபானா கல்வியிலும் மதிப்பீட்டு முறைகள் உள்ளன.  இகபானா கல்வியில் உயர்ந்தபட்ச மதிப்பீடு என்பது க்யூ (kyu) எனப்படும்.  க்யூ அடைந்தவர்கள் வெகுகாலம் இகபானா கலையை பயிற்றுவிக்கும் தகுதி கொண்டவர்கள் ஆகிறார்கள். 

கத்தரிக்கோலை எப்படி பிடிப்பது, குச்சிகளை எப்படி உடைக்காமல் வளைப்பது ,மரபை உணர்த்தும் மலர்களை தெரிவு செய்வது, சரியான கிண்ணங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கான பயிற்சிகளே இகபானா கல்வியில் பாலபாடங்கள்.

இகபானா மலர்களையும் பிற பொருட்களையும் சூழலுடன்  பொருத்திப் பார்த்து அவற்றின் அழகை ஆராதிக்கவும் ஒவ்வொரு பருவத்திற்கான சிறப்புகளை உணரவும் கற்றுக்கொடுக்கிறது

பாணிகள்

ரிக்கா; இயற்கையின் அழகை போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படுகிறது ரிக்கா பாணி. ரிக்கா அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்னும் கருத்தை விளக்குவதுதான்.பிரபஞ்சத்தின் ஒரு துளியை அழகுற இயற்கையின் அங்கங்களை கொண்டு அமைப்பதே ரிக்காவின் அடிப்படை.இம்முறையில் மலர்கள் நேராக நிற்கும்ப டி அமைக்கப்படும்

நாஜெயிரி; இந்த பாணி ”அப்படியே வீசி எறிவது ” என்னும் பொருளில் இயற்கையின் ஒழுங்கற்றமையில் இருக்கும் நேர்த்தியை சொல்வது.

மொரிபானா; மொரிபானா ’மலர்களை அடுக்குவது’ என்று பொருள்படும் கலை இதில் சுய்பான் (suiban) எனப்படும் தட்டையான ஆழம் குறைவான அகலமான  நீர் கொள்கலன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலும் மரபாக அதுவரை இகபானாவில் உபயோகப்படுத்தப்பட்டவகளை காட்டிலும் பல புதிய பொருட்களும் இணைந்தன. மொரிபானாவில் நிலக்காட்சிகளை பிரதிபலிக்கும் ஷாகேய்  (shakei) என்னும் அமைப்புக்களும் அதிலிருந்து உருவாகியது.

செயிக்கா (Seika) என்பது  மிக எளிய பாணி. இதில் மூன்று மலர்கள் மட்டும் உபயோகப்படுத்தப்படும்

சா பானா (cha-bana) என்பது தேநீர் சடங்குகளின் போது அமைக்கப்படும் பிரத்யேக இகபானா அமைப்புகள்

நவீன  இகபானா

ஏறக்குறைய 600 வருட பழமையான கலையான இகபானா இன்றும் சிறப்பாக ஜப்பானில்  திகழ்கிறது. பிரபல ஜப்பனிய கலை வடிவங்களான மாங்கா மற்றும் அனிமேவிலும்  இகபானா முக்கிய இடம் பெற்றிருக்கின்றது.

1957ல் இகபானா என்று ஒரு திரைப்படம் வெளியானது.  2017ல் வெளியான ’வாளும் மலரும்’ என்னும் திரைப்படம் 16 ம் நூற்றாண்டில் இகபானா உருவான வரலாற்றை சொல்கிறது. 

நவீன இகபானாவில் செயற்கை சாயங்களில் பல வடிவங்கள் இலைகள் மீது தீட்டப்படுகின்றன தண்டுகளும் கிளைகளும் வேண்டிய வடிவங்களில் கத்தரிக்கப்படுகின்றன. 

1912ல் இகபானாவின் முதல் நவீன பள்ளி அன்ஷின் ஒஹாராவினால் துவங்கப்பட்டது இவர் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இகபானாவில் புகுத்தினார். ஒன்று  மேற்கத்திய மலர்களை இகபானாவில் இணைத்துக் கொள்வது, இரண்டு  ஆழம் குறைவான வட்ட வடிவ கொள்கலன்களை உபயோகிப்பது. இந்த இரு மாற்றங்களினால் இகபானா  ஜப்பானின்  கூடுதல் பிரியத்துக்குரியதாகி விட்டிருக்கிறது 

சொகெட்ஸுபள்ளி (Sogetsu)  1927ல் சொஃபு டெஷிகாஹராவால் (Sofu Teshigahara) துவங்கபட்டபோது இகபானா சிற்பக் கலைக்கு நிகரான இடத்தை பெற்றது. இவரே அதுவரை இகபானாவில் இல்லாதிருந்த, ஆனால் இயற்கையின் அம்சங்களான தூசி, அழுக்கு, பாறைத்துண்டுகள் மற்றும் பாசிகளையும் இகபானாவின் அங்கங்களாக்கினார். சொகெட்ஸு பள்ளியின் இகபானா பாணி பிளாஸ்டிக், காகிதம் மற்றும் உலோகங்களையும் இணைத்துக் கொண்டது.

நவீன இகபானா ஆழம் குறைவான கிண்ணங்களில் அமைக்கப்படும் மொரிபானா பாணி மற்றும் உயரமான ஜாடிகளை கொண்ட பழைய நாஜெயிரி பாணி ஆகிய இரண்டு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது

தற்போது இகெனொபு, மொரிபானா(ஒஹாரா) மற்றும் சோகெட்ஸு ஆகிய மூன்று பாணிகளுமே ஜப்பானில் பிரசித்தம்.

20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இகபானா சர்வதேசமயமானது எலென் கோர்டொன் ஏலென் (Ellen Gordon Allen) என்னும் ஜப்பானில் தங்கி இகபானா கலையை கற்றுக் கொண்ட அமெரிக்க பெண் ,1956ல்  ஜப்பானின் முக்கிய இகபானா பள்ளிகளை ஒன்றிணைத்து சர்வதேச இகபானா அமைப்பை நிறுவினார்  அவரது செயல்நோக்கம் இகபானா வின் மூலம் தோழமையை உருவாக்குவது- “friends through flowers.”

தற்போது இகபானா கலையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமான மையக்கருத்தென்பது தோழமையே. இகபானாவில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களுக்கிடையேயும்,  இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கிடையேயும், ஆசிரியர்களுடனும் தோழமையை உருவாக்குவதே நவீன இகபானாவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது

ஜப்பானில் மட்டுமே சுமார் 15 மில்லியன் ஆர்வலர்கள் தற்போது இகபானாவை கற்று கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்கள்

ஜப்பானில் பிரபலமான இகபானா பள்ளி சோஹோ ஜி ஆலய வளாகத்திலிருக்கிறது. இங்கு ஆசிரியர்கள் மட்டுமே 60 ஆயிரம் பேர்.

இகபானா கண்காட்சிகளும் போட்டிகளும் வருடாவருடம் நடைபெறும். இதில் ஆகச்சிறந்த இகபானா கலைஞர்கள் போட்டியிடுவார்கள் 

இகபானா இப்போது ஜப்பானின் ஒவ்வொரு முக்கிய விழாக்களிலும் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. மார்ச் 3ஆம் தேதியில் கொண்டாடப்படும் இளம்பெண்களுக்கான விழாவான ஹினா மாட்சுரியின் போது (Hina Matsuri) பீச் மரங்களின் சிறு மலர்க்கிளைகளுடன் மலர்களும் பொம்மைகளும் வைத்த இகபானா அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது

அதுபோலவே மார்ச் 5 அன்று கொண்டாடப்படும் ஆண்மைக்கான விழாவில் ஜப்பானிய ஐரிஸ் மலர்கள் இகபானாவில் அமைக்கப்பட்டிருக்கும். ஜூலை 7 அன்று நடைபெறும் டனபாடா (Tanabata) என்னும் நட்சத்திர விழாவில் இகபானாக்கள் மூங்கிலில் அமைக்கப்படும். செப்டம்பரில் ஜப்பானியர்கள் நிலாக்காயும் நிகழ்வான சுகிமி (tsukimi) நடைபெறுகையில் மக்கள் கூடுமிடங்களில்  அப்பருவத்தில் செழித்து வளரும் புல் வகையான  பம்பஸ் புற்கள் கலந்த இகபானா அமைப்புக்கள்   அமைக்கப்பட்டிருக்கும்

நிலவையோ கதிரையோ மழையையோ ஆராதிக்கவும் கவனிக்கவும் நேரமற்ற இப்போதைய விரைவு வாழ்க்கையில் இயற்கையையும், அன்றாடங்களின் அழகையும் கவனிக்கக் கற்றுத்தரும் இகபானாவை பயிலும் வாய்ப்பில்லையெனினும் இகபானா அலங்காரங்களை கவனித்துப் பார்க்கவாவது முயற்சிக்கலாம்.

இந்த வலைத்தளத்தில் இக்கலையை வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ள உதவும் காணொளிகள் உள்ளன ikebanahq.org.  

இகபானாவின் பல வடிவங்களைக்காண; Gallery – Ikebanalab

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.